Loading

ஏழு முறை இன்டர்வியூ சென்று தோற்றேன்… எட்டாவது முறையாக பங்கெடுத்த இன்டர்வியூவில் எல்லாம் சரி ஆனால்… ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் சற்று குழம்பம் நிலவிக் கொண்டிருக்கிறது நீங்கள் செல்லலாம்… வேலைப் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றால் இன்னும் இரண்டு நாட்களில் இமெயிலில் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறி அங்கிருந்து அனுப்பினார்கள்… 

 

நம்பிக்கையோடு வெறும் கையை வீசியபடியே கடற்கரைக்குச் சென்று எனக்கான வேலையில் ஈடுபட்டேன்… அந்த இரண்டு நாட்கள் எப்போது முடியும் என்ற ஆர்வம் அவ்வப்போது என் கைக்கடிகாரத்தைப் பார்க்க வைத்தது… பார்க்கும் ஒவ்வொரு முறையும் இனி இத்தனை மணி நேரம் உள்ளது என்று எனக்குள்ளே எண்ணிக்கொண்டு காத்திருந்தேன்… 

 

என் வெற்றிக்காக காத்திருந்தவரோ என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் தேவைகளை தீர்த்து வைத்து அழகு பார்த்தார்… வயதில் முதிர்ந்ததால் சில வேலைகளைச் செய்ய சிரமப்படுவார்… அதைப் புரிந்துகொண்டு அவர் நினைப்பதற்கு முன்பே நான் செய்துவிடுவேன்…

 

அப்படித்தான் இன்டர்வியூ சென்று வந்த நாள் நான் அயர்ந்து உறங்கிவிட்டேன் அவர் என்னை எழுப்பாமல் வேலைக்கு கிளம்பி விட்டார்… திடீரென கண் விழித்த நான்… படபடவென எழுந்து புறப்பட்டு போனேன்… வாசல் தாண்டி வீதி வந்த பிறகுதான் தெரிந்தது அன்று கடையடைப்பு என்று… 

 

விஷயம் என்னவென்று தெரியாமலே சென்றுவிட்டாரோ என்கிற சந்தேகத்துடனே கடற்கரைக்கு சென்றேன்… அன்று ஏதோ முக்கிய தலைவரின் மறைவு என்று சொல்லி பேருந்து போக்குவரத்தையும் நிறுத்திவிட்டார்கள்… அனைவருக்கும் விடுமுறை போல ஊரே வெறிச்சோடிக் கிடந்தது… 

 

இன்றைக்கு நடைபயணம் தான் என்று நடை ராஜா நடை என்று முனங்கிக்கொண்டே நடந்தேன்… நான் போகும் பாதை சரியானதா என்று தினமும் பழக்கப்பட்ட கால்களுக்கே சந்தேகம் வரும் அளவிற்கு அந்த வழி முழுக்க மயான அமைதி நிலவியது.

 

வெகுதூரம் நடந்து சென்றுமே தனித்தீவில் தன்னந்தனியாக திரிவது போலத்தான் தோன்றியது… அதுவரை மனிதப் புள்ளிகளையே பாராமல் இருந்த கண்களை வயப்படுத்துமாரு தூரத்தில் ஒரு கூட்டம் இருந்தது… ம்ம்ம் மனிதக் கூட்டம்தான்… எப்படியாவது அதை எட்டிப்பிடித்துவிடலாம் என்று நினைத்தேன்… நினைத்ததை அடைய வேகமெடுத்து நடந்தேன்… என் பின்னால் ஒலி எழுப்பிக்கொண்டு சிவப்பு நிற விளக்கு எரிந்தபடியே அம்புலென்ஸ் கண் இமைக்கும் நொடியில் என்னைக் கடந்து அக்கூட்டத்தைப் பிளக்கச் செய்தது.

 

கன நேரத்தில் என் ஆர்வம் பயமாக உருவெடுத்தது… எனக்கு வேறு வழியே இல்லை அக்கூட்டத்தை கடந்தாகவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன்…

 

மனம் அங்கு வேண்டாம் என்று சொன்னாலும் கால்களின் கவனம் என் மனம் சொன்ன சொல்லில் இல்லை, அங்கு செல்வதில் இருந்தது… சிறிது நேரத்தில் என் மழுங்கிய புத்தியில் தகாத எண்ணம் எல்லாம் தோன்ற தொடங்கியது… என்னையே அறியாமல் அங்கிருப்பது என்னை ஆதரித்த தெய்வமாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்று கடவுளிடம் கை கூப்பி வேண்ட ஆரமித்தேன்.

