Loading

 

 

மாலை செய்தித்தாளை புரட்டிக் கொண்டு திவ்யா அமர்ந்து இருக்க அர்ஜுன் வந்து சேர்ந்தான். அவனை திரும்பி பார்த்தவள் அலட்சியமாக திரும்பிக் கொண்டாள்.

 

அர்ஜுன் சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமே அருகில் இல்லை. உடனே அவளருகில் வந்தவன் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை பிடுங்கி எறிந்தான்.

 

திவ்யா வாயை திறக்கப்போக “பேசுன..” என்று விரல் நீட்டி மிரட்டி விட்டு கையை பிடித்து இழுத்துச் சென்றான்.

 

‘இம்சை’ என்று மனதிற்குள் திட்டினாலும் அடம்பிடிக்காமல் அவனோடு சென்றாள்.

 

“இப்போ இந்த படம் ரொம்ப அவசியம் தான?” என்று மேலே வந்ததும் அவன் கேட்க “எஸ்” என்றாள்.

 

“நீ பண்ணுற தப்பு உனக்கு புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா?”

 

“புரியலனே வச்சுக்கோ.. ஐ டோன்ட் கேர்”

 

“உன்ன… “

 

“என்ன? என்ன என்ன? பெரிய இவன் மாதிரி காலையில பேசிட்டு போன.. போடா.. இந்த படத்த முடிச்சப்புறம் உன் கிட்ட பேசிக்கிறேன். ஆறே மாசத்துல சூட்டிங் முடிஞ்சுடும். அப்புறம் பார்த்துக்கிறேன் உன்ன”

 

“என்னவோ பண்ணித்தொலை”

 

அர்ஜுன் கடுப்பாக சொல்லி விட்டு அறை பக்கம் செல்ல “ஓய்..” என்று சொடக்கு போட்டு அழைத்தாள்.

 

“நான் சொன்னது தான் நடக்கும். நான் முடிக்கும் போது என் சவால்ல ஜெயிச்சுருப்பேன்”

 

“நீ ஆல்ரெடி தோத்துட்ட.. அண்ட்.. கார அடிச்சா உடைக்கிற.. பார்த்துக்கிறேன்” என்றான்.

 

அதன் பின்பு இரண்டு நாட்களுக்கு யாரும் பேசவில்லை. விருது வழங்கும் விழாவின் ஏற்பாடு பற்றி பேச செந்தில் குமாரும் அடிக்கடி வெளியே சென்று விட்டார்.

 

எதோ செய்வதாக சொன்ன அர்ஜுனும் ஒன்றுமே செய்யாமல் இருக்க திவ்யாவிற்கு அந்த விசயம் தலைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.

 

மூன்று நாள் விடுமுறை முடிந்து வந்த மஞ்சுளா பதறி அடித்து திவ்யாவிடம் ஓடி வந்தாள்.

 

“அடி பாவி … என்னடி பண்ணி வச்சுருக்க?” என்று கேட்டுக் கொண்டே வந்த மஞ்சுளாவை நிமிர்ந்து பார்த்தவள் “ஹாய்.. வா பங்சன் நல்லா போச்சா?” என்று கேட்டாள்.

 

“உன் வரவேற்ப குப்பையில போடு.. ஒரு ரெண்டு நாள் அந்த பக்கம் போயிட்டு வர்ரதுக்குள்ள என்ன காரியம் பண்ணி வச்சுருக்க?”

 

“என்ன பண்ணேன்?”

 

“அர்ஜுன் போன கார லாரி வச்சு ஏத்திருக்க? அவன் உயிரோட தான இருக்கான். இல்ல கோபத்துல கொன்னுட்டியா?”

 

“அவன் கீழ நிக்கும் போது தான் ஏத்த சொன்னேன். உசுரோட தான் இருக்கான்”

 

“லூசு திவ்யா… முதல்ல இதுல உனக்கு ஹெல்ப் பண்ணது யாருனு சொல்லு… அவங்கள படுக்க வச்சு அவங்க மேல லாரிய ஏத்துறேன்”

 

“ஹா ஹா.. தேவ் தான். போய் ஏத்து போ”

 

“அவரா?”

