Loading

அதிர்வு – 32

காதம்பரி கூறிய அனைத்தையும் கேட்டவர்கள் அதிர்ச்சியோடு இருக்க தூயவனுக்கோ குற்ற உணர்ச்சி மேலோங்கியது. 

‘தப்பு பண்ணிட்டியே டா தூயவா.. எப்போதும் எந்த விஷயத்தையும் பொறுமையா யோசிச்சு ஹேண்டில் பண்ணுவ.. ஆதினி விஷயத்துல மட்டும் ஏன் இப்படி அவசரப்பட்டுட்ட.. அவளே எத்தனை தடவ வாய்விட்டு கேட்டுருக்கா.. என்ன பிரச்சனைன்னு.. மத்தவங்க எல்லாரும் சொன்ன மாதிரி அன்னைக்கே இதை பத்தி அவகிட்ட நீ நேரடியா பேசிருந்தா அன்னைக்கே உண்மை தெரிஞ்சிருக்கும்.. அவளோட முகத்திரையை கிழிக்குறேன்னு சொல்லி இப்போ தூயவன் தெளிவானவங்குற முகத்திரை கிழிஞ்சுருச்சே.. தூயவன் எப்போவும் யாரையும் காயப்படுத்த மாட்டாங்குற முகத்திரை கிழிஞ்சுருச்சே.. தூயவனுங்குற பேருக்கான மதிப்பு குறைஞ்சுடுச்சே.. வார்த்தைக்கு வார்த்தை ஃபிராடுன்னு சொல்லி காயப்படுத்துனியே.. நிஜமாவே அவ உன்மேல அக்கரைப்பட்டு பதறுனத கூட நடிப்புன்னு தான நெனச்ச.. இதை எல்லாத்தையும் விட அவ கல்யாணத்தை வேற நீ நிறுத்த பார்த்த.. ஏதோ மாதவன் மாதவி லவ் பண்ணுனதுனால விஷயம் வேற மாதிரி ஆயிடுச்சு.. இல்லனா வீணா ஒரு பொண்ணோட வாழ்க்கை உன்னால கெட்டுருக்குமே.. எவ்வளவு பெரிய பாவம் செய்ய பார்த்த.. மத்தவங்கள விடு.. உன் மனசாட்சி கேட்குற கேள்விக்கு முதல்ல உன்னால பதில் சொல்ல முடியுமா..’ இவ்வாறாக தூயவனின் சிந்தைகள் ஓட மனதில் பாரம் ஏறியது. மாதவனோ,

“நான் அன்னைக்கே இதை தான தூயவா சொன்னேன்.. அவகிட்ட நேரடியா பேசுன்னு.. ஒருவிஷயம் செய்றதுக்கு முன்னாடி யோசிக்க மாட்டியான்னு எங்களை கேப்பியே.. நீ ஏன் யோசிக்காம விட்ட.. நாங்க அவ்ளோதூரம் சொல்லியும் நீ கேட்கல..” என்று ஆதங்கப்பட்டான். சமரும்,

“அண்ணா சொல்றதும் சரி தான் டா.. நீ தங்கச்சிய சந்தேகப்பட்டது கூட தப்பில்ல.. ஆனா பிரச்சனைய பேசி முடிக்காம மேல மேல அவள காயப்படுத்திருக்கக் கூடாது தான” என்றான் அவன் பங்கிற்கு. 

“டேய் தப்பு அவன் மேல மட்டும் இல்ல டா.. இவன் நம்மள என்ன செஞ்சாலும் பரவாயில்லன்னு நாம கண்டிஷனா பேசி இவன அன்னைக்கே ஆதினிக்கிட்ட பேச வச்சிருக்கணும்.. கூட இருந்துட்டே நாம விட்டுட்டோம்” என்று மாதவி வருந்தினாள். தூயவனுக்கு பேச்சு வரவில்லை. காதம்பரியோ,

“அண்ணா.. முதல்ல ஆதினிக்கு உங்ககூட தான் கல்யாணம் நடந்துச்சுன்னு கேள்விப்பட்டப்போ நிஜமா எனக்கு கவலை இருந்துச்சு.. ஆனா என்கிட்டே நீங்க மன்னிப்பு கேட்டப்போ தான் ஒன்னு புரிஞ்சுது.. நீங்க யாருக்கும் தெரிஞ்சே எந்த கெடுதலும் பண்ண மாட்டீங்கன்னு.. அன்னைல இருந்தே உங்க மேல எனக்கு பெரிய மரியாதை வந்துருச்சு.. ஆது கிட்ட கூட நீ ஏதாச்சும் பண்ணிருப்ப.. அண்ணா கிட்ட என்னன்னு கேட்டு க்ளியர் பண்ணுன்னு அவளை தான் கண்டிச்சேன்.. ஆனாலும் இப்படி யார்கிட்டயும் இதை பத்தி விசாரிக்காம நீங்க ஆதினிய இந்தளவுக்கு கேவலமா நெனச்சுருப்பீங்கன்னு நான் நினைக்கல.. பரவாயில்ல யார் தான் தப்பு செய்யல.. மனுஷங்க தவறு செய்றது இயல்பு தான்.. நீங்க அவகிட்ட மனச திறந்து பேசுங்க.. கண்டிப்பா ஆதினி புரிஞ்சுப்பா.. ஏன்னா அவளுக்கும் உங்கள பிடிக்கும்” என்று கூற வந்தவள், “ஏன்னா அவளுக்கும் உங்கள..” என்றதோடு நிறுத்த தூயவனோ கேள்வியாக பார்த்தான். 

