Loading

அதிர்வு – 3

மாலை மாதவன் வீட்டிலிருந்து கணபதி, இந்திரா, மாதவன், கணபதியின் தாயார் மீனாட்சியம்மாள், இந்திராவின் அண்ணன் மந்திரமூர்த்தி, அவரது மனைவி அகிலா மற்றும் அவர்களின் இருபத்திரண்டு வயது புதல்வன் விஷ்ணு என ஏழு பேர் செல்ல ஆயத்தமாயினர் ஆதினியைப் பெண் பார்க்க. 

அங்கு கேசவன் மற்றும் அபிராமி வருபவர்களுக்காக ஏற்பாடு செய்ய தொடங்கினர். உறங்கி எழுந்த பெண்ணவளும் குளித்து முடித்து புடவைக் கட்டி தயாராக ஆரம்பித்தாள். இவள் கிளம்பி முடிக்கவும் மாதவன் வீட்டில் இருந்து அனைவரும் வந்து சேரவும் சரியாக இருந்தது. வீட்டு வாசலில் கார் வந்து நின்றவுடன் கேசவன் விறுவென்று அவர்களை வரவேற்க சென்றார்.

“அடடே.. வாங்க வாங்க எல்லாரும்” என்றபடி அழைத்தவர் அவர்களை உள்ளே கூட்டி செல்ல சமைலறையில் இருந்து வந்த அபிராமியும் வந்தவர்களை இன்முகமாய் அழைத்தார். அபிராமி வந்த அனைவர்க்கும் காபி கொடுக்க அவ்வாறே சில பல உபசரிப்புகளும் அறிமுகங்களும் நடந்தேறிய பின் மீனாட்சி பாட்டியோ,

“சரி நாமளே எம்புட்டு நேரம் பேசுறது.. பேத்தியை வர சொல்லுங்க.. நல்லநேரம் போய்கிட்டே இருக்கே” என்று அவர் வேலையை ஆரம்பிக்க கேசவனோ,

“இதோ வர சொல்றேன் மா” என்றவர் அபிராமியிடம்,

“கூட்டிட்டு வா அபிராமி” என்க அவரும் ஆதினியை அழைக்க சென்றார். சில நிமிடங்களில் பச்சை வர்ண பட்டுடுத்தி அழகு பதுமையாக வந்து நின்றாள் பெண்ணவள். 

“அடடே அந்த மீனாட்சியே வந்து நிக்குற போல இருக்காளே.. டேய் மாதவா.. நீ குடுத்து வச்சுருக்க டா பேராண்டி” என்று கூற விஷ்ணுவும்,

“யோவ் ப்ரோ இன் லா (bro in law).. அக்கா சூப்பரா இருக்காங்க” என்று காதைக் கடித்தான். இந்திராவோ,

“வா ஆதினி.. இப்படி வந்து உக்காரு..” என்று தன்னருகில் அமரவைக்க அவளும் வந்தமர்ந்தாள். பின்பு கேசவனோ,

“ஆமா கேட்கணும்னு நெனச்சேன்.. உங்க சின்ன பையன் வரலைங்களா” என்று கேட்க கணபதியோ,

“இல்ல அவன் சென்னைல இருக்கான்.. நம்ம இப்போ உடனே இதெல்லாம் ஏற்பாடு பண்ணதுனால அவனால வர முடியல..” 

“ஓ அப்படிங்களா சரிங்க” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க ஆதினியோ விஷ்ணுவை மாதவனின் தம்பி என்று முதலில் நினைத்துவிட இப்பொழுது,

‘ஓ அப்போ இந்த பையன் அவர் தம்பி இல்லையா’ என்று நினைத்துக் கொண்டாள். அப்பொழுது தான் விஷ்ணுவும் அவளிடம் பேசினான்.

