Loading

அகம்-44

ஏகாந்தமான இரவுப் பொழுது..

 

ஜன்னலில் வழிந்த திரைச் சீலையின் பின்னால், வானில் தகிக்கும் நிலாவின் வெளிச்சம் பட்டுத் தெறித்தது.

 

கண்கள் முழுதும் கனவுகளுடன், மனையாளை எதிர்பார்த்துக் காத்திருந்தான் துடிவேல் அழகர்.

 

கடிகார முட்கள் கூட, அவனின் அவசரத்திற்கு நகர மறுத்தது. அவன் உள்ளம் சுமந்திருந்த ஒட்டு மொத்தக் காதலையும் கொட்டிவிட அவன் மனமும் உடலும் பரபரத்தது.

 

விவரம் புரியாத வயதில் பாசம் என நினைத்து, பின் நேசமாய், காதலாய், காமமாய், சர்வமும் அவளாகிப் போனதை அவனால் இந்த நொடி வரை நம்பவே முடியவில்லை. அவனின் கண்களில் அவளுக்கான தேடலும் காதலும் எக்கச்சக்கமாய் வழிந்தது.

 

“நீங்கதேன் போய் சொல்லுங்களேன்? நீங்கப் பெத்தப் புள்ளை தானே? ஒரு தகப்பனா இதைக் கூடச் செய்ய மாட்டீங்களா?”

 

“என்னை என்னத்தடி சொல்ல சொல்றே? தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைக்கிட்டே இதை எப்படி சொல்றது?”

 

“நெசமாவே நம்மப் புள்ளைக்கு அப்பன் நீங்க தானே? நீங்க சொல்லாமல் பக்கத்து வீட்டுக்காரனா சொல்லுவான்.?” எரிச்சலுடன் எதிரில் நின்றக் கணவனைப் பார்த்தார் அரசி.

 

“என்னடி! வாய் கூடிப் போச்சோ? கல்யாணத்தை நீங்க தனியா நின்னு தானே நடத்துனீக? இதைச் சொல்றதுக்கு மட்டும் நாங்க வேணுமாக்கும்.? உனக்கும் மயந்தானே நீயே போய் சொல்லு!”

 

“விவஸ்தை கெட்ட மனுஷன், இவருக்கிட்டே சொன்னதுக்கு நானே போய் சொல்லியிருக்கலாம். அத்தை முன்னாடியே விஷயத்தைச் சொல்லிருந்தாகன்னா, பக்குவமா பிள்ளைகள் கிட்டே சொல்லியிருக்கலாம். எல்லாம் நேரம்!” புலம்பிக் கொண்டே அழகர் அறையின் வாசலில் நின்றிருந்தார் அரசி.

 

இத்தனை நேரமாய் தாய் தந்தைப் பேசிக் கொண்டிருந்த சம்பாஷணைகள் யாவும், திறந்திருந்த கதவிடுக்கின் வழியே, அவன் செவிகளை எட்டத்தான் செய்தது. ஆனாலும் என்ன ஏதென்று புரியாமல் இடையிடுவது சரியாய் இருக்காது, என்றெண்ணி அமைதியாய் இருந்தான் அழகர்.

 

தன்னிடம் பேசுவதற்குத் தான் இத்தனை சங்கடம் எனப் புரிந்ததும், கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தான் அவன்.

 

“என்ன ஆச்சுமா? என்ன சங்கதி? அப்பா ஏன் கோபமா போறாங்க?” என வினவினான் அவன்.

 

“உங்க அப்பனுக்கு என்னைக்குத்தேன் கோபம் இல்லாமல் இருந்துச்சு? அவரு கிடக்கிறாரு! அது ஒண்ணுமில்லை அழகரு, நாளைக்கு குலசாமி கோயிலுக்குப் போவணுமாம். அதேன் இன்னைக்கு விஷேஷம் வேண்டாமின்னு அப்பத்தா சொன்னாக! விழி ரவைக்கு எங்கூட படுத்துக்கிடட்டும்! நீ எதுவும் சங்கடப்பட்டுக்காதே! அழகரு” தயங்கித் தயங்கியே சொல்லி முடித்தார் அரசி.

 

“இதில் என்னம்மா இருக்கு! பரவாயில்லை நீங்கப் போய் படுங்க!” எனச் சாதாரணமாய் சொன்னான் அழகர். என்னதான், தாயின் சமாதானத்திற்காய் சொல்லிவிட்டாலும் அவனுக்குள் ஒருவித வெறுமை. ஏனோ, தான் மட்டுமே இந்த உலகத்தில் தன்னந்தனியாய் சிக்கித் தவிப்பதைப் போல் ஓரெண்ணம் அவனுக்குள்.

