Loading

பொங்கல் சிறப்பாக முடிந்து விட சாமிக்கு படைத்து வழிபட்டு விட்டு எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர். எல்லோருமே சிறிதளவு பொங்கலுடன் காலை உணவையும் சேர்த்து எடுத்துக் கொள்ள ஆராதனா மட்டும் பொங்கலையே காலை உணவாக சாப்பிட்டாள்.

பொங்கலை மொத்தமாக அருகில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள். அதே நேரம் தொலைகாட்சியும் ஓட சாப்பிடுவதை அவள் நிறுத்தவில்லை.

“ஏய்.. போதும் டி.. ஓவரா ஸ்வீட் தின்னுட்டு இருக்க?”

யுவன் அவளது தலையில் கொட்டி கூறினான்.

“எனக்கு சுகர் வந்தாலும் நீ மாத்திரை வாங்கி கொடுக்க தேவை படாது. அதுனால உன் வேலைய பாரு”

“லூசு.. பல்லு போயிடும்.. எல்லாருக்கும் கொஞ்சம் மிச்சம் வை”

“எல்லாரும் சாப்டாச்சு..”

“எனக்கு இப்போ வேணும் ” என்றவன் அந்த பாத்திரத்தை அப்படியே தூக்கிக் கொண்டான். ஆராதனா கத்துவாள் என்று எதிர் பார்க்க அவளோ விரலை சப்பிக் கொண்டிருந்தாள்.

‘என்ன ரியாக்ஷன காணோம்’ என்று சந்தேகமாக பாத்திரத்தை பார்க்க அதில் ஒரு பிடி கூட இல்லை.

“அதுல கொஞ்சமா உனக்கு னு வச்சுருக்கேன். சாப்டு” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டாள்.

“வயிறு வலிக்குது னு சொல்லுடி.. தின்ன வாய்லயே குத்துறேன்” என்று சத்தமாக யுவன் கூற ஆராதனா கண்டு கொள்ளவில்லை.

மாலை ஆராதனா நண்பர்களை பார்க்க கிளம்ப அதே நேரம் யுவனும் சங்கவியும் கிளம்பினர். ஆராதனா பேசும் சத்தம் கேட்டு யுவன் இரண்டு வீட்டுக்கும் இடையில் இருக்கும் தோட்டத்தின் கதவு வழியே அங்கு வந்தான்.

“எம்மா தாயே… ஏழு மணிக்கு கரெக்ட்டா வீட்டுல இருப்பேன்‌ போதுமா? ” – ஆராதனா.

“அப்படி சொல்லிட்டு வராம இரு‌… அப்புறம் இருக்கு உனக்கு” – பத்மினி

“ஆத்தா மலையிருங்கிடுச்சு.. இப்படியே ஓடிருவோம்.. பை பை” என்று கையாட்டி விட்டு வந்தவள் யுவனை பார்த்து விட்டாள். அவன் பின்னால் சங்கவியையும் பார்த்து விட்டாள்.

“எங்க கிளம்பிட்ட?” என்று யுவன் “நான் உன்ட எந்த கேள்வியும் கேட்கலையே… நீ ஏன் கேட்குற?” என்று திருப்பி கேட்டாள்.

“எங்க அத்த ?” என்று பத்மினியின் பக்கம் திரும்பினான்.

“ஃப்ரண்ட பார்க்க போறாளாம்…”

“வரியா உன்ன விட்டுட்டு போறேன்?”

“என் கிட்ட கார் சாவி இருக்கு. லைசன்சும் இருக்கு. நீங்க உங்க வேலைய பாருங்க”

“உன் கிட்ட லைசன்ஸ் இருக்கா?” – சங்கவி.

“ஏன் என் கிட்ட இருக்க கூடாதா?”

“இல்ல சின்ன பொண்ணா இருக்கியே?”

“ஹலோ.. நான் டீன் ஏஜ் க்ராஸ் பண்ணிட்டேன். சின்ன பொண்ணு எல்லாம் இல்ல”

“ஆரா…” என்று யுவன் புருவம் சுருக்க உடனே உதட்டை சுழித்து விட்டு “சாரிங்க.. என் கிட்ட லைசன்ஸ் இப்போ இருக்கு. நான் கிளம்புறேன்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டாள்.

