Loading

 

அர்ஜுனின் வாழ்வு வசந்தமாக மாறியது. லெனின் அம்ரிதா மஞ்சுளா என்று மூன்று நண்பர்கள் கிடைத்தனர். அம்மூவருமே அவனிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. நட்பு மட்டும் தான் பிரதானமாக இருந்தது.

அவனது தனிமை வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிடைத்த பொக்கிஷங்கள் இவர்கள். அதிலும் அம்ரிதாவுடன் சண்டை போடுவது என்றால் அவ்வளவு ஆனந்தமாக இருந்தது.

அதே நேரம் அவளது குணம் அவனை பல முறை ஆச்சரிய படுத்தி இருக்கிறது. சரவணன் படுத்த படுக்கையான பின் அன்பரசி தான் குடும்ப சுமையை தாங்க வேண்டி வந்தது. அவரது தையல் மிஷின் தான் இப்போது அவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

அவர் எப்போதுமே அம்ரிதாவிற்கு அழகான உடைகளை தைத்து அணிவித்து விடுவார். ஊரிலிருந்து இங்கு வரும் போது அந்த ஊரில் இருந்த மிஷினை விற்று விட்டார்.

இங்கு வந்த பின் சரவணன் வேலை செய்த நிறுவனம் கொடுத்த பணத்தை வைத்து வேறொன்று புதிதாக வாங்கினார். அதில் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு உடை தைத்து கொடுப்பார்.

பெரிதாக தைத்து பழக்கமில்லாததால் அடிக்கடி கால் வலி வந்து விடும். அம்ரிதா அன்னைக்கு மருந்து தடவி விடுவாள். அவரை அமர வைத்து விட்டு வீட்டு வேலைகளை பார்ப்பாள்.

அவளால் எது முடியுமோ அத்தனையும் செய்வாள். சிலவிசயங்கள் சொதப்பி விட்டாலும் அன்பரசி அதற்காக மகளை அதிகமாக கடிந்து கொள்ள மாட்டார். விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் பொறுப்பாக இருக்கும் மகளை நினைத்து அவருக்கு எப்போதுமே பெருமையாக இருக்கும்.

அவளுடைய குடும்ப நிலை தெரியும் போது அர்ஜுனுக்கு தன்னை நினைத்து வருத்தமாக இல்லை. இவ்வளவு கடினமான நிலையிலேயும் உயிர்ப்போடு இருக்கும் அவளையும் தன்னையும் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்தான்.

அவளது நிலையில் வைத்து பார்த்தால் அவனது நிலை சிறப்பு என்றே கூறலாம். யார் யாரோ பேசியதற்கு பெற்றவர்களின் மீது பழி போட்டுக் கொண்டு இருந்ததும் தவறு என்று புரிந்தது.

இந்த எண்ணங்கள் எல்லாம் அவனை நன்றாக மேம்படுத்தியது. அம்ரிதா மஞ்சுளா இருவரும் படித்துக் கொண்டிருக்கும் பள்ளிக்கு அருகே தான் அர்ஜுனும் லெனினும் படிக்கின்றனர்.

லெனினின் குடும்ப பிரச்சனை அவனை அரசு பள்ளியில் படிக்கத்தள்ள நண்பனுக்காக அர்ஜுனும் அதே பள்ளி வேண்டும் என்று கேட்டான்.

நால்வரும் ஒரே பள்ளியில் படிக்க ஆரம்பித்து விட அவர்கள் வாழ்வில் உயிர்ப்புக்கு குறைவே இல்லை.

ஆனால் அம்ரிதா தான் எதற்காக இந்த பள்ளிக்கு அர்ஜுன் வந்தான் என்று சண்டை போட்டாள்.

“ஏன் உங்க ஸ்கூல்க்கு நான் வர கூடாதுனு சட்டம் போட்டுருக்காங்களா?”

“ஆமா.. “

“யாரு போட்டது?”

