Loading

ஆட்சியர் கனவு 11 💞

செய்த சிறு தவறு

செதுக்கிச் சென்றது

வாழ்வில் வடுக்களை..!

உன்னை எண்ணிக்

கழிக்கிறேன்

எண்ண அலைகளை

ஏகாந்தாமாய்!

தவறை சரி செய்து

பிழையைத் திருத்தமாக்க

காத்திருப்பு கள்(ண)வனே!..

 

ஆதியும் சரவணனும் மகிழுந்தில் பேசிக்கொண்டே வந்தனர்..

 

ஆதி “உங்க வீட்ல யார் யார் இருப்பாங்க.?”

 

சரவணன் “உனக்கு ஒரு நல்ல நண்பன் இருக்கான். ஒரு குட்டி தம்பி இருக்கான். அப்ரோம் எங்க வீட்டு மகா ராணி இருக்காங்க..”

 

ஆதி “ஓ.ஓ.ஓ… அவங்க பேர் என்ன.?”

 

சரவணன் “வீட்டு மகா ராணி பேரே ராணி தான். என்னோட முதல் பையன் பேர் சக்திவேல். குட்டி தம்பி பேர் கோகுல் தரண். உங்க வீட்ல யார் யார் இருக்காங்க.?”

 

அது வரை புன்னகை பூத்த முகம் உடனே வாட்டமாய் மாறியது. அதை கண்ட சரவணன் “சரி விடு ஆதி. உனக்கு எப்போ சொல்ல தோணுதோ அப்போ சொல்லு அது வரை நான் கேட்க மாட்டேன். சாப்பாடுலாம் எப்டி இருந்தது ஆதி.?”

 

ஆதி “ம்ம், நல்லா இருந்துச்சி சரவணன். எனக்கு தூக்கமா வருது.”சரவணன் “ம்ம் சரி. தூங்கு வீடு வந்த உடனே எழுப்பி விடுறேன்.”

 

ஆதி அமைதியாக புன்னகையோடு கார் சீட்டில் சாய்ந்து உறங்கினான். உறங்கும் போதும் புன்னகை மாறாது இருக்கும் அந்த குழந்தையின் முகத்தை பார்க்க சலிக்கவில்லை சரவணனிற்கு… அந்த முகத்தில் ஒரு வித பயம், வருத்தம், பிரிவு. எங்கோ பார்த்து பழகிய முகம் போல் உணர்வு சரவணனிற்குத் தோன்ற மனது அவனை விட்டுப் பிரிய எண்ணவில்லை.

 

சரவணனிற்கோ ஆதியை பிரியக் கூடாது என்ற எண்ணமும் மறுபுறம் எதையோ ஒன்றை இழக்க போகிறோம் என்ற உணர்வும் தோன்ற பல்வேறு குழப்பத்துடன் தன் மாளிகையை அடைந்தனர் இருவரும்.

 

வீட்டை அடைந்த சரவணனின் மனதில் ஏதோ ஒன்றை இழந்து விட்டதாய் தோன்ற மனது நிலை இல்லாமல் துடித்துக்கொண்டு இருந்தது. மகிழுந்தின் கதவை திறந்து உறங்கும் ஆதியைத் தூக்கி கொண்டு வீட்டினுள் நுழைந்த சரவணனை வரவேற்கும் விதமாக அவரின் காதல் மனைவி மற்றும் முதல் மகனின் சடலங்களே  இருந்தது.

 

நெஞ்சைக் கத்தியால் குத்தி கீறியதை போல் மனம் ரணமாய் வலிக்க, கண் முன் பார்த்தவற்றை உணரவே சரவணனிற்கு பல நிமிடங்கள் தேவைப்பட்டது.

 

சரவணனின் கையில் இருந்த ஆதி “ராணிணிணி… ” என்ற சத்தத்தில் திடுக்கிட்டுக் கண் விழித்தான்.

