
அகம்-41
“அழகரு! இது..!”
“ம்ப்ச்! நல்லா இல்லை டி!”
“அப்போ இந்தக் கலரு!”
“உன்னை விட கலரா தெரியுது டி வேணாம்!” தன் முன்னால் குவிந்துக் கிடந்தப் புடவைகளைப் பார்த்து மலைத்துப் போய் அமர்ந்திருந்தாள் கருவிழி.
“அழகு! சேலை தானே எடுக்க வந்தோம்? இல்லை நீண்டுக்கிட்டே போவுதேன்னு கேட்டேன்.!”
“உன் தங்கச்சிக்கு பொருத்தமா பார்த்து எடுக்க வேணாமாடா?”
“எம்மா தங்கச்சி! நீ தான் கொஞ்சம் சொல்லேன். சேலை எடுக்க வந்தோமா? இல்ல நெய்ய வந்தோமான்னு வெளங்க மாட்டேங்குது.!”
“எய்யா அழகரு! எம்புட்டு நேரம்ய்யா? நேரத்தோட வந்துருகன்னு அப்பத்தா சொல்லி அனுப்புனாக! வந்து மூணு மணிநேரம் ஆகுது. இன்னும் ஒத்தை சேலையை எடுக்கக் காணோம்.? வெரசா எடுய்யா கிளம்புவோம்.!” என அரசி சொல்ல,
“அரசி! எனக்கு தூக்கம் வருது! ஒரு சேலை எடுக்க இம்புட்டு நேரமா?” எனச் சலித்துக் கொண்டார் பூங்கொடி.
“இந்தா அம்புட்டுத்தான்ம்மா! உம் மருமவளுக்கு பொருத்தமா எடுக்க வேணாமா? எதைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கு. புதுசா ஒண்ணும் இல்லையே?!” என யோசித்தவன்,
“பேசாமல் பிடிச்ச மாதிரி நெய்யக் கொடுத்துருவோமா?” எனக் கேட்டான்.
“அழகரு! கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரந்தேன் இருக்கு. நெய்யக் கொடுத்து வாங்கறதெல்லாம் சரியா வராது. அரக்கு, இல்லைன்னா சிவப்பு நிறத்தில் நான் சேலை எடுக்கணும்ன்னு உங்க அப்பத்தா சொல்லி அனுப்புனாக! பார்த்து வெரசா ஒண்ணு எடுங்க! நானும் அக்காவும் போய் மதுவுக்கு சேலை பார்த்து எடுத்துட்டு வர்ரோம்!” என அரசியும் பூங்கொடியும் எழுந்து சென்றுவிட, முன்னால் கிடந்த புடவைகளை ஆராய்ந்தபடியே அமர்ந்திருந்தான் அழகர்.
“இன்னும் எம்புட்டு நேரம்தேன் பார்க்கிறது அழகரு? கண்ணெல்லாம் அவிஞ்சு போயிரும் போல.. எல்லாப் பக்கமும் பளிச் பளிச்ன்னு தலையை வலிக்குது, பசிக்க வேற செய்யுது!” முகம் சுருக்கினாள் கருவிழி.
“கரு.. கரு.. நம்ம கல்யாணத்திற்கு துணி எடுக்க வந்திருக்கோம் டி! கொஞ்சம் பொறுமையாய் தான் இரேன்டி! என்ன கலர்னாலும் பரவாயில்லை! எதையாவது ஒண்ணு எடு மாமா! வெறும் சிவப்பு கலரா பார்த்து பார்த்து, நீ கூட என் கண்ணுக்கு சிவப்பாகத்தேன் தெரியுற! முடியலை அழகரு!” அப்பட்டமாய் அவள் குரலில் சோர்வு தெரிந்தது.
“சார் ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கீங்க! இது நம்ம கடையோட புது டிஸைன். மதுரையோட பாரம்பரியமா, கள்ளழகரையும், சுந்தரவல்லி தாயாரையும் பார்டரில் டிசைன் பண்ணியிருக்கோம். பார்க்கிறீங்களா?” என அந்தக் கடையின் மேலாளர் கேட்கவும், சம்மதமாய் தலையசைத்தவன், கருவிழியையும் இழுத்துக் கொண்டு, அந்தப் புடவையைப் பார்க்க சென்றான்.
