Loading

“சுருதி வாராப்பா” என்ற நாராயணனின் வார்த்தையில் ஸ்தம்பித்து நின்ற கார்த்திக்கு அந்த நொடி பன்னிரெண்டு வருட கால ஏக்கங்கள் அனைத்தும் அவன் முன் பிரவாகமாய் எழுந்து நிற்க அவனது உதடுகளோ “பாப்பா…” என்று முணுமுணுத்தது.

அதே ஏக்கத்தில் “எப்போ….” என்று  எதிர்பார்ப்புடன் அவன் கேட்க 

“நாளைக்கு…..” அவர் கூறிய பதிலில் அவ்வளவு தான் கார்த்திக்கு சந்தோசம் தாளவில்லை. “என் பாப்பாவ நான் நாளைக்கு பார்ப்பேனா… நாளைக்கு இந்நேரம் அவ என் பக்கத்தில இருப்பாளா…” என்று மனதினுள் குதூகலித்தவனை நாராயணனின் குரல் கலைத்தது.

“கார்த்திக் என்ன இன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போ.. என் பொண்ணு வரும் போது நான் வீட்டில இருக்கனும்….”

“அங்கிள் டாக்டர் ரெண்டு நாள் கழிச்சு தான் டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொன்னாங்க… நீங்க கம்பிளீட் ரெஸ்ட் எடுக்கனுமாம்..”

“சரிடா… நான் வீட்ட வந்து ரெஸ்ட் எடுத்துக்கிறனே…. ஏன் நீ என்ன பாத்துக்க மாட்டியா..

“பச்.. அங்கிள்..”

“நீ எதுவும் சொல்லாதபா… டாக்டர்கிட்ட பேசி இன்னைக்கே என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போ.. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல..”

அவர் பிடிவாதமாக இருக்க வேறுவழியில்லாது டாக்டரிடம் அவரது உடல் நிலையை  பற்றி கேட்டுக்கொண்டவன் அவரை ட்ஸ்சார்ஜ் செய்யும் வேலைகளையும் பார்த்து மதியம் சுந்தரமும் வந்துவிட அன்று மாலையே நாராயணனை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

கார்த்திக்கின் கார் அந்த பெரியவீட்டின் வாசலில் வந்து நின்றதுமே அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் வள்ளி ஆரத்தி கரைத்து எடுத்து வர, தோட்டவேலை, வீட்டுவேலை செய்யும் வேலைக்காரர்கள் அனைவருமே தமது முதலாளி ஐயாவை பார்க்க வாசலுக்கே ஓடி வந்து விட்டனர். 

அவரை எல்லோரும் மாறி மாறி நலம் விசாரிக்க அனைவரையும் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறியவர் தனது மகள் வரும் செய்தியை அனைவருக்கும் கூற இதுவரை அவளை யாரும் பார்த்திராததால் எல்லோருக்கும் தங்களது முதலாளியம்மாவை பார்க்கப்போகும் ஆவல் உண்டானது.

பின் வள்ளி அவருக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க கார்த்திக்கும் சுந்தரமும் அறைக்கு கூட்டிச்சென்று அவரை படுக்க வைத்தவர்கள் அவர் உறங்கும் வரை கூடவே இருந்து அதன்பின் அறையில் இருந்து வெளியில் வர கார்த்திக்கோ தனது பாப்பாவுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என யோசித்து தந்தையிடம் சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு கடைத