Loading

அதிர்வு – 34

தூயவனின் அலறல் கேட்டு பதறியவள் வேகமாக குளியலறைக்கு செல்ல அவனோ மீண்டும் விழுந்து கிடந்தான்.

“ஹே என்னாச்சு..” என்றபடி வேகமாக அருகில் சென்றவள் அவனை கைத்தாங்கலாக தூக்கி அங்கிருக்கும் மேற்கத்திய கழிப்பறையின் மேல் அமரவைத்தாள்.

“பார்த்து வர மாட்டியா.. எத்தனை தடவ டா விழுந்து வாரி வைப்ப.. ஏற்கனவே விழுந்ததுக்கே இன்னும் கைல கட்டுபோட்டிருக்க..” என்று அவனை திட்டிக் கொண்டிருந்தவள் அப்பொழுது தான் அவனுடைய கைக்கட்டு கழண்டிருப்பதையும் அந்த கையால் அவன் இடுப்பை பிடித்தபடி அமர்ந்திருப்பதையும் கவனித்தவள்,

“டேய் உன் கை” என்று கூற தூயவனுக்கும் அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. ஆச்சர்யமாக பார்த்தவன் அந்த கையை நீட்டி மடக்க எந்த ஒரு வலியும் அவனுக்கு ஏற்படவில்லை.

“ஹே என் கை சரி ஆயிடுச்சு..” என்றபடி மேலும் அவன் கையை நீட்டி மடக்க அவளோ,

“எப்புட்றா.. டாக்டர் கைய அசைக்க கூடாதுன்னு தான சொன்னாரு.. ஆனா இதெப்படி” என்று கேட்க அவனும்,

“அதான் எனக்கும் புரியல..” என்று யோசித்தவன் பின் ஆதினியை நோக்கியவன்,

“ஏன்டி என்னை பழிவாங்க எதுவும் பிளான் பண்ணி டாக்டருக்கு கமிஷன் கொடுத்து கரெக்ட் பண்ணிட்டியா” என்று கேட்க அவளோ,

“அட ச்சைக்.. புத்திய பாரு.. அன்னைக்கு பாவப்பட்டு ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போய் சேர்த்தேன்ல இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ..” என்றவள் அவன் தலையில் நங்கென்று கொட்டினாள். தலையை தடவியவன்,

“ஹே.. வலிக்குதுடி..” என்க ஆதினியோ,

“சரி இப்போ உனக்கு வலி இல்லையா அப்போ” என்று கேட்க அவனோ,

“இல்லன்னு தான் நினைக்குறேன்” என்று கையை உதறியவன் ஒரு வேகத்தில் எழுந்துவிட சற்று நேரம் முன்பு விழுந்ததில் காலில் ஏற்பட்ட சுளுக்கு அவனை நிலை தடுமாற வைத்தது. ஆதினியை பற்றுதலுக்காக பிடிக்க அதில் தடுமாறிய ஆதினியின் கை அவளருகில் இருந்த ஷவரை திறந்துவிட மேலிருந்து ஷவர் மழை பொழிய ஆரம்பித்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத இருவரின் இதயங்களும் சொல்லொண்ணா உணர்வினில் அதிர குளிர்ந்த நீர் இத்தனை நாட்களாய்அவர்களின் மனதில் எரிந்துக் கொண்டிருந்த கோபத்தீயினை குளிரவைத்துக் கொண்டிருந்தது.

மேலிருந்து சொட்டிய நீரினால் படபடத்த அவளின் விழிகள் அவனுக்கு ஏதோ கதை கூற விளைவது போன்று தோன்ற அக்கதையை தன் விழிகளாலே படிக்க எண்ணியவனோ இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் உடல்களும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டிருக்க, எங்கோ ஒரு தேநீர் கடையின் வானொலியில் ஒலிக்கும்,

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது
வா வா வா

எனும் வரிகள் ஜன்னல் வழியே வீசிய காற்றின் வேகத்தில் அருகிலும் அருகாமையில் மாறிமாறி கேட்டு அவர்களின் மோன நிலைக்கு இன்னும் மெருகூட்டியது. எவ்வளவு நேரம் அந்த மோன நிலையில் இருவரும் நின்றிருந்தார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.

