அடுத்த நாள் காலை திவ்யா தொலைகாட்சியின் முன்பு அமர்ந்து இருந்தாள். அதில் சித்திரை திருநாள் அன்று ஒளிபரப்பான அவளது பேட்டியை மறு ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.
அன்று அவளால் பார்க்க முடியவில்லை. இன்று பார்க்கலாம் என்று அமர்ந்து இருந்தாள். நிகழ்ச்சி ஆரம்பமாக அதில் தெரிந்த பெண் பேசினாள்.
“ஹாய்.. ஹலோ.. வணக்கம்.. நான் உங்க விஜி. நிகழ்ச்சிய பார்த்துட்டு இருக்க நம்ம நேயர்கள் எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்றைய நாள இன்னும் சிறப்பாக்க நாம ஒருத்தர மீட் பண்ண போறோம். யார்னு நீங்க கெஸ் பண்ண ஒரு க்ளூ கொடுக்கிறேன். வானத்து நட்சத்திரங்களுக்கு அப்புறம் அதிகமா மின்னுறது இவங்க தான். இப்போ கண்டு பிடிச்சுருப்பீங்களே.. எஸ்.. நாம எல்லாரும் மின்மினி னு செல்லமா கூப்பிடுற திவ்யான்ஷி தான் இங்க நம்ம கூட இருக்காங்க. வாங்க பேசலாம்”
அவள் பேசி முடித்ததும் அருகில் இருந்த திவ்யான்ஷியின் முகம் திரையில் தெரிந்தது.
“ஹலோ மேம்.. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..”
“தாங்க்யூ.. உங்களுக்கும் இத பார்த்துட்டு இருக்க எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..”
“உங்களோட புது படத்துக்கு எங்களோட வாழ்த்துக்கள் மேம். இன்னைக்கு ரிலீஸ் ஆகி இருக்க அந்த படத்த பத்தி சொல்லுங்களேன்”
“நான் சொல்லுறத விட நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்களேன். ஒன்னு மட்டும் சொல்றேன். குடும்பத்தோட போய் பார்க்கலாம்.”
“என்ன மேம் இப்படி சொல்லிட்டீங்க. கண்டிப்பா எல்லாரும் போய் படத்த தியேட்டர்ல பாருங்க. நம்ம நேயர்கள் கண்டிப்பா படம் பார்ப்பாங்க. நாம உங்கள பத்தி பேசலாம்”
“கண்டிப்பா”
“உங்க பேருல இருந்தே ஆரம்பிக்கலாம். உங்கள மின்மினி கூப்பிடுறது பிடிக்குமா ? இல்ல திவ்யான்ஷினு கூப்பிடுறது பிடிக்குமா?”
“இதுக்கு என்ன பதில் சொல்லுறது? எனக்கு ரெண்டுமே பிடிக்கும். ஆக்ட்சுவலி.. என்னோட முதல் படத்துல என் பேரு மின்மினி. அது அப்படியே செட் ஆகிடுச்சு. எனக்கு தெரிஞ்சவங்களே மினி. மின்மினி னு தான் கூப்பிடுவாங்க. திவ்யானு கூப்பிடுறது ரொம்ப ரேர்”
“ஆக்ட்சுவலி அந்த படத்துல நீங்க இறந்து போற மாதிரி சீன் வரும். அப்பவே நான் நிறைய அழுதுருக்கேன்.”
“ஆமா.. அதுல நிறைய அழ வச்சுட்டேன். படத்தோட கதை அப்படி இருந்துச்சு. என் தப்பு இல்லபா”
“இப்போ கூட அந்த படத்த பார்த்தா அழாம இருக்க முடியாது. அவ்வளவு எமோஷனலா இருக்கும். அய்யோ.. மின்மினிக்கா இந்த நிலமைனு தோனும்..”
