Loading

இதுவரை ஆல்பா…..

3050 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் அமர்ந்திருந்த மணிசேகரன் விண்வெளிப்புயலை விட மோசமான புயலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அந்தப் புயல்……….

 

அழகிய ஆரம்பம் -2

மணிசேகரன் பார்க்க விண்வெளிப் புயலை விட மோசமான புயல் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தது. அது மேகலா என்ற அழகுப் புயல்.

      எவரையும் கவர்ந்து இழுக்கும் கண்கள். ஆனால் வர்ணனைக்கு அடங்காத அறிவுடன் கூடிய அழகு மிகுந்தவள். மணிக்கு நேர் எதிரான குணம், அதாவது கடவுள் விசயத்தில். தான் வேலைக்கு வரும்போது தன்னோடு கடவுளும் இருக்கின்றார் என்ற தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவள். இரண்டு மூளைக்காரர் என சொல்லப்படும் தலைவர் மல்கோத்ராவை திணறடிப்பவள். இவள் அறிவுக்கூர்மையான வாதத்திற்கு முன் அவர் மனைவியிடம் சரணடைந்த கணவன் போன்று உட்கார்ந்து இருப்பார். அவள் அறைக்குள் வந்தாலே இவர் பயப்படுவார்.

  மேகலாவும் தாய் தந்தை அறியாது ஆதரவற்றோர் விடுதியில் படித்து வளர்ந்தவள். வான சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவள். அவளும் சொந்தமாக ஹெலிகார் வைத்திருந்தவள்.

        அந்த ஆய்வு மையத்தின் மேல் மாடியில் ஹெலிகார் தளம் இருந்தது. இது சாதாரண கார் அல்ல. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பறக்க கூடியது. அந்த 3050 ஆம் ஆண்டு சாலையில் சில வாகனங்களே செல்லும். மற்றவை எல்லாம் இந்த ஹெலிகார்களே.        

         மணியும் மேகலாவும் கடவுள் நம்பிக்கையில்  ஏழாம் பொருத்தமாக இருந்தாலும் மணிக்கு மட்டும் மெல்லியதாய் மேகலா மேல் ஒரு ஈர்ப்பு உள்ளே ஓடிக் கொண்டு இருந்தது.

  “ என்ன மணி மூஞ்சி ஒரு மாதிரியா இருக்கு, ஏதும் பிரச்சனை புதுசா  உருவாயிருக்கா ?”

“அதான் நீ வந்துட்டீல்ல, இனிமே பிரச்சனை தானா வந்துரும் “

“ என்கிட்ட சண்டை போடுறது உன் பிழைப்பாயிருச்சு “

“ சரி சரி விடு . அது என்ன நெற்றியில ? எந்த கோயிலுக்கு போயிட்டு வர.. ? ஒரே பக்தி மயமா இருக்கே..”

“ நம்ம தலைக்கு மேல எத்தனை கோள்கள் இருந்தாலும் கடவுளை மீறி நம்மால எதுவும் செய்ய முடியாது “

“ஆரம்பிச்சிட்டியா மறுபடியும். கடவுளை கண்ணுல காட்டு நம்பறேன்.”

“மணி உன்னை திருத்த முடியாது. காற்றை கண்ல பார்க்க முடியாது. அதுக்காக காத்து இல்லைன்னு சொல்லிருவாயா ?”

மணி ஏதோ சொல்ல வருவதற்குள் அலைபேசி அலற ஆரம்பித்தது.

தலைமை விஞ்ஞானி மல்ஹோத்ரா அழைப்பு அது.

“ என்ன மணி , தலை கூப்பிடுது. இன்னைக்கு என்ன சொல்லப் போறாருன்னு தெரியலையே ? ஏற்கனவே சொன்னதையே சொல்லி வெறுப்பேத்துவாரு. புதுசா கேக்குற மாதிரி உட்கார்ந்து இருப்பாரு. ரொம்ப அழுத்தமான மனுசன். பாவம் வீட்டுல அந்த அம்மா என்ன பாடுபடுதோ ?”

” அட நீ வேற , ஒரு சமயம் அவர் வீட்டுக்கு போயிருந்தேன். சோபாவில ஒரு மூலையில பவ்யமா உட்கார்ந்து இருந்தாரு. அந்த அம்மா ஏதோ கேட்க பதில் சொல்லிட்டு இருந்தாரு. காபியில கொஞ்சம் சர்க்கரை போடு அப்படின்னு கெஞ்சினாரு. ஆனா அந்த அம்மா அதெல்லாம் போட முடியாதுன்னு சத்தம் போட்டவுடனே அமைதியாயிட்டாரு”.

மேகலா சிரித்தாள்.

“ எத்தனை வருசம் ஆனாலும் இது தொடரும் போல. இதை மாத்த முடியாது”.

“ ஆமா மேகலா, அப்புறம் அவர் வீட்டு அம்மா அந்த பக்கம் போனவுடனே ஊர்ல இருக்கற எல்லா கிரகத்தையும் சமாளிக்கிற எனக்கு வீட்டுல இருக்கறதை சமாளிக்க முடியலைன்னு சொல்லிட்டு சத்தம் வராம சிரிச்சாரு”.

“ அப்ப நாம கிண்டலடிக்கற இரண்டு மூளைக்காரர் வீட்டுக்கு போனவுடனே ஒரு மூளைக்காரரா மாறி போயிடறாரு, அப்படித்தானே “.

“ ஆம்பளைகளை நக்கல் பண்றதுல உங்களை மிஞ்ச முடியாது. கொஞ்சம் இடம் கிடைச்சா தடம் இல்லாம ஆக்கிடுவீங்க “.

”ஆமா, இவக பாவம் ஒண்ணுமே தெரியாதவங்க. உங்களை மாதிரி பேசி ஏமாத்தற ஆட்க நாங்க கிடையாது தாயி ”

இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டியதில் தலைவர் அழைத்த அழைப்பை மறந்து போக மீண்டும் தொலைபேசி  பால் இல்லா குழந்தை போல கதறியது.

“ சரி ,மேகலா..வா போகலாம். தலைவர் மறுபடி கூப்பிடுறாரு. போவோம். அப்புறம் சண்டையை வச்சிக்கலாம்”.

இருவரும் அந்த பெரிய கட்டிடத்தின் வேறு ஒரு மூலையில் இருந்த மல்கோத்ரா அறைக்கு நடக்க ஆரம்பித்தார்கள்.

அங்கே … 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்