 

“இந்த ஆள்மயக்கி என்னதான் செஞ்சாளோ? மனுஷனை நிம்மதியாவே இருக்க விட மாட்டேங்குறா!” எனப் புலம்பியவன், கதவை அடைத்துவிட்டு கட்டிலில் வந்து படுத்துவிட்டான். வெறுமனே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தவனுக்கு, தூக்கம் வருவேனா? என அடம் பிடித்தது.

 

அதற்கு மேலும் படுத்திருக்க முடியாமல், பஞ்சு மெத்தை முற்படுக்கையாய் மாறி, முதுகைப் பதம் பார்த்தது. பொறுமை இழந்தவன் கதவைத் திறந்து கீழே இறங்கிவிட்டான்.

 

பாதி படிகள் இறங்கும் போதே, தன் அன்னையிடம் அமர்ந்து, ஊர் கதையெல்லாம் பேசிக்கொண்டே, எதையோ உண்டுக் கொண்டிருந்த கருவிழியைக் கண்டு கொண்டான் கள்வன். எந்த அலங்காரமும் இல்லாது, இரவு உடையில், அவன் கட்டிய மஞ்சள் கயிறு அவள் மார்பில் ஊசலாட, நெற்றிக் குங்குமம் தங்கமாய் ஜொலிக்க அமர்ந்திருந்தவளை அவன் விழிகள் கள்ளத்தனமாய் இரசித்துத் தொலைத்தது. தன் கண்களை உருட்டி, உருட்டி, ஒற்றை வளையல் சுமந்தக் கரத்தினை அசைத்து அசைத்துப் பேசும் தோரணையில் சொக்கித்தான் போனான் மன்னவன்.

 

தன்போக்கில் பேசிக் கொண்டே இருந்தவள், எதேச்சையாய் மாடிப் படிகளின் பக்கமாய் பார்வையைத் திருப்ப, தோரணையாய் மார்பின் குறுக்கே கையைக் கட்டியபடி, தன்னையே பார்த்திருந்த அழகரின் மேல் அவள் பார்வை விழுந்தது.

 

சட்டென அவன் பார்வையில் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்க, முகம் சிவக்கப் பார்வையைத் தழைத்தாள் பெண்.

 

மருமகளிடம் பேசியபடியே மலர் தொடுத்துக் கொண்டிருந்த அரசி, திடீரென சத்தம் வராமல் போகவும், ஓரக்கண்ணால் மருமகளை நோக்கியவர், மாடிப் படியில் தன் மகன் நிற்கிறான் என்பதையும் அறிந்துக் கொண்டார்.

 

“விழிம்மா! இங்கண புழுக்கமா கசகசன்னு இருக்குல்ல? அவ்வளவு தான், இன்னும் கொஞ்சம்தேன், ஒரே இடத்தில் உட்கார்ந்து காலெல்லாம் மரத்துப் போயிருக்கும், நீ கொஞ்சம் மெத்தையில் போய் காலாற நடந்துட்டு வர்ரியா? துணைக்கு வேணும்னா உன் புருஷனைக் கூப்பிட்டுக்கோ!” தலை குனிந்தபடியே புன்னகையை இதழுக்குள் பதுக்கியபடியே சொன்னார் அரசி.

 

“இ.. இல்லைத்தே! வேணாம்! மாமா தூங்கிருக்கும்!” தடுமாற்றமாய் சொன்னவள் அழகரத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“அங்கண படியில் தானே நிக்கிறான்! உன்னைப் பார்க்கத்தேன் வந்துருக்கான். போ! போய் பேசிப்புட்டு உறக்கம் வரும் போது வா! அத்தை கதவைத் திறந்துதேன் வச்சிருப்பேன்.!” என அரசி சொல்லவும், தயக்கமாய் அவரின் முகம் பார்த்தவள், மாடிப்படியில் நின்றிருந்தவனை முறைத்துக் கொண்டே படியேறிப் போனாள்.

 

“என்னத்துக்கு டி என்னை முறைக்கிறே? முட்டைக்கண்ணு ரெண்டும் தெறிச்சு வெளியில் விழுந்துடப் போகுது.” உதடுகளுக்குள் பதுக்கிய புன்னகையுடன் சொன்னான் அழகர்.

 

“அங்கிட்டு போ அழகரு! அத்தை என்ன நினைச்சுருப்பாங்க! எனக்கு சங்கடமா போச்சு! உன்னை யார் என்னை வந்து கூப்பிடச் சொன்னது?”

