புள்ள ஒரு நூறு ரூபாய் இருந்தா தா….வந்ததும் கொடுக்கிற.
நீங்க ஏனுங்க, நூறு ரூபாய் இருந்தா நா பெத்த புள்ளைங்கள பட்டினி போட்டுருப்பனா…?
போன சனிக்கிழமை தான உங்க அம்மா வந்துச்சு, பத்து அஞ்சு கொடுத்துட்டு போயிருக்குமே….?
அவங்களுக்கு நம்மென்ன கொடுத்தா வைச்சிருக்கோம்..? வரப்ப எல்லாம் கொடுக்க -ன்னு…..சொல்லி முடிக்குறதுக்குள்ள அந்த குடிகார குப்புச்சாமி சைக்கிள மிதிச்சு 4புளியமரம் தாண்டிட்டா.
ரோட்டோர காட்டுல, பண்ணையத்துக்கு இருக்குறாங்க.இங்க வந்து பத்து வருசம் ஆச்சு.மாசம் 2000 சம்பளம் வாங்கி என்ன பலன்…?எல்லாத்தையும் குடிச்சே தீக்கறா.
தென்ன ஓலைய மேல் கொனையும் அடித்தளவும் வெட்டிட்டு ஓலைய இரண்டா வகுந்து பொழுதோட தண்ணில ஊரப்போட்ட விடியால தடுக்கு(கீற்ற) பிண்ண பதமா இருக்கும்,
அத வித்து காசு பாத்தாத்தா அன்னைக்கு உலை கொதிக்கும்.
அது விடிய விடிய பனி கொட்டுற மார்கழி மாசம்.குளிரோட பசிக்கும் பஞ்சமில்லை அன்னைக்கு.
அந்த வழியா சபரிமலைக்கு போகும் ஐயப்ப சாமிக மரத்தடிய வண்டிய நிறுத்தி சமைத்து சாப்டுவாங்க.
அன்னைக்கும் மூனாம் புளியமரம் தள்ளி ஒரு வண்டி நிற்குது.
ஒரு பெரியவர் இந்த பக்கமா வந்து,
ஏன் சாமி சமைக்க 2குடம் தண்ணீர் கிடைக்குமா…..?
அந்தா…. அந்த தென்னை மரத்தடிய பைப் இருக்குது பாருங்க அதுல பிடிச்சுக்கோங்க சாமி.
கிணற்று தண்ணி தா ஆனா ரொம்ப உப்பு கரிக்காது.
ஒரு சின்ன பையனும் பெரியவரும் வந்து வேணும்குற அளவுக்கு தண்ணி பிடிச்சிட்டு போக சமையல் ஆரம்பமாச்சு.
பருப்பு,ரசம்,பொரியல் -னு கமகம-னு மணக்குது.
12 வயசுல மகளும் 9வயசு மகனும் தா,பகலெல்லாம் துணை அவளுக்கு.
இந்த ஒரு வாரமாவே பசியும் பட்டினியும் தான்.
கூப்பன்-ல போட்ட அரிசியும் முந்தா நேத்தோட முடிஞ்சுது.நேத்து கூட கோழிக்கு கம்போட கலக்கி வைச்சிருந்த அரிசியும் தீர்ந்து போயிருச்சு.
அதும் அந்த அரிசி கெட்டு போய் கெட்ட வாடை அடிச்சும்,வழியில்லாம அத திண்ணு வாயிலயும் வவுத்துவயும் போய் குழந்தைக சோந்து போயிருச்சுக.
நேத்து ராத்திரி குடிச்ச பாலும் 2 பிஸ்கட்டும் தா
ரோட்டு வேலை மும்முரமா நடக்குது,ஜல்லி கொட்டி தார் ஊத்தி மட்டம் தட்றாங்க.
அம்சாவோட சின்ன மகன் எலுமிச்சை மரத்தடிய வேடிக்கை பார்த்துட்டு உட்காந்திருக்கா.
பெரியவதா போய்,அம்மா பசிக்கிற மாதிரியே இருக்குது வயிறு எரியுது மா.அந்த ஐயப்ப சாமிக கிட்ட கேட்ட ஒரு வட்டச் சோறு கொடுக்க மாட்டாங்களா மா…??
