அதிர்வு – 25
“என்ன ரெண்டு பேரும் இப்படி ஷாக் ஆகுறீங்க.. ஊட்டி தான விட சொன்னேன்.. ஊட்டிக்கே போயா விட சொன்னேன்..” என்று எதுகை மோனையோடு பாட்டி கேட்க,
‘கிழவி வந்ததும் வேலையை காட்டுதே..’ என்று மனதினுள் நினைத்த தூயவன்,
“பாட்டி எனக்கு என் வேலையை நானே செய்ய தான பிடிக்கும்.. உனக்கே தெரியும் தான.. அந்த ஸ்பூன் எடுத்து கொடுங்க.. நானே சாப்பிட்டுக்குறேன்” என்று மேஜையில் கரண்டியைத் தேடியபடி பார்வையைப் பதிக்க அது தான் பாட்டியின் இடுப்பில் சொருக்கப்பட்டுள்ளது என்று தூயவன் அறியவில்லையே பாவம்.
“சரி ஸ்பூன் இருந்தா அதை வச்சு சாப்பிடு.. இல்லனா ஆதினி ஊட்டி விடுவா” என்றபடி பாட்டி ஓரமாக அமர்ந்துக்கொள்ள ஆதினி கரண்டியைத் தேடினாள்.
“இங்க எங்க ஸ்பூன் இருக்கு டா” என்று கேட்டவள் சட்டென நினைவு வந்து.. எவ்வாறு சமாளிப்பது என்று முழிக்க மீனாட்சியம்மாளோ,
“என்னது டாவா” என்றார் முறைத்தபடி. காதம்பரியோ,
“அது டா இல்ல பாட்டி.. டார்லிங்.. அப்படி தான் அவ அண்ணாவை கூப்பிடுவா.. இப்போ நீங்க இருக்கீங்களேன்னு வெட்கப்படுறா.. என்ன டி” என்று சமாளிக்க ஆதினியோ,
‘கருமம்.. இவனையெல்லாம் டார்லிங்னு நான் கூப்பிடனுமா’ என்று நொந்தவள் வேறு வழியின்றி காதம்பரியின் கூற்றுக்கு தலையசைத்தாள்.
“அப்படியா.. நான் கூட அவங்க தாத்தாவை அப்படி தான் கூப்பிடுவேன்..” என்று வெட்கப்பட்டவரோ,
“சரி சரி நீ ஊட்டி விடு அவனுக்கு.. நேரமாகுது..” என்று வற்புறுத்த வேறு வழியின்றி தட்டோடு அவன் முன் வந்தவள் வெளியில் வேண்டாவெறுப்பாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஆசையாக தான் இட்லியைப் பிய்த்து அவன் வாயருகில் கொண்டு சென்றாள். கண்களில் நேசம். முகத்திலோ வேஷம். தூயவன்,
‘இவ கையால எல்லாம் சாப்பிடணும்னு என் தலை எழுத்து’ என்று அவளை முறைத்தபடி பார்த்தவன் வேறு வழியின்றி வாயைத் திறந்தான். அவன் முகத்தை வைத்தே அவன் நினைப்பதை புரிந்தவள்,
‘மவனே.. என்னையா திட்டுற.. இப்போ பாரு’ என்று நினைத்தவள்,
“ஆ.. கையைக் கடிக்காதீங்கா..” என்று வெட்கப்பட்டு கூற தூயவனோ விசித்திரமாக பார்த்தான்.
“ஹே.. என்ன.. நான் எப்போ உன் கையை கடிச்சேன்.. விளையாடுரியா..” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்க அவளோ,
“என் கையால சாப்பிடனுமான்னு எரிச்சல் பட்டல.. அனுபவி” என்று கூறியவள் ஊட்டிவிடுவதே தலையாய கடமை என்பது போல் வைத்து கொண்டாள் முக பாவனையை. மாதவன், சமர் மற்றும் காதம்பரியோ உண்மை புரிந்து வாய் பொத்தி சிரிக்க பாட்டியோ,
“அப்படியே அவன் தாத்தா மாதிரி” என்று கையைக் கடிதத்தைப் பற்றி கூறி மறுபடியும் வெட்கப்பட தூயவனுக்கு எங்கு சென்று முட்டிக்கொள்ளலாம் என்று இருந்தது.
