Loading

அத்தியாயம் 20

 

 

 

 

ஜெனனி அவனிடம் அடைக்கலம் புகுந்த போது , அவளின் நிலையை பார்த்தவனுக்கு அவ்விடமே உறைந்திட செய்யாதா என்று தோன்றியது..

 

ஊர் காரர்கள் இவர்களை தான் வேடிக்கை பார்த்தனர்..

 

அவளின் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது..

 

அவள் உதடுகளோ “ சன்ஜு என்னை விட்டு போயிடாதீங்க ? போக மாட்டீங்க தானே ” ஜெபம் போல் கூறிக் கொண்டிருந்தது..

 

இராஜேந்திரன் மற்றும் குமாரசிங்க இருவரும் சண்டை போடும் சத்தம் வேறு தெரு வரை கேட்டது..

 

அவனுக்கு மட்டும் கேட்காமல் இருக்குமா? அவனுக்கு விளங்கிற்று ஜெனனியின் நிலைக்கான காரணம் இருவரும் காதலிப்பது வீட்டிற்கு தெரிந்துவிட்டது..அதனால் ஏற்பட்ட பிரச்சினையாகும்..

 

“ ஜெனனி என்னை கொஞ்சம் பாரேன்..” அவன் மார்பினுள் ஆழ புதைந்தவளை விலக்கி அவனைப் பார்க்க வைத்தான்..

 

“இங்க பாரு மெனிக்கே..” அப்போது தான் கவனித்தான் இரு கன்னங்களிலும் ஐ விரல் தடம் , கை , முதுகு என்று காயம் , புடவை வேறு கிழிந்து இருந்தது..

 

“என்னை விட்டு போயிடாதீங்க சன்ஜீவ!”உதடு துடிக்க கதறி அழுதாள் பெண்ணவள்..

 

அவள் நிலையை பார்த்த அவனுக்கு விழிகள் கலங்கியது..முதல் தடவையாக அவளுக்கு கலங்குகிறான்..

 

கரங்களில் நடுக்கம்..அவளை  விட்டு பிரிந்திட மாட்டேன் என இறுக அணைத்துக் கொண்டான்..

 

“அழாத மெனிக்கே நான் இருக்கேன் உனக்காக! உன்ன விட்டு கொடுக்க மாட்டேன் பயப்புடாத மா”..அவள் கூந்தலை வருடி சொன்னான்..“ம்.. ” பதில் அவளிடத்தில்,

 

“மெனிக்கே இங்க பாரு மா நாங்க வீட்டு நிலவரத்தை போய் பார்ப்பம் எது நடந்தாலும் பார்த்துக்கலாம் சரியா..” 

 

“வேணாம் நா.. நான் வரல்ல சன்ஜு பயமா இருக்கு எ..எனக்..” வார்த்தைகள் பேசுவதற்கு தடுமாறி நின்றவளை என்ன செய்வது என்றே அவனுக்கே தெரியவில்லை..

 

மிகவும் பயந்து போய் இருக்கிறாள் என்பது அவனுக்கு புரிகிறது இருப்பினும் எதற்கும் முகம் கொடுத்து ஆக வேண்டுமே!

 

“பைக்ல ஏறு மா நான் இருக்கேன்ல” ஒருவாறு சமாளித்து பைக்கில் ஏற வைத்து ஜெனனியின் வீட்டின் முன்பு நிறுத்தினான்..

 

சன்ஜீவ வீட்டில் நடக்கும் பிரச்சினையே சஜித்தின் நண்பன் ஒருவன் அவனுக்கு அழைத்து கூறி இருந்தான்..

 

“சன்ஜு உள்ள போக வேணாம் எனக்கு பயமா இருக்கு..” கேவி கேவி அழுதவளை அணைத்துக் கொண்டான்..

 

“இட்ஸ் ஓகே டா மா நானும் இருக்கும் போது என்ன பயம்” அவளை கைவளைவிற்குள் வைத்துக் கொண்டே உள்ளே அழைத்து சென்ற சமயம் “ஒரு காலடி வச்சா நீ உயிரோட இருக்க மாட்ட சன்ஜீவ ”குமாரசிங்க கத்த..“அந்த பெட்டைய விட்டு விலகி இங்க வா..”அவர் அழைத்தார்..

 

அவன் செல்லவில்லை.. அழுத்தமாக அனைவரின் மீதும் ஒரு பார்வை வீசினான்..

