Loading

 

 

 

 

இரவு வரை கலாட்டாக்களுடன் செல்ல இரவு புது பிரச்சனை ஆரம்பித்தது.

 

“அர்ஜுன் எங்க தூங்குவான்?” என்று அன்பரசி கேட்க “நான் உங்க கூட தூங்குறேன். அர்ஜுன் என் ரூம்ல தூங்கட்டுமே” என்றாள் சந்திரா.

 

“வேணாம்..‌ உன் ரூம்ல அம்ரு தூங்கட்டும். அர்ஜுன் அவ ரூம்ல தூங்கட்டும்”

 

“நோ..” என்று அம்ரிதா கூற அது வரை போனை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்த அர்ஜுன் வேகமாக நிமிர்ந்து அவளை பார்த்தான்.

 

அவள் அவனை முறைத்துத் தள்ள அவனுக்கு குதூகலமாக இருந்தது. புருவம் உயர்த்தி சிர்ப்போடு பார்த்து வைத்தான்.

 

“சரி அப்போ நீ என் கூட இரு.. சந்திரா அவ ரூம்ல தூங்கட்டும். அர்ஜுன் உன் ரூம்ல தூங்கட்டும்”

 

“ம்மா.. சுத்தி சுத்தி என் ரூம்க்கே அடி போடுறீங்க.. இவன எல்லாம் நான் அளோவ் பண்ண மாட்டேன். “

 

“விடுங்க அத்த..‌ நான் ஹால்ல தூங்கிக்கிறேன். ஆனா ஒரே ஒரு கண்டீசன்”

 

அர்ஜுன் மர்ம புன்னகையுடன் கூற “என்னது?” என்று கேட்டார்.

 

“இவள ரூம்ல போட்டு அடச்சுடுங்க. மிட் நைட்ல இவ நடமாடுனா நான் பயந்து போயிடுவேன்”

 

“உன்ன.. உன்ன….”

 

“என்ன…?”

 

“ச்சீ ப்பே”

 

அம்ரிதா கோபமாக கத்தி விட்டு அறைக்குச் சென்று விட்டாள்.

 

“ஹால் ல கொசு தொல்லை இருக்குமே” என்று சந்திரா கூற “அத விட அம்ரிதா தொல்லை பெருசு” என்று அவளது அறையை பார்த்து கத்தினான்.

 

அறைக்குள் எதோ விழுவது போல் சத்தம் கேட்க அர்ஜுன் சிரித்து விட்டான்.

 

“நீங்க ஏன் அவள வம்பிழுத்துட்டே இருக்கீங்க? பாவம் திவ்யா” – சந்திரா.

 

“அவள நான் வம்பிழுக்காம இருந்தா எனக்கு எதோ ஆகிடுச்சுனு அர்த்தம்.. அதே போல அவளும் என் கிட்ட ஒரு வார்த்தை நார்மலா பேச மாட்டா.. இப்போ வர அவ அப்படி பேசுனதும் இல்ல”

 

“ஏன் இப்படி சண்டை போடுறீங்கனு தான் கேட்குறேன்”

 

“ம்ம்.. அத எப்படி சொல்லலாம்… இந்த பெட் இருக்கும்ல.. அது கூட சண்டை போட்டு விளையாடிட்டே இருக்கனும்னு தோணும். அது மாதிரி.. அவ என் கூட விளையாடுவா.. நான் அவ கூட விளையாடுவேன்”

 

“உங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்தா அது எப்படி இருக்கும்னு இப்பவே தெரியுது”

 

அர்ஜுன் பதில் சொல்லாமல் புன்னகைத்து வைத்தான்.

 

“எப்ப தான் உங்க காதல அவ கிட்ட சொல்லுவீங்க?”

 

“தெரியல” என்று தோளை குலுக்கினான்.

 

அதற்கு மேல் எதுவும் கேட்காமல் சந்திரா சென்று விட்டாள். ஹாலிலேயே பாய் போர்வை எல்லாம் கொடுத்து விட அங்கேயே அர்ஜுன் படுத்துக் கொண்டான். ஆனால் தூங்கவில்லை. தூங்குவது போல் கண்ணை மூடி இருக்க சரியாக பதினைந்து நிமிடத்தில் அம்ரிதா வெளியே வந்தாள்.