அழகான அரக்கு நிறத்தில், தங்க இழையோடிய புடவையில், புடவையின் பார்டரும், முந்தானையும் கள்ளழகர் மற்றும் சுந்தரவல்லி தாயாரின் உருவமும் அழகாய் நேர்த்தியாய் வடிவமைக்கப் பட்டிருந்தது. கருவிழியை அருகே நிறுத்தி, அவள் தோளில் புடவையை வழியவிட்டு, அவள் முகம் பார்த்தான் அழகர். அவள் நிறத்திற்கு வெகு பொருத்தமாய் இருப்பதைக் கண்டு, இமைக்க மறந்து அவளைப் பார்த்தான் அவன்.
“கொள்ளை அழகா இருக்கடி கரு கரு..!” கண்களில் மின்னலுடன் அவன் சொல்ல,
“நெசமாவா மாமா?!” என்றவளின் கண்கள், விலை எவ்வளவு என்று நோக்கியது
“ஆத்தி இது என்ன ரெண்டு லட்சம் போட்டுருக்கு. இம்புட்டு காசுக்கெல்லாம் வேணாம்! நீ வேற சேலை எடுத்துப்போம்!” என அவள் சொல்ல,
“எம்மா தங்கச்சி, மீண்டும் மீண்டுமா? மறுபடியும் முதலிலிருந்தா? எல்லா கோட்டையும் அழிச்சுட்டு ஒண்ணு ரெண்டுன்னு மறுபடியும் போடப் போறியா? முடியலைம்மா நாக்கு தள்ளுது. ஒத்தை சீலை எடுக்க ஒண்பது மணி நேரமா பார்த்துக்கிட்டே இருக்கீங்க? பேசாமல் ஒண்ணு செய்வோமா? கடையை தூக்கிட்டு போய், உங்க வீட்டு மெத்தையில் (மொட்டை மாடி) நட்டக்குத்தற நட்டு வச்சிருவோம். பொறுமையாய் கல்யாண நாள் வரைக்கும் தேர்ந்தெடுங்க! கடுப்புகளை கிளப்பிக்கிட்டு!” தீர்ந்துப் போன பொறுமையுடன் கத்தினான் காத்தவராயன்.
“அடேய்! காக்கா விரட்டி இருடா! ஆளாளுக்கு எரிச்சலைக் கிளப்பிக்கிட்டு!” என்றவன்,
“ஏய் கரு கரு! காசு கொடுக்கப் போறவன் நான் தான்! உனக்கென்னடி கவலை? இந்தச் சேலையே எடுத்துப்போம்!” என உறுதியாய் சொன்னான்.
“இல்லை அழகரு! இம்புட்டு காசுக்கு எடுத்து எனக்கு பத்திரமா பார்த்துக்கவெல்லாம் தெரியாது. எதாவது ஆச்சுன்னா அம்மா வையும்.” சிறு பிள்ளையாய் முகத்தை வைத்துக் கொண்டு, பயத்துடன் அவள் சொன்னதைப் பார்த்தவனின் இதழ்களில் சிரிப்பு அரும்பியது.
“புடவைக்கு மட்டுமில்லை! உனக்கும் ஒண்ணும் ஆகாமல் பார்த்துக்கிறேன்டி கரு கரு! இதையே எடுத்துப்போம்!”
“எப்பா சாமிகளா! ஓய்ஞ்சு போயிருதுடா! புடவை எடுக்கவே இம்புட்டு நேரம்! இன்னும் நகை நட்டுன்னு மருதை முழுசும் இன்னைக்கு சுத்தலில் விடப் போறாய்ங்க! காது கொய்ய்ன்னுது.. வயிற்றுக்குள்ளே எதாச்சும் போடுவோம் வாங்க!” என காத்தவராயன் சொல்ல,
“ஆமாப்பா! வெரசா கிளம்புவோம்! இன்னும் சேலைக்குப் பொருத்தமா ப்ளௌஸ் தைக்கக் கொடுக்கணும். எம்புட்டு சோலி கிடக்கு? அப்பத்தா வேற ஒத்தைக்கு இருப்பாக! இரவைக்கு மதுவும் நம்ம நெடுமாறனும் வேற வருவாக! வாங்க! வாங்க! கிளம்புவோம்!” என அரசி அவசரப்படுத்தினார்.
