Loading

அதிர்வு – 4

சென்னை வந்து இறங்கிய ஆதினியை  அழைத்து செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள் காதம்பரி. வந்து இறங்கியவளைக் கண்டவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். 

“ஐயோ அம்மா.. முடியல..”

“ஹே எதுக்கு டி இப்போ சிரிக்குற நீயு”

“சுடிதாரு.. டபுள் சைட் ஷாலு… கைல வளையல்.. கால்ல கொலுசு.. நெத்தில கோபுர போட்டு.. தலைல பின்னல் அதுல காஞ்சி போன கனகாம்பரம் பூ.. வாரே வா.. குடும்ப குத்து விளக்கு டி நீ” எனக்கூறியபடி அவளை திருஷ்டி முறித்தாள் காதம்பரி சிரிப்பை அடக்கியபடி. ஆனால் அவள் சிரிக்க அவள் சிரிப்பை எல்லாம் ஆதினி கண்டுக்கொண்டது  போல் தெரியவில்லை. அவளின் முகமோ சொகத்தைக் குத்தகைக்கு எடுத்தது போல் காணப்பட்டது. அதனைக் கண்டு தன் சிரிப்பை நிறுத்திய காதம்பரி,

“ஹே ஆது.. என்ன டி ஆச்சு.. ஏன் இவ்ளோ டல்லா இருக்க.. அதான் சென்னை வந்துட்டியே இனிமே என்ன”

“இன்னும் எத்தனை நாளைக்கு தான் டி விஷயத்தை சொல்லாம இப்படி இருக்க போறேனோ.. ஒவ்வொரு தடவ ஊருக்கு போகும் போதும் அப்பா அம்மாகிட்ட இப்போ சொல்லிடலாம் அப்போ சொல்லிடலாம்னு தைரியமா தான் போவேன்.. ஆனா அங்க போனதும் எனக்கு ஒவ்வொன்னு பார்த்து பார்த்து செய்ற அவங்க முகத்தை பார்த்ததுமே.. என் தைரியம் எல்லாம் வடிஞ்சு போயிடுது.. போதா குறைக்கு இப்போ இந்த கல்யாணம் விஷயம் வேற..” என்று கண்கலங்கினாள் ஆதினி. 

“ஏன் டி.. நான் ஆரம்பத்துல இருந்து சொல்றது இது தான்.. நீ முன்னாடியே உங்க அப்பா அம்மாகிட்ட பொறுமையா பேசி புரிய வச்சுருக்கலாம்..”

“என் அப்பா அம்மா மத்த விஷயத்துல என்னை புரிஞ்சு எனக்காக யோசிச்சு பண்றவங்க தான்.. இல்லன்னு சொல்லல.. ஆனா கண்டிப்பா இந்த விஷயத்தை புரிஞ்சுக்க மாட்டாங்க.. விஷயம் தெரிஞ்ச மறுநிமிஷம் அவங்க ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு நல்லாவே தெரியும் எனக்கு.. என்னால சொல்லவும் முடியல சொல்லாம இருக்கவும் முடியல.. அவங்க நம்பிக்கையை நான் உடைக்க போறேன் ஒருநாள்.. அது மட்டும் நல்லாவே தெரியுது”

“புரியுது ஆது.. விடு.. விதி படி தான் எல்லாம் நடக்கும்.. இங்க காரணம் இல்லாம எதுவுமே நடக்குறது இல்ல..”

“அட போ டி.. நடக்குற எல்லா விஷயத்துக்கும் காரணம் இருக்கும்னு நெனைக்குறது முட்டாள்தனம்..”

“என்ன டி ஒரு உலக நியதியை இப்படி பொசுக்குன்னு முட்டாள்தனம்னு சொல்லிட்ட.. உனக்கு இப்போ புரியாது.. நடக்குற ஒவ்வொரு விஷயத்துக்கு பின்னாடி இருக்குற காரணத்தை நீ தெரிஞ்சுக்குற நேரம் கண்டிப்பா வரும்.. அப்போ நீ இந்த கதம்பரிய நெனச்சு பார்ப்ப..”

“இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது.. ஷட்டரை சாத்திட்டு வண்டியை எடுக்குறீங்களா..” என்று முறைப்புடன் கூற காதம்பரியும் முறைப்புடன் வண்டியை இயக்கினாள். செல்லும் வழியில்,

“ஆமா டி எனக்கொரு டவுட்டு.. கல்யாணத்துக்கு அப்றம் நீ எங்க தான் இருப்ப.. உனக்கு இங்க வேலை.. மாதவனுக்கு மதுரைல வேலை.. அவர் அங்க நீ இங்க எப்படி டி”

“அதுக்கு ஒரு பிளான் வச்சுருக்கேன்..”