“நானே அந்த சீன்ல நிஜம்மாவே அழுதேன். கிளிசரின் கூட போடல.. ஆட்டோமேட்டிக்கா கண்ணீர் கொட்டிருச்சு.. ஏன்னா நான் அந்த கேரக்டரா வாழ்ந்துட்டேன்.. சோ அது முடியும் போது….”
“ஓய்…” என்ற சத்தத்தோடு மஞ்சுளா வந்து நிற்க பேட்டியிலிருந்து திவ்யா கவனத்தை திருப்பினாள்.
“வா வா.. எங்க லக்கேஜ்?”
“கீழ இருக்கு. என்ன பார்த்துட்டு இருக்க?”
“அந்த இன்டர்வியூ.. ரீ டெலிகாஸ்”
“ஓ.. அதுல எல்லாமே பொய்யா பேசி வச்சுருப்ப.. அத கண்டிப்பா பார்த்தே ஆகனுமா?”
“நக்கலா…?”
“ஆமா… தள்ளு நானும் பார்க்குறேன்” என்று அருகில் அமர்ந்து கொண்டு தொலைகாட்சியில் கவனத்தை பதித்தாள்.
அதற்குள் அதில் விளம்பர இடைவேளை வந்து விட “ம்க்கும்.. நான் பார்க்க வந்தா தான் விளம்பரம் வரனுமா” என்று சலித்துக் கொண்டு சத்தத்தை குறைத்து வைத்தாள்.
திவ்யா சிரிக்க “போதும் போதும். நீ மட்டும் இருக்க. எங்க அர்ஜுன் ?” என்று கேட்டாள்.
“என்ன கேட்டா?”
“பின்ன யார கேட்கனும்?”
“யார வேணா கேளு. எனக்கு தெரியாது.”
“நீ பார்க்கலையா?”
“இல்ல..”
“ஓஓ..” என்றவள் வேறு பேச ஆரம்பித்து விட சில நிமிடங்களில் மீண்டும் அந்த பேட்டி ஒளிபரப்பப்பட்டது. இருவரும் அதை ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
திவ்யா சொல்லும் ஒவ்வொரு பதிலுக்கும் மஞ்சுளா கிண்டலாக எதாவது பேச தோழியர்கள் இருவரும் சண்டை பிடித்து விளையாடினர்.
அந்த பேட்டி முடியும் வரையுலுமே சிரிப்புக்கு பஞ்சமில்லை. அதன் பிறகு சாப்பிட்டு விட்டு மற்ற வேலைகளை பார்த்தனர்.
அன்று இரவு தான் அவர்களது விமானம் புறப்படுகிறது. எப்போது வெளியே சென்றாலும் மஞ்சுளா திவ்யான்ஷியின் வீட்டுக்கு வந்து விடுவாள். இருவரும் சேர்ந்தே தான் கிளம்புவார்கள். இன்றும் அது போல மஞ்சுளா வந்து விட்டாள்.
ஆனால் அவள் அர்ஜுனை எதிர் பார்த்துக் கொண்டே இருந்தாள். வீட்டில் யாருமே இல்லாமல் இருவரும் கிளம்பும் போது பிரச்சனை இல்லை. வேலை செய்பவர்களிடம் சொன்னால் போதும். ஆனால் அர்ஜுன் இருக்கும் போது அவனிடம் சொல்லி விட்டு கிளம்ப வேண்டும் என்று விருப்பப்பட்டாள்.
திவ்யா அதை எக்காரணத்தைக் கொண்டும் செய்ய மாட்டாள். தானே செய்யலாம் என்று பார்த்தால் அவனை காணவில்லை.
மதிய உணவிற்கு பின் திவ்யா குட்டித்தூக்கம் போட சென்று விட மஞ்சுளா ஹாலில் அமர்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் அர்ஜுன் வந்து நிற்க நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹேய்.. மஞ்சு.. எப்படி இருக்க?” என்று அர்ஜுன் ஆர்வமாக விசாரிக்க மஞ்சுளா எழுந்து நின்றாள்.