“நான் தான்”

“அப்போ நீ எங்க ஸ்கூல் வந்து கொய்யாப்பழம் திருடுனத உங்கம்மா கிட்ட சொல்லிடுவேன்”

“நான் ஒன்னும் திருடல”

“திருடுன தான். திருடி”

“இல்ல இல்ல இல்ல.. அது எங்க ஸ்கூல்க்கு பின்னாடி இருந்துச்சு”

“ஆனா எங்க க்ரவுண்ட் ல தான இருந்துச்சு”

அம்ரிதா முகத்தை தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.

இருவரின் பள்ளியும் அருகருகே தான் இருக்கும். ஆனால் அர்ஜுன் படிக்கும் பள்ளி தனியார் பள்ளி. அதில் இருக்கும் கொய்யாபழங்களை பறிக்க அரசு பள்ளி மாணவர்கள் சுவர் ஏறி குதித்து விடுவார்கள்.

அப்படி செய்து அர்ஜுனிடம் மாட்டிக் கொண்டாள் அம்ரிதா. அவன் இந்த பள்ளியில் தான் படிக்கிறான் என்று அவளுக்கு தெரியாத நாட்கள் அது.

“நீ இந்த ஸ்கூலா?”

“நீ இந்த ஸ்கூல் இல்லையே?” என்று அர்ஜுன் கேட்க “நான் கூட தான் உன்ன இங்க பார்த்தது இல்ல” என்றாள்.

“அப்படியா? இப்ப எதுக்கு வந்த?”

“கொய்யாப்பழம் பறிக்க.. சூப்பரா இருக்கும். உனக்கும் வேணுமா?”

“ஓ.. திருட்டு கும்பலா நீ? இரு உன்ன எங்க ப்ரின்ஸிபல் கிட்ட போட்டு கொடுக்குறேன்”

அவன் சொன்னதும் பயந்து போய் சுவர் ஏறி குதித்து ஓடி விட்டாள். அதிலிருந்து அவளை மிரட்டும் ஆயுதமாக இதை தான் பயன்படுத்துகிறான்.

நால்வரும் சேர்ந்து விளையாடுவது படிப்பது என்று காலம் பறந்தது. அம்ரிதாவின் படிப்பு திறமை அர்ஜுன் லெனினை விட குறைவு தான். அதற்காக பல முறை அர்ஜுனிடம் திட்டு வாங்கி இருக்கிறாள்.

மஞ்சுளாவிற்கும் திட்டு விழும். ஆனால் மஞ்சுளா பயந்து அழுது விடுவதால் பாதியில் நிறுத்தி விடுவான். அம்ரிதா மட்டும் பதிலுக்கு பதில் பேசிக் கொண்டே இருந்தாள்.

அடுத்த மூன்று வருடங்கள் கடந்து போக அர்ஜுனும் லெனினும் பள்ளிப்படிப்பை முடித்து விட்டனர். எல்லோருக்கும் அந்த மூன்று வருடங்களுமே ‌பொக்கிஷம் தான்.

ஐடி துறை அப்போது தான் வளர்ந்து வந்து கொண்டிருந்த நேரம். அதை படிக்க அர்ஜுன் பிரியப்பட, லெனினின் சொந்தத்தில் ஒருவர் அவனை பல் மருத்துவம் படிக்க வைப்பதாக கூறினார்.

இருவரும் தங்களது படிப்புக்காக ஊரை விட்டு வெளியேற வேண்டும். லெனின் சாதாரணமாக தான் இருந்தான். அர்ஜுனுக்கு தான் அவ்வளவு தயக்கம்.

மீண்டும் பழைய நிகழ்வுகள் போல் நடக்குமோ என்று யோசித்துக் கொண்டே இருந்தாள். அவனது படிப்புக்கு தேவையான வேலைகளை செந்தில் குமார் பார்த்து விட்டார்.

கல்யாணியும் அவனும் நாளை சென்னை செல்ல வேண்டும். அர்ஜுனுக்கு இந்த ஊரை விட்டு போவதில் துளியும் விருப்பம் இல்லை.

இரவு தூக்கம் வராமல் வெளியே வந்தவன் வழக்கம் போல் புத்கத்தில் மூழ்கிப்போயிருக்கும் அம்ரிதாவிடம் வந்து சேர்ந்தான்.