 

“ஆமா.. ஏத்திட்டு விவேகா அக்காகிட்ட அடி வாங்கு”

 

“ப்ச்ச்… எப்பா சாமிகளா.. உங்க காதல் கதையில மண்ணள்ளி போடனும். இல்லனா எனக்கு பால் ஊத்திடுவீங்க. அதுங்களும் அடுச்சுக்குதுங்க.. நீங்களும் அடிச்சுக்குறீங்க.. ச்சை… முடியலடா… இதுக மத்தில சிங்கிள் பெருமைய காப்பாத்த நான் தான் போறாட வேண்டி இருக்கு”

 

“சலிச்சுக்காத.. இதெல்லாம் லவ்ல சகஜம்”

 

“மூஞ்சிய பாரு.. லவ் பண்ணுதுங்களாம்… படத்துல பார்த்துக்கெல்லாம் டூயட் பாடி சாவடிச்சா நேர்ல தொட்டதுக்கெல்லாம் சண்டை போட்டு சாவடிக்குறது.. இதுக்கு தேவ் சார் விவேகா மேடம் காதல் பரவாயில்ல. வாயிலையே சின்ன பசங்க மாதிரி சண்டை போட்டு அழுதுட்டு சரியா போயிடுறாங்க. நீங்க ரெண்டு பேரும் கொல்லுற அளவுக்கு இறங்குறீங்க. எங்க இருந்து தான் உங்கள போய் ஃப்ரண்டா பிடிச்சேனோ”

 

“நான் என்ன ஆசை பட்டா பண்ணேன்… அவன் தான் ஆரம்பிச்சான்”

 

“இதுக்கும் ஒரு காரணத்த வச்சுருப்பியே.. சொல்லு.. சொல்லித்தொலை”

 

“இல்லபா.. அவன் வந்தப்போ தான் பாலன் சார் படத்துல நான் சைன் ஆகி இருக்க விசயம் அபீஸியல் நியூஸா வந்துச்சு. அத கேட்டுட்டு வந்து என்ன திட்டிட்டு போறான்.”

 

“அதுக்கு? கார உடைப்பியா?”

 

“இல்ல.. அவன் திட்டிட்டு போனப்போ பதிலுக்கு திட்டலாம்னு பின்னாடியே போனேன்.. கேப் கிடைக்காம கடுப்புல நின்னு இருந்தான். சரி நம்மலுக்கு பதிலா கடவுளே நல்லா செய்யுறார்னு வந்துட்டேன். ஆனா மாமா அவன் டென்சன பார்த்துட்டு என்னனு கேட்டாரு.

 

மதிக்கவே இல்ல. அப்படியே கோபம் வந்துடுச்சு. ஆனாலும் மாமா அவனுக்கு என்ன பிரச்சனைனு திரும்ப திரும்ப கேட்குறாரு. ஒரு வழியா வாய திறந்து சொல்லிட்டான். சரி என் கார்ல போ னு சாவிய கொடுத்த ஓவரா பிகு பண்ணுறான்.

 

அவர் கம்பல் பண்ணி கையில திணிச்சா சரி இத வாடகைக்கு எடுத்துக்குறேன். பணத்த வந்து கரெக்ட்டா செட்டில் பண்ணுறேன்னு சொல்லிட்டு போறான்.

 

மாமா முகம் அப்படியே வாடி போச்சு. அப்பவே அவன நாலு அறை வைக்கனும் போல இருந்தது. ஆனா அத விட வேற ஒன்னு தோனுச்சு.. பணம் கொடுப்பேன்னா சொல்லுற‌.. இரு உனக்கு பெரிய செலவா இழுத்து வைக்கிறேன்னு தேவ்க்கு கால் பண்ணேன்‌.

 

சூட்டிங்ல யூஸ் பண்ணுற லாரிய அனுப்பு ஒருத்தன பயமுறுத்தனும்னு சொன்னேன். அவனும் அனுப்பனான். நான் அர்ஜுன் பின்னாடியே கிளம்பிட்டேன். கார அவன் யாருமில்லாத இடத்துல நிப்பாட்டவும் லாரிக்கு சிக்னல் கொடுத்துட்டு அர்ஜுன் கிட்ட பேசிட்டு இருந்தேன்.

 

கார் வெடிக்கலாம் இல்ல. பெரிய டேமேஜ் மட்டும் தான். இருக்க பணத்துல கார சரி பண்ணட்டும். வாய் கிழிய பேசுனா இப்படி தான் ஆப்பு வரும்.”