 

அன்னையின் அறையை நோட்டம் விட்டு விட்டு அர்ஜுன் அருகில் வந்தான். முகத்தை கையால் பாதி மறைத்துக் கொண்டு அவன் படுத்திருக்க ‘நடிக்கிறானாம்… அதெல்லாம் உனக்கு வராது அர்ஜுனா..’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

பிறகு வாசல் கதவை திறந்து வெளியே எட்டி பார்த்தாள். யாரும் இல்லை. கதவை சத்தமில்லாமல் அடைத்து விட்டு படியில் அமர்ந்து கொண்டாள். கையில் கொண்டு வந்திருந்த நாவலை பிரித்தாள். அவள் வீட்டின் முன்பு இருக்கும் தெருவிளக்கு உதவ படிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

அவள் வெளியேறியதும் அர்ஜுன் கண் விழித்து பார்த்தான். அவனது முகத்தில் புன்னகை அரும்ப சில நிமிடங்கள் படுத்திருந்தான். பிறகு அவனும்‌ எழுந்து வெளியே வந்தான். அம்ரிதாவின் முன்னால் வந்து நிற்க தலை நிமிர்த்தி பார்த்தாள்.

 

பதினைந்து வயது அம்ரிதாவை பார்ப்பது போல் இருக்க அர்ஜுனின் உள்ளம் அவனிடம் இல்லை. அன்று பார்த்த அதே முகம். அதே இடம். எதையும் மறக்க முடியவில்லை.

 

புருவம் உயர்த்தி “என்ன?” என்று கேட்டாள்.

 

“திருந்தவே மாட்டியாடி?”

 

“உஸ்ஸ்… அம்மா எந்திரிச்சுடுவாங்க” 

 

அவள் அதட்டி விட்டு புத்தகத்தில் கவனமாக அவளருகில் அமர்ந்து கொண்டான்.

 

அவனை கண்டு கொள்ளாமல் புத்தகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க “நைட் நேரத்துல பேய் கதை படிக்குறது.. அதுவும் தெருவுல உட்கார்ந்து.. உன்ன என்ன பண்ணலாம்” என்றான் அர்ஜுன்.

 

“நீ ஒன்னயும் பண்ண வேணாம். போய் தூங்கு.”

 

“நீயும் தூங்கு”

 

“உஸ்ஸ்.. பேய் வர்ர சீன்.. டிஸ்டர்ப் பண்ணாத”

 

“பேய் கதையா படிச்சு நீயும் பேய் மாதிரியே மாறிட்டு வர்ர”

 

“….”

 

அர்ஜுன் சலிப்பாக தலையாட்டினான். கதைக்குள் மூழ்கி விட்டாள். இனி அவன் பேசுவதற்கெல்லாம் பதில் வராது. போனை எடுத்து மணி பார்த்தான். பிறகு கன்னத்தில் கை வைத்து அவள் முகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

 

ஒவ்வொரு வரிக்கும் மாறும் அவளது முகபாவங்களை பார்க்க அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். அவன் இப்படி ரசிப்பதை ஒரு நாள் கூட அம்ரிதா உணர்ந்தது இல்லை. ஆனால் இன்று திவ்யான்ஷி உணர்ந்து விட்டாள். சட்டென நிமிர்ந்து அர்ஜுனை பார்க்க உடனே பார்வையை மாற்ற முடியாமல் அர்ஜுன் மாட்டிக் கொண்டான்.

 

புருவம் சுருக்கியவள் “என்ன?” என்று கேட்டாள்.

 

“ஒன்னும் இல்ல.. காலையில படி இத.. வந்து தூங்கு” என்று வாய்க்கு வந்ததை கூறி சமாளித்தான்.

 

“ப்ச்ச்.. நீ போ னு சொல்லிட்டேன்ல”

 

“எனக்கு தூக்கம் வரல.. “

 

“அப்போ சும்மா இரு.. என்ன தொல்லை பண்ணாத”

 

திவ்யா மீண்டும் படிக்க ஆரம்பித்து விட அர்ஜுன் மீண்டும் ஒரு நொடி அவளை ரசித்தான்.

 

இவ்வளவு அழகான முகம் முக பூச்சோடுமீ போலி அடையாளத்துடன் வலம் வருகிறது. அதை நினைத்ததும் அவனையும் அறியாமல் பெரு மூச்சு எழுந்தது. அதுவும் அவளை தொந்தரவு செய்ய கூடாது என்று தனக்குள் அடக்கிக் கொண்டான்.

 

சரியாக ஒரு மணி நேரத்தில் அந்த புத்தகத்தை திவ்யா முடித்து விட்டாள். அது வரை அர்ஜுன் அமர்ந்து இருப்பதை அப்போது தான் கவனித்தாள்.

