Loading

“எதுக்கு திருட்டுத்தனமா என் பேக்க தெறந்து பாக்குற… கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம”

 

“நானா ஒன்னும் தெறக்கல தாயே… ஒரு மாசத்துக்கு முன்னாடியே நீதான் என் பேக்ல இருக்க நோட்ட எடுத்துட்டு வாடினு மிஸ் கூட நின்னுகிட்டு சொன்ன…. அப்போ நீ கேட்டது இல்லாம வேற நோட்ட எடுத்துட்டேன்…. அதுல இருந்து நாலஞ்சு பேப்பர் கீழ விழுந்தது… என்னடா இவ பேக்க இப்படி குப்பையா வச்சிருக்காளேனு அத எடுத்துட்டுப் போய் குப்பத் தொட்டில போட நினைச்சேன்…. சரி முக்கியமானதா ஏதும் இருந்துறப் போகுதுனு பிரிச்சு படிச்சு பாத்தேன்….. என்னடி லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா… ம்ம்ம்…”

 

சரி ஆதரத்தோடு சிக்கிக்கொண்டோம் இனி சமாளித்து விடலாம் என்ற முடிவை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்….ச்ச்சே இப்படி போய் கேவளமா மாட்டிகிட்டோமே… அதுவும் இவ கிட்ட…. இதுக்கு மேல என்ன உண்மைய ஒடச்சிட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டு….

 

“சும்மா லூசு மாதிரி பேசாத”

 

“நீதான்டி எழுதியிருந்த…. சின்ன வயசுல இருந்தே அவன பாக்காம ஒரு நாளும் கடந்ததே இல்ல….ஆனா அது என்னமோ தெரியல ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல அவன தினமும் பாத்தாலும் அந்த பார்வையோட விதம் மாறுச்சு… ஆனா என்ன காரணம்னே தெரியல எனக்கு அது புடிச்சிருந்துச்சு…. ஏழாவது எட்டாவது படிக்கும் போதுல இருந்தே நாங்க ரெண்டு பேரும் பேசிக்குறது இல்ல…

 

ஒரு நாள் ரோட்டுல நடந்து போய்ட்டு இருந்தேன்…. ஸ்கூல்ல கட்டுரை போட்டி அதுக்கு எப்படி எழுதலாம்னு யோசன பண்ணுனபடியே போய்ட்டு இருந்தேன்…. முதல் தடவ என்னுடைய கால் கல்லுல மோதி தடுக்கி விட்டு விழப் போனேன் ஆனா நல்ல வேள விழுகல…இதுக்கப்புறம் கவனமா போகனும்னு ஒரு பக்கம் இருந்தாலும் கால் வலி இருந்தது அது அந்த யேசனைய மறக்கடிச்சு முதல்ல வந்துருச்சு….

 

வேகமான சுடான காத்து என்னைய அப்படியே அள்ளி எடுத்து தூக்கி எறிஞ்சா எப்படி இருக்குமோ அப்படி ஒரு வெப்பம் என்னைய சுத்தி காதக் கிழிக்குற ஹாரன் சத்தம் அதையே மிஞ்சும் அளவிற்கு அந்த வண்டிக்கு உள்ள உக்காந்திருந்தவன் சத்தம்… ஏம்மா கண்ண எங்க வச்சிருக்க ரோட்டுல பாத்து போக மாட்டியா…. ஆளப்பாரு… தம்பி பாத்து கூட்டிட்டு போய் வீட்ல விட்றுங்க எங்கையாவது அடிபட்டு கெடக்கப்போகுது அப்படினு அவன் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தத பேசிட்டு போய்ட்டான்….

 

அவன் இன்னும் என்னென்னவோ பேசுனான் ஆனா அது எல்லாம் என் காதுல விழவே இல்லை….படபடனு அடிச்சிட்டு இருந்த இதயத்த அமைதிப்படுத்த தலைய குனிஞ்சு கண்ண மூடுனே….

 

கண்ண தெறந்து பாக்கும் போது என் எதிர்ல ஒரு முகம் நான் தினமு பாத்த முகம்தான்… ஆனால் அது அவன் இல்லை…. அவனை அவ்வேளையில் பார்த்த என் கண்களை அவனிடமிருந்த மீட்டவே முடியவில்லை… வண்டிக்காரனிடம் இருந்து காப்பாற்றி விட்டு அவனே என்னைக் கொன்று விட்டான்…. ஏய் என்ன தூங்கி எந்திரிச்சிட்டியா என்ன நெனப்புல போய்ட்டு இருக்க… நான் மட்டும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தேனு வை அவ்ளேதா…. என்ன பேய் அரஞ்ச மாதிரி பாக்குற…. பதற்றமா இருக்கா என்று கேட்டு அவன் தலை திரும்பி கால்கள் இரண்டும் பாதையை மாற்றி நடக்க ஆரம்பித்தது…. 