ஈர உடலில் குளிர் காற்று ஊசியாய் துளைக்க இவ்வளவு நேரம் சுளுக்கிய கால் ஊன்றி இருப்பது வேறு வலியை கொடுக்க முதலில் தூயவன் தான் சுதாரித்தான். அவன் சுதாரித்த மறுகணமே பெண்ணவளும் அந்நிலையில் இருந்து விடுபட இருவருக்கும் ஒருவரையொருவர் எதிர்நோக்க சங்கோஜமாக இருந்தது. பின் மெல்ல அவனை அழைத்து வந்து அறையில் இருந்த நாற்காலியில் அமர வைத்தாள். அவனிடம் பேச கூச்சம் தடுத்தது. இருப்பினும் முயன்று தொண்டையை செருமியவள்,

“உன்னால ஹாஸ்பிட்டல் வர முடியுமா இப்போ.. நடக்க கஷ்டமா இருக்கு தானே.. என் கொலீக் ஒருத்தங்களோட ஹஸ்பண்ட் சுளுக்கு தடவுற வைத்தியரா இருக்காங்க. அவங்கள வர முடியுமான்னு கேட்டு பார்க்குறேன்.” என்றவள் அலைபேசியை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள் வெளியே ஹாலுக்கு. இன்னும் அவளின் மூச்சு சீராகவில்லை. தண்ணீர் குடித்து தன் படபடப்பை போக்கியவள் வைத்தியரை அழைக்க அவரும் வருவதாய் கூறி அழைப்பை துண்டித்தார்.

பின் ஈர உடையை மாற்ற எண்ணியவள் அறைக்குள் வர அவனும் தட்டு தடுமாறி அவனது உடையை அரும்பாடு பட்டு மாற்றி முடித்தான். பாவமாக இருந்தது ஆதினிக்கு. உதவி செய்ய தோன்றினாலும் உடை மாற்ற உதவி செய்ய கேட்கும் அளவுக்கு அவர்கள் இன்னும் நெருங்கவில்லையே. ஆடையை எடுத்து குளியலறைக்குள் சென்று உடை மாற்றிவிட்டு வந்தாள். அதற்குள் வைத்தியரும் வந்துவிட தூயவனின் காலில் இருக்கும் சுளுக்கை எண்ணெய் தேய்த்து நீவி விட்டவர் பின் கைகளை பரிசோதித்தார். கைகளை நீட்டி மடக்கி இரண்டு முறை சொடக்கு எடுத்தவர் பின்,

“இதுக்கா கட்டு போட்டு ஒருவாரம் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க.. முதல் நாள் லேசா வலி மட்டும் இருந்துருக்கும்.. கைல சொல்லிக்குற அளவுக்கு பெருசா எதுவுமே அடிப்படல.. சும்மா பில் அமவுண்ட் ஏத்தனும்னு இப்படி பண்ணிருப்பாங்க போல.. நல்ல எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி பாடிய ஃபிட்டா வச்சிருக்கீங்க.. இந்த பாடி லேசா கீழ விழுந்ததுக்கு எல்லாம் ப்ராக்ச்சர் ஆகுமா என்ன.. ஒருவகையில இப்போ ரெண்டாவது விழுந்தது கூட நல்லதுன்னு நெனைச்சுக்கோங்க.. இல்லனா இன்னும் எத்தனை நாள் கட்டோட சுத்திருப்பீங்களோ.. சரி ஓகே இனிமே நீங்க நார்மலா நடக்கலாம்.. கை கால் ரெண்டுமே ஓகே தான்” என்றவர் அவருக்கான கட்டணத்தை வாங்கிவிட்டு செல்ல தூயவனோ ஆதினியை பார்க்க அவளோ,

“டேய் என்ன.. நான் ஒன்னும் பிளான் பண்ணி உனக்கு கட்டு போட வைக்கல.. அந்த டாக்டர் ஏமாத்துனா நான் என்ன செய்றது.. சந்தேகமா பார்த்த மவனே நிஜமாவே கட்டு போட வச்சுருவேன்.. ஜாக்கிரதை” என்றபடி திரும்பி படுத்துக்கொண்டாள். அவள் பேச்சில் சிரித்தவன் மறுபக்கம் திரும்பி படுத்துகொண்டான். உறக்கம் வராமல் அலைபேசியை எடுத்தவன் மித்ராவின் காணொளி வந்திருக்கிறதா என்று தேட இல்லை என்று காட்டவும்,