“ஹாய் அக்கா.. நான் விஷ்ணு.. ” என்று தன்னை அறிமுக செய்துக் கொள்ள பெண்ணவளோ புன்னகைத்தாள். மீனாட்சி பாட்டியோ,

“ஏன்டிமா.. வாய தொறந்து தான் பேசுனா என்ன.. ஏன் அமைதியா இருக்க.. ஒரு பாட்டு வேணா பாடுறீயா” என்க கணபதியோ,

“என்னமா நீங்க.. இந்த காலத்துலயும் பாட்டெல்லாம் பாட சொல்லிட்டு.. அதெல்லாம் ஆதினி நல்லாவே பேசுவா” என்க அவளோ,

“பரவாயில்ல மாமா.. இதுல என்ன இருக்கு.. பாட்டி இப்போ என்ன தப்பா சொல்லிட்டாங்க.. ” என்றவள் மீனாட்சி பாட்டியிடம்,

“பாட்டு தான.. பாடிரலாமே.. நீங்க ஆரம்பிச்சு வைங்க.. உங்க பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறேன் நானு” என்று கூறி சிரிக்க இந்திராவோ,

“அப்படி சொல்லு ஆதினி” என்க பாட்டியோ,

“என்னங்கடி மாமியாரும் மருமகளும் கூட்டு சேர்ந்துட்டு என்னை இப்போவே ஒரண்ட இழுக்குறீங்களா.. என் பாட்டுக்கே எசப்பாட்டு பாடுவியாக்கும் நீயு… அதுசரி.. ஏன் டா மாதவா.. நல்ல விவரமான பொண்ணா தான் டா பிடிச்சுருக்க நீ” என்று கூற அங்கே சிரிப்பலைகள் தான். அபிராமியோ,

“ஆது.. என்ன பேச்சு இது.. பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவ” என்று கடிந்து கொள்ள மீனாட்சி பாட்டியோ,

“அட என்னத்தா நீ.. என்ன சொல்லிட்டான்னு புள்ளைய இப்போ நீ வைய்யுற.. எனக்கு இந்த மாதிரி வாயாடி பொண்ண தான் ரொம்ப பிடிக்கும்..” என்றவர் அவளை உச்சிமுகர்ந்தார். கேசவனோ,

“மாப்பிள்ளை வந்ததுல இருந்து ஏதும் பேசவே இல்லையே..” என்று யோசனையோடு கேட்க இந்திராவோ,

“அவன் கொஞ்சம் சைலன்ட் டைப்.. எல்லார் முன்னாடியும் பேச கூச்சப்படுறான் போல” என்க,

“அப்போ ஆதினி கிட்ட தனியா பேசுறதுனா பேசிட்டு வாங்க..” என்று அபிராமி கூற பின் இருவரும் மொட்டை மாடிக்கு வந்தனர். ஆதினியோ,

“வந்ததுல இருந்து கவனிச்சுட்டு தான் இருக்கேன்.. ஏதோ யோசனையா இருந்த மாதிரி தெரியுதே.. எதுவும் ப்ராப்லமா” என்றாள் நேரடியாக. 

“இல்ல இல்ல.. பிராப்லம் எல்லாம் இல்ல.. வொர்க்ல கொஞ்ச இஷ்ஷு ஆயிடுச்சு.. அதைப் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்.. வேற ஒன்னும் இல்ல” என்றான். 

“ஓ சரி” என்க பிறகு சிறிது நேர யோசனைக்கு பிறகு,

“உங்களுக்கு என்னை நிஜமா பிடிச்சிருக்கா அப்போ” என்றான்.

“அப்பா அன்னைக்கே சொல்லிருப்பாங்களே”

“அது.. ஆமா சொன்னாங்க.. ஆனா உங்க வாயால கேட்கலையே”

“என் விருப்பப்படி தான் எல்லாம் நடக்குது..”

“ஜாதகமும் பொருந்திடுச்சா”

“உங்க வீட்டுல சொல்லலயா அப்போ.. நல்ல பொருந்திருக்குன்னு சொன்னாங்க”

“ஓ அப்படியா.. ” என்றவன் ஏதோ சிந்தித்தான்.

“என்னாச்சு.. என்ன யோசிக்குறீங்க”

“இல்ல இல்ல சும்மா தான்.. ஆனா..” என ஏதோ கூற வர அதற்குள் கீழே இருந்து,

“பேசிட்டியா மாதவா” என கணபதியின் குரல் ஒலித்தது.