பிறகு அனைவரும் உண்டு முடித்து மருத்துவரிடம் கூறி விடைபெற்று தூயவனை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
மாதவனும் சமரும் தூயவனை மெதுவாக அழைத்து வந்தனர் வீட்டினுள். உள்ளே வந்த பாட்டியோ வீட்டினை பார்த்து,
“ரொம்ப சுத்தமா வச்சிருக்கடி மா வீட்டை.. அதுவும் வந்த ஒருநாள்ல” என்று பாராட்ட தூயவனுக்கு கடுப்பேரியது. அவர் கூற்றில் சிரித்த ஆதினியோ,
“ஐயோ பாட்டி.. இது எல்லாம் உங்க பேரன் கைவண்ணம்.. என்னை ஒரு வேலை கூட வந்ததுல இருந்து பார்க்க விடல தெரியுமா..” என்று கூற அவள் முதலில் உண்மையை கூறியதற்கு சந்தோஷப்பட வேண்டுமா அல்ல இரண்டாவதாக கூறியதற்கு கடுப்பாக வேண்டுமா என்று தெரியாமல் முழித்தான் தூயவன். மீனாட்சியம்மாளோ,
“நிஜமாவா ஆதினி சொல்ற.. நீ செய்யலையா அப்போ” என்க,
“மத்தவங்க செஞ்ச விஷயத்துக்கான பாராட்ட நான் வாங்கிக்க விரும்ப மாட்டேன் பாட்டி.. நான் நிஜமா தான் சொல்றேன்.. உங்க பேரன் தான் சுத்தமா வச்சுருக்காரு.. சரி நான் உங்க எல்லாருக்கும் டீ போட்டு கொண்டு வரேன்” என்றவள் சமையலறைக்கு செல்ல அவள் கூறி சென்ற, “மத்தவங்க செஞ்ச விஷயத்துக்கான பாராட்ட நான் வாங்கிக்க விரும்ப மாட்டேன்” என்ற வாக்கியம் மட்டும் தூயவனின் சிந்தையில் ஓடியது.
சமயலறையில் இருந்து சற்று நேரத்தில் வந்தவள் அனைவருக்கும் தேநீர் கொடுக்க தூயவனுக்கு மட்டும்,
“உங்களுக்கு காபி..” என்று கனிவோடு கொடுத்தாள்.
‘இது உலகமகா நடப்புடா சாமி’ என்று நினைத்தவன் எதுவும் கூறாமல் காபியை எடுத்து பருக டிகாக்ஷன் தூக்கலாகவும் சர்க்கரை கம்மியாகவும் சேர்க்கப்பட்டு சிறிது கசப்பு தன்மையோடு அவனுக்கு எவ்வாறு இருந்தால் பிடிக்குமோ அது போன்று கச்சிதமான சுவையில் இருந்தது. பருகியவனின் புருவங்கள் உயர்ந்தன சுவையை எண்ணி.
‘நம்மள விட நல்லா காபி போடுறாளே..’ என்று நினைத்தவன் அவளை பார்க்க மீனாட்சியம்மாளிடம் பேசிக்கொண்டிருந்த ஆதினியோ சட்டென திரும்பினாள் தூயவன் புறம். அவன் தன்னைப் பார்த்து கொண்டிருந்ததை உணர்ந்தவளுக்கு சொல்லொண்ணா உணர்வொன்று தோன்ற அதனை வெளிக்காட்டாமல்
புருவம் உயர்த்தி என்னவென்றாள். சட்டென அவள் தன்புறம் திரும்புவாள் என்று எதிர்பாராத தூயவனோ ஒரு கணம் தடுமாற பின் ஒன்றுமில்லை என்று திரும்பிக் கொண்டான்.
ஆகமொத்தம் இருவரின் மனதிலும் ஒருவரையொருவர் பற்றி நல்ல விதமாக தோன்றினாலும் அவரவர் செய்த செய்கைகள் இருவரையும் ஒருவருக்கொருவர் நம்பவிடாமல் செய்ய எது உண்மை முகம் என்றறிய முடியாமல் கடிகார பெண்டுலமாய் அல்லாடினர் இருவரும்.
