அதிர்வு – 2
தன் மகள் சம்மதம் கூறிய சந்தோஷத்தில் அடுத்த இரண்டே நாட்களில் கேசவனோ அடுத்த கட்ட வேலையாக கணபதியைத் தொடர்பு கொண்டார்.
“ஹலோ கணபதி.. நான் கேசவன் பேசுறேன்” என்க அவரின் அழைப்புக்காக காத்திருந்த கணபதியோ,
“அடடே.. உங்க காலுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. சொல்லுங்க கேசவன்..” என்று உற்சாகமாக கேட்க,
“கவலைப்படாதீங்க.. எல்லாம் நல்ல பதில் தான்” என்று இவர் சந்தோஷமாக கூற,
“ரொம்ப ரொம்ப சந்தோஷம்… ரொம்ப நன்றிங்க” என்றார்.
“சரி.. பையன் ஜாதகத்தை அனுப்பி வைங்க.. நானும் பொண்ணோட ஜாதகத்தை அனுப்பி வைக்குறேன்.. என்ன தான் நாம சம்மதிச்சாலும் விதியும் ஒத்துழைக்கணும் தானே..” என்று கேசவன் கூற,
“கண்டிப்பா.. நான் உடனே அனுப்பி வைக்குறேன்..”
“நல்லதுங்க.. அப்போ நான் வச்சுடுறேன்” என்றவர் ஆதினியின் ஜாதகத்தைப் புலனத்தில் அனுப்பி வைத்தார் கேசவன். கணபதியோ அருகிலிருந்த மனைவியிடம்,
“இந்திரா.. நம்ம பையன் ஜாதகத்தை எடுத்துட்டு வா… பொருத்தம் பார்க்க கேட்குறாங்க..” என்று கூற இந்திராவோ,
“அவங்க வீட்டுல ஓகே சொல்லிட்டாங்களா..” என்று வெகு உற்சாகமாக கேட்டார்.
“ஆமா இந்திரா.. கேசவன் தான் பேசுனாரு.. பையனோட ஜாதகத்தைக் கேட்டாரு..”
“அப்படியா உடனே போய் நான் எடுத்துட்டு வரேங்க” என்றவர் துள்ளலோடு சென்றார். அப்பொழுது இந்திராவின் அலைபேசி அலற தன் இளைய மகன் அழைத்திருப்பதைக் கண்டு அழைப்பை ஏற்றார்.
“டேய் சின்னவனே.. எப்படி இருக்க.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா” என்று கேட்க அவர் குரலில் இருந்த உற்சாகத்தைக் கண்டுக் கொண்டவன்,
“என்ன விஷயம்மா” என்றான்.
“நம்ம மாதவனுக்கு பொண்ணு செட் ஆக போகுது..”
“வாட்ட்ட்ட்” என்று அதிர்ந்தான் இளையவன்.
“அட ஆமா டா.. பொண்ணு வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க”
“அதுசரி.. ஆனா அவன் கிட்ட விருப்பமான்னு கேட்டீங்களா”
“டேய் இந்த பொண்ணைப் பார்த்து ஓகே சொன்னதே அவன் தான் டா”
“என்னம்மா சொல்றீங்க நிஜமாவா” என்றவனிடம் சிறு யோசனைத் தென்பட்டது.
“அட ஆமா டா.. அன்னைக்கு..” என்று இவர் கூற ஆரம்பிக்க அதற்குள் கீழே கணபதியோ,
“ஜாதகத்தை எடுத்திட்டியா இந்திரா.. எவ்வளவு நேரம்.. அவங்க பொண்ணு ஜாதகத்தை அனுப்பிட்டாங்க” என்று குரல் கொடுக்க இந்திராவோ,
“டேய் கண்ணா.. ஒரு நிமிஷம் இரு.. அப்பாகிட்ட ஜாதகத்தைக் கொடுத்துட்டு வரேன்..” என்றவர் கணபதியிடம் சென்று ஜாதகம் அடங்கிய பையைக் கொடுத்தார்.
“என்னங்க இந்த பைக்குள்ள தான் இருக்கு.. நீங்களே எடுத்துக்கோங்க.. சின்னவன் லைன்ல இருக்கான் நான் பேசிட்டு வரேன்” என்றபடி சென்றுவிட்டார்.
“சின்ன மவன் கால் பண்ணிட்டா உலகத்தையே மறந்துருவா போல” என்றபடி புலம்பியவர் பின் மகனின் ஜாதகத்தைக் கேசவனுக்கு அனுப்பி வைத்தார். இருவீட்டு பெரியோர்களும் அவரவர் சார்பில் பெண்ணுக்கும் பையனுக்கும் அன்றே ஜாதகம் பார்க்க ஜோசியரோ,
“அடடே அருமையான பொருத்தமா இருக்கே.. ரெண்டு பேரோட குணாதிசயங்கள் எதிரும் புதிருமா இருந்தாலும் இவாளுக்கு இவா தான் ஜோடின்னு சொர்க்கத்துல நிச்சயிக்கப்பட்ட ஜாதகமா இருக்கு.. தயங்காம கல்யாணம் செய்து வைங்கோ” என்று கேசவன் பார்த்த ஜோதிடர் கூற கேசவனுக்கும் அபிராமிக்கும் மனது நிறைந்து காணப்பட்டது.
வீட்டில் ஆதினியோ குட்டி போட்ட பூனைப் போன்று குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி சிந்தனையில் இருந்தாள். ஏனோ அவளது மனம் இந்த வரன் விஷயத்தில் சிறு தடுமாற்றத்தை உணர்ந்தது. நிராகரிக்க்க காரணங்கள் இல்லாத காரணத்தினாலும், தன் தாய் தந்தை ஏற்கனவே தன் திருமண வாழ்க்கைக் குறித்து கவலையில் இருப்பதாலும் இதற்கு மேல் தாமதித்தால் இதனை யோசித்தே அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தாலும் வேறு வழியின்றி அரை மனதாய் ஒப்புக்கொண்டாள்.
கணபதியும் இந்திராவும் கூட நல்ல குணமாக தான் தெரிந்தார்கள். மாதவனின் குணத்திலும் குறை இருப்பது போன்று தெரியவில்லை தான். இருந்தும் ஏதோ ஒன்று ஆதினியின் மனதை உறுத்தியது.
‘ஒருவேளை சுத்தி நடக்குற விஷயங்கள் எல்லாம் கேள்வி பட்டு என் மனசு தேவை இல்லாம யோசிக்குது போல.. எப்படி இருந்தாலும் எனக்குன்னு யார் இருக்காங்களோ அவங்க தான் என் வாழ்க்கைத் துணையா வருவாங்க.. அது இந்த மாதவன் தான்னு இருந்தா யாரால மாத்த முடியும்.. நடக்குறது நடக்கட்டும்..’ என்று தனக்குத்தானே ஆறுதல் கூறி மனதைத் திடப்படுத்த முயற்சித்தாள். இருந்தும் கடைசி நம்பிக்கையாக இந்த ஜாதகத்தை நம்பியிருந்தாள்.
‘ஒருவேளை ஜாதகம் பொருந்தாம போனா.. இதோட நிப்பாட்டிருவாங்க தான இந்த வரனை’ என்று நினைத்தவள் தன் பெற்றோரின் வருகைக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவர்களும் வர அவர்களது பிரகாசமான முகமே ஜாதகம் பொருந்தியிருப்பதைப் பறைசாற்ற இவளின் முகம் சுருங்கி போனது. கேசவனோ,
“ஆது மா.. ஜாதகம் பக்காவா பொருந்தியிருக்கு டா.. உனக்கொண்ணு தெரியுமா உன் அம்மாக்கும் எனக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி ஜாதகம் பார்க்கும் போது என்ன வார்த்தை சொன்னாங்களோ அது தான் உனக்கும் அந்த தம்பிக்கும் சொல்லிருக்காங்க.. நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்” என்று புன்னகைமுகமாக கூற ஆதினியும் புன்னகைத்தாள் அவர்களுக்காக.