“நல்லா இருக்கேன்.. சார்…”
“சாரா?”
“ஆமாங்க சார்”
“ங்க வேற? என்ன ஆச்சு உனக்கு?”
“எனக்கு எதுவும் ஆகலையே?”
“அப்புறம் ஏன் வித்தியாசமா பேசுற?”
“வித்தியாசமாவா? வேற எப்படி சார் பேசனும்?”
“மஞ்சு.. என்ன எதுவும் கோபமா என் மேல?”
“ச்சே ச்சே… அப்படிலாம் எதுவும் இல்ல சார்.”
“மஞ்சு.. தெளிவா பேசு”
“சொன்னா மட்டும் எல்லாத்தையும் புரிஞ்சுக்க போறீங்களா சார்? ஏன் டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு.. சாப்பிட வந்தீங்களா? சாப்பாடு ரெடி. சூடு பண்ண சொல்லுறேன்”
மஞ்சுளா வேகமாக திரும்பி நடக்க “ஸ்டாப்” என்றான். உடனே நின்று விட்டாள்.
“உன் ஃப்ரண்ட் மாதிரியே ஆகிட்டு வர்ர மஞ்சு… அப்புறம் எனக்கும் கோபம் வரும்”
“வரட்டுமே.. தாராளமா வரட்டும். அதுக்கு பயந்த ஆளு நான் இல்ல. மேல ஒருத்தி இருக்கா.. தைரியம் இருந்தா அங்க போய் உங்க கோபத்த காட்டுங்க சார்… ஒரு பல்லுக்கு நாலு பல்ல உடச்சு காட்டுவா.. என் கிட்ட காட்டாதீங்க” என்று பல்லை கடித்துக் கொண்டு பேசி விட்டு வேகமாக சென்று விட்டாள்.
“இதுக்கு தான் வர மாட்டேன்னு சொன்னது… அப்பா.. ” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு மேலே சென்றான்.
அவன் கீழே வந்து சாப்பிடும் போது மஞ்சுளா அங்கு இல்லை. மீண்டும் அறைக்குள் செல்லும் போது முன்னால் வந்து நின்றாள்.
“அடுத்த ஒரு வாரத்துக்கு மெனு நீங்களே சொல்லிடுங்க. சமையல் பொண்ணு சமைச்சு வச்சுடும்”
மஞ்சுளா எங்கோ பார்த்துக் கொண்டு பேச “முதல்ல என்ன பார்த்து பேசு” என்று அதட்டினான்.
மஞ்சுளா அவனை முறைக்க “ஏன் மெனு உங்க மேடம் சொல்ல மாட்டாங்களாமா? அதுக்கு கூட நேரம் இல்லையாமா?” என்று கேட்டான்.
“ஒரு வாரம் சாங் சூட்டிங். கேரளா போறோம்.”
“ஓ.. சரி பத்திரமா போயிட்டு வாங்க”
மஞ்சுளா அதோடு பேச்சு முடிந்தது என்று திரும்ப அர்ஜுன் வேகமாக அவளை வழிமறித்தான்.
“இப்ப உனக்கு எதுக்கு கோபம் வருது? உண்மையா எனக்கு தான் கோபம் வரனும். அதுவும் உன் மேல பல மடங்கு கோபம் வரனும். நானே நல்லா பேசுறேன். நீ முகத்த திருப்பிட்டு போற?”
“ஓஹோ.. உங்களுக்கு தான் கோப பட தகுதி இருக்கா? அப்படினு நீங்களா நினைச்சுக்குவீங்களா?”
“அப்போ இல்லங்குறியா?”