 

அங்கு இருந்த காவலர்கள் சாலை விபத்தில் இருவரின் உயிரும் உடனே பிரிந்து விட்டது என்றும் ஒரு அதிவேக லாரியால் விபத்து ஏற்பட்டது, சரவணனின் அலைபேசி எடுக்காத காரணத்தினால் வீட்டில் உள்ள வேலையாட்களுக்கு தகவல் அளித்ததாகவும் கூறினர்.

 

அனைத்தையும் கேட்டு விட்டு, ஆதியை இறக்கி விட்டு மனைவி மகன் அருகில் சென்ற சரவணன் “ராணி.. எழுந்திரு டி.. எங்க டி போய்ட்ட.? என்ன விட்டு எங்க டி போன.? நான் வந்துடுறேன்னு சொன்னேன்ல டி.. அதுக்குள்ள எப்டிடி நீ என்ன விட்டு போகலாம்.? வாழ்வோ சாவோ ஒண்ணா தான இருப்போம்னு சத்தியம் செஞ்சொம்.? இப்போ என்ன மட்டும் விட்டுட்டு நீ எங்கே டி போன.? 

 

டேய், சக்தி எந்திரிடா. அப்பா வந்து இருக்கேன் டா. உனக்கு பிரண்ட்டே இல்லன்னு சொன்னியே. உனக்காக இங்க இப்போ ஒரு பிரண்ட் இருக்கான் பாரு டா.. கண்ணை தொற டா.. அப்பா விட்டுட்டு அம்மாவும் மகனும் போய்ட்டீங்கள? போ அப்பா உன்கிட்டேயும் அம்மா கிட்டயும் டூ.. பேச மாட்டேன்.. ” என்று கண்ணீர் வழிந்த படி ஒரு பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டார், மீண்டும் சரவணன் ” டேய்.. அப்பா சும்மா சொன்னேன் டா.. அம்மாவும் நீயும் திரும்ப வந்துடுங்க டா..” என்று கத்தி கண்ணீர் விட்ட சரவணனை சமாதானபடுத்த அங்கு யாருக்கும் தைரியம் இல்லை.

 

ஆதிக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டு இருந்தவன், சரவணன் அருகில் சென்று “சரவணா, அழாத்தீங்க!அவங்க சாமி கிட்ட தான் போய் இருக்காங்க. நம்மள விட்டு போகல. எப்போவும் நம்ம கூட தான் இருப்பாங்க.. எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அழுது ஒரு பிரயோஜனமும் இல்ல. அடுத்து செய்ய வேண்டியத செய்யணும்னு. என்று விம்மிய படி கோகுல் எங்க.?” என்று கேட்ட ஆதியை அணைத்துக் கொண்டு சிறு பிள்ளை போல் அழுதார் சரவணன்.

 

அங்கு பணி புரியும் வேலைக்காரர்கள் “ஐயா, இந்த தம்பி தெரிஞ்சு சொல்றனோ இல்ல தெரியாம சொல்றனோ தெரியல. ஆனா அவன் சொல்றதும் சரி தான் அம்மாக்கும் சின்ன ஐயாக்கும் செய்ய வேண்டியதை செய்ங்க. கோகுல் தம்பி அவங்க ரூம்ல தூங்கி கிட்டு இருக்காங்க.. அவரை நான் எழுப்பி கூட்டிட்டு வரேன் ஐயா” என்று விட்டு சென்றார்.

 

சரவணன் “இருங்க, நானே போய் அவன கூட்டிட்டு வரேன். நீங்க அடுத்து நடக்க வேண்டியதை பாருங்க. ஆதி வா.” என்று கூறி விட்டு மூன்று வயது மகனை காண சென்றார் சரவணன். ஆதியும் சரவணனும் அங்கு செல்ல, ஹாலில் அவர்களின் சடலத்திற்கு நடக்க வேண்டிய கடமைகளை முத்தையா என்பவர் செய்து கொண்டு இருந்தார்.