 

அருகே சென்ற பின் அக்கூட்டத்தின் முதுகுப்புறத்தை பார்த்து நின்ற போது இருந்த தைரியம் அக்கூட்டத்தை விலக்கி அதற்குள் என்ன என்று பார்ப்பதில் இல்லை…

 

பல முறை பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன் என் உயிர் என்னிடத்திலே இல்லை என்று… அன்று நானும் உணர்ந்து நொந்து வெந்து கொண்டு இருந்தேன் பயத்தீயில் புரண்டு புன்பட்டுக்கொண்டு இருந்தேன்… கூட்டத்தில் யாரோ “பாவம் இந்த பொண்ணு… ச்ச்சே இவ்வளோ சின்ன வயசுலயே இப்படியா ஆகனும்” அப்படினு புலம்பும் போதுதான்… ஓஓஓ அப்போ அது அவர் இல்ல அப்படினு என் மனசு கொஞ்சம் அடங்குச்சு.

 

இதில் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வழக்கமாக தப்புக் கணக்கு போட்டுக்கொண்டு மனதை திடப்படுத்தி கூட்டத்திற்குள் நுழைந்தேன்…

 

(இக்காட்சி முடிந்ததும் அடுத்த காட்சியில் அப்பு அவருடன் கடற்கரை மணலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தான்….. இருள் சூழ்ந்த அவ்விடத்தில் அவன் புலம்பலைக் கேட்டு நிலா சிரிப்பில் பிரகாசித்துக் கொண்டிருந்தது).

 

“யப்ப்ப்பா…. என்ன அழகு தெரியுமா…. ச்ச்சே அப்படி ஒரு பொண்ண நான் பாத்ததே இல்ல…‌ நான் பாத்த எத்தனையோ பொண்ணுங்க அவளவிட அழகா இருந்திருக்கலாம். ஆனா, அவங்கள பாக்கும்போது எல்லாம் என்ன இந்த அளவுக்கு தாக்குனது இல்ல. அவள முதல் முறையா பாக்கும்போது ஏற்பட்ட நடுக்கம் எனக்கு இன்னும் கொஞ்சம் கூட மாறவே இல்ல… “

 

“டேய் டேய் நிறுத்துடா… அப்போ அங்க அடிபட்டு கொடக்குறது நானா இல்லையானு எல்லாம் நீ பாக்க போகல… ஒரு பொண்ண பாத்ததும் உடனே அங்க போயிருக்க அப்படித்தான?”

 

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல… கூட்டத்துக்கு உள்ள போன பிறகுதான் அவளவே நான் பாத்தேன்… “

 

“அடடா…. ம்ம்ம்… ஒரு ஜீவன் உயிருக்குப் போராடிட்டு இருக்குற கேப்ல உங்களுக்கு காதல் மலர்ந்திருக்கு… அதுவும் படத்துல வர்ற லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் சீன் மாதிரி… மனசாட்சி இருக்காடா உங்களுக்கு”

 

“அட மனசே இல்லைனு சொல்லிட்டு இருக்கேன் நீங்க வேற… அவள பாத்தப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா…?”

 

“ம்ம்ம் எனக்கு எப்படித் தெரியும் சொன்னாதான தெரியும்… “

 

“சொல்றேன் தெரிஞ்சுக்கோங்க ( எல்லார மாதிரியும் தன் காதலையும் காதலியையும் மத்தவங்க கிட்ட சொல்லும் போது இருக்க ஆர்வமும் ஆனந்தமும் அவனுக்கும் இருந்தது… விழித்திரை இன்னும் அகலமா விரிஞ்சு அந்த விழி அவன் பாத்த அந்த முகத்த காத்துல கைவீசி தேடிகிட்டு இருந்தது… மனசு சொல்ல நெனச்ச வார்த்தைய சொல்ல முடியாத உதடோ தவிதவிச்சுப் போனது….) கரெண்ட் ஷாக் அடிக்கும் போது கிர்ர்ருனு ஒரு ஃபீல் கொடுக்கும்ல அதுதான் அதேதான்… அந்த நேரம் பாத்து தல சுத்தி கீழ விழற மாதிரி இருந்துச்சு… ஆனா விழல… இதுவரைக்கும் சுரக்காத பருவ ஹார்மோன்கள் எல்லாம் ஒன்னு கூடி பெருக்கெடுத்தது என்ன தத்தளிக்க விட்டது… 

 

உருவமே இல்லாத ஏதோ ஒன்னு… மொழியே தெரியாத ஏதோ ஒன்னு கிட்ட யேய் இங்க பாரு!… இதோ இவதான் உன் இடிஞ்சு போன கனவுக் கோட்டையில சிதறி விழுந்த சந்தோஷங்கள ஒன்னு சேத்து பூங்கொத்தா மாத்தி தரப்போர தேவத… விட்றாத… உனக்குள்ளையே பொதச்சு வச்சுக்கோ… அவளே கேட்டாலும் நீ அவள விட்டுக்கொடுத்துறாத அப்படினு சுயநலத்தோட உச்சத்துல இருந்தது அந்த உணர்வு.

 

 

…கதை தொடரும்…

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்