“தோ வறோம் பா” என்றவன்,

“சரி.. உங்க நம்பர் சொல்றீங்களா… ஃப்ரீ டைம்ல பேசிப்போம்” என்று கேட்க பின்பு அவரவர் அலைப்பேசி எண்கள் பகிரப்பட பிறகு இருவரும் கீழிறங்கி வந்தனர். சில மணி நேர பேச்சுகளுக்கு பின்பு கணபதியோ,

“சரிங்க.. அப்போ நாங்க கிளம்புறோம்.. கூடிய சீக்கிரம் நல்ல நாளா முடிவு பண்ணி நிச்சயத்தை வச்சுக்கலாம்” என்று கூற கேசவனோ,

“நல்லதுங்க.. வாங்க” என்று வழியனுப்ப மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பினர். கேசவனுக்கும் அபிராமிக்கும் மனது நிறைந்து காணப்பட்டது. அவ்வாறே அன்றைய நாள் கழிய மறுநாள் தன் பணியைப் பார்க்க சென்னை கிளம்பினாள் பெண்ணவள்.

பேருந்தினுள் ஏறி அமர்ந்தவள் என்ன நினைத்தாளோ திடீரென தன் இருக்கையில் இருந்து எழுந்து பேருந்து முழுவதும் நோட்டம் விட பின்பு அமர்ந்து கொண்டாள் அமைதியாக. பேருந்து கிளம்பவும் காதம்பரி அவளுக்கு அழைப்பு விடுக்கவும் சரியாக இருந்தது. அழைப்பை ஏற்றவள்,

“சொல்லு காது”

“என்ன ஆது.. பஸ் ஏறிட்டியா..”

“ஆமா டி இப்போ தான் ஏறுனேன்”

“என்ன மேடம்.. உள்ள வந்ததும் பஸ் ஃபுல்லா செக் பண்ணிருப்பீங்களே” என்று நக்கல் தோணியில் கேட்க அதில் அதிர்ந்தவள் முதலில் தடுமாறி பின்,

“அது.. அதெல்லாம் இல்லையே” என்று சமாளித்தாள்.

“ஹே நடிக்காத டி என்கிட்டயே.. சரி அதை விடு.. போன தடவ எந்த பஸ்ல வந்தியோ அதே பஸ்ல தான மேடம் புக் பண்ணிருப்பீங்க” 

“அடியே.. நான் எப்போவுமே இந்த ஒரு பஸ்ல தான் புக் பண்ணுவேன்னு உனக்கு தெரியாதா.. சும்மா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாத.. எனக்கு மாப்பிள்ளை ஃபிக்ஸ் ஆயிடுச்சு தெரியும் தான” என்று சலிப்பாக கூற அவளோ,

“அச்சோ ஆமால.. சாரி டி பழக்க தோஷத்தில கிண்டல் பண்ணிட்டேன்.. உனக்கு மாப்பிளை ஃபிக்ஸான நியாபகமே எனக்கு இல்ல” என்று வருந்த,

“விடு டி.. அது எனக்கே நியாபகம் இல்ல” என்று சோர்வாய் கூறினாள் ஆதினி. 

“என்ன ஆது சொல்ற.. ஆமா கல்யாணம் விஷயம் பேசும்போதெல்லாம் நீ ஃபியூஸ் போன பல்ப் மாதிரி ஆகிடுற.. என்ன தான் உன் பிரச்சனை”

“பிரச்சனை எல்லா ஏதும் இல்ல டி.. ஆனா எனக்கு ஒரு சந்தோஷமே இல்ல இதை நெனச்சு.. இந்த மாதிரி தருணத்துல பொண்ணுங்க மனசு முழுக்க பட்டாம்பூச்சி பறந்து புது பொலிவா இருப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.. ஆனா எனக்கு அந்த மாதிரி எந்த ஒரு உணர்வும் இல்ல.. ஏதோ தெரிஞ்சவங்க வீட்டு விசேஷத்துக்கு போக போற மாதிரி தான் இருக்கு.. எதனாலன்னு தெரியல”

