1,469 views

கல்லூரி திறந்தது. ஆராதனாவை விட அவளது அத்தையும் அன்னையும் தான் வந்திருந்தனர். புது‌ அறை கிடைத்த போது பூஜாவும் கீர்த்தனாவும் வெவ்வேறு அறைக்கு சென்று விட்டனர். ஆராதனாவுடன் வேறு இருவர் வந்து தங்க ஆராதனாவிற்கு அது பெரிதாக தெரியவில்லை. ஆனால் பூஜாவும் கீர்த்தனாவும் தாங்கள் இருக்கும் அறையை விட்டு விட்டு ஆராதனா இருக்கும் அறை தான் வேண்டும் என்று கேட்டு வந்து சேர்ந்து விட்டனர்.

மூவரும் மீண்டும் இணைந்தாலும் ஆராதனா அதை பற்றி பெரிதாக கவலை படவில்லை. அவளது கவனம் எல்லாம் படிப்பில் இருந்தது. யுவனிடம் விட்ட சவாலை ஜெயித்து காட்ட வேண்டும். அதை தவிர அவள் எதையும் கருத்தில் கொள்வதாக இல்லை.

கல்லூரி முடிந்ததும் நேராக நூலகம் செல்ல பழகிக் கொண்டாள். முதலில் பூஜாவும் கீர்த்தனாவும் வரவில்லை. பிறகு இருவருமாக இருப்பது அவர்களுக்கே சலிப்பாக இருக்க ஆராதனாவுடன் நூலகம் செல்ல ஆரம்பித்தனர்.

ஆராதனாவின் தீவிரமான படிப்பு இருவருக்கும் யோசனையை கிளப்பி விட்டது. ஒரு நாள் கேட்டு விட்டனர்.

“ஆரு.. உனக்கு என்ன தான்டி ஆச்சு? பத்து நிமிஷத்துக்கு மேல பேச மாட்ர. க்ளாஸ் விட்டா நேரா லைப்ரரிக்கு வந்துடுற..?” – பூஜா.

“நீ சும்மாவே படிப்ப தான். ஆனா இப்போ ரொம்ப ஓவரா இருக்கே” – கீர்த்தனா.

“எனக்கு பர்ஸ்ட் மார்க் எடுக்கனும்”

“அதான் இப்போவே எடுக்குறியே?” – பூஜா

“இது க்ளாஸ் பர்ஸ்ட். நான் சொல்லுறது யுனிவர்ஸிட்டி பர்ஸ்ட்”

இருவரும் அவளை ஆச்சரியமாக பார்க்க “என் மான பிரச்சனை. இத நான் எடுத்தே ஆகனும்” என்று தீவிரமாக கூறினாள்.

“நீ இவ்வளவு சீரியஸா பேச மாட்டியே? என்னாச்சு?” – கீர்த்தனா.

“ப்ச்ச்.. நான் மார்க் எடுத்தா தான் எங்க கம்பெனிக்குள்ளயே நுழைய முடியும்”

“வாட்?” இருவரும் ஒரே குரலில் கேட்டு அதிர்ந்தனர்.

“ம்ம்.. இதுல ப்ராஜெக்ட் ஆரம்பிக்க போகுது. நான் எடுத்துருக்க ரெண்டு எக்ஸ்ட்ரா கோர்ஸயும் முடிக்கனும். வேற வழி இல்ல… இப்படி தான் இருந்தாகனும்”

ஆராதனா திட்டவட்டமாக கூறி விட்டு படுத்து விட்டாள். அவளை விசித்திரமாக பார்த்து விட்டு மற்ற இருவரும் தூங்க சென்றனர்.

ஆராதனாவின் மற்ற குணங்கள் எதுவும் மாறவில்லை. ஆனால் அவள் விரயமாக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டாள். முதலில் காதல் என்று சுற்றிய ஆண்களும் இப்போது ஒதுங்கிக் கொண்டனர்.

முதல் விசயம் அவளது பின்புலம். இரண்டாவது, அவளுக்கு நிச்சயக்கப்பட்டவன் நேரடியாக கல்லூரி வந்து சென்றிருக்கிறான். அவனும் பெரிய இடத்தில் இருந்தான். அதனாலே பலர் தங்களது நிறைவேறா காதலை தங்களுக்குள் புதைத்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.

