
அகம்-51
நீ எனக்கு வேணும் அழகரு! என் ஆயுசுக்கும் வேணும்!’
‘நீ எனக்கு சத்தியம் பண்ணிருக்க அழகரு! என்னை விட்டுப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணிருக்க அழகரு! நாம வாழணும்! சாவுன்னு ஒண்ணு வர்ர வரைக்கும் ஒண்ணாவே வாழணும்! ஒருவேளை நீ திரும்பி வரலைன்னா என்னையும் கூட்டிப் போயிரு அழகரு. நீயில்லாத வாழ்க்கை எனக்கு வேணாம்.! நீ இல்லாத வாழ்க்கையை யோசிக்கவே பயமா இருக்கு அழகரு. நான் விவரம் புரியாமல், நிறைய விஷயம் பண்ணியிருக்கேன். நான் செஞ்ச தப்புத்தான் உன்னை இப்படி படுக்க வச்சிருக்கு. எனக்காக திரும்பி வந்துரு அழகரு. நீ கொடுத்த முத்தத்தோட குறுகுறுப்பு இன்னும் என் கன்னத்தில் மிச்சமிருக்கு அழகரு. வெறும் ஒருநாள் வாழ்க்கையோட என்னை விட்டுப் போய்டணும்ன்னு முடிவு பண்ணிட்டியா?’ மனதிற்குள் புலம்பி மருகிக் கொண்டிருந்தாள் கருவிழி.
அழுதழுது கண்களில் நீர் வற்றிப் போயிருந்தது. எங்கோ வெறித்தப் பார்வையோடு அமர்ந்திருந்தவளைப் பார்க்க பயமாக இருந்தது அரசிக்கு.
“கடவுளே.. இந்தப் பிள்ளைகளோட நேசமாவது இவர்களைச் சேர்க்கணும்!” வாய்விட்டே புலம்பினார் அரசி.
“ஏங்க! மாமாவுக்கு எப்படி இருக்குன்னு ஒருவார்த்தை ஃபோன் போட்டு கேளுங்க! விழிக்குத் தெரிய வேணாம்! அந்தப் பக்கமா போய் பேசுங்க!” கணவரை அனுப்பி வைத்தவர் கருவிழியின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டார்.
அதே நேரம், அழகரைப் பார்ப்பதற்காக கருவிழியைக் காத்தவராயன் உள்ளே அழைத்துப் போக, மனைவியின் முன்னால் வந்து நின்று, கண்களில் நீர் தளும்ப இடவலமாய் தலையசைத்து நின்றார் கதிர்வேல்.
கணவனின் ஒற்றைத் தலையசைப்பில் அரசிக்கு எல்லாம் புரிந்து போனது.
ஐசியூ அறையினுள் தலையில் கேப், மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடி காத்தவராயனுடன் நுழைந்தாள் கருவிழி. முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருக்க, ஏகப்பட்ட வயர்களின் நடுவே படுத்திருந்தான் அழகர். அவன் இதயத்துடிப்பைக் காட்டும் உபகரணத்திலிருந்து வந்த சத்தம் மட்டுமே அவன் உயிரோடிருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தது.
அவனை இப்படியொரு நிலையில் பார்த்ததும், வற்றிய கண்களில் மீண்டும் கண்ணீர் ஊற்றெடுத்தது. மழை நீரைப் பொழியும் மேகமாய், கண்கள் கண்ணீரை மழையாய் பொழிய, நீண்ட கேவலுடன் அழுகை அவளிடமிருந்து வெளிப்பட்டது.
“ம்ப்ச்! அவனைப் பார்க்கணும்ன்னு அடம் பிடிச்சு வந்துப்புட்டு இப்படி அழுதால் எல்லாம் சரியாகிருமா தங்கச்சி? அவனைப் பார்த்துட்டியா? வா போவோம்!”
கருவிழியை காத்தவராயன் அழைக்க, அவனிடமிருந்து விலகி, அழகரை நோக்கிச் சென்றவள், அவன் அருகே அமர்ந்து அழகரின் கரத்தை மட்டும் மென்மையாய் பற்றிக் கொண்டாள். அவள் எதுவுமே பேசவில்லை. அவள் வறண்ட இதழ்கள் ஒற்றை வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை. கண்களில் கண்ணீருடன் மென்மையாய் அவன் கரம் பற்றியபடி அமர்ந்திருந்தவளின் ஸ்பரிசத்தை அழகரின் முரட்டுக் கரம் உணர்ந்தது.