“ச்ச இந்த யூட்யூபெர்ஸ் எல்லாம் ஏன் தான் லேட் அப்டேட் கொடுக்குறாங்களோ” என்று ஒரு ஆவலில் சத்தமாகவே புளம்பினான். அதனைக் கேட்டவள்,

“அவங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லாமையா இருக்கும்.. எல்லாத்தையும் சமாளிச்சு வீடியோ கிரியேட் பண்ணி போடுறதெல்லாம் எவ்ளோ கஷ்டம் தெரியுமா” என்று ஆதரவாக கூற,

‘ஆமா மித்ராவும் பாவம்.. எவ்ளோ ரிஸ்க் எடுத்து வீடியோ போடுறா.. டைம் எடுக்க தான் செய்யும்’ என்று நினைத்தவன்,

“அதுவும் கரெக்ட் தான்” என்றான்.

‘இவன் அப்படி என்ன விடியோக்காக இவ்ளோ ஈகரா இருக்கான்’ என்று யோசித்தவள் பின் அதனை ஓரம்கட்டிவிட்டு,

“டேய் நாளைக்கு எனக்கும் சேர்த்து சமைச்சிரு ஓகே” என்று உறங்க ஆரம்பித்தாள்.

‘எல்லாம் நேரம் டி.. சும்மாவே நீ அந்த ஆட்டம் ஆடுவ.. நான் வேற தெரியாம ஒரு தப்பு செஞ்சி உன் காலுல சலங்கைய வேற மாட்டி விட்டுட்டேன்.. சும்மாவா இருப்ப’ என்று நொந்தவனுக்கு அவளுக்கும் சேர்த்து சமைப்பதில் ஒன்றும் கஷ்டமெல்லாம் இல்லை. சிரித்தபடி உறங்க ஆரம்பித்தான்.

மறுநாள் விடியல் அழகாய் விடிய தூயவன் எழுந்து அவனது வேலைகளை செய்து கொண்டிருக்க அப்பொழுது தான் கண்விழித்தாள் ஆதினி. எழுந்தவளின் கண்ணில் பட்டது அலைபேசியை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த தூயவன் தான். மித்ராவின் காணொளி வந்துவிட்டது. நேற்று தான் இதை பற்றி கூறினோம். அதற்குள் வந்துவிட்டது என்று நினைத்து தான் சிரித்துக் கொண்டிருந்தான் தூயவன்.

‘இவன் என்ன மொபைலை பார்த்து சிரிக்குறான்.. முதல்ல இந்த விஷயம் என்னன்னு கண்டு பிடிச்சே ஆகணும்’ என்று நினைத்தவள் அவன் குளியலறைக்குள் சென்றதும் அவனுடைய அலைபேசியை எடுக்க அதுவோ பூட்டப்பட்டிருக்க திறக்கும் எண் என்னவாக இருக்கும் என யோசிக்க பின் அவன் பிறந்த வருடத்தை உள்ளீடு செய்ய அதுவோ திறந்து கொண்டது.

“த்து.. இவ்ளோ ஈஸியா வச்சிருக்கான்” என்றவள் அவன் சமீபமாக எந்த செயலியை திறந்திருக்கிறான் என்று பார்க்க சமீபமாக எதுவும் உபயோகிக்கவில்லை என்று காட்டியது. அவன் அழித்திருப்பான் போலும்.

“யோவ் நீ மிஸ்டர் க்ளீன் தான்.. அதுக்காக ரீசென்ட் டேப்(tab) கூடவா இப்படி உடனே உடனே க்ளீன் பண்ணுவ..” என்று நொந்தவள் வேறு வழியின்றி அலைபேசியை எடுத்த இடத்தில வைக்க போக அவளின் கைபட்டு அவனது அலைபேசியில் இருந்த மியூசிக் செயலி திறந்து கொண்டது. அதில் மித்லெஸ் மித்ராவின் விடியோ அனைத்தும் ஆடியோவாக தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்க,

