Loading

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திவ்யா செந்தில் குமார் வந்ததும் வெளியே வந்து பேசி விட்டு அர்ஜுன் கிளம்புவதை பற்றியும் குறை கூறி விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

 

அதன் பின்பு அறையை விட்டு வெளியே வரவே இல்லை. லெனின் பேச்சு சத்தமும் அவர்கள் கிளம்பி செல்லும் சத்தமும் மட்டுமே கேட்டது.

 

‘சோகமாகாத.. போனா போறான். திரும்ப வருவான். அப்போ பார்த்துக்கலாம்.’ என்று மனதை தேற்றிக் கொண்டாள்.

 

மாலை பாலன் கொடுத்த கதையை ஏனோதானோவென ஆரம்பித்தவள் அதற்குள் மூழ்கிப்போனாள். கதை அவ்வளவு ஆர்வமாக இருக்க விடாமல் படித்துக் கொண்டே இருந்தாள்.

 

கடைசி காட்சியை முடித்ததும் மணியை பார்க்க ஒன்பது என்றது. செந்தில் குமார் சாப்பிட அறையை விட்டு வெளியே வந்தார்.

 

“என்ன படிச்சுட்டு இருக்க?” என்று கேட்டு அவளருகே அமர்ந்து கொண்டார்.

 

“ஸ்கிரிப்ட் மாமா.. பாலன்‌ சார் கொடுத்தது”

 

“ம்ம்.. சொன்னாங்க. இந்த ரிஸ்க் தேவையா? அதுவும் அர்ஜுன் வந்துருக்க நேரத்துல?”

 

“அவன் வந்தா எனக்கென்ன? அதான் திரும்ப போயிட்டானே. சோ எனக்கு பிடிச்சுருந்தா ஓகே இல்லைனா வேணாம்னு சொல்ல போறேன்.‌ அவ்வளவு தான்”

 

“சண்டை போட போறான்”

 

“போட்டா திரும்ப தண்ணில தள்ளி விட்ருவேன்”

 

“இதையும் கேள்வி பட்டேன். ஏம்மா..‌ அன்னைக்கே சொன்னேன்ல? எனக்கு இருக்கது ஒரே புள்ள.. பார்த்து பண்ணுமானு”

 

“அதுக்கு தான் மாமா தரையில தள்ளிவிடல”

 

“ம்ம்.. ரொம்ப பெரிய அக்கறை தான்.”

 

திவ்யா பல்லை காட்டி சிரித்து வைத்தாள்.

 

“ஆனா இந்த படத்துல நடிச்சே ஆகனுமா?”

 

“இந்த ஸ்க்ரிப்ட்ட படிக்காத வரை எனக்கும் அப்படிதான் இருந்துச்சு.‌பட் கதை சூப்பர். ஏன் என்ன தேர்ந்தெடுத்தாங்க இதுக்குனு தெரியல. ஆனா செம்ம கேரக்டர். எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு”

 

“அவ்வளவு நல்லாவா இருக்கு”

 

“நீங்களே படிங்க. உங்களுக்கும் பிடிச்சதுனா ஓகே சொல்லிடலாம்”

 

மற்ற நேரங்களில் செந்தில் குமார் இது போன்ற விசயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் இப்போது நிலைமை சற்று மோசமாக இருப்பதால் அதை வாங்கிக் கொண்டார். அதன் பின்பு இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

 

“அவார்ட் பங்சன் ஒன்னு வருது திவ்யா..”

 

“சரி..”

 

“அதுல உனக்கொரு அவார்ட் இருக்கு”

 

“யார் கொடுக்க சொன்னது?”

 

“யாரும் இல்ல”

 

“பார்ரா.. எந்த ரெகமண்ட்டும் இல்லாம அவார்ட் வருதா? இது எப்போல இருந்து?”

 

“எந்த அவார்ட் பங்சன்னு கேட்டுட்டுல நீ இத சொல்லனும்?”

 

“எது?”

 

அவர் ஒரு பிரபலமான விருதுவழங்கும் விழாவை கூற “ஓ‌… அவங்களா.. நான் கூட.. வேற சிலர நினைச்சுட்டேன்” என்றாள்.

 

“அவங்க கொடுக்குறதா இருந்தாலும் நமக்கு வேணாம்.”