 

ஆதியும் சரவணனும் கோகுலை எழுப்பி கொண்டு வர, எதுவும் அறியாத அந்த பிஞ்சு மனமோ தன் அன்னையை நாடியது. ஆதியால் எதுவும் புரிந்துகொள்ள முடியாமல் போக,  சரவணன் கூறியதை மறுக்காமல் செய்தான்.

 

சடங்குகள் அனைத்தையும் கடமையென  சரவணன் செய்து முடிக்க அனைத்திற்கும் முத்தையா உதவியாக இருந்தார்.  கோகுல் உணவு உண்ணாமல் “அம்மா அம்மா” என்று அழுது கொண்டே இருக்க, சரவணனால் ஏதும் செய்ய இயலவில்லை. இப்படியே ஒரு வாரம் கடந்து விட,

 

ஆதி “இங்க பாரு, அழ கூடாது. அம்மாவும் அண்ணாவும் எங்கயும் போல.  நம்ம கூட தான் எப்பவும் இருக்காங்க. நாம தினமும் சாமி கும்பிடுவோம்ல அப்போ சாமி நமக்கே தெரியாம நம்மள பாத்துக்குவாங்க. அப்டி தான் இனிமே அண்ணாவும் சக்தியும் நம்மள பாத்துக்குவாங்க. நாமா நெறய நல்லது பண்ணி சமத்தா இருந்தா நாமலும் கொஞ்ச நாள் கழிச்சு அவங்கள பாக்கலாம்.”

 

கோகுல் “அப்போ, நான் அம்மாவ பாப்பேனா..? அம்மா மதில(மடில) பத்துக்குவேணா.(படுத்துக்குவேணா).? அம்மா எனக்கு கதை சொல்லுவாங்களா.? தத்தி(சக்தி) அண்ணா என்கூட விதையாதுவாங்களா.(விழையாடுவாங்களா)?”

 

ஆதி “அப்டி தான் நினைக்குறேன்.. ஆனா நீ சாப்டு நல்ல பையனா இருப்பியா.?”

 

கோகுல் “ம்ம்ம் நான் நல்ல தமத்து பையனா இருப்பேன்” என்று விட்டு ஊட்டிவிடும்படி வாயை திறந்தான்.

 

ஆதி”ம்ம் குட் கோகுல்”

 

ஆறு வயதிலேயே தாயாய் மாறிய ஆதியை பார்த்து சரவணன் வியந்து தான் போனார். ‘இந்த வயதில் எப்டி இவ்வளவு பெரிய வார்த்தைகள் பேசுகிறான். என்னாலேயே இவன் கூறும் பல விஷயங்களைக் கேட்கும் போது மனது அமைதி அடைகிறது’ என வியந்து தான் போனார். கோகுலை உறங்க வைத்து விட்டு சரவணனை காண வந்தான் ஆதி.

 

ஆதி “சரவணன், சாப்டிங்களா.? கோகுல் சாப்டு தூங்கிட்டான். நானும் சாப்ட்டு தூங்குறேன்.” என்று ஆதி செல்ல,

 

சரவணன் “ஆதி..”

 

ஆதி “ம்ம்ம் சொல்லுங்க, சரவணன்”

 

சரவணன் “இதுலாம் எங்க கத்துக்கிட்ட.? உனக்கு இப்டி பேச யார் கத்து குடுத்தா.?”

 

ஆதி “என் அப்பா அம்மா தான். நான் சின்ன வயசா இருக்கும்போது பாட்டிய இப்டி தான் பாத்தேன். ரொம்ப நேரம் அழுதேனா, அப்போ தான் அம்மா சொன்னாங்க அவங்க சாமிக்கிட்ட போய்ட்டாங்கன்னு. ரொம்ப நல்லது பண்றவங்கள தான் சாமி சீக்கிரம் வர சொல்லுவாங்களாம். அப்ரோம் அவங்க நம்மள பாத்துகிட்டே தான் இருப்பாங்கலாம். நாம தப்பு பண்ண கூடாதுன்னு கூடவே இருந்து கண்ணும் கருத்துமா பாத்துக்குவாங்கலாம். நானும் நல்ல பையனா இருந்தா பாட்டிய பாக்கலாம்னு அம்மாவும் அப்பாவும் சொல்லுவாங்க.!” என்றான்.

