அதிர்வு – 23
காலில் விழ போன தன்னை பதறிப் போய் தடுத்து மடிக்கணினியைக் கொடுத்து சென்றவனை புரியாமல் பார்த்தவள்,
‘இவன் நிஜமாவே நல்லவனா.. இன்னைக்கு காலைல நான் லேட்டா ஆபீஸ் போகணும்னு வேணும்னே லேட்டா வந்தான்.. இப்போ இவனே காலுல விழுன்னு சொன்னான்.. அப்புறம் அவனே வேணாம்னு தடுத்துட்டு போயிட்டான்.. இவன எந்த லிஸ்ட்டுல சேர்க்குறதுன்னே தெரியலையே..’ என்றபடி யோசித்தவள் பிறகு முதலில் செய்ய எண்ணிய அவசர வேலையை முடிப்போம் என்றெண்ணி செய்து முடித்தவள் அவனறை வாசலில் நின்று கதவினை தட்ட அதுவோ திறந்து தான் இருந்தது. உள்ளே வந்தவள்,
‘இந்த உர்ராங்குட்டான் எங்க போனான்’ என்றபடி தூயவனைத் தேட அவனோ பால்கனியில் நின்று அலைபேசியில் மாதவனிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“என்னடா என்ன பண்ற” என்று கேட்டான் மாதவன்.
“சும்மா தான் டா.. நீ என்ன பண்ற”
“நான் என்ன செய்வேன்.. இப்போதான் மாது கிட்ட பேசிட்டு வந்தேன்..”
“உன் காட்டுல மழை தான் இனி.. நீ நடத்து” என்று நிஜமாகவே தன் தமயனுக்காக மனமகிழ்ந்து கூறினான்.
“இவ்ளோ நாள் பயந்து பயந்து லவ் பண்ணோம்.. ஆனா இப்போ பயமில்லாம லவ் பண்றோம்.. எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. எல்லாத்துக்கும் ஆதினி தான் டா காரணம்..” எனவும் தூயவனிடம் பலத்த அமைதி.
“டேய் தூயவா.. லைன்ல இருக்கியா”
“ஹ்ம்ம்.. இருக்கேன்”
“ஏன் டா அவளை பத்தி பேசுனாளே இப்படி ஆகிருற.. அவ உன் பொண்டாட்டி டா.. பிடிக்காத கல்யாணமாவே இருந்தாலும் அவ நம்ம வீட்டுல யாரையுமே மனசு நோகுற மாதிரி பேசல.. அதுலயே உனக்கு அவ குணம் தெரிய வேணாமா”
“டேய் அடங்குறியா.. நானும் தான் அவ மேல உள்ள கோவத்தை அவங்க அப்பா அம்மா மேல காட்டாம நல்லபடியா நடந்துக்குறேன்.. இதை ஒரு காரணம்னு சொல்ற.. முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோ.. அவ யார் சொன்னாலும் நம்ம வீட்டு ஆளுங்க மேல கோப படமாட்டா.. ஏன்னா அவ பிளான் பண்ணி தான் வந்துருக்கா.. திமிரு பிடிச்சவ”
“டேய் எனக்கென்னமோ அவளுக்கு திமிரு இருக்குற மாதிரி தெரியல.. அப்படி என்ன அவ திமிர்த்தனம் பண்ணுனா.. சொல்லேன் கேப்போம்”
“சொல்றேன் கேளு.. இன்னைக்கு பெரிய இவ கணக்கா.. வீட்டுக்கு வாடகையை வாங்கிக்கன்னு 15 ஆயிரம் என் அக்கௌன்ட்ல போட்டுட்டா.. யாருக்கு வேணும் அவ காசு” என்று கூற மாதவனோ,
“என்ன டா சொல்ற நிஜமாவா..”
“ஆமா மாதவா.. நானே நம்ம அப்பா அம்மாக்காகவும் அவ அப்பா அம்மாக்காகவும் தான் ஒரே வீட்டுல இருக்க வச்சுருக்கேன்.. இதுல இவ எனக்கு வாடகை கொடுக்குறாளாம் வாடகை.. இப்போ சொல்லு அவளுக்கு திமிரு தான..”