இப்போது அம்ரிதா ஒன்பதாம் வகுப்பை முடித்து விட்டாள். அடுத்த வருடம் பத்தாம் வகுப்பில் சேர வேண்டும். ஆனாலும் இந்த கதை படிக்கும் பழக்கம் மட்டும் அவளை விட்டு போகவே இல்லை.

“இதுல காட்டுற ஆர்வத்துல பாதிய பாட புத்தகத்துல காட்டுனா கூட நீ எங்கயோ போயிடுவ” என்று அர்ஜுன் கூறினாலும் தூசி போல் தட்டி விட்டு சென்று விடுவாள்.

இப்போது எதுவும் பேசாமல் அமைதியாக அவளருகே அமர்ந்து இருந்தான். படித்துக் கொண்டே இருந்தவள் கழுத்து வலிக்கவும் மூடி விட்டாள்.

அருகில் அமர்ந்து இருந்தவனை பார்த்தவள் பயந்துபோய் “டேய் லூசு.. இப்படி தான் எதுவுமே பேசாம வந்து உட்காருவியா?” என்று புத்தகத்தை வைத்து ஒரு அடி வைத்தாள்.

அர்ஜுன் ஒன்றுமே செய்யாமல் இருக்க “பேய் எதுவும் பிடிச்சுருச்சா? டேய் அர்ஜுனா… அர்ஜுனா…” என்று பிடித்து உலுக்கினான்.

“ஏன் டி கத்துற?”

“‘ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க? தூக்கம் வரலையா?”

“ம்ம்… நாளைக்கு ஊருக்கு போகனும்னு நினைச்சாலே தூக்கம் வர மாட்டிது”

“உண்மைய சொல்லு காலேஜ் போக பிடிக்கல தான?”

“உன்ன மாதிரி படிப்புக்கு டிமிக்கி கொடுக்குறவன்னு நினைச்சியா?”

“அப்போ அந்த காலேஜ் பிடிக்கலையா? நீ வேணா லெனின் மாதிரி டாக்டராகிடேன்”

“எவ்வளவு ஈசியா சொல்லுற… நான் படிச்சது கம்ப்யூட்டர். அவன் படிச்சது வேற. அதுனால நான் டாக்டர் எல்லாம் ஆக முடியாது”

“ச்சு ச்சு…”

அர்ஜுன் அவளை சந்தேகமாக பார்க்க “பனிரெண்டாவதுல ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்தவனாலயே டாக்டர் படிக்க முடியல. நான் என்னைக்கு எங்கப்பா மாதிரி ஆர்க்கிடெக்சர் படிக்க… ச்சு ச்சு.. உனக்கு கடைசி வர இந்த பேய் கதை தான் அம்முரு. இதையே படிப்போம்” என்று அவள் கூற அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“லூசு…” என்று தலையில் தட்டியவன் “நானும் இல்ல லெனினும் இல்லனு படிக்காம சுத்த கூடாது. ஒழுங்கா படிக்கனும். முக்கியமா இது பத்தாவது. மார்க் ஒழுங்கா வரல சடைய கட் பண்ணி விட்ருவேன்” என்று மிரட்டினான்.

வேகமாக சடையை பிடித்து மறைத்துக் கொண்டவள் அவனை அப்பாவியாக பார்த்தாள்.

“இந்த லுக் எல்லாம் என் கிட்ட வேணாம். நான் லீவ்க்கு வருவேன். வந்து பார்க்கும் போது எதாவது மார்க் குறைஞ்சது பிச்சுடுவேன்”

“சரிங்க வாத்தியாரே”

“இந்த பேச்சுக்கு தான் குறச்சலே இல்ல. போய் தூங்கு”

“ஓகே வாத்தியாரே” என்று கூறி எழுந்து ஓடி விட்டாள்.

காலையில் அவன் கிளம்பும் போது வாசலில் நின்று கையாட்டி வைத்தாள்.

கல்யாணியும் அர்ஜுனும் சென்னை சென்று சேர்ந்தனர். என்ன தான் பழைய நினைவுகளை நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும் அவனையும் மீறி எல்லாமே ஞாபகம் வந்தது.

அதோடு அந்த வீட்டில் இருக்க மாட்டேன் விடுதியில் தான் இருப்பேன் என்றான். அவனது பேச்சை கேட்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை. அதனால் விடுதியில் சேர்த்து விட்டனர்.