‘ஓ அப்போ நேத்து இதைப்பத்தி தான் அவ்ளோ ஆர்வமா கேட்டானா’ என கண்களை சுருக்கி யோசிக்க பின் அவன் வரும் அரவம் கேட்டு அலைபேசியை வைத்துவிட்டு சென்றுவிட்டாள். பின் இருவரும் தூயவன் செய்துவைத்த காலை உணவினை முடித்து மதியத்திற்கும் எடுத்து வைத்து அவரவர் அலுவலகம் செல்ல கிளம்பி தயாராகி வந்தனர். ஆதினி கேப் முன்பதிவு செய்ய அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க,

‘இவளை நாமளே டிராப் பண்ணுவோமா’ என்று யோசித்தவன் அதனை கேட்க வர அவளோ,

“டேய்.. இன்னைக்கு நீ தான் என்னை என் ஆபீஸ்ல டிராப் பண்ற சொல்லிட்டேன்..” என்று அதிகாரமாக கூற அவனோ,

“என்ன அதிகாரமெல்லாம் ஓவரா இருக்கு” என்றிட,

“ஹெலோ நீ செஞ்ச எல்லாம் மறந்து போச்சா.. ஒழுங்கா நான் சொன்னதை செய்” என்க,

‘ரொம்ப தான்யா லந்து பண்றா’ என்று நினைத்தவன் வேண்டுமென்றே முகத்தை பாவமாக வைத்து,

“போலாம்” என்றபடி முன்னே சென்றான். அவனை பார்க்க ஒருபக்கம் பாவமாக இருந்தாலும் ஆதினிக்கோ அவனை அதிகாரம் செய்வதும் அதற்கு அவன் கட்டுப்பட்டு நடப்பதும் பிடித்திருந்தது. ஆனால் அவன் அவளின் திட்டத்தை ஏற்கனவே அறிந்துவிட்டான் என்று தெரியவில்லை பாவம். காரினுள் இருவரும் ஏற காரை இயக்க வந்தவன்,

“ஹே அயன் பாக்ஸ் ஸ்விட்ச் ஆஃப் பண்ண மறந்துட்டேன்.. ஒரு நிமிஷம்” என செல்ல போக அவளோ,

“இல்ல நான் ஆஃப் பண்ணிட்டேன்.. கடைசியா நான் என் ட்ரஸ் அயன் பண்ணேன்ல” என்க அவனோ,

“ஓ.. எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் ஸ்விட்ச் ஆஃப் பண்ண நியாபகம் இல்ல.. டூ மினிட்ஸ் இதோ வந்துருவேன்” என்றவன் வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு சென்றான்.

‘ஒருவேளை அம்னீஷியா பேஷண்டா இருப்பானோ’ என்று நினைத்து அமர்ந்திருக்க அதற்குள் வந்துவிட்டான்.

“ஆல் ஓகே.. போலாம்” என்றபடி கிளப்பினான் வண்டியை. சென்று கொண்டிருக்கும் போது வானொலியில் மித்ராவின் காணொளியை ஒலிக்கவிட்டான். காணொளி ஆரம்பிப்பதற்கு முன்னரே அவனின் முகம் மலர்ந்தது. அதனை ஆதினி கவனிக்கவும் தவறவில்லை. காணொளியில்,

ஹாய் ஹெலோ மக்களே.. வெல்கம் பேக் டு மை சேனல். நான் உங்க மித்லெஸ் மித்ரா, என்னோட பேருல வேணா மித் இருக்கும். என் ஜர்னல்ல எப்போவுமே மித் இருக்காது. சோ போன வாரம் நாம பிரபல தொழிலதிபர் சதாசிவம் அவர்களோட கோல்மால் வேலைகளை பத்தி பார்த்தோம். அதுக்கான பலனா நம்ம அரசு ஏதோ முயற்சி செஞ்சிருக்காங்கன்னு நான் கேள்விப்பட்டேன். அதனால மிக்க மகிழ்ச்சி.

