அதிர்வு – 33
தூயவன் முகத்தில் இருக்கும் தீவிரத்தை உணர்ந்தவள் தன் நக்கல் நையாண்டிகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு,
“சரி வா அப்படி உக்காந்து பேசுவோம்.. அடிபட்ட கையோட எவ்ளோ நேரம் நிப்ப” என்றபடி சோபாவில் சென்று அமர்ந்தாள். இப்பொழுதும் அவள் தன் நலனை கருத்தில் கொள்வதை எண்ணியவனுக்கு வருத்தமாக இருந்தது. அவள் அக்கறை காட்ட வேண்டுமென்று யோசித்தெல்லாம் எதுவும் செய்யவில்லை. இயல்பாகவே அவளுடைய குணத்தில் அக்கறை இருக்கிறது என்று அவனுக்கு இப்பொழுது தான் புரிந்தது. அவளெதிரே அமர்ந்தவன் மௌனமாக அமர்ந்திருக்க அவளோ,
“என்ன சார் பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருக்குறீங்க..” என்க,
“நான் இவ்ளோ நாளா உன்கிட்ட ஏன் அப்படி கடுமையா நடந்துக்கிட்டேன்னு உனக்கு தெரியுமா” என்றான். அவளோ மேல்மூச்சி கீழ்மூச்சு வாங்கியபடி கண்ணை சுருக்கி பார்க்க அவன் என்னவென்று புருவம் உயர்த்தினான்.
“ஏன் டா மக்கு சாம்பிராணி.. அதை தான டா இத்தனை நாளா உன்கிட்ட நான் கேட்டுட்டு இருக்கேன்.. நீ தான சொல்ல மாட்டேங்குற.. இப்போ வந்து தெரியுமான்னு கேட்குற..” என்றாள் கடுப்பாக.
“இல்ல.. என்கிட்டே ரெண்டு தடவ அதைப்பத்தி கேட்க ட்ரை பண்ணுன.. ஆனா அதை பெருசா மைண்ட் பண்ணிக்கல நீ.. அதான் கேட்குறேன்”
“ஏதோ என்னைய பத்தி நெனச்சு வச்சுருக்கன்னு மட்டும் எனக்கு புரியுது.. அது நம்ம முதல் சந்திப்புலையே உருவானதுன்னும் எனக்கு தெரியும்.. ஆனா என்னன்னு நான் யோசிச்சும் எனக்கு பதில் இல்ல.. உன்கிட்ட கேட்டும் நீ சொல்லல.. அதனால அப்படியே விட்டுட்டேன்” என்றாள் சாதாரணமாக.
“அதான் ஏன் விட்ட.. இந்த அளவுக்கு ஒருத்தன் திட்டுறான்னு உனக்கு கோபம் வரலையா.. என்னை உக்கார வச்சு கேள்வி கேட்கணும்னு தோணலயா” பாவமாக கேட்டான்.
‘என்ன இவன்.. இன்னைக்கு வித்தியாசமா நடந்துக்குறான்.. பார்ட்டில சரக்கு ஏதும் அடிச்சுட்டானோ’ என்று யோசித்தவள்,
“டேய் சரக்கு ஏதும் அடிச்சியா…” என்று கேட்க அதில் பொறுமையிழந்தவன்,
“ஆதினி ப்ளீஸ் பீ சீரியஸ்.. எனக்கு பதில் வேணும்” என்றான் ஆனால் சத்தம் குறைவாக. ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று யூகித்தவள்,