மகனும் கணவனும் அங்கு இருக்கும் போது கல்யாணிக்கு மட்டும் இங்கு என்ன வேலை? அவரும் அவர்களோடு சென்று விட்டார்.

ஆனால் சில நாட்களுக்கு மேல் அவரால் அங்கு இருக்க முடியவில்லை. பழைய நட்புகள் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் எல்லோருமே வந்து நலம் விசாரித்தனர். சிலர் பழைய விசயங்களை கிளறினர்.

அவரை பார்க்க வார வாரம் வந்து கொண்டிருந்த அர்ஜுனை இது கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்க ஆரம்பித்தது. அவனுக்கு இங்கே இருக்கவே பிடிக்கவில்லை. மீண்டும் அந்த அமைதியான சுழலை மனம் தேட ஆரம்பித்தது.

மாதம் ஒரு முறையாவது அம்ரிதாவிற்கு கடிதம் போடுவான். இல்லையென்றால் போனில் பேசி விடுவான்.

அவர்கள் வீட்டில் தொலைபேசி இல்லை. தங்கள் வீட்டில் இருப்பதை தான் அம்ரிதாவை பயன்படுத்த கூறியிருந்தான்.

பொங்கல் விடுமுறை வர அர்ஜுன் அம்ரிதாவின் ஊருக்கு செல்ல ஆசை பட்டான். கல்யாணிக்கும் அங்கு செல்வதே சரியென்று தோன்றியது.

அவருடைய சொந்தங்களும் செந்தில்குமாருடைய சொந்தங்களும் அர்ஜுனை பைத்தியம் என்பது போல் துக்கம் விசாரிப்பது அவருக்கு பிடிக்கவில்லை.

கூடவே பழைய விசயங்களை கிளறி அந்த நாயகனிடம் பேசுகிறாயா இவருடன் பழக்கம் இருக்கிறதா என்று வந்து நிற்கின்றனர்.

அது அவருக்கும் பிடிக்காததால் பொங்கலுக்கு அங்கேயே கிளம்பிச் சென்று விட்டனர். செந்தில் குமார் வழக்கம் போல் படப்பிடிப்பில் இருக்க அவரை பற்றி கவலை படாமல் இருவர் மட்டுமே சென்றனர்.

அங்கே சென்ற அர்ஜுனுக்கு ஒரு அச்சரியம் காத்திருந்தது. எப்போது சிறு கவுன் போன்ற உடை அல்லது பாவாடை சட்டையில் சுற்றும் அம்ரிதா தாவணி சுடிதார் என்று அணிந்து கொண்டிருந்தாள்.

அதன் ரகசியம் சீக்கரமே அவன் காதுக்கும் வந்து விட்டது. அம்ரிதா பூப்பெய்தி விட்டாள். நம்ப முடியாமல் பார்த்தான். போன வருடம் வரை தன்னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த பெண்ணா இவள்?

அதன் பின்பு அங்கிருக்கும் வரை அவளோடு சண்டை போட்டாலும் சடையை இழுப்பதோ அடிப்பதோ கொட்டுவதோ எதையும் செய்யவில்லை. அவள் அடித்தால் கூட வாங்கிக் கொண்டு சிரித்துக்கொண்டு இருந்து விடுவான்.

நாட்கள் நன்றாக செல்ல அர்ஜுன் படித்த படிப்பே தனக்கு வேண்டும் என்று அம்ரிதாவும் படித்தாள். அர்ஜுனுக்கு சென்னையில் இருப்பதை விட இங்கு இருப்பது தான் பிடித்து இருந்தது.

எந்த விடுமுறை கிடைத்தாலும் அவனும் லெனினும் வந்து சேர்ந்து விடுவார்கள். லெனினுக்கு இது சொந்த ஊர் என்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. கல்யாணிக்கும் இது பெரிதாக தோன்றாததால் சந்தோசமாகவே செல்லும்.

விழா நாட்கள் முடிந்து கிளம்பும் போது அர்ஜுனுக்கு மனமே இருக்காது. ஆனாலும் படிப்பும் முக்கியமாயிற்றே. அர்மிதாவிடம் சண்டை போட்டு விட்டு சிரிப்போடு கிளம்புவான்.