ஆராதனாவிற்கு தொந்தரவு எதுவும் இல்லாமல் இருக்க நிம்மதியாக படிப்பை மட்டும் பார்த்தாள். ஆறு மாதமும் வெற்றிகரமாக கடந்து போனது. தேர்வு முடிந்த பின் அவர்களால் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. ப்ராஜெக்ட் அவர்களை இழுத்துக் கொள்ள ஆராதனாவும் மற்றவர்களும் அதில் மூழ்கி விட்டனர். இடையில் வீட்டுக்கு அவள் வரும் எந்த நாளும் யுவன் வீட்டில் இருந்தது இல்லை.

எதாவது ஒரு வெளி நாட்டுக்கோ வெளி ஊருக்கு சென்றிருப்பான். ஆராதனாவும் சபதம் முடிக்கும் எண்ணத்தில் அவனை கண்டு கொள்ளவும் இல்லை.

பொங்கல் விழா கொண்டாட மீண்டும் சொந்த ஊருக்கு வந்தாள். பொங்கலுக்கு முதல் நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

இரண்டு வீடுகளும் வழக்கம் போல் அலங்கரித்து விழாவை எதிர் நோக்கி காத்திருந்தனர். ஆராதனா அத்தையை பார்க்க வேண்டும் என்று அர்ச்சனாவின் வீட்டுக்கு சென்றாள்.

வீட்டில் யாரோ ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க சந்தேகத்தோடு உள்ளே எட்டி பார்த்தாள். ஒரு இளம் வயது பெண் அர்ச்சனாவுடன் எதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். ஆராதனாவிற்கு திடிரென தான் அந்நிய பட்டுப்போன உணர்வு.

இது வரை அர்ச்சனாவிடம் அவளை தவிர யாரும் இவ்வளவு நெருக்கமாக இருந்தது இல்லை. அந்த உணர்வு கோபத்தையும் வருத்தத்தையும் ஒன்றாக கிளறி விட்டது.

“ஆரா.. அங்க நின்னு எத பார்க்குற?” என்று அர்ச்சனா கேட்ட பின்பே உணர்வு வந்து உள்ளே வந்தாள்.

“யார் அத்த புது கெஸ்ட்?” என்று கேட்க “இந்த பொண்ணு சங்கவி. யுவா வோட ஃப்ரண்டு” என்றார்.

‘அவன் ஃப்ரண்டு னா அவனோட இருக்க வேண்டியது தான.. இங்க எதுக்கு வர்ரா?’ என்று மனதில் கேட்ட போதும் “ஹாய்” என்றாள்.

சங்கவியும் “ஹாய்.. உங்க பேரு?” என்று கேட்க “இப்போ தான் சொன்னனே.. ஆரா னு இவள தான் சொன்னேன்” என்று அர்ச்சனா கூறினார்.

“ஓகே ஆண்ட்டி?”

அவளது உடை பாவனைகளை பார்த்தவள் உதட்டை சுழித்து விட்டு “அத்த.. என்ன ஏன் கூப்பிட வரல?” என்று கேட்டுக் கொண்டே அருகில் அமர்ந்து கொண்டாள்.

“வரேன் னு தான் சொன்னேன். உங்கம்மா தான் வீட்டுல இருக்க வேலைய பார்த்து வை னு சொல்லிட்டு போயிட்டா”

“எங்கம்மா சொன்னா வர மாட்டீங்க?”

“இல்லடா… உனக்கே தெரியும்ல… கால் ல வலி இருக்கு னு. அதான் வேணாம் சொல்லிடுச்சு பத்மினி”

“என்னவோ போங்க…”

“இந்த பொண்ணு நம்ம வாய பார்க்குது பாரு.. இது கிட்டையும் பேசு” என்று கூறிய பின் கடனே என்று சங்கவியிடம் பேசினாள்.

அவளது பெற்றோர்கள் வெளி நாட்டில் அவசர வேலையாக நான்கு நாட்கள் முன்பு கிளம்பி சென்று விட்டனராம். இவள் தனியாக பொங்கலை கொண்டாட வேண்டாம் என்று யுவன் இங்கு அழைத்து வந்திருக்கிறானாம். பொங்கல் முடியும் வரை இருந்து விட்டு மீண்டும் சென்று விடுவாளாம்.

‘என்னவோ செய்து கொள். என் அத்தையை விட்டு தள்ளி இரு’ என்று நினைத்துக் கொண்டாள் ஆராதனா.

சில நிமிடங்கள் அவளிடம் பேசி விட்டு ஆராதனா தன் வீட்டிற்கு செல்ல வெளியே வந்தாள். அதே நேரம் எதிரில் யுவன் வந்தான். அவனை தேவையில்லாமல் ஆராதனா முறைத்து வைக்க யுவன் குழம்பி விட்டான்.

ஆராதனா காரணம் இல்லாமல் எப்போதும் சண்டை போடவும் மாட்டாள். முறைக்கவும் மாட்டாள். இப்போது முறைக்கவும் “ஏய் நில்லு” என்று நிறுத்தினான்.

“இப்போ எதுக்கு முறைக்கிற?”

“உள்ள இருக்கவள நீ தான கூட்டிட்டு வந்த?”

“ஆரா.. அவ உன்ன விட வயசுல பெரியவ”

“இருக்கட்டுமே.. எனக்கு பிடிக்கலனா மரியாதை எல்லாம் தர முடியாது.”

“ஆரா.. இது தப்பு”

“அவ அத்தை கிட்ட பேசுறதும் தப்பு தான். என் அத்தை எனக்கு தான். உன் ஃப்ரண்ட உன்னோட வச்சுக்க சொல்லிட்டேன்” என்று கோபமாக கூறி விட்டு அவனை இடித்து விட்டு சென்று விட்டாள்.

யுவனுக்கு அவளது செய்கையில் சிரிப்பு வந்தது.

“ஒரு நேரம் மெச்சூர்டா இருக்கா. இன்னொரு நேரம் இப்படி சின்ன பிள்ளதனமா இருக்கா.. லூசு” என்று சிரித்தவன் திரும்பி வீட்டுக்குள் சென்றாள்.

வாசலில் அவர்கள் நின்று பேசியதை சங்கவி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

‘இந்த ஆராதனா யாரு னு தெரியலையே.. இவ்வளவு நாள்ல ஒரு தடவ கூட யுவன் இவ பேர கூட சொன்னது இல்ல’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் காலை சிறப்பாக விடிந்தது. இரண்டு வீடுகளும் ஒரே பொங்கல் தான் வைப்பார்கள். ஒரு பண்டிகையை யுவனின் வீட்டில் கொண்டாடினால் அடுத்த பண்டிகை ஆராதனாவின் வீட்டில் கொண்டாடுவார்கள்.

இரண்டு வீட்டார்களின் சொந்த பந்தங்களை அவர்கள் நெருங்க விடுவதில்லை. நெருங்க விட்டால் எதையாவது கிளறி விட்டு இவர்களை பிரிக்க தயாராக இருந்தனர். அதனாலே யாரையும் நெருங்க விடாமல் அவர்கள் உலகில் நிம்மதியாக இருந்தனர்.

யுவனின் வீட்டின் முன்னால் பொங்கல் வைக்கும் ஏற்பாடுகள் நடக்க துள்ளி குதித்துக் கொண்டு ஆராதனா உள்ளே வந்தாள். முதலில் சத்தியன் நிற்க அவரிடம் சென்றாள்.

“மாமா… ஹாப்பி பொங்கல்.”

“ஹாப்பி பொங்கல் டா மா”

“ட்ரஸ் எப்படி இருக்கு?”

“உனக்கென்னடா… அழகா இருக்க” என்று அவளது தலையில் ஆசிர்வதிப்பது போல் கை வைத்தார்.

“மிக்க நன்றி.. புது ட்ரஸ் போட்டா காசு கொடுக்கனும்” என்று கூற உடனே பணத்தை எடுத்து கொடுத்தார். ஆராதனா அதை சந்தோசமாக வாங்கிக் கொள்ள “இந்த பழக்கத்த விடவே மாட்டியா?” என்று கேட்டான் யுவன்.

அவன் பக்கம் திரும்பியவளின் முகத்தில் சிரிப்பே இல்லை. அனல் பறக்க பார்த்தவள் “உன்ட கேட்டனா? உன் வேலைய பார்” என்றாள்.

யுவன் தலையை இடவலமாக சலிப்போடு அசைத்து வைத்தான்.

“அவன் கிடக்குறான் விடுமா” என்று சத்தியன் கூற உடனே சிரித்தவள் “அத்தை எங்க?” என்று கேட்டாள்.

“அங்க இருக்கா பாரு.”

“அவங்க கிட்டையும் போய் வசூல் பண்ணிட்டு வரேன்”. என்று கூறி விட்டு அங்கிருந்து ஓடினாள். சற்று தள்ளி அர்ச்சனாவுடன் நின்றிருந்த சங்கவி ஆராதனா வந்ததிலிருந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

அர்ச்சனாவிடம் ஓடிய ஆராதனா “ஹாப்பி பொங்கல் அத்த” என்றாள்.

“ஹே.. ஆரா வா வா.. நான் சொன்னேன். நீ சுடிதார் தான் போடுவ னு. பத்மினி தான் சேலைய கட்ட வைக்கனும் னு அடம் பிடிச்சா”

“அதான.. என் அத்தைக்கு தெரியாதா என்ன பத்தி?”

“அதான…”

“அப்புறம் புது ட்ரஸ்க்கு காசு?”

“எடுத்து வச்சுருக்கனே” என்று அவர் பணத்தை எடுத்து கொடுக்க வேகமாக வாங்கிக் கொண்டு பின்னாலிருந்து அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“ஸ்வீட் அத்த”

“பத்மினி கிட்ட வாங்கியாச்சா?”

“அதெல்லாம் காலையிலயே முடிச்சுட்டேன்”

“இதுல நல்ல விவரம்‌ தான்… சரி சாமி கும்பிடனும் . போய் சீக்கிரமா வர சொல்லு “

ஆராதனா உடனே அங்கிருந்து தன் வீட்டுக்கு ஓடினாள். பத்மினியையும் ரகுநாதனையும் அழைத்துக் கொண்டு வர வழிபாடு தொடங்கியது.

ஆராதனா கண்ணை மூடி தீவிரமாக வேண்டிக் கொண்டிருக்க “ஆரா..” என்று யுவன் அவள் கையை இடித்தான். ஆராதனா கண் முழிக்காமல் இருக்க மீண்டும் மீண்டும் அழைத்தான். கடுப்புடன் கண் விழித்து அவனை முறைத்து பார்த்தாள்.

“சாமி கும்புடுறியா?”

“வேணாம்… டென்சன் பண்ணாத”

“அப்படி என்ன கும்புடுற? எக்ஸாம்ல மார்க் நிறைய வரனும்னா?”

“அப்படியே கடவுள் மார்க் போட்டாலும் உனக்கு ஏன் டா குத்துது? “

“சீட்டர்”

“சீட் பண்ண கூடாது னு நீ சொல்லலையே. உனக்கு தேவை ஃபுல் மார்க். அத மட்டும் பாரு.”

“உனக்கு இது கேவலமா இல்ல?”

“இல்லடா.. இப்போ வாய மூடு டா” என்று கூறியவள் கண்ணை மூடிக் கொண்டாள்.

வழிபாடு முடிந்து பொங்கல் வைக்கும் வேலை ஆரம்பமானது.

“நான்‌ பண்ணுறேன்…” என்று ஆராதனா வர “சாப்டுற வேலை இப்போ இல்ல… பொங்கல் பண்ணி முடிச்சதும் வா” என்றான் யுவன்.

“நான் சாப்ட வரல மெண்டல். சமைக்க வந்தேன்”

“உனக்கு அதெல்லாம் என்ன னு தெரியுமா?” – பத்மினி.

“ஏன் ? எனக்கு தெரியாது னு நீங்களே முடிவு பண்ணிக்குவீங்களா?”

“அப்படியா?”

“ஆமா… லாஸ்ட் வீக் எங்க காலேஜ்ல நடந்த பொங்கல் செலிப்ரேஷன்ல நானும் தான் பண்ணேன்.”

“என்ன டா பண்ண?” என்று அர்ச்சனா ஆர்வமாக கேட்க “அடுப்பு எரிச்சேன்” என்றாள்.

“நீ ஏன் அடுப்பு எரிக்கனும்?” என்று யுவன் புருவம் சுருக்கி கேட்க “புடவை கட்டாதவங்க தான் அடுப்பு எரிக்கனும் னு சொல்லிட்டாளுங்க. நாங்க நாலு பேர் கட்டல. ரெண்டு பேர் அடுப்பு எரிச்சோம். மத்த ரெண்டு பேரும் தண்ணி பிடிச்சாளுங்க”

“ஓ.. நீ தான் சேலை கட்ட மாட்டேன் னு அடம் பிடிக்கிற. அப்போ அனுபவி” – பத்மினி.

“ப்ச்ச்.. அத எல்லாம் கட்டவும் முடியாது. சமாளிக்கவும் முடியாது. ரெண்டு தடவ கட்டுனப்போவே ரொம்ப கஷ்டப் பட்டுட்டேன்.‌ இனி கட்டுறதா இல்ல. அத விடுங்க. அடுப்பு எரிக்கும் போது மத்த பொண்ணுங்க பொங்கல் வச்சத வேடிக்கை பார்த்தேன். அப்போ தான் எல்லாமே தெரிஞ்சுக்கிட்டேன்”

“இங்க நீ அதை எல்லாம் பண்ண வேணாம். போய் ஓரமா உட்கார்.. நாங்க பார்த்துக்குறோம்” என்று யுவன் அவளை துரத்தி விட்டான்.

“போ .. நான் இங்க தான் இருப்பேன்” என்று ஆராதனா அடம்பிடிக்க “புடி.. இந்த வெல்லத்த உடைச்சு பொடி பண்ணு. போ” என்று கொடுத்து அர்ச்சனா அனுப்பி வைத்தார்.

“நீ தின்னுடாத.. ” என்று யுவன் கூற அவனை முறைத்து விட்டு சென்று விட்டாள்.

பால் ஊற்றி பொங்க சில நிமிடங்கள் பிடிக்க எல்லோரும் எதையோ பேசிக் கொண்டு இருந்தனர்.

சங்கவி அவர்களுக்கு உதவி செய்ய போக மறுத்து விட்டனர். அவளும் ஒரு ஓரமாக அமர்ந்து விட்டாள். அமர்ந்து இருந்தவள் தூரமாக இருந்த ஆராதனாவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இது நாள் வரை ஆராதனா என்று ஒருத்தியை பற்றி யுவன் பேசியதே இல்லை. இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதே சங்கவிக்கு உறுத்தலாக இருந்தது.

சங்கவிக்கு இந்த வீட்டின் மருமகளாகும் ஆசை உண்டு. அது யுவனின் மீது காதல் என்று எல்லாம் இல்லை. இந்த வீட்டின் பண மதிப்பின் மீது இருக்கும் மோகம். யுவன் வீட்டின் ஒரே வாரிசு. பல கோடி சொத்துக்கு சொந்த காரன். அவனை திருமணம் செய்து கொண்டால் பல நன்மைகள் உண்டு. அதனால் இந்த வீட்டிற்கு யுவன் அழைக்கும் போது சந்தோசமாக வந்து விட்டாள்.

இந்த வீடு அவளது வருங்கால புகுந்த வீடாகும் வாய்ப்பு அதிகம் என்பதால் உடைகளை கூட பார்த்து பார்த்து தான் எடுத்து வைத்தாள். பொங்கலுக்கு புடவை தான் கட்ட வேண்டும் என்று இரண்டு புடவை எடுத்து வைத்தாள். அவளது அன்னை அவளுக்கு சில கலாச்சாரங்களை பழக்கி இருந்தார். அதனாலே புடவையை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.

அதை இங்கு பயன்படுத்தி பார்த்தாள். ஆனால் மொத்தமும் சொதப்பல் தான். அவளை நன்றாக தான் பார்த்துக் கொள்கிறார்கள் ஆனால் அவளை விட உரிமையாக வேறு ஒருத்தி பழகிக் கொண்டிருக்கிறாள்.

காலையில் குளித்து புடவையில் வந்து நின்ற சங்கவியை யாருமே பெரிதாக நினைக்கவில்லை. அர்ச்சனா மட்டும் புடவை நன்றாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் ஆராதனா வெறும் சுடிதாரில் அத்தனை பேரின் கவனத்தையும் திருப்புகிறாள்.

அவர்களும் இயல்பாக அவள் பக்கம் திரும்புகின்றனர். இதெல்லாம் விட யுவன் அவளை வாடி போடி என்று அழைப்பது தான் ஆச்சரியம். யுவனுக்கு பெண் தோழிகள் உண்டு. பெயரை சொல்லி தான் எல்லோரையும் அழைப்பான். ஆனால் ஆராதனா அதற்கு விதி விலக்காக இருக்கிறாள்.

அது தான் சங்கவிக்கு சற்று பயத்தை கிளப்பியது. இருவரும் அண்ணன் தங்கையாக இல்லாமல் எதிரிகளை போல் பழகுகிறார்கள். அதனால் இவர்களை பற்றி ஒரு முடிவுக்கு அவளால் வர முடியவில்லை. ஆராதனாவும் சங்கவியிடம் நன்றாக பேசவில்லை. பேசினாலாவது எதையாவது கேட்கலாம். அதற்கும் வழி இல்லாமல் குழம்பி விட்டாள்.

“என்ன அவளையே பார்த்துட்டு இருக்க?” என்று யுவன் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் “ஒன்னும் இல்ல உட்கார்” என்று அருகில் இருந்த இடத்தை காட்டினாள். அவனோ சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.

ஆராதனாவுடன் அவன் சாமி கும்பிடும் போது நின்றிருந்தது நியாபகம் வந்தது சங்கவிக்கு.

“எதுக்கு பார்த்த?”

“இது வரை இப்படி… அதாவது ஆராதனா பத்தி நீ எதுவுமே சொன்னது இல்லையே” என்று சங்கவி கேட்க யுவன் தோளை குலுக்கினான். பதில் சொல்ல விரும்பாத கேள்விக்கு யுவன் எப்போதும் தோள் குலுக்கலை தான் பதிலாக கொடுப்பான்.

“ஆராதனா ரொம்ப சின்ன பொண்ணு இல்ல‌… உன் தங்கச்சி மாதிரி…”

“தங்கச்சியா? இத அவ கிட்ட சொல்லிடாத. அடிச்சாலும் அடிச்சுடுவா.. அண்ட் எனக்கு இப்படி ஒரு தங்கச்சி எல்லாம் வேணாம்‌. அத்த மகளா இருக்கப்போவே சமாளிக்க முடியல. “

அவனது பதிலில் சங்கவிக்கு மேலும் கலக்கமாக இருந்தது. எங்கே இந்த சொத்துக்கள் எல்லாம் கனவாகி விடுமோ என்று.

“அப்புறம் அவள மட்டும் டீ னு சொல்லுறியே?”

“அது அப்படி தான். சின்ன வயசுல இருந்தே பழகிட்டோம்”

ஆராதனா வெல்லத்தை இடித்து விட்டு எடுத்துப்போக “மிச்சம் வைச்சியா? இல்ல மொத்தமா தின்னுட்டுயா” என்று கேட்டான்.

“எல்லாரையும் உன்ன மாதிரி பைத்தியம் னு நினைச்சியா?”

“இல்லடி. பட் நீ பைத்தியம் தான்”

“அய்ய ச்சீ பே”

“இருக்கா இல்லையா? அத சொல்லிட்டு போ”

“சாமி கும்பிடுற பொருள யாராவது எச்சி பண்ணுவாங்களா? மெண்டல்”

ஆராதனா திட்டி விட்டு சென்றுவிட யுவன் சிரித்துக் கொண்டான். அவனது இந்த முகம் உண்மையில் சங்கவியை ஆச்சரிய படுத்தியது. யுவன் அவர்கள் நட்பு வட்டாரத்தில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப் படுபவன். யாரும் அவனை ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள். ஆராதனாவோ வார்த்தைக்கு வார்த்தை அவனை அசிங்க படுத்த தயாராக இருந்தாள். யுவனும் அதை கொஞ்சமும் மனதில் எடுக்காமல் அவளை ரசித்து வைக்கிறான்.

சங்கவிக்கு மனதில் அலாரம் அடித்தது. இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

பால் பொங்கி விட அரிசி போட்டு பொங்கல் செய்தனர். ஆராதனா தனியாக அமர்ந்து போனை பார்த்துக் கொண்டிருக்க அவள் மடியில் கற்கண்டு பாக்கெட்டை போட்டான் யுவன்.

“ஐ…” என்று நிமிர்ந்தவள் “நீ இவ்வளவு நல்லவன் இல்லையே” என்று கேட்டாள்.

“மிச்சம் இருந்துச்சு. அதான் கொடுத்தேன்” என்று கூறி விட்டு அவன் சென்று விட ஆராதனை அவன் சொன்னதை‌ கண்டு கொள்ளாமல் கற்கண்டை சாப்பிட‌ ஆரம்பித்து விட்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்