அப்படியிருந்தும் புடவைக்குப் பொருத்தமாய் ஆபரணங்கள், அது இதுவென வாங்கிவிட்டுக் கிளம்பவே இரவாகியிருந்தது.
“இந்தாரு அழகு! புடவை எடுக்கிறேன், புடலங்கா வாங்குறேன்னு என்னைக் கூப்பிடாதே! மனுசனைக் கொலையா கொன்னு எடுத்துப்புட்டீங்க! நீ ஒண்ணு வேணுங்கிற, தங்கச்சி வேணாம்ங்கிது.. அம்புட்டு பெரிய கடையில் வந்து விளையாண்டு திரியறீங்க? போங்கடா நீங்களும் உங்க ஷாப்பிங்கும்!”
“கல்யாணத்துக்கு வாங்கறதுன்னா சும்மாவாண்ணே? நேரம் ஆகத்தானே செய்யும்?”
“உனக்கும் அவனுக்கும் தானே கல்யாணம்? எள்ளுதான் எண்ணெய்க்கு காயுது! எலிப் புழுக்கை என்னத்துக்கு காயணும்ங்கிறேன்? எம்மா கடல் கன்னி, தொண்டையை நனைக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டு வா!” எனச் சலித்தபடியே கடல் கன்னியிடம் கடலை வறுக்க, அடுக்களையை நோக்கிப் பறந்தான் காத்தவராயன்.
“அத்தே! வாங்க! நீங்க சொன்னபடியே சீலை, நகை, எல்லாம் எடுத்துட்டு வந்துட்டோம். உங்களுக்குப் பிடிச்சிருக்கா பாருங்க!”
“மீனாட்சி நீயும் வா! உம் மவ கல்யாணத்தில் நீயே ஒதுங்கி நிக்கலாமா?” என மீனாட்சியையும், அங்கயற்கண்ணியையும் அழைத்து வந்தார் அரசி.
“அப்பா இப்படி இருக்காகளேன்னு நெதமும் வேதனை தாங்க முடியலை அரசி! நாளுக்கு நாள் தளர்ந்துட்டே போறார்! அம்மா வேணும்ன்னா அவரைக் கொஞ்சமும் கண்டுக்காமல் இருக்கலாம்! என்னால் அப்படி இருக்க முடியாது!” குறிப்பாய் தன் அன்னையின் முகத்தைப் பார்த்தார் தங்க மீனாட்சி.
“மதிக் கெட்டுப்போய் பேசாதேடி! ஏதோ நேரம், உங்கப்பனுக்கு மேலுக்கு முடியலை. அதுக்காக வாழ வேண்டியப் பிள்ளைகளை பிரிச்சு வைக்கிறது தப்பு. அது ரொம்பப் பாவம். நானும் உங்கப்பனும் சேர்ந்து நின்னு கல்யாணத்தை நடத்தி வைக்கணும்ன்னு உனக்கு ஆசை இல்லையா டி?” என அங்கயற்கண்ணி கேட்க, பதில் எதுவும் சொல்லாது, அமைதியாய் நின்றார் மீனாட்சி.
“பதில் பேச முடியலைல்ல? வந்து பாரு, உன் மவ கல்யாணத்துக்கு எம் பேரன் சீலை, நகையெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கான் பாரு! பெத்த ஆத்தாளா நீதேன் முன்னே நிக்கணும்! நீ என்னமோ அறைக்குள்ளேயே பதுங்கிட்டு கிடக்குற?” எனச் சொன்னவர், தனக்கு முன்னால் கடைபரப்பப்ட்டிருந்த அத்தனையையும், உள்ளன்போடு வருடினார்.