 

“கரெக்ட்டு”

 

“நீ டான்ஸ் பண்ண முடியுமானு கேட்டாங்க”

 

“ம்ஹும்”

 

“நானும் நோ சொல்லிட்டேன். டேட் தெரிஞ்சப்புறம் மறக்காம போ”

 

“ஆமா எதுக்கு அவார்ட்?”

 

“லாஸ்ட் இயர் வந்ததே அதுக்கு. பெஸ்ட் ஹீரோயின் அவார்ட்”

 

“ரியலி… அவ்வளவு தூரத்துக்கு வளர்ந்துட்டனா? இப்போ தான் டெபியூட் வாங்குன மாதிரி இருக்கு”

 

“எட்டு வருசம் கழிச்சு வாங்குற.. “

 

“நான் ஒன்னும் நடிப்புக்குனு பிறந்தவ இல்லையே.. என் நேரம்.. நடிக்க வேண்டியதா போச்சு.. இதுக்குனே பிறந்து எஃபர்ட் போடுறவங்க வாங்கட்டும்”

 

“ம்ம்.. ஊருக்கு போனியே.. உன் அம்மா எப்படி இருக்காங்க..”

 

“எப்புவும் போல தான் இருக்காங்க”

 

“ம்ம்”

 

“அங்க உங்க பிள்ளையும் வந்துருந்தான்”

 

“தெரியும்.”

 

“என்ன பிள்ளைய நினைச்சு சோகமா? அவன் இப்படி தான்னு தெரியும்ல விடுங்க”

 

“ஆனாலும் நான் பெத்த பிள்ளையாச்சே”

 

“அப்படியா? இத அத்த மேல இருந்து கேட்டுட்டு இருப்பாங்க.. மாசக்கணக்கா சுமந்து பெத்தது நானு.. நீங்க பெத்தேன்னு சொல்லுறீங்கனு கோபப்பட போறாங்க.”

 

செந்தில் குமார் முகத்தில் புன்னகை வந்தது.

 

“அவ அப்படிலாம் கோச்சுக்க மாட்டா.. முக்கியமா என் கிட்ட”

 

“ரொம்ப தான். உங்கள மாதிரியே ஒருத்தன பெத்து வச்சுருக்கீங்க. அத்த மாதிரி அவன் பிறந்து இருக்க கூடாதா?”

 

“என் தப்பு இல்லமா.. அவன் அம்மா தான் என்ன மாதிரியே பிள்ள பிறக்கனும் வேண்டிட்டு இருந்தா. அவ கிட்ட தான் நீ கேட்கனும்”

 

திவ்யா சலிப்பாக தலையசைக்க “அர்ஜுன் உன் கிட்ட சொன்னானானு தெரியல.. நேத்து அந்த நயனிய பார்த்து இருக்கான்” என்றார்.

 

“வாட்? அவங்களையா?”

 

“நேத்து லேட் நைட் பார்ட்டில”

 

“அடப்பாவி… நேத்து ஏன் லேட்டுனு கேட்டப்போ வேலையில லேட்டுனு பொய் சொல்லிட்டான்”

 

“காண்ட்ராக்ட் சைன் ஆக போற சந்தோசத்துல ஒரு பார்ட்டி வச்சுருக்காங்க. அர்ஜுனும் அந்த பையனும் ட்ரின்க் பண்ணல. அந்த பையன் ஆபிஸ்ல இருக்க முக்கியமான சிலர் மட்டும் இருந்தாங்களாம். அந்த பார்க்கு இவளும் வந்துருக்கா..”

 

“எதையும் பேசி வச்சுருப்பாங்களோ”

 

“என்ன பேசுனாங்கனு தெரியல. பட் ரொம்ப நேரமா பேசிட்டு இருந்ததா மட்டும் சொல்லுறாங்க”

 

திவ்யா சில நிமிடங்கள் அமைதியாக யோசித்தாள். இதற்கும் அர்ஜுன் மீண்டும் ஊரை விட்டு செல்வதற்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோ என்று சந்தேகம் வந்தது.

 

ஆனாலும் அதை வெளியே சொல்லாமல் சாப்பிட்டு விட்டு அறைக்குச் சென்று விட்டாள். கையில் புத்தகம் ஒன்று கிடைக்க அதைபடித்துக் கொண்டே தூங்கியும் விட்டாள்.