ஓகே சோ இன்னைக்கு நாம சதாசிவம் அவர்களின் நிறுவனத்திற்கு நேர்மாறாக இருக்கும் கலப்படம் மற்றும் எந்த ஒரு தீங்கு விளைவிக்க கூடிய ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தாத நிறுவனம் ஒன்றை பற்றி தான் பார்க்க போறோம். கிட்ட தட்ட நான் இப்போ சொல்ல போறவங்க சதாசிவம் அவர்களுக்கு தொழில்துறை எதிரியாக கூட இருக்கலாம். ஏன்னா நம்ம ஆளுங்களுக்கு தான் நல்லது செஞ்சாவே பிடிக்காதே மக்களே.. என்ன செய்றது.

ஃபைனலி.. இன்னைக்கு நான் உங்க கிட்ட பகிர்ந்துக்க போறது இந்திரா க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் பிரைவேட் லிமிட்டெட் பற்றி தான். அதோட தலைவர் மற்றும் நிறுவனர் மிஸ்டர் தூயவன் புகழேந்தி. அவரை போலவே அவரோட தொழிலும் ரொம்பவே சுத்தம்.” எனவும் அதனை கேட்ட ஆதினி தூயவனுக்கு வாழ்த்து கூற அதற்கு மென்சிரிப்பை பதிலாக தந்தவனின் கவனம் முழுக்க காணொளியில் தான் இருந்தது.

இவங்களோட நிறுவனம் இந்து சோப், இந்து சானிட்டைசர், இந்து டிடெர்ஜென்ட் போன்ற பல வீட்டிற்கு தேவையான பொருட்களை எந் வித தீங்கு விளைவிக்க கூடிய ரசாயனங்களும் இல்லாம, சில தவிர்க்க முடியாத அடிப்படை ராசயங்களை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி ரொம்ப முக்கியமா இயற்கை மூலிகைகள் செடிகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்றாங்க. இதை பயன்படுத்துறதுனால நமக்கு நல்ல ரிஸல்ட்ஸ் கிடைக்கும். இது எந்த விதமான ஸ்பான்சர் வீடியோவும் கிடையாது. நானே அவங்க ப்ராடக்ஸ்ட் பர்சனலா யூஸ் பண்ணி பர்சனலா லேப்லயும் டெஸ்ட் பண்ணி தான் சொல்றேன். சந்தேகம் இருக்குறவங்க நீங்களே கூட டெஸ்ட் பண்ணிக்கலாம்.

ரசாயனம் அதிகம் இருக்குற பொருட்களை பயன்படுத்துறதுக்கு பதில் இது போன்ற இயற்கை முறை பொருட்களை பயன்படுத்தி பயன்பெறுவோமாக என்று கூறி உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் மித்லெஸ் மித்ரா. என்னோட பேருல வேணா மித் இருக்கும். என் ஜர்னல்ல எப்போவுமே மித் இருக்காது. நன்றி வணக்கம். ஸ்டே ட்யூன்ட் காய்ஸ்” என்றவாறு காணொளி முடியவும் ஆதினியின் அலுவலகம் வரவும் சரியாக இருந்தது.

“பரவாயில்ல.. பிசினஸ் விஷயத்துல உன் மண்டைல நெறய மசாலா இருக்கு போல.. கீப் இட் அப்” என்று கூறியபடி அவள் செல்ல,

‘பாராட்டுறத கூட ஏகத்தாளமாவே பண்ணிட்டு போறா பாரு.. ஒருநாள் உனக்கு இருக்கு டி’ என்று நினைத்துக் கொண்டவன் பின் சிரித்த முகத்தோடு வண்டியை கிளப்பினான். இதனை அப்பொழுது தான் உள்நுழைந்த காதம்பரி பார்க்க வேகமாக ஆதினியிடம் வந்தவள்,

“ஹே ஆது.. என்னடி.. அண்ணாவா உன்ன டிராப் பண்ணாரு.. சிரிச்சிட்டே வேற போறாரு.. உங்களுக்குள்ள எல்லாம் ஓகே ஆயிடுச்சு போல” என்று மகிழ்ச்சியாக கேட்க ஆதினியோ யோசனையோடே அமர்ந்திருந்தாள்.

“ஆது.. உன்கிட்ட தான் பேசுறேன்.. என்னாச்சு” என்க,

“காது.. ஐ திங்க் ஹீ லவ்ஸ் மித்லெஸ் மித்ரா” என்று கூற அதில் காதம்பரியின் புருவங்கள் முடிச்சிட்டன.

தொடரும் அதிர்வுகள்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்