அவள் உடனே மன்னிப்பு கேட்டு விட்டதும் யுவனின் முகத்தில் புன்னகை வந்தது. அது ஏனோ சங்கவிக்கு பிடிக்கவில்லை. ஆராதனாவிற்கு யுவனை பிடிக்காது என்று நன்றாக தெரிந்து கொண்டாள். அது அப்படியே இருக்கும் வரை தான் சங்கவிக்கு லாபம். அது குறைவது எப்படி அவளுக்கு பிடிக்கும்?

யுவனும் சங்கவியும் தங்களது நண்பர்களை பார்க்க கிளம்பினர். பொங்கல் விடுமுறை என்பதால் எல்லோருமே சொந்த ஊருக்கு வந்து இருந்தனர். அதனால் எல்லோரையும் மொத்தமாக பார்க்க கிளம்பி விட்டனர்.

எல்லோரும் ஒரு ஹோட்டலில் ஒன்று கூடினர். யுவனும் சங்கவியும் ஒன்றாக வருவதை பார்த்து விட்டு எல்லோரும் கேள்வி கேட்க யுவன் நடந்ததை கூறினான்.

“பாரேன்… வருங்கால மாமியார் வீட இப்போவே பார்க்குற போல?” என்று ஒருவன் கேட்க யுவன் தன் முன்னால் இருந்த ட்ஸ்யூ பேப்பரை கசக்கி தூக்கி எரிந்தான்.

“இன்னொரு தடவ நீ இப்படி பேசுறத பார்த்தேன்.. உன் வாய்ல இருக்க பல்லுல ரெண்டு குறஞ்சுடும்”

“சரி சரி அமைதி…”

“ஆமா எல்லாரும் வந்துருக்கீங்க எங்க பார்வதி ?” என்று யுவன் கேட்க “பார்வதி அம்மா அவங்க சிவன தேடி போயிட்டாங்க” என்றான் ஒருவன்.

“என்னங்கடா சொல்லுறீங்க?” என்று கேட்க “அவளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சாம். ஓவரா பண்ணுறா டா… போய் அந்த மாப்பிள்ளை கிட்ட அவ திட்டுனா எப்படி இருக்கும் னு போட்டு கொடுக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன்” என்றான்.

யுவனும் மற்றவர்களும் சிரிக்க “நீங்க எல்லாரும் வாங்க அவ கல்யாணத்துக் கு போயிட்டு வந்துடலாம்…” என்று அழைக்க “என்னால எங்கயும் நகர முடியாது. அதுவும் இன்னும் ஆறு மாசத்துக்கு தமிழ்நாட விட்டு வெளிய போக சான்ஸே இல்ல” என்று யுவன் கலண்டு விட்டான்.

“இப்ப கூட நீ வர முடியாது னு தான் எல்லாரும் கோயம்புத்தூர் வந்தோம். மறுபடியும் அதயே சொல்லு” என்று மற்றவர்கள் சலித்துக் கொள்ள “என் வேலை அப்படி.‌‌ வீட்டுல இருக்கவங்கள பிரிஞ்சு இருக்கவும் முடியாது” என்று கூறினான்.

“ஆமா… யுவன் வீட்டுக்கு ஒரு தடவ வந்து தங்கி பாருங்க. மறக்கவே மாட்டிங்க” என்று சங்கவி கூற “வந்துட்டா போச்சு.. நாளைக்கு வரோம்.. என்ன யுவா.. வரலாமா?” என்று கேட்டனர்.

ஒரு நொடி யோசித்தவன் “வாங்க வாங்க ” என்றான்.