அர்ஜுன் மூன்றாவது வருடம் முடித்து வேலை தேடும் போது தான் அது நடந்தது.

அம்ரிதா நன்றாகவே படித்திருந்தாலும் அர்ஜுன் அளவுக்கு மதிப்பெண்ணை பெறவில்லை. அவளுக்கு குடும்பமும் முக்கியமாக இருந்தது.

மேலே என்ன படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க அர்ஜுன் வந்து நின்றான். முதல் நாள் அவனிடம் வழக்கம் போல் சண்டை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் மாலை அம்ரிதா வீட்டின் பின்னால் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அர்ஜுன் வந்தான்.

“ஊர்ல இருந்து எனக்கு எதோ வாங்கிட்டு வரேன்னு சொன்ன ? எங்க?” என்று விளக்குமாறை தூக்கிக் கொண்டு அவள் கேட்க அர்ஜுனுக்கு சிரிப்பு வந்தது.

“அத போட்டுட்டு கைய கழுவிட்டு வா சொல்லுறேன்”

உடனே கை கழுவிட்டு வந்தாள்.

“ம்ம்..” என்று கையை நீட்ட வேகமாக கையை பிடித்துக் கொண்டான்.

“என்ன?”

“நான் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்”

“சொல்லு.. கேட்டு தொலைக்கிறேன்”

“ஐ லவ் யூ”

அம்ரிதா அதிர்ந்து போய் நின்றாள். இது போன்ற விசயங்களை படங்களில் பார்த்ததோடு சரி. நேரில் தனக்கு நடக்கும் போது நம்புவதா வேண்டாமா என்று உறைந்து நின்றாள்.

“ஓய்.. பேசு..”

“….”

“உன்ன தான் அம்மு”

வேகமாக அவன் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டாள். மனம் பயத்தில் படபடவென அடித்துக் கொள்ள அர்ஜுனை நிமிர்ந்து பார்க்க பயந்தாள்.

பயம் அவளுக்கு புதிது என்பதால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

“நீ ஒன்னுமே சொல்லல” என்று அர்ஜுன் அருகே வர அவனை தள்ளி விட்டு விட்டு வீட்டுக்குள் ஓடி விட்டாள்.

அர்ஜுனுக்கு ஆச்சரியமும் ஆனந்தமுமாக இருந்தது. அவள் வெட்கப்படுவாள் என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை. சண்டை போட போகிறாள் என்று எதிர் பார்த்தான். அவள் பதிலே சொல்லாமல் ஓடி விட்டாள்.

அர்ஜுன் சிரிப்போடு வீட்டுக்குச் சென்று விட்டான். அடுத்த இரண்டு நாட்கள் அம்ரிதா அவன் கண்ணிலேயே படவில்லை. ஓடி ஒளிந்து கொண்டாள்.

ஆனால் மூன்றாம் நாள் அர்ஜுன் அவளை தேடிப்போய் நின்றான். அவனை பார்த்து விட்டு ஓடப்பார்க்க கையை பிடித்து நிறுத்தினான்.

“கைய விடு”

“மாட்டேன்.. எனக்கு பதில் சொல்லாம போக முடியாது”

“என்ன சொல்லனும்?” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டாள்.

“என்ன பிடிச்சுருக்கா இல்லையானு”

“அதெல்லாம் தெரியாது”

“அப்போ நான் பிடிச்சுருக்குனு எடுத்துக்குவேன்”

“ஹான்…”

“அப்போ பிடிக்கலையா?”

அம்ரிதாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் முகத்தை சுருக்கிக் கொண்டு நிற்க “இப்ப என்ன தோனுது? அத சொல்லு” என்று கேட்டான்.

“ஒன்னுமே தோனல.. இந்த காதல் எல்லாம் நான் படத்துல தான் பார்த்து இருக்கேன். நீ ல.. அது.. அது வந்து.. இப்படிலாம் பேசுவனு நினைச்சே பார்க்கல”

“சரி..”

“என்ன சரி?”