அம்சாவுக்கு பசியில கை கால் நடுங்குனத விட தன் புள்ள கேட்ட கேள்விக்கு பதில் தெரியாம விழி பிதுங்கி பார்க்கிறா….
ம்ம்….இந்த பாழா போன மனுசன கட்டிட்டு நாந்தா சீரழியறன்னா நா பெத்த புள்ளைங்க என்ன பாவம் பன்னுச்சு….இந்த பாவி மக பெத்த புள்ள வகுத்துல எந்த கல்ல வைச்சு கட்டுறது..??
கேட்ட கேள்விக்கு பதில காணோ-னு பக்கத்திலேயே உட்காந்து இரண்டு இரண்டு பின்னலா போட்டு கொடுக்குறா.
போன மனுசன ஆள காணோம்.
ரோட்டு வேலைக்கு வந்த வேலனோட சம்சாரம் வகுத்துல புள்ளையோட வந்து பொழுது போக வாயடிக்கிறா.
வந்தவ பொறந்தது வளந்தது-ன்னு அவ கதையை சொல்றா சொல்றா….3மணிக்கு வேலன் சாப்பிட வா-ன்னு கை அசைக்கிற வரைக்கும்.
சாப்டதும் வர மா….ன்னு சொன்னவ பேச்சுக்கு கூட குழந்தைக சாப்டாங்களான்னு கேட்கலா…
இவ்ளோ நேரம் கம்முன்னு இருந்த சின்னவ சேனா….ஓடி வந்து அம்மா பின்னாடி மண்டி போட்டு,தோள்ள கை போட்டு கட்டி பிடிச்சு,
அம்மா…..அந்த அக்கா சாப்பாடு சேத்தி கொண்டு வந்தாங்களான்னு கேளு மா….
கண்ணத்தில முத்தம் சத்தமில்லாம கொடுக்க பசியோட வேகத்த மூச்சோட வெப்பத்தல தெரிஞ்சுகிட்டா…
என்ன சாமி சொன்ன அம்மா-க்கு கேட்கல-ன்னு சொல்லிட்டே வாரி அனைத்து மடியில உட்கார வைச்சிட்டு 6மணிக்குள்ள ஒரு சுமை தடுக்கு போனா 50ரூபாய் கிடைக்கும்,அதுல பீர் மாமா கடைக்கு போய் ஒரு கிலோ அரிசியும் பருப்பும் வாங்கியாந்து செஞ்சி தர.
6மணிக்கா மா..?
4மணிக்கு,பால்காரண்ண வந்துருவாங்க.பாலும் தொட்டு சாப்ட வர்க்கியும் வாங்கி தருவியா மா..?
கண் கலங்கி பாத்தா…அம்சா
மண்ணுல புட்டு செஞ்சு சாப்பிட சொல்லி அக்காளுக்கு கொடுத்தா….
இத சாப்பிடுற மாதிரி இருந்திருந்தா…..???
டிரிங்…டிரிங்…டிரிங்
ஓடிப்போய் கதவ துறந்து விட்டுட்டு போன.
வா வா சாமி….இந்தா புடி அம்மா-ட்ட கொடுத்துட்டு காப்பி வைக்க சொல்லு.
மா….அம்மா…..இந்தா இந்தா அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்குன்னு பாரு மா.
காப்பியும் வைக்க சொல்லுச்சு.
சர்க்கரையும் காப்பி பொடியும் வாங்கிட்டு வந்துச்சான்னு கேளு..?
முந்தா நேத்து தான சர்க்கரை வாங்கிட்டு வந்த.
1/4 கிலோ சர்க்கரை எத்தனை நாளைக்கு வரும்…?
இந்த வடையாச்சும் புடி,சூடார்க்கு மா.
கையில வாங்கிட்டு உட்காந்ததும் சாப்பிட போன மகராசி வந்துட்டா…வகுத்து புள்ளைதாச்சி பொக்குன்னு போயிருவாளேன்னு இந்தா….வடை சாப்பிடு.
இல்ல மா நீங்க சாப்டுங்க…..ன்னு சொல்லுவன்னு பாத்தா வாங்கி வாயில போட்டுட்டா….
பொழுது சாஞ்சும் யாரும் தடுக்கு எடுக்கல.