‘அவளோட விருப்பத்தை அவ தான் வெளிகாட்டணும்.. நாம சொல்றது சரியா இருக்காது’ என்று மனதினுள் நினைத்தவள்,

“ஐ மீன்.. அவளுக்கும் உங்க மேல கோபம் இருக்கும்..” என்று எதையோ கூறி சமாளித்தாள். சிந்தையில் இருந்தவன் பெரிதாக அதனை யோசிக்க தோன்றாமல் மௌனமாய் தலையசைத்தவனின் மனதில் குற்றவுணர்வு தான் அதிகமாய் இருந்தது. சமரோ,

‘அவனை மட்டும் மனச திறந்து பேச சொல்ற.. ஆனா நீ என்கிட்டே மனச திறந்து பேசுனியா’ என்று காதம்பரியை பார்த்தபடி மனதினுள் நினைக்க அவன் முகத்தை பார்த்தே அவன் நினைப்பது பெண்ணவளுக்கு நன்றாக புரிய சங்கடமாக தலைகுனிந்து கொண்டாள் காதம்பரி. பிறகு,

“சரி அவன் கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்.. நாம வெளிய இருப்போம்” என்று நண்பனின் மனமறிந்து கூறிய சமர் அனைவரையும் வெளியே அழைத்து சென்றான். இங்கு பேசியவற்றை எல்லாம் அடுத்த அறையில் அமர்ந்திருந்த மீனாட்சியம்மாளுக்கு லேசாக திறந்திருந்த ஜன்னல் வழியே நன்றாகவே கேட்டது. 

“அடப்பாவி பயபுள்ள.. அந்த பொண்ண இவ்ளோ கொடுமை படுத்துனியா நீ.. ஆனாலும் அந்த பொண்ணு உனக்கு முகம் சுளிக்காம அக்கறையா எல்லாம் செய்யுது.. நல்லவேளை நல்ல பொண்ண தான் நான் உனக்கு கட்டிவச்சுருக்கேன்.. இனிமேயாச்சு அவளை நீ புரிஞ்சு நடந்துக்கணும்..” என்று மனதினுள் வேண்டியவர் எதையும் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் வந்து மற்றவர்களோடு இணைந்துக் கொண்டார். 

தூயவனுக்கோ ஆதினியை சந்தித்த பொழுதில் இருந்து நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் மனதினுள் படமாக ஓடியது. இவ்வளவு நாள் தன்னை ஏமாற்றியவள் என்ற கோணத்தில் மட்டுமே பார்த்தவன் இப்பொழுது நிறுத்தி நிதானமாக அனைத்தையும் நினைத்து பார்த்தான். 

பேருந்தில் அந்த காதலர்களுக்கு உதவ முன்வந்தது, தான் வாய்விட்டு கேளாமலே தனக்கு காதொலிப்பானை கொடுத்தது, குளிரில் நடுங்கிய தனக்கு போர்வை போர்த்திவிட்டது, மாதவன் மாதவி செய்த தவறினை பெருந்தன்மையாக மன்னித்து இரு குடும்பங்களுக்காகவும் சேர்த்து யோசித்தது, பாட்டியின் உடல்நிலை குறித்து பதறியது, காரணமின்றி தான் அவளை திட்டிய போதும் அந்த கோபத்தை தன் குடும்பத்தாரிடம் காட்டாமல் இருந்தது, தன் வாழ்வை கேள்விக்குறியாக்கிய மாதவனின் காதலுக்கு வீட்டில் சம்மதம் வாங்கி கொடுத்தது, கணவனே ஆயினும் அவனுடைய தயவு தனக்கு தேவையில்லை என்று வீட்டிற்கான வாடகை கொடுத்தது, தான் கீழே விழுந்த போது தனக்காக பதறி கண்கலங்கியது, “மத்தவங்க செஞ்ச விஷயத்துக்கான பாராட்ட நான் வாங்கிக்க விரும்ப மாட்டேன்” என்று அவள் கூறியது என இவை அனைத்தும் ஆதினியின் கள்ளங்கபடமில்லாத குணத்தை பறைசாற்ற தூயவனுக்கு மிகவும் சங்கடமாகி போனது. ஏதோ யோசித்தவன் பின் எழுந்து வெளியே வர ஊழியர்கள் அனைவரும் பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக கிளம்பினர். தூயவனும் மற்றவர்களோடு வந்தவன்,

“சரி ஓகே கிளம்பலாமா வீட்டுக்கு” என்க இளசுகள் அனைவரும் அவனை என்ன முடிவு எடுத்திருப்பான் என்று யோசனையோடு நோக்கினர். 