அதன் பின் பேச்சும் சிரிப்புமாக நேரம் கடக்க சாப்பிட்டு விட்டு எல்லோரும் கிளம்பி விட்டனர். யுவனின் நண்பர்கள் எல்லோரும் பொங்கலை கொண்டாட அவரவர் ஊருக்கு வந்திருந்தனர். அத்தனை பேரும் கல்லூரி நண்பர்கள். அதோடு எல்லோரும் மாலை யுவனை சந்திப்பதற்காகவும் ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்று தான் கிளம்பி வந்திருந்தனர்.

இரவு யுவன் வீட்டுக்கு வர ஆராதனா அவளது வீட்டு வாசலில் யாருடனோ போன் பேசிக் கொண்டு நின்றிருந்தாள். பின் கதவு வழியாக அவளிடம் சென்றான்.

“தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க அவனை கண்டு கொள்ளாமல் பேசி முடித்தாள்.

“விண்வெளி ஆராய்ச்சி பண்ணுறேன்… பார்த்தா தெரியல? போன் பேசுனேன்”

“நீ ஏன் சங்கவி கிட்ட பேச மாட்ர.. அவ லோன்லியா ஃபீல் பண்ணுறா”

“இங்க பாரு..‌ உன் ஃப்ரண்டு கிட்ட நான் ஏன் பேசனும்? நீ பேசு.. இல்ல அத்தை பேசுவாங்க. என்னால எல்லாம் பேச முடியாது”

“ஏன்?”

“பிடிக்கல. உன்னயே பிடிக்கல. உன் ஃப்ரண்ட எப்படி பிடிக்கும்? நான் பேசுவேன் னு எல்லாம் எதிர் பார்க்காத.. என்னால முடியாது”

“சோ பேச மாட்ட…? ரைட்..‌ நாளைக்கு பத்து பேரு கிட்ட பேச ரெடியா இரு” என்று கூறி விட்டு திரும்பி சென்று விட்டான்.

ஆராதனா என்ன சொல்லிச் சென்றான் என்று புரியாமல் யோசித்தாள். சில நிமிடத்தில் புரிந்து விட “ஓ… நாளைக்கு பத்து ஃப்ரண்ட்ஸ் வர்ராங்களா? வரட்டுமே… இருந்தா தான பேச சொல்லுவ?” என்று தலையை சிலுப்பிக் கொண்டாள்.

மறுநாள் யுவனின் நண்பர்கள் வரும் முன்பே ஆராதனா தன் நண்பர்களை பார்க்க கிளம்பி விட்டாள். இது தானே யுவனுக்கு வேண்டும்?

ஏனோ ஆராதனாவை பற்றி கல்லூரியில் அவன் பேசியது இல்லை. அவர்கள் யாரும் ஆராதனாவை அறிந்து கொள்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை.

அதனால் அவளை அங்கிருந்து துரத்தி விட்டான். இது தெரியாத சங்கவி ஆராதனா வழக்கமாக வரும் நேரத்தில் அவளுக்காக காத்திருந்தாள்.‌ எப்படியாவது ஆராதனாவை யுவனின் தங்கையாக்கி விட துடித்தாள்.

காலை உணவை வெளியே முடித்து விட்டு தான் யுவனின் நண்பர்கள் வந்தனர். சில நிமிடங்கள் பேச்சில் கழிய அர்ச்சனா சமைக்க சென்று விட்டார். மற்றவர்கள் வீட்டை சுற்றி பார்த்தனர்.

அர்ச்சனாவிற்கு உதவ பத்மினி வந்து விட ஆராதனாவை மட்டும் காணவில்லை.

‘இந்த லூசு எங்க போனா?’ என்று சங்கவி யோசித்துக் கொண்டே இருந்தாள். ஆனால் ஆராதனா கண்ணில் படவே இல்லை. வேறு வழியில்லாமல் அவளே ஆராதனாவின் பேச்சை ஆரம்பித்தாள்.

“இப்போ வந்தாங்கள்ள… பக்கத்து வீட்டுகாரவங்க. அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா. ஆராதனா… அவள பத்தி யுவன் ஒரு வார்த்தை கூட சொன்னது இல்ல. இங்க வந்து தான் எனக்கு தெரியும்” என்று சங்கவி ஆரம்பிக்க “நிஜம்மாவா? உனக்கு அத்தை பொண்ணு எல்லாம் இருக்கா?” என்று கேட்டனர்.