“என்ன டா என்னை கேட்க சொல்ற.. கேட்டதுக்கு பதில் வரல.. திரும்ப திரும்ப என்னால உன்கிட்ட வந்து கேட்டு கெஞ்ச எல்லாம் முடியாது.. அண்ட் ஐ க்னோ மைசெல்ஃப்.. அவ்ளோ தான்.. கண்டிப்பா எனக்கு தெரிஞ்சு நான் எந்த தப்பும் செய்யல.. நீ ஏதும் என்னை தப்பா புரிஞ்சு தான் இப்படி பிஹேவ் பண்றன்னு புரிஞ்சுது.. அண்ட் ஆல்சோ ஐ டோன்ட் வாண்ட் டு ப்ரூவ் மைசெல்ஃப் டு யூ.. அதனால நீயே என்னைக்கு வந்து அதைப்பத்தி பேசுறியோ பேசிக்கோன்னு இருந்தேன் அவ்ளோ தான்.. இப்போ எதுக்கு நீ இவ்ளோ கேள்வி கேட்குற” என்றாள் அவனை சந்தேகமாக பார்த்தபடி. அவனோ,
“அந்த போட்டோ..” என்று இழுக்க இங்கு ஆதினிக்கு இதயம் தாறுமாறாக துடித்தது. முயன்று தன்னை சமன்படுத்தியவள்,
“புரியல.. என்ன போட்டோ” என்றாள். அவனோ பெருமூச்சுவிட்டபடி,
“சரி நான் நேரா விஷயத்துக்கு வரேன்.. அஜய் யாரு.. அவனுக்கு எதுக்கு நீ என்கூட எடுத்த போட்டோவை அனுப்பின.. அது போக என்னை வளைச்சு போடுறது தான் உன் பிளான் அப்படின்னு எல்லாம் எதுக்கு மெசேஜ் அனுப்புன.. இதெல்லாம் தான் இத்தனை நாள் உன்மேல நான் கோபப்பட காரணம்.. இப்போ அதுக்கான காரணம் எனக்கு தெரிஞ்சுட்டு.. நான் தான் தப்பா புரிஞ்சுருக்கேன்னு” என்று அவன் கூறவும் உஃப் என்று மூச்சுவிட்டவள் ஏதோ பேச வர அவளை தடுத்தவன்,
“ப்ளீஸ் ஆதினி.. நான் முழுசா பேசிடுறேன்..” என்றவன்,
“ரியலி சாரி.. நான் எப்போதும் யாரையும் காயப்படுத்த நெனைக்கமாட்டேன்.. ஆனா நிஜமா அன்னைக்கு நான் இருந்த மைண்ட்செட்ல எனக்கு எல்லாமே தப்பா தான் புரிய தோணுச்சு.. முதல் கோணல் முற்றிலும் கோணல்னு சொல்லுவாங்க.. அதனால தான் அன்னைக்கு உன்னை பத்தி நான் நெனச்சு வச்சது அப்படியே பதிஞ்சுருச்சு.. நீ செய்ற ஒவ்வொரு விஷயமும் எனக்கு நீ போடுற பிளானா தான் தெரிஞ்சுது.. நான் என்னோட தப்ப நியாயப்படுத்தல.. தப்பு தான்.. உன்னை வார்த்தையால ரொம்ப நோகடிச்சுருக்கேன்.. ஜாதகம் மாறாம, மாதவன் மாதவி லவ் பண்ணாம, மாதவன் கூட தான் உன் கல்யாணம்னு இருந்துருந்தா கண்டிப்பா இதை மனசுல வச்சுட்டு உன் கல்யாணத்தை நிறுத்தி உன் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிருப்பேன்.. இன்னைக்கு காது சொன்ன அப்புறம் தான் அஜய் யாருன்னும் நீ ஏன் அப்படி எல்லாம் அவன்கிட்ட பேசியிருந்தன்னும் தெரிஞ்சுது.. உன்கிட்ட முன்னாடியே நேரடியா வந்து இதை சொல்லி சால்வ் பண்ணிருக்கணும்.. கேட்டா நீ உஷாராகிடுவியோன்னு உன்ன கையும் களவுமா பிடிக்க நெனச்சு தான் அமைதியா இருந்துட்டேன்..” என்று மிகவும் உருக்கமாக தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டினான் தூயவன்.