“கிளம்பலாம் தூயவா.. எனக்கும் அசதியா இருக்கு.. நான் கார்ல இருக்கேன்.. நீங்க வாங்க” என்றபடி மீனாட்சியம்மாள் செல்ல சமரோ,

“மச்சான் என்ன முடிவு எடுத்திருக்க.. நான் வேணா ஐடியா சொல்லட்டா.. கொஞ்ச நாளைக்கு ஆதினிக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ.. உடனே போய் சாரி கேட்டு காரியத்தை கெடுத்துறாத” என்க காதம்பரியோ,

“ஆமாண்ணா.. இல்லனா ரொம்ப கோபப்படுவா.. கொஞ்ச நாள் கழிச்சு விஷயத்தை சொல்லுங்க.. அவளும் பெருசா எடுத்துக்க மாட்டா” என்றாள். தூயவனோ இடவலமாக தலையசைத்தவன்,

“இல்ல உடனே விஷயத்தை சொல்லி நான் சாரி கேட்டுடுறேன்.. கோபம் பட்டாலும் பரவாயில்ல.. ஐ கேன் மேனேஜ்.. நான் அதுக்கு டீசெர்வ் தான.. ஏற்கனவே நேரடியா பேசாம ஒரு தடவ தப்பு செஞ்சது போதாதா” என்றவன் முடிவோடு தான் வீட்டிற்கு கிளம்பினான். காதம்பரி அவ்வாறே கிளம்ப எண்ணி அனைவரிடமும் விடைபெற சமரோ வேண்டுமென்றே அவளை திரும்பி பார்க்காமல் நின்றான். அதனைக் கண்டவளுக்கு இனம்புரியா வலி ஏற்பட பின் கிளம்பிவிட்டாள். சமர் காரினை இயக்க மாதவன் மாதவி தூயவன் பாட்டியோடு ஏறிக்கொள்ள கார் கிளம்பியது. மீனாட்சியம்மாளோ,

‘இவன் முகரையா பார்த்தா இனிமே ஒழுங்கா நடந்துப்பான்னு தான் தோணுது.. ஒருவேளை நாம இருக்கோம்னு இவன் பெருசா எதையும் காட்டிக்காம இருந்துட்டா என்ன செய்றது.. கண்டிப்பா ஆதினி தூயவன கவனிச்சுப்பா.. பேசாம நாம ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்..’ என்று நினைத்தவர்,

“டேய் மாதவா.. நாம ஊருக்கு கிளம்புவோமா இன்னைக்கு” என்றிட அனைவரும் புரியாமல் பார்த்தனர். தூயவனோ,

“ஏன் பாட்டி.. நேத்து தான வந்தீங்க.. அதுக்குள்ள என்ன.. மணியும் ஆயிடுச்சு..” என்க,

“இல்ல டா தூயவா.. எனக்கு அந்த வீடு தான் சரி.. இங்க இருக்க என்னவோ போல இருக்கு.. பழக்கம் தோஷம்.. நேத்து நான் சரியா தூங்க கூட செய்யல.. நான் கிளம்புறேன்.. மணி எட்டு தான ஆகுது.. வீட்டுக்கு போயி லக்கேஜ் எடுத்துட்டு கிளம்ப வேண்டியது தான்” என்றவர் மாதவியிடம்,

“ஏன்டிமா.. நீ எப்போ கிளம்புற..” என்க,

“இன்னைக்கு நைட் பஸ் டிக்கெட் புக் பண்ணனும்னு இப்போ தான் பார்த்துட்டு இருந்தேன்.. கரெக்ட்டா கேட்குறீங்க பாட்டி” என்றதும்,

“அப்போ நல்லாதா போச்சு.. ஒன்னாவே நாம போய்டலாம்.. நீ நான் மாதவன் மூணு பேரும்” என்க மாதவிக்கோ மகிழ்ச்சி தான். தன்னவனுடனான இரவு பயணம் அவளுக்கு கசக்கவா செய்யும். 