 

“அங்கிள் ஜெனனி உங்க மகள் தானே என்னை காதலிச்சன்னு ஒரு காரணத்துக்காக இப்படி அடிச்சி இருக்கீங்களே உங்களுக்கு கொஞ்சம் கூட உங்க மனசாட்சி உறுத்தவே இல்லையா ? கை குழந்தைல இருந்து வளர்த்து பெரியவளாகி படிக்க வைச்சி எல்லாம் செஞ்சிங்க அது பெத்தவஙகளோட கடமை ஆனா அவ விரும்புறதை மட்டும் செஞ்சு குடுக்க மாட்டீங்க அப்படித்தானே..” மேலும்,

 

“ஒரு சிங்களவனை காதலிச்சா அது பிழையா? எல்லாரும் மனுஷன் தானே  ஓரே இரத்தம்..மதமும் மொழியும் வித்தியாசம் கடவுள் ஒண்ணு தானே ஏன் எதிரி போலவே பாக்குறீங்க… ” கோபத்தில் வெடிக்க ஆரம்பித்தான்..ஜெனனி அவன் முதுகு பின்னே அவன் காக்கி சட்டையை பிடித்தவாறு உடல் நடுங்க நின்றாள்..

 

அவரோ “நீங்க சொன்னாலும் தம்பி எங்களுக்கும் உங்களுக்கும் ஒத்து போறதில்ல.. எங்களுக்கு கலாச்சாரமும் கெளரவமும் முக்கியம்..

சிங்கள ஆட்களே தமிழ் ஆட்கள துவேஷமா (விரோதி) தானே பார்ப்பீங்க என்ட மகளை கட்டிட்டு உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைச்சா அவ என்ன செய்வா ?” என்று கேட்டார்..

 

அவளுடனான சந்தோஷமான வாழ்க்கை அல்லவா கனவு கண்டு கொண்டு இருந்தான்..தன்னை நம்பி வந்தவளை எதற்காக கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்..

 

இவரின் பேச்சு தன் மகளை அவர் பக்கம் இழுக்கவே பேசிக் கொண்டு இருக்கிறார் என்று அவனுக்கு புரிந்தது..

 

ஜெனனியின் நிலையோ வேறு அவனையும் குடும்பத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள்..உடல் வலித்தது , காயங்களின் எரிவு , அடுத்த என்ன நடக்குமோ என்கிற அச்சம், சன்ஜீவனுடனா வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று நினைக்கவும் முடியவில்லை..இது தான் நடக்கும் என்று குறிப்பிட்டு சொல்லவும் முடியாது..

 

“ ஜெனனி இவன் உனக்கு வேண்டாம் மா என்கிட்ட வந்துரு..” இராஜேந்திரன் அழைக்க..

 

“ முடியாது அப்பா இவர் தான் வாழ்க்கை எண்டு முடிவு பண்ணிட்டேன்..அவ்ளோ நேசிக்குறவரை எப்படி விட்டுட்டு வர முடியும்..எனக்காக உங்க முன்னாடி காதலுக்காக நிற்கிறார்..கடைசி வரைக்கும் என்கூடவே இருப்பார்..எந்த கஷ்டத்தையும் கொடுக்காமல்..” என்று அவரிடம் சொல்ல..

 

வசந்தா அவள் அருகில் வந்து “ படிக்க வைச்சி ஆளாக்கி நீ வளர்ந்ததுக்கு பிறகு உனக்கு எண்டு வாழ்க்கை அமைச்சி கொடுக்க எங்களுக்கு தெரியாதா டி சொல்லு..” அவர் கேட்டதும் நிதர்சனம் சுட்டாலும், அவளின் விருப்பு வெறுப்பு இருக்கிறதே..

 

“ நீங்க சொல்றது சரி தான்மா..பெத்தங்களோட கடமை ஆனா என்னோட விருப்பம் , பிடித்தம் ஒண்ணு இருக்கே அம்மா..” என்றாள் அவள் ..

 

“ கடைசியா கேட்குறேன் உனக்கு நாங்க வேணுமா இல்ல அவன் வேணுமா ? ” என்று வசந்தா கேட்க..

 

அக்கணம் தடுமாறி நின்று விட்டால்.. சன்ஜீவ முகத்தை பார்த்தாள்..“ நீதான் முடிவு பண்ணனும் ஜெனனி ” அவன் சொன்ன பிறகு..