 

“ஏய் கரு கரு! நான் எப்போ டி உன்னை அழைச்சேன்?”

 

“நீ தான் கூப்பிட்டே! அதனால் தான் அத்தை போகச் சொன்னாங்க!”

 

“ஏய்! ஆள் மயக்கி! நான் உன்னை அழைக்கவே இல்லை! எம் பொண்டாட்டி அழகா இருக்காளேன்னு கொஞ்சம் தள்ளி நின்னு இரசிச்சுட்டு இருந்தேன். எங்க அம்மா எம் மனசைப் புரிஞ்சுக்கிட்டு உன்னை அனுப்பி வச்சிட்டாக!” எதிரில் நின்றவளின், நெற்றியில் ஊஞ்சலாடிய சுருள் முடியைக் காதோரமாய் ஒதுக்கினான் அழகர்.

 

“ம்ப்ச்! போ மாமா! அத்தை நம்மளை என்ன நினைச்சிருப்பாக? எல்லாம் உன்னாலத்தான்.!” முகம் சுருக்கினாள் பெண்.

 

“ஒண்ணும் நினைச்சிருக்க மாட்டாங்க டி! எம் மயன் பொண்டாட்டி இல்லாமல் அரை நிமிஷம் இருக்க மாட்டான்னு நினைச்சிருப்பாங்க! நினைச்சிட்டுப் போவட்டும்.!” என்றவன் அவளை இழுத்து தன் கை வளைவில் வைத்துக் கொண்டான். மொட்டை மாடியின் பக்கவாட்டில் கிளை பரப்பியிருந்த, வேப்பமரத்தின் ஊடே தெரிந்த நிலவொளியில் அவள் மதி முகத்தை இரசித்தபடியே, மொட்டை மாடிச் சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தான்.

 

“உட்காரு டி! என்னத்துக்கு நட்டமா நிக்கிறே?”

 

“அத்தை தேடுவாங்க போறேன் அழகரு!”

 

“அதெல்லாம் யாரும் தேட மாட்டாங்க! உட்காரு! உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்டி பயப்படாதே!” என்றவன் தன்னவளை இழுத்து தன்னருகே அமர்த்திக் கொண்டான்.

 

“போ அழகரு!” அவனின் இரட்டை அர்த்தப் பேச்சில் முகம் சிவந்தாள் அவள்.

“அழகரு!”

“ம்ம்! சொல்லுடி!”

“என்னை நெசமாவே உனக்குப் பிடிக்குமா?”

“பிடிக்காமல் தான், தாலிக்கட்டி கூட்டியாந்தேனா? இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்கிற பாரு!” சலித்துக் கொண்டான் அவன்.

“ம்ப்ச் சொல்லு அழகரு!”

“நீ இத்துணூண்டா இருக்கும் போதே பிடிக்கும் டி! நீ வர்ரதுக்கு முன்னே வரை நானும் நெடுமாறனும் மட்டுந்தேன். ரெண்டு பேரும் ஆம்பிள்ளைப் பிள்ளைங்க! முதன் முதலில், குட்டிப் பாப்பான்னு உன்னை வந்துக் காட்டும் போது, எங்க வீட்டுக்கும் புது பாப்பா வந்துருக்குன்னு சந்தோஷமா இருந்துச்சு. அம்மா கையில் வச்சு உன்னைப் பிடிச்சுக்கிட்டு என் கையில் தந்தாங்க! பஞ்சு போல அழகா இருந்த டி! நல்லா சந்தண நிறத்தில் உன் கண்ணு மட்டுந்தேன் கரு கருன்னு தெரிஞ்சுச்சு. தலையிலும் புருவத்திலும் முடியே இல்லாமல் மொழு மொழுன்னு இருந்தே!” ஒன்பது வயது சிறுவனாய் அவளைக் கையிலேந்தியக் காட்சியை நினைவு கூர்ந்தான் அழகர்.

 

“அதனால் தான் எனக்கு கருவிழின்னு பேரு வச்சீங்களா?”

 

“அது தாத்தா தான் பேரு வச்சிருப்பாங்க! பேருக்கு ஏத்த மாதிரி, முட்டைக் கண்ணை உருட்டி உருட்டி பார்ப்பியே!”

 

“ஏன் மாமா ஒருவேளை நான் அந்த ஆள் மாதிரி இருக்கேனோ? அம்மா ஒரு தடவை என்னை வையும் போது சொன்னிச்சு, நான் எங்க அப்பனைக் கொண்டு பிறந்திருக்கேன்னு!” குரல் தடுமாறி தழுதழுத்தது அவளுக்கு. இத்தனை வருடங்களில் கருவிழி தன் தகப்பனைப் பற்றிப் பேசுவது இது தான் முதல் முறை.