 

காலையில் எழும் போதே எதற்கென்று தெரியாமல் எரிச்சல் வந்தது. சத்தமில்லாத பக்கத்து அறை வேறு அதிகமாக எரிச்சலை கிளப்பியது. இன்று படப்பிடிப்பு எதுவும் இல்லை. வீட்டில் தான் இருக்க வேண்டும்.

 

எழுந்து என்ன செய்வது என்று படுத்து புரண்டுகொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் சலிப்பாக எழுந்து வெளியே வந்தாள்.

 

கதவை திறந்ததும் அர்ஜுன் நின்று இருந்தான். அவ்வளவு நேரம் கதவின் அருகே சாய்ந்து நின்று இருந்தவன் அவளை பார்த்ததும் பாக்கெட்டில் கை விட்டுக் கொண்டு நின்றான்.

 

உண்மையில் அவன் தானா என்ற சந்தேகத்தோடு திவ்யா நிற்க “இவ்வளவு நேரமாவாடி தூங்குவா?” என்று கேட்டான்.

 

திவ்யா அவனை கேள்வியோடு பார்க்க அவளை இடித்துக் கொண்டு அறைக்குள் சென்றான்.

 

“நீ ஊருக்கு போகல?”

 

“போயிருந்தா இங்க எப்படி நிப்பேன்?”

 

“ஆமால…”

 

“மணி எட்டு.. இவ்வளவு நேரமாவா தூங்குவ? எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது?”

 

“நான் எவ்வளவு நேரம் தூங்குனா உனக்கென்ன?” என்று கேட்க வேகமாக முறைப்போடு அருகில் வந்தான்.

 

அவனது வேகத்தில் பயந்து இரண்டடி பின்னால் சென்று விட்டாள்.

 

“வா இங்க” என்று கூப்பிட அவனை முறைத்து விட்டு “என்ன?’ என்ற அதட்டலோடு அருகில் வந்தாள்.

 

அவள் முகத்தை கையில் ஏந்தியவன் நெற்றியில் முத்தமிட்டான்.

 

“ஹாப்பி பர்த்டே அம்மு” என்க திவ்யா விழிவிரித்து பார்த்தாள்.

 

“பிறந்த நாள் அன்னைக்கு இவ்வளவு லேட்டா எழுந்தா சோம்பேறி ஆகிடுவ. பத்து மணிக்கு ஃப்ளைட்.. நான் இன்னும் உனக்காக இங்க நின்னுட்டு இருக்கேன்”

 

“கதவ தட்ட வேண்டியது தான”

 

“இல்ல… அப்படி தட்டி நீ இரிட்டேட் ஆக வேணாம்னு தோனுச்சு. ஓகே.. பை.. டைம் ஆகிடுச்சு” என்று வேகமாக வாசல் பக்கம் நடந்தான்.

 

திடீரென நின்று “பக்கத்து ரூம்ல கிஃப்ட் இருக்கு.. பாரு.. பை… மும்பை போயிட்டு நேரா அடுத்த ஃப்ளைட் ஏறிடுவேன். இன்னும் மூனு நாள் கழிச்சு திரும்ப வருவேன். அப்போ பார்க்கலாம்…” என்று பின்னால் நடந்து கொண்டே பேசினான்.

 

திவ்யா அதை இடத்தில் அசையாமல் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

கையாட்டி விட்டு வேகமாக அவன் படியிறங்க, ஓடி வந்து பார்த்தாள். இறங்கி ஓடியவன் திரும்பி பார்த்து கையாட்டி விட்டு காரில் ஏறிக் கிளம்பி விட்டான்.

 

உடனே முகத்தை மூடிக் கொண்ட திவ்யா “அய்யோ.. அம்ரிதாக்கு வெட்கம் வருதே.. இத சொன்ன எவனும் நம்ப கூட மாட்டானே” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு அறைக்குள் ஓடி விட்டாள்.

 

திடீரென ஞாபகம் வர வேகமாக அர்ஜுனின் அறைக்கு ஓடினாள். உள்ளே சென்று பார்க்க மெத்தையிலேயே பெரிய பெட்டியாக வைத்திருந்தான்.

 

ஓடி வந்து பிரித்து பார்த்தவளுக்கு சந்தோசம் தாங்கவில்லை. தன்னுடைய பதினெட்டாவது பிறந்தநாளில் அவள் கேட்ட பரிசு.