 

விழி மூடி சற்று யோசித்தாள்..தாய் தகப்பனை விட அவன் முக்கியம் வாழ்வின் இறுதி வரைக்கும் கை கோர்த்து அவளுக்கு துணையாக நிற்கப் போவது அவன்..

 

அவர்களுடன் சென்றால் வாழ்க்கை முழுதும் குத்து பேச்சுக்களும் சொந்தகங்களின் வசவு வார்த்தைகளை கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.. திருமணமும் கை கூடி வராது தேவையில்லாத வதந்திகள் அவளையும் சன்ஜீவ மீதும் பழிச்சொல் வர வாய்ப்புகள் அதிகம் அதற்கு சான்று பக்கத்து வீட்டு ஆட்கள் , ஊராட்கள் தானே அவர்கள் வாய் மூடுமா ? ஒன்றை பத்தொன்று பதினைந்தாக திரித்து கூறுவார்கள்..

 

அவனாக இருந்தாலும் சரி அவளாக இருந்தாலும் சரி அதன் வேதனையே இருவரும், பெற்றவர்களும் அல்லவா சேர்ந்து அனுபவிக்க வேண்டும் இந்த வேதனையும் துன்பமும் தேவைதானா? என்ற கேள்வி மனதில் எழுந்தது..

 

ஒரு முடிவை எடுத்தவளாக “ மன்னிச்சிடுங்க அம்மா , அப்பா எ.. எனக்கு சன்ஜீவ தான் முக்கியம் ” என்று கூறுவதற்குள் தொண்டையே அடைத்தது..

 

ஆறுதலாக கரம் பிடித்தான் அவன்.. ஏறிட்டுப் பார்க்க , விழிகளை மூடித் திறந்தான்..பெற்றவர்களை சம்மதிக்க வைத்து விடுவான் என்கிற நம்பிக்கை இருந்தது..

 

“ பாவி மகளே! நல்லா இருப்பீயா நீ ? ” அவளை தூற்ற ஆரம்பித்தார் அதோடு விட்டாரா அவளை அடிக்க பாய்ந்து விட்டார்..

 

அவரை தடுத்தது என்னவோ சன்ஜீவ தான் “ ஆன்டி உங்களுக்கு அவளை அடிக்க உரிமை இல்ல..தாலி கட்டல்லை எண்டாலும் நான் தான் வேணும் எண்டு சொன்ன பிறகு அவ என் மனைவி தான்..அவளை ஏற்கனவே அடிச்சி காயப்படுத்திடீங்க நான் நினைச்சி இருந்தா ஆங்கிள் அரஸ்ட் பண்ணி கேஸ் பைல் பண்ணி உள்ள போட்டு இருக்க முடியும் அதை நான் பண்ணல்ல என் பொஞ்சாதி அப்பா என்கிற ஓரே காரணத்துக்காக விடுறேன்..” சீறினான் அவன்..அவன் சொன்னதை இராஜேந்திரன் ஆடி போய் விட்டார்..

 

அவன் தமிழில் பேசவில்லை ஏனென்றால் அவன் பேசுவது அவன் தந்தைக்கும் விளங்க வேண்டும் என்பதால் சிங்களத்திலே பேசினான்..

 

குமாரசிங்க மகனை அந்நிய பார்வை நோக்கி வீசிவிட்டு மனைவியை இழுத்துக் கொண்டு சென்றார்..

 

வீட்டிற்கு சென்றவர் சும்மா இருப்பாரா அவனின் உடைகள் முதல் , கப் பதக்கம், சான்றிதழ் என அனைத்தையும் தூக்கி வீட்டுக்கு வெளியே வீசி எறிந்தார்..

 

காதலித்த பிறகு இதெல்லாம் ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்..ஜெனனியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்..

 

தாய்  தந்தையை ஏக்க விழிகளுடன் பார்த்தவாறு அவன் கூடவே சென்றாள்..பெற்ற மகள் இன்னொருவருடன் செல்கிறாள் என்ற வலி அவருக்கு இருந்தது..

 

அந்நேரம் சஜித் காரில் வந்து இறங்கினான்..சன்ஜீவ வீட்டின் முற்றத்தில் வீசி இருந்த அவன் உடைமைகளை பொறுக்கி எடுத்து பெட்டியில் போட்டு கொண்டு வெளியே வந்தபோது அண்ணனை பார்த்ததும் சட்டென்று கண்கள் கலங்கின..