 

“ஹேய்.. நீ‌ தூங்கல?”

 

அர்ஜுனிடமிருந்து பதில் வரவில்லை. எதோ சிந்தனையில்‌ இருக்க திவ்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“காலம் அப்படியே உறைஞ்சு போயிருக்கலாம்ல அம்மு…”

 

அர்ஜுன் மெல்லிய குரலில்‌ கூற திவ்யாவின் முகம் மாறியது.

 

“எல்லாரும் என் பக்கம் தப்பு இருக்குனு சொல்லுறாங்க.. ஏன் அப்பா கூட அப்படி தான் நினைக்கிறார். நீயும் அப்படி தான் நினைக்கிறியா?” என்று கேட்டு அவள் முகத்தை பார்த்தான்.

 

அவள் இறுகிப்போய் அமர்ந்து‌ இருக்க அர்ஜுன் அவளது முகத்தை இரண்டு நொடி பார்த்தான். பிறகு “சீக்கிரம் தூங்கு. குட் நைட்” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டான்.

 

சில நிமிடங்களுக்கு பிறகு உள்ளே வந்த திவ்யான்ஷி அர்ஜுன் இருக்கும் பக்கமே பார்க்காமல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

 

*.*.*.*.*.*.

 

காலையில் அர்ஜுன் குளித்து விட்டு ஊருக்கு கிளம்புவதாக கூற “அதுக்குள்ளயா? திவ்யா நாளைக்கு‌ தான் கிளம்புவா. அவ கூட போகலாம்ல” என்று அன்பரசி கேட்டார்.

 

“இல்ல அத்த.. எனக்கு வேலை நிறையவே இருக்கு… ‍நீங்க பார்க்கனும்னு கூப்பிடதால அப்படியே போட்டுட்டு வந்தேன். நான் இல்லாம வேலையும் ஓடாது”

 

அன்பரசி வேகமாக மகளை பார்த்தார். அவளோ எனக்கும் இவனுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“சரி சாப்பிட்டு கிளம்பு.. வெறும் வயிறோட போகாத” என்று கூறி விட்டார்.

 

சில நிமிடங்கள் அர்ஜுனுக்கு காலை உணவு வர சாப்பிட்டு விட்டே கிளம்பினான்.

 

சந்திராவிடமும் அன்பரசியிடமும் விடை பெற்றுக் கொண்டவன் திவ்யாவை பார்க்காமலே சென்று விட்டான். அதை கவனித்த அன்பரசி திவ்யாவை அழைத்தார்.

 

“அவன எதாச்சும் சொன்னியா?”

 

“நான் என்ன சொல்ல போறேன்?”

 

“அப்புறம் ஏன் உன் கிட்ட சொல்லாம போறான்?”

 

“ம்மா.. நீங்க தான் இங்க இருக்கீங்க.. நாங்க ஒரே வீட்டுல தான் அங்க இருக்கோம். இதுல சொல்லிட்டு வேற போவாங்களா?” என்று கேட்டு விட்டு சென்று விட்டாள்.

 

மகளது நடிப்பு திறமையை அறியாமல் அன்பரிசியும் அதை நம்பி விட்டார்.

 

*.*.*.*.

 

 

அடுத்த நாளும் பறந்து போக திவ்யா சென்னை கிளம்பி வந்து சேர்ந்தாள். அவள் வந்ததை கேட்டதுமே மஞ்சுளா பார்க்க வந்து விட்டாள்.

 

“வாங்க மேடம்‌. லீவ் எல்லாம் நல்லா போச்சா?”

 

“சூப்பரா போச்சு‌.. கேரளாவ முடிஞ்ச வரை சுத்திட்டு தான் கிளம்புனோம்”

 

“மத்த நாள்?”

 

“நல்லா சுத்துன டயர்ட் போக தூங்கி எந்திரிச்சேன்”

 

“குட்”

 

“நீ ஒன்னும் சொல்லல?”

 

“என்ன சொல்லனும்?”

 

“அம்மாவ பார்க்க போன.. அங்க இன்னொரு கெஸ்ட் வந்தாங்களாமே”

 

“உனக்கெப்புடி தெரியும்?”

 

“நேத்து அர்ஜுன பார்த்தேன்”

 

“அப்போ அவனே சொல்லி இருப்பானே.. என்ன‌ சொன்னான்?”

