Loading

மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருக்க ஷாத்விக்கோ சமுத்ரா பின்னேயே அலைந்துக்கொண்டிருந்தான். 

முதலில் அனைவருக்கும் இது சாதாரணமாக தெரிந்தபோதிலும் மஹதி தான் இது வழமைக்கு மாறானதென்று கண்டுகொண்டாள்.

காலை உணவை வேண்டாமென்று மறுத்துவிட்டு நேற்றே வாங்கி வந்திருந்த இரண்டு பை நொறுக்குத்தீனிகளை தன் வாய்க்குள் அடைத்தபடியே மஹதி வினயாஸ்ரீயிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“ஏன் பாட்னர் இன்னைக்கு இந்த மாமா ஏதோ வித்தியாசமாக நடந்துக்கிறமாதிரி இல்ல?” என்று மஹதி கேட்க

“இல்லையே. எப்பவும் போல தானே மதினி பின்னாடி சுத்திட்டு இருக்காரு.”என்று வினயாஸ்ரீ கூற

“இல்ல வினு. நல்லா நோட் பண்ணு. எப்பவும் வீட்டுக்கு வந்தா மொத்த எடுபிடி வேலையும் செய்றவரு இன்னைக்கு கொஞ்சம் கம்மியா செய்றமாதிரியில்ல?” என்று தான் கவனித்ததை சொல்ல அப்போது தான் வழமைக்கு மாறாக சமுத்ரா நெடுநேரமாக வெளியில் இருப்பதை கவனித்தாள் வினயாஸ்ரீ.

“அட ஆமா மஹி. மதினி எப்பவும் ரூம்ல தான் இருப்பாங்க. ஏதும் தேவைனா மட்டும் தான் ஹாலுக்கு வருவாங்க. இன்னைக்கு இங்கவே ரொம்ப நேரமா இருக்காங்க.” என்று வினயாஸ்ரீ கூற

“அது தான் விஷயமே. மாம்ஸ் ஏதோ சொல்லி நம்ம எம்டன் பேத்தியை வெறுப்பேத்திட்டாரு போல. அதான் என் கூட பிறந்தவ ரிவென்ஜ் எடுக்குறா. இரு அவரையே கூப்பிட்டு விசாரிச்சிருவோம்.” என்று கூறிய மஹதி ஷாத்விக்கை அழைத்தாள்.

என்னவென்று கேட்டவனை வம்படியாக இழுத்து அமரவைத்தவள்

“என்ன மேட்டர் ஓடுது உங்க இரண்டு பேருக்கிடையிலயும்?” என்று மஹதி கேட்க

“ஒன்னுமில்லையே” என்று சாதாரணமாக சொன்ன ஷாத்விக்கை பார்த்தவள்

“ஒன்னுமில்லாமல் தான் காலையில இருந்து அவளை நீங்க துரத்துறதும் அவ உங்களை முறைக்கிறதுமாக ஒரு படம் ஓடுதா?”என்று மஹதி கேட்க

“அப்படியா தெரியிது?” என்று ஷாத்விக் அப்பாவி போல் கேட்க

“இந்த ஓவர் ஆக்டிங் தானே வேணாங்கிறது. சொல்லுங்க என்ன பஞ்சாயத்து உங்க இரண்டு பேருக்கிடையிலயும்?” என்று மஹதி பெரிய மனிதன் தோரணையில் கேட்க

“சில்வண்டெல்லாம் என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுச்சு.” என்று ஷாத்விக் சலித்துக்கொள்ள

“கடுகு சிறுசுனாலும் காரம் பெருசு மாம்ஸூ. சொல்லுங்க உங்க பஞ்சாயத்தை.” என்று மஹதி கேட்க 

“பெருசா எதுவும் இல்லை. உங்க அக்கா ஒரு விஷயம் சொன்னா. நிஜமாகவானு கேட்டுட்டேன். அதுக்கு இப்படி அலைக்கழிக்கிறா.” என்று ஷாத்விக் கூற

