Loading

அவளின் படிப்பிற்காக மட்டுமே செலவிட்டு வந்தனர்…அக்கம் பக்கத்தினர் எல்லாம் அரசு பள்ளியில் சேர்த்து தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைத்தாலும் இவர்களுக்கு தோன்றியது எல்லாம் தனியார் பள்ளிதான் நல்லது அதில் படித்தால்தான் தன் சுய முன்னேற்றம் எவ்வாறு இருக்கிறது என்று அவளுக்கே தெரிய வரும் என்பது அவர்களின் எண்ணம்….

 

அவள் கூட விளையாண்டவர்கள் எல்லாம் வேறு பாதையில் பள்ளி செல்ல மனதை கல்லாக்கிக் கொண்டுதான் எப்போதுமே பள்ளி செல்வாள்… அவளின் ஆசையைப் பற்றியும் சொல்லி இருந்தும் கூட அப்பா அம்மாவிற்கு அதில் இருக்கும் அந்த மாயை மாறவே இல்லை….

 

தனியாக துணை இல்லாமலே இருந்து பள்ளி படிப்பை முடிக்க முயன்றாள்…ஆனால் அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை….பாவம்….பகட்டாய் வாழும் சிலர் இவளிடம் பந்தாவாக பேசி இவளை ஒதுக்கும் வேதனையை இவளால் அதற்கு மேல் ஏற்றுக்கொள் இயலவில்லை….

 

எதற்கு நாம் நாம் இருக்கும் நிலையை விட உயர வேண்டும் என்பதற்காக சக்திக்கு மீறிய பணத்தை ஒரு இடத்தில் கொட்டி நிம்மதியையும் மறியாதையையும் இழந்து இருக்க வேண்டும்…படிப்பு அவசியம்…ஆனால் அது இங்கே இருந்தால் மட்டும்தான் சாத்தியம் என்பதில் அவளுக்கு துளியும் நம்பிக்கை இல்லை….அதனால் தன் அப்பாவின் பணத்தை மிச்சம் செய்யவும்…தன் மனநிலையை சரி செய்து சக மனிதக் கூட்டத்துடன் சிரித்து பழகி தன் படிப்பை தொடர அவளுக்கு அரசுப் பள்ளி தேவைப்பட்டது….

 

மேஜையின் மீது பழைய பத்து ரூபாயை கிழிந்த இடம் பார்த்து டேப் போட்டு ஒட்டிக் கொண்டிருந்த தன் தகப்பனிடம் தான் எடுத்திருக்கும் முடிவைப் பற்றி தகவல் தெரிவிக்க அருகில் சென்றாள்….

 

“அப்பா”

 

“சொல்லுமா….இங்க பாரு பஸ்ல வரும்போது டிக்கெட்டுக்கு மிச்ச காச குடுக்குறேன்ற பேர்ல கிழிஞ்ச நோட்ட குடுத்துட்டான்….இனி இது வேற எங்கையும் செல்லுமா செல்லாதானு கூட தெரியல….”

 

“ம்ம்ம் இப்படிதாப்பா எல்லா இடத்துலயும் நம்ம ஒன்னு எதிர் பாக்க நமக்கு கெடைக்க வேண்டியது எல்லாம் வேறயா மாறி கெடச்சிருது….இதோ இந்த செல்லா காசு மாதிரி “

 

“எதப்பத்திமா பேசுற… எனக்கு எதுமே புரியல…என்னாச்சுடா தங்கம் “

 

“அப்பா நான் ஒன்னு சொல்றேன்…ஆனா நீங்க என்ன தப்பா நெனச்சுக்க கூடாது…. தினம் தினம் வந்து இன்னைக்கு எனக்கு இப்படி நடந்நது…இவங்க இவங்க என்னைய இப்படி பேசி இந்த மாதிரி நடந்துகிட்டாங்க….இந்த விஷயத்துக்காக எனக்கு நாளைக்கு இவ்ளோ பணம் வேணும் அப்படினு கேட்டு….என்னையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உங்களையும் மனசு கஷ்டபட வைக்க எனக்கு விருப்பமே இல்ல….நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நான் நம்ம ஊர்ல இருக்க அரசு பள்ளியிலயே போய் சேந்துக்குறேன்….சரியா….இது என்னோட கடைசி முடிவுப்பா….நான் படிக்கனும்னு நீங்க ஆசப்பட்டீங்கனா என்னைய இங்கையே சேத்து விடுங்க…இல்ல நீ எல்லாத்தையும் பொறுத்துகிட்டு அங்கதான் படிக்க போகனும்னா என்னைய மன்னிச்சிங்கப்பா நான் அங்க போக மாட்டேன்……”

 

படிப்பே வேணாம்னு சொல்ற அளவுக்கு அவளோட கஷ்டம் பெருசுனா அதுக்கு அப்புறம் அவளோட விருப்பம் எப்படியோ அதன்படிதான் கடமைய செய்யனும்னு அவளோட அப்பா சிந்திச்சாரு….