“என்ன பிளான் டி”

“ஹாஹா.. சஸ்பென்ஸ்..”

“சஸ்பென்ஸுக்கு பொறந்த சாத்தானே”

“முன்னாடி பார்த்து வண்டியை ஓட்டுங்க சஸ்பென்ஸ் பொறுக்காத சாத்வீகமே”

“நீ மூடு எங்களுக்கு  தெரியும்”

“ரைட்டு விடு” 

இவ்வாறாக பேசியபடி இருவரும் தத்தம் அறைக்கு வந்தனர். வந்ததும் கதம்பரியின் அலைபேசி சினுங்க எடுத்து பார்த்தவள் ஆதினியிடம்,

“ஹே ஆது.. உங்க அப்பா தான்” என்று கூறியபடி சிரித்த முகத்துடன் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ அப்பா.. சொல்லுங்க..”

“எப்படி இருக்க காதம்பரி.. நல்ல இருக்கியா டா.. “

“நான் நல்லா இருக்கேன் பா நீங்க எப்படி இருக்கீங்க”

“நல்லா இருக்கேன் மா.. ஆது கூட இந்த டைமாச்சு நீ வந்துருக்கலாம்ல நம்ம வீட்டுக்கு.. நேரில உன்ன பாக்கணும்னு நாங்களும் விருப்பப்படுவோம் தான.. எத்தனை நாளைக்கு குரலை மட்டுமே கேக்குறது”

“நம்ம ஆது கல்யாணத்துக்கு வந்துட்டா போச்சு”

“சரிடா மா.. அவ மொபைல் ஸ்விட்ச் ஆப்னு வந்துச்சு.. ஊருக்கு வந்ததும் எப்பவும் கால் பண்ணுவா.. அதான் உனக்கு கூப்பிட்டேன்”

“இப்போ தான் பா வந்தா.. குளிக்க போயிருக்கா”

“அப்படியா.. சரி டா.. அவகிட்ட சொல்லிடு..” என்றபடி அழைப்பைத் துண்டித்தார். குளித்து முடித்து வந்தது,

“அப்பா என்ன டி சொன்னாங்க” என்று ஆதினி கேட்க கதம்பரியோ யோசனையோடு அமர்ந்திருந்தாள். 

“காது” என்றபடி அவளை தோளைப் பற்ற அவளோ சுவற்றில் மாட்டியிருந்த தாய் தந்தையின் மாலையிட்ட புகைப்படத்தை ஏக்கமாக பார்க்க ஆதினிக்கு புரிந்தது. தன் தந்தையிடம் பேசியதும் அவளது பெற்றோர் நியாபகம் அவளுக்கு வந்துவிட்டதென. எதுவும் கூறாமல் அவளை அணைத்துக்கொள்ள கதம்பரியும் அணைத்துக் கொண்டாள். பிறகு இருவரும் கிளம்பி அவரவர் பணிக்கு செல்ல ஆயத்தமாயினர். 

————————————-

பணியைக் கவனித்துக் கொண்டிருந்த தூயவனுக்கு மாதவன் தான் அழைப்பு விடுத்திருந்தான். அழைப்பை ஏற்றவன் எதுவும் கூறாமலே இருக்க மாதவன் பேச ஆரம்பித்தான்.

“டேய் தூயவா..”

“ஹ்ம்ம் சொல்லு”

“நீ என்கிட்ட பேசி நாலு நாளைக்கு மேல ஆகுது.. தெரியுமா”

“தெரிஞ்சு தான் பேசாம இருக்கேன்..”