“அப்போ உங்களுக்கு இந்த பனிஷ்மண்ட் தேவை தான்.” என்று இப்போது வினயாஸ்ரீ சொல்ல

“என்னம்மா நீயே இப்படி சொல்லிட்ட?” என்று ஷாத்விக் அப்பாவியாக சொல்ல

“பின்ன மதினி எது சொன்னாலும் கரெக்டா தானே இருக்கும். அப்படி இருக்கும் போது ஆமானு கேட்டுக்கிறாமா அப்படியானு கேட்டா மதினிக்கு கோவம் வரத்தானே செய்யும்.” என்று வினயாஸ்ரீ சொல்ல ஷாத்விக்கோ மஹதியை பார்த்து

“என்ன இவ இப்படி சொல்லுறா?” என்று கேட்க

“அவ சொன்னதுலயும் ஒரு நியாயம் இருக்கு மாம்ஸூ. அக்கா ஒரு விஷயம் சொன்னதும் யாராவது அப்படியானு சந்தேகமாக கேட்டா அவளுக்கு கோவம் வரும். இதுவரைக்கும் வீட்டுல யாருமே அவகிட்ட அப்படியானு கேட்டதில்லைனா பார்த்துக்கோங்களேன்.” என்று மஹதி சொல்ல

“என்ன இரண்டு பேரும் புதுசு புதுசா ஒவ்வொன்னா சொல்லுறீங்க? என்கிட்ட எங்கம்மா நான் எப்ப எதை சொன்னாலும் இப்படி தானே கேட்பாங்க.” என்று ஷாத்விக் புலம்ப

“அது உங்க அம்மா உங்ககிட்ட கேட்டது. என்னைக்காவது அத்தையும் மாமாவும் அக்கா ஏதாவது சொல்லி அப்படி கேட்டுருக்காங்களானு யோசிச்சிப்பாருங்க.” என்று மஹதி சொல்ல 

“அது எப்படி கேட்பாங்க? அவங்களுக்கு அவங்க மருமக சொல்லு தானே வேதவாக்கு. ஆனாலும் இதுக்குள்ள இப்படியொரு விஷயம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கல.” என்று ஷாத்விக் சொல்ல

“இதெல்லாம் நீங்க எதிர்பார்த்திருக்கனும் மாம்ஸூ. நீங்க தாலி கட்டி தாரை வார்த்து கூட்டிட்டு வந்திருக்கிறது எங்க அக்காவை. இதெல்லாம் நீங்க தெரிஞ்சிருக்க வேண்டிய சமாச்சாரம்”என்று மஹதியோ சந்தர்ப்பம் பார்த்து ஷாத்விக்கை கிண்டல் செய்ய

“இப்போ என்ன செய்றது?” என்று ஷாத்விக் அவர்களிடமே உதவி கேட்க

“இந்நேரம் நிச்சயம் அவ கால்ல விழுந்திருப்பீங்க. ஆனா அவ வீம்பு பண்ணிட்டு சுத்துறா. நான் சொல்லுறது சரியா?” என்று மஹதி கேட்க ஆமென்று சோகமாக தலையாட்டினான் ஷாத்விக்.

“சரி இப்போ என்ன செய்றீங்கனா அவளை இம்ப்ரெஸ் பண்ணுறமாதிரி ஏதாவது செய்ங்க” என்று மஹதி கூற

“அதுக்கு என்ன செய்றது?” என்று ஷாத்விக் சிறு பிள்ளை போல் கேட்க

“இங்க பாருங்க மாம்ஸூ கோடு போட்டு மட்டும் தான் கொடுக்க முடியும். இந்த ரோடு, யெலோ லைன் எல்லாம் எங்க போடனுமோ நீங்க தான் பார்த்து போட்டுக்கிறனும். போங்க போய் யோசிங்க போங்க.” என்று கூறியவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ஷாத்விக்.

யோசித்தபடியே அறை கதவை திறந்தவனுக்கு ஏதோ யோசனை பளிச்சிட திறந்த கதவை மூடிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினான்.

அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு தலை நிமிர்ந்த சமுத்ரா உள்ளே வராது வெளியே செல்லும் ஷாத்விக்கை யோசனையோடு பார்த்தவள் தான் செய்துக்கொண்டிருந்த வேலையை மீண்டும் கவனிக்கத் தொடங்கினாள்.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பியவன் மதியமும் வீட்டிற்கு வராமலிருக்க அமராவதி சமுத்ராவை தேடி வந்தார்.

“ஷாத்விக் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துருமா?” என்று கேட்க சமுத்ராவும் அப்போது தான் நேரத்தை பார்த்தாள்.

“இன்னும் மாமா வரலையா?” என்று கேட்டவள் தன் அலைபேசியை எடுத்து ஷாத்விக்கிற்கு அழைக்க அவனது அலைபேசி மொத்தமாக அணைக்கப்பட்டிருந்தது.

“எங்க போறேன்னு ஏதாவது சொல்லிட்டு போனாறா?” என்று சமுத்ரா அமராவதியிடம் கேட்க அவரோ மனதினுள்

“இவ புருஷன் எங்க போறான் வாரான்னு இவ கேட்டு தெரிஞ்சிக்காமல் என்கிட்ட விசாரிச்சிட்டிருக்க”என்று முணங்கியபடியே

“தெரியல சமுத்ரா.” என்ற பதிலை மட்டும் சொல்ல

“வெளியில முக்கியமான வேலை ஏதும் இருக்கிறதா சொல்லலை. எப்படியும் வந்திடுவாரு. நீங்க போய் சாப்பிடுங்க.” என்று சமுத்ரா கூற

“சரி நீயும் வந்து சாப்பிடு.” என்று அமராவதி கூற

“இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும். கொஞ்ச நேரத்துக்கு முதல்ல குடிச்சதே நிரம்ப இருக்கு.” என்றவள் தான் செய்து கொண்டிருந்த வேலை தொடர்ந்தாள்.

சற்று நேரத்தில் அவளுக்கு உறக்கம் கண்களை சுழற்ற அப்படியே உறங்கிப்போனாள். 

அவள் உறங்கியபின்பு தான் ஷாத்விக் வீடு திரும்பினான்.

வீட்டிற்கு வந்தவன் கையில் நிறைய பொதிகள் இருக்க அவனின் முகத்திலோ அளவுக்கதிகமான களைப்பு தெரிந்தது.

அவன் கையிலிருந்த பொதிகளை மஹதி மற்றும் வினயாஸ்ரீயிடம் நீட்ட அவர்களோ ஏதும் புரியாது அதனை வாங்கிக்கொள்ள

“அத்த ரொம்ப பசிக்கிது.” என்றவனிடம் கைகால் அலம்பிவிட்டு வரச்சொன்னவர், அவனுக்கு தேவையான உணவினை பார்த்து பரிமாறினார்.

பசி மயக்கத்தில் துரிதக்கதியில் ஷாத்விக் உணவினை காலி செய்ய மஹதியும் வினயாஸ்ரீயும் அவன் வாங்கிவந்த பொருட்களை ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அதில் உணவு உடையென்று அனைத்து பொருட்களும் இருக்க ஒவ்வொரு பொருட்களாய் எடுத்து கடைபரப்பினர் இருவரும்.

உணவை முடித்துவிட்டு எழுந்தவனிடம்

“என்ன அண்ணா இதெல்லாம் மதினிக்கா?” என்று கேட்க

“ஆமா எல்லாம் அவளுக்கு தான். அவளை இம்ப்ரெஸ் பண்ணுற மாதிரி ஏதாவது செய்யச்சொன்னீங்களே இரண்டு பேரும் அதான் கடை கடையா ஏறி தேடி அலைஞ்சு வாங்கிட்டு வந்தேன்.” என்று ஷாத்விக் சொல்ல மஹதியோ அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே யாரும் அறியாமல் தன் மொபைல் கேமராவை ஆன் செய்து அனைத்தையும் ரெகார்ட் செய்யத்தொடங்கியிருந்தாள்.