 

என் இடது கையைப் பற்றி இருக்கி இருந்த அவனுடைய வலது கை என்னை விட்டு நீங்கும் வேளையில் என் கூடவே உறிப்போன ஏதோ ஒன்று என்னை விட்டு விலகிப்போனது….

 

ஆளில்லாத பாதையில்தான் நடந்து போனேன்…. என்னை மீட்ட எங்கிருந்து வந்தானோ தெரியவில்லை மாயக்காரன்….அப்படினு எழுதியிருந்த…. ஐ திங்க் உனக்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டுக்கு மீனிங் தெரியலனு நெனைக்கிறேன்… இல்லனா அப்படிலாம் எழுதிருக்க மாட்ட….”

 

“அதெல்லாம் தெரியும்… அந்த நிகழ்வு நடந்த பின்னாடி அவன பாக்குற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் மாதிரிதா இருக்கு எனக்கு…நான் என்ன பண்றது….”

 

“இவ்ளோ ஃபீலிங்க ஏன் உனக்குள்ளையே வச்சிகிட்டு கஷ்டப்படுற…. அவன் கிட்டையே ஓப்பனா சொல்லிரு….”

 

“கஷ்டம்லாம் இல்ல… இது எனக்கு புடிச்சிருக்கு…இதுக்கு அவன் கிட்ட எந்த மாதிரி வேணாலும் பதில் இருக்கலாம்…ஆனா அது எனக்குத் தேவையே இல்ல…. நான் இப்படியே திருட்டுத்தனமா அவன லவ் பண்ணிட்டு ஜாலியா இருப்பேன் “

 

“எத்தன நாளைக்கு?”

 

“என்னால தாக்குப் பிடிக்குற வரைக்கும்….”

 

“ம்ம்ம்…. இது தேவையில்லாத வேலை… இப்பவே முடிவு தெரிஞ்சிட்டா அடுத்து என்னவோ அத பாத்துட்டு போய்ரலாம்…எதுக்கு வெயிட் பண்ணி நேரத்த வீணாக்கிகிட்டு….”

 

“அதெல்லாம் உனக்கு புரியாது “

 

நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை… பள்ளி விட்டு வீடு வரும் போது அவன் பின்னாடியே வழக்கம் போல வந்தேன்….

 

வருகிற வழியில் கடக்கின்ற இடங்களில் எல்லாம் எனக்கும் அவனுக்குமான காதல் நிகழ்வுகள் என் கற்பனையில் பிறந்தது…

 

காதலித்துக் காதலித்து சலித்து போன பிறகும் கால் எட்டு வைத்து நடக்க முடியாத வயதிலும் கிடுகிடுவென ஆடும் எங்கள் கைகளை கோர்த்துப் பிடித்தபடியே இதே வீதியில் நடக்க வேண்டும் என்பதே என் காதலின் ஆகச் சிறந்த முடிவாகத் தோன்றியது….‌

 

காதல் என்பதைத் தாண்டி கற்பனையிலேயே அவனுடன் வாழ ஆரம்பித்தேன்…. எல்லாமே நன்றாகத்தான் இருந்தது பத்தாம் வகுப்பு முடிக்கும்வரை….

 

பள்ளிப் படிப்பு அவனுக்கு முடிவுக்கு வந்ததும் கல்லூரியைத் தேடி சென்னை சேர்ந்தான்….

 

அவனைக் காணாத இந்த கண்களில் தோன்றும் கற்பனை இன்னும் வேகம் எடுத்தது… ஏக்கத்தை எல்லாம் தீர்த்துக் கொள்ளும் கருவியாக அதுவே இருந்தது….

 

அவன் கண் பார்த்துப் பேசி… அவன் குரலை செவி குடுத்துக் கேட்டு… ஆசை வீச காதலித்து அனுதினமும் அவனருகில் வாழ்வது போல இனிமையைக் கூட்ட… எனக்கும் என் இதயத்துக்கும் நடுவே எத்தனை போராட்டம் தெரியுமா….

 

அவன் விடுமுறைக்கு வீடு திரும்பப் போகிறான் என்ற செய்தி காதை சேர்ந்த நாள் முதலே… எந்த ஆணின் குரல் கேட்டாலும் அவனா இருக்குமோ என்று கால்கள் இரண்டும் என் அனுமதி இல்லாமல் வாசலை நோக்கிச் சென்று என் எதிர்பார்ப்பு எட்டிப்பார்த்து ஏமாற்றம் அடையும்…

 

அவன் இருக்கும் அந்த நாலைந்து நாளில் தூரத்தில் இருந்து நோட்டமிட்டு ரசித்தபடியே என் ஆசைக் காதல் எல்லாம் அவன் காலடி நிழலைத் தொடரும்…

 

…கதை தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்