“அதான் ஏன்னு கேக்குறேன்”

“ஏன்னு உனக்கு தெரியாதா.. அதுசரி சார் தான் கல்யாண கனவுல மிதக்க ஆரம்பிச்சிட்டீங்களே.. அப்புறம் எப்படி தெரியும்”

“சோ நான் கல்யாணம் பண்றதுல தான் உனக்கு பிரச்சனை.. அப்படி தானே”

“உனக்கு சுத்தமா அறிவே இல்லன்னு அடிக்கடி ப்ரூவ் பண்ற”

“இல்லாமையே போகட்டும்… நீ என்னன்னு சொல்லு”

“டேய் நேருல நின்னு இதெல்லாம் நீ பேசுனன்னு வய்யு.. அண்ணன்னு கூட பார்க்காம செவிடுலையே ரெண்டு விட்டு ஜென்மத்துக்கும் காது கேட்காத மாதிரி ஆக்கிடுவேன் சொல்லிட்டேன்.. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லல.. மாதவி வாழ்க்கையை இப்படி நீ நாசமாக்குவன்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல.. இந்த விஷயத்துல என் ஃபிரண்டா அண்ணனான்னு யோசிச்சா.. கண்டிப்பா நான் அவளுக்காக தான் நிப்பேன்.. உன்னை எல்லாம் அண்ணன்னு சொல்லவே வெக்கமா இருக்கு.. தயவு செஞ்சி ஃபோன வை” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டிக்க,

“கால் கட் பண்ணிட்டா நேருல வந்து பேசுவேன்” என்றபடி மாதவன் அறைக்குள் வந்து அமர அதில் கடுப்பான தூயவன்,

“உன்னை யாரு இங்க வர சொன்னா.. ஒழுங்கு மரியாதையா வெளிய போய்டு.. நான் இருக்குற கோவத்துக்கு என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..” என்றவன் கோபத்தை மட்டுப்படுத்தி பேசிக்கொண்டிருந்தான். 

“டேய் அண்ணனுக்கு உன்னை விட்டா யாருடா இருக்கா..”

“என்னைக் கெட்ட வார்த்தை பேசவைக்காத மாதவா.. இந்த எழவு எல்லாம் இன்னொரு பொண்ணுக்கு ஓகேன்னு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும்..”

“டேய் நான் தான் சொல்றேன்ல நான் வேற ஒன்னு நெனச்சு செஞ்சேன்.. அது இப்படி ஆகும்னு நான் கனவுல கூட நினைக்கல..” என்று வருத்தமாக கூறினான் மாதவன். 

“அறிவில்ல.. ஒரு விஷயம் செஞ்சா அதுக்கு பின்விளைவு எப்படி வரும்னு யோசிக்கணும்.. இப்போ மாதவி வாழ்க்கையும் பிரச்சனைல நிக்குது நீ ஓகே சொன்ன அந்த பொண்ணு வாழ்க்கையும் பிரச்சனைல நிக்குது.. மாதவி உன்மேல செம காண்டுல இருக்கா.. அவ முன்னாடி போய் நின்னுடாத..” என்று அவன் கூறி முடிப்பதற்குள்,

“அவளை சமாதானம் பண்ணிட்டேன்.. நீ தான் கூலாக மாட்டேங்குற” என்று மாதவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற அவன் கூற்றில் தூயவன் புரியாமல் முழித்தான். அப்பொழுது,

“மே ஐ கம் இன்” என்று வாசலில் பெண் குரல் கேட்க தூயவனுக்கு புரிந்துவிட்டது. வந்தவள் தூயவனைப் பார்த்து அசடு வழிய சிரித்தவள் மாதவன் அருகே சென்று அமர தூயவனுக்கு தான் எங்கு சென்று முட்டிக் கொள்ளலாம் என்று இருந்தது. பேசினால் வார்த்தைகளை விட்டு விடுவோமோ என்று நினைத்தவன் அமைதியாக அமர்ந்தான். அவன் நிலை புரிந்த மாதவியோ,

“டேய் தூய…” என்று ஆரம்பிக்கும் முன்னரே கை நீட்டி தடுத்தவன்,

“எம்மா தாயே.. நீ எதுவும் சொல்லி கிழிக்க தேவையே இல்ல..  காதலர்களுக்கு நடுவுல பஞ்சாயத்து பண்ண கூடாதுன்னு சொல்றது சரியா தான் இருக்கு.. எப்படி எப்படி.. நான் உனக்காக பேசி இவன் கிட்ட சண்டை போடுவேன்.. ஆனா நீங்க முன்னாடியே சமாதானம் ஆகிட்டு வந்து உக்காந்துருக்கீங்க.. தயவு செஞ்சு ரெண்டு பெரும் இடத்தை காலி பண்ணுங்க.. உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு..” என்றவன் மாதவனிடம்,

“ஏன்டா.. நான் கூட என்னை சமாதானம் பண்ண தான் வந்துருக்கன்னு தப்பா நெனச்சுட்டேன்.. நீ உன் ஆள கரெக்ட் பண்ண வந்துருக்க.. அந்த பிசாசும் நீ செஞ்ச விஷயத்தெல்லாம் மறந்து ஈஈன்னு இளிச்சு பேசிருச்சு.. கடைசில நான் தான் முட்டாளா நிக்குறேன்..” என்றவன் எழுந்து வெளியே செல்ல போக மாதவனும் மாதவியும் தூயவனின் காலிலேயே விழுந்து விட்டனர். 