“என்ன மாமா சொல்லுறீங்க இம்ப்ரெஸ் பண்ணுறதுக்கா?” என்று மஹதி மீண்டும் கேட்க

“ஆமா. என் பொண்டாட்டியை லைட்டா கடுப்பேத்திட்டேன். அவளும் கடுப்பாகி என்கிட்ட கோவிச்சிக்கிட்டா. சாரி சொல்லியும் கண்டுக்க மாட்டேங்கிறா. அதான் இம்ப்ரெஸ் பண்ணி சாரி கேட்கலாம்னு அவளுக்கு புடிக்கும்னு எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் பதினஞ்சு தெரு சுத்தி வாங்கிட்டு வந்திருக்கேன்.” என்று ஷாத்விக் விவரமாக கூற

“அவளுக்கு புடிச்சதை வாங்கிட்டு வந்தீங்க சரி. இது என்ன இது பொம்மை கீ செயின், ஸ்டிக்கர், அப்புறம் இது என்ன ஏதோ ஹோல்டர் மாதிரி இருக்கு?” என்று மஹதி தூக்கி காட்ட

“என் பொண்டாட்டிக்கு ஏதாவது வித்தியாசமா இருந்தா அதை வாங்கி வச்சிக்கிற பழக்கம் இருக்கு. அவ கபோர்டை திறந்து பார்த்தப்போ தான் எனக்கே இது தெரிஞ்சிது. அவ பயன்படுத்துற எல்லா பொருளும் ஏதோ ஒரு விதத்துல மத்தவங்ககிட்ட இருந்து வித்தியாசமா இருக்கும்.” என்று ஷாத்விக் கூற

“ஆமா அண்ணா. மதினிக்கு அந்த பழக்கம் இருக்கு. அவங்க வாங்குற பொருள் மத்தவங்க பயன்படுத்துற மாதிரி இருக்கக்கூடாதுனு ரொம்ப தேடி வாங்குவாங்க.” என்று வினயாஸ்ரீயும் கூற

“அது சரி தான். ஆனா எதுக்கு இந்த கீ செயின் எல்லாம்? ” என்று மஹதி சற்று வித்தியாசமான பொம்மை உருவமைப்பை கொண்ட அந்த கீ செயினை எடுத்து ஆட்டியபடியே கேட்க

“இது அவளோட ஹேண்ட் பேக்கிற்கு. அவ இப்போ யூஸ் பண்ணுற கலருக்கு இது சரியா இருக்கும்னு தோனுச்சு. அதான் வாங்கிட்டு வந்துட்டேன்.” என்று ஷாத்விக் சொல்ல

“இந்த ஸ்டிக்கர்?”

“இது கஸ்டமைஸ்ட் லேப்டாப் ஸ்டிக்கர்ஸ். அதுல பாரு ஒவ்வொரு மோட்டிவேஷன் கோட்ஸ் எழுதியிருக்கும். உங்க அக்காவோட பர்சனல் லேப்டாப்பை பார்த்திருந்தா நீ இந்த கேள்வியை கேட்கமாட்ட.” என்று ஷாத்விக் சொல்ல

“அப்போ இதுவும் அவ வேலையா? நானும் கூட வேற யாரோ இவளை பத்தி தெரியாமல் ஒட்டிட்டாங்கனு நெனைச்சேன்.” என்று மஹதி சற்று ஆச்சர்யத்துடன் சொல்ல

“அதுக்கெல்லாம் வாய்ப்பில்லைனு நல்லா தெரிஞ்சபிறகும் இப்படி நடந்திருக்கும்னு சொல்லுற பாரு, அங்க நிற்கிறமா நீ.” என்று ஷாத்விக் சொல்ல