“அத்தை னு ஒன்னு இருந்தா.. அவங்களுக்கு பிள்ளை இருக்காதா? அது முக்கியமா இப்போ?”

யுவன் கேட்ட விதத்தில் இனி அதை பற்றி பேச வேண்டாம் என்று இருந்தது. ஆனால் சங்கவி கண்டு கொண்டால் தானே?

“அந்த பொண்ணு நல்லா வாய் பேசுற பொண்ணு தெரியுமா? ஆனா என்னமோ யுவன பார்த்தா மட்டும் அவளுக்கு ஆக மாட்டிது”

சங்கவி கூறி விட்டு யுவனை கடைக்கண்ணால் ஆராய்ச்சி செய்தாள். அவள் பேச்சில் அவனது முகத்தில் எந்த மாற்றமும் வரவில்லை. ஆனால் அவளை திரும்பி பார்த்தான்.

“அவள பத்தி பேச வேணாம் னு நினைக்கிறேன் சங்கவி.‌ நீ என்ன நினைக்கிற?” என்று கேட்டு வைக்க இதற்கு மேல் வாயை திறக்க கூடாது என்று வாயை மூடிக் கொண்டாள்.

“சரி உட்கார்ந்துட்டே இருந்தா எப்படி? வாங்க… அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணலாம்” என்று எல்லாரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

அங்கிருந்து எல்லாரும் செல்லும் வரை ஆராதனா வரவில்லை. மாலை எல்லோரும் சென்று ஒரு மணி நேரம் கழித்து தான் வந்து சேர்ந்தாள்.

யுவன் அவளது வீட்டில் தான் இருந்தான். அவனை பார்த்து விட்டு கண்டு கொள்ளாமல் ஆராதனா நடக்க “நாள் முழுக்க ஊர் சுத்தி இருக்க போல?” என்று கேட்டான்.

“ஆமா.. அதுக்கென்ன?”

“ஏன்?”

அவன் அருகில் வந்தவள் அவனை குனிந்து பார்த்து “என்ன அவ்வளவு மக்குனா நினைச்ச?” என்று கேட்டாள்.

“அப்படினா?”

“உன் ஃப்ரண்ட்ஸ் கிட்ட நான் பேச கூடாது னு நினைச்ச தான?” என்று கேட்டதும் அவன் முகத்தில் சிரிப்பு வந்தது.

“சோ உன் ஆசைய நிறைவேத்த முடிவு பண்ணி போயிட்டேன். அதுக்காக இது உனக்காக பண்ணேன் னு நினைக்காத… என் காலேஜ்ல உண்மைய சொல்லாம என்ன காப்பாத்தின.. அதுக்கு ரிட்டர்னா இது. சோ எல்லாம் சரியா போயிடுச்சு.”

அவனை பார்த்து சிரித்து விட்டு உள்ளே சென்று விட்டாள். யுவனும் அவளது புத்தி கூர்மையை கண்டு மெச்சிக் கொண்டான்.

‘இவ இனி வேலைக்கு வரலாம்.. நல்லா தான் யோசிக்கிறா’ என்று நினைத்தவன் அன்று நிம்மதியாக தூங்கினான்.

*.*.*.*.*.*.

பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் ஆரா கல்லூரி கிளம்பி விட்டாள். அதன் பின் நாட்கள் மின்னலாக கடக்க கடைசி தேர்வும் வந்தது. இதற்கு முன்பு எழுதியதிலேயே முதல் மதிப்பெண் வாங்கி இருந்தாள். ஆனால் ஒரே ஒரு பாடப்பிரிவில் தான். மற்றொரு பாடம் ஒரே ஒரு சதவீதம் குறைந்து சொதப்பி விட்டது.

இம்முறை யுவனிடம் விட்ட சவாலின் படி இரண்டு பாடங்களில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்கினாள். தேர்வை நன்றாக முடித்த பின் தான் அவளுக்கு மூச்சு சீராக வந்தது.