“அட ச்சீ.. நான் அதுக்காக கேட்கல.. ஏன் தூயவா.. உன்கூட ஓசில இருக்குறதையே விரும்பாம வாடகை கொடுத்தவ.. நீ பணக்காரன்னு பிளான் போட்டு உன்னை ஏமாத்திருப்பான்னு நெனைக்குரியா” எனவும் தூயவன் சிந்தித்தான். மேலும் தொடர்ந்த மாதவனோ,
“டேய்.. நீ ரொம்ப புத்திசாலி.. நீ செய்ற ஒவ்வொரு விஷயத்துலயும் காரணம் இருக்கும்.. நான் உனக்கு அட்வைஸ் பண்ணனும்னு அவசியமே இல்லை.. ஆதினி மேல அன்னைக்கு நீ உருவாக்கின அந்த ஒரு எண்ணம் தான் உன்னை தெளிவா சிந்திக்க விடாம தடுக்குதுன்னு எனக்கு தோணுது.. இப்படி மறைமுகமா வன்மத்தை அவ மேல வளர்க்குறதுக்கு பதில் அவகிட்ட நேரடியாவே கேட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.. சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்” என இவ்வளவு நேரம் மாதவன் பேசியதெல்லாம் தூயவனின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. சிந்தனையில் இருந்து மீண்டவனின் உதட்டில் இளக்கார புன்னகை தோன்ற,
“டேய் மாதவா.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. நாம ஒருத்தங்களுக்கு ஒரு ஸ்கெட்ச் போட்டோம்னு வை.. அது நிறைவேறனும்னா முதல்ல அவங்கள நாம நம்ப வைக்கணும்.. அவங்க நம்புறதுக்கு என்ன செய்யணும்னா எந்த விஷயத்தை நெனச்சு ஸ்கேட்ச் போடுறோமோ.. அதை அவங்களுக்கு நாம அள்ளிக் கொடுக்கணும்..
ஃபார் எக்சாம்பிள்.. ஆன்லைன்ல பிசினஸ் பண்ணலாம் வாங்கன்னு கூப்பிடுறவங்க எல்லாம் என்ன செய்றாங்க.. அவங்க மொட்டிவ் பணத்தை அடிக்குறது தான்.. ஆனா நாம அது உண்மையான பிசினஸ் தான்னு நம்புறதுக்கு ஒரு சின்ன தொகையை நமக்கு அவங்க கொடுப்பாங்க லாபம்னு சொல்லி.. அப்போ தான் நமக்கு நம்பிக்கை வந்து இன்னும் பெருசா இன்வெஸ்ட் பண்ணுவோம்.. ஆனா கடைசில என்ன ஆகும்.. மொத்தமா நாமம் தான்.. இதே டெக்னிக் தான் அவளும் யூஸ் பண்றா.. அது தெரியாம வந்துட்டான் வக்காலத்து வாங்க..” என தன் பெரிய உரையைக் கூறி முடிக்க அவனது அதீத சிந்தனையை எண்ணி மாதவனுக்கு ஆயாசமாக இருந்தது.
“டேய் தூயவா.. நீ ரொம்ப ஓவர்த்திங்க் பண்ற”
“சரி நான் ஓவர்த்திங்க் பண்றவனாவே இருந்துட்டு போறேன்.. உண்மை தெரியும் போது எல்லாரும் புரிஞ்சுப்பீங்க.. நான் வைக்குறேன்” என்றவன் அழைப்பினைத் துண்டிக்க அப்பொழுது தான் அரவம் கேட்டு அறையினுள் அவன் பார்க்க அவளோ,
“உள்ள வரலாமா” என்றபடி கையில் மடிக்கணினியை ஏந்தியபடி நின்றாள்.
‘ஒருவேளை எதுவும் ஒட்டு கேட்டுருப்பாளோ’ என்று நினைத்தவன்,
“அதான் வந்துட்டியே.. அப்பறம் என்ன கேள்வி.. ஆமா எவ்வளவு நேரமா வெயிட் பண்ற” என்றான்.
‘ரொம்ப தான் எகத்தாளம்..’ என்று மனதினுள்ளே நினைத்தவள்,
“இப்போ தான் வந்தேன்.. உன் லேப்டாப்.. தேங்க்ஸ்” என்றபடி அவனிடம் கொடுத்தவள்,
“உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்” என்றாள். அவனோ என்னவென்று பார்த்தான்.
“இல்ல.. நீயே தான் காலுல விழுன்னு சொன்ன.. அப்புறம் நீயே பதறி வேணாம்னு சொன்ன.. இதுல எது நிஜம்” என்று கேட்க அவனோ,
“ரொம்ப யோசிக்காத.. நீ எப்படியும் என் காலுல விழமாட்டன்னு நெனச்சு சும்மா உன்ன சீண்டி பார்க்க தான் சொன்னேன்.. எனக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னு இப்படி ஒருத்தங்களை தரைக்குறைவா நடத்துறது பிடிக்காது.. அதான்..” என்க அவன் கூற்றில் சிந்தித்தவள்,
“அப்போ இன்னைக்கு காலைல..” என்று கேட்க வர அதற்குள்,
“எனக்கு தூக்கம் வருது.. நீ உன் ரூமுக்கு போறியா” என்றிட உதடு சுளித்தவள்,
‘உர்ராங்குட்டான்’ என்று மனதினுள் திட்டியபடி அவளறைக்கு சென்றுவிட்டாள். மெத்தையில் படுத்தவளுக்கு உறக்கமே இல்லை. தூயவனை பற்றிய நினைவு தான்.