“சரி சரி அதை விடுங்க. ஆமா இதெல்லாம் எப்படி என் கூட பிறந்தவளுக்கு பிடிக்கும்னு நம்புறீங்க?” என்று மஹதி சந்தேகத்துடன் கேட்க

“பிடிக்குமானு தெரியல. ஆனா வாங்கிட்டு வந்தததுல ஏதாவது ஒன்னாவது அவளுக்கு புடிச்சிருந்தா போதும்.” என்று ஷாத்விக் கூற

“பிடிக்கலனு சொல்லிட்டானா என்ன செய்வீங்க?” என்று மஹதி கேட்க

“வேற என்ன செய்றது வாங்குன பொருளையெல்லாம் ரிட்டர்ன் செய்யவேண்டியது தான். இல்லைனா வீட்டு முன்னாடி கடையை போட்டு வாங்குனதையெல்லாம் பை வன் கெட் வன் ஆபர்ல வித்திடலாம்.” என்று ஷாத்விக் கூற

“அப்போ பேக் அப் ப்ளானோட தான் பர்சசிங்கே நடந்திருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்.” என்று மஹதி கிண்டல் செய்யவென்று கலகலவென்று இருந்தது அந்த இடம்.

நடந்த அனைத்தையும் பதிவு செய்திருந்த காணொளியை பேசிக்கொண்டே சமுத்ராவின் மொபைலைக்கு அனுப்பி வைத்தாள் மஹதி.

அப்போது அங்கு வந்த அமராவதி

“சமுத்ரா இன்னும் சாப்பிடலை ஷாத்விக்.” என்று அமராவதி கூற

“என்ன அத்த சொல்லுறீங்க? இவ்வளவு நேரம் சாப்பிடலையா? ஏன் அவளுக்கு உடம்புக்கு ஏதும் முடியலையா?” என்று ஷாத்விக் பதட்டத்துடன் கேட்க

“அதெல்லாம் இல்லப்பா. கொஞ்ச நேரங்கழிச்சு சாப்பிடுறேன்னு சொன்னா‌. சரின்னு கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடப்போகும் போது நல்லா தூங்கிட்டு இருந்தா அதான் எழுப்ப மனம் வரல.” என்று அமராவதி நடந்ததை சொல்ல

“சரி நீங்க தட்டுல சாப்பாட்டை போட்டு தாங்க. நான் எழுப்பி அவளை சாப்பிட வைக்கிறேன்‌.” என்று சொன்னவன் அமராவதியிடம் உணவை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான் ஷாத்விக்.

உள்ளே அமராவதி சொன்னது போல் சமுத்ரா அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க அவளை மெதுவாக எழுப்பி சாப்பிட வைத்தான்.

அவள் உணவை முடித்ததும்

“எங்க போயிருந்தீங்க?” என்று கேட்க என்று சமுத்ரா ஷாத்விக்கிடம் கேட்க

“ஒரு சின்ன வேலையா வெளியில போயிருந்தேன். ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன். அதான் லேட்டாச்சு.” என்று ஷாத்விக் பதில் கூற

“ம்‌… அடுத்த வாரம் உதய்யோட மேரேஜ். ஏதாவது கிஃப்ட் வாங்க போகனும். நீங்க ப்ரீயா?” என்று சமுத்ரா கேட்க

“ஆங் போகலாம். இன்னைக்கு சாயந்தரம் போவோமா?” என்று ஷாத்விக் கேட்க

“ம்ம்‌. போகலாம்.” என்று சமுத்ரா சொல்ல

“சரி அப்போ சாயந்திரம் 5 மணிக்கு ரெடியா இரு. உதய் மேரேஜிற்கு கிஃப்ட் வாங்கிட்டு அப்படியே வெளிய சாப்பிட்டு வரலாம்‌.” என்று ஷாத்விக் கூற சம்மதமாய் தலை அசைத்தாள் சமுத்ரா‌.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. பத்தவச்சுட்டியே பரட்ட.. எங்க சம்மு எப்பயாச்சும் தான் மலை இறங்கும் அத ஏத்திவிடுறியேடி 🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.