“நீ தான் டா ஹெல்ப் பண்ணனும் ப்ளீஸ்” என்று கோரஸாக சரணடைந்துவிட அவனோ,

“சரியான இம்சைங்க” என்று புலம்பியவன் பின் மனம் கேட்காமல்,

“தயவு செஞ்சி ரெண்டு பெரும் எந்திச்சு தொலைங்க சகிக்கல” என்றவன் தன் இருக்கையில் அமர்ந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். ஒருவழியாக நிதானத்தை அடைந்தவன்,

“சொல்லி தொலைங்க.. இப்போ நான் என்ன செஞ்சி தொலையனும்” என்று உட்சபட்ச கடுப்பில் கேட்க மாதவியோ,

“அதை சிரிச்சுகிட்டே கேட்டா தான் என்னவாம்” என்று பாவமாக கேட்க,

“வேணாம் டி.. ஃப்ரண்டா போயிட்டியேன்னு பாக்குறேன்.. இல்லனா அசிங்கமா ஏதாவது சொல்லிருவேன்.. ஏன் டி உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லல.. இவன் செஞ்ச எழவுக்கு வேற பொண்ணா இருந்தா நேரா ஒன்னு போலிஸ் ஸ்டேஷன் போயிருப்பா.. இல்லனா எங்க வீட்டுக்கு வந்து சண்டை போட்டுருப்பா.. நீ என்னடானா..” என்றவன் தலையில் அடித்துக் கொள்ள மாதவனோ,

“அதெப்படி செய்வா.. நான் செஞ்சத தான அவளும் செஞ்சா..” என்று கூறிவிட்டு சிரிக்க தூயவனோ,

“எதேய்.. நீ செஞ்சதை தான் அவளும் செஞ்சாளா.. வாட் டு யூ மீன்” என்று  புரியாமல் புருவம் உயர கேட்க மாதவன் கூறினால் விளைவு பலமாக இருக்கும் என்ற காரணத்தினால் மாதவியே கூற முன்வந்தாள்.

“இல்ல தூயவா.. அன்னைக்கு அவன் கோவில் போயிருந்தப்போ எங்க ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை.. பேச்சு கொஞ்சம் பெருசாகி ஈகோவை டச் பண்ணிருச்சு.. அதான் அவனை வெறுப்பேத்த என் மாமா பையனுக்கு ஓகே சொல்லிட்டேன்னு சொன்னேன்.. நான் சும்மா தான் சொன்னேன்.. இவன் நான் அப்படி செஞ்சிருக்க மாட்டேன்னு இளக்காரமா வேற சொன்னானா அதான் அவனை கொஞ்சம் கோபப்படுத்தி பாக்கணும்னு என் மாமா பையன் பேருல பேக் ஐடி ஓபன் பண்ணி அவன்கிட்ட பேசுற மாதிரியே ரெண்டு ஐடில இருந்து நானே பேசி இவனுக்கு ஸ்க்ரீன்ஷாட் அனுப்புனேன்.. இந்த பக்கி அதை உண்மைன்னு நம்பி என்னை வெறுப்பேத்த கோவில்ல வச்சே எனக்கு கால் பண்ணி நான் லைன்ல இருக்கும்போதே அந்த பொண்ண கல்யாணம் பன்றேன்னு சொல்லிட்டான்..” என்று தயங்கி தயங்கி மாதவி கூற தூயவனோ,

“கடவுளே.. ரெண்டு ஸ்கூல் பிள்ளைங்க கூட இவ்ளோ கேவலமா லவ் பண்ணாதுங்க.. ஒன்னு முட்டாள்னா இன்னொன்னு அடிமுட்டாள்.. உன்னையெல்லாம் எந்த கூமுட்டை வேலைக்கு எடுத்தானோ.. இந்த லட்சணத்துல நீ லீகல் அட்வைசர் வேற.. த்து” என்று மாதவியை வறுத்தெடுத்தவன் அடுத்து மாதவனிடம் வர அவனோ,