அவளின் ஸ்பரிசத்தை உணர்ந்த அவன் கரம், லேசாய் அசைந்தது. அழகன் கருவிழி மீது வைத்திருந்த அளவில்லா நேசம் அவனை மீட்டு மீண்டும் கொண்டு வந்திருந்தது. விதியையும் மீறி, அவளோடு ஜென்மங்கள் தாண்டியும் வாழ வேண்டும் என அவன் கொண்டிருந்த நேசமும், காதலும், அவள் மீதான ஆசையும், அவளின் ஸ்பரிசத்தில் உயிர்த்து, போகவிருந்த அவன் உயிரைப் பிடித்து நிறுத்தியிருந்தது.
“அழகரோட கை அசையுதுண்ணே! பாருங்களேன்! என் கையை அழகர் பிடிச்சுச்சு!” எனக் கருவிழி சொன்னதை நம்பாமல் பார்த்தான் காத்தவராயன்.
“ம்ப்ச்! நீயா எதையும் கற்பனை பண்ணிக்காதே தங்கச்சி!”
“இல்லண்ணே நெசமாத்தேன் சொல்றேன்.!” அவள் சொன்னதை அப்போதும் கூட அவன் நம்பவில்லை. ஆனால் சிறிது நேரத்திலேயே அழகரின் கண்களுக்குள், உருண்ட கருமணிகளைப் பார்த்ததும், காத்தவராயனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
“தங்கச்சி! அழகரு கண்ணு அசையுது!” அதீத மகிழ்வுடன் சொன்னான் காத்தவராயன்.
“நான்தேன் சொன்னேன்ல்ல.?” லேசான புன்னகை கூட எட்டிப் பார்த்தது அவளிடம். அவசரமாய் மருத்துவரை அழைத்து வந்து, அவனைப் பரிசோதிக்கச் சொல்லி, அவன் ஆபத்துக்கட்டத்தைத் தாண்டி விட்டான் என அறியும் வரை, கருவிழி அவளாகவே இல்லை. அவசரமாய் அழகரின் அறையிலிருந்து வெளியே வந்தவள்,
“அத்தே..! அழகருக்கு ஒண்ணுமில்லை! சீக்கிரம் சரியாகிடும்ன்னு டாக்டர் சொல்லிட்டாக!” என்றபடியே அரசியை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள். சந்தோஷத்திலும் அவளை மீறி வெளிப்பட்ட கண்ணீர் அரசியின் தோளை நனைத்தது.
“விழிம்மா! விழிம்மா! உங்க தாத்தா..! உங்க தாத்தா..!” தோளில் சாய்ந்திருந்தவளைப் பிரித்தெடுத்து, அவள் முகம் பார்த்தார் அரசி.
“தாத்தாவுக்கு என்ன ஆச்சு அத்தே?”
“தாத்தா இப்போ இல்லை விழிம்மா! நம்மளை விட்டுப் போய்ட்டாக.. எம் மயன் பொழைச்சு வருந்துருவான்னு சந்தோஷப்படவா? இல்லை பெரியவரு நம்மளை விட்டுப் போய்ட்டாருன்னு அழவான்னு தெரியலையே..?” கண்ணீரோடு அரசி சொல்ல நிஜமாகவே அழுவதா? சிரிப்பதா? தெரியவில்லை கருவிழிக்கு.
‘ஏன்? ஏன்? நமக்கு மட்டும் ஏன்?’ கேள்வி அவள் மனதில் எழுந்தாலும், அவளிடம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை.
காத்தவராயனுக்கும் பெரியவரின் இழப்பு ரொம்பவே வருத்தமாக இருந்தது. குடும்பத்தில் ஒரு நபரின் இழப்பு அத்தனை சாதாரணம் இல்லையே? தனக்காய் பெண் பார்த்து அழைத்து வந்த பெரிய மனிதன் இப்போது இல்லை என்பதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவே மிகவும் சிரமப்பட்டது.