 

சரவணனிற்கு ஏதோ தோன்ற “உன் அப்பா அம்மா பேர் என்ன..?”

 

ஆதி மௌனமாகி விட, சரவணன் “ப்ளீஸ் சொல்லு ஆதி. அவங்களும் உன்ன காணாம பயந்து போய் இருப்பாங்கள்ள.? நீ நல்ல பையன் தான, அப்பா அம்மாவ கஷ்டப்படுத்த கூடாதுல.?” அவர்களின் நிலையை எண்ணி சரவணன் கேட்டார்.

 

ஆதி “சொல்றேன். ஆனா அங்க நான் போக மாட்டேன். என்னையும் நீங்க போக சொல்ல கூடாது, சரியா.?”

 

சரவணன் “ம்ம்.. சரி.. நீ சொல்லு.. நான் உன்னை எங்கயும் போக சொல்ல மாட்டேன்”

 

ஆதி “அப்பா பேர்….  சரவணப்பெருமாள். அம்மா பேர் தெய்வானை” என்றான் குனிந்த படி.

 

அந்த பெயரின் தாக்கத்தை உணர்ந்து சரவணன் “தாத்தா பேர் சிவஞானம் பாட்டி பேர் உமையம்மாள் தான.?”

 

ஆதி.”ம்ம்ம் ஆமா.. அவங்கள உங்களுக்கு தெரியுமா.? என்ன அங்க கூட்டிட்டு போய்டுவீங்களா.? நான் தப்பு பண்ணிட்டேன். அங்க போனா என்ன அடிப்பாங்க. நான் அங்க போக மாட்டேன்” என்றான் அழுதுகொண்டே.

 

சரவணன் “ஆதி.. ஆதி.. அழாத டா என் செல்லம்.. நீ எந்த தப்பும் பண்ணல டா..”

 

ஆதி “இல்ல… அவள நான்…. தள்ளி விட்டுட்டேன்… மூஞ்சு புல்லா ரத்தம்… அங்க இருந்த பசங்கலாம் என்ன அம்மா அடிப்பாங்கன்னு சொன்னாங்க. போலீஸ்லலாம் சொல்லுவாங்கலாம். எனக்கு பயமா இருக்கு. நான் இங்கேயே இருக்கேன்.” என்று தேம்பிக் கொண்டேக் கூறினான்.

 

சரவணனிற்கு ஒன்றும் புரியாமல் “சரி சரி ஆதி, அழாத. நான் உன்கிட்ட சில கேள்வி கேட்பேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு என்ன.?”

 

ஆதி “ம்ம்ம்.” என்றான் விம்மி கொண்டே.

 

சரவணன் “உங்க அப்பா கூட பொறந்தவங்க யாராவது இருக்காங்கலா.?”

 

ஆதி “ம்ம் அப்பாக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க. சிறிது யோசித்தவன், ஹான்.. தம்பி கூட இருக்காங்களாம், ஆனா நான் தான் பாத்ததே இல்ல. நான் பிறக்கும் போது அவங்க ஓடி போய்ட்டதா தாத்தா சொல்லுவார். அவங்கள பத்தி யாராவது பேசுனா தாத்தா திட்டுவாரு. அம்மா கூட சொல்லுவாங்க உன் சித்தப்பா இருந்தா உன்கூட விளையாட ரெண்டு பேர் இருப்பாங்கன்னு. ஆனா நான் தான் அவர பாத்ததே இல்ல.” என்றான் உதட்டை பிதுக்கியபடி.

 

சரவணன் முகத்தில் துக்கத்தையும் மீறி ஒரு மகிழ்ச்சி மேலிட, “உன்..உன். அப்பா எதாவது சொல்லுவாரா.? உன் சித்தப்பாவை பத்தி.?”