“டேய் அப்பாவை கூமுட்டைன்னு எல்லாம் சொல்லாத டா என்ன இருந்தாலும் அவர் நம்ம அப்பா..” என்று எச்சரிக்கையாக முன்னமே கூறிவிட தூயவனால் முறைக்க மட்டுமே முடிந்தது. பிறகு விளையாட்டை எல்லாம் ஓரம் கட்டிய மாதவனோ,

“டேய் தூயவா.. சாரி டா.. எனக்கு புரியுது நான் செஞ்சது எவ்ளோ பெரிய தப்புன்னு.. ரெண்டு பேருமே சீரியஸ்னஸ் தெரியாம நடந்துக்கிட்டோம்.. அதுவும் அவ சும்மா தான் சொல்லிருக்கா.. நான் தான் ஓவரா போயிட்டேன்.. அதுவும் அந்த பொண்ணு ஓகே சொல்லாதுன்னு நெனச்சு தான் செஞ்சேன்.. எப்போ ஓகேன்னு சொல்லுச்சோ அப்போவே எனக்கு குற்ற உணர்வா ஆயிடுச்சு.. யோசிக்காம செஞ்சது இப்படி ரெண்டு குடும்பத்துக்கும் பிரச்சனையா வந்து நிக்குதேன்னு.. அதுவும் அந்த பொண்ணு ரொம்ப பாவம்.. மாதுவும் ரொம்பவே உடைஞ்சுட்டா நான் செஞ்சதை நெனச்சு.. சரி அதான் ஜாதகம் இருக்கே.. அது பொருந்தாதுன்னு நெனச்சா.. ஜோசியரும் கால வாரி விட்டாரு.. எனக்கு ரெண்டு நாளா தூக்கமே இல்ல..

சரி பொண்ணு பார்க்க போகும் போதாச்சு சொல்லிடலாம்னு நெனச்சு போனேன்.. ஆனா என்னால முடியல.. இப்போ என்ன செய்றதுன்னு தெரில.. நடக்குற ஸ்பீட பார்த்தா கூடிய சீக்கிரம் கல்யாண தேதி குறிச்சுருவாங்க போல.. நீ தான் ஏதாச்சும் செய்யணும்..” என்று நிஜமாகவே வருந்தி கேட்க தூயவனோ,

“ஆமா டா அந்த பொண்ணு பாவம்.. நீ பேசாம இவளை கழட்டிவிட்டுட்டு அவங்களையே கட்டிக்கோ” என்று தூயவன் சாதாரணமாக கூற,

“டேய் நான் மாதுவை உயிருக்குயிரா நேசிக்குறேன் டா.. உனக்கே தெரியும் தான.. தப்பு எல்லாம் என் மேல தான்.. நான் அதுக்கு தண்டனை என்ன வேணா அனுபவிச்சுக்குறேன்.. ஆனா இப்போ அந்த பொண்ணு வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது.. நீ தான் ஏதாச்சும் செய்யணும்” என்க தன் காதலனின் சோகம் தாங்காமல் பெண்ணவளோ,

“டேய் தூயவா.. மாதவ் அப்படி செய்ய முழுக்க முழுக்க காரணம் நான் தான்.. என்னால தான் இவ்ளோ பிரச்சனையும்.. ஆனா ரெண்டு பேருமே இது இவ்ளோ தூரம் வந்து நிக்கும்னு நினைக்கல.. ஏதாச்சும் செய்யணும் டா.. ஹெல்ப் பண்ணுடா” என்று மனமுருகி பேசினாள்.

தூயவனுக்கு இருவரின் காதலை நினைத்து சந்தோஷப்படுவதா அல்ல அந்த காதல் இப்படி ஒரு முட்டாள்தனமான காரியம் செய்ய காரணமாகியதே என்று நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. பின் எதையோ நினைத்தவன்,

“இல்ல உங்க நிலைமை எனக்கு புரியுது.. நீங்க ரெண்டு பெரும் தப்பு செய்யல.. தப்பு செஞ்சது நான் தான்.. அதுவும் ரெண்டு பெரிய தப்பு” என்று தூயவன் சோகமாக கூற அவன் கூற்றில் குழம்பிய இருவரும்,

“நீ என்ன டா தப்பு செஞ்ச” என்று ஒருசேர கேட்டனர். 

தொடரும் அதிர்வுகள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்