 

“ஏதோதோ பேசுறமா நீ…ஆனா எனக்கு இதுல எந்த ஒரு சின்ன விருப்பம் கூட இல்ல….ஆனா நான் உன் வார்த்தைக்கு மதிப்பு குடுக்குறேன்….நீ இந்த ஊர் ஸ்கூல்லயே சேந்துக்க….ஒன்பதாவது இன்னும் ஒரு வாரத்துல முடியப் போகுது…அதுனால அதையும் முடிச்சிட்டு அப்படியே பத்தாவதையும் முடிச்சிட்டு…பதினொன்னாவதுக்கு வந்து இங்க சேந்துக்கோ அதுதான் சரியா இருக்கும்…..”

 

“இன்னும் ஒரு வருஷம்லாம் என்னால அங்க இருக்கவே முடியாது….அதுக்குள்ள என் மனநிலை எப்படி வேணாலும் மாறும்….இந்த ஒரு வாரம் மட்டும் போறேன்பா”

 

“பத்தாவதுக்கு எப்படிமா டிசி குடுப்பாங்க…இது நடக்குற காரியமா”

 

“நடக்கலைனாலும் நம்மதான் நடத்திக் காட்டனும்..எதாவது ஒரு காரணத்த சொல்லி என்னைய அங்க இருந்து கூட்டிட்டு வந்துருங்கப்பா….என்னால சுத்தமா முடியல “

 

தன் மகள் இவ்வளவு தூரம் கவலையோடு பேசுகிறாளே…இதற்கு மேல் அவளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது தேவையில்லாத காரியம்…சரி அவள் முடிவில் அவள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் நாம் குறுக்கே நிற்பது மிகவும் தவறான காரியம்…அவள் போக்கிலேயே போனால்தான் சரிபட்டு வரும் என்று அவளின் தந்தை தனக்குள்ளே பேசிக்கொண்டு தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

“அப்பா என்ன யோசிக்குறீங்க…”

 

“இல்லமா….நீ இவ்ளோ சொல்ற இதுக்கு மேல உன் விருப்பம்தா….ஆனா எனக்கு என்ன காரணம் சொல்றதுனுதாமா தெரியல…”

 

“அங்க இருந்த இத்தன வருஷத்துல நான் என் காதால அதிக முறை கேட்ட ஒரே விஷயம்னா…நம்ம காசு இல்லாதவங்க… நம்மளுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய ஸ்கூல் அப்படின்றதுதா….இந்த வார்த்த ஸ்கூல்ல மட்டும் இல்ல…சில நேரம் வீட்டுக்கு வற்ர சொந்த பந்தமு கொஞ்சம் கூட யோசிக்காம ரொம்பவே வெளிப்படையாவே சொல்லுவாங்க….”

 

“சரி விடுமா…அடுத்தவங்க என்னவோ சொல்லிட்டு போகட்டும் அத பத்தி நமக்கு யோசிக்க நேரம் இல்ல….அங்க வந்து ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியலனு சொல்லி உன்ன கூட்டிட்டு வந்தர்றேன் போதுமா?…”

 

“இதோ இதத்தான் நான் எதிர்பாத்தேன் “

 

தந்தையும் மகளும் எடுக்கும் முடிவில் ரகசியமாய் பேரானந்தம் படும் ஜீவன்தான் அந்த கதை நாயகியின் அம்மா….

 

தனது மகளின் படிப்பிற்காக உடலை வருத்தி உழைத்த போதிலும் அதிலிருந்து கிடைக்கும் ஊதியம் போதுமானதாக இல்லவே இல்லை…நல்ல நல்ல திருநாளிலும் கண்ணைப் பறிக்கும் ஆடை அணிந்ததில்லை…. சொல்லப்போனால் அழகு, அலங்காரம், சந்தோஷம் என்கிற வார்த்தைகள் எல்லாம் தீண்ட மறந்ததாகவே அவர்கள் வாழ்க்கை இருந்தது….

 

வருமானம் போதவில்லை என்ற நிலையில் அத்தனை பாவப்பட்ட குடும்பங்களும் எடுக்கும் ஒரே முடிவு கடன்….அலைந்து திரிந்து ஐந்து வட்டிக்கு கடன் வாங்கித்தான் இரண்டு வருடமாக தன் மகளின் கல்வி கட்டணத்தை செலுத்தினார்கள்….ஆனால் அவள் முன்னாடி அவர்களின் இயலாமையை காட்டியதே இல்லை…பெற்றோருக்கு கஷ்டம் என்பது தெரியும் ஆனால் இந்த அளவிற்கு இருக்குமா என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை…

 

கடனைத் தாண்டி வட்டிப் பணமோ வானத்தை எட்டி விடும் போல… அவர்களின் சக்திக்கு அடங்காத தொகை அவர்களின் வாழ்க்கைக்கு எதிரியாக வந்து நின்றது…. ஆறு மாதத்திற்குள் பாதி பணத்தை செலுத்த கடன் கொடுத்தவர் காலக்கெடு குறித்திருந்தார்….அவர் சொல்லியபடி நடக்கவில்லை என்றால்….ஆறு மாதம் முடிந்த அடுத்த நாளே….

 

 

…கதை தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்