“திவ்யா அடிக்கடி சொல்லுவா.. அவன பொறுத்த வர அவனோட உணர்வு அவனோட வலி தான் பெருசு.. நாம எல்லாம் அவன் கண்ணுக்கு தெரிய மாட்டோம்னு. அது தான் இத்தனை வருசம் கழிச்சும் உங்க தப்பு உங்களுக்கு புரியல. நல்லா கேட்டுக்கோங்க சார்.. நீங்க செஞ்ச தப்பு என்னனு தெரியும் போது ரொம்ப வருத்தப்படுவீங்க.. அப்போ ஆறுதல் சொல்ல ஆள் இருக்காது”
அமைதியாக மொத்த கோபத்தையும் கொட்டி விட்டு மஞ்சுளா வேகமாக திவ்யாவின் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அர்ஜுன் புரியாமல் நின்று இருந்தான். அவனது தவறு எது என்று இப்போதும் அவனுக்கு புரியவில்லை. புரிய வைக்கவும் அங்கு யாரும் இல்லை.
மாலை மஞ்சுளாவும் திவ்யாவும் கிளம்பிச் சென்று விட அர்ஜுனுக்கு அங்கு இருப்பதற்கே பிடிக்கவில்லை. அவர்கள் இருந்தால் மட்டும் அவனோடு பேசிவிட போவது இல்லை தான். ஆனால் இருக்கிறார்கள் என்ற உணர்வு இருக்கும். இப்போது யாரும் இல்லாமல் இருப்பது பிடிக்கவில்லை.
கடந்த எட்டரை வருடமாக தனிமையில் இருந்தவனை ஒரே வாரத்தில் மாற்றி விட்டு சென்று விட்டார்கள். இதற்காக தான் நான்கு மாதமும் இங்கேயே தங்கச் சொல்லி தந்தை கூறினாரோ?
இந்தியா வந்த ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் தான் இந்த வீட்டில் இருந்திருக்கிறான். அதற்குள் இப்படி என்றால் நான்கு மாதங்களுக்குப்பிறகு?
அர்ஜுனுக்கு தன்னை நினைத்தே கோபமாக வந்தது. தன்னுடைய உணர்வை மதிக்காதவர்கள் நிறைந்து இருக்கும் வீடு இது. அதுவும் அவனையே குற்றம் சொல்பவர்கள் தான் எல்லோரும். அவர்களோடு இருப்பது எப்படி பிடித்துப்போனது? அதுவும் நான்கு நாட்களில்?
*.*.*.*.
கேரளா… கடவுள் அழகை பாரபட்சம் பார்க்காமல் அள்ளிக் கொடுத்த மாநிலம். அங்கிருந்த ஒரு ஆற்றில் படகின் மேல் நின்று இருந்தனர் படக்குழுவினர்.
கடந்த இரண்டு நாட்களாக பாடல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பாதி பாடலுக்கு மேல் முடிந்து விட்டது. இப்போது படகில் நாயகனும் நாயகியும் நிற்பது போன்ற காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தனர்.
அது முடிந்தப்பின் எல்லோரும் படகை விட்டு இறங்கி விட படகில் தனியாக திவ்யான்ஷி மட்டும் நின்று இருந்தாள். அவள் கைகளை விரித்து வானத்தை பார்ப்பது போல் “ஏரியல் சூட்” எடுக்க வேண்டும். அதாவது கேமரா அவளது தலைக்கு மேல் பறந்து வெகு தூரம் செல்லும். அவள் மட்டும் தனியாக அந்த படகில் நின்று பாடலின் வரிக்கு ஏற்றார் போல் கைகளை விரித்து பாடிக் கொண்டிருப்பாள்.
அந்த காட்சியை எடுக்க எல்லோரும் இறங்கி விலகிச் சென்றனர். அவளை சுற்றி கேமரா மட்டுமே இருக்க சொன்ன காட்சியை பிசிறு தட்டாமல் ஒரே டேக்கில் முடித்து விட்டாள்.
இயக்குனர் ” கட்” என்று கூறியதும் படகுகள் அவளருகில் வர ஆரம்பித்தது. அப்போது பின்னாலிருந்து யாரோ அவளை தொட பயந்து போய் திரும்பி பார்த்தாள்.