 

“நீ அங்க நல்லா சாப்பிட்டுட்டு இருக்க… அதுனால வரும் போது உருண்டு தான் வருவனு சொன்னான்”

 

“திமிரு புடிச்சவன்”

 

“பார்க்க வெயிட் போட்ட மாதிரி தெரியல.. செக் பண்ணா தான் தெரியும்”

 

“நீயுமா? கொன்னுடுவேன்”

 

“சரி உன் கிட்ட சொல்லனும்னு இருந்தேன். அந்த ஃப்ரஸ்னர் கம்பெனி காரன் இருக்கானே.. அபிமன்யு.. அவன் நாங்க கிளம்புறப்போ ரூம்க்கே‌ வந்துட்டான். திவ்யா இருக்காங்களானு கேட்டுகிட்டு”

 

“அவனுக்கு எப்படி ரூம் நம்பர் தெரிஞ்சது?”

 

“அதான் எனக்கும் புரியல‌… உன்ன ஃபாலோவ் பண்ணுறானோ? ஏற்கனவே கேமராவ வச்சு கொடுத்தான். இப்போ ரூம்க்கே தேடி வர்ரான்.  செந்தில் சார் கிட்ட சொல்லி வைக்கலாமா?”

 

“ம்ம்.. மாமா வரட்டும். சொல்லிக்கலாம்”

 

திவ்யா தன் உடமைகளை பிரித்து அலமாரியில் வைத்து விட்டு அமர்ந்தாள்.

 

“இன்னைக்கு சூட்டிங் இல்லல. சோ நான் பாலன் சார இன்னைக்கு பார்க்கலாம்னு சொல்லிட்டேன். ஓகே தான?”

 

“ம்ம்”

 

திவ்யாவின் முகத்தை பார்த்தவள் “என்ன ஒரு மாதிரியா இருக்க? எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டாள்.

 

திவ்யா சில நொடிகள் அமைதியாகவே இருந்தாள்.

 

“ஏன் மஞ்சு… சப்போஸ் நான் இந்த முடிவு எடுக்கலனா என்ன நடந்து இருக்கும்?”

 

“எந்த முடிவு?”

 

“நான் ஆக்டிங் செலக்ட் பண்ணத சொல்லுறேன்”

 

“யாரும் எதுவும் சொன்னாங்களா?”

 

“இல்ல”

 

“அர்ஜுன் கூட சண்டை போட்டியா?”

 

“ம்ஹும்.. பட் அர்ஜுன் கேட்டான்.. எல்லாரும் என் மேல தப்பு இருக்குனு சொல்லுறாங்க. நீ கூட அப்படி தான் நினைக்கிறியானு”

 

இப்போது மஞ்சுளா அமைதியாகி விட்டாள்.

 

“நான் அவன மட்டுமே தப்பு சொல்ல மாட்டேன். அவன் ஆப்ஷன் கொடுத்தான். நானா சினிமாவானு. அப்போ அர்ஜுன் வேணாம் சினிமா தான் வேணும்னு நான் தான் ச்சூஸ் பண்ணேன். அப்போ மட்டும் அர்ஜுன் வேணும். இந்த ஆக்டிங் வேணாம்னு சொல்லி இருந்தா என்ன நடந்து இருக்கும்?”

 

கேள்வியோடு திவ்யா நிறுத்த “நடந்து முடிஞ்ச விசயத்த இப்படி நடந்துருக்குமோ அப்படி நடந்துருக்குமோனு யோசிச்சு என்ன ஆக போகுது?” என்று மஞ்சுளா பதிலுக்கு கேட்டாள்.

 

“இல்ல மஞ்சு.. அவன் இங்க இருந்து போனது மட்டும் தான் உங்களுக்கு தெரியும். நான் அவன திரும்ப பார்த்தேன். அப்போ என் கிட்ட ஒன்னு சொன்னான். அதான் என் மனச குத்திட்டே இருக்கு. தப்பு பண்ணிட்டோமோனு அடிக்கடி தோனும். ஆனா நான் பண்ணது சரி தான்னு சொல்ல என் கிட்ட காரணம் இருக்கு. அர்ஜுன் ஒரு தடவ என்ன எக்ஸ்பிளைன் பண்ண விடமாட்டானானு தான் அவன பார்த்து பேசுனேன். ஆனா அவன் அது எதையும் கேட்கல. இப்போ கண் முன்னாடி இருக்கான். நான் எக்ஸ்ப்ளைன் பண்ணுற நிலைமையில இல்ல. அவன் சவால் விட்டுட்டு போனான். இப்போ வர அவன் சொன்னது தான் நடக்குது. நான் நினைச்சது நடக்கல. கஷ்டமா இருக்கு மஞ்சு.‌ கடைசில நான் எடுத்த முடிவு மொத்தமா என் சந்தோசத்த பறிச்சுடுமோனு பயமா இருக்கு. அர்ஜுன நேரா பார்த்து பேச கூட அவமானமா இருக்கு. நானா கோபத்த இழுத்து பிடிச்சுட்டு பேசாம போனாலும் தேடி தேடி வந்து பேசுறான். எப்படி அவாய்ட் பண்ணுறது? நானும் மனுசி தானே”