பேரன், பேத்தியின் திருமணம் நடக்கப் போவதில் உள்ளம் முழுதும், மகிழ்ச்சியில் பூரித்தாலும், இதயத்தின் ஏதோவொரு ஓரத்தில் ஒருவித உறுத்தல் இருந்துக் கொண்டே இருந்தது. ஒருவேளை அந்த ஜோதிடர் சொன்னது பலித்துவிடுமோ? என்ற பயம் மனதை அரித்துக் கொண்டிருக்க,
‘ஆத்தா மீனாட்சி! நெடுமாறன் கல்யாணத்தப்போ இல்லாத கலக்கம், இப்போ உள்ளே ஓடிட்டே இருக்கு. என் கையில் எதுவுமே இல்லை தாயி! என் ஆத்தாளா உன்னை மட்டுந்தேன் நம்புறேன். நேசிக்கிற பிள்ளைகளுக்கு வேதனையைக் கொடுத்துடாதேம்மா!’ என மனதிற்குள் வேண்டியவர், நீர் திரையிட்டக் கண்களுடன், அழகரையும், விழியையும் மட்டுமே பார்த்திருந்தார்.
அழகர் மற்றும் விழியின் நேசத்தை மட்டுமே மனதில் வைத்து முடிவை எடுத்துவிட்டார் தான். ஆனால் ஒவ்வொன்றாய் செயல்படுத்தும் போது, எதிர்பாராவிதமாய் எதுவும் நடந்துவிடக் கூடாதென உள்ளம் பதைபதைத்தது.
‘நீர் செய்தக் குற்றத்திற்கு, என் பிள்ளைகள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? அவங்க வாழணும்! நீண்ட ஆயுளோட, நிலைத்த நேசத்தோட வாழணும்!’ தன் மனதிற்கு தனக்கு மட்டுமே கேட்கும்படி சொல்லிக் கொண்டார். ஆனாலும், சமன்பட்டு சமாதானமாக மறுக்கும் மனதை அடக்கும் வழி தெரியாது,
“எல்லாமே ரொம்ப நல்லா இருக்குய்யா அழகரு!” என்றபடி அறைக்குள் நுழைந்துக் கொண்டார் அங்கயற்கண்ணி.
“நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.!”
என்ற அருணிகிரி நாதரின் கந்தரலங்காரப் பாடலை அவர் இதழ்கள் உருப்போடத் துவங்கியிருந்தது.
********
“யோவ்! நீயெல்லாம் ஒரு அப்பனா? மினிஸ்டரு ம*ருன்னு சொல்லிக்காதே! அசிங்கமா இருக்கு. ரெண்டு மாசமா நான் இங்கே ஜெயிலில் உட்கார்ந்து இருக்கேன். நீ என்னடான்னா ஜாலியா ஊர் ஊராய் சுற்றுப் பயணம் போறியா? உன் பதவிக்காக என்னை அப்படியே விட்டுடலாம்ன்னு ப்ளான் பண்ணிட்ட இல்ல? நல்லா கேட்டுக்கோ, என்னை மட்டும் இப்படியே விட்டுடலாம்ன்னு யோசிச்ச, நீ பண்ணின ஊழலையெல்லாம், ஒரு பைசா கணக்கு குறையாமல் போட்டுக் கொடுத்துட்டு போய்ட்டே இருப்பேன்!” தன்னைப் பார்க்க வந்த தர்மேந்தரிடன் கத்திக் கொண்டிருந்தான் ரோஹன்.
“கொஞ்சம் பொறுமையாய் இரு ரோஹன்!”
“பொறுமையாய் இருக்கணுமா? என்னைத் தூக்கில் தொங்க விடற வரைக்கும் பொறுமையாய் இருக்கணுமா?”
“உன்னை வெளியே கொண்டு வர்ரதுக்கான வேலைகளைத்தான் பார்த்துட்டு இருக்கேன். நீ முதலில் அவசரப்படாமல் இரு. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எதையும் முடிவு பண்ணக் கூடாது.
“என்னால் ஒருநொடிக் கூட இனிமே இங்கே இருக்க முடியாது. முதலில் என்னை வெளியே எடு! அந்தக் கருவிழி என்ன செய்யறாள்ன்னு எனக்குத் தெரியலை! எதுவும் செய்ய முடியாமல் இங்கே உட்கார்ந்திருக்கிறது ரொம்ப வெறியாகுது. எத்தனை கொலை பண்ணினாலும் ஒரே தண்டனை தானே? அவளைக் கொன்னுட்டு.. துடிக்கத் துடிக்கக் கொன்னுட்டு மறுபடியும் உள்ளே வந்து உட்கார்ந்துக்கிறேன்.!” அதீத வெறியிலும் கோபத்திலும் கத்தினான் ரோஹன்.