 

ஆதி “ப்ச்.. என்கிட்ட சொல்ல மாட்டாரு.. ஆனா அம்மா கிட்டயம் அவ கிட்டயும் சொல்லுவாரு.” என்றான்..

 

சரவணன் “அவளா..? யார் அது.?”

 

ஆதி “அவ அவ தான்.. அவ பொறந்ததுல இருந்து என்ன யாருமே கண்டுக்க மாட்டாங்க. அதனால அவ பேர் எனக்கு தெரியாது.. அவள நான் குட்டச்சின்னு தான் சொல்லுவேன். அதனால தான் எனக்கும் அவளுக்கும் சண்டையே வரும். நான் சாக்லேட் கேட்டா அப்பா வாங்கி தர மாட்டாரு. அதுவே அந்த குட்டச்சி கேட்டா வாங்கி தருவாரு. ஆனா, அத்தை எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. அன்னைக்கும் அப்டி தான் நான் ஐஸ் கேட்டேன் வாங்கி தரவே இல்ல. அவளுக்கு மட்டும் வாங்கி தந்தாங்க. அதான் அவள தள்ளி விட்டேன். அப்போ… அப்போ… அவ அவ முகம் முழுக்க எவ்ளோ ரத்தம்.” என்று பயந்துக் கொண்டேக் கூறினான்.

 

சரவணன் அவன் கூறியதில் இருந்து அனைத்தையும் யூகித்து புரிந்து கொண்டார்.  அவனை சமாதானம் செய்து உறங்க வைத்தார். தன் ரத்தபந்தம் தன் அருகே இருப்பதை மனம் மகிழ்ந்தாலும் அதை அனுபவிக்க அன்புக்குரிய மனைவி, மகன் இல்லயே என்று மனம் கனக்க தான் செய்தது.

 

‘ராணி, பாத்தியா? இவன் என் அண்ணா பையன் தான். ஆதி.. நாம வீட்டை விட்டு வரப்போ பிறந்த குழந்தை. இப்போ எப்டி இருக்கான் பாரு.? அப்டியே அண்ணிய உரிச்சு வச்சி இருக்கான். அப்ரோம் அக்காக்கு கூட குழந்தை பிறந்து இருக்கு. பெண் குழந்தை போல. நம்ம பையன் அவள தள்ளி விட்டுட்டு ஏதோ கொலை பண்ணதா பயப்படுறான். ஆனா அவளுக்கு ஒன்னும் இல்ல.. நீயும் இருந்தா நல்லா இருந்து இருக்கும்ல. இப்டி சொல்லாம போய்ட்டியே ராணி.’ என்று மனதிற்குள் குமுறிக்கொண்டு இருந்தார்..

 

பத்து வருடங்களுக்கு பிறகு….

 

ஆதி “டேய், சொன்னா கேளு. நான் ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்தா நான் சொல்ற ஸ்கூல்ல தான் படிக்குறேன்னு நீ சொன்னல, மறந்துட்டியா.? தப்பு டா தம்பி.”

 

கோகுல் “நீ ஹால்ப் இயர்லி வரை மார்கே ஒழுங்கா வாங்கல. அந்த தைரியதுல பெட் கட்டினேன். இப்டி நீ பாட்டுக்கு பர்ஸ்ட் வந்தா நான் என்ன பண்றது.? முடியாது போண்ணா.!”

 

ஆதி சிரித்துவிட்டு “ஹாஹாஹா… பெட்னு வந்துட்டா ஆதி பொல்லாதவன்டா. சரவணாப்பா, பாருங்க ப்பா. இவன் நான் சொல்றதே கேட்க மாட்டிங்குறான்.”

 

கோகுல் “அப்பா, அந்த ஸ்கூல் எனக்கு புடிக்கல தான். அதான் வேற ஸ்கூல்ல சேரலாம்னு நீங்க சொன்னப்போ ஒத்துகிட்டேன். ஆனா, ஆதிண்ணா கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்க சொல்றாங்க ப்பா.. வேணாம் ப்பா. ப்ளீஸ் ப்பா.!”

 

ஆதி “டேய்! இது போங்கு போ டா. நானும் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல தான் படிச்சேன். இப்போ ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கல.? அந்த ஸ்கூல் உன்ன என்னடா பண்ணுச்சு.? ஏன் அந்த ஸ்கூல்ல படிக்குற பொண்ணுங்கலாம் அழகா இருக்க மாட்டாங்களா.?” என்று புருவம் உயர்த்தி கேட்க, கோகுல் திருதிருவென முழித்தான்.

 

சரவணன் “டேய் என்ன பேச்சுடா பேசுறீங்க..? அப்பா முன்னாடி பேசுற பேச்ச பாரு.?” என்று செல்லமாய் ஆதி முதுகில் ஒன்று வைக்க,

 

ஆதி “சரவணாப்பா, இவன் ஏன் அந்த ஸ்கூல்ல படிக்க மாட்டேன்னு சொன்னானு நீங்க கேட்டீங்களா.?”

 

சரவணன் “ஒழுங்கா சொல்லி தர மாட்டிங்குறாங்க, புட் சரி இல்லன்னு சொன்னா.”

 

ஆதி “அதான் இல்ல…” கோகுல் சொல்ல வேண்டாம் என்று கை அசைக்க, இதை எல்லாம் கருத்தில் கொண்டால் அவன் ஆதி இல்லயே.!

 

சரவணன் “வேற என்ன?”

 

ஆதி “நம்ம பய 6ஆவது படிக்குற பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்து இருக்கான். அந்த பொண்ணு அண்ணான்னு கூப்பிட்டது மட்டும் இல்லாம, எல்லாரையும் அண்ணான்னு கூப்பிட சொல்லிடுச்சாம்.. அதான் வேற ஸ்கூல்க்கு போறேன்னு சார் சொல்றாரு” என்று மாட்டி விட,

 

சரவணன் “அட பாவி… என்ன வயசாகுதுனு நீ இப்டிலாம் பண்ற.?”

 

கோகுல் “அப்பா காதலுக்கு வயசு இல்லப்பா. உங்களுக்கு தெரியாதா..”

 

சரவணன் “இதுவே நீ உன் அம்மா முன்னாடி பேசி இருந்தா செத்த டா மவனே..”

 

கோகுல் “இப்போ மட்டும் என்னவாம். ஆதி அண்ணா கிட்ட சொன்னப்போ எவ்ளோ அடி தெரியுமா.? ஒரு நாள் முழுக்க என்கூட பேசல. நான் இனிமே இப்டி பண்ண மாட்டேன்னு சொன்னப்போ கூட நம்பல. அம்மா கிட்ட சொல்லி சத்தியம் பண்ணவாட்டி தான் பேசினாங்க” என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.

 

சரவணன் தன் வளர்ப்பை விட ஆதியின் வளர்ப்பு எண்ணி பெருமை கொண்டார். பத்து வருடங்களாக தானும் கற்று, அவனையும் வளர்த்து வரும் ஆதியை எண்ணி பூரிப்பே எழுந்தது அவருள். தன் குடும்பத்துடன் சேரும் நாளை எண்ணி காத்து கொண்டு இருக்கிறார் சரவணன்.

 

ஆதியை நல்ல மகனாக வளர்த்து ஒரு நல்ல நிலையில் தன் குடும்பத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். தன்னை பற்றிய உண்மையைக் கூட இன்னும் ஆதியிடம் அவர் கூறவில்லை.

 

கூறிக்கொண்டே ஆதி திவியின் முகத்தை ஏறிட அம்முகத்தில் பல வித எண்ணங்கள் ஓடுவதை அறிய முடிந்த அவனால் என்ன எண்ணம் என்று சரியாகக் கணிக்க இயலவில்லை.

 

ஆதி “யது…”

 

திவி “ஹான். அப்ரோம் என்ன ஆச்சு.?”

 

ஆதி “ஹாஹா.. அப்ரோம் என்ன கோகுல கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல தான் சேர்த்தாரு. அன்னைக்கு அவன் ஸ்கூல்ல போட்டி. அன்னைக்கு தான் நான் என் யதுவ பாத்தேன். இப்போ அவ மடில படுத்திட்டு இருக்கேன்.” என்றான் கண் சிமிட்டியபடி.

 

திவி “அப்ரோம் என்ன ஆச்சு..? சரவணன் அப்பா எங்க.? கோகுல் எங்க.?” என்று சீரியசாக கேட்டாள்.

 

ஆதியின் முகம் வலியில் மாற, “அன்னைக்கு நான் மயங்கி விழுந்த பிறகு, என்ன ஹாஸ்பிட்டல்ல சேத்தாங்க. என்ன பிரச்சனைனு  சரவணாப்பா கிட்ட சொல்லி இருக்காங்க. அவர் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டாரு. ஆனா என்கிட்ட ஒண்ணுமே சொல்லல. கோகுல போட்டு அடிச்சாரு. என்னன்னு என்கிட்ட சொல்லல. அப்ரோம் எங்கேயோ போனவரு… ராணி அம்மா சக்தி மாதிரி தான் வந்தாரு..” என்றான் கண்களில் நீர் கோர்க்க.

 

“எப்டி இருந்தது தெரியுமா யது.? என் உயிர் ஏன் என்கிட்ட இருக்குன்னு தெரியல. பேசாம நானும்…” திவி அவன் வாயில் கை வைத்து வேண்டாம் என்று தலையசைத்தாள்.

 

“அப்பா, எல்லா சொத்தும் என் பேர்ல மாத்திட்டாரு. அதுல இருந்து என்னால மீண்டு வர முடியல. கோகுலையும் ஒழுங்கா பாத்துக்க முடியல. அதனால் அவன ஹாஸ்டல்ல சேத்துட்டேன். வெறித்தனமா படிச்சேன். பி.பி.ஏ., எம்.பி.ஏ. முடிச்சேன். எவ்ளோ பிரச்னை கம்பெனில. அப்போலாம் உன்னோட வார்த்தை அது மட்டும் தான் நான் துவலும்போதுலாம் கை கொடுக்கும் யது. உன்னை பத்தி அப்பாகிட்ட கூட அன்னைக்கு சொன்னேன். அப்பா ஆக்சிடெண்ட்ல தான் இறந்தார் யது. அவர் எங்கேயோ கார் எடுத்துட்டு போனாரு. திரும்பி வரப்போ என் உயிரையும் சேத்து எடுத்துட்டு அவரே அம்மா கூட போயிட்டாரு. அவர் கடைசியா யதுன்னு தான் ஏதோ சொல்ல வந்ததா டாக்டர் சொன்னங்க தெரியுமா. அதுல இருந்தே உன்ன பாக்கணும்ன்னு வெறிப்பிடிச்சு அலஞ்சேன். இப்போ நீ என்கூட இருக்க அவர் இல்ல யது.”

 

திவி கண்ணீரை அடக்கி கொண்டு “கோகுல் எங்கன்னு கேட்டேன்.?”

 

ஆதி எழுந்து திவியின் கீழ் அமர்ந்து அவளின் மடியில் முகம் புதைத்து “அவன நானே கொன்னுட்டேன் யது. அவன நானே இந்த கையால கொன்னுட்டேன்.” என்று அழுதான்.

 

திவி “என்..என்..என்ன ஆதி சொல்ற..? என்ன ஆச்சு.?”

 

ஆதி “ஓரு வருஷம் முன்னாடி ஹாஸ்டல்ல இருந்து வந்தான். வந்தவன் என்கிட்ட சரியா பேசல. எனக்கு தெரியாம ஏதோ செய்ய ஆரம்பிச்சான். கடைசில அவன் தப்பு செஞ்சி போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு தான் வந்து இருக்கான். என்னன்னு கேட்டபோ சொல்லவே இல்லை. ஒரு ப்ராஜெக்ட்ல எனக்கு பிராப்ளம். அந்த கோவத்துல அவன அடிச்சு ஒரு ரூம்ல அடைச்சிட்டேன். திடீர்னு அந்த ரூம் வெடிச்சிடுச்சு. அவன் அவன் செத்துட்டான் யது. என்னால தான்… நான் அப்டி பண்ணாம இருந்து இருந்தா அவன் இப்போ உயிரோட இருந்து இருப்பான்ல.?” என்றான் இறுகிய முகத்தோடு.