அதேநேரம், காக்கி உடையில் கம்பீரமும் நிமிர்வுமாய் காத்தவராயனின் முன் வந்து நின்றான் ரிதுவர்ணன்.
“ரொம்ப நன்றிங்க சார்! நீங்க இல்லைன்னா, என் நண்பனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்க முடியாது. உங்களுக்கும் எனக்கும் நெருங்கிய பழக்கமில்லை. அழகருதேன் ரொம்ப நாளைக்கு முன்னே ஒருமுறை சொல்லியிருக்கான். உங்க நம்பரும் அவன்தேன் கொடுத்தான். கூப்பிட்டதும் வந்ததுக்கு நன்றிங்க!” தன் நண்பனை காப்பாற்ற உதவி செய்த காவல் துறை நண்பருக்கு நன்றி தெரிவித்தான் காத்தவராயன்.
“நமக்கு சென்னையில் தான் வேலை! கொடைக்கானலுக்கு மாற்றலாகி வந்தப்போ, நான் போலீஸ்கரன்னு தெரியாமலே அழகர் உதவி செஞ்சார். அது அப்படியே நட்பா மாறிடுச்சு. அவரோட பிஸ்னஸ் விஷயமா இங்கே வரும் போது மீட் பண்ணிப்போம். ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் இல்லை. பட் ஃப்ரெண்ட்ஸ்.! நாம யாரை சந்திக்கணும்ன்னு நாம முடிவு பண்ணுறதில்லையே!” புன்னகையுடன் கை குலுக்கினான் ரிதுவர்ணன்.
“நன்றிங்க சார். அந்த ரோஹன் என்ன ஆனான்? இந்தக் கோர்ட் கேஸ்ன்னு எங்களால் அலைய முடியாது சார். அந்தப் பையன் வேற பெரிய இடம்!” என இடைநிறுத்தினான் காத்தவராயன்.
“சின்னவங்க பெரியவங்கன்னு யாரும் இல்லைங்க! அவங்க செய்ற செயல் தான், அவங்களைப் பெரியவங்களாவும் சின்னவங்களாவும் மாத்துது. அப்படி பார்த்தால் இந்த ரோஹனெல்லாம் ரொம்ப சின்ன புத்தி உள்ளவன் தான். நீங்க பயப்பட வேண்டாம், இவன் தப்பிச்ச விஷயம் நேஷ்னல் நியூஸ் ஆகிடுச்சு. சென்ட்ரல் மினிஸ்டர் ராஜினாமா பண்ணப் போறார். மலையிலிருந்து தவறி விழுந்து குற்றுயிராய் கிடந்த ரோஹன் இப்போ கோமாவில் இருக்கான். தப்பிச்சுப் போன ரோஹனை பிடிச்சுக் கொடுக்க முயற்சி பண்ணி தான் அழகருக்கு இப்படி ஆகிடுச்சுன்னு நியூஸ் திரும்பிடுச்சு. இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. கொஞ்ச நாளைக்கு போலீஸ் ப்ரொடெக்ஷன் கொடுக்க சொல்லியிருக்கேன். டோன்ட் வொர்ரி!” என ரிதூவர்ணன் சொன்னதும் தான் காத்தவராயனுக்கு நிம்மதியாய் இருந்தது.
அதே நேரம் ரிதுவர்ணனின் அலைபேசி அழைத்தது. திரையில் தெரிந்த எண்ணைப் பார்த்துவிட்டு, அழைப்பைத் துண்டித்தான் ரிதுவர்ணன். மீண்டும் அழைப்பு வந்த போதும் அதனை ஏற்காமல் துண்டித்தான் ரிதுவர்ணன். மூன்றாம் முறை அலைபேசி அழைக்க, இந்த முறை ஏற்று காதில் வைத்தான்.
“டேய் வருணு! எங்கேடா இருக்கே?” என்ற ரிதுவர்ணனின் அன்னை சகுந்தலாவின் குரல் கேட்டது.
“எம்மா ட்யூட்டியில் இருக்கும் போது ஃபோன் போடாதேன்னு சொன்னேன்ல்ல? ஏம்மா நொய் நொய்ங்கிற? நான் போலீஸ்காரன்ம்மா!”