“என்ன உனக்கு பிடிக்கல.. அதான.. சரி விடு”

“அய்யோ அப்படி இல்ல”

“பின்ன எப்படி? அதான் சொல்லிட்டியே.. எதிர் பார்க்கலனு.. என்ன பார்க்காம ஓட வேற செய்யுற”

“அய்யோ இத எப்படி சொல்லுவேன்”

“வாய்ல தான்”

அம்ரிதா முறைத்து பார்க்க அர்ஜுன் சிரிப்போடு பார்த்தான்.

“போ..” என்று கூறி திரும்பிச் செல்ல “இப்போ போனா திரும்பி வர மாட்டேன்” என்றான்.

உடனே நின்று விட்டாள்.

“உனக்கு என்ன பிடிக்கும்னா வரேன். இல்லனா இனி வர மாட்டேன்”

அம்ரிதாவிற்கு சட்டென கண்கலங்கி விட்டது. அசையாமல் அவள் நின்று விட அர்ஜுன் அவளிடம் வந்தான்.

முகத்தை குனிந்து பார்த்தவன் அவளது கண்ணீரை பார்த்து விட்டான்.

“ஹேய்.. லூசு.. ஏன் அழுற?”

“நீ தான் அழ வைக்குற”

“அம்ரிதாக்கு அழுக எல்லாம் தெரியுமா?”

“போ… பேசாத”

“நீ பதில் சொன்னா போறேன்”

“சொல்ல மாட்டேன்”

“உன் பயம் என்னனு சொல்லவா?”

அம்ரிதா நிமிர்ந்து பார்க்க “உன் அம்மா உன்ன தப்பா நினைச்சுடுவாங்களோனு நினைக்கிற அதான?” என்று கேட்க மெதுவாக தலையாட்டினாள்.

இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் அன்னைக்கு தெரியாமல் காதல் அது இது என்று சுற்ற அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. எல்லாம் படத்தில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வாள்.

திடீரென அர்ஜுன் கேட்ட போது தாய் தந்தையரின் நினைவு தான் வந்தது. அவள் மௌனமாக தலையாட்ட “என் கூட வா ” என்று அழைத்துச் சென்றான்.

பிறகு அவளை வீட்டில் விட்டு விட்டு கல்யாணியை அழைத்து வந்தான்.

“ம்மா.. அத்த.. மாமா.. நான் ஒன்னு உங்க கிட்ட எல்லாம் சொல்லனும்”

“என்னபா?”

“எனக்கு ஹைதராபாத்ல வேலை கிடைச்சு இருக்கு”

“நிஜம்மாவா..?” – கல்யாணி.

“நல்ல விசயமாச்சே..” – அன்பரசி.

“படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சுடுச்சு.. இத விட வேற என்ன வேணும். அரசி அர்ஜுனுக்கு எதாவது பலகாரம் பாயாசம் பண்ணுமா” – சரவணன்.

“பொறுங்க. நான் வேற ஒன்னும் சொல்லனும். எனக்கு வேலை கிடைச்சுருச்சு. இனி நான் சின்ன பையன் இல்ல. கை நிறைய சம்பளம் வாங்க போறேன்.”

“அதான் தெரியுதே”

“இன்னொன்னு உங்களுக்கு தெரியாதுமா… நான் அம்ரிதாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்”

அர்ஜுன் பட்டென உடைத்தான். அம்ரிதா இதை எதிர்பார்த்ததால் அதிராமல் நின்று இருந்தாள். மற்ற எல்லோருடைய முகத்திலும் அதிர்ச்சி.

அவர்கள் சமநிலைக்கு திரும்பும் முன்பே பேசினான்.

“என்ன பத்தி உங்களுக்கே நல்லா தெரியும். எந்த நிலைமையில இந்த ஊருக்கு வந்தேன்னு. என்ன நல்லபடியா மாத்தி என் வாழ்க்கையில சந்தோசத்த கொடுத்ததே அம்மு தான். அவ இல்லாம வாழவே முடியாதுனு இங்க இருந்து போன சில மாசத்துலயே புரிஞ்சுடுச்சு. ஆனா அவ ஸ்கூல் படிச்சுட்டு இருந்தா.