“ரோஹன்! ரிலாக்ஸ் டா! நம்ம ஆளுங்களை வச்சு வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு போல! இப்போ கூட, ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு, நம்ம ஆளுங்களே தடம் தெரியாமல் முடிச்சுடுவாங்க! நீ உள்ளே இருக்கிறதால், உன்மேல் சந்தேகமும் வராது. ஆனால் நான் சொல்றதை நீ தான் கேட்க மாட்டேங்குற? நம்ம லெவலுக்கு அவளெல்லாம் ஒண்ணுமே இல்லை ரோஹன். நம்ம தகுதிக்கு நாம இவ்வளவு இறங்கிப் போகணுமா? ஜஸ்ட் காசு கொடுத்தோமா, கதையை முடிச்சோமான்னு இருக்கணும். இப்போ சொல்லு நாளைக்கே முடிச்சுடுவோமா.?” எனக் கேட்டார் தர்மேந்தர்.
“நோ! நோ! நோ டாட்.! இதுவரை எந்தப் பொண்ணுக்கிட்டேயும் நான் ஏமாந்ததே இல்லை. நான் கை தொடும் தூரம் வந்துட்டு, என்கிட்டே இருந்து தப்பிச்சுப் போனவள் இந்தக் கருவிழி ஒருத்தி தான். இப்போ நான் இந்த நாலு சுவற்றுக்குள் உட்கார்ந்திருக்றதுக்குக் காரணமும் அவ மட்டும் தான். அவளை நான் என் கையால் கொல்லணும். அவ உடம்பை விட்டு உயிர் போறதை நான் தொட்டு உணரணும். கீப் வாட்சிங் டாட்! தொடர்ந்து வாட்ச் பண்ணுங்க! அவளைப் பத்தின எல்லா தகவலும் எனக்குத் தெரியணும்.”
“நான் தான் கொல்லுவேன்!”
“நான் உன்னை விட மாட்டேன்டி!”
“என் கையால் உன்னைக் கொல்லுவேன்!”
பைத்தியம் பிடித்தவன் போல் திரும்பத் திரும்பச் சொன்னான் ரோஹன்.
“ஹேய்! கொஞ்சம் அமைதியாய் இருடா! எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். உன்னை வெளியே கொண்டு வர்ரதுக்கான ஏற்பாடுகள் பண்ணிட்டேன். ஒருவேளை உன்னை விசாரிச்சாங்கன்னா வாய் தவறிக் கூட, உண்மை எதையும் உளறிடாதே! எதிர் கட்சியோட ப்ரஷர் வேற அதிகமா இருக்கு! சட்டப்படி மூவ் பண்ணுறது ரொம்பக் கஷ்டம் போல ரோஹன்! இன்னும் சில பேர், உனக்கு எதிரா ரகசியமா சாட்சி சொல்லியிருக்காங்க! யாரு என்னன்னு விவரம் எனக்கே சொல்ல மாட்டேங்குறானுங்க! எனக்கு எதிராவே என் கட்சியில் சதி நடக்குதோன்னு தோணுது. இத்தனையும் மீறி, நான் உன்னைக் காப்பாத்த முயற்சி பண்ணிட்டு இருக்கேன். புரிஞ்சுக்கோ ரோஹன்.”
“உங்க கட்சி, ஆட்சியெல்லாம் உங்க விவகாரம். அதையெல்லாம் என்னமோ பண்ணு. ஐ டோன்ட் கேர் ஃபார் இட். எனக்கு அதைப் பத்தின எந்தக் கவலையும் இல்லை. என்னை வெளியே கொண்டு வர்ரதுக்கான ப்ளான் என்ன?”
“நம்ம பக்கம் பெரிய லாயரா ஏற்பாடு பண்ணி இருக்கேன் டா! இந்த தீப்தி செத்துப் போனதால் தான் இவ்வளவு பிரச்சனையும். நெக்ஸ்ட் உன்னை டெல்லியில் இருக்கிற ஜெயிலுக்கு மாற்ற ப்ளான் பண்ணியிருக்காங்க! அதுக்குள்ளே உன்னை வெளியே கொண்டு வரணும். அவங்க சைட் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி தான் லாயர் சொன்னார்.”