 

“என்ன கிஃப்ட் வேணும்?” என்று அர்ஜுன் கேட்கும் போது “ஒரு நூறு ஹாரர் ஸ்டோரி புக் வாங்கி குடேன்” என்று கேட்டு வைத்தாள்.

 

“பிறந்தநாளுக்கு புக் ஓகே.. ஹாரர் ஸ்டோரி புக் கொஞ்சம் ஓவரா இல்ல?”

 

“இல்ல.. அதான் எனக்கு வேணும்”

 

“தர மாட்டேன் போ.. உனக்கு கிஃப்ட் எல்லாம் இல்ல. பர்த்டே கேக் வேணா வாங்கி தரேன்” என்று கூறி விட்டு வாங்கி கொடுத்தான்.

 

இப்போது அதை வாங்கி வைத்திருந்தான். அவள் விரும்பி படிக்கும் புத்தகங்கள் அமானுஷ்ய கதை புத்தகங்கள். அவளுக்கு பிடித்த புத்தகங்களும் இருந்தது. அவள் படிக்காத புத்தகங்களும் இருந்தது.

 

சந்தோசத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டாள். அதை மொத்தமாக தூக்கிக் கொண்டு வந்து தன் அறையில் வைத்து விட்டு நிமிர மஞ்சுளாவிடமிருந்து அழைப்பு வந்தது.

 

“ஹாப்பி பர்த்டே அம்ரிதா மேடம்.”

 

“தாங்க்யூ மஞ்சு..”

 

“நான் ஈவ்னிங் வீட்டுக்கு வரேன். இப்போ இங்க வேலை இருக்கு”

 

“சரி சரி வா” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

கீழே செல்ல செந்தில்குமார் வாழ்த்தினார். அவரும் பரிசாக புத்தகங்களையே கொடுத்தார். அம்ரிதா ஒரு புத்தகப்பிரியை. அதனால் புத்தகம் மட்டுமே அவளை அதிகமாக சந்தோசபடுத்தும்.

 

இன்று திவ்யான்ஷிக்கு பிறந்த நாள் அல்ல. இன்று அம்ரிதாவிற்கு பிறந்தநாள். அந்த நாளை மறந்து அர்ஜுன் செல்கிறானே என்ற வருத்தம் தான் இருந்தது. அவன் காலையில் வாழ்த்தி விட்டு சென்றதும் அவளுக்கு அவ்வளவு சந்தோசம்.

 

அம்ரிதாவை அழைத்த செந்தில் குமார் “இந்த கதை நல்லா இருக்கு” என்று பாலன் கொடுத்த கதையை கூறி விட “அப்போ ஓகே சொல்லிடவா?” என்று கேட்டாள்.

 

“பண்ணு.. எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம்” என்று கூறி விட்டார்.

 

அவளும் பாலனை அழைத்து சம்மதம் கூறி விட்டாள்.

 

மாலை வந்த மஞ்சுளா பிறந்தநாள் பரிசை கொடுத்தாள்.

 

“ஃபேஸ் மஸாஜர்?”

 

“ஆமா.. உனக்கு யூஸ் ஆகும்”

 

“நல்லா இருக்கு மஞ்சு.. நன்றி”

 

மஞ்சுளா அவள் முகத்தை ஆழமாக பார்த்து விட்டு “மூஞ்சில ஒரு ஒளி வட்டம் தெரியுதே” என்று சுட்டு விரலால் வட்டம் போட்டு கேட்டாள்.

 

“ஹி ஹி.. அர்ஜுன் விஸ் பண்ணான்”

 

“ஓஓஓ… எட்டு வருசமா பண்ணல.. இன்னைக்கு பண்ணதும் மேடம்க்கு சந்தோசம் பொங்கி வருது”

 

“ச்சி ப்பே”

 

“நீ என்ன சொன்ன?”

 

“எங்க பேச விட்டான்? விஷ் பண்ணிட்டு ஓடிட்டான்?”

 

“ஓடிட்டானா?”

 

“ஆமா மஞ்சு.. அவன் நேத்தே ஊருக்கு போகல.. இனைக்கு தான் ஃப்ளைட்டாம். காலையில விஷ் பண்ணிட்டு கிஃப்ட் கொடுத்துட்டு ஓடிட்டான்”

 

“என்ன கிஃப்ட்?”