 

திவ்யா மனதில் இருப்பதை எல்லாம் கொட்டினாள். மஞ்சுளாவிற்கு ஆச்சரியமாக தான் இருந்தது. அர்ஜுனுக்கும் இவளுக்கும் இடையில் வேறு எதோ ஒன்று நடந்திருக்க வேண்டும். அவள் சொல்லும் இந்த சவால் என்னவென்று அவளுக்கு தெரியாது. எதற்காக இப்படி கலங்குகிறாள் என்றும் அவளுக்கு தெரியாது.

 

அவர்கள் பிரச்சனையில் யாருக்கும் தெரியாத விசயம் நிறைய இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் அதையெல்லாம் தெரிந்து கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை.

 

திவ்யாவின் அருகில் அமர்ந்தவள் “அர்ஜுன் நீ அவமான படனும்னு எல்லாம் எதிர் பார்க்க மாட்டான். உன் கிட்ட ஈகோ பார்க்குற அளவு அவன் முட்டாளும் இல்ல. அவனோட சொந்த அப்பா கிட்ட பேசாம போறவன் உன்ன தேடி வந்து பேசுறான். இதுலையே தெரிய வேணாமா.. அவனுக்கு நீ எவ்வளவு முக்கியம்னு.” என்று கூறினாள்.

 

“அய்யோ மஞ்சு.. அது தான் என் பிரச்சனை. அவன் மாமா மாதிரி என்னயும் வெறுத்துட்டா கூட பரவாயில்லனு தோனுது. இவ்வளவு தூரம் என் கிட்ட தேடி வந்து பேசும் போது ஏன் நான் இவன விட்டுட்டு ஆக்டிங் ச்சூஸ் பண்ணேன்னு கில்டியா இருக்கு”

 

மஞ்சுளாவிற்கு இப்போது தெளிவாக புரிந்தது. அவள் பிரச்சனையை தெரிந்து கொண்ட கண்ணோட்டம் வேறு. இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை வேறு. இதில் அவள் என்ன செய்ய முடியும் என்று யோசித்தாள்.

 

அன்று நடந்த பிரச்சனைகளை பற்றி மஞ்சுளா அர்ஜுனிடம் சொல்லி விட்டால் என்ன? அப்படி சொன்னால் திவ்யாவின் மனம் அடி படும். அவளே அவனிடம் சொல்லாமல் இருக்கும் போது மூன்றாவது ஆளாக தான் நுழைவது அநாகரிகம். அர்ஜுனை பற்றி திவ்யாவிடம் சொல்லலாம். ஆனால் திவ்யாவிற்கு தான் அவனை பற்றி எல்லாம் தெரியுமே. என்ன செய்வது என்றே புரியவில்லை.

 

“ஒன்னுமே புரியல.. எதாச்சும் பண்ணி ரெண்டு பேரும் பழைய மாதிரி இருங்க. அதுவே போதும்”

 

“ப்ச்ச்.. ஊர்ல இருக்கப்போ எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருந்தேன். இங்க வந்ததும் திரும்ப எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு”

 

“இவ்வளவு சோகமா இருக்க.‌ பேசாம பாலன் சார இன்னொரு நாள் பார்க்கலாமா? நீ வீட்டுல ரெஸ்ட் எடு”

 

“வேணாம் வேணாம்.‌ ஈவ்னிங் தான.. நான் தூங்கி எந்திரிக்கிறேன். சரியா போயிடும்.”

 

“நிஜம்மா?”

 

“ம்ம்”

 

“சரி தூங்கு.. நான் ஈவ்னிங் வரேன். இப்போ வீட்டுக்கு கிளம்புறேன். பை”

 

கையாட்டி விட்டு மஞ்சுளா சென்று விட திவ்யா படுத்து விட்டாள்.

 

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Meenakshi Subburaman

   Dai ithoda notification ehh fb la varala da

   Inthuka rendum yena character da saamy

   Nee avala luv pannrathu aavala thavira yeallarukum theriyum pola da

   Ini director yena panna porarooo

  2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.