இயல்பிலேயே தவறென்றால் உடனே ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதும் தீர விசாரிக்காமல் ஒரு செயலை செய்ய கூடாது என்பதும் தூயவனின் நியதி. இதுநாள் வரை தான் கடைபிடித்த ஒன்று இப்பொழுது தன் தவறினால் தவறிவிட்டதே என்று தூயவன் மனம் நச்சரித்தது. மற்ற யாரிடமும் இவ்வாறு அவன் நடந்து கொண்டதும் இல்லை.. ஆதினியிடம் மட்டும் தான் அவனது குணம் மாறுபட்டது. எங்கே தவறினோம் என்று தூயவனுக்கும் புரியவில்லை. ஆனால் இவ்வளவு பெரிய விஷயம் மனதினுள் இருந்தபோதும் அவனை மீறி ஆதினியைக் கண்டால் அவனின் இதயம் அதிர்வது ஏன் என்ற காரணம் தூயவன் அடிக்கடி யோசிப்பதில் ஒன்று. அவன் பேசியதை எல்லாம் அமைதியாக கேட்டவள் அவனையே எந்த வித பாவனையும் முகத்தில் காட்டாமல் பார்க்க அவள்முன் கையை அசைத்தவன்,
“என்னாச்சு..” என்று கேட்க தலையை உலுக்கியவள்,
“சோ நீ என்னை ஒரு பணப்பேய்னு நெனச்சுருக்க.. உன் சொத்துக்கு ஆசைப்பட்டு தான் முதல்ல மாதவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுருக்கேன்னும் அப்புறம் நடந்த விஷயத்தை எல்லாம் எனக்கு சாதகமாக்கிட்டு உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன்னு நெனச்சுருக்க.. பணத்துக்கு ஆசைப்பட்டு தான் உன்னை கல்யாணம் பண்ண விருப்பமில்லன்னு நீ சொல்ல சொல்லியும் நான் சொல்லாம இருந்தேன்னு நெனச்சுருக்க.. அப்படி தான..” என்று முகத்தை இறுக்கமாக வைத்து கேட்க அவனோ ஆமென்று தலையசைத்தான்.
“கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லைல.. எப்படி இப்படி நெனைக்க உனக்கு தோணுச்சு.. ஏன் டா பணத்துக்கு ஆசைப்படுறவ எதுக்கு உன் தயவு வேணாம்னு நெனச்சு வாடகை கொடுக்கணும்.. அதையாச்சு யோசிச்சு பார்த்தியா” என்று ஆதங்கமாக கேட்க,
“இல்ல அதுவும் என்னை நம்ப வைக்க நீ போட்ட பிளான்னு நெனச்சேன்” என்றவன் தலைகுனிந்தான். அவளோ,
“ஆமா இவர் பெரிய சீபிசிஐடி ஆபீசர்.. எல்லாத்தையும் கரெக்ட்டா கெஸ் பண்றதா நெனப்பு.. இவ்ளோ பெரிய கம்பெனிக்கு ஓனர்.. யார் எப்படின்னு பார்த்த உடனே யூகிக்க கூட முடியல.. நீ எல்லாம் என்ன தான் படிச்சியோ” என்று அவனை அவள் மட்டம் தட்ட அவனோ,
“இங்க பாரு.. நான் செஞ்சது தப்பு தான்.. தெரிஞ்ச அடுத்த நிமிஷம் உன்கிட்ட மன்னிப்பு கேட்க வந்துட்டேன்.. மனசார உணர்ந்து தான் வந்துருக்கேன்.. நீ இப்படி எல்லாம் பேசுறது சரியில்ல சொல்லிட்டேன்” என்று தன் நிறுவனத்தை பற்றி கூறவும் முணுக்கென்று வந்த கோபத்தில் கூறினான்.
“செய்யுறதையும் செஞ்சிட்டு துரைக்கு கோபம் வேற வருதோ.. நான் உண்மையா தான டா சொன்னேன்.. மண்டைல மசாலா இருக்கறவன் ஒன்னு என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சுருக்கக் கூடாது.. இல்லனா கல்யாணம் பண்ண உடனே விஷயத்தை பேசி தீர்த்திருக்கணும்.. அதைவிட்டுட்டு” என்று ஆதினி சற்று அதிகப்படியாக தான் பேசினாள்.
“வேணாம் டி.. நீ ரொம்ப ஓவரா பேசுற.. நான் தான் சொல்றேன்ல.. நான் செஞ்ச எல்லாம் என் தப்பு தான்னு.. செஞ்ச தப்புக்கு தண்டனை என்ன வேணா கொடு ஏத்துக்குறேன்.. அதைவிட்டுட்டு இப்படி என்னை கேவலமா பேசாத..” என்க அவளோ,
“துரை இவ்ளோ நாள் என்னை கேவலமா பேசுனீங்க தான.. அப்போ மட்டும் இனிச்சுதோ..”
“ஆதினி.. அது நான் தெரியாம செஞ்சது.. ஆனா நீ இப்போ தெரிஞ்சே செய்யுற” என்றான் பொறுமையை இழுத்துப்பிடித்து.
“தெரிஞ்சு செஞ்சதோ தெரியாம செஞ்சதோ.. பேசுன வார்த்தை பேசுனது தான.. அப்போ நானும் உன்னை தெரியாம கொஞ்ச நாள் கேவலமா பேசிட்டு அப்புறம் சாரி கேட்கவா” என்றாள் எகத்தாளமாக.
“ஹே ஏதோ இவ்ளோ நாள் நான் பேச பேச நீ அமைதியா கேட்டுட்டு அழுதுட்டு இருந்த மாதிரி பேசுற.. நீயும் கூட கூட தான பேசுன.. நானாச்சும் இந்த விஷயத்தை நெனச்சு தான் உன்ன தப்பா பேசுனேன்.. ஆனா நீ சும்மாவா இருந்த.. என்னை காலுல விழவச்ச.. ஐ அக்செப்ட் தட் மை வொர்ட்ஸ் வேர் ஹார்ஷ்.. ஆனா எந்த அளவுக்கு என்னை வச்சு செய்யணுமோ அந்த அளவுக்கு வச்சு செஞ்ச தான.. அப்புறம் என்ன.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.. நான் செஞ்ச எல்லாம் தப்பு தான்.. தெரியாம தான் எல்லாம் செஞ்சேன்.. அதுக்கு உன்கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன்.. அதுக்காக நீ பேசுற எல்லாத்தையும் எல்லாம் கேட்டுட்டு பொறுமையா இருக்க முடியாது.. பேசி இதோட சமாதானம் ஆகிடலாம்னு பார்த்தா ரொம்ப தான் ஓவரா போற.. என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ போ” என்றவன் கோபமாக அறையினுள் செல்ல போக,
“ஹெலோ மிஸ்டர்” என்றாள் ஆதினி. அவனோ என்னவென்று பார்க்க,
“செஞ்சதுக்கு தண்டனையா என்ன சொன்னாலும் செய்யுறேன்னு சொன்ன தான.. இப்போ கோபப்பட்டு போனா அர்த்தம்..” என்க பொறுமையாக அவள்புறம் திரும்பியவன்,
“சொல்லு என்ன செய்யணும்..” என்றான். முடியாது போடி என்று தான் கூறுவான் என்று எதிர்பார்த்து அவள் கேட்க அவன் இவ்வாறு கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாற பின்,
“இப்போ ஒன்னுமில்ல நான் சொல்லும் போது செஞ்சா போதும்.. முதல்ல கை சரியாகட்டும்” என்று விட்டு மிடுக்காக உள்ளே சென்றவளை புரியாமல் பார்த்தவனின் இதழ்கள் அவனையும் மீறி லேசாக மலர்ந்தன.
‘நல்லவ தான்.. ஆனா கொஞ்சம் சேட்டை அதிகம்.. வேற வழியில்லை நம்ம செஞ்ச தப்புக்கான பலனை நம்ம அனுபவிச்சு தான ஆகும்.. அப்படி என்ன செஞ்சிட போறா.. சமாளிப்போம்’ என்று நினைத்தவன் அறையினுள் சென்றான்.
“நாளைக்கு என் ரூமுக்கு ஷிப்ட் ஆகிக்குறேன்.. ரொம்ப டயர்டா இருக்கு.. இன்னைக்கு இங்கயே தூங்கிக்குறேன்” என்றவள் கட்டிலின் மறுபுறம் சென்று அமர்ந்தாள். பாடல் கேட்கலாம் என்று ஏர்போட்ஸை எடுக்க அதுவோ சார்ஜ் இல்லாமல் இருக்க ஓரமாக வைத்துவிட்டாள். தூயவன் அவனுடைய காதொலிப்பானில் ஒன்றை தன் காதில் பொருத்தியவன் மற்றொன்றை அவளிடம் கொடுக்க அவள் அதனை வாங்கும் பொழுது அவனை பார்க்க அவனும் பார்க்க இருவருக்கும் முதல் சந்திப்பின் போது பாடல் கேட்ட நினைவு வந்தது.
முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் இருவரும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டனர். பின் அதனை தன் அலைப்பேசியோடு பொருத்தியவள் பாடலை ஒலிக்கவிட்டாள். சிறிது நேரத்தில் காதம்பரி அவளுக்கு அழைப்பு விடுக்க அழைப்பை ஏற்றவள் மற்றொன்று அவன் காதில் இருக்கிறது என்பதை மறந்து அலைப்பேசியை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்று பேச ஆரம்பித்தாள்.
“ஹெலோ ஆது” என காதில் காதம்பரியின் குரல் ஒலிக்க அவர்கள் பேசுவதை தான் கேட்பது தவறு என்று யோசித்தவன் காதொலிப்பானை அகற்ற போக அதற்குள்,
“ஆது.. என்னாச்சு ஆர் யூ ஓகே.. ஏதும் கோபத்துல இருக்கியா அண்ணா மேல” என்று கேட்க தன்னைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று நினைத்தவன் பின்,
‘நம்மள பத்தி தான பேசுறாங்க.. கேட்போம் தப்பில்ல’ என்று கேட்க ஆரம்பித்தான். ஆதினியோ அவன் தன்னிடம் பேசியது, அதற்கு தான் பதில் பேசியது என அனைத்தையும் கூற ஆரம்பித்தாள். ஆதினி பேசுவது எதுவும் அவனுக்கு கேட்காதல்லவா. காதம்பரி உம் கொட்டுவது மட்டும் தான் கேட்டது.
‘என்ன பேசுறான்னு தெரியலையே’ என்று யோசித்தபடி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் தூயவன். ஆதினி கூறி முடிக்கவும்,
“என்ன டி ஆது நீ… அண்ணா பாவம் இல்லையா.. அவர் நிஜமா தப்ப ரியலைஸ் பண்ணி தான் கேட்குறாரு.. நீ இப்படி எல்லாம் பேசியிருக்க கூடாது ஆது..” என்று காதம்பரி தூயவனுக்கு ஆதரவாக பேச தூயவனோ,
‘அப்படி சொல்லு காது..’ என்று மெச்சிக்கொண்டான்.
“ஹே என்ன டி அண்ணா பாசம் பொத்துட்டு வருதோ..”
“அப்படி எல்லாம் இல்ல டி.. நீ தான சொல்லுவ.. தப்ப உணர்ந்து ஒருத்தங்க மன்னிப்பு கேட்கும் போது பெருந்தன்மையா மன்னிக்கனும்னு.. அதுவும் இல்லாம அவங்க சிட்டுவேஷன்ல இருந்து யோசிச்சு பாரு.. இதே உன் பக்கத்துல இருந்த பையன் உனக்கு தெரியாம போட்டோ எடுத்து இப்படி யாருக்கோ அனுப்பி வளைச்சு போட போறேன்ன்னு சொல்லி அதை நீ பார்த்திருந்தா உனக்கு அவங்க மேல நல்ல எண்ணம் வந்துருக்குமா.. இல்ல தான.. அதுவும் யாரோ சொன்னதை கேட்டு அண்ணா இப்படி எல்லாம் செஞ்சா கூட ஓகே.. அவரே உன் மொபைல்ல கண்ணார பார்த்த அப்புறம் எப்படி உன்ன நல்ல மாதிரி நெனைக்க தோணும்..” என்று பெரிதாக உரையாற்ற,
‘தங்கச்சி பாயிண்ட்டா பேசுறாயா.. இதுக்கு இவ என்ன பதில் சொல்லுவான்னு தெரிஞ்சே ஆகணுமே’ என்று யோசித்தவன் குளியலறையில் இருந்து பார்த்தால் பால்கனி தெரியும் பேசுவதையும் கேட்கலாம் என்றெண்ணி வேகமாக குளியறைக்கு சென்று எக்கி ஜன்னல் வழியே கேட்க ஆரம்பித்தான்.