“ஒரு பொறுமை கிடையாது, சக மனுஷி மேல நம்பிக்கை கிடையாது, எதையும் வெளிப்படையா பேசுறது கிடையாது.. ஆனா குணத்துல நல்லவனா இருக்கான்.. யாரையும் காயப்படுத்த மாட்டேங்குறான்.. இவனை எப்படி தான் புரிஞ்சுங்குறது.. முதல்ல யாரையும் மதிக்க தெரியாதவன்னு நெனச்சு கோபமாச்சு இருந்துச்சு.. ஆனா இந்த பாட்டி சொன்ன விஷயத்த எல்லாம் கேட்டு இவன் மேல ஒரு சாப்ட் கார்னர் வேற வந்துட்டு.. போற போக்க பார்த்தா அவனை எனக்கு பிடிச்சுறும் போலயே.. அய்யோ மண்டை காயுது… இப்போ இவன் கிட்ட நான் சண்ட போடனுமா.. இல்ல அன்பா நடந்துக்கணுமா.. அப்படி நான் அன்பா நடந்துக்கிட்டாலும் அவன் என்கிட்ட அன்பா நடக்கணுமே.. எதனால என்கிட்ட மட்டும் இப்படி மூஞ்சியை காட்டுறன்னு கேட்டும் பார்த்தாச்சு.. பதில் வரல.. என் மேல ஒரு நல்ல எண்ணம் வரணும் இவனுக்கு.. அப்போ தான் மனசு திறந்து பேசுவான் போல..” என்று நினைத்து கொண்டிருக்க தூயவன் அறையில் இருந்து “அம்மாஆஆஆஆ……” என்ற சத்தம் வர பதறி அடித்து அவனின் அறைக்கு ஓடினாள்.
நல்லவேளை அவனின் அறைக் கதவு பூட்டப்படமால் இருக்க கதவினை திறந்து உள்ளே சென்றவள் கழிப்பறை வாசலில் விழுந்து கிடப்பவனைப் பார்த்து பதறிவிட்டாள். ஆம் வழுக்கி விழுந்துவிட்டான் தூயவன்.
“ஹே என்னாச்சு…” என்றபடி அருகே சென்றவள் அவன் எழுவதற்கு முயற்சி செய்ய பலனோ பூஜ்யம் தான். ஆம் அடி சற்று பலம் போல. அவனால் கையைக் கூட ஊன்ற முடியவில்லை. வலியில் முனங்கிக் கொண்டிருந்தான் தூயவன்.
“லூசா நீ.. பார்த்து வந்துருக்க கூடாதா..” என்றவளின் கண்கள் கலங்கியிருக்க செய்வதறியாமல் தவித்தவள் உடனே ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்தாள். எண்ணி இருபது நிமிடத்தில் தூயவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவர் பரிசோதிக்கும் வரை வெளியே பதற்றமாக நின்றுகொண்டிருந்தாள் ஆதினி. பிறகு மருத்துவர் வந்து,
“நீங்க அவருக்கு என்ன வேணும்..” என்று கேட்க சற்றும் யோசிக்காமல்,
“அவர் என் ஹஸ்பண்ட்.. என்னாச்சு அவருக்கு..” என்றாள் அவசரமாக.
“ஓ அவர் வைஃப்பா நீங்க.. நல்லது.. கொஞ்சம் அடி பலம் தான்.. வலது கைல சின்ன ஃப்ராக்ச்சர்.. ரொம்ப பெருசு இல்ல தான்.. இருந்தாலும் கவனமா இருக்கனும்.. கட்டு போட்டு விட்ருக்கேன்.. 5 நாளுக்கு அந்த கைய அசைக்கவே கூடாது.. அப்படி அசைச்சா அந்த இடம் ஜாயின் ஆகாமையே கூட போகலாம்.. மத்த இடத்துல சின்ன சின்ன சுளுக்கு தான் அது ரெண்டு நாள்ல சரி ஆகிடும்.. ஆனா கை சரியாக மினிமம் ஒன் வீக்காச்சு ஆகும்.. ஜென்டில் கேர் வேணும் அவருக்கு.. கவனிச்சுக்கோங்க” என்றபடி சென்றுவிட,
“நல்லவேளை பெருசா எதுவும் இல்ல..” என்று பெருமூச்சு விட்டவள் அவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றாள். வலி நிவாரணியின் உதவியால் சற்று கண் அசந்திருந்தவன் அவளின் அரவம் கேட்டு விழித்துவிட அவளோ,
“ஹே ரிலாக்ஸ்.. நீ தூங்கு” என்றிட அவனோ,
“டாக்டர் என்ன சொன்னாங்க..” என்றான். அவர் கூறியவற்றை அவனிடம் கூற அவனோ,
“என்னது ஒரு வாரமா..” என்று அதிர்ந்து எழும்ப கையில் வலி எடுத்ததில் அவன் முகம் சுருங்கியது.