 

முழு விளக்கத்தையும் கேட்ட பின்பு மஞ்சுளா தலையில் கைவைத்துக் கொண்டாள்.

 

“ஏன் டி… என்ன இப்படி உட்கார்ந்துட்ட?”

 

“வழக்கம் போல நீ பண்ணது தான் சரினு தோனுது. இத கேட்டுட்டு போய் நான் அவன திட்டுனா ஓர வஞ்சனைனு சொல்லுறான். கடவுளே… உலகத்துல கோடிகணக்குல ஆளு இருக்கும் போது போயும் போயும் இந்த ரெண்டு பேர் கூடயா என் விதி வந்து சேரனும்”

 

“ஹாஹா..”

 

“ஆனாலும் அது செந்தில் சாரோட கார்”

 

“சோ வாட்? இவன் ஈகோக்கு அவனே செலவு பண்ணி சரி பண்ணி வச்சுடுவான். கவலைய விடு”

 

“பட் திவ்யா… இன்டர்நெட்ல ரொம்ப ஓவரா பேசுறாங்க.. அத பார்த்தா எனக்கே கோபம் வருது. அர்ஜுனுக்கு எப்படி கோபம் வராம இருக்கும்?”

 

“அவங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்ல. அடுத்தவங்க என்ன பண்ணுறாங்கனு பார்த்துட்டே இருப்பாங்க. எனக்கும் வேற வேலை இல்லையா என்ன?”

 

“நீ இத பார்த்தா இப்படி பேச மாட்ட”

 

“அதான் நான் எந்த சோசியல் மீடியாலயும் இல்ல. அதெல்லாம் பார்க்குறத விட முக்கியமான நிறைய வேலை இருக்கு. அத பார்க்கலாம்”

 

“எவ்வளவோ பேர்… ஏன் உன்ன பிடிக்காதவங்க கூட அடுத்தவங்கள பத்தி இப்படி தப்பா பேசாதீங்கனு சொல்லிட்டீங்க. ஆனா இவங்களுக்கு உன் காதலன் யாரு உன்ன கல்யாணம் பண்ண போறவன் யாருங்குறது தான் முக்கியமா இருக்கு”

 

“நான் கல்யாணம் பண்ணும் போது அத சொல்லிக்கிறேன்.”

 

“திவ்யா.. இந்த ரிஸ்க் அவசியமா தேவையா?”

 

“கண்டிப்பா தேவை தான். நான் தான் வேற ப்ளான் வச்சுருக்கேன்னு சொன்னேன்ல”

 

“பட் இவங்க பேடா பேசுறாங்க”

 

“அவங்கள பொறுத்த வரை அசிங்க படுத்துறது அவங்க உரிமை அசிங்க படுறது நம்ம கடமைனு நினைச்சுக்கிறாங்க. என்ன பத்தி எனக்கு தெரியாதது இந்த சோசியல் மீடியால இருக்கவங்களுக்கு தெரிஞ்சுடுமா? அவங்க என்ன பேசுனா எனக்கென்ன இல்ல எத பண்ணா எனக்கென்ன?

 

சினிமால நடிக்க வந்துட்டா இதெல்லாம் தாங்கி தான் ஆகனும்னு அவங்க நினைப்பு.. இதையே ஒரு டாக்டர் ஒரு போலிஸ்ஸ அசிங்க படுத்த சொல்லு பார்ப்போம். ஒரு டாக்டர்னா அசிங்க பட்டு தான் ஆகனும். நாங்க ஆசிங்க படுத்த தான் செய்வோம்னு சொல்ல சொல்லு பார்ப்போம். சொல்ல மாட்டாங்க. சினிமானா மட்டும் இவங்களுக்கு கிள்ளுகீரை தான்.

 

எல்லாரும் அவங்க அவங்க திறமைய காட்டுறாங்க. சம்பாதிக்கிறாங்க. அவங்கள பத்தி பேச என்ன இருக்குனு மூடிட்டு போக மாட்டாங்க. இதுங்க வீட்டுல ஆயிரம் நடக்கும். அதெல்லாம் முக்கியமா இருக்காது. நம்ம வீட்டுல நடக்குற சின்ன விசயம் கூட பெருசா பேசுறது.”