“ஏம்மா தாயே ஆரம்பிக்காத.. நான் உண்மைய சொல்லிடுறேன்.. உனக்கு அட்வைஸ் பண்றவ நான் அவனை மன்னிக்காமையா இருப்பேன்.. சொல்லப்போனா எனக்கு அவன்மேல் கோபமே வரல.. கொய்யால நம்மள இவ்ளோ மட்டமா நெனச்சுட்டானேன்னு லேசா கடுப்பு தான்.. ஆனாலும் இதுக்கெல்லாம் காரணம் நான் தான.. அப்போ அஜய்கிட்ட இருந்து எஸ்கேப் ஆக வேற வழி தெரியாம அவனை யூஸ் பண்ணிக்கிட்டேன்.. இல்லனா இதெல்லாம் நடந்துருக்குமா.. ஆக்சுவலா இதுவா தான் இருக்கும்னு கொஞ்சம் டவுட் இருந்துச்சு.. இருந்தாலும் என் மொபைல இவன் எடுத்து பார்ப்பான்னு யோசிக்கல.. பிகாஸ் லாக் பண்ணிருப்பேன்.. ஆனா இப்போ யோசிக்கும் போது தான் புரியுது.. அன்னைக்கு சுசு வந்த அவசரத்துல லாக் பண்ணாம அப்படியே வச்சுட்டு போயிருப்பேன்னு.. என்னமோ தெரியல அவன்மேல் கோபமே வர மாட்டுது.. சும்மா அவனை கொஞ்ச நாள் அலைய விடலாமேன்னு தான் கோபமா பேசிட்டு வந்தேன்.. போதுமா” என்று ஆதினி கூற அதனைக் கேட்ட தூயவனோ,
“அடிப்பாவி.. நடிப்பா அப்போ எல்லாம்.. அலைய விடுறியா” என்று வாய் அர்ச்சித்தாலும் மனமோ இந்நிலையிலும் தன்னிலையில் இருந்து யோசித்து பெருந்தன்மையாக அவள் பேசியதையும் கடைசியாக தன் மீது கோபமே வரவில்லை என்று கூறியதையும் நினைத்தவனுக்கு சொல்லவியலா உணர்வொன்று தோன்றியது. காதம்பரியோ,
“அடிப்பாவி.. அப்போ எல்லாம் ஆக்டிங்கா” என்று வாயைப்பிளக்க,
“பின்ன.. எப்படி எல்லாம் வெறுப்பேத்தியிருப்பான்.. அதுக்கெல்லாம் சும்மா ஒரு ரிவெஞ்” என்று கூறியவள் சிரிக்க அவளுடைய இந்த மாற்றத்தைக் கண்டுக்கொண்ட காதம்பரியோ,
“என்ன ஆது.. பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கு.. பார்ட்டில வேற அண்ணாவை லுக்கு விட்டுட்டே வேற பாடுன.. என்ன விஷயம்.. சம்திங்..” என்று இழுக்க அதில் தடுமாறிய ஆதினி,
“அய்ய.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீ என்னத்தையாவது அவன்கிட்ட உளறி வைக்காத.. எனக்கு தூக்கம் வருது குட் நைட்” என்று அழைப்பைத் துண்டித்தவளின் மனதில் மீண்டும் தான் பாடிய “அற்றைத் திங்கள் அந்நிலவில்” எனும் வரிகள் ஓட நிலவினைப் பார்த்து சிரித்தபடி நின்றாள்.
அவள் பேசுவதை எல்லாம் கேட்டவனுக்கும் அவள் பாடும் பொழுது தன்னைப் பார்த்தது நினைவிற்கு வர லேசாக சிரித்தவன்,
‘மவளே.. என்னையவா அலைய விட பாக்குற.. இனிமே இருக்குடி உனக்கு.. நிஜமாவே நீ ஃபிராடு தான் டி.. ஆனா நல்ல ஃபிராடு’ என்று நினைத்துக்கொண்டான். அறைக்குள் வந்த ஆதினி,
‘இந்த உர்ராங்குட்டான் எங்க போனான்’ என்று யோசித்தபடி அறையை அலச குளியலறையில் இருந்து, “அம்மா” என்ற தூயவனின் அலறல் சத்தம் கேட்டது.
தொடரும் அதிர்வுகள்..
போன்ல பேசுறத ஒட்டு கேட்கிறேன் என்று போய் மறுபடியும் விழுந்து வச்சுட்டானா??