“சட்ட ரீதியாய் முடியாதுன்னு தான் தெரியுதுல்ல, அதை விட்டுத் தொலைச்சுட்டு வேற எதாச்சும் வழி இருந்தால் யோசிங்க! எனக்கு இங்கிருந்து வெளியே வரணும், அது சட்டப்படி தான் இருக்கணும்ன்னு அவசியமில்லை. சட்டப்படி, தர்மப்படி, நியாயப்படின்னு பார்த்துட்டு இருந்தால், ஆளில்லாத வீட்டை உடைச்சு கொள்ளையடிச்சுட்டு திரிஞ்ச நீயெல்லாம் மினிஸ்டர் ஆகியிருக்க மாட்டியே? அதுவும் மத்திய அமைச்சர்” நக்கலாய் சொன்னான் ரோஹன்.
“கைவசம் இன்னொரு திட்டம் இருக்கு! ஆனால், அதற்கு எல்லாமே சரியா நடக்கணும்! சரியா மட்டும் நடக்கலைன்னா நாம போட்ட திட்டம் நமக்கு எதிராவே திரும்பிடும்.!” என அவர் சொல்ல,
“என்ன திட்டமா இருந்தாலும் பரவாயில்லை! முதலில் என்னன்னு சொல்லு! நான் முடிவு பண்ணுறேன், சரியா இல்லையான்னு!” எனக் கேட்டான் ரோஹன்.
தர்மேந்தர் தான் வகுத்து வைத்திருந்த திட்டத்தை நிதானமாய், பொறுமையாய் யாருக்கும் கேட்காத குரலில், விவரிக்க, அந்தத் திட்டத்தின் காட்சிகள் கற்பனையாய் ரோஹனின் பூனைக் கண்களுக்குள் விரிந்தது.
“வாரே வா..! நீ தான்ய்யா.. உண்மையான அப்பன். அப்போ நான் நிரந்தரமாய் இங்கிருந்து வெளியே வந்து நேராய் லண்டன் நோக்கி பறந்துடலாம். சுதந்திரமாய்..!” கரத்தினால் விமானம் பறப்பதைப் போல் செய்துக் காட்டினான் ரோஹன்.
“பட், கேர்ஃபுல்லா இருக்கணும் ரோஹன்.!”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் டாட்! நீ எற்பாட்டையெல்லாம் பண்ணிட்டு தகவல் மட்டும் கொடு! மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்!” என்றவனின் உதடுகளில் உறைந்திருந்த வன்மப் புன்னகையில் அவனைப் பெற்ற தர்மேந்தருக்கே, வியர்த்து வழிந்தது.
“இன்னும் ஏன் என் மூஞ்சியைப் பார்த்துட்டு இருக்கே? கிளம்பு! ப்ளான் எதாவது சொதப்பட்டும், அப்பன்னு கூட பார்க்க மாட்டேன்! என்னோட முதல் பலி நீயாகத்தான் இருப்பே!” என ரோஹன் சொல்ல,
“அதுக்கு அவசியம் இருக்காது ரோஹன்!” எனச் சொன்னபடியே வெளியேறியிருந்தார் தர்மேந்தர்.
“கல்யாணம் பண்ணிக்க போறியா பேபி? பண்ணிக்கோ, பண்ணிக்கோ! நான் சீக்கீரமே உனக்கு கருமாதி பண்ணுறேன் டி! யாருக்கிட்டே விளையாடுறேன்னு தெரியாமலே விளையாடிட்ட பேபி! ஒட்டுமொத்தமாய் உன் விளையாட்டை முடிச்சு வைக்கிறேன்டி! வரேன் பேபி! உனக்காகவே வர்ரேன்.!”
என்ற ரோஹன் தந்தையின் திட்டத்தின் படியே கருவிழி, அழகரின் திருமணத்தன்று சிறையிலிருந்து வெளியே வந்திருந்தான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

ஆசை ஆசையாய் திருமணத்திற்கு தயார் ஆகின்றனர் அழகரும் விழியும்.
கணவனின் தவறான செய்கைக்கு தனது பேரன் பேத்தியின் வாழ்வு பலி ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறார் அங்கயற்கண்ணி பாட்டி.
சிறையில் இருந்தபடியே விழியை கண்காணிப்பு வட்டத்தில் வைத்திருந்தானா ரோஹன்.
ஆமா டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💚💙