அவ்வாறே நேரம் கடக்க அப்பொழுது தான் தூயவனுக்கு மானஸ்வி இன்று முதல் வேலைக்கு வருகிறாள் என்று நினைவு வர சமரை அழைத்தவன்,
“டேய் சமர்.. மறந்தே போய்ட்டேன்.. மானஸ்வி இன்னைல இருந்து ஜாயின் பண்றாங்க.. நீ கொஞ்சம் இன்னைக்கு நம்ம கம்பெனிய சுத்தி காட்டி புரொடக்ஷன் பத்தி எல்லாம் எக்ஸ்பிலைன் பண்ணிரு… அப்போ தான் அவங்களுக்கு புரியும்..” என்க,
“சரி மச்சான்.. நான் பாத்துக்குறேன்..” என்றான் சமர். அதனைக் கேட்ட ஆதினியோ,
‘மானஸ்வியா.. எங்கயோ கேட்ட பெயர் மாதிரி இருக்கே.. யாரு அவங்க.. இப்போ எப்படி இதை பத்தி கேட்குறது..’ என்று யோசித்து கொண்டிருக்க அதற்குள் மீனாட்சி பாட்டியோ,
“யாரு தூயவா அது..” என்று சரியாக கேட்டார்.
‘ஹப்பாடா.. பாட்டி இருக்க பயமேன்’ என்று நினைத்தவள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அலைபேசியை நோண்டும் பாவனையைக் கொடுத்தாலும் செவிகளோ தூயவனின் பதிலுக்காக காத்திருந்தன.
“அன்னைக்கு குலதெய்வ கோவில்ல நம்ம மாதவனை மாப்பிளை கேட்டு ஒருத்தர் அவர் பொண்ண கூட்டிட்டு வந்தாருல.. அந்த பொண்ணு தான் பாட்டி.. வேலை கேட்டு வந்துருந்தாங்க.. நல்ல பொண்ணு வேற.. அதான் எனக்கு பிஏவா சேர்த்திக்கிட்டேன்” என்றிட,
‘ஏதேய் பிஏவா.. இவன் என்ன ஏதோ பலநாள் பழகுன மாதிரி நல்ல பொண்ணுன்னு சர்ட்டிபிகேட் எல்லாம் கொடுக்குறான்.. அவ்வளவு சீக்கிரம் இவன் யாரையும் நம்ப மாட்டானே’ என்று ஆதினியின் மனதில் சிறு பொறாமை எட்டிப்பார்த்ததோ என்னவோ..
“ஓ அந்த பொண்ணா.. சரி தூயவா” என்றதோடு நிறுத்திக்கொண்டார் மீனாட்சி. காதம்பரியோ,
“சரி ஆது.. நான் கிளம்புறேன்.. நீ அண்ணாவை கவனிச்சுக்கோ” என்று பேசிக் கொண்டிருக்க சமரோ,
‘கிளம்ப போறாங்களா.. ஒரு பகுமானத்துக்கு நான் பாட்டுக்கு இனிமே உங்க கிட்ட நானா இதை பத்தி கேட்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.. ஆனா உங்க முடிவு தெரியாம என் மனசு அல்லாடுதே.. நானா இப்போ உங்க கிட்ட வந்து பேசுனா என்னை கேவலமா நெனைப்பீங்க.. ஏதாவது செய்யணுமே இப்போ’ என்று நினைத்தவன் வராத அழைப்பை வந்ததாக காட்டிக்கொண்டு அலைபேசியில் பேசுவது போல வெளியே வந்தவன் அவளின் ஸ்கூட்டியின் டயரில் காற்றினை வெளியேற்றி விட்டு பின்பு எதுவும் தெரியாதது போல் வந்து அமர்ந்து கொண்டான்.
“சரி ஓகே பாய் டி.. பாய் அண்ணா.. உடம்பை கவனிச்சுக்கோங்க.. நான் வரேன் பாட்டி..” என்றவள் சமரிடம் ஒரு பார்வையை மட்டும் வீசியவள் சென்றுவிட்டாள். நிச்சயம் அப்பார்வையில் கோபமோ, பிடித்தமின்மையோ, வெறுப்போ எதுவும் இல்லை என்று மட்டும் சமருக்கு நன்கு புரிந்தது.
“சரி மச்சான்.. அப்போ நானும் கிளம்புறேன் கம்பெனிக்கு.. வரேன் ஆதினி.. பாய் பாட்டி” என்றவன் செல்ல போக அவனை சந்தேகமாக ஏறிட்ட பாட்டியோ,
“என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது” என்று பாட்டு படிக்க சமருக்கோ பக்கென்றானது.
‘ஒருவேளை பாட்டி கண்டுபிடிச்சுருச்சோ. நமக்கெதுக்கு வம்பு கண்டுக்காம போவோம்’ என்று நினைத்தவன் விட்டால் போதுமென ஓடிவிட்டான். வண்டியின் டயரையும் வண்டியையும் மாறிமாறி பார்த்தவள் செய்வதறியாது நிற்க எதுவும் தெரியாதது போல் அவளிடம் வந்தவன்,
“என்னாச்சுங்க..” என்றான்.