“ஊருக்கு பட்டுக்குஞ்சமா இருந்தாலும், வீட்டுக்கு நீ துடைப்பக்கட்டை தான்டா மகனே..! நிலா ஃபோன் பண்ணினா ஏன்டா எடுக்க மாட்டேங்குறே? மாசமா இருக்கிற பிள்ளையை ஏன்டா ஏங்க வைக்கிற?!” என சகுந்தலா கேட்க,
“ராங்கி! போட்டுக் கொடுத்துட்டாளா? ஒரு மனுஷனை நிம்மதியாய் வேலை பார்க்க விடமாட்டீங்க! ஊருக்கே போலீசா இருந்தாலும், வீட்டுக்கு வாட்ச்மேன் தானே?” எனச் சிரித்தவன்,
“என் அழகு ராங்கி உனக்கு என்ன வேணும்டி? மாமியாரும் மருமகளும் சேர்ந்துக்கிட்டு எனக்கெதிரா கொடி பிடிக்கிறீங்களா? ஆனாலும் ரொம்ப டேமேஜ் பண்ணுறீங்க!” அலைபேசி மனைவியின் கரத்திற்கு மாறியிருக்கும் என்பதை அறிந்தே பேசினான் ரிதுவர்ணன்.
“ஹலோ மிஸ்டர். ரிதன், இந்த ராங்கி ஒண்ணும் உங்களைத் தேடலை. உங்க புள்ளை தான் என் வயிற்றுக்குள் உட்கார்ந்துட்டு, அப்பா வேணும்ன்னு அடம் பிடிக்கிறான். உங்க பிள்ளைக்காக வந்தால் வாங்க! இல்லைன்னா விடுங்க! நானும் என் மாமியாரும் உங்களை டைவர்ஸ் பண்ணிடுறோம்!” என நிலாஞ்சனி சொல்ல,
“ஆமாடா டைவர்ஸு பண்ணிடுவோம் பார்த்துக்க!” என்ற சகுந்தலாவின் குரல் பின்னால் கேட்டது.
அதன் பின் அரை நிமிடம் கூட நிற்காது, தன் மனைவி நிலாஞ்சனியைப் பார்ப்பதற்காய் விடைபெற்றுக் கிளம்பியிருந்தான் ரிதுவர்ணன்.
******
அடுத்தக்கட்ட வேலைகள் அதிவேகமாய் நடைபெற்று சொக்கேசனின் உடலை தகனம் செய்யும் வரையிலுமே அழகர் நிதானத்திற்கு வரவே இல்லை. தன் மகன்களை விட, தன் மூத்த பேரன் நெடுமாறனை விட, அழகரின் கையால் கொள்ளி போட வேண்டுமென்ற சொக்கேசனின் கடைசி ஆசைக் கூட நிராசையாகத்தான் போனது.
அங்கயற்கண்ணியோ, மனதில் வைத்திருந்த வைராக்கியத்தின் படியே துளி கண்ணீரைக் கூட கணவனுக்காய் சிந்தவில்லை.
கணவன் என்ற உறவே அற்றுப் போன பிறகு கண்ணீர் எப்படி வரும்? அவ்வளவு எளிதாய் அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஜீரணிக்கவோ, சொக்கேசனை மன்னிக்கவோ அங்கயற்கண்ணியால் முடியவே இல்லை. மனம் அந்த அளவிற்கு மரத்துப் போயிருந்தது. வீட்டில் ஓர் ஓரமாய்க் கிடந்த சக்கர நாற்காலி மட்டும் சொக்கேசனை அவ்வப்போது நினைவுப் படுத்திக் கொண்டிருந்தது.
எல்லாம் நடந்து முடிந்து பத்து நாட்கள் கடந்த நிலையில் தான் அழகர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தான். பெரியவர் தவறிய அன்றே நெடுமாறனும் மதுவும் கிளம்பி வந்திருந்தனர்.
“நாலு புள்ளைகளுக்கும் சேர்த்து சுத்து பூங்கொடி! ஒட்டுக்கா ரெண்டு கல்யாணத்தை முடிச்சுப்புட்டாகன்னு ஒரே திருஷ்டி. கல்லடி பட்டாலும் படலாம். கண்ணடி படக் கூடாது. டேய் வீரபத்ரா நீயும் சேர்ந்து நில்லுடா!” வீரபத்ரனைப் பணித்தார் அங்கயற்கண்ணி.