இவ்வளவு கஷ்டத்துலையும் நீங்க அவள விடாம படிக்க வைக்கிறீங்க. அது என்னால கெடக்கூடாதுனு நினைச்சேன். இப்போ அவள நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் காலம் முழுக்க வச்சு காப்பாத்த எனக்கு வேலை இருக்கு.

அவளும் படிச்சு முடிச்சுட்டா. இனி காலேஜ் நான் படிக்க வைக்கிறேன். உங்களுக்கு சம்மதமா இல்லையானு தெரிஞ்சுக்கனும்”

அர்ஜுன் பேசி முடித்ததும் எல்லோரும் அம்ரிதாவை பார்த்தனர். அவளோ பதட்டத்துடன் தரையை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அம்ரிதாவிற்கும் பிடிக்குமோ என்று அன்பரசி பார்க்க “அம்மு கிட்ட இத சொன்னேன். பதிலே சொல்லாம ஓடிட்டா. ரெண்டு நாளா என் கண்ணுலையே படல. அதான் நேரா உங்க கிட்டயே கேட்கலாம்னு நினைச்சேன்” என்றான்.

கல்யாணிக்கு தன் மகனுக்கு அம்ரிதாவை திருமணம் செய்து வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் கணவரிடம் பேச வேண்டுமென்று நினைத்தார்.

“நீங்க யோசிச்சு சொல்லுங்க மாமா.. அத்த. நாங்க கிளம்புறோம்” என்று கூறி விட்டு அன்னையோடு சென்று விட்டான்.

கல்யாணி செந்தில்குமாரிடம் பேச “இங்க இருந்து கிளம்பும் போதே சொல்லிட்டு தான் வந்தான். எனக்கு அம்ரிதாவ பிடிச்சுருக்கு. வேலை கிடச்சதும் அவள கல்யாணம் பண்ண போறேன்னு” என்று கூறினார்.

“அப்பாவும் பிள்ளையும் ஒரு வார்த்தை கூட சொல்லல என் கிட்ட” என்று சண்டைக்கு போக செந்தில் குமார் தான் சமாளித்தார்.

அம்ரிதா பெற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பதட்டத்திலேயே இருந்தாள்.

ஆனால் அன்பரசிக்கும் சரவணனுக்கும் அர்ஜுனை அவனது நேர்மையான பேச்சை பிடித்து இருந்தது. பல வருடங்களாக கண் முன்னால் வளர்ந்தவன் ஆயிற்றே.

அதனால் இருவருமே ஒரு மனதாக ஒப்புக் கொண்டனர். அடுத்த நாள் காலை அர்ஜுனிடம் அன்பரசி நேராக சென்று விசயத்தை கூற துள்ளி குதிக்காத குறையாக அம்ரிதாவிடம் ஓடி வந்தான்.

அவனை பார்த்து விட்டு அம்ரிதா முழிக்க “உங்க அம்மாக்கு என்ன பிடிக்கலையாம். வேணாம்னு சொல்லிட்டாங்க” என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கூறினான்.

அம்ரிதாவிற்கு இதயமே நின்று விடும் போல் இருந்தது.

“அப்ப நீ என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டியா அம்மு?”

“நான்… நான் வேணா அம்மா கிட்ட பேசட்டா?”

“அப்போ உனக்கு என்ன பிடிக்குமா?”

அம்ரிதா உளறியது புரிந்து வாயை மூடிக் கொள்ள அர்ஜுனுக்கு சிரிப்பு வந்தது.

“பட படனு வாய திறந்தா மூடாம பேசுவ. இந்த நாலு நாளா நாலு வார்த்தை கூட பேசல. ஆனா ரொம்ப சோகமாகாத.. உன் அம்மா அப்பா ரெண்டு பேருக்குமே என்ன பிடிச்சுருச்சு. உடனே கல்யாணம் பணணி இந்த தொல்லைய கூட்டிட்டு போனு சொல்லிட்டாங்க”

அம்ரிதா அவனை இமை சிமிட்டாமல் பார்த்தாள்.

“என்ன ரியாக்கஸன காணோம்” என்று கேட்க அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

“அய்யோ ஏன் அழுற?” என்று கேட்க மேலும் அழ ஆரம்பித்து விட்டாள்.