 

“அடிச்சுப் பல்லு கில்லெல்லாம் கழட்டிடுவேன். நீ எவனைப் போலவும் இல்லை! அத்தை ஏதோ கோபத்தில் சொன்னதெல்லாம் மனசில் வச்சிப்பியா? வயிற்றுப் பிள்ளையோட ஒரு பெண்ணை நடுத் தெருவில் விட்டுட்டுப் போறவனெல்லாம் மனுஷனே இல்லை. உன் இனிஷியலில் கூட இல்லாதவனைப் பத்தியெல்லாம் ஏன் நினைக்கிறே? நீ எப்போவும் தங்க மீனாட்சியோட பொண்ணு அவ்வளவு தான். நம்மளை வேண்டாம்ன்னு முடிவு பண்ணினவங்களை, நாம நினைக்கிறது கூடப் பாவம் டி! உனக்கு எல்லாமுமா நான் இருக்கேன்டி!” அமர்ந்தபடியே அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அழகர்.

 

“ரொம்ப நாளாய் மனசில் இருந்துச்சேன்னு கேட்டேன்! நீ கோபப்படுற போ! நான் போறேன்!”

 

“சும்மா கோபப்படாதே டி! அத்தைப் பட்ட வேதனையெல்லாம் கண்ணார பார்த்திருக்கேன்டி! அவங்க பட்ட வேதனைக்கெல்லாம் காரணம் அந்த ஆள் தானே? அந்தக் கோபம் தான். நம்மளை வேண்டாம்ன்னு உதறினவங்க, நாம நினைக்கக் கூட தகுதி இல்லாதவங்க! இதுவே கடைசியாய் இருக்கட்டும். இன்னொரு முறை இதைப் பற்றிப் பேசாதே!” கண்டிக்கும் குரல் அவன் சொல்லிவிட, முகம் தூக்கிய படியே அமர்ந்திருந்தாள் கருவிழி.

 

“இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சிக்கத்தான் உன்னை வரச் சொன்னேனா? எம்புட்டு ஆசையோட கழுத்தில் மூணு முடிச்சு போட்டிருக்கேன். ஆசையாய் ஒரு முத்தம் கூட இல்லையா டி?” அவளை இயல்புக்குக் கொண்டு வர, குறும்புக் குரலில் கேட்டான் அவன்.

 

“போ அழகரு! இப்போவெல்லாம் நீ ரொம்பப் புதுசா தெரியறே? உன் பக்கத்தில் வந்தாலே மூச்சடைக்குது. தொட்டுப் பேசவே பயமா இருக்கு.” என அவள் சொல்ல, அவளின் இரு கரத்தினையும் பற்றி தன் கன்னத்தோடு அழுத்திக் கொண்டவன்,

 

“இப்போ பயமா இருக்கா?”

“இல்லையே!”

“இப்போ?” எனக் கேட்டவன் இன்னும் கொஞ்சம் அவளை நெருங்கியிருந்தான்.

“ம்ஹூம்..!” பதில் வராது குரல் மட்டும் வந்தது.

 

“இப்போ டி கரு கரு!” மூச்சுக்காற்று முகத்தில் மோதுமளவிற்கான இடைவெளியில் கேட்டவன், அவள் பதில் சொல்ல வாய் திறப்பதற்குள்ளாகவே இம்மியளவு இடைவெளியையும் குறைத்து பூஜ்ஜியமாக்கி இருந்தான். இடைவெளி குறைந்து அந்தச் சூழ்நிலையை இனிமை ஆக்கிரமித்திருந்தது.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. குழந்தையாய் கைகளில் ஏந்தி ஆசையாய், பாசமாய் பார்த்து வளர்த்து பின் பாசம் நேசமாய், உயிர் கொண்ட பிரியமாய் மாறி இன்று அவளே அவனது வாழ்வின் ஆதாரமாக மாறிவிட்டாள்.

    காதலின் ஏக்கத்தோடான அவனின் காத்திருப்பு இப்படி நீண்டு விட்டதே.

    அங்கே அவன் உறக்கம் வராமல் தவிக்க இங்கே இவள் வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் உண்டு வாயளந்து கொண்டிருக்கிறாள்.

    மகன் மருமகளது மனம் புரிந்து நடந்துகொள்ளும் மாமியார்.

    “நம்பள வேண்டானு உதறினவங்க நம்ப நினைப்புக்கு கூட தகுதி இல்லாதவங்க” 👌🏼✨

    1. Author

      நன்றிகள் டா 💜 தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் 💛