“நான் உடனே சம்மந்திகிட்ட சொல்றேன்” என்று பேச்சுவாக்கில் கேசவன் கூறிவிட அபிராமியோ,
“என்னங்க.. அதுக்குள்ள சம்மந்தின்னு சொல்லிட்டீங்க..” என்று சிரித்தபடி கேட்க கேசவனோ,
“அட ஆமா அபிராமி.. ஒரு ஃபுளோல வந்துருச்சு.. சரி நடக்குற எல்லாமே நல்ல விஷயமா தான் நடக்குது” என்று மகிழ்ந்தவர் கணபதிக்கு அழைத்து ஜாதகம் பொருந்தியிருப்பதைக் கூற கணபதியும்,
“ரொம்ப சந்தோஷம்.. நாங்க இனிமே தான் பார்க்கணும்னு நெனச்சோம்.. ஆனா உங்க வார்த்தையே எனக்கு திருப்தியா ஆகிடுச்சு.. அப்போ நேரா பொண்ணு பாக்க வரட்டுமா” என்று கேட்க,
“இல்ல எதுக்கும் உங்க சைட் ஒரு தடவை பார்த்துருங்களேன்.. நாளைக்கு பிரச்சனை எதுவும் வந்துர கூடாதேன்னு தான் சொன்னேன்” என்று கேசவன் தயங்கி தயங்கி கூற அதில் சிரித்த கணபதியோ,
“எங்க வீட்டுக்கு நீங்க உங்க பொண்ணைக் கொடுக்க போறீங்க.. அப்படி இருக்க எங்களைவிட கவனமா நீங்க தான் இந்த விஷயம் எல்லாம் பார்த்திருப்பீங்க.. அப்படி இருக்கும் போது இதுல நம்பாம இருக்க என்ன இருக்குன்னு சொல்லுங்க.. இந்த சின்ன நம்பிக்கைக் கூட நமக்குள்ள இல்லைன்னா நாம சம்மந்திங்களா எப்படி ஆகுறது” என்று பெருந்தன்மையாக கூற கேசவனின் மனம் நிறைந்து போனது.
“ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. சம்மந்தியம்மா கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க எதுக்கும்”
“நான் சொன்ன அதே வார்த்தையை தான் இந்திராவும் சொல்லுவா.. இருங்க நான் இப்போவே அவகிட்ட கேட்குறேன்” என்றவர் தன் மனையாளை அழைத்து கேசவன் கூறியவற்றைக் கூற கணபதியின் நம்பிக்கையை பொய்யாக்காமல்,
“அட ரொம்ப நல்லதா போச்சு.. அப்புறம் எதுக்கு நாம பார்த்துகிட்டு.. அதான் அவங்க ஜாதகம் பார்த்துட்டாங்க தான.. அதுவே போதும்.. அடுத்த வேலைய பாப்போம் நாம” என்று கூற கணபதியோ,
“சரியா சொன்ன இந்திரா” என்றவர் கேசவனிடம்,
“இப்போ உங்களுக்கு திருப்தியா சம்மந்தி” என்று சிரித்தபடி கேட்க,
“ரொம்ப திருப்திங்க..”
“நல்லதுங்க.. அப்போ நாங்க எப்போ பொண்ணு பார்க்க வரட்டும்”
“ஆதினிக்கு நாளையோட லீவ் முடியுது.. நாளைக்கு சாயங்காலம் சென்னைக்கு பஸ்ல கிளம்புறா.. ” என்று கேசவன் யோசனையாக கூற,
“அப்படியா.. சரி நான் இந்திரா கிட்ட கேட்டுட்டு உங்களுக்கு கொஞ்ச நேரத்துல சொல்றேன்” என்ற கணபதி அழைப்பைத் துண்டித்து தன் மனையாளிடம் விஷயத்தைக் கூற இந்திராவோ,
“அப்போ நாம இன்னைக்கே பொண்ணு பார்க்க போவோம்..” என்றிட,
“இன்னைக்கா.. அவங்க வீட்டுல இவ்ளோ அவசரப்படுறாங்களேன்னு நெனைக்க மாட்டாங்களா” என்று கணபதி யோசனையாக கேட்டார்.