 

“ஹான்.. அது.. அந்த பாக்ஸ்ல இருக்கு பாரு புக்ஸ் “

 

மஞ்சாளா எடுத்து பார்த்து விட்டு “நீ தான் ஹாரர் பைத்தியமாச்சே.. அதான் வாங்கி கொடுத்துருக்கான். சரி சந்தோசமா இரு” என்றாள்‌.

 

திவ்யா முகம் கொள்ளா சிரிப்புடன் பார்க்க “என்ன ஒரு ஆனந்தம். இம்புட்டு வருசத்துல நான் கொடுத்த கிஃப்ட்க்கு நீ இப்படி சிரிச்சதே இல்ல. இதுக்கு தான் லவ் பண்ணுற பசங்கள ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கலட்டி விட்டு போயிடனும்னு சொல்லுறாங்க போல” என்று சலித்துக் கொண்டாள்.

 

“உனக்கு பொறாமை”

 

“ஆமாமா.. உங்க காதல் லட்சணத்த பார்த்து பொறாமை பட்டுட்டாலும். எப்ப பாரு வெட்டவா குத்தவா னு இருப்பீங்க.. இத பார்த்து தான் பொறாமை படனும்..”

 

“இன்னொரு நியூஸ்”

 

“என்னது?”

 

“மாமா பாலன் சார் படத்துக்கு ஓகே சொல்லிட்டார். நானும் ஓகே சொல்லிட்டேன்”

 

“நிஜம்மாவா? அர்ஜுனுக்கு தெரியுமா?”

 

“ம்ஹும். அஃபிஸியலா எல்லாருக்கும் தெரியும் போது தெரியட்டும். அண்ட் நான் வேற ஒரு ப்ளான் வச்சுருக்கேன்”

 

“என்ன அது?”

 

“இப்போ இல்ல… சீக்கிரம் சொல்லுறேன்”

 

அதற்கு மேல் மஞ்சுளா எதுவும் கேட்கவில்லை.

 

*.*.*.*.*.*.

 

அடுத்த நாளே திவ்யான்ஷி பாலனின் படத்தில் இணைந்தாள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. நாயகனும் அவளோடு நடிக்கும் இன்னொரு நாயகியும் அன்றே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

மற்ற நடிகர்கள் நடிகைகள் எல்லோரும் யார்யாரென முடிவாகி விட இரண்டு நாட்கள் கழித்து செய்தித்தாள்களில் விசயம் வெளிவந்தது.

 

அதற்கு முதல் நாள் மஞ்சுளா “எனக்கு மூனு நாள் லீவ் வேணும்” என்று திவ்யா விடம் கேட்டாள்.

 

“எடுத்துக்கோ.. ஆனா எதுக்கு?”

 

“எங்கம்மாவோட சொந்தகாரவங்க வீட்டுல கல்யாணமாம். நான் வந்தே ஆகனும்னு அடம்பிடிக்கிறாங்க”

 

“சரி போய்ட்டு வா. சூட்டிங் ஸ்டார்ட் ஆனா நீ எங்கயும் போக முடியாது” என்று கூறி அனுப்பி வைத்தாள்.

 

அர்ஜுன் வேலை முடித்து விட்டு திரும்பி வந்து இறங்கியதுமே திவ்யா பாலனின் படத்தில் நடிக்கும் செய்தியை தான் முதலில் கேட்டான்.

 

இந்த செய்தி வளைதலங்களில் தீயாக பரவ ஆரம்பித்தது. பழைய காதலனுடன் இணைகிறாரா மின்மினி என்ற வார்த்தைகளை பார்க்கும் போது அர்ஜுனுக்கு கோபம் தான் வந்தது.

 

ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை பேசினார்கள். திவ்யாவின் இன்னொரு பழைய காதலனும் அதே படத்தில் நடிக்கப்போவதாக வதந்தி பரவியது. இரண்டு காதலனுடன் நடிக்கும் திவ்யாவை பற்றி அவதூறு பேசாத ஆளே இல்லை.

 

அவளின் ரசிகர்கள் அவளுக்கு ஆதரவாக பேசி ஓய்ந்தனர். நெருப்பில்லாமலா புகையும் என்றும் அவர்களுக்குள் தவறான தொடர்பு உண்டு என்றும் அடித்து பேசி வைத்தனர் சிலர்.

 

உண்மையாகவே அவள் மனதை படித்து பார்த்தது போல் சிலர் திவ்யாவால் பாலனை மறக்க முடியவில்லை என்று கதை கூற ஆரம்பித்தனர்.

 

பாலன் திவ்யாவிற்காக அவனது மனைவியை விவாகரத்து செய்ய போகிறான் என்று ஒரு கூட்டம் பேசியது.

 

மற்றொரு கூட்டம் திவ்யான்ஷிக்கும் பாலனுக்கும் திருமணமே முடிந்து விட்டது என்று கூறி விட்டது. மேலும் சிலர் பொதுவில் பேசக்கூடாத வார்த்தையெல்லாம் பேசி வைத்தனர்.

 

இதில் பல பெண்களும் அடக்கம். பொதுவில் மற்றொரு பெண்ணில் அந்தரங்க வாழ்வை பற்றி பேசுகிறோம் என்ற எண்ணம் இல்லாமல் திவ்யான்ஷி தான் பாலனின் குடும்பத்தை கலைத்து விட்டாள் என்று திட்டி வைத்தனர்.

 

இத்தனையும் பார்த்த அர்ஜுனுக்கு எரிச்சலாக இருந்தது. வீட்டுக்கு வந்தவனை யஷ்வந்த் அவசரமாக அழைக்க கிளம்பி வந்தான். அப்போது தான் திவ்யாவும் கிளம்பி வெளியே வந்தாள்.

 

அவனை பார்த்ததும் திவ்யா பேச வர முறைத்து விட்டு கடந்து சென்றான்.

 

“டேய்.. நில்லுடா.. இப்போ எதுக்காக முறச்சுட்டு போற?”

 

அவளை திரும்பி பார்த்தவன் “உன்னலாம்…” என்று ஆரம்பித்து எதுவும் சொல்லாமல் நிறுத்தினான்.

 

“இப்போ எதுக்கு பொங்குற?”

 

“அந்த டைரக்டர் கூட படம் சைன் பண்ணிருக்க தான?”

 

“ஆமா.. அதுக்கென்ன?”

 

“உன்ன என்ன சொல்லி திட்டனு கூட எனக்கு தெரியல.. போடி.. எப்படியோ போ”

 

“டேய்… ” என்று கூப்பிட கூப்பிட நிற்காமல் சென்று விட்டான்.

 

லெனினை அழைக்க அவன் வேறு ஊரில் இருப்பதாக கூறினான். கேப் புக் செய்ய பார்க்க அவன் நேரம் அதுவும் கிடைக்கவில்லை.

 

செந்தில் குமார் அவனது நிலைமையை பார்த்து விட்டு தன்னுடைய புதிய காரை கொடுத்தார்.‌ அதை எடுத்துக் கொண்டு சென்றவனுக்கு ஓட்டுவது சிரமமாக இருந்தது.

 

அவன் கார் ஓட்டிப் பழகியது வெளி நாட்டில். அங்கு இருக்கும் கார்கள் இடது பக்கம் செலுத்தக் கூடியவை. இங்கு இருக்கும் கார்கள் வலது பக்கம் என்பதாலே அர்ஜுன் லெனினை தான் ஓட்டச் சொல்லி விடுவான்.

 

ஒரு கடத்திற்கு மேல் முடியாமல் போக நிறுத்தி விட்டான். இப்படியே போய் எங்காவது இடித்து விட்டால் தவறாக முடிந்து விடும். முதலில் யஷ்வந்த்தை அழைத்து விசயத்தை கூறலாம் என்று பார்க்க போனில் தொடர்பு கிடைக்கவில்லை.

 

காரை விட்டு இறங்கி போனை தூக்கி பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்தான். சில நிமிடங்கிளில் அங்கு ஒரு கார் வர அதை கவனிக்காமல் போனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகில் கார் வந்து நின்று விட்டது. அர்ஜுன் நிமிர்ந்து பார்க்க திவ்யா கண்ணாடியை இறக்கினாள்.

 

“என்ன இவ்வளவு சீக்கிரம் நடுத்தெருவுக்கு வந்துட்ட?” என்று கேட்டுக் கொண்டே திவ்யான்ஷி கீழிறங்கி குளிர் கண்ணாடியை அணிந்து கொண்டாள்.

 

அவளை முறைத்து பார்த்தவன் பதில் சொல்லாமல் போனை பார்த்தான். யஷ்வந்த்தை அழைக்க ‌முயற்சித்துக் கொண்டிருக்க “பேசுடா..‌ உன் கிட்ட தான கேட்குறேன். நடுத்தெருவுல நிக்கிற?” என்று கேட்டாள்.

 

காரில் சாய்ந்து கொண்டு அவள் படுகூலாக நிற்க அர்ஜுனுக்கு எரிச்சலாக இருந்தது. வேலை கெட்டு போகும் கோபம் அவன் முகத்தில் ஜொலித்தது.

 

“ஏய் ‌வேலைய பார்த்துட்டு கிளம்பு. உன் மூஞ்சில முழிச்சதுக்கு எதுவும் விளங்கல”

 

அவன் எரிந்து விழுந்த போதும் திவ்யாவின் முகத்தில் மாற்றமே இல்லை.

 

“உன் கெட்ட நேரம் உன் வாயில தான்னு சொன்னேன். இப்பவும் திருந்தல நீ?”

 

“ப்ச்ச்… ச்சை.. கண்ட முகத்தெல்லாம் பார்த்துட்டு கிளம்புனா இப்படி தான் நாசமா போகும்.”

 

“இதுக்கே சலிச்சுக்குற? இன்னொன்னு நடக்க போகுது பார்க்குறியா?”

 

அவளை உறுத்து விழித்தவன் குனிந்து போனை பார்க்க “அட அந்த போன விடு. அங்க பாரு” என்று அவன் வந்த காரை காட்டினாள்.

 

எதிர் பக்கம் நிறுத்தி விட்டு போனின் நெட்வொர்க்கை தேடிக் கொண்டு இந்த பக்கம் வந்து விட்டான். திவ்யா அவன் பக்கத்தில் தான் நின்று இருந்தாள்.

 

எதற்கு‌ காரை காட்டுகிறாள் என்று அர்ஜுன் அவளை திரும்பி பார்க்க “எவ்வளவு அழகான கார்.. சும்மா பளபளனு இருக்குல?” என்று அவள் கூறி முடித்த அடுத்த நொடி இடியே அருகில் விழுந்தது போல் ஒரு சத்தம் கேட்டது.

 

அர்ஜுன் அதிர்ந்து போய் திரும்பி பார்க்க கார் நான்கு குட்டிக்கரணம் போட்டு தள்ளிப்போய் குப்புற விழுந்து இருந்தது. அதை இடித்து விட்டு புயல் வேகத்தில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

 

“ச்சு ச்சு.. இப்படி சல்லி‌ சல்லியா போச்சே… ஆனா இன்னொரு தடவ என்‌ கேரக்ட்டர ஜட்ஜ் பண்ணுற‌ மாதிரி பாலன் பத்தி பேசுனனு வை உன்ன இறக்கிட்டு எல்லாம் கார தூக்க மாட்டேன். நேரா உன்னையே தூக்கிடுவேன் ஜாக்கிரதை” 

 

அனல் பறக்க அவள் கூறியது அறைகுறையாக தான் அவனது காதில் விழுந்தது. அவனது அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல் காரில் அமர்ந்தவள் காரை எடுக்காமல் திரும்பி அவனை பார்த்தாள்.

 

“என் மூஞ்சில முழிச்சா இப்படி தான் நடக்கும். இப்போ என்ன பண்ணுற பொடி நடையா போய் உன் மீட்டிங்க அட்டன் பண்ணுற சரியா?. ஹா… ஒன்னு சொல்ல மறந்துட்டேன். போகும் போது லாரி கிட்ட ஜாக்கிரதையா இரு”

 

அர்ஜுன் அதை காதில் வாங்கி திரும்பி பார்க்க காரை புயல் வேகத்தில் கிளப்பிக் கொண்டு சென்று விட்டாள்.

 

கீறல் கூட விழாமல் பளபளவென சற்று முன் இருந்த கார் இது தானா என்று நம்ப முடியாமல் அவன் அதிர்ந்து போய் நின்று இருந்தான்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. 💞டேய் பாவிங்களா பிறந்த நாளாக்கு வாழ்த்து சொல்ல மணிக்கணக்காக காத்துட்டு இருந்துட்டு கடைசியில் இப்படி பைத்தியம் மாதிரி பண்றீங்க

      💞டேய் நீங்க இப்படியே இருந்தா எப்போ டா நீங்க சந்தோஷமாக இருக்குறதைப் பார்க்குறது

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.