Loading

அதிர்வு – 24

பாட்டியின் வரவை எண்ணி தூயவன் கடுப்பில் இருக்க ஆதினியோ,

‘இது நம்ம லிஸ்டுலயே இல்லையே.. இப்போ இவன் வேற கத்துவானே’ என்றபடி முழித்தவள்,

“நான் வேணும்னு சொல்லல.. ஒரு பதற்றத்துல சொல்லிட்டேன்..” என்க தூயவனோ எதுவும் கூறவில்லை. 

“சரி நீ வீட்டுக்கு போ..” என்க அவளோ,

“எதேய் வீட்டுக்கு போணுமா.. உன்ன யாரு கவனிக்குறது.. டாக்டர் உன்ன கவனமா பார்த்துக்க சொல்லியிருக்காங்க.. அதுமட்டுமில்ல இப்போ நான் வீட்டுக்கு போனா அப்புறம் அத்தை மாமா எல்லாம் என்னை நினைப்பாங்க.. இட்ஸ் ஓகே.. நான் இங்க இருந்துக்குறேன்.. நீ தூங்கு பேசாம” என்க இதற்கு மேல் அவள் எப்படியும் செல்லமாட்டாள் என்று புரிந்தவன் பேசாமல் உறங்க எத்தனித்தான்.

சற்று கண்ணசந்தவனின் மனக்கண்ணில் அவன் விழுந்ததைப் பார்த்து பதறி கண்கலங்கிய ஆதினியின் முகம் தோன்றவும் சட்டென கண்விழிக்க தூயவன் படுத்திருந்த கட்டிலின் அருகில் உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த ஆதினி தான் தெரிந்தாள். 

‘இவ எதுக்கு எனக்காக பதறுனா.. இவ எதுக்கு எனக்காக கண் கலங்குனா.. இது உண்மையா இல்ல இதுவும் இவளோட நடிப்பா..’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு எவ்வளவு முயன்றும் உறக்கம் வருவேனா என்று சாதித்தது. மீண்டும் மீண்டும் அவள் கலங்கிய முகம் நினைவிற்கு வந்து அவனுடைய தூக்கத்தை கெடுக்க காரணமானவளோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். 

‘ஏன் டி என் உசுர வாங்குற இப்படி’ என்று அவளை பார்த்தபடி நினைத்தவனுக்கு அவள் அமர்ந்தபடியே உறங்குவது வேறு சற்று வருத்தத்தைக் கொடுத்தது. அவன் வருத்தத்திற்கான காரணத்தை அவன் மனசாட்சி கேட்டாலும் இதற்கு பெயர் மனிதாபிமானம் என்று சாக்கு கூறிக்கொண்டான்.

தனக்கு கொடுப்பட்ட இரண்டு தலையணைகளில் ஒன்றை தன் அடிபடாத இடக்கையில் எடுத்தவன் அவள் அமர்ந்திருந்த இருக்கையில் அவள் கழுத்தின் பின் வைக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் நல்ல வாகாக அதில் தலை வைத்து உறங்கினாள். பிறகு மருந்தின் வீரியத்தில் தூயவனின் கண்கள் சற்று சொருக அவ்வாறு நித்ராதேவி அவனை ஆற தழுவிக்கொண்டாள். 

காலையில் நேரமாக எழும் பழக்கம் உடைய தூயவனுக்கு முழிப்பு தட்ட ஆதினியோ இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். 

‘பைத்தியம்.. என்னை கவனிச்சுக்குறேன்னு இருந்துட்டு நல்ல தூங்குது பாரு’ என்று மனதினுள் நினைத்தவன் கழிப்பறை செல்ல எண்ணி எழும்ப அவ்வளவு நேரம் அசந்து உறங்கியவளுக்கு அது மட்டும் எப்படி தெரிந்ததோ சட்டென கண்விழித்தவள்,

“ஹே என்னாச்சு.. எதுவும் வேணுமா” என்று பதறி எழும்ப,

“இல்ல இல்ல அதெல்லாம் வேணாம்.. நான் ரெஸ்ட்ரூம் போகணும்..” என்றவன் செல்ல எத்தனிக்க அவளோ,

“சரி வா நான் கூட்டிட்டு போறேன்” என்க அவளை வினோதமாக பார்த்தவன்,

“நீயா..” என்க அவளோ அப்பொழுது தான் தான் கூறியதை யோசித்தாள். 