“ஓகே பாட்டி” என்றிட தூயவனும் ஆதினியிடம் உண்மையை கூறுகையில் அவள் கோபம் கொண்டு சண்டையிட்டால் பாட்டிக்கு தெரிந்திட நேரும் என்ற காரணத்தால் அவர் கிளம்புவதும் நல்லது என்று தான் நினைத்தான். அனைவரும் வீட்டிற்கு வந்து இறங்க அறையினுள் இருந்து வந்த ஆதினி அனைவரும் கிளம்புவதும் போல் தெரியவும் என்னவென்று கேட்க பாட்டியும் காரணத்தைக் கூற,

“என்ன பாட்டி நீங்க.. ஏற்கனவே உடம்பு சரியில்ல.. இப்படி அடிக்கடி ட்ராவல் பண்ணுனா உடம்பு என்னத்துக்கு ஆகும்..” என்க அவளின் மெய்யான அக்கறையில் தூயவனின் குற்றவுணர்ச்சி அதிகமாகியது.

“அதெல்லாம் நான் கவனிச்சுக்குறேன்டி மா.. நீ தூயவன கவனிச்சுக்கோ..” என்றவர் அவனிடம்,

“நீயும் அவளை பார்த்துக்க டா..” என்றபடி கிளம்பினார். சமரோ,

“சரி டா தூயவா.. நானும் கிளம்புறேன்” என்று விடைபெற்றான். மாதவியோ த் நண்பனை கலக்கமாக பார்க்க அவனோ,

‘நான் பார்த்துக்குறேன்’ என்றபடி கண்களை மூடித்திறக்க அப்பொழுது தான் நிம்மதி பிறந்தது. நால்வரும் கிளம்பியதும் ஆதினியோ,

“ஹப்பாடா.. இனிமே நோ மோர் ட்ராமாஸ்.. நான் அந்த ரூமுக்கு ஷிப்ட் ஆகிரட்டுமா” என்று கேட்க தூயவனோ இவளிடம் எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்ற தயக்கத்தோடு யோசனையில் இருந்தான். இவள் கேட்டது காதில் விழவில்லை. 

‘என்ன இவன் நின்னுக்கிட்டே கனவு காணுறானா.. ஒருவேளை பாட்டுப் பாடுனதைப் பத்தி ஏதும் கேப்பானோ.. அட கடவுளே.. பேசாம நைசா எஸ்கேப் ஆயிடுவோம்’ என்று நினைத்தவள் செல்ல எத்தனிக்க அதற்குள் சுதாரித்தவன்,

“ஆதினி ஒரு நிமிஷம்” என்றான் தன்மையாக. அவ்வழைப்பில் விழிவிரித்தாள் பெண்ணவள். அவன் தன் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து இப்போதுவரை ஒருமுறை கூட இவ்வாறு அழைத்ததில்லை. நிஜமாகவே அவன் தான் அழைத்தானா என்று யோசித்தபடி அவனை திரும்பி பார்க்க அவனோ அவளை பார்த்தபடி நின்றான். தன் முன் நிற்பவனை தன் கைக்கொண்டு விலக்கியபடி அவனின் பின்னே எதையோ அவள் தேட அதில் புரியாமல் முழித்தவன்,

“என்ன தேடுற” என்றான். அவளோ நாடியில் விரல்வைத்து யோசனையோடு இருப்பது போல் முகத்தை வைத்தபடி,

“இல்ல.. இப்போ யாரோ என்னை ஆதினின்னு ரொம்ப ஹம்பிலா கூப்பிட்டாங்க.. அதான் யாருன்னு பார்த்தேன்” என்க அதில் லேசாக முறைத்தவன்,

“என்ன கிண்டலா.. நான் தான் கூப்பிட்டேன்” என்றான். மீண்டும் பெண்ணவளுக்கு அதிர்ச்சி. தூயவனாக இருந்திருந்தால் இந்நேரம், “ஹே என்ன கொழுப்பா.. நான் தான் கூப்பிட்டுறேன்னு தெரியுதுல்ல.. அப்றம் என்ன தெரியாத மாதிரி நடிக்குற” என்றல்லவா பதில் வந்திருக்கும். 

“டேய் உனக்குள்ள ஆவி ஏதும் பூந்துருச்சா.. நீ தூயவன் தானா..” என்று கேட்டபடி அவனை ஆராய்ச்சி செய்ய அவனோ,

‘ஐயோ நானே எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியாம முழிக்குறேன்.. இவ வேற இந்நேரம் விளையாடுறாளே’ என்று நோக,

‘பின்ன இவ்ளோ நாளா நீ அப்படி தான அவகிட்ட நடந்துருக்க.. திடிர்னு வந்து இப்படி பேசுனா அவளும் என்ன செய்வா’ என்று நியாயத்தை கூறியது அவனின் மனசாட்சி. பெருமூச்சொன்றினை வெளிவிட்டவன்,

“ஆதினி.. ஜோக்ஸ் அப்பார்ட்.. நான் உன்கிட்ட சீரியஸா பேசணும்” என்றான். 

 

தொடரும் அதிர்வுகள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்