Loading

ஆட்சியர் கனவு 51

மதிய வேளை அனைவரும் ஒன்றாக உணவு உண்டு கொண்டு இருக்க, அப்போது மகிழுந்துவில் இருந்து வந்தான் ஹரிஷ். திவி வந்த செய்தியைக் கேட்டு அலாதி மகிழ்வு அவனுள்.

ஆதி “வா ஹரிஷ்”

ஹரிஷ் “திவி, எப்படி இருக்க? என்னை மன்னிச்சிடு திவி. அவங்கள பத்தி கொஞ்சம் கூட தெரிஞ்சிக்காம உன்னை அவங்க கூட அனுப்பி பெரிய தப்பு பண்ணிட்டேன். எப்படி இருக்க? டெலிவரி அப்போ, நீ கூட இன்பார்ம் பண்ணல. எங்க உன் பொண்ணு?” என்று அடுக்காக கேள்விகளை கேட்டான்.

ஏனோ, உண்மை அறிந்தவர்களுக்கு அவனின் இந்த கேள்வி நெஞ்சில் வலியைத் தான் ஏற்படுத்தியது. ஆனால், திவியோ தன் முகத்தில் ஏதும் காட்டிக் கொள்ளாமல் ஆரெழிலை அவனிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

பெரியவர்களுக்கும் இவ்விசயம் அறியாமல் மற்றவர்கள் பார்த்துக் கொண்டனர். அனைவரும் இத்தனை வருடம் பகிராத பல விசயங்களை பேசிக்கொள்ள, நேரம் போனதே தெரியவில்லை.

ஹரிஷ் கிளம்பும் நேரம் தனியாக ஆதியிடம் பேசிக் கொண்டு இருந்தான்.  “ஆதி, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும்.”

“சொல்லு ஹரிஷ்.”

“அது, இன்னைக்கு சந்தனாவும் அவ அப்பாவும் பேசிக்கிட்ட ஒரு விசயம் நான் கேட்டேன்”

ஆதி அவனை ஆழ்ந்து நோக்க, ஹரிஷ் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “அவங்க மிகப் பெரிய இல்லீகல் விசயம் ஒன்னு பன்றாங்க. அது பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தாங்க. பல குழந்தைகளை கடத்தி வலுக்கட்டாயாம ரெட் லைட் ஏரியா தொழிலுக்கு ஈடுபடுத்துறாங்க. அதுல ஆண் பெண் வித்தியாசமே இல்லை. போதை மருந்து சப்ளை, அதுவும் தடைசெய்யப்பட்ட மருந்துகளை ஆல்ஓவர் நாட்டுக்கே தராங்க.

முக்கியமா இதை 2ல இருந்து 15 வயசு குழந்தைகளுக்கு தராங்க ஆதி. அது மட்டும் இல்ல இல்லீகலா என்னமோ ரிசர்ச் வேற பன்றாங்க. அதோட ரிசல்ட் என்னனு எனக்கு தெரியல. ஆனா கண்டிப்பா இது பெரிய ஆபத்து. அந்த ரிசர்ச் செய்றது யதுன்னு பேசிக்கிட்டாங்க. நான் யதுன்னு சொன்னதுமே திவின்னு நினச்சேன். அப்ரோம் தான் புரிஞ்சது அது திவியோட சிஸ்டர் யதுவர்ஷினி.”
அனைத்தையும் கேட்ட ஆதி அமைதியாக நின்றான்.

ஆனால், ஆதியைத் தேடி வந்த திவி இதனைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள். அவளால் இதை சத்தியமாக நம்ப முடியவில்லை. ‘எப்படி இது சாத்தியம்? என்னை சுற்றி என்ன நடக்கிறது? இறந்ததாக நினைத்த ஒவ்வொருவரும் உயிரோடு இருக்கிறார்களா? இதென்ன வாழ்க்கையின் இடியாப்ப சிக்கல்? முதலில் மீனா, தற்போது யது? அப்படி என்ன ஆராய்ச்சி? யது ஏன் இவர்களுடன் சேர்ந்தாள்?’ என்று பல வினாக்களுக்கு மத்தியில் தன்னிலை மறந்து அப்படியே அமர்ந்தாள் திவி.