 

சஜித் தம்பியை அந்நிலையில் காண மனம் பிசைந்தாலும் ஜெனனியின் நிலையை பார்த்தபோது மனதில் கழிவிரக்கமாக இருந்தது..

 

இருவருக்குள்ளும் மனிதாபிமானம் இருந்தது..ஜெனனியை வேற்று பெண்ணாக பார்க்க முடியவில்லை..

 

தம்பியின் அருகில் சென்றான் அவன் கையில் இருந்ததை வாங்கி , காரில் வைத்தான்..

 

“ வீட்டுக்கு போய் கதைக்கலாம் ஜெனனிய நான் கார்ல கூட்டிட்டு போறேன், நீ பைக்ல வந்துரு..” என்று சொன்னவன் , ஜெனனி புறம் திரும்பி “ நீ வா மா கார்ல போகலாம்..அவன் பைக்ல வரட்டும் ” சரியென தலையசைத்து சன்ஜீவனை திருப்பிப் பார்த்தாள்..“ போ ” அவன் வாய் அசைந்து , கார் கதவை திறந்து ஏறிக் கொண்டாள் , கார் புறப்பட்டது..

 

சன்ஜீவ வீட்டை பார்த்து ஏக்க பெருமூச்சுடன் பைக்கை உயிர்ப்பித்து கார் பின்னே சென்றான்..

 

இராஜேந்திரன் ஜெனுஷா அழைத்து வீட்டில் நடந்ததை அவளிடம் கூறி இருந்தார்.. அவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி தினேஷ் கூறியது தான் அந்நேரம் ஞாபகம் வந்தது..“ நாளைக்கு நான் வரேன் அப்பா ” வைத்துவிட்டாள் ஃபோனை, தினேஷிடம் அனைத்தையும் கூறியபோது “ நான் சொன்னேன் தானே ஜெனு நீதான் கேட்கல்ல இப்ப பார்த்தீயா எங்க கொண்டு வந்து விட்டுருக்கு எண்டு அன்டைக்கே சொல்லி இருக்கலாம் நீ தான் நான் சொன்னது நம்பல்ல ” கோபமாக கத்திவிட்டு உறங்கிவிட்டான் ஆனால் உறக்கம் வரவில்லை.. மனைவியின் தங்கையாக இருந்தாலும் அவனுக்கும் ஒரு தங்கை போல் தானே அன்று அனைவருக்கும் தூங்கா இரவாகிப் போனது..

 

சிறிது நேரம் பயணத்திற்கு பிறகு பெரிய வீட்டின் முன்பு கார் நின்றது..

 

“ இறங்கு மா..” காரில் இருந்து இறங்கினாள்..

 

“ தாத்தே ( அப்பா ) ” கத்திக் கொண்டு ஓடி வந்தாள் சஜித்தின் மகள்.. கைக்குழந்தையுடன் வெளியே வந்தாள் அவன் மனைவி சயூரி காரில் இறங்கிய ஜெனனியையும் கணவனையும் பார்த்தாள்..

 

ஆறு வயது மகளை தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல..ஜெனனி அவனை பின் தொடர்ந்து செல்லவில்லை சன்ஜீவ வரும் வரை பார்த்திருந்தவள், அவனின் பைக் உள்ளே நுழைந்தது..

 

சயூரி “ சஜித் அந்த பெட்டய தான் உங்க தம்பி காதலிக்கிறானா? ” அவள் கேட்க.‌.

 

“ ஹம்..சயூ காலைல கதைப்பம், மல்லி கூட கதைக்கனும் முதல்ல ரெண்டு பேருக்கும் வேற ரூம் அரேஞ்ச் பண்ணி வைக்க சொன்னனே சயூ..” மகளை தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தபடி பேசினான்..

 

“ அக்கா கிட்ட சொல்லி அரேஞ்ச் பண்ணி வைச்சிட்டேன்..”

 

“ ஜெனனி தான் பாவம் உடம்புல எல்லாம் காயம் , அவங்க அப்பா அடிச்சி இருப்பார் ரெண்டு பேரும் வரட்டும்..” என்றான்..

 

“ வா உள்ள  போலாம் ” அவன் கையில் பெரிய பை இருந்தது..