“டயர் பஞ்சர்.. வரும் போது நல்லா தான் இருந்துச்சு… எந்த படுபாவி பண்ண வேலைன்னு தெரியல” என்க சமருக்கோ புரையேறியது.
“ஏங்க யாருன்னு தெரியாம ஏன் திட்டுறீங்க.. பாவம்ல.. அவங்களுக்கென்ன கஷ்டமோ” என்று அவன் கூற அவனை புரியாமல் பார்த்தவள்,
“கஷ்டமா.. புரியல” என்றாள்.
“இல்லைங்க.. ஹான் தோ.. அங்க குழந்தைங்க எல்லாம் விளையாடுறங்க. அவங்க யாராச்சும் தெரியாம செஞ்சுருக்கலாம்.. அது தெரியாம நாம திட்டுறது சரியா இருக்காதுல.. அதை சொல்ல வந்தேன்..” என்று வாய்க்கு வந்ததை கூறி சமாளித்தான்.
“ஓஹோ அப்படி.. சரி ஓகே.. நான் பஸ்ல போய்க்குறேன்” என காதம்பரி கூறவும்,
“ஹான் சரிங்க.. போயிட்டு வாங்க” என்று ஒரு வேகத்தில் தலையசைத்தவன் நொடியில் சுதாரித்து,
‘ஏதேய் பஸ்ல போறீங்களா.. இதுக்கா நான் இவ்வளவு மெனகிட்டேன்’ என்று நினைத்தவன்,
“ஏங்க.. நீங்க ஏதும் நெனச்சுக்கலைனா நான் உங்களை டிராப் பண்றேன்..” என்று கேட்க அவளோ மறுத்துக் கூறவர அதற்குள் அவன்,
“உங்களுக்கு இஷ்டம் இருந்தா வாங்க” என்று கூறிவிட்டான் லாவகமாக. பிறகு என்ன நினைத்தாளோ உடனே,
“வாங்க போலாம்” என்றபடி அவன் காரில் ஏறினாள்.
‘மிஷன் சக்ஸஸ்’ என்று மனதினுள் குதூகலித்தவன் வண்டியை இயக்க சில நிமிடங்களுக்கு அமைதி நிலவியது இருவருக்கும். மௌனத்தை உடைக்க எண்ணியவனோ பாடலை ஒலிக்க விடலாம் என்று வானொலியை இயக்க கண்ட நாள் முதல் படத்திலிருந்து பனித்துளி பனித்துளி என்ற பாடல் ஒளித்தது.
காதம்பரிக்கு இது மிக பிடித்த பாடல் போல.. பாடலை கேட்டதும் அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி சமருக்கு அந்த தகவலை கூறாமல் கூறியது. ஏதேனும் பேசி ஆக வேண்டுமே என்று நினைத்தவன்,
“இந்த மாதிரி மெலடி சாங்கும் உங்களுக்கு அப்போ பிடிக்குமா” என்று கேட்க தன் முக பாவனையை வைத்தே கண்டுபிடித்துவிட்டானே என்று எண்ணியவள்,
“ஏன் அப்படி கேட்குறீங்க” என்றாள்.
“இல்ல நீங்க தான அன்னைக்கு சொன்னீங்க.. உங்களுக்கு ‘உத்தமா நக்கர எத்தர எப்பர’ மாதிரி சாங்ஸ் தான பிடிக்கும்னு” என்று கூற அவன் கூற்றில் வாய்விட்டே சிரித்துவிட்டாள். அன்று ஏதோ அவனை கலாய்க்க எண்ணி தான் அவள் விஜய் ஆண்டனி பாடல் வரிகள் தான் பிடிக்கும் என்று கூறினாள். ஆனால் அதனை இந்த அளவிற்கு நினைவில் வைத்திருப்பான் என்று பெண்ணவள் நினைக்கவில்லை.