“இல்ல கதவு வரைக்கும் கூட்டிட்டு போறதுக்கு சொன்னேன்” என்று தயங்கி கூற அவள் முக பாவனையில் சிரிப்பு வந்தாலும் அதனை வெளிக்காட்டாமல்,

“கையில தான அடிபட்டுருக்கு.. அதுவும் ஒரு கைல தான்.. நான் மேனேஜ் பண்ணிப்பேன்” என்றவன் மெல்ல நடந்து கழிப்பறைக்கு சென்றான்.  

‘ரொம்ப தான் ஓவரா பண்ணுறான் இவன்..’ என்று நினைத்து உதடு சுளித்தவள் அவன் வருவதற்காக காத்திருந்தாள். வந்ததும் அலைபேசியை எடுத்து மாதவனுக்கு அழைத்தான். அழைப்பை ஏற்ற மாதவனோ,

“சொல்லு டா”

“டேய் மாதவா.. எதாவது செஞ்சி பாட்டி இன்னைக்கு வராதபடி செஞ்சுரு.. உனக்கு புண்ணியமா போகும்” என்க அவனோ,

“யூ டூ லேட் ப்ரோ.. நாங்க செங்கல்பட்டு கிட்ட வந்துட்டோம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துருவோம்” என்று சாதாரணமாக அவன் தலையில் இடியை இறக்க,

“என்ன டா சொல்ற.. அப்போ நைட்டோட நைட்டா கிளம்பிடீங்களா.. அந்த கிழவிக் கிட்ட ஃபோன கொடு” என்றவன் மீனாட்சியம்மாளிடம்,

“பாட்டி உனக்கு இது தேவையா.. நீயே இப்போ தான் ஹாஸ்ப்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்துருக்க.. இதுல நீ என்ன என்னை கவனிக்க போற.. உன்ன நான் கூப்பிட்டேனா” என்றான் காட்டமாய். 

“டேய் படவா.. அதெல்லாம் நான் நல்லாவே இருக்கேன்.. நீ இவ்ளோ பதறுறத பார்த்தா ஏதோ கோல்மால் வேலை பண்ணிட்டு இருக்க போல.. இரு வந்து உன்ன கவனிச்சுக்குறேன்” என்க அப்பொழுது தான் இருவரும் தனி தனி அறையில் இருப்பது நினைவிற்கு வர,

“பண்ணிட்டாலும்.. சரி அதான் வந்துடீங்கள்ல வந்து தொலைங்க” என்றபடி அழைப்பைத் துண்டித்தவன் ஆதினியிடம்,

“ஹே நீ வீட்டுக்கு போ உடனே” என்க அவளோ,

“எதுக்கு பாட்டிகிட்ட எனக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்க பிளான் பண்றியா” என்றிட அதில் தன் தலையிலடித்தவன், 

“பாட்டிகிட்ட நல்ல பெயர் வாங்கணும்னா நீ உடனே வீட்டுக்கு போய் ஆகணும்” எங்க அவளோ புரியாமல் முழிக்க,

“உனக்கு எல்லாத்தையும் புளி போட்டு விளக்கணும்.. பாட்டி கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவாங்க.. வீட்டுக்கு வந்தா நாம தனி தனி ரூம்ல இருக்கோம்னு தெரிஞ்சுரும்.. உன் திங்ஸ் எல்லாத்தையும் எடுத்து என் ரூம்ல வைக்க வேணாமா.. அதுக்கு தான் உன்ன போக சொல்றேன்.. புரிஞ்சுதா இல்ல இன்னும் விளக்கணுமா” என்றிட அவளுக்கும் அப்பொழுது தான் அது தோன்றியது. நல்லவேளை இன்று இரண்டாவது சனிக்கிழமை. ஆதினிக்கும் வங்கி விடுமுறை. 

“சரி சரி நான் உடனே வீட்டுக்கு போறேன்.. உனக்கு ஹெல்ப்புக்கு சமர் அண்ணாவை கூப்பிட்டுக்கோ” என்றவள் விறுவிறுவென்று வீட்டிற்கு சென்றாள். செல்லும் வழியில் காதம்பரியை உதவிக்கு அழைக்க இருவரும் ஒரே நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். காதம்பரியின் உதவியோடு தன் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் தூயவனின் அறைக்கு மாற்றி முடித்தாள்.