 

உள்ளே வந்தவன் “ ரூம் அரேஞ்ச் ” அவன் கேட்க வரும் முன்..“ ரெண்டு ரூம் அரேஞ்ச் பண்ணி இருக்கேன்..எதுல வேணும்னாலும் தங்கிகலாம் குளிச்சிட்டு வா உன் உடுப்பு கார்ல இருக்கு ” என்றான்..

 

“ ஹரி அய்யே ( சரி அண்ணா) ” அவளை அறைக்கு அழைத்துச் சென்று “ பேக்ல உனக்கு உடுப்பு இருக்கு கொஞ்ச நாளைக்கு மேனேஜ் பண்ணிக்க குளிச்சிட்டு வா சாப்பிட்டு மருந்து குடிக்கணும் ” என்றதும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.. அவன் அவளை மென்மையாக அணைத்தான்..

 

அவள் அணைப்பது இறுகியது..மெல்ல விசும்பல் ஒலி கேட்க..“ அழாத ஜெனி நான் இருக்கன் தானே எல்லாம் சரி ஆகிடும்..ஹம் ” அவளைப் பிரித்து கண்ணீரை துடைத்து விட்டான்..“ என்கூடவே இருப்பீங்கள்ல ” பயத்துடன் கேட்டாள்..

 

“ பயப்புடாத உன்கூடவே இருப்பேன்..” என்றான்..அவளை சமாதானம் செய்து குளிக்க அனுப்பி வைத்தான்.. அவனும் உடைகளை எடுத்து வந்து குளிக்க சென்றான்..

 

குளிக்கச் சென்றவளுக்கு உடலில் உள்ள காயம் எரிச்சலை கொடுத்தது..எரிச்சலை பொருத்துக் கொண்டு குளித்துவிட்டு உடை மாறி வெளியே வந்தவள்…

 

அணிந்த உடையை வெளியே முற்றத்தில் இருந்த கொடியில் உலர வைத்துவிட்டு உள்ளே வந்தாள்..அவன் வாங்கி கொடுத்த கவுன் அவளுக்கு கட்சிதமாக பொருந்தி இருந்தது..

 

சன்ஜீவ இளம் சிவப்பு டி-ஷர்ட் , கருப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்து அவளுக்காக உணவை மேசையில் காத்திருந்தான்..

 

சஜித் மற்றும் மனைவி நேரத்துடன் உண்டுவிட்டு அவர்களுக்கான தனிமை கொடுத்து அறையில் அடைந்து கொண்டனர்..

 

அவளுக்கான உணவினை தட்டில் பரிமாறி “ சாப்பிடு ஜெனி ” என்றான் .. இருவரும் உணவை கஷ்டப்பட்டு உண்டனர்..வயிற்றின் பசிக்காவது உண்ண வேண்டுமே, அதன் பிறகு பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு அவளை அறைக்கு அழைத்துச் சென்றான்..

 

உடலில் காயத்திற்கு காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளதால், மாத்திரை போட வைத்து , காயத்திற்கு போடும் களிம்பை விரலில் எடுத்து அவள் கையில் தடவினான்..

 

வலியில் கத்தவில்லை முகத்தை மட்டும் சுருக்கினாள்..

 

“ உடம்புல நிறைய காயம் இருக்கு ஜெனி..முடியை முன்னால போடு , ” அவன் சொன்னதை செய்தால் , முதுகில் இருந்த காயத்திற்கும் களிம்பை தடவினான்..காயத்தினை பார்க்க பார்க்க அவனுக்கு உள்ளம் பிசைந்தது..

 

அவனுக்காக தானே அடியை வாங்கிக் கொண்டாள்..அவள் முன்னே அழுது விடுமோ என்று அச்சம் கொண்டு ,

 

“ ரொம்ப வலிக்குதா ஜெனி..” குரல் கமறி வெளிவந்தது..தொண்டையை செருமி சரி செய்தான்..இல்லையென தலையசைத்தாள்.. அவனுக்கு அது நம்பும் படியாக இருக்கவில்லை..கால்களிலும் களிம்பை தடவியதன் பின் , “ நீ தூங்கு ஜெனி அண்ணா கதைக்க வர சொன்னான் கதைச்சிட்டு வாறன்..” அவள்

நெற்றியில் இதழ் பதித்துவிட்டு வெளியே சென்றான்..

 

சஜித் அவனுக்கு அறைந்திருந்தான்..அடியை வாங்கி அமைதியாக அண்ணன் முன்பு நின்றான்..

 

 

 

 

தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்