தன் அன்னையை தேடி வந்த ஆரெழில் “ம்மா.. தூக்கம் வருதுமா” என்றபடியே அவளை அணைத்துக் கொண்டு அவள் மடியில் படுத்துவிட்டாள். தன் பெறாத மகளிற்கு தலைகோதியபடியே தனக்கும் யதுவிற்குமான பற்றுதலை எண்ணத் துவங்கினாள்.

சிறு வயது முதல் அவள் இறந்துவிட்டால் என்ற செய்தி செவிக்கு எட்டும் வரையிலும் எத்தனை ஆனந்த வாழ்வு இருவருக்கும். தற்போது நினைக்கையில் கூட மீண்டும் அவ்வாழ்வு வராதா என்ற ஏக்கமே உண்டானது. ஆனால், இந்த சூழ்நிலையில் அவள் உயிரோடு இருக்கிறாள் என்று மகிழ்வதா? அல்ல, செய்யக் கூடாத செயல்களை செய்யும் கூட்டத்தோடு இருக்கிறாளே என்று சினம் கொள்வதா? என அறியாமல் ஆரெழிலையே வெறித்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறக்கத்தை தழுவினாள்.

திவி வந்ததையும் அவள் அதிர்ந்ததையும் ஆதி பார்த்தான் தான். இதுவே அவளுக்கு பேரிடி, மேலும் தான் அறிந்த விசயத்தை கூறி அவளை நிலைகுலையச் செய்ய வேண்டாம் என்று எண்ணி, தன்னவளையும் தன் மகளையும் படுக்கையில் கிடத்திவிட்டு வெளியே புறப்பட்டான் ஆதி.

சந்தனா “கோகுல், திவி இப்போ ஆதிக்கூட தான் இருக்கா.” என்றாள் மதுவை ஒரு குடுவையில் ஊற்றி கோகுலுக்கு கொடுத்தவாறு.

கோகுல் “தெரியும் சனா. எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்களாம்” என்றான் சந்தனா நீட்டிய மதுக் குடுவைப் பெற்றவாறே.

“ம்ம்… ஆமா கோகுல். இப்ப நாம ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் டார்லிங்”

“நீ பயப்படாத சனா, அவங்க எல்லாத்தையும் கண்டே புடிச்சாலும் நமக்கு எதிரா எவிடன்ஸ் கலக்ட் பன்றது அவ்வளவு ஈசியான விசயம் இல்ல செல்லம்” என்றவன் அவள் மேனியில் தன் விரல்களை மீட்டினான்.

அவனுக்கு இசைந்தவாறே, “சரி உன்கிட்ட ஒன்னு ரொம்ப நாளா கேட்கணும்னு நினச்சேன், கேட்கவா?” அவன் மேல் சட்டை பொத்தான்களை கழட்டியவாறே அவள் மோகமாய் வினவ, மதுவும், மதுவில் அவள் கலந்த போதை மருந்தின் பயனாலும் அவளை தன்னுள் இறுக்கியவன்,

“கேளு சனா” என்றான்.

“என் மேல உனக்கு ஏதாவது கோபமா செல்லம்?”

“உன் மேல எதுக்கு டார்லிங் நான் கோவப்பட போறேன்?’

“இல்ல, பர்ஸ்ட் நான் ஆதிய லவ் பன்றேன்னு அவன கல்யாணம் செய்துக்க நினச்சேன். ஆனா, அந்த திவியால போச்சு. அப்ரோம் இந்த சொத்தை அடையனும்னு சக்தியை கல்யாணம் செய்துக்க பிளான் போட்டோம். கடைசில உன்னை கல்யாணம் செய்துகிட்டேன். நீயும் கட்டாயத்துல தான கல்யாணம் செய்துகிட்ட? என்னைப் பத்தி உன்னோட எண்ணம் என்ன?”

“நீ ஒன்னும் பெரிய தப்பு எதுவுமே செய்யல சனா. உன்னையும் சரி என்னையும் சரி இந்த குடும்பமே ஒதுக்கி தான் வச்சாங்க. யாரும் மதிக்கல தானே. சொந்தங்கள் இருந்தும் நாம அனாதை தான் சனா. நாம என்ன பெருசா தப்பு பண்ணோம். நமக்கு வேண்டிய சொத்தை வாங்கிட்டோம் அவ்வளவுதானே. கொலை, கொள்ளை பண்ணலயே. பணம், இந்த உலகத்துல பணம் இருக்குறவன் மட்டும் தான் சந்தோசமா வாழ முடியும் சனா. இதோ நீயும் நானும் இந்த நிமிசம் வரை சந்தோசமா தானே இருக்கோம். அவங்க தான் நம்மள வேண்டாம்னு தனியா போய்ட்டாங்க. விடு சனா. எனக்கு அப்பா அம்மா இல்ல. இருக்கிற சொந்தங்களும் அன்பா இல்ல. இப்போ பெரியப்பா நீ மட்டும் இல்லன்னா என் நிலைமை..? செத்துருப்பேன்டி.

உனக்கு, உன் அப்பா செய்த தப்பால எல்லாரும் என்னமோ நீ பெரிய வில்லி ரேஞ்சுக்கு பில்டப் தரானுங்க. கீதா அத்தைக்கூட உன்னை ஏத்துக்கல. ஏனா, நீ அவங்க பொண்ணு இல்ல.
உன்னை பெத்த செல்வி அத்தை கூட உன்னை ஏத்துக்கல. விடு சனா. நீ ஏன் இதுக்குலாம் பீல் பன்னிட்டு இருக்க. இந்த சூழ்நிலையும் ஒரு நாள் மாறும். உன்கூட நான் இருக்கேன் இருப்பேன். நாமளும் குடும்பமா வாழ்வோம்” என்று அவள் மேல் தன் காதலை வெளிப்படுத்தினான்.

ஆனால், அவளோ அவனை போதையிலும் காமத்திலும் திளைக்க வைத்து, அவன் பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு இருந்தாள் அவனறியாமல்.

சக்தி ரவீணாவை திருமணம் செய்த பிறகு, தான் இவ்வீட்டிற்கு மருமகளாக வேண்டும் என்ற ஒரே சிந்தனையே சந்தனாவை வெறி கொள்ள செய்ய, கீதாவிடம் பேசி கோகுலிற்கு மனைவியானாள் சந்தனா. தன் சகோதரியின் செயலை சுப்ரியாவால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

‘சொத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்யலாமா?’ என்ற எண்ணமே அவளை ஆட்டுவித்தது. என்று தன் அக்காவும் ஆதியை விரும்புகிறாள் என்று அறிந்தாலோ அன்றே தன் எண்ணத்தையும் புறம்தள்ளியவளால் சந்தனாவின் இத்தகைய செயலை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
அந்த எண்ணத்திலேயே உழன்றவளை மீட்டுக் கொண்டுவந்தது விஷ்ணுவின் காதல் தொல்லை தான். அவள் பின்னாடி சுற்றி, அவளிடம் பல வசவுகளை பெற்று இறுதியில் அவளுள் தனக்கான காதலை விதைத்தான்.

சந்தனா-கோகுல் திருமணத்திற்கு பிறகு கோகுல் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை கேட்க, அவனின் செயலில் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ ஆதியும் சக்தியும் தான்.

பாசம் வைத்த நெஞ்சு வலி தாங்காமால் கதறியது வெளியில் சொல்லாமல்.

சொத்தில் பங்கு பிரிக்க ஆரம்பிக்கும் பொழுதே சரவணப்பெருமாளும் தன் பிள்ளைகளுக்கும் பிரிக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தார். அதன்படி, சரவணப்பெருமாளின் சொத்துக்கள் மூன்று பங்காக பிரிக்கப்பட்டது. அவரின் வீடு, மருத்துவமனையும் பெருமாளிற்கும், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கன்ஸ்டிரக்ஸன் ஆதிக்கும், பள்ளி மற்றும் கல்லூரி தேவ்விற்கும் பிரித்து வழங்கப்பட்டது.

சரவணக்குமாரின் சொத்துக்களும் மூன்று பங்காக பிரிக்கப்பட்டது. ஆம், சரவணக்குமார் தான் இறப்பதற்கு சில மாதங்கள் முன்னரே தன் சொத்துக்களை மூன்று பங்காக பிரித்தார். அவரின் வீடும், கல்லூரியும் சக்திக்கு வழங்கப்பட்டது. அவரின் கன்ஸ்டிரக்ஸன் கம்பெனி, மருந்து தயாரிக்கும் நிறுவனம் இரண்டும் கோகுலிற்கு வழங்கப்பட்டது. தனக்கு கீழ் இயங்கி வரும் இரண்டு பள்ளிகளையும் ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் ஆதிக்கு வழங்கப்பட்டது.

சந்தனா கொடுத்த சாவியால் தன் பிறந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டான் ஆதி அதுவும் சரவணப்பெருமாளால். அனைத்தும் அறிந்த சிவஞானம் ஏதும் பேச இயலாத நிலையில் தன் பெயரனுடன் தானும் வெளியேறினார். கணவன் பேச்சை மீற முடியாமல் தெய்வானையும், அன்னையின் பாதுகாப்பிற்காக தேவ்வும் அவ்வீட்டில் இருந்தனர் என்பதை விட, இருக்க வைக்கப்பட்டனர் என்பது தான் உண்மை.

தன் அக்காவின் செயல்களை உடன் இருந்தே அறிந்துக்கொண்ட சுப்ரியா, அவளின் பல்வேறு ரகசியங்களையும் அறிந்துக் கொண்டாள். தன் இளங்கலை படிப்பை முடித்ததும், தன் அக்காவின் செயல்களின் தாக்கத்தால் வழக்குரைஞர் படிப்பை முடித்தாள். சந்தனாவிற்கு தெரியாமல் அவள் உடன் இருந்து ஆதிக்கு உதவி வருகிறாள். விஷ்ணுவின் கரம் பிடித்தாள். இது சந்தனாவிற்கு பிடிக்காமல் போக விஷ்ணுவையும் கொலை செய்ய முயற்சித்தாள், ஆதி இருக்கும் வரை அது ஈடேறவில்லை.

இந்த களேபரத்தில் செல்வி பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிந்திட வெகுவாக பாதிக்கப்பட்டது கீதா தான். அன்றிலிருந்து சந்தனாவை முற்றிலும் வெறுத்தார்.
அன்னை மடி தேடியவளுக்கு பெற்ற அன்னையும் மடி தரவில்லை, வளர்த்த அன்னையும் அரவணைக்கவில்லை. விரக்தியின் உச்சத்திற்கு சென்றவள் யாரையும் நம்பாமல் தான் போனாள் தான் கட்டியவனை முதற்கொண்டு.

இங்கு ஒவ்வொருவரின் தன்னல செயலுக்கும் பலியாவது என்னவோ மனதால் மெல்லியவர்களே. அவர்கள் தரும் ஏமாற்றமே மென்மையானவர்களையும் வன்மையாக மாற்றுகிறது. அப்படி அடியோடு தன் மென்மையை விட்டொழித்து தன் எண்ணங்களை மட்டுமே முதன்மையாகக் கொண்ட மனிதியாய் மாறிப் போனாள் சந்தனா. சந்தனாவை வெறுத்த கீதா தற்போது இருப்பது என்னவோ சுப்ரியாவுடன் தான். எந்த மருமகனை ஏற்றுக் கொள்ளாமல் ரணமான வார்த்தைகளால் கொன்றாரோ அதே மருமகனான விஷ்ணுவின் வீட்டில் தான் அடைக்கலம் புகுந்தார்.

கீதாவின் வெறுப்பு ஒருபக்கம் இருக்க, செல்வி ஏன் சந்தனாவை வெறுத்தார்?

இன்னிசைமதி நாசிக் வந்தபிறகு அவன் செய்த ஒரு காரியம்தான் செல்வி சந்தனாவை வெறுக்க காரணமாகியது. நாசிக் வந்த இசை, மீனாவை சந்தித்தவுடனும் அன்வர் பற்றி அறிந்த பிறகும் நிச்சயம் தன் அன்னைக்கு ஆபத்து நேரிடலாம் என்ற நோக்கில், செல்விக்கு அழைத்து அனைத்து விசயங்களையும் கூறியவன், சக்தியின் வீட்டில் இனி இருக்கும்படியும் கேட்டுக் கொண்டான். தானே தன் வளர்ப்பு மகனின் வாழ்வை அழிக்க முன் வந்ததை எண்ணி குறைபட்டுக் கொண்டவர், தன் மகளாகினும் சந்தனாவை முழுவதுமாக வெறுத்தார்.
தற்போது அவர் இருப்பதும் சக்தி ரவீணாவுடனே.

தன் தந்தையின் உத்தரவால் கோகுலின் கம்பெனிக்கு பகுதி நேர வேலைக்கு சேர்ந்தான் தேவ். நண்பன் என்ற பெயரில் ஹரிஷும் கோகுலுடனே தான் இருந்தான். கோகுலின் ஒவ்வொரு அசைவும் ஆதிக்கு தெரிந்துவிடும். கோகுல் ஒன்றும் முழுவதுமாக கெட்டவன் கிடையாது. அன்புக்கு ஏங்குபவன், யாரிடம் அதிகமாக கிடைக்கப்பெறுகிறதோ அவ்வழியே சிறந்தது என சென்று விட்டான். ஆனால் அந்த அன்பு போலி அரிதாரம் பூசி இருப்பதை அவன் அறியவில்லை.

பாரதியும் பவியும் தத்தமது படிப்பை முடித்து ஆதிக்கு துணையாக அவன் அலுவலகத்தை கண்கானித்துக் கொண்டனர் அவனின் விருப்பத்தின் பெயரில். திவி வீட்டை விட்டு சென்ற அடுத்த வாரமே அவள் எங்கிருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டான் ஆதி. கவனம் முழுவதும் அவள் மேல் தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவனோ, அலுவலக பணியை சக்தி ரவீணா தலைமையில் கொடுத்துவிட்டு பாரதி, பவியையும் உதவும்படி கேட்டுக் கொண்டான்.

பாரதிக்கு தேவ் மேல் அதீத கோபம், தன் அக்கா வீட்டை விட்டு சென்றதற்கு அவனும் ஓர் காரணம், மேலும், காதல் என்ற பெயரில் சந்தேகப் பார்வையும் அவளை தொட்டு சென்றதில் பெண்ணவள் தகித்துப் போனாள்.

கோகுல் தான் சந்தனாவின் சொல் கேட்டு, பாரதி கார்த்திக் என்பவனை காதலிப்பதாகவும், அது திவிக்கும் தெரியும் என்பதையும் திவி உன் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டாள். உன் பங்கு சொத்தை வாங்க மட்டுமே தேன் வார்த்தை பேசுகிறாள் என்றும் அவன் அன்று கூறிச் சென்றது தான், தேவ் திவியிடம் அப்படி பேசக் காரணம்.

இவ்வாறே நாட்கள் செல்ல, ரவீணா கருவுற்று மொழியனை ஈன்றெடுத்தாள். அனைவரையும் ஒன்று சேர்க்க, மொழியன் என்ற மழலை உறுதுணையாக இருந்தான். ஒருவர்க்கொருவர் முகம் கொடுத்து பேசவில்லை எனினும், முகத்தை காணும் சூழலையாவது இவன் உருவாக்கினான் என்பதை விட, இவனை காரணங்கொண்டு தனக்கு ஏற்றது போல் சூழ்நிலைகள் மற்ற அனைவராலும் உருவாக்கப்பட்டது.

ஆதி தன் தனிமையை போக்கிக் கொள்ள, அதிக நேரம் மொழியனிடமே செலவழித்தான். அவனுக்கு தன்னவள் இல்லாமல் போனது உயிரை பிரிந்த வலியை கொடுத்தது. தன் உயிரானவளின் உதரத்தில் தன் உயிர் கலைந்ததை நேரில் கண்டவன் மரண விளிம்பிற்கு சென்றதோர் வலியினை அனுபவித்தான்.

ஆதியின் யதுவின் ஒவ்வொரு அசைவும் அவன் அறிந்ததே. அவளின் தனிமையில் இவனும் வேகுவான். அவளின் சினத்தில் இவனும் எரிவான். அவளின் அழுகையில் இவனும் கரைவான்.
அவன் அறிந்திராத திவியின் பல முகங்களையும் தனக்கும் தன்னவளுக்கும் பின்னப்பட்ட சதி வலையையும் நாசிக் என்ற இடத்தில் தான் கண்டுகொண்டான்.

மேலும் சந்தனா மற்றும் அன்வரின் பல செயல்களையும் இவன் அறிந்து அதற்கான வேலைகளை தொடங்க நான்கு வருடங்கள் தேவைப்பட்டு விட்டது.

இந்நான்கு வருடங்களில் அனைவர் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இவைகள்.

அடுத்த நாள் பொழுது புலர, அழையா விருந்தாளியாக வந்தது நேற்று ஹரிஷ் கூறிச் சென்ற அனைத்தும். படுக்கையில் இருந்து எழுந்தவள் அதே எண்ணக்கலவையுடன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள்.
வெகுநேரம் அதையே யோசித்துக் கொண்டிருந்தவள் நேரம் கடந்தும் தன் நிலையை மாற்றாது அமர்ந்திருந்தாள்.

ஆரெழிலும் தூக்கம் கலைந்து தன் அன்னையை கழுத்தோடு கட்டியணைக்க, அப்போது தான் சுயநினைவு மீண்டாள் திவி.
ஆரா “ஆதி பேபி எங்க யது மா காணோம்?” என்றபடி படுக்கையிலிருந்து குதிக்க, அவளை பிடித்து இறக்கிவிட்டவள் அப்போது தான் அதனையே உணர்ந்தாள். தான் எழுந்ததிலிருந்து அவனை காணவில்லை. உடனே அவன் எண்ணிற்கு அழைக்க அதுவோ அறைக்குள்ளேயே ஒலித்து அடங்கியது.

ஆரெழிலுடன் கீழே வந்தவள் தெய்வானையிடம் கேட்க அவரோ “இப்படி தான் திவி மா ஆஊனா எங்கயாவது போய்டுவான். எப்போ போவான் எப்போ வருவான்னு யாருக்கும் தெரியாது. ரெண்டு நாள் மூணு நாள் கழிச்சு வருவான். சில நேரம் ஒரு வாரம் ஆகிடும். நீ வந்ததும் மறுபடியும் எங்கேயோ போய்ட்டான்” என்று புலம்பியவாறே அடுக்களைக்குள் சென்றார்.

அவர் பின்னாடியே ஆரெழிலும் போய்விட,
யோசனையுடனேயே அங்கு கிடத்தப்பட்ட சோபாவில் அமர்ந்தாள்.
சரியாக சக்தி அந்நேரம் வெளியே வர, எப்படியும் சக்திக்கு தெரிந்து இருக்கும் என சக்தியிடம் கேட்டாள்.
“தெரியல திவி. அவன நேத்து நைட் சாப்பிடுறப்போ பாத்தது தான். அதுக்கு அப்ரோம் பாக்கல” என்றிட, தூக்கத்தில் பேந்த பேந்த விழித்தவாறே வந்த மொழியன் நேரே திவியின் மடியில் மீண்டும் படுத்துக் கொண்டான்.