“கையை அசைக்காதன்னு இப்போ தான சென்னேன்.. சரியாகணுமா வேணாமா உனக்கு” என்று அவள் கடிந்து கொள்ள அவனுக்கோ இன்னும் ஒரு வாரம் எப்படி செல்ல போகிறது என்ற கவலையே அதிகமாக இருந்தது.
“சரி வீட்டுல யாருக்கும் சொல்லாத.. பதறுவாங்க” என்று கூற பாவமாக முகத்தை வைத்தவள்,
“ஏற்கனவே சொல்லிட்டேன்” என்றாள்.
“ஐயோ.. போச்சு.. நாளைக்கு எல்லாரும் வந்து நிக்க போறாங்க” என்று புலம்பவும் கணபதியிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
“வீட்டுல இருந்து தான” என்று தூயவன் கணித்து கேட்க அவளும் ஆமென தலையசைக்க பெருமூச்சுவிட்டவன்,
“என்கிட்ட கொடு நான் பேசுறேன்” என்றவன் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்.
“ஹெலோ அப்பா”
“டேய் தூயவா.. கீழ விழுந்துட்டன்னு ஆதினி சொன்னா.. இப்போ உனக்கு எப்படி இருக்கு..” என்று கணபதி தொடங்கி இந்திரா, மீனாட்சியம்மாள். மாதவன் என்று அனைவரும் கேட்ட கேள்வியையே கேட்க,
“மொபைலை ஸ்பீக்கர்ல போடுங்க” என்றிட அவ்வாறே செய்யப்பட்டது.
“இங்க பாருங்க எல்லாரும்.. எனக்கு ஒண்ணுமில்ல.. நான் நல்லா இருக்கேன்.. கையில சின்னதா காயம்.. அதுவும் ஒருவாரத்துல சரி ஆயிடும்னு சொல்லிருக்காங்க.. யாரும் என்னை நெனச்சு பதறவும் வேணாம் பயப்படவும் வேணாம்..” என்றிட அதில் அவர்களின் பதற்றம் சற்று மட்டுப்பட்டது. இந்திராவோ,
“நாங்க எல்லாரும் நாளைக்கு வரோம் அங்க.. உனக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும்ல” என்று கேட்க,
“ம்மா.. அதெல்லாம் எதுவும் வேணாம்னு தான் இப்போ பேசிட்டு இருக்கேன். எல்லாரும் இங்க வந்துட்டா அங்க வேலை எப்படி நடக்கும்..” என்றிட அதற்குள் பாட்டியோ எதையோ சிந்தித்து விட்டு,
“ஆமா.. எல்லாரும் போக வேணாம்.. நாளைக்கு நான் மட்டும் மாதவன் கூட போறேன் சென்னைக்கு” என்க தூயவனோ ஏதோ கூறவர அதற்குள் தடுத்த பாட்டியோ,
“இதான் என் முடிவு.. நாளைக்கு சந்திப்போம்.. பாய்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டார். தூயவனுக்கோ எங்கு சென்று முட்டிக்கொள்ளலாம் என்று இருந்தது. அங்கு கணபதியோ,
“ஏன் மா நாங்க வர வேணாம்னு சொல்றீங்க”
“அடேய் மகனே.. அவங்க ரெண்டு பெரும் ஒரு இக்கட்டுல கல்யாணம் செஞ்சவங்க.. அவங்களுக்குள்ள மனரீதியா இன்னும் பரஸ்பர புரிதலோ அன்போ வந்துருக்காது.. இப்போ அவனுக்கு அடிப்பட்டுருக்கு.. இதை சாக்கா வச்சு நான் ஆதினிய எல்லாம் செய்ய வைப்பேன்.. அதனால அவனுக்கும் அவ மேல ஒரு அன்பு வர வாய்ப்பு இருக்கு..” என்று தன் யோசனையை கூற கணபதி மற்றும் இந்திராவுக்கும் அதுவே சரியெனப்பட்டது.
“சரியா சொன்னீங்க அத்தை” என்றார் இந்திரா. மாதவனும்,
“பாட்டி.. உனக்குள்ள இப்படி ஒரு ஐடியா மணியா.. இப்போ தெரியுது
என் தாத்தா ஏன் உன்ன சுத்தி சுத்தி வந்தாருன்னு..” என்றிட அவரோ,
“ச்சீ போடா” என்றபடி சென்றுவிட்டார்.
தொடரும் அதிர்வுகள்..