 

“அத வியாபாரம் ஆக்க சில நியூஸ் சேனல்ஸ்”

 

“இவங்க பார்க்கலனா அவங்க ஏன் போட போறாங்க? இவங்க இதெல்லாம் ஒரு விசயமானு கண்டுக்காம இருந்தா அவங்களும் போட மாட்டாங்க. கேட்டா அவங்க போடுறதால தான் நாங்க பார்க்குறோம்னு சொல்லுறது. நாம திருப்பி சொன்னா சண்டைக்கு வர்ரது..”

 

“அதுவும் சரி தான். பேப்பர்ல இருக்க அத்தனை பக்கத்தையும் விட்டுட்டு சினிமா பக்கத்த தேடி பிடிச்சு படிக்குற ஆளுங்க இருக்கப்போய் தான் ரூமர் கிசுகிசுனு காலம் ஓடுது”

 

“இதுங்க பேசுறதெல்லாம் ஒரு விசயமே இல்ல. இப்போ நான் எடுத்த முடிவு அர்ஜுன பாதிக்கும்னு தெரிஞ்சே தான் எடுத்தேன். அதுக்கு ஒரு முடிவு கட்டாம போக கூடாது. அவன் இங்க இருக்கும் போதே ஒரு முடிவு கட்டி காட்டுறேன்”

 

“நாலு மாசத்துல அர்ஜுன் போய்டுவானே?”

 

“மாட்டான்”

 

“எப்படி சொல்லுற?”

 

“தெரியல.. ஆனா போக மாட்டான்”

 

“என்னவோ… எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி”

 

மஞ்சுளா செந்தில்குமாரை பார்க்க வந்தாள். அவரிடம் கார் உடைந்த கதையை கூறி முடித்தாள்.

 

“இதுங்க எப்போ தான் சரியாகுங்க?” என்று செந்தில் குமார் சோகமாக கேட்டார்.

 

“ஆகிட்டாலும்.. கொலை பண்ணுற ரேன்ஞ்ச்க்கு போயிட்டு இருக்குங்க”

 

“ப்ச்ச்.. கொலையா? அதுக்கும் மேல போகுங்க போல”

 

“ஆமா.. ஆனா பாருங்க ஒவ்வொரு டைம்மும் கரெக்ட்டா மிஸ் ஆகிட்டே இருக்கு” என்று கூறி மஞ்சுளா கண்ணடிக்க செந்தில் குமார் சிரித்து விட்டார்.

 

“திவ்யா விட்டா அவன ஒரு வழி பண்ணிடுவா. ஆனா அர்ஜுன் இடத்துல இருந்து பார்த்தா தான் அவன் வலி புரியும்”

 

“பையனுக்கு ரொம்ப வக்காலத்து வாங்காதீங்க. அவன் உங்கள ஹர்ட் பண்ணவும் தான் இப்படி பண்ணிட்டா. வரட்டும் பார்த்துக்குறேன்”

 

மாலை அர்ஜுன் வந்து சேர நேராக அவனது அறைக்குள் நுழைந்தாள்.

 

“டேய்.. உனக்கு அறிவிருக்கா?”

 

“ஏன்? திடீர்னு இப்படி ஒரு டவுட்?” என்று அர்ஜுன் சிரித்துக் கொண்டே கேட்க மஞ்சுளா முறைத்து வைத்தாள்.

 

“என்ன காமெடியா? அப்படியே நாலு வைச்சேன்னா தெரியும். லூசு அவ முன்னாடி போய் செந்தில் சார ஹர்ட் பண்ணி இருக்க”

 

“இது எப்போ?”

 

மஞ்சுளா முறைத்துக் கொண்டே நடந்ததை கூற “ஓ.. இதான் விசயமா” என்றான்.

 

“என்ன ஓ….?”

 

“இல்ல திடீர்னு வந்து கார உடச்சுட்டு போயிட்டா. அதான் ஏன் பண்ணானு யோசிச்சுட்டு இருந்தேன்”

 

“நீங்கள்ளாம் திருந்தவே மாட்டீங்களாடா?”

 

“திருந்தனும் அவ்வளவு தான? கூடிய சீக்கிரமே நடக்கும்.. டென்சன் ஆவாத”

 

மஞ்சுளா அவனை சந்தேகமாக பார்க்க அர்ஜுன் சிரித்துவிட்டு சென்றான்.

 

அதன் விளைவை வெகு சீக்கிரத்தில் சந்தித்தனர்.

 

அடுத்த வாரம் பாலனின் படத்திற்கு பூஜை போடப்பட்டது. அதோடு படப்பிடிப்பு ஆரம்பமானது. அந்நேரம் ஒரு வதந்தி பரப்பப்பட்டது.

 

காலையில் திவ்யா எழுந்து கீழே வர மஞ்சுளா வேகமாக ஓடி வந்தாள். படியை நோக்கி இறங்க போனவள் மஞ்சுளா மேலே வரவும் நின்று விட்டாள்.

 

“என்ன இப்படி பதறி அடிச்சு ஓடி வர்ர?” என்று அதட்ட அதை கண்டு கொள்ளாமல் வேகமாக வந்து திவ்யாவிடம் எதோ கூறினாள். கேட்டதும் திவ்யாவின் முகத்தில் அதிர்ச்சியோடு கோபமும் வந்தது.

 

“என்ன உளறல் இது?”

 

“நிஜம்மா தான். இங்க பாரு.”

 

போனை வேகமாக கையில் வாங்கியவள் நன்றாக படித்து பார்த்தாள். எல்லோரும் திவ்யாவின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தனர். அதுவும் ஒரே விசயத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

 

அந்த ஒரே விசயம் அர்ஜுனுக்கும் அவளுக்கும் கூடிய விரைவில் திருமணம் என்பது. அதோடு இனி நடிப்பாளா? மாட்டாளா? என்கிற கேள்வி.

 

“ரப்பிஸ்… அவன….” என்று கடுப்போடு போனை மஞ்சுளாவின் கையில் திணித்து விட்டு வேகமாக கீழே வந்தாள்.

 

“டேய்.. அர்ஜுன்… எங்க போய் தொலைஞ்ச?” என்று கத்திக் கொண்டே வீட்டின் நடுவில் வந்து அவள் கத்த சமையல் அறையிலிருந்து சாவகாசமாக வெளியே வந்தான்.

 

“என்ன காலையிலயே பேய் பிடிச்சுருச்சா? பேய் கதை படிச்சு படிச்சு அது மாதிரியே கத்துற?” என்று கேட்டுக் கொண்டே அவன் வர “என்ன பண்ணி தொலைச்சுருக்க? யார கேட்டு இப்படி ஒரு விசயத்த சொல்லி வச்சுருக்க?” என்று எகிறினாள்.

 

“எத சொல்லுற?” என்று ஒன்றும் தெரியாத அப்பாவியாக கேட்டு வைத்தான். அவனை முறைத்தவள் மஞ்சுளாவின் போனை பிடுங்கி அவனிடம் தூக்கி போட்டாள்.

 

“நீ தான பண்ண?” என்று கேட்க பொறுமையாக எடுத்து பார்த்தான். பார்த்ததுமே அவன் முகத்தில் புன்னகை வந்தது.

 

“பிரபல திரைப்பட இயக்குனர் செந்தில்குமாரின் மகனுக்கும் நடிகை திவ்யான்ஷிக்கும் திருமண நிச்சயம் முடிந்து விட்டதா? விரைவில் திருமணம் எதிர் பார்க்கப்படலாம். அதன் பிறகு நடிப்பாரா இல்லையா என்பதே கேள்வி”

 

அர்ஜுன் அதில் எழுதியிருந்ததை சத்தம் போட்டு படிக்க திவ்யா பல்லை கடித்துக் கொண்டு நின்று இருந்தாள்.

 

“நல்லா இருக்குல மஞ்சு?” என்று கேட்க அவனை முறைத்து விட்டு மஞ்சுளா போனை பிடுங்கிக் கொண்டாள்.