“என்ன டி நீ இப்படி சொல்ற.. நேத்து தான பொண்ணு பார்த்துட்டு போயிருக்காங்க.. ஆமா அவர் பேசுனாரா உன்கிட்ட என்ன பேசுனீங்க” என்று கேட்க அவளும் கூற பின்,

“அப்புறம் என்ன நம்பர் வாங்கியாச்சுல.. இனிமே கால் பண்ணி ஒரே ரொமான்ஸ் தான் நடக்க போகுது.. சரி டி நீ பாத்து வா நாளைக்கு நேர்ல பேசிப்போம்.. பாய் டி” என்றபடி அவள் அழைப்பைத் துண்டித்து விட ஆதினியும் கண்மூடி உறங்க ஆரம்பித்தாள்.  அன்றைய இரவு அவளுக்கு உறக்கத்தில் கழிய மறுநாள் பொழுது அழகாய் விடிந்தது. 

________________________

சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாம் தளத்தில் இரு படுக்கையறை ஒரு சமையலறை ஒரு ஹால் ஒரு பால்கனி கொண்டிருந்தது அந்த வீடு. பார்க்கும் இடமெல்லாம் பளிச்சென்று மின்னும் அளவிற்கு அவ்வளவு தூய்மையாக இருந்தது. காலை ஐந்து மணிக்கு சரியாக மெல்லிய ஒலி எழுப்பியவாறு அலாரம் அடிக்கப்பட்டது அலைபேசியில். அச்சத்தத்தைக் கேட்பவர்களுக்கு இன்னும் இழுத்து போர்த்தியபடி உறங்க வேண்டுமென்று மட்டும் தான் தோன்றும். ஆனால் அலாரம் அடித்த ஐந்து வினாடியில் விழித்து கொண்டது அவனது விழிகள்.

விழித்தவன் ஆழமாக மூச்சினை இழுத்துவிட்டு பின் எழுந்தான் படுக்கையில் இருந்து. முதல் வேலையாக போர்த்தி படுத்த போர்வையினை மடித்து பின் தலையணைகளை ஒழுங்கு படுத்திவிட்டு கழிவறை சென்றவன் கைகளை நன்கு கழுவினான். பின்பு காலை கடன்களை நிம்மதியாக முடித்துவிட்டு, பல்துலக்கிவிட்டு, ஒரு மணிநேரமாக நல்ல குளியலை போட்டவன் இடுப்பில் துண்டு கட்டியபடி வெளியில் வந்து தனக்கான ஆடைகளை எடுத்து இஸ்திரி பெட்டியின் உதவி கொண்டு சூடுபறக்க நேர்த்தியாக தேய்த்தவன் அதனை ஓரமாக வைத்துவிட்டு இலகுவான ஆடை ஒன்றை அணிந்து அறையைவிட்டு வெளியே வந்தான்.

நேராக சமயலறைக்குள் வந்தவன் அடுப்பைப் பற்றவைத்து பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்தவனின் சிந்தையில் ஏதோ தோன்ற விறுவிறுவென அறைக்குள் ஓடி எதையோ பார்த்தவன் மீண்டும் சமயலறைக்கு வந்து பின் தேநீர் கலக்க ஆரம்பித்தான்.

அதனை டம்ளரில் ஊற்றிக்கொண்டு ஹாலின் சோபாவில் அமர்ந்தவன் தன் மடிக்கணினியைத் திறந்து மின்னஞ்சல்களை சரிபார்த்தான். சிறிது நேரத்தில் திரையின் கீழ் பகுதியில் வலது ஓரத்தில் மணி ஆறரை என்று காண்பிக்கவும் மடிக்கணியை மூடி வைத்தவன் காலை உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டான். 

யாரோ பின்னிருந்து கட்டளைகளைப் பிறப்பிப்பது போல படுவேகமாக இருந்தது அவனது செயல்கள். தினமும் நேரம் தவறாமல் செய்யும் வேலைகள். நன்றாகவே அவனுக்கு அனைத்தும் பழக்கப்பட்டிருந்தது.