சந்தோசம் தாங்காமல் அவள் அழுது கொண்டிருக்க “அவங்க தொல்லைனு எல்லாம் சொல்லல.. நான் தான் சொன்னேன். அழுகாத” என்று பதறினான்.

அம்ரிதா விடாமல் அழ அர்ஜுனுக்கு ஒன்றும் புரியவில்லை. சில நொடிகள் என்ன செய்வது என்று திணறினான். பிறகு அருகே சென்று கண்ணை துடைத்து விட்டான்.

“இப்போ ஏன் அழுற அம்மு?”

“போடா.. பயந்துட்டேன்”

“பயந்துட்டியா? நீ மிட் நைட்ல பேய் கதை படிக்குற ஆளாச்சே.. உனக்கெல்லாம் பயம் எந்த கலர்னு கூட தெரியாதே”

“போடா..”

“சரி சரி.. அழுகாத.. பார்க்க நல்லா இல்ல”

அம்ரிதாவும் உடனே கண்ணை துடைத்துக் கொண்டாள்.

“ஊருல இருந்து என்ன வாங்கிட்டு வந்தேன்னு கேட்டல?” என்று கூறி இரண்டு மோதிரங்களை எடுத்தான்.

“இது தான்.. நீ சரினு சொல்லிட்டா உடனே உனக்கு போட்டு விடனும்னு வாங்கிட்டு வந்தேன்”

அந்த மோதிரத்தை வேகமாக வாங்கி பார்த்தவள் “போடு” என்றாள். சிரிப்போடு மாட்டி விட்டான்.

“இது எனக்கு ” என்று கை நீட்ட உடனே மாட்டி விட்டாள்.

“மோதிரம் மாத்திட்டா நிச்சயம் ஆகிடுச்சுனு தான அர்த்தம்?”

“இல்ல.. கல்யாணம் ஆகிடுச்சுனு அர்த்தம்”

“ஹான்…”

“லூசு.. அதெல்லாம் பெரியவங்க சிறப்பா ஊர கூட்டி நிச்சயம் பண்ணுவாங்க. அப்போ என்னோட சம்பளத்துல உனக்கு தங்க மோதிரமே வாங்கிட்டு வந்து போடுறேன்”

அம்ரிதாவிற்கு திடீரென இதை கேட்டதும் வெட்கம் வந்து விட்டது.

“பார்க்கலாம் பார்க்கலாம்” என்று கூறி உள்ளே ஓடி விட்டாள்.

சந்தோசமான நாள் என்று அன்பரசி விருந்து படைக்க எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

“அத்த… நான் வேலையில ஜாயின்ட் பண்ணிட்டு வர மூனு மாசம் ஆகும். அது வரை என் அம்முவ பத்திரமா பார்த்துக்கோங்க.”

“ஆமா.. பெத்து பதினெட்டு வருசமா பார்க்காதத இனி பார்க்கனுமா?”

“அப்போ அவ உங்க பொண்ணு.. இப்போ எங்க வீட்டு பொண்ணுல… அதுவும் என் வருங்கால மனைவி” என்று கூறி அம்ரிதாவை பார்த்து கண் சிமிட்டினான்.

உடனே அருகில் இருந்த கரண்டியை தூக்கி அவன் மீது எறிந்து விட்டு பத்திரம் காட்டினாள் அம்ரிதா. எல்லோருமே அவர்களை பார்த்து சிரித்து விட்டு சாப்பாட்டை கவனித்தனர்.

தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
2
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Meenakshi Subburaman

   💞ஓ அந்த தூக்கி போட்ட மோதிரம் இது தானோ

   💞அம்மு நீ அழக் கூட செய்வியா அவனைப் போட்டு என்ன நாடு படுத்துற அப்புறம் எப்படி இப்படி

   💞 இப்போ இந்த மஞ்சு லெனின் எல்லாம் எங்க போனாங்க

   💞👏🏻👏🏻👏🏻👌👌👌💐💐💐💐💐 சூப்பர் டா ஹனி

   1. hani hani
    Author

    இந்த மோதிரம் தான். இத தான் தேடி எடுப்பா

  2. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.