“அட போங்க அப்பத்தா! இந்த மைடப்பி கண்ணே முட்டைக்கண்ணு, இவளை யாராச்சும் கண்ணு வைக்கப் போறாங்களாக்கும்.? போங்க அப்பத்தா!”
“போடா டென் ருப்பீஸ்..! நானே சோகமா இருக்கேன்!”
“நெய் தோசையைப் பார்த்தால் உன் பொய் சோகமெல்லாம் பறந்து போயிரும் தங்கச்சி!” இடையிட்டான் காத்தவராயன்.
“நாங்க இங்கிருந்து கிளம்பும் போது, தாத்தா ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வச்சாங்க அம்மாச்சி. இப்போ இந்த வீட்டில் தாத்தா இல்லையே?” குரல் தடுமாறியது கருவிழிக்கு.
“பிறப்பு மாதிரி, இறப்பும் எல்லார் வாழ்க்கையிலும் வர்ரதுதேன் விழி.! வாழற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் வாழணும்! அது தான் ரொம்ப முக்கியம். நீ அழகரை உள்ளாற கூட்டிட்டு போ!” என அவர் சொல்ல, மெதுவாய் அவனை அறைக்கு அழைத்துப் போனாள் கருவிழி.
அறைக்குள் நுழைந்ததும், அழகரைக் கட்டிலில் அமர வைத்தவள், அவன் மார்பில் மென்மையாய் சாய்ந்துக் கொண்டாள். அவள் கண்ணில் துளிர்த்த கண்ணீர் அவன் மார்பை நனைத்தது.
“ம்ப்ச்! என்னத்துக்குடி அழறே? நான்தேன் வந்துட்டேனே?”
“ரொம்ப பயமுறுத்திட்ட அழகரு! உசிரே போயிருச்சு தெரியுமா? என்னை விட்டுப் போகணும்ன்னு முடிவு பண்ணிட்டியா அழகரு? என்னால் தானே? உனக்கு இப்படி ஆனதுக்கு நான் தானே காரணம்? என்னை மன்னிச்சுரு அழகரு! ரோஹனோட தகராறு வந்ததிலிருந்து எல்லாத்துக்கும் நான் தானே காரணம். என்னைக் காப்பாத்தணும்ன்னு தானே இப்படி அடிபட்டு உட்கார்ந்திருக்கிறே? ரொம்ப வலிக்குது அழகரு. குற்றவுணர்ச்சியா இருக்கு. எல்லாத்துக்கும் நான்தேன் காரணம்ங்கிற நினைப்பே நிம்மதியாய் தூங்க விட மாட்டேங்குது.!”
“கிறுக்கச்சியாடி நீ? எல்லாத்தையும் உன் தலைமேல் போட்டுக்கிறதுக்காக தியாகிப் பட்டம் எதுவும் கொடுக்கப் போறாகளா? நடக்கணும்ன்னு இருக்கிறது நடந்து தான் தீரும். இதை யாராலும் மாத்தவே முடியாது. அவ்வளவு லேசில் உன்னை விட்டுப் போக மாட்டேன்டி! மனசில் அம்புட்டு ஆசையை பதுக்கி வச்சிருக்கேன். உசிரோட இருக்கிற ஒவ்வொரு நொடியும் உன்னோட வாழணும்ன்னு கனவெல்லாம் வச்சிருக்கேன். சரியான லூசுடி நீ.! அழுதாக் கூட அழகா இருந்து தொலைக்கிறியே டி!” என்றவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் வைக்க, கணவனின் ஒற்றை முத்தத்தில் கண்மூடிக் கிறங்கினாள் கருவிழி.
*****
சில மாதங்களுக்குப் பிறகு,
“ஏய் புள்ள கயலு..! கொஞ்சம் இந்தப் பக்கம்தேன் பார்க்கிறது?” கிசு கிசுப்பாய் தன் புது மனைவியை அழைத்தான் காத்தவராயன்
“அடுப்படிக்குள்ளே என்னத்துக்கு வந்தீக? யாராச்சும் பார்த்துருவாக!”