“பயப்படாத நான் தான்” என்று மஞ்சுளா சிரிக்க ” பிசாசு மாதிரி வந்துட்டு பயப்படாதனு வேற சொல்லு.. இங்க என்ன பண்ணுற நீ” என்று கேட்டாள்.
“நான் இறங்கி போகல”
“அதான் ஏன்?”
“நான் போய் உனக்கு எதாச்சும் ஆச்சுனா மூனு பேருக்கு நான்ல பதில் சொல்லனும்”
திவ்யா ஒன்றும் பேசாமல் முறைத்து பார்த்தாள். சில நொடிகளுக்கு பிறகே மஞ்சுளா அதை உணர நாக்கை கடித்துக் கொண்டாள்.
“ஹி ஹி… ஸ்லிப் ஆகிடுச்சு..” என்று மஞ்சுளா பல்லை காட்ட திவ்யா கையை ஓங்கினாள்.
“அய்யய்யோ.. எல்லாரும் வந்துட்டாங்க.. வேலைய கவனி.. நான் இல்ல” என்று பின்னால் ஓடினாள்.
“ரூம்க்கு வா.. உனக்கு இருக்கு” என்று கூறி விட்டு திரும்பிக் கொண்டாள்.
மாலை வரை அந்த ஆற்றில் படகின் மேல் எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எடுத்து முடித்து விட்டு கரைக்கு திரும்பி வந்தனர்.
இயக்குனரின் அருகில் நாயகனும் நாயகியும் அமர்ந்து காட்சிகளை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.
“டைரக்டர் சார்… இப்போவே பாதி பாட்டு முடிஞ்சுருச்சுல.. சீக்கிரம் எல்லாம் முடிஞ்சுட்டா லீவ் கொடுங்க சார்” என்றாள் மஞ்சுளா.
“லீவ் வா?”
“ஆமா சார்… உங்க கூடவே நாள் முழுக்க சுத்திட்டு இருக்கோம்… கேரளா வந்து ஒரு நேந்திர சிப்ஸ் கூட வாங்கி சாப்பிடல இன்னும். என்ன போல பலர் இருக்காங்க. சிப்ஸ் கூட வாங்கிட்டு போகலனா எங்க வீட்டுல நான் கேரளா போனேன்னு நம்மவே மாட்டாங்க சார்”
மஞ்சுளா புலம்புவது போல் கூற அங்கு ஒரு சிரிப்பலை பரவியது.
“சிப்ஸ் தான வேணும்? திரும்ப போகும் போது டைரக்டர் சார் அவரோட சொந்த பணத்துல எல்லாருக்கும் ஒன்னு வாங்கி கொடுப்பார். வாங்கிட்டு போ” என்று திவ்யா கூற “நான் எப்போ சொன்னேன்!” என்று இயக்குனர் அலறினார்.
அதை கேட்டு எல்லோரும் சிரித்து விட ” நான் அப்படி எதுவும் சொல்லல. பட் சூட்டிங் இதே போல பிரச்சனை இல்லாம முடிஞ்சுருச்சுனா ஒரு நாள் லீவ் கண்டிப்பா தரேன். ஊர் சுத்தி பார்க்கலாம்” என்று வாக்கு கொடுத்தார்.
எல்லோரும் சந்தோசத்தில் குதிக்க “ஐ…” என்று மஞ்சுளாவும் திவ்யாவை பார்த்து சிரித்தாள்.
நாளைய காட்சிகளை பற்றி விவாதித்து விட்டு அறைக்கு வந்தனர். திவ்யாவும் மஞ்சுளாவும் ஒரே அறையில் தான் தங்கி இருந்தனர். திவ்யா உடை மாற்றச் சென்று விட மஞ்சுளா செந்தில் குமாரிடம் பேசினாள்.
திவ்யா வந்ததும் அன்பரசியை அழைத்தாள்.
“ம்மா.. என்ன பண்ணுறீங்க?”