“அதெல்லாம் நெனைக்க மாட்டாங்கங்க.. மாதவன் சம்மதம் சொன்னதே பெரிய விஷயம்.. அவன் மனசு மாறுறதுக்குள்ள நாம எல்லாத்தையும் முடிக்கிறது தான் எனக்கு சரின்னு படுது.. அதனால் தான் நான் சொன்னேன்” என்று தன் எண்ணத்தைக் கூற அதுவும் கணபதிக்கு சரியென்றே பட்டது.
“சரி ஓகே இந்திரா.. நான் அவங்க வீட்டுல சொல்றேன்.. ” என்று கூறிவிட்டு கேசவனுக்கு தகவலை சொல்ல முதலில் கேசவன் யோசித்தாலும் பிறகு அவர்களின் எண்ணம் புரிந்தவர் சரி என்றார். பேசி முடித்து ஆதினியிடமும் அபிராமியிடமும் விஷயத்தைக் கூற ஆதினியோ,
“என்னப்பா இது.. இன்னைக்கேவா.. எதுக்கு இவ்ளோ அவசரம்” என்று கவலையாய் கேட்க,
“இன்னைகேவா நிச்சயம் செய்ய போறோம்.. பொண்ணு தான டா பார்க்க வராங்க.. அதான் ஏற்கனவே கோவில்ல பார்த்தாச்சு.. இது வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டும் தான்.. இப்போ பொண்ணு பார்த்துட்டு போய்ட்டா நிச்சயம் மெதுவா கூட வச்சுக்கலாம் தான” என்று கூற ஆதினிக்கு இன்னும் யோசனையாவே இருந்தது.
“என்ன டி இவ்ளோ யோசிக்குற.. எங்க அப்பா அம்மா எல்லாம் இப்படி எங்க கிட்ட சம்மதம் கேட்டுட்டு எல்லாம் செய்யல.. ஆனா நாங்க பொண்ணு பார்க்குறதுக்கு கூட உன்கிட்ட கேட்டுட்டு இருக்கோம்..” என்று ஆதங்கப்பட்டவர் கேசவனிடம்,
“ஏங்க.. இதெல்லாம் எதுக்கு அவகிட்ட கேட்டுக்கிட்டு.. அவங்க வந்ததும் புடவையைக் கட்டிட்டு வந்து நில்லுன்னு சொன்னா நிக்க போறா..” என்க கேசவனோ,
“அபிராமி.. என்ன பேச்சு இது.. நம்ம பெத்தவங்க நம்மகிட்ட கேட்கலங்குறதுக்காக நாம கேட்காம பண்ணுறது சரியா இருக்காது.. இது அவ வாழ்க்கை அவ சம்மதம் இருந்தா தான் அவ முழு மனசா வந்து நிப்பா.. இல்லனா அவ மனசு கஷ்டப்படாதா..
இங்க முக்காவாசி பெத்தவங்க பண்ற தப்பே இது தான்.. ஒண்ணுமே இல்லாத டிரஸ் விஷயத்துக்கு பிள்ளைங்க இஷ்டப்படி செஞ்சுட்டு முக்கியமான கல்யாண விஷயத்துல அவங்க இஷ்டத்தைக் கேட்குறதே கிடையாது.. இதனால எதிர்காலத்துல பிரச்சனைகளை சந்திக்க போறது பிள்ளைங்க தான்.. பெத்தவங்க கடமை முடிஞ்சதுன்னு நிம்மதி ஆயிடுவாங்க.. ரொம்ப தப்பு அபிராமி..” என்று தன் மனையாளைக் கண்டிக்க தன் தவற்றை உணர்ந்த அபிராமியோ,
“நீங்க சொல்றது தாங்க சரி.. நானும் மத்தவங்கள மாதிரி யோசிச்சு அப்படி பேசிட்டேன்.. மன்னிச்சுருங்க” என்றவர் ஆதினியிடம்,
“உன் முடிவை சொல்லு டி.. எதுவா இருந்தாலும் அவங்க கிட்ட பேசி புரிய வச்சுக்கலாம்” என்று கேட்க தன் தந்தையின் புரிதலில் அவளுக்கு கண்ணீர் பெருகியது. இப்படி தனக்காக யோசிக்கும் தந்தை ஒருபோதும் தனக்கு பொருத்தமில்லாத துணையைத் தேர்வு செய்யமாட்டார் என்று மனதில் யோசிக்க அதுவரை மனதை உறுதிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச யோசனையும் பறந்து சென்றது. தந்தையின் கையைப் பற்றி அவர் தோளில் சாய்ந்து கொண்டவள்,
“பொண்ணு பார்க்க வர சொல்லுங்க பா” என்று கூற அபிராமியோ,
“எங்களுக்காக எதுவும் சொல்லாத டி.. நிஜமா உனக்கு ஓகே தான.. நான் சொன்ன எதுவும் மனசுல வச்சிக்காத” என்று பயந்து கேட்க அவரின் மூக்கைப் பிடித்து ஆட்டியவளோ,
“எப்படி அபிராமி.. இப்படி அந்தர்பல்டி அடிக்குற.. எனக்கு ஓகே தான்” என்று கூறிவிட்டு உள்ளே செல்ல,
“ஹே வாயாடி.. போடி” என்று அபிராமி வசைப்பாட கேசவனோ சிரித்துக்கொண்டார். பிறகு கணபதியிடம் விஷயத்தைக் கூற அங்கும் மனநிறைவே. கணபதி மாதவனிடம் விஷயத்தைக் கூற அவனோ,
“என்னப்பா சொல்றீங்க.. இன்னைக்கேவா.. எதுக்கு இவ்ளோ அவசரம்..” என்று யோசனையோடு கேட்க,
“பொண்ணு வீட்டுல ஏதும் அவசரப்படுத்தல டா… நாங்க தான் இன்னைக்கு வறோம்னு சொன்னோம்.. நல்ல நாளா இருக்கு.. அதுவும் இல்லாம ஆதினி நாளைக்கே சென்னை கிளம்புறாளாம்.. அதான்” என்க,
“அப்போ அடுத்த தடவை அவங்க இங்க வரும்போது போய் பாப்போமே.. அவங்க வீட்டுலயும் யோசிப்பாங்க தான.. ஏன் இவ்ளோ அவசரம்னு”
“டேய் நல்ல காரியத்தைத் தள்ளி போடக் கூடாது.. நாம போய் தான் ஆகணும் நான் அவங்க கிட்ட ஏற்கனவே வறோம்னு சொல்லிட்டேன் ” எனவும் மாதவனோ சிந்தித்தான். அவனின் மனசாட்சியோ,
‘நீ தான அன்னைக்கு பொண்ண பிடிச்சிருக்குன்னு இதை ஆரம்பிச்ச..’ என்று வசைபாட,
“சரி ஓகே பா போலாம்..” என்றான் ஏதோ முடிவு செய்தவனாய். பிறகு மாலை ஐந்து மணியளவில் ஆதினியைப் பெண் பார்க்க செல்வதாய் முடிவு செய்யப்பட்டது.
அங்கு அறைக்குள் சென்ற ஆதினிக்கு அவளுடன் பணிபுரியும் தோழி காதம்பரி அழைப்பு விடுத்தாள்.
“என்ன டி.. என்னாச்சு.. ஜாதகம்” என்று கேட்க,
“எதே.. ஜாதகம் என்னாச்சாவா.. அட போ டி.. இன்னைக்கு ஈவ்னிங் என்ன பொண்ணே பார்க்க வராங்க..” என்று சோர்வாய்க் கூற,
“என்ன ஆது சொல்ற.. அப்போ ஜாதகம் மேட்ச் ஆயிடுச்சா”
“யாருடா இவ… அடியே ஜாதகம் மேட்ச் ஆனா தான பொண்ணு பார்க்க வருவாங்க.. அதுமட்டுமில்லாம எங்க ரெண்டு பேர் ஜாதகமும் நங்கூரம் போட்ட மாதிரி நச்சுன்னு பொருந்திடுச்சாமாம்”
“வாவ்.. போடு.. அப்போ கூடிய சீக்கிரம் டும் டும் டும் தான்னு சொல்லு” என்று காதம்பரி உற்சாகமாக,
“அப்படி தான் நினைக்குறேன் காது” என்றவள் குரலில் சோர்வு.
“என்ன டி ஏன் டல்லா பேசுற.. உனக்கு ஓகே தான.. இல்லனா சொல்லு நான் வேணா அப்பா அம்மாகிட்ட பேசுறேன்” என்க,
“ச்ச அதெல்லாம் வேணாம் டி எனக்கு ஓகே தான்.. முதல்ல ஏதோ ஒன்னு மனசை உருத்துச்சு.. ஆனா அப்பா அம்மாவோட சந்தோஷத்தைப் பார்த்த அப்புறம் அதெல்லாம் காணாம போய்டுச்சு”
“ஏன் ஆது.. முதல்ல என்ன உருத்துச்சு..” என்று கேட்கவும் தானாக அவனது பிம்பம் மனக்கண்ணில் ஓட செவிகளிலோ,
‘உன்ன ஒருத்தன் கல்யாணம் பண்ண போறான்னு தெரிஞ்சாலே அவன்கிட்ட உன்ன பத்தி சொல்லி ஓட வச்சுருவேன்..’ என்று கூறிய வார்த்தைகள் செவியில் ஒலித்தது.
“ஆது லைன்ல இருக்கியா” என்று காதம்பரி அழைக்க பிறகு நிகழுக்கு வந்தவள்,
“இருக்கேன் டி..” என்றாள். அவள் மனதை படித்த காதம்பரி,
“ஏன் டி.. அவனை நெனச்சு ஏதும் பயப்படுரியா” என்க,
“ஹே அவனை வேற ஏன் டி நியாபகம் படுத்துற.. கண்ண மூடுனாலே அவன் வேற அப்போ அப்போ வந்துட்டு போறான்” என்று சலிப்பாக கூற,
“அவனை நெனச்சு ஏன் டி குழப்பிக்குற.. அதெல்லாம் எதுவும் அப்படி ஆகாது”
“ச்சி பயமெல்லாம் கிடையாது அவனை நெனச்சு.. அவனால எதுவுமே செய்ய முடியாது.. சரி விடு இப்போ எதுக்கு அவனைப் பத்தி பேசிகிட்டு.. என் மனசுல இப்போ எந்த குழப்பமும் இல்ல.. நான் மனப்பூர்வமா தான் சம்மதிச்சுருக்கேன்.. இப்போ போய் ஒரு குட்டி தூக்கத்தைப் போடுறேன்.. அப்போ தான் அவங்க வரும் போது கொஞ்சம் ஃப்ரஷ்ஷா இருப்பேன்” என்று கூற அவள் கூற்றில் நிம்மதியடைந்த காதம்பரி,
“தட்ஸ் மை ஆது.. சரி டி பாய்”
“பாய் காது” என்றவள் நிம்மதியாக உறங்க சென்றாள்.
தொடரும் அதிர்வுகள்..
எனக்கு ஒரு சந்தேகம்… அப்படி ஓட வைக்கப்போறேன் சொன்னது இந்த மாதவனோட தம்பியா 🫣🫣🫣
யாருடா இவன் நம்ம ஆதுவ அசைக்கப்பாக்குறான்…
நல்ல இருக்கு ரைட்டரே 😁😁😁
நைஸ் கேஸ்ஸிங் டா😍😍 நன்றி டா மா😁😁