கண்ணை விட்டு மறைந்து சென்ற பின் அவன் வரவை எண்ணிக் காத்திருக்கும் என் காதலுடன் சேர்த்து என் கண்களும்….
பள்ளி வாழ்க்கையில் இருந்து விடைபெற்ற பின் சென்னையில் கல்லூரி பயில அனுமதி கேட்டேன்….”அச்சச்சோ சென்னைக்கா அங்கையெல்லாம் வேணாம்மா… உன்னைய அவ்ளோ தூரத்துல விட்டுட்டு நாங்க எப்படி தனியா இருப்போம் அதெல்லாம் வேணாம்” என்று என்னைப் பெற்ற தெய்வங்கள் இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு என் மனசைக் களைத்து பக்கத்து ஊரில் அரை மணி நேர பஸ் பயணத்தில் சென்று வரக்கூடிய கல்லூரியில் என்னை சேர்த்துவிட்டார்கள்….
முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கையின் முதல் ஆறுமாதம் ஐயோ இங்க வேற வந்துட்டோம் யாரையும் தெரியாது என்ன பண்ண போறமோ எப்படி படிக்கப் போறமோ என்ற புழம்பலிலேயே கழிந்தது…அடுத்த ஆறு மாதம் புது நண்பர்களுடன் பழக ஆரம்பித்தே கழிந்தது என்றே சொல்லலாம்… கடக்கும் போது கடினமாகத் தெரிந்தாலும்…முடிந்த பின் அந்த ஒரு வருடத்தை அனுபவிக்கத் தவறிவிட்டோமோ என்று தோன்றியது…
சரி இப்படியே மூன்று வருடமும் கடந்து விடும் என்ற எண்ணத்திலே உற்சாகத்தோடு சென்று வந்து கொண்டிருந்தேன்…
எந்த ஒரு துன்பமும் தீண்டத வண்ணமே வளர்ந்த எனக்கு காத்திருந்தது ஒரு பெரிய அடி….நம்ம பாக்காததா…நம்மல மீறி என்ன நடந்துற போகுது என்ற அளவுமிஞ்சிய தைரியத்தை அடியோடு அழிக்க காத்திருந்தது ஒரு சம்பவம்….
கல்லூரி இரண்டாம் ஆண்டு வழக்கமான மற்ற நாளைப் போலவே அந்த நாளிலும் என் தோழியுடன் சிரித்தபடியே கல்லூரி கேட்டிலிருந்து என் வகுப்பறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன்…. அப்போது திடீரென என் குறுக்கே வழியை மறைத்து நின்ற அதே கல்லூரியில் பயிலும் ஒருத்தி இந்த இத அந்த அண்ணா உன் கிட்ட குடுக்க சொன்னாரு….என்று சொல்லி கசக்கி சுருட்டிய ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவ்விடத்தில் இருந்து காணாமல் போனால்…. யார் கொடுத்தார் அவர் பேர் என்ன என்ற கேள்விக்குக் கூட பதில் சொல்லாமல் ஓடியதுதான் வருத்தம்…
என்னவாக இருக்கும் என்று பேப்பரை விரித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது… மூன்று நாளைக்கு முன்பு காணாமல் போன என்னுடைய ஒரு தங்கக் கம்மல் அதில் இருந்தது….யேய் இங்க பாருடி இத எங்க எங்கெல்லாம் தேடுனோம்… எப்படியோ அந்த கடவுள் புன்னியத்துல கெடச்சிருச்சு….யப்ப்ப்பா… இப்போதான் உசுரே வருதுடா சாமி….
கம்மல் கிடைத்த சந்தோஷத்தை வீட்டில் பகிர….கண்டுபிடித்தவருக்கு நன்றி சொன்னியா என்று என்னைப் பெற்றவள் கேக்க… போமா அதெல்லாம் யாருனே தெரியல என்று அவள் வார்த்தையைக் கடந்தேன்…
என்ன மாயமோ தெரியவில்லை… இரண்டு நாள் கழித்து என் தாய் கேட்ட அதே கேள்வி என் மனதில் எழுந்து உறுத்திக் கொண்டே இருந்தது… அதனால் என்னிடம் வந்து கம்மலைக் கொடுத்தவளைக் கல்லூரி முழுக்க வலைவீசி தேடினேன்….