ரவீணா அவனை எழுப்ப முயல,
“விடு ரவீ, பையன் தூங்கட்டும்”

“திவி, அவனை பத்தி உனக்கு தெரியாது. சரியான கும்பகர்ணன். அவன் தூங்கிட்டா எழுப்பவே முடியாது. அவனுக்கு செல்லம் கொடுக்காத” என்று மீண்டும் மொழியனை எழுப்ப, படுத்த சற்று நேரத்தில் அப்படி ஒரு தூக்கம் அவனுக்கு.

தனக்கும் தன் நண்பன் கவினுக்கும் பாலை எடுத்து வந்த எழில் நேரே சென்றது கவினை எழுப்பி விடத்தான். இது அங்கிருந்தே பழகிய ஒன்று. காலையில் எழும் மீனா, எழிலுக்கும் கவினிற்கும் சேர்த்தே பாலை ஆராவிடம் கொடுத்து அனுப்பி விட, கவினுக்கு காலை விடியல் ஆராவின் முகத்தில் தான்.

கவினை எழுப்பி விட்டு அவனிடம் பாலை கொடுத்து விட்டு, இசையின் காதில் கத்தி விட்டு ஓடி வந்து விட்டாள் சேட்டைக்காரி.

திவி “எழில்மா எத்தனை தடவ சொல்லி இருக்கேன். இசை மாமா கிட்ட இப்படி விளையாடாதன்னு. தூங்குறப்போ அப்படி பண்ணக்கூடாது தானே.” என்றிட,

தெய்வானை “விடு திவி. குழந்தை இனிமே அப்படி பண்ண மாட்டா. ஆமா தானே எழில்?” என்றதும் தன் தலையை வேகமாக ஆட்டினாள்.

அனைவரும் எழுந்து விட, மொழியன் கடினப்பட்டு தன் கண்களை திறந்தான். திறந்தவன் முதலில் தேடியது ஆதியைத் தான். “சித்தி, சித்தப்பா எங்க?”

“அதையே தான் நானும் எல்லார்கிட்டயும் கேட்டுட்டு இருக்கேன். எங்கடா உன் சித்தப்பா?” என்றாள் இவளும் சலித்தாவறே.

“வந்துடுவாறு சித்தி. ரெண்டு நாள்ல. என்கிட்ட சொல்லிட்டு தான் போனார்” என்றிட,

அனைவரும் அவனை ஆச்சர்யமாய் பார்த்தனர்.

“என்ன உன்கிட்ட சொல்லிட்டுப் போனானா? அவ்ளோ பெரிய ஆளாடா நீ?”

“ஆமா சித்தி. நான் தான இந்த வீட்டுக்கு பெரிய பையன். நான் தான எல்லாரையும் பாத்துக்கணும். நேத்து நீங்க ஸ்டெப்ஸ்லயே தூங்கிட்டிங்க, ஆராவ மடியில போட்டுக்கிட்டு. சித்தப்பா தான் உங்க ரெண்டு பேரையும் தூக்கிட்டு ரூம்க்கு போனார். அப்ரோம் வேகமா எங்கயோ போனார். எங்க போறீங்கன்னு கேட்டேன். ‘சித்தப்பா ஒரு முக்கியமான விசயமா வெளிய போறேன். ரெண்டு நாள்ல வந்துடுவேன். அதுவரை சித்தியையும் ஆராவையும் பத்திரமா பாத்துக்கோ’ன்னு சொல்லிட்டுப் போனார் சித்தி. உங்கள நான் நல்லா பாத்துப்பேன்” என்றான் தன் பிஞ்சு மொழியில். அனைவரும் அவனின் சொல்லில் புன்னகைக்க, திவியோ அவன் எங்கு சென்றிருப்பான் என்ற யோசனையில் ஆழ்ந்தாள்.

கனவு தொடரும்.🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்