தன்னுடைய சிறு சிறு செய்கையையும் புரிந்து.. தான் கூறிய சிறு விஷயங்களைக் கூட நினைவில் வைத்து நடப்பவனை எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காமல் போகும். காதம்பரி மட்டும் விதிவிலக்கா. வேந்தனவன் பெண் மனதை காதல் கூறிய அன்றே வென்றுவிட்டான் தான். அது புரிந்தாலும்,
‘உங்களை எனக்கு பிடிச்சுருக்கு தான்.. ஆனா என் மனசை உங்க கிட்ட வெளிப்படுத்த முடியல என்னால.. வாழ்க்கையில எதுவும் எனக்கு அவ்ளோ ஈஸியா கிடைச்சது இல்ல.. ஆனா உங்க அன்பு இவ்ளோ எளிமையா எனக்கு கிடைக்கிறது நெனச்சு பயமாயிருக்கு.. என்னை மன்னிச்சுறுங்க.. கஷ்டப்பட்டு முகத்துக்கு திரை போட்டு உங்க மேல இருக்க இஷ்டத்தை மறைக்க நினைக்குறேன்.. ஆனா மனசுக்கு எப்படி திரை போடுறதுன்னு எனக்கு தெரியல..’ என்று மனதில் நினைத்து காதம்பரி மறுக சரியாக அந்நேரம் அந்த பாடலில் இருந்து,
முகத்திரைகுள்ளே நின்று
கண்ணாம் மூச்சி ஆடினாய்…
பொய்யால் ஒரு மாலைகட்டி
பூசை செய்து சூடினாய்..
என்ற வரி ஒலிக்க சமர் காதம்பரியின் கண்களை அர்த்த பார்வையுடன் பார்க்க தன்னை தெரிந்து கொண்டானோ என்ற பயம் அப்பிக்கொண்டது அவளது மனதில். பாடலின் இவ்வரிகள் அவன் தன்னை கேள்வி கேட்பது போலவே தோன்ற,
“லேசா தளவலிக்குது.. ரேடியோ ஆஃப் பண்றேன்” என்றுவிட்டு வானொலியை அணைத்துவிட்டாள். தன் முகமே அவனுக்கு காட்டி கொடுத்துவிடும் என்றஞ்சி. அது புரிந்தவன்,
“பாட்டை ஆஃப் பண்ணிட்டா மட்டும்…” என்று கூற அதிர்ந்தவள்,
“என்ன.. புரியல” என்றாள். அதில் சிரித்தவன்,
“இல்லைங்க.. பாட்டை ஆஃப் பண்ணிட்டா மட்டும் தலைவலி சரியா ஆகிருமா.. டேப்லெட் போடுங்கன்னு சொல்ல வந்தேன்” என்று சாலையில் கவனத்தைப் பதித்தபடியே கூறினான்.
‘இவன் தெரிஞ்சு பேசுறானா.. இல்ல தெரியாம பேசுறானா’ என்று சந்தேகமாக பார்த்தவள் அதன் பின் வாயைத் திறக்கவில்லை. சிறிது நேரத்தில் காதம்பரி இறங்க வேண்டிய இடம் வந்துவிட அவனிடம் இருந்து விடைபெற்றவள் சென்றுவிட செல்லும் அவளையே பார்த்தவன்,
“உனக்கும் என்னை பிடிச்சுருக்குன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காக மறைக்க நெனைக்குற.. நீயே அதை என்கிட்ட சொல்லுவன்னு எதிர் பார்க்குறேன்..” என்று தனக்கு தானே கூறியவன் அவள் அணைத்துவிட்டு போன வானொலியை இயக்க,
நிழல்களின் உள்ளே
உள்ள நிஜங்களை தேடினேன்..
நீயாய் அதை சொல்வாய் என்று
நித்தமும் நான் வாடினேன்..
எனும் வரிகள் விட்டதில் இருந்து ஒலிக்க அதனை புன்சிரிப்போடு கேட்டவன் வண்டியைக் கிளப்பினான்.
தொடரும் அதிர்வுகள்…
ஹாய் மக்களே.. முதல்ல மன்னிப்பு கேட்டுக்குறேன்.. ஒவ்வொரு அத்தியாயம் கொடுக்கவும் லேட் பண்றேன்னு எனக்கு புரியுது.. ஆனா நான் வெளியூர்ல இருக்குறதுனால கரெக்ட்டா டெய்லி ஒரு யூடின்னு என்னால கொடுக்க முடியல.. என் ஊருக்கு போக இன்னும் ரெண்டு வாரம் ஆகும்.. அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. கிடைக்குற நேரத்துல டைப் பண்ணி போட்ருவேன்..
கதை எப்படி போகுது.. உங்க எல்லாருக்கும் பிடிச்சுருக்கா.. மறக்காம கமெண்ட் பண்ணிட்டு போங்க மக்களே..