தேடலின் முடிவில் அவள் கிடைத்தாள் ஆனால் அவளிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை… இரண்டு மூன்று நாட்களாக கெஞ்சி கூத்தாடி போராடி அவளிடமிருந்து பதில் வாங்கினேன்…. அதுவும் சரியான பதில் இல்லை….” நான்தான் குடுத்தேனு அந்த பொண்ணு கிட்ட சொல்லாத”அப்படினு சொல்லிருக்காரு…. நீ வேற இவ்ளோ கெஞ்சுற… உனக்காக வேணா ஒரு ஐடியா குடுக்குறேன் நீ அத வச்சு கண்டு புடிச்சுக்கோ என்று கூறினாள்…. பெரிய சிபிசிஐடி என்று நினைப்பு அவளுக்கு சில அங்க அடையாளங்களைச் சொன்னாள்….
அவள் சொன்னதை வைத்து அவர் ஒரு ஆண் என்பதைத் தவிர வேறு எதையும் கண்டுபுடிக்க முடியாது….
அதனால் நானே ஒரு பிளான் பண்ணி அதை நடத்திக்காட்டி யார் அவர் என்பதனை கண்டு பிடித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்…
பல நாட்களாக ஒரே ஒரு நபர் மட்டும் என்னைக் கண்காணிக்க நான் கல்லூரிக்கு போகும் நேரமும் வரும் நேரமும் பஸ் ஸ்டான்டில் காத்திருப்பதைக் கவனித்திருக்கிறேன்…. அவர் என்னை உற்று உற்று பார்ப்பார்…பார்ப்பது எனக்குத் தெரிந்தாலும் தெரியாதது போலவே தலையைக் குனிந்தபடியே கடந்து வந்துவிடுவேன்….ஒரு வேளை அவராக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு சற்று கூடுதலாய் இருக்கவே….சரி பரிசோதனை செய்து பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்….
அவர்தானா என்ற சந்தேகத்தைத் தீர்க்க மறுநாள் காலையில் அதே பஸ் ஸ்டான்டில் என் வாட்சை தெரிந்தே தொலைத்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக நின்று பஸ் ஏறும்போது ஏறாமல் மறைந்து வேறொரு இடத்தில் நின்று கவனித்தேன்…
ஒரு ஓரத்தில் தன் ஃபேன்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டு ரொம்ப எதார்த்தமாக இருந்த அந்த நபரோ மெல்ல மெல்ல நகர்ந்து வந்து தரையில் கிடந்த என் வாட்ச்சை குனிந்து கையில் எடுத்து தூசிசைத் தட்டி ஊதிக் கொண்டே…. இவங்களுக்கு எதையாவது தொலைக்குறதே வேலையாப் போச்சு என்று என்னைப் பற்றி புகழ் பாடிக்கொண்டே திரும்பினார் பாவம் அவர் பின்னால் நான் இருப்பது தெரியாமல் என்னிடம் மாட்டிக் கொண்டார்….என்னைப் பார்த்த உடனே பின்வாங்கினார் தடுமாறினார் பேச்சு வராமல் உலறினார்….
“யார் நீங்க…. என் மேல அக்கரை காட்றதையே அரைநாள் வேலையா வச்சிருப்பீங்க போல”
“அட ஆமாங்க நீங்க வேற அடிக்கடி எதையாவது தொலச்சிட்டே இருக்கீங்க… அதான் இப்போ இருந்தே கண்டுபிடிக்க ட்ரைனிங் எடுத்துட்டேன் இருக்கேன்…. ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் கவனமா இருந்தாதன குடும்பம் விளங்கும்….”
“இல்ல எனக்கு புரியல… நம்ம ரெண்டு பேரு குடும்பம் அது இதுனு ஏதேதோ பேசிட்டே போறீங்க… இங்க பாருங்க இதெல்லாம் நல்லா இல்ல… நீங்க என் தங்க கம்மல கண்டுபுடிச்சு தந்தீங்களேனு நன்றி சொல்லதான் நான் வந்தேன் பேசுனேன்…. உங்களுக்கு வேற எதாவது ஆசை இருந்தா இப்போவே அத விட்ருங்க…..”
“சரிங்க எல்லாம் ரைட்டுதான்…. அடிக்கடி இப்படி பொருள மட்டுமே தொலச்சிட்டு இருந்தா என்ன நியாயம்…. ஒரே ஒரு முறை மட்டும் உங்கள எங்கிட்ட தொலச்சுப் பாருங்க…. மத்தத நான் பாத்துக்குறேன்…”
“சிலருக்கு எல்லாம் எவ்ளோதான் சொன்னாலும் புரியாது…. ச்ச்ச்சே “
அவரை திட்டிக் கடிந்து வெறுத்து முகம் சுழித்துப் பேசியும் அவர் முகத்தில் இருந்த அந்த சிரிப்பு சிறிதளவும் குறையவில்லை…
பாக்க நல்லா கரடு முரடான ஆள் மாதிரிதா இருந்தாரு…. என்னைய விட அஞ்சு வயசு பெரியவர் மாதிரி தெரிஞ்சது…
…கதை தொடரும்…