“அடியேய்! நீ என் பொண்டாட்டி டி! இப்போவும் தள்ளுங்க விலகுங்கன்னு முடியலை டி! கல்யாணம் முடிஞ்சு ஒருமாசந்தேன் ஆகுது! சொந்தப் பொண்டாட்டியை கொஞ்ச நேரம் கொஞ்ச விடமாட்டாய்ங்க!” என்றவன்,
“இந்தப் பட்டுப்புடவையில் எம்புட்டு அழகா இருக்கே தெரியுமா கடல்கன்னி!” என்றபடியே உதடு குவித்து முத்தமிட வர,
“ம்க்கும்!” என்ற குரலில் அதிர்ந்து திரும்பிப் பார்க்க அங்கே அரசி நின்றிருந்தார்.
“இந்தக் குடும்பத்தில் நான் ரொமான்ஸ் பண்ண வந்தாலே அம்புட்டு பேருக்கும் மூக்கு வேர்த்துடும்.!” எனப் புலம்பியபடியே அவன் வெளியே வர, கதவோரமாய் நின்று சிரித்துக் கொண்டிருந்தார் பூங்கொடி.
“இந்தா ஒண்ணு கூடிட்டாய்ங்க! நம்மளை வச்சு விளையாடறதே இவிங்களுக்கு வேலையா போச்சு. உங்க குடும்பத்தில் வாக்கப்பட்டு நானும் என் பொண்டாட்டியும் படுற பாடு முடியாலை டா சாமி!” எனப் புலம்ப கூடத்தில் உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் மொத்தமாய் சிரித்தனர்.
******
“அழகரு! நிஜமாவே எனக்காகத்தான் செஞ்சியா? பொய் சொல்லாதே அழகரு!” தாடியை மழித்துவிட்டு கட்டை மீசையோடு நின்றவனைப் பார்த்துக் கேட்டாள் கருவிழி.
“உனக்காகத்தான்டி கருகரு! நீ தான் அன்றைக்கு, முத்தம் கொடுத்து ஏமாத்திட்டு, ஜெய்ச்சுட்டேன்னு சொன்னியே? அப்போ நான் சொல்றதைச் செய்யணும்ன்னு சொன்னியே.. நீ இதைத்தான் சொல்லுவேன்னு எனக்குத் தெரியும்டி கருகரு.!”
“நான் சொல்லாமல் எப்படி தெரிஞ்சுச்சு அழகரு? அழகாத்தான் இருக்கு! பேசாமல் தாடியோடவே இருந்திருக்கலாம்.!” என அவள் சொல்ல, எதிரில் விலகி நின்றவளை தன்னோடு சேர்த்து இறுக்கியவன் அவள் காது மடலில் முத்தம் வைத்தான்.
“அழகரு! அம்மாச்சி சாமி கும்பிடணும்ன்னு சொன்னாக என்னை விடு! அப்பறம் நான் திரும்பவும் குளிக்கணும் சேலை கட்டணும் முடியாது அழகரு.!” என அவள் கெஞ்ச,
“சாமி கும்பிடும் முன் இன்னொரு வேலை இருக்குடி கரு கரு! ரொம்ப முக்கியாமான வேலை!” எனச் சொன்னான் அழகர்.
“உன் முக்கியமான வேலை என்னன்னு எனக்குத் தெரியும். நான் வரலை போ!”
“நான் அந்த நினைப்பில் இருக்கிறதை விட, பொழுதன்னைக்கும் நீதேன் அந்த நினைப்பில் இருக்கேடி கரு கரு!”
“ச்சீ போ மாமா!” என்றவள் அவன் மார்பில் முகம் புதைக்க, அவள் கரம் பற்றி இழுத்துப் போனவன் தங்க மீனாட்சியின் முன்னால் கொண்டு நிறுத்தினான்.
“இந்தா இதை அத்தைக் கிட்டே கொடு!” அவன் அவள் கரத்தில் தந்தப் பொருளைக் கண்டவள், நெகிழ்வுடன் கணவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“அழகரு..!” அவள் குரலில் இருந்த உணர்வை அவளாலேயே உணர முடியவில்லை.
“உன் கையால் கொடு டி!”