தூயவன் அறை ஆதினி அறை என்று தனி தனியாக இருந்தது இப்பொழுது தூயவன்-ஆதினி அறை என்று ஒன்றாக மாறியது. ஆனால் தனித்துக் கிடக்கும் இருவரின் இதயங்கள் ஒன்று சேருமா..?

“ஹே ஆது.. நான் கேட்டுகிட்டே இருக்கேன்.. வேலைய முடி சொல்றேன்னு சொன்னல.. சொல்லு இப்போ.. எதுக்கு ரெண்டு பெரும் தனித்தனி ரூம்ல தூங்குறீங்க.. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு நியாபகம் இருக்குதா இல்லையா..” என்று இவ்வளவு நேரம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவள் இப்பொழுது கண்டிப்பாக கேட்க அவளைப் பார்த்து பெருமூச்சுவிட்ட ஆதினியோ,

“கல்யாணம் ஆகிடுச்சுன்னு நியாபகம் இருக்குறதுனால தான்.. ஒரே வீட்டுல இருக்கோம்.. ஏன் டி ஒரே ரூம்ல இருக்குற அளவுக்கு நாங்க அப்படியே ஒற்றுமையா இருந்து கிழிச்சுட்டோம்.. போடி இவளே.. அந்த ஆளு முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்குறான்.. என்ன எழவு காரணம்னும் சொல்லி தொலைய மாட்டேங்குறான்.. நானும் எவ்ளோ தான் பொறுமையா போறது.. ஒன்னு முழுசா கெட்டவனா இருக்கணும்.. வெறுத்து தொலைஞ்சிருவேன்.. இல்லனா முழுசா நல்லவனா இருக்கணும்.. மனச மாத்திக்க யோசிப்பேன்.. இவன் நேரத்துக்கு ஒரு மாதிரி நடந்துக்குறான் என்னை என்ன செய்ய சொல்ற..” என்று ஒரே மூச்சாக கூறி முடிக்க காதம்பரிக்கு ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது. 

ஆதினியின் மனதினுள் தூயவனுக்கான இடம் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றும்.. வாழ்க்கையை ஏற்று வாழ தயாராக தான் இருக்கிறாள் என்றும்.. தூயவன் தான் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறான் என்றும் நன்றாகவே புரிந்தது.

“சரி விடு டி… கூடிய சீக்கிரம் கண்டுபிடிப்போம்” என்க ஆதினியோ,

“என்னத்த..” என்றாள். அதற்கு உதடு மடித்து சிரித்த காதம்பரி,

“உன் மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிச்சுட்டேன்.. அண்ணன் மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிப்போம்” என்றாள். 

“என்ன என்ன.. என் மனசுல என்ன” என்று முறைத்தபடி ஆதினி கேட்க,

“அதெல்லாம் எனக்கு தெரியும்.. சரி எனக்கு ஒரு டவுட்.. ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடி அண்ணன் வாழ்க்கைல லவ் எதும் இருந்துருக்குமோ..” 

“இதை யோசிக்காம இருப்பேனா.. ஆனா அப்படி எனக்கு தோணலையே.. அப்படியே இருந்தாலும் அன்னைக்கு தாலி கட்டுறதுக்கு முன்னாடி அதை காரணமா என்கிட்ட சொல்லிருப்பான் தான.. இதை எதுக்கு என்கிட்டே மறைக்கணும்” என்றாள். 

“இல்ல ஆது.. அவருக்கு உன்மேல வேற ஏதோ கோபம் இருக்கு.. அது முதல் கோபம்.. ரெண்டாவது உன்கிட்ட ரெக்வஸ்ட் பண்ணி கேட்டும் நீ கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னது.. இது ரெண்டாவது கோபம்.. இது போக ஏதும் அவருக்கு லவ் ஸ்டோரி இருக்கும்னு எனக்கு தோணுது..” எனவும் தான் ஆதினிக்கு அன்று அவன் குலதெய்வ கோவிலில் தனியே சென்று அலைபேசியை பார்த்து சிரித்தது நினைவிற்கு வந்தது. 