கை தேர்ந்த சமையல் துறை நிபுணர் போல அவ்வளவு நேர்த்தியாக செய்தான் ஒவ்வொரு வேலைகளையும். சரியாக ஒரு மணிநேரத்தில் சுட சுட சப்பாத்தியும் அதற்கு கொண்டைக்கடலைக் குருமாவையும் செய்தவன் ஹாட்பாக்ஸில் அதனை எடுத்துவந்து உணவருந்தும் மேஜையில் அடுக்கிவிட்டு சமையலறையை சுத்தம் செய்துவிட்டு படுக்கையறைக்கு வந்து பணிக்கு தயாராக ஆரம்பித்தான்.

உடையை உடுத்தி கண்ணாடியில் முகம் பார்த்து தலை சீவி கொண்டிருந்தவனின் புருவங்கள் திடீரென யோசனையில் இடுங்க சமயலறையினுள் வந்து எதையோ ஆராய்ந்துவிட்டு பின் மீண்டும் தயாராக படுக்கையறைக்கு சென்றான். 

நேர்த்தியாக தயாராகி வந்தவன் காலை உணவை உண்டுவிட்டு அதையே மதிய உணவாக டப்பாவில் அடைத்தவன் தனது கைப்பைக்குள் எடுத்து வைத்துக் கொண்டான். பின்பு தனது பணிக்கு தேவையான கோப்புகள் சிலவற்றை ஆராய்ந்து அதனையும் தன் மடிக்கணினியையும் எடுத்துவைத்துக் கொண்டவன் மணியைப் பார்க்க எட்டரை என்றபடி காண்பித்தது. தனது மகிழுந்தின் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டினைப் பூட்டிவிட்டு வண்டியில் ஏறியவன் சாவியைத் திருகி வண்டியை இயக்க அவனின் கைகள் மீண்டும் இயக்கத்தைத் தானாக நிறுத்தியது.

வண்டியில் இருந்து இறங்கியவன் வீட்டினைத் திறந்து எதையோ பார்த்துவிட்டு பின் மகிழுந்தினுள் ஏறியவன் அதனை இயக்க அடுத்த இருபத்தி ஐந்தாவது நிமிடத்தில் “இந்திரா க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் பிரைவேட் லிமிடெட்” என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தில் வந்து நின்றது.

மிடுக்காக இறங்கி சென்றவனின் கால்கள் “தூயவன் புகழேந்தி. ஜீ , மேனேஜிங் டைரக்டர்” என்று பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டிருக்கும் கதவினைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். ஏற்கனவே அந்த அறையில் இருந்த தன் நண்பன் சமர்வேந்தனிடம்,

“குட் மார்னிங் டா” என்றபடி தன் பிரத்யேக இருக்கையில் அமரவும் கடிகாரத்தில் மணி ஒன்பது என்று மணியடிக்கவும் மிகக் கச்சிதமாக இருந்தது. காலை வணக்கம் கூறிய நண்பனையும் கடிகாரத்தையும் மாறிமாறி பார்த்த சமர்,

“குட் மார்னிங் ரோபோ” என்று கூற அவன் கூற்றில் முறைத்த தூயவன்,

“டேய் காலைலயே அடி வாங்காத என்கிட்ட” என்றபடி தனது கணினியை இயக்க ஆரம்பித்தான். 

“பின்ன என்ன டா.. ஏதோ டைம் ட்ராவல் பண்ணிட்டு வர மாதிரி எப்படி தான் இப்படி டைமுக்கு வந்து நிக்கிறியோ தெரில.. மனுஷனாடா நீயெல்லாம்”

“நான் மனுஷனா இல்லையாங்குறத அப்புறம் யோசிப்போம்.. என்னைக்கும் இல்லாத அதிசயமா நீ என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துருக்க..”