மீண்டும் ஊருக்கு கிளம்ப இம்முறை மீண்டும் யுவன் வந்து நின்றான். முதல் நாளே வேண்டாம் என்று ஆராதனா எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டாள். அவன் கேட்டால் தானே?

பரிட்ச்சை முடிந்து கல்லூரி விடுதியை காலி செய்து முதலில் ஊருக்கு கிளம்பியது ஆராதனா தான். எப்போதும் மற்றவர்களை வழியனுப்பி விட்டு தான் கிளம்புவாள். இம்முறை யுவன் முன்பே வந்து நிற்க வேறு வழி இல்லாமல் கிளம்பி விட்டாள்.

இம்முறை நீண்ட கால விடுமுறையாக இருந்தது. அடுத்து படிக்க போவதில்லை. தேர்வு முடிவு வந்ததும் வேலைக்கு செல்ல போகிறாள் என்பதால் விடுமுறை எந்த கவலையும் இல்லாமல் சென்றது. ஆராதனா வீட்டுக்கு வந்த சில தினங்களில் யுவன் எதோ ஒரு ஊருக்கு கிளம்பி சென்று விட்டான்.

நாட்கள் கடந்து செல்ல அன்று தேர்வு முடிவுகள் வெளியீடு என்று கூறப்பட்டது. ஆராதனாவும் காலையிலிருந்தே கணினியின் முன்பு அமர்ந்து இருந்தாள். யுவன் முதல் நாள் இரவு ஊருக்கு திரும்பி விட்டான்.

ஆராதனா இதை அறியவில்லை. உலகையே மறந்து விட்டு முடிவை எதிர் நோக்கி காத்திருந்தாள். அர்ச்சனா ஆராதனாவை எதற்கோ அழைத்து வர சொல்ல யுவன் ஆராதனா வை தேடி வந்தான்.

“ஆராவ அம்மா கூப்பிட்டாங்க அத்த”

“ரூம்ல தான் காலையில இருந்து உட்கார்ந்து இருக்கா. கூப்பிடு”

பத்மினி சொல்லவும் அவளை தேடி வந்தவன் அறை வாசலில் நின்று எட்டி பார்த்தான். கணினியை ஆர்வமாக பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் ஆராதனா.

“ஓய்.. உன்ன அம்மா கூப்பிட்டாங்க” என்று கூறி முடிக்கும் முன் நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்தவள் “ஜெயிச்சுட்டேன்” என்று குதித்தாள்.

யுவன் புரியாமல் பார்க்க வேகமாக வெளியே ஓடி வந்தவள் முதலில் யுவன் நிற்கவும் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு “ஜெயிச்சுட்டேன்” என்று கத்தினாள்.

முதல்முறையாக அவள் கழுத்தை கட்டிக் கொண்டதும் யுவன் அதிர்ந்து போனான். அந்த நொடியில் இருந்து அவளுக்கான இடம் அவன் மனதில் மாறிப் போனதை அவனும் அவளும் அறியவில்லை. அவனை விட்டு வேகமாக விலகியவள் அன்னையை தேடி ஓடினாள். சந்தோசத்தில் அவள் செய்த காரியத்தை அவள் சரியாக உணர வில்லை.

பத்மினி ஹாலிலேயே இருக்க “அம்மா.. நான் ஜெயிச்சுட்டேன். ரெண்டு மேஜர்ல நான் தான் பர்ஸ்ட்” என்று குதித்துக் கொண்டே அவரை கட்டிக் கொண்டாள்.

“அட நிஜம்மாவா? அப்போ ஸ்வீட் பண்ணிட வேண்டியது தான்”

“பாயாசம் பண்ணுங்க.. நான் போய் அத்த கிட்ட சொல்லிட்டு வரேன்”

வேகமாக வாசல் பக்கம் ஓடியவள் ஒரு நொடி நின்று திரும்பி பார்த்தாள். யுவன் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க “நீயும் வா” என்று கூறி விட்டு முன்னால் நடந்தாள். சற்று முன் அவனது கழுத்தை கட்டியதை முற்றிலுமாக மறந்து போனாள்.