 

திவி “அப்போ சக்தி அண்ணா யாரு.?”

 

ஆதி “அவன் சின்ன வயசுல இருந்தே என்கூட தான் படிச்சான். அவன் பேர் சக்தினால என்னவோ அவன விட்டு நானும் கோகுலும் போக மாட்டோம்.  அவன் கிட்ட ரொம்ப நெருக்கம். அப்பாக்கு கூட ரொம்ப பிடிக்கும் அவன. இது வரை எனக்கு ஏதோ ஒண்ணுனா எனக்காக உயிரையே கொடுப்பான் அவன்.” என்று கூறினான்.

 

 

‘இப்டி கஷ்டப்பட்டு இருக்கானே.? எல்லாம் என்னால தான். எப்டி இவன் கிட்ட உண்மைய சொல்லுவேன்.? இவன எப்படியாவது சமாதனம்படுத்தி உண்மைய புரிய வைக்கணும். இவன் குடும்பத்துக்கூட இவன சேக்கணும். அவன இவன் முன்னாடி நிறுத்தனும். ஆதி என்ன விட்டு போனாலும் பரவால்ல. சந்தோசமா இருந்தா போதும்’ என்று எண்ணிக் கொண்டாள்.

 

அவன் பேசிய அனைத்தையும் அவனறியாமல் திவி பதிவு செய்துக் கொண்டு விட்டாள்.

 

மதியம் ஆகி விட,

 

ஆதி “யது என் வயிறுக்குள்ள என்னமோ சத்தம் கேக்குது ” என்றான் சிறு பிள்ளை போல்.

 

“ம்ம் இவ்ளோ நேரம் கதை பேசிட்டு இருந்தா பசிக்கத்தான் செய்யும் டா..” என்று சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தார் செல்வி.

 

அவரை பார்த்ததும் ஆதி எழ, திவி கண்களில் கண்ணீருடன் அவரை பார்த்தாள். செல்வி கண்களாலேயே ஆறுதல் சொல்ல, திவி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

செல்வி “கொஞ்ச நேரம் ஆதி. சமச்சிடுறேன். நீங்க பேசிக்கிட்டு இருங்க” என்று விட்டு சமையலறை சென்றார்.

 

திவி “இல்லம்மா.. நானும் வரேன்..” என்று விட்டு நகர,

 

ஆதி “இரு யது.. கொஞ்சம் பேசணும்”

 

திவி “அப்ரோம் பேசலாம்.” என்று கூறி ஓடியே விட்டாள்..

 

ஆதியே அறியாமல் அவன் உதடு சிரிக்க,

 

சக்தி “திவி எல்லாம் சொல்லிட்டியா?”  என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

 

ஆதி “என்ன சொல்லணும்.?”

 

சக்தி ‘ஐயோ மாட்டிக்கிட்டியே டா சக்தி!’ என்று தலையில் அடித்து கொள்ள,

 

திவி திருத்திருவென விழித்தாள்.

 

கனவு தொடரும்..🌺🌺🌺

 

கதையை படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க.. அண்ட் உங்க ஸ்டார்ஸ் உம் முக்கியம் மக்களே.. உங்க கமெண்ட்ஸ் தான் என்னை இன்னும் நல்லா எழுத வைக்கும்..

 

அப்ரோம் உங்க எல்லாருக்கும் மிக பெரிய தாங்க்ஸ்… தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க நட்பூக்களே..!!!

 

இனிய காலை வணக்கம்..! இந்நாள் நன்னாளாக அமையட்டும்.. !

நன்றி..!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்