“நீ இதுவும் கேப்ப.. இன்னமும் கேப்ப.. சாயங்காலம் பொண்ணு பாக்க போறேன் ஒருமணி நேரம் சீக்கிரம் கிளம்புறேன்னு நேத்து பர்மிஷன் கேட்டதுக்கு அப்போ காலைல ஒருமணி நேரம் சீக்கிரம் வந்து வேலைய பாருன்னு சொல்லிட்டு இப்போ கேள்வியா கேக்குற நீயு” என்று  அர்ச்சித்தான். 

தூயவன் புகழேந்தி. வயது இருபத்தியேழு. கணபதி-இந்திரா தம்பதியின் இளைய புதல்வன். பெயருக்கேற்ப தன்னை சுற்றி இருக்கும் அனைத்தும் தூய்மையாக நேர்த்தியாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன். பெயரளவில் மட்டுமல்லாது மனதளவிலும் இவன் தூயவனே. உயிரி தொழில்நுட்ப துறையில் பட்டம் படித்தவன் தன் தந்தையின் உழைப்பை சாராமல் தன் படிப்பிற்கு ஏற்ப நிறுவனம் நிறுவி சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பதைக் கனவாக கொண்டவன் இரண்டு வருடங்களுக்கு முன்பு தன் கனவு நிறுவனைத்தை நிறுவினான் “இந்திரா க்ரூப் ஆஃப்  கம்பெனிஸ் பிரைவேட் லிமிடெட்” எனும் பெயரில். சோப்புகள், சானிட்டைசர், ஹேண்ட்வாஷ், ப்ளோர் கிளீனர், டிஷ் வாஷர், டிடெர்ஜென்ட் போன்றவற்றை அதிக வேதிப்பொருட்களின்றி இயற்கை முறையில் செய்யும் நிறுவனம் தான் இது.

சமர்வேந்தன் தூயவனின் கல்லூரி தோழன். பெரிய அளவில் வசதி இல்லாத போதும் தன்னால் முடிந்த அளவு நண்பனின் நிறுவனத்திற்கு தனது பங்களிப்பை அளித்தவனைத் தனக்கு அடுத்த பதவியில் நியமித்திருந்தான் தூயவன். மிக நெருங்கிய நண்பர்களானாலும் வேலையென்று வந்து விட்டால் தூயவனுக்கு அனைவரும் சமமே. சமர் வேந்தனுக்கும் தன் நண்பனின் குணம் நன்கு தெரிந்த காரணத்தினால் அவனுக்கு ஏற்ப வெகுவாகவே பொருந்தி செல்வான்.

சமர் கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருக்க தான் தேடிய கோப்பு கண்களில் படாததால்,

“டேய் தூயவா.. அந்த லெவல் டூ ப்ராஜெக்ட் ஃபைல் எங்க டா.. நேத்து காலைல பாக்கும் போது இங்க தான இருந்துச்சு..”

“அதுவா அந்த ரெண்டாவது ரேக்ல இருக்கும் பாரு” என்று பதில் வந்தது தூயவனிடம் இருந்து. 

“ஒரு இடத்துல வைக்காம ஏன் டா மாத்தி மாத்தி வைக்குற” என்று சமர் புலம்ப,

“டேய் எரும.. அது அந்த இடத்துல தான் எப்போவும் இருக்கும்.. நீ நேத்து மாத்தி  வச்சுட்டு என்னை சொல்றியா.. என் ரூம்ல எதை எங்க எடுக்குரியோ அது அந்த இடத்துல தான் மறுபடியும் வைக்கணும்.. அண்டர்ஸ்டேன்ட்..”

“ஆரம்பிச்சுட்டான்யா புராணத்தை.. உன் கூட இருக்குறதுக்கு மிலிட்டரி ஆபிஸர் கூட இருந்துட்டு போய்டலாம்.. அவர் கூட இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா இருக்க மாட்டாரு” என்று புலம்பியபடி எழுந்து தனது கேபினுக்கு செல்ல நண்பனின் கூற்றுக்கு புன்னகைத்தபடி தன் பணியைக் கவனிக்க ஆரம்பித்தான் தூயவன். 

தொடரும் அதிர்வுகள்..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்