பத்மினி யுவனை திரும்பி பார்க்க தன் அதிர்ச்சியை விட்டு விலகி தலையை குலுக்கியவன் “பாயாசம் பண்ணா எனக்கும் கொடுத்து விடுங்க அத்த” என்று கூறி விட்டு அவளை தொடர்ந்து வெளியே சென்றான்.

“அத்த…” என்று கத்திக் கொண்டே யுவன் வீட்டிற்குள் சென்றவள் அர்ச்சனாவை பார்த்ததும் அவரை நோக்கி ஓடினாள்.

“அத்த நான் ஜெயிச்சுட்டேன்.. உங்க மகன் வச்ச பெட்ல நான் ஜெயிச்சுட்டேன்.. ரிசல்ட் வந்துடுச்சு”

“உண்மையாவா? பர்ஸ்ட் மார்க் வாங்கிட்டியா?”

“ஆமா அத்த ஆமா.. அய்யோ ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்” என்று துள்ளி குதித்தாள்.

அவள் பேசிக் கொண்டிருந்ததை இல்லை குதித்துக் கொண்டிருந்ததை யுவன் சோஃபாவில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

“என் செல்லம்… ” என்று திருஷ்டி கழித்த அர்ச்சனா “என்ன வேணும் னு சொல்லு செய்யுறேன்” என்று கேட்டார்.

“ம்ம்.. அம்மா பாயாசம் பண்ணுறாங்க.. நீங்க எனக்கு கேசரி பண்ணி கொடுங்க”

“இப்பவே பண்ணுறேன் இரு” என்றவர் வேகமாக சமையலறை பக்கம் சென்றார்.

யுவனிடம் வந்தவள் கையை நீட்டினாள். அவள் கையையும் அவளையும் மாறிமாறி பார்த்தவன் நீட்டிய கையை பிடித்துக் கொண்டான்.

“வாழ்த்துக்கள் ஆராதனா” என்று வாழ்த்து கூறினான்.

அவசரமாக கையை தட்டி விட்டவள் “அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்” என்று மீண்டும் கையை நீட்டினாள்.

கால்மேல் கால் போட்டுக் கொண்டவன் “எத்தனை பர்ஸண்டேஜ்?” என்று கேட்டான்.

“நயண்ட்டி எயிட்”

“ம்ம்.. நல்ல மார்க் தான். மார்னிங் ஆபிஸ்க்கு கிளம்பி வா. தரேன்”

“குட்” என்றவள் அர்ச்சனாவை பார்க்க சமையலறைக்கு ஓடி விட்டாள்.

யுவன் சற்று முன் அவளது கையை பிடித்துக் கொண்டதை நினைத்து தலையில் தட்டிக் கொண்டான். அதே நேரம் மூளையில் ஆராதனா அவனது கழுத்தை கட்டிக் கொண்ட நொடி வந்து போனது.

“ப்ச்ச்… யுவா கண்டத யோசிக்காத” என்று தனக்கு தானே கூறி விட்டு எழுந்து சமையலறை பக்கம் சென்றான்.

“உன்ன எதுக்கு கூப்பிட்டேன் னு மறந்துட்டேன் பாரு… நேத்து சாப்பிங்ல புதுசா வாங்குனோம்ல… சோபா கவர் சன்னல் திரை எல்லாம். அது எல்லாம் எது எது எதுக்கு போடனும் னு யுவா கிட்ட சொல்லு. அவன் பண்ணட்டும். அதுக்குள்ள நான் கேசரி பண்ணி முடிச்சுடுறேன்”

அர்ச்சனா கூறவும் அதை கேட்டுக் கொண்டு வெளியே வந்தவள் எதிரில் வந்த யுவனின் மீது மோதப் போய் நின்று விட்டாள். அவனும் ஒரு அடி முன்பு நின்று விட்டான்.

“வா வா… நான் சொல்ல சொல்ல வேலைய பாரு” என்று கூறி விட்டு அவள் அவனை கடந்து சென்று விட்டாள்.

தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
11
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments