Loading

 

 

 

 

 

 

 

அடுத்த நாள் மாலை திவ்யா வேலையை முடித்து விட்டு வர லெனின் வீட்டில் இருந்தான். அர்ஜுனுடன் வேலை செய்து கொண்டிருந்தான். வேலை முடிந்து அவன் கிளம்ப “உங்க வேலைய பார்க்க மாட்டீங்களா? இவன் கூடவே சுத்துறீங்க?” என்று கேட்டாள்.

 

“எனக்கு தான் வேலையே இல்லையே…  காலையில பேஷண்ட் வருவாங்க. அப்புறம் ஈவ்னிங் தான். எந்நேரமும் சும்மா தான் இருக்கேன்”

 

“டென்டிஸ்ட்க்கு ஐடி ல என்ன தெரியும்னு உங்கள வேலை வாங்குறான்?”

 

“பெருசா எதுவும் தெரியாது. பட் என்னால முடிஞ்ச வரை ஹெல்ப் பண்ணுறேன். அண்ட்.. இத்தனை வருசம் கழிச்சு வந்துருக்கான். இது கூட செய்யலனா எப்படி?”

 

“நல்ல நட்பு… கண்டினியூ”

 

“தண்ணில நீ தான் தள்ளி விட்ட போல? ஏன்?”

 

“சும்மா.. நீச்சல் மறந்துருப்பான்னு ஞாபக படுத்த”

 

“ரொம்ப நல்லா ஞாபகம் வந்துடுச்சாம்.”

 

“அது தான வேணும்”

 

திவ்யா சிரிக்க லெனின் சலிப்பாக தலையாட்டினான்.

 

பிறகு சில நிமிடங்கள் அவளிடம் பேசி விட்டு கிளம்பிச் சென்று விட்டான். திவ்யா தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

இரவு உணவு நேரம் வர திவ்யா மட்டுமே வந்தாள். அர்ஜுன் வரவில்லை.

 

“பசிச்சா வர போறான்” என்று தனக்குத்தானே கூறி விட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டாள். பாதி உணவு கூட உள்ளே செல்லவில்லை. பல முறை மாடி பக்கம் பார்த்து விட்டாள்.

 

பிறகு வேகமாக சாப்பிட்டு முடித்து விட்டு அர்ஜுனை தேடிச்சென்றாள்.

 

“ஹலோ.. ” என்று கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள்.

 

“மிஸ்டர். உங்கள தான்”

 

அர்ஜுன் திரும்பி பார்க்காமல் இருக்க “உன்ன தான்டா கூப்பிட்டேன்” என்று அருகில் வந்து கத்தினாள்.

 

“ப்ச்ச்.. என்ன?”

 

“ஃபீவர் பாய்.. சாப்பிட வரலையா?”

 

“அது உனக்கு தேவை இல்லாத விசயம்”

 

“தேவை இல்ல தான். ஆனா மாமா வந்தா என்ன கேட்பாரே.. அவங்க அருமை மகனுக்கு சாப்பாடு கூட போடலனு… வந்து சாப்பிடு”

 

“எனக்கு பசிக்கல”

 

“அதுனால?”

 

“நீ இங்க இருந்து கிளம்பு. எனக்கு வேலை இருக்கு”

 

“பெரிய வேலை… அத நாளைக்கு பார்த்தா ஆகாதா?”

 

“ப்ச்ச்.. இப்ப உனக்கு என்ன தான் வேணும்?”

 

“சத்தியமா நீ இல்ல”

 

“சந்தோசம் கிளம்பு”

 

“எக்கேடோ போ”

 

திவ்யா அவனை முறைத்து விட்டு திரும்பி நடக்க “அம்.. திவ்யான்ஷி” என்று அழைத்தான்.

 

அம்முவை பாதியில் விட்டதில் அவளுக்கு கோபம் வந்து விட்டது. கையை மூடி கோபத்தை அடக்கிக் கொண்டு திரும்பினாள்.

 

“உன்னால எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

 

புருவம் சுருங்க கேள்வியாக பார்த்தாள்.

 

“நாளைக்கு மட்டும் என் கண்ணு முன்னாடி வராத.”

 

திவ்யாவிற்கு சட்டென கோபம் தலைக்கு ஏறியது.

 

“நானும் போனா போகுது.. உடம்பு சரியில்லாம இருக்கியேனு அமைதியா இருந்தா ஓவரா தான் பேசுற… தண்ணில தள்ளி விட்டதுக்கு பதிலா தரையில தள்ளி விட்ருக்கனும். போனா போகுதுனு விட்டது என் தப்பு தான். பார்த்துக்கிறேன்”

 

“சரி தான் போடி” என்று முணுமுணுப்போடு திரும்பிக் கொண்டான். அவளை பார்த்து பேச அர்ஜுனுக்கு கடினமாக இருந்தது. மஞ்சுளா பேசியது எல்லாம் மூளையில் ஓடிக் கொண்டே இருக்க வேலையையே சரியாக பார்க்க முடியவில்லை. மிகவும் முயற்சி செய்து தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

 

நாளைக்குள் வேலையை முடித்து அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் இங்கிருக்கும் வேலைகள் ஆரம்பமாகும். அதன் பின் அவனுக்கு பெரிதாக வேலை இருக்காது. மேற்பார்வை பார்க்கும் வேலை மட்டும் தான் மிச்சமாக இருக்கும். அதனால் வேலையில் மூழ்கி இருக்க திவ்யா வந்து நிற்கிறாள்.

 

இவளிடம் பேசினால் மீண்டும் கவனம் சிதறிப்போகும். அதற்காகவே துரத்தி விட்டான். அடுத்த நாள் முழுவதும் கண்ணில் படாமல் இருந்தால் வேலை முடிந்து விடும் என்று கூறி வைக்க இது தெரியாமல் திவ்யாவிற்கு கோபம் தான் வந்தது.

 

அதே கோபத்தோடு அறையிலிருந்து வெளியே வந்தவள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

 

அந்நேரம் சமையல் செய்யும் பெண் பாலோடு படியேறி வந்து கொண்டிருந்தாள். உடனே படிகளின் அருகே சென்றாள்.

 

“வெயிட் . இது அவனுக்கு தான?” என்று கேட்டாள்.

 

மாடியில் அவளைத் தவிர அவன் மட்டும் தான் தங்கி இருக்கிறான். ஆனாலும் ஒரு முறை கேட்டு உறுதி செய்து கொண்டாள்.

 

“ஆமா மேடம்”

 

“என் கிட்ட கொடு. நீ போ” என்று பாலை வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டாள்.

 

சில நிமிடங்களுக்கு பிறகு அவனிடம் பால் டம்ளர் பத்திரமாக சேர்க்கப்பட்டது. பதினைந்து நிமிடங்கள் கழித்து திவ்யா அர்ஜுனின் அறைக்கதவை சுட்டு விரலால் தட்ட அர்ஜுன் நிமிர்ந்து பார்த்தான். ஆனால் முழுமையாக பார்க்க முடியவில்லை. தூக்கம் கண்ணை சுழட்டியது. இமை சிமிட்டி அவளை பார்த்தான்.

 

திவ்யா கேலி புன்னகையுடன் அவன் முகத்தை பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

 

கண்ணை தேய்த்துக் கொண்டு அர்ஜுன் பார்க்க “பால முழுசா குடிச்சுட்ட போல. வெரி குட்” என்றாள்.

 

அர்ஜுன் புரியாமல் கண்ணை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தான்.

 

“அட இன்னுமா புரியல? நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குடிச்ச பால்ல ஒரு.. அஞ்சு ஆறு தூக்க மாத்திரை போட்டேன். அதுக்கு மேலயும் போட்ருப்பேன். ஆனா டேஸ்ட் மாறி நீ கண்டு பிடிச்சுட கூடாது பாரு.. அதான் வெறும் அஞ்சு ஆறு போதும்னு விட்டேன். நல்லா இருந்துச்சா?”

 

திவ்யா நக்கலாக கேட்டு விட்டு கை கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்து நின்றாள்.

 

ஒரு நொடி புரியாமல் குழம்பிய அர்ஜுன் பக்கத்தில் இருந்த காலியான டம்ளரை பார்த்தான். அதை கூட திவ்யா வந்து சாப்பிட வற்புறுத்தியதால் இதையாவது குடிப்போம் என்று குடித்து வைத்தான். ஆனால் இவள் எதையோ கலந்து இருப்பதாக கூறுகிறாளே!

 

கண்கள் திறக்க முடியாமல் போனபின்பு அவள் சொன்னது புரிய ஆரம்பித்தது. அதிர்ந்து போனவன் முன்னால் திறந்து கிடந்த லாப்டாப்பை மூடி விட்டு வேகமாக எழுந்தான். ஆனால் சரியாக நிற்க முடியவில்லை. அதிலேயே புரிந்து விட்டது. அவள் நிஜமாகவே எதையோ பாலில் கலந்து இருக்கிறாள் என்று.

 

“ஏய்..” என்று தன்னை நிதானித்துக் கொண்டு அவன் கத்த “அட.. விழுந்துடாத டா. மாத்திரை பவர் ஃபுல். கண்ணுல தூக்கம் தெளிவா தெரியுது. பரவாயில்ல நல்லா வேலை செய்யுது போல” என்று நக்கலாக கேட்டாள்.

 

கோபத்தோடு அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவன் நிலையில்லாமல் தள்ளாடி மெத்தையில் விழுந்தான். கண் இமைகள் பிரிய மறுத்து மூடிக் கொண்டன. அவனது போராட்டங்கள் வீணாக தூக்கம் அவனை கட்டி இழுத்துச் சென்றது.

 

வேகமாக அவன் அருகே வந்து எட்டிப் பார்த்தாள். கண்ணை தேய்த்துக் கொண்டு அர்ஜுன் முழிக்கப் போராடி, முடியாமல் விட்டு விட்டான்.

 

“ம்ம்.. சூப்பர். நல்லா தூங்கு மேன். குட் நைட்” என்று அவள் சிரிப்போடு கூற அது அவனது காதில் விழத்தான் செய்தது. ஆனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.

 

“உன்ன… நாளைக்கு கவனிச்சுக்கிறேன்டி” என்று முணுமுணுத்துக் கொண்டே உறங்கி விட்டான்.

 

நன்றாக உறங்கும் வரை அங்கேயே நின்று இருந்தாள். ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டான் என்று உறுதி செய்து கொண்டவள் அவன் படுத்திருந்த நிலையை பார்த்தாள். மெத்தைக்கு குறுக்காக விழுந்திருந்தான். அவனை சரியாக படுக்க வைக்க துடித்த கையை அடக்கி விட்டு அறையை நோட்டம் விட்டாள்.

 

ஏசியின் அளவு சரியாக வைத்து விட்டு பரப்பிக் கிடந்த காகிதங்களை எடுத்து ஓரமாக வைத்தாள். மீண்டும் ஒரு முறை அவன் முகத்தை பார்த்து விட்டு வாசல் நோக்கி நடந்தாள்.

 

விளக்கை அணைக்க சுவிட்சை தொட்டவள் ஒரு நொடி தாமதித்தாள்.

 

“அட்லீஸ்ட் போர்வையாச்சும் போர்த்தி விடலாமே.. காலையில எந்திரிச்சு எதாவது கேட்டா சமாளிச்சுக்கலாம். இப்படியே எப்படி விடுறது?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

 

பிறகு என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று வேகமாக சென்று போர்த்தி விட்டாள். நெற்றியை தொட்டுப்பார்க்க கைகள் துடித்தது.

 

“இதெல்லாம் தெரிஞ்சா எரிஞ்சு விழுவானே” என்று முணுமுணுத்தவள் கையை மூடிக் கொண்டு திரும்பினாள். ஆனால் மனம் கேட்கவில்லை.

 

“தூக்கத்தில் இருப்பவனுக்கு தெரிய வாய்ப்பில்லை” என்று மனம் வாதிட கை நடுக்கத்தோடு நெற்றியை தொட்டு பார்த்தாள்.

 

காய்ச்சல் எதுவும் இல்லை. சற்று நிம்மதியாக உணர்ந்தாள்.

 

“உன்னால தான் காய்ச்சல் வந்தது. இல்லனா நல்லா இருந்துருப்பான்” என்று மனசாட்சி கூற அதற்கு பதிலே சொல்லாமல் அங்கிருந்து வேகமாக வெளியே சென்றாள்.

 

விளக்குகளை அணைத்து விட்டு கதவை அடைத்துச் சென்றாள். அர்ஜுனோ எதையும் உணராத ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

 

காலையில் ஒரு பாடலை ஹம் செய்தபடி திவ்யா கீழே இறங்கி வர மஞ்சுளா நின்று இருந்தாள்.

 

“குட் மார்னிங் மஞ்சு”

 

“ம்ம் மார்னிங். எங்க அர்ஜுன்?”

 

“தூங்குறான்”

 

“ஓ..” என்றவள் திடீரென அவளை சந்தேகமாக பார்த்தாள்.

 

எப்போது அர்ஜுனை பற்றி கேட்டாலும் “எனக்கென்ன தெரியும்?” என்று கேட்பாள். இப்போது பதில் சொல்வது வித்தியாசமாக இருந்தது.

 

“ஹே.. வெயிட்.. அவன் தூங்குறது உனக்கு எப்படி தெரியும்? அவனும் இவ்வளவு நேரம் தூங்குறவன் இல்லையே?”

 

“நான் தான் நேத்து டேப்ளட் கொடுத்து தூங்க வச்சேன்”

 

“என்னது? மறுபடியும் ஃபீவரா?”

 

“ச்சே ச்சே… இது ஸ்லீப்பிங் பில்ஸ்”

 

“ஓ…”

 

“ம்ம்.. பால்ல கலந்து கொடுத்தேன்”

 

“பால்லயா?”

 

“ம்ம்”

 

“சரியில்லையே.. எத்தனை டேப்ளட் போட்ட?”

 

“ஆறு”

 

“என்னது! அடிப்பாவி.. உனக்கு அறிவு இருக்கா?” என்று கத்தியவள் வேகமாக படிகள் பக்கம் போக திவ்யா அவளை பிடித்துக் கொண்டாள்.

 

“இப்ப எங்க ஓடுற?”

 

“உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா? ஆறு மாத்திரை யாராவது கொடுப்பாங்களா? லூசா நீ? அவனை உடம்பு சரியில்லாம இருக்கான். மேல மேல எதாவது பண்ணிட்டே இருக்க? கைய விடு நான் போய் என்னாச்சுனு பார்க்குறேன்”

 

“அட சொல்லுறத முழுசா கேளு. நீ பாட்டுக்கு திட்டிட்டே போற? நான் டேப்ளட் கொடுத்தது உண்மை தான்.‌ ஆனா ஆறு எல்லாம் இல்ல. வெறும் ரெண்டு தான்”

 

“ஹான்..!” என்று விழித்த மஞ்சுளா விசயத்தை புரிந்து கொண்டாள்.

 

படபடத்த நெஞ்சை தடவி கொடுத்தவள் “ஹய்யோ ராமா.. இதுங்க சண்டையில வாழ வேண்டிய என்ன ஹார்ட் அட்டாக் வர வச்சு சாகடிச்சுடுங்க போலயே.‌‌ அடியே இத முன்னாடியே சொல்லி தொலைக்க வேண்டியது தான?” என்று எரிந்து விழுந்தாள்.

 

“அவன் கிட்ட இத தான நான் சொன்னேன்”

 

“என்னத்த?”

 

“அஞ்சாறு டேப்ளட் போட்ருக்கேன். நிம்மதியா தூங்குனு. அவனும் அத நம்பிட்டான். அத தான் உன் கிட்டயும் சொன்னேன்”

 

“போடி… இவளே… ஆமா உனக்கு ஏது இந்த டேப்ளட்ஸ்? முதல்ல நடந்தத விளக்கமா சொல்லு. இல்ல உன்ன நான் விசம் வச்சு கொல்ல வேண்டி இருக்கும்”

 

“சரி சரி வந்து உட்காரு சொல்லுறேன்” என்று அழைத்துச் சென்றவள் அர்ஜுன் பேசியதை சொன்னாள்.

 

“என் மூஞ்சிய பார்க்க பிடிக்கலங்குறான். கடுப்பாகுமா ஆகாதா? அதான்.. அங்கிள் அப்போ அப்போ போடுற தூக்க மாத்திரைய இந்த மன்த் வாங்க சொல்லி இருந்தார். அந்த மேனேஜர் மொத்தமா என் கிட்ட கொடுத்துட்டு போயிட்டார். என் ரூம்ல தான ஃபர்ஸ்ட் எயிட் கிட் இருக்கு. அதுல போடலாம்னு கொண்டு போய் வச்சேன். அது இப்போ யூஸ் ஆகிடுச்சு”

 

மஞ்சுளா எதையோ பேச வர “நான் இன்னும் முடிக்கல. அவனுக்கு ஏன் கொடுத்தேன்னு சொல்லிடுறேன். அதையும் கேட்டுக்க. நேத்து இங்க லெனின் வந்துருந்தாங்க. நான் ஈவ்னிங் வந்து பார்த்தேன். அப்போ எதோ வேலை விசயமா பேசிட்டு இருந்தாங்க. இவன் நைட் தூங்கவே முடியலனு லெனின் கிட்ட சொல்லிட்டு இருந்தான். லெனின் ரெஸ்ட் எடுனு சொன்னதுக்கு வேலை முக்கியம்னு சொல்லிட்டான். லெனின் பேசுறதயே அவன் காதுல வாங்கல. அதுக்காக தான் நைட் நான் பேச போனேன்.” என்று நிறுத்தினாள்.

 

“ஆனா அப்போ கடுப்பேத்தி விட்டுட்டான். போடானு திட்டிட்டு வந்துட்டேன். பட் இப்போ அவன தூங்க வைக்கனுமே. அப்படியே விட்டு திரும்ப ஃபீவர் வந்துடுச்சுனா? டாக்டர் கிட்டயும் கேட்டேன். அவரும் தூங்கி எழுந்தா தான் நல்லதுனு சொன்னார். சோ இந்த முடிவ எடுத்தேன். பட் அவன பயமுறுத்தி பார்க்க ஆசை. அதான் இப்படி”

 

திவ்யா தன்னிலை விளக்கத்தை வைத்து விட்டு எழுந்து சாப்பிடச் சென்றாள். அவள் செய்ததில் வழக்கம் போல் மஞ்சுளாவிற்கு தவறு எதுவும் தெரியவில்லை.

 

திவ்யாவின் பின்னால் சென்று அவளருகில் அமர்ந்து கொண்டாள்.

 

“திவ்யா.. ஒன்னு கேட்கவா?”

 

“என்ன?”

 

“கோச்சுக்காத.. நீ நல்லவளா? கெட்டவளா? நீ பண்ணுறத வச்சு என்னால புரிஞ்சுக்கவே முடியல”

 

“நான் கெட்டவ தான்”

 

“ஏன் அப்படி?”

 

மஞ்சுளா ஆச்சரிய படாமல் சாதாரணமாகவே கேட்டாள்.

 

“இந்த நல்லவ பேரு இருக்கே நல்லவ பேரு… அது யானைய கட்டி தீனி போடுற மாதிரி.. ஹெவி வொர்க். செலவு அதிகம். பிடிச்சத பண்ண முடியாது. ஏன் சுதந்திரமா பேசக் கூட முடியாது. அத கெடுக்க நாலு பேரு வந்துட்டே இருப்பாங்க. காப்பாத்த போராடிட்டே இருக்கனும். ஆனா இந்த கெட்டவ பேரு அப்படி இலல. அது சர் நேம் மாதிரி. பேரோட தானா வந்து ஒட்டிக்கும். அத காப்பாத்த போராட தேவை இல்ல. அத மெயின்ட்டைன் பண்ண தேவை இல்ல. அத கெடுக்க யாரும் வர மாட்டாங்க. அது பாட்டு வளர்ந்துட்டு இருக்கும். நானும் நானா எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தாலே கெட்டவ பேரு தன்னால நிலைச்சு நிக்கும். சோ செலவு இல்லாம கிடைக்குற பேரே போதும். நான் கெட்டவ தான். இப்படியே இருக்க தான் எனக்கு ஆசை.”

 

“பட்.. நீ பண்ணுறது யாரையும் ஹர்ட் பண்ணது இல்லையே? அப்புறம் ஏன் கெட்டவ பேரு?”

 

‘பண்ணிருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தன அதிகமா ஹர்ட் பண்ணி இருக்கேன்’ என்று மனதில் நினைத்தவள் தண்ணீரை குடித்து நிதானபடுத்தினாள்.

 

“அது இல்ல மஞ்சு. இப்போ சினிமா இன்டஸ்ட்ரிய பெறுத்த வரை எனக்கு எக்ஸ் லவ்வர் மூனு பேர் இருக்காங்க. கூடவே ஜெயதேவ் கூட‌ ரூமர். ஆனா நான் யார நிஜம்மாவே லவ் பண்ணுறேன்னு என் மனசுக்கு தான் தெரியும். நான் கேட்காமலே எனக்கு மூனு எக்ஸ் லவ்வர க்ரியேட் பண்ணி அவங்களோட என்ன சேர்த்து பேசிட்டு இருக்காங்க. இவங்க பேசுறாங்கனு நான் அப்படி மூனு பேரையும் லவ் பண்ணவும் முடியாது. இல்ல நான் அப்படி இல்லனு ப்ருஃப் பண்ணி நல்லவ பேரு வாங்கனும்னு அவசியமும் கிடையாது. நான் கெட்டவ தப்பானவனு சொல்லுறியா? சொல்லிட்டு போ. அத எல்லாம் காது கொடுத்து கேட்க கூட எனக்கு நேரம் இல்ல. இதே நல்லவனு பேர் வாங்கி இருந்தேன்னு வை இதெல்லாம் கண்டுக்காம இருக்க முடியாது. பைத்தியமே பிடிச்சுருக்கும். இப்போ புரியுதா?”

 

“புரியுது..”

 

“சோ.. நான் பண்ணுறது எந்த வழினு எல்லாம் யோசிக்க மாட்டேன். எனக்கு பிடிச்சத பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்”

 

“அதுக்காக அர்ஜுன பயமுறுத்துறது ஓவர்”

 

“அவன் அம்ரிதா கிட்டயே கல்லடி வாங்குனவன்.. இப்போ இருக்கது பிரபல நடிகை திவ்யான்ஷி. எதாச்சும் பண்ணா கண்டிப்பா வாங்கி கட்டுவான்.”

 

“எது நடக்குதோ இல்லையோ சீக்கிரத்துல உங்களால எனக்கு பிபி சுகர் எல்லாம் வந்துடும். அது மட்டும் உறுதி”

 

“நண்பிடி”

 

“மூஞ்சி.. போயும் போயும் உங்க ரெண்டு பேருக்கும் ஃப்ரண்ட் ஆனேன் பார்த்தியா அதான் நான் பண்ண பெரிய தப்பு”

 

“சரி சரி சாப்பிடுற நேரத்துல பேசாத.. சாப்பிடு” என்று தட்டை எடுத்து வைத்தாள்.

 

*.*.*.*.

 

அர்ஜுன் கண் விழிக்கும் போது மணி பத்து. எழுந்து முகம் கழுவியவனுக்கு உடல் காற்றில் பறப்பது போல் இதமாக இருந்தது. கூடவே நேற்று திவ்யா பேசியதும் ஞாபகம் வந்தது.

 

“ஆறு மாத்திரை போட்டேன்னா.. இவ்வளவு சீக்கிரம் முழிப்பு வந்துடுச்சு” என்று யோசித்துக் கொண்டே குளித்து முடித்தான்.

 

காலை உணவு அறைக்கே வந்து விட சாப்பிட்டு விட்டு வீட்டிலிருந்தே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான். நன்றாக தூங்கி எழுந்த பின்பு அவனால் வேலை வேகமாக செய்ய முடிந்தது.

 

திவ்யா எத்தனை மாத்திரை கலந்திருப்பாள் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அவளை கண் முன்னால் வராதே என்று கூறியவன் இப்போது அவள் வரும் நேரத்தை எதிர் பார்த்து காத்திருந்தான்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.