 

“எதுக்குடா இப்படி பண்ண? அறிவு இருக்கா? முதல்ல உனக்கும் எனக்கும் எங்கடா நிச்சயம் ஆச்சு? அதுக்கு எதாவது ப்ருஃப் வச்சுருக்கியா? “

 

“ப்ச்ச்.. கூல் பேபி கூல்… நீ கார சிதச்சப்போவே உன் சினிமா வாழ்க்கைய சிதைக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். என் கிட்ட மீடியா கேட்டா ஆமானு சொல்லுவேன். நீ இல்லனு சொல்லு. நடக்குறத பார்க்கலாம்”

 

அவளுக்கு திட்டுவதற்கு வார்த்தை வாய் வரை வந்து விட்டது. அதிக கோபத்தில் முகம் சிவந்து போக அர்ஜுனுக்கு ஆனந்தமாக இருந்தது. அவள் முன்னால் அமர்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டுக் கொண்டான்.

 

கன்னத்தில் கை வைத்து அவளது கோபத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அவளோ இங்கும் அங்கும் நடந்தாள். பிறகு மஞ்சுளாவை பார்த்து புருவம் சுருக்கினாள்.

 

மஞ்சுளா தன் கையிலிருந்த போனை கண்ணால் காட்டினாள். சில நிமிடங்கள் மஞ்சுளாவின் கண்ணசைவை பார்த்த திவ்யா சோபாவில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

 

“மஞ்சு மேடம்க்கு தண்ணி எடுத்துட்டு வா போ. பாவம் கோபத்துல தொண்ட அடச்சுகிச்சு.. பேச்சே வரல” என்று அவன் நக்கலாக கூற மஞ்சுளாவும் வேகமாக சென்று தண்ணீரை எடுத்து வந்தாள்.

 

ஒன்றுமே பேசாமல் வாங்கி ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்து விட்டாள் திவ்யா. அதன் பின் ஒரு துள்ளலோடு எழுந்தாள்.

 

“ஓகே.. கிளம்புவோம். இன்னைக்கு ப்ரோக்ராம்ல எந்த சேன்ஞ்சும் இல்ல தான?”

 

“நோ. ஆனா ஈவ்னிங் பார்ட்டி இருக்கு”

 

“அந்த ப்ரடியூஸர் பார்ட்டி தான? போக வேணாம். மத்த எல்லாம் செட்டில் தான?”

 

“ம்ம்.”

 

“ஓகே.. நான் ரெடியாகி வரேன். நீ சாப்பிடு” என்று கூறியவள் படிகளின் பக்கம் நடந்தாள்.

 

திடீரென நின்று அர்ஜுனை திரும்பி பார்த்தாள். அவளது செய்கையில் அவன் குழம்பி அமர்ந்து இருந்தான்.

 

ஒரு சிரிப்போடு அவனருகில் வந்தாள்.

 

“என்ன முகம் முழுக்க குழப்பமா இருக்கே?” என்று கேட்டவள் அவனை பார்த்து புருவம் உயர்த்தினாள்.

 

அர்ஜுனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று முன் அவள் இருந்த கோபத்திற்கும் இப்போது அவள் முகம் இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

அவனது குழப்ப முகத்தை பார்த்தவள் சோபாவில் இரண்டு பக்கமும் கை வைத்து அவனை நோக்கி நன்றாக குனிந்தாள்.

 

அவளது கண்ணில் இருந்த சிரிப்பு அர்ஜுனை நன்றாக குழப்பிக் கொண்டிருந்தது. அதனால் திவ்யா அருகில் வந்தது அவனது மனதில் பதியவில்லை.

 

“இப்ப நான் பண்ணுறது எதுவும் புரியலயா? இன்னொன்னு கூட சொல்லுறேன். அது இப்போ உனக்கு புரியாது. ஆனா புரியுற நேரம் உன் நிலமைய பார்க்க நான் காத்துட்டு இருப்பேன். அது என்ன தெரியுமா?” என்று கேட்டவள் அவனை மேலும் நெருங்கினாள்.

 

“உன்ன நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. ச்சு ச்சு ச்சு” என்று கூறி விட்டு குறுஞ்சிரிப்போடு விலகி சென்று விட்டாள்.

 

திவ்யா சொன்னதன் பொருள் உண்மையில் அவனுக்கு அப்போது புரியவில்லை தான். மாலை தான் புரிந்தது. புரிந்ததும் அர்ஜுன் அதிர்ச்சியோடு பார்க்க திவ்யாவோ கூலாக பழச்சாறை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Meenakshi Subburaman

      💞🤔🤔🤔🤔🤔😢😢😢😢😢🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻💐💐💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.