சர்க்கரையில்லாத பால் மட்டும் குடிச்சிட்டு படுத்தாச்சு.
மணி 9 இருக்கும்.
யாரோ அண்ணா அண்ணா -ன்னு கூப்பிடுற சத்தம் கேட்டு இராந்தல் எடுத்துட்டு போனா….
அக்கா ஒரு பத்து தடுக்கு வேணும் கா…
கட்டி கொடுக்குறதா இல்ல அப்படியே எடுத்துக்குறீங்களா…???
அப்படியே எடுத்துக்குறோம் கா…எவ்வளவுங்க…??
20ரூபாய் தம்பி.
இங்க கொடு புள்ள….நா போய் பீர் அண்ணா கடைல அரிசி வாங்கிட்டு வர…கஞ்சியாச்சும் வைச்சு குடிக்கலாம்.
அந்நேரத்துல அரிசி வாங்க போன மனுசன…விடியற்காலை 4 மணி-க்கு வெறும் கை வீசிட்டு வந்துட்டா.
கடைக்கு போரன்னு சொல்லிட்டு போனவன்,பாதி தூரம் போனதும் இந்த 20ரூபாய்க்கு எவ்ளோ அரிசி கொடுப்பாங்கன்னு கணக்கு போட்டு பாத்துட்டு,இத வைச்சு விளையாடி இன்னும் பத்தோ,இருபதோ சேர்ந்துச்சுனா எதாச்சும் காய்கறியும் வாங்கிட்டு போலாம்னு மனக்கணக்கு போட்டுட்டே,நேர மதுரைவீரன் கோயில் பாறைக்கு சைக்கிள விட்டா விடிய விடிய குண்டாட்டம்….பசியில நிலமை திண்டாட்டம்.
அம்சா என்ன பேச்சுன்னு இல்ல வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு…அண்ணாந்து விட்டத்த பாத்து படுத்தா…..
காலை 4மணி….6மணிய கடக்க அடி வானம் சிவக்க உலகுக்கே விடிஞ்ச விடியல்,அம்சாவுக்கும் அவ புள்ளைங்களுக்கும் அமாவாசை ஆனதோ……???
பிஞ்சு வயிற்றில்
நஞ்சிறங்க
பசி வேட்கை தானுறங்க
ஆராரோ ராரி ராராரோ……
மேலும் சிறக்க வாழ்த்துகள்.
அருமை வாழ்த்துக்கள் தோழி
நன்றி
பசி ஒரு ,மனிதனை எவ்வளவு
பலகீனப்படுத்தும் ,என்று ,இந்த கதையில் அழகாக எழுதி
இருக்கிறார்கள் குழந்தைகளுக்கு
தண்ணீர் ,கொஞ்சம் பால்
தவிர வேறு ஒண்ணும். கொடுக்க
முடியாமல் பரிதவிக்கிறாள், அருமை
நன்றி
👌
மிக நேர்த்தியான படைப்பு. நயத்துடன் ஈர்க்கும் எழுத்து. கதை நகர்வை கூற வார்த்தைகளே இல்லை. மனதிற்கு நெருக்கமாக மாறி விட்டனர் கதை மாந்தர்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
😁😁
மிக நேர்த்தியான படைப்பு. நயத்துடன் ஈர்க்கும் எழுத்து. கதை நகர்வை கூற வார்த்தைகளே இல்லை. மனதிற்கு நெருக்கமாக மாறி விட்டனர் கதை மாந்தர்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
மிக்க நன்றி
மனிதனோட அடிப்படைத் தேவைகள் உணவு,உடை,இருப்பிடம்..உணவுதான் முதலிடத்துல இருக்கு..அந்த உணவே கிடைக்கலங்கறது எவ்வளவு வருத்தமான விஷயம்..குடிகார கணவனால் அம்சா போன்றும் குழந்தைகளைப் போலும் எத்தனை பேர் கஷ்டப்படுறாங்களோ..பசியில் இருக்கும்போதும் தனக்கு இல்லனாலும் பரவாயில்லைனு புள்ளதாச்சிக்கு கொடுத்த அம்சாவோட குணம் க்ரேட்…அருமை சிஸ்
ஆழமான பார்வை பதித்தமைக்கு நன்றி