என்றவன், கொடுத்ததை வாங்கி தன் தாயின் கரத்தில் கொடுத்தாள் கருவிழி. அவள் அலுவலகத்தில் அவள் ஊதியப் பணத்தைப் போடுவதற்காக வங்கிக் கணக்கை துவக்கி, பற்று அட்டையை (Debit card) அவளின் மேலாளர் அவள் கரத்தினில் தந்த போது, அதை வாங்கி வந்து அழகரிடம் கொடுத்துவிட்டு மறந்துவிட்டாள்.
அவளுக்கான மாத ஊதியம் எவ்வளவு.? என்பது கூட அவளுக்குத் தெரியாது.
“அத்தே! கருவிழியோட சம்பளம் மாசம் மாசம் வரும்! நீங்க உங்க தேவைக்கு செலவு பண்ணுங்க! யாருக்கும் எந்தக் கணக்கும் சொல்ல வேண்டாம். யார் கிட்டேயும் பணம் கேட்டு நிற்க வேணாம். உங்களுக்குத்தான் ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கத் தெரியுமே?” மருமகனாய் இல்லாமல், மகனாய் நடந்துக் கொண்டான் அழகர்.
“அழகரு! நீ எம் மருமவன் இல்லை! மயன்! நான் பெறாத மயன்.! என்னை நம்பி ஒரு பிடிப்பு இல்லாமத்தேன், கிடைச்ச வேலையைச் செஞ்சுக்கிட்டு, ஏச்சு வாங்கிட்டுத் திரிஞ்சேன். எம் மவ அவள் சொந்தக்காலில் நிக்கிறாங்கிறதே எம்புட்டு சந்தோசமா இருக்கு தெரியுமாய்யா?!” நெகிழ்வும், மகிழ்ச்சியும் மேலோங்க இருவரையும் தோளோடு அணைத்துக் கொண்டார் தங்க மீனாட்சி.
“தேங்க்ஸ் அழகரு!” நீர் ததும்பிய கண்களோடு அவள் சொல்ல,
“ஐ லவ் யூ டி ஆள் மயக்கி..!” எனச் சொல்லி அவள் முகம் சிவக்க வைத்தான் அழகர்.
******
ஒட்டு மொத்தக் குடும்பமுமே தங்கள் வீட்டின் பக்கவாட்டில் அமைந்திருந்த சிறிய கோவிலின் முன் கூடியிருந்தனர். தன் கணவர் துரோகம் செய்த இரஞ்சிதத்திற்காகவே வீட்டு எல்லைக்குள்ளேயே சிறிய கோவிலைக் கட்டியிருந்தார் அங்கயற்கண்ணி. சிசு தாங்கியிருந்த பெண்ணின் உருவம் தெய்வமாய் சிரித்துக் கொண்டிருந்தது.
“நம்ம பக்கம் வீட்டு மதிலுக்குள்ளே சாமியை வச்சு கும்பிட மாட்டாகளே அத்தே?” எனக் கேட்டார் அரசி.
“இவ நம்ம குலத்தைக் காத்தவள், குலம்காத்த அம்மன். நம்ம முன்னோர்களை, நமக்கு வழி காட்டினவங்களை தெய்வமா வச்சு வழிபடுறது நம்ம பழக்கம் தானே அரசி? இவ நம்ம மூத்தார் வழி வந்தவள்ன்னு வச்சிக்கோ! குலசாமிக்கு அடுத்து நம்ம குடும்பத்தைக் காக்கிறவள் இவதேன்.!”
“நீங்க சொன்னா சரித்தேன்!”
“புள்ளைகளா! இலையைக் கொண்டாங்க, படயலைப் போட்டு சாமியைக் கும்பிடுவோம்!” என பூங்கொடி சொல்ல, சிறிது நேரத்திலேயே பொங்கல் வைத்து, படையலிட்டு, அழகரின் உயிரைக் காத்துக் கொடுத்து, தெய்வமாய் மாறிய இரஞ்சிதத்தை குலம்காத்த அம்மனாய் வழிபட்டனர் அனைவரும். அனைவரின் மனதிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நீக்கமற நிறைந்திருந்தது.
அங்கயற்கண்ணி மட்டும் அனைத்தும் அறிந்தவராய், கைக்கூப்பி வணங்க, மற்றவர்கள் நிஜமாகவே தெய்வமாகப் பாவித்து மனமுருகி வேண்டினர். அழகரும் கருவிழியும் கூட, கண் மூடி வணங்கி, ஏழேழு ஜென்மத்திற்கும் பிரியாது சேர்ந்திருக்க வரம் வேண்ட, குலம் காத்தவளாய் வீற்றிருந்த தாயின் கரத்திலிருந்த மலர் ஆசீர்வாதமாய் விழுந்தது.
இவர்கள் இருவரின் நேசம் இறைவனின் ஆசியுடன், அகம் சேர்ந்து ஈரேழு ஜென்மங்களுக்கு நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

அழகனின் அகம் சேரடி..! கதை நிறைந்தது மக்களே! என்னுடனும் கதையுடனும் தொடர்ந்து பயணித்து ஆதரவளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். விரைவில் புதுக் கதைக் களத்துடன் சந்திப்போம் அன்புக்களே..!
என்றென்றும் அன்புடன்,
சுசி கிருஷ்ணன்.
அருமையான அழகானதொரு படைப்பு.
🌻🌻
ஒவ்வொரு அத்தியாயமும் சிரிக்க செய்து ரசிக்கவும் வைத்தது.
ரசனைமிக்க பெயர் தேர்வுகள் மற்றும் உரையாடல்கள். ✨
விளையாட்டுதனமான விழி சிறிது சிறிதாக மனம் தெளிந்து, உறவுகளை புரிந்து, உணர்வுகளை கடந்து காதலை அறிந்து கொண்ட விதம் அருமை.
விழி மீதான அழகரின் அக்கறையும் அளவில்லா நேசமும் வியக்க வைப்பதாய். காதலை உணர்ந்தும் அவளை கட்டாயப்படுத்தாமல் நேசத்தை மட்டுமே வாரிவழங்கியது அருமை. 🌟
பதிற்றுப்பத்து, ten rupees, மைடப்பி, காக்கா விரட்டி, கடற்கன்னி, ஹிட்லர், ரோஷம் கெட்ட ரோஹன் என்று விதவிதமான பட்டப்பெயர்கள். (ரசிச்சு எழுதியிருக்கீங்க) 💫
நிறைய இடங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.
நெடு மது காதல் அவர்களது கல்யாண கலாட்டா அதன் மூலம் பழமையான எண்ணப்போக்கினை நீக்கி முற்போக்கு சிந்தனையை விதைத்தது நன்றாக இருந்தது.
முல்லைபந்தல் கீழான ஊஞ்சல் 😍😍😇 என்றென்றும் என் நினைவில் நிற்கும்.
வாழ்த்துகள் 👏🏼👏🏼💛
நெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤ ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நீங்கள் கொடுத்த கருத்துக்கள் நினைவில் நீங்காது இடம் பெறும். உங்களின் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மனமர்ந்த நன்றிகள் ❤💚💜
அழகர் விழியின் அளவில்லா நேசம் வென்றுவிட்டது.
அவள் மூச்சு காற்று அலையும் சுற்றத்தில் வாழ்வதே அழகருக்கு சுகம் தான்.
இதில், அவள் ஸ்பரிசம் தீண்டி அவன் எழவில்லை என்றால் தான் அதிசயம்.
ரிதுவர்ணன் நிலாஞ்சனி அழகான பெயர்கள். கதையின் பெயர்?
தவறுகளில் பெரிய தவறென்றில்லாமல் தவறுகளில் கூட சேராத கொடுந்தீங்கு தான் துரோகம்.
துரோகத்திற்கு தண்டனையாக தனது சொல் பேச்சைக்கேட்டு தான் காட்டிய வழியில் நடந்து, தனது தந்தையின் மறுவுருவாக காணப்பட்டவனது கைகளால் கொள்ளி வாங்கிக்கொள்ள வேண்டுமென்ற அவரது கடைசி ஆசை கூட நிறைவேறாமல் போய்விட்டது.
காக்க விரட்டிய அவன் கடற்கன்னி கூட காதல் கடல்ல நீந்த விடுங்கப்பா.
குலம் காத்த அம்மன் ✨✨
ரிதுவர்ணன் – நிலாஞ்சனி அஞ்சன விழிகளிலே கதை டியர். சீக்கிரம் ரீ ரன் செய்வோம். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா. உங்களுக்குக் கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி 💙