“ஹே ஆமா காது..” என்றவள் அந்த நிகழ்வை கூற,

“பாத்தியா.. சொன்னேன்ல.. அப்போ யாரோ இருக்காங்க” என்க ஆதினிக்கோ ஒருகணம் முகம் சுருங்கியது. சட்டென முகத்தை இயல்பாய் வைத்தாலும் காதம்பரி கண்டுக்கொண்டாள்.

அப்பொழுது தான் இருவருக்கும் அவனுடைய அறையில் தானே இப்பொழுது நின்று பேசுகிறோம் என்று தோன்றியது. அதாவது இப்பொழுது அவன் அறை முழுக்க தேடினால் ஏதேனும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு சேர தோன்ற ஆதினியோ அவளை பார்த்து தலையசைக்க அவளின் எண்ணத்திற்கு ஆமோதிக்கும்படி காதம்பரியும் தலையசைத்தாள். இருவரும் சேர்ந்து தேட எத்தனிக்க அதற்குள் ஆதினியின் அலைபேசி ஒலித்தது. தூயவன் தான்.

‘பொறுக்காதே இவனுக்கு..’ என்று புலம்பியபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், 

“என்ன” என்றாள்.

“என்ன பண்ற.. பாட்டி இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவாங்க.. சீக்கிரம் வா நீ” என்க சரி என்று அழைப்பை துண்டித்தவள்,

“ஹே காது.. இப்போ தேட முடியாது டி.. இவன் வேற உடனே வர சொல்றான்.. அதுமட்டுமில்ல.. துறைக்கு ரூம் பக்கா க்ளீனா இருக்கனும்.. நாம தேடி ஏதாச்சும் கலைஞ்சுதுன்னா மாட்டிப்போம்.. அதனால நேரம் பார்த்து நான் நேக்கா தேடுறேன்.. சிக்காமையா போய்ட போறான்.. பாத்துக்கலாம்.. நான் போய் குளிச்சுட்டு வரேன்..” என்றவள் குளித்து கிளம்பி தயாராகி வர பிறகு ஆதினியும் காதம்பரியும் மருத்துவமனை சென்றனர். பாட்டி வந்து சேருவதற்குள் இருவரும் மருத்துவமனை வந்து சேர்ந்தனர். 

ஆதினி சென்றதும் சமரை உதவிக்கு அழைத்த தூயவன் அவனோடு பேசிக்கொண்டிருந்தான். தூயவனிடம் பேசி கொண்டிருந்த சமருக்கோ திடீரென குளிர் காற்று வீச கேசம் காற்றிலாட மருத்துவமனை வாடைக் கூட மரிக்கொழுந்தாய் மணக்க “அவள் வருவாளா.. அவள் வருவாளா..” என்று பின்னணி பாடல் ஒலிக்க சட்டென வாயிலை நோக்கினான்.  திடீரென அவன் முக மாற்றத்தைக் கண்ட தூயவனோ,

“டேய் என்ன டா ஆச்சு..” என்க முப்பத்திரண்டு பற்களும் தெரிய சிரித்தவன்,

“என் ஆளு இஸ் கமிங் மச்சான்” என்றான். அறை கதவோ மூடி தான் இருந்தது. சுற்றி முற்றி பார்த்த தூயவனோ,

“என்ன டா எங்க இருந்து பாக்குற.. வெளிய யார் வராங்கன்னு உனக்கு எப்படி தெரியும்.. பகல் கனவு காணாத” என்று நக்கலாக கூற சமரோ,

“பார்க்க தான போற” என்றபடி வாசலையே பார்க்க கதவு திறந்தது. முதலில் ஆதினி வர அவளைக் கண்ட தூயவன் சமரை கேலி பார்வை பார்க்க சமரின் முகம் மலர்வதைக் கண்டவன் வாசலை பார்க்க காதம்பரி வந்து கொண்டிருந்தாள். ஆச்சரியமாக பார்த்த தூயவனோ,

“ஹே.. எப்புட்றா…” என்று வாயைப் பிளந்தான்.

“எல்லாம் காதல் செய்யும் வேலை மச்சான்” என்றவன் பெருவிரல் நகத்தைக் கடித்தபடி வெட்கப்பட,

“சகிக்கல” என்று திரும்பி கொண்டான் தூயவன்.

“போடாங்க.. உனக்கு பொறாமை” என்க அதற்குள் இருவரும் உள்ளே வந்து விட்டனர். வந்ததும் காதம்பரியோ சமரைப் பார்த்து மென்சிரிப்பொன்றை மட்டும் மரியாதை நிமித்தமாக உதிர்த்தவள் தூயவனிடம்,

“இப்போ எப்படி அண்ணா இருக்கு உங்களுக்கு.. பார்த்து போயிருக்கலாம் தான..” என்று தங்கையாய் அக்கறைப்பட்டாள். 

“எப்போதும் கவனமா தான்மா இருப்பேன்.. என்னன்னு தெரியல.. என் கிரகம்” என்றவன் ஆதினியைப் பார்க்க அவளோ முறைத்தபடி ஏதோ கூறவர அதற்குள் பாட்டியம் மாதவனும் வந்துவிட்டனர்.

“டேய் தூயவா.. கண்ணா.. எப்படி டா இருக்க.. உனக்கு அடிப்பட்டுட்டுன்னு தெரிஞ்சதும் நான் எவ்ளோ துடிச்சு போயிட்டேன் தெரியுமா..” என்று வந்ததும் பாசமழை பொழிய,

“நிறுத்துறியா கொஞ்சம்” என்று கைநீட்டி தடுத்தவன் பாட்டியின் கண்களில் கண்ணீர் தடயம் இருக்கிறதா என்று தொட்டு பார்க்க அதுவோ வற்றி போய் இருந்தது. 

‘ஆஹா.. கண்டுபிடிச்சுட்டானே.. ப்ளெண்டர் மிஸ்டேக்’ என்று மனதினுள் நினைத்த மீனாட்சியம்மாள்,

“அது இல்ல டா தூயவா.. வரும்போது முழுக்க அழுதுகிட்டே வந்தேனா.. அதான் கண்ணீர் ஸ்டாக் இல்லாம போயிடுச்சு” என்று பச்சை பொய் புளுக அதெல்லாம் நம்புபவனா நம் தூயவன். பேச்சினை மாற்றும் பொருட்டு ஆதினியோ,

“வாங்க பாட்டி.. வந்ததுல இருந்து நின்னுட்டே இருக்கீங்க.. உட்காருங்க.. நீங்களும் உட்காருங்க மாதவன்” என்றிட பாட்டியோ,

“அட அட.. பெரியவங்க கிட்ட எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு என் பேத்திக் கிட்ட தான் கத்துக்கணும்” என்று பாராட்ட தூயவனுக்கோ புகைந்தது. அப்பொழுது அறைக்குள் வந்த செவிலிய பெண் ஆதினியிடம் மாத்திரைகளைக் கொடுத்து,

“இப்போவே அவங்கள ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட வச்சு இந்த டேப்லெட்ஸ் கொடுங்க” என்று கொடுத்துவிட்டு செல்ல மாதவனோ,

“நான் வரும் போதே நமக்கு சாப்பாடு வாங்கிட்டு தான் வந்தேன்..” என்றவன் அதனை ஆதினியிடம் கொடுத்து,

“அவனை சாப்பிட சொல்லு ஆதினி” என்றான். அவளும் ஒரு பார்சலை பிரித்து தட்டில் மூன்று இட்லிகளை வைத்து தூயவனிடம் நீட்ட அவனோ வலது கையில் இருந்து கட்டையும் தட்டையும் மாறிமாறி பார்க்க அப்பொழுது அங்கு மேஜையில் இருந்த கரண்டியை எடுத்து யாருமறியாமல் தன் இடுப்பில் சொருகிக்கொண்ட மீனாட்சிப்பாட்டியோ,

“ஏன்டி மா.. அவனுக்கே கைல அடிபட்டுருக்கு.. அவன் எப்படி சாப்பிடுவான்.. நீ தான் ஊட்டி விடணும்” எனவும்,

“எதேய்.. ஊட்டி விடணுமா” என்று தூயவனும் ஆதினியும் ஒருசேர கேட்டபடி வாயைப் பிளந்தனர்.

தொடரும் அதிர்வுகள்..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்