“புத்தகம் படிச்சுட்டு இருக்கேன்மா.”
“டேப்ளட் எல்லாம் சாப்பிட்டீங்களா?”
“ம்ம்.. நீ என்னமா பண்ணுற?”
“நைட் க்ரீம் போட்டுட்டு இருக்கேன்”
“சீக்கிரம் தூங்கு ரொம்ப நேரம் முழிச்சு இருக்காத.. மஞ்சு என்ன பண்ணுறா? கேரளா எப்படி இருக்கு?”
“மஞ்சு மேடம் இப்போ தான் குளிச்சு டிரஸ் மாத்த போயிருக்காங்க. கேரளா நல்லா தான் இருக்கு.. மஞ்சுக்கு தான் சுத்தி பார்க்க முடியலயேனு ஓரே சோகம்”
“பார்க்க வேண்டியது தான?”
“வேலை முடியவே நேரம் சரியா இருக்கே… ஒரு நாள் லீவ் தான் போடனும்”
“போனா போகுது.. ஒரு நாள் தான? அவள பார்க்க சொல்லு.. நீ உன் வேலைய பாரு”
“அது சரி.. அத நான் பார்த்துக்கிறேன். எங்க சந்திரா அக்கா?”
“அவ பக்கத்து வீட்டு பொண்ணு கூட பேசிட்டு வாசல்ல உட்கார்ந்து இருக்கா”
“ஊர் கதை எல்லாம் பேசிட்டு இருக்காங்களா?”
“வேற என்ன பண்ணுவா? பாவம்.. என்னவே இருபத்து நாலு மணிநேரமும் பார்த்துட்டு இருந்தா போர் அடிக்காதா?”
“ம்ம்.. ம்ம்..”
“அர்ஜுன் கிட்ட பேசுனியா?”
“இப்ப எதுக்கு அவன் பேச்சு?”
“கேட்டதுக்கு பதில சொல்லு”
“இல்ல”
“இப்படியே காலம் முழுக்க முகத்த திருப்பிட்டு இருக்கப்போறீங்களா?”
“ம்மா.. அவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. எட்டு வருசத்துக்கு மேல ஆகிடுச்சு. அவனா போவான் அவனா வருவான்.. நான் உடனே பேசிடனுமா? போயிடுங்க”
“இதுங்க திருந்தாதுங்க ம்மா.. நீங்க என்ன சொன்னாலும் திருந்தாதுங்க” என்று கூறியபடி மஞ்சுளா வந்து நிற்க “நீ உன் வேலைய பாரு” என்று திவ்யா எரிந்து விழுந்தாள்.
அதை பற்றி கவலையே படாமல் மஞ்சுளா நிற்க “அது உண்மை தான் மஞ்சு. சின்ன பிள்ளைங்களா இருக்கும் போதே இதுங்க நம்ம பேச்ச கேட்காதுங்க. இப்போ மட்டும் கேட்ருங்களா? என்னவோ செய்ங்க போங்க.” என்று அன்பரசி சலிப்பாக கூறினார்.
“இப்ப இது ரொம்ப முக்கியம்.. பேசாம புக்க படிச்சுட்டு தூங்குங்க. குட் நைட்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டாள்.
தொடரும்.
💞டேய் அஜ்ஜு என்ன தான் டா உங்க பிரச்சனை
💞ஏன் டா இப்படி கண்ணாமூச்சி ஆடுறீங்க
💞இது என்ன டா அவனை வந்து இங்க இருக்கச் சொல்லிட்டு இவங்க எல்லாம் டாட்டா காட்டிட்டு போறாங்க
💞 தலைவர் இன்னேரம் கேரளா போய் இருக்கனுமே
💞👏🏻👏🏻👏🏻👌👌👌👌 சூப்பர் டா ஹனி
நீ இருக்கனும்னு தான் சொன்னோம்.. நாங்க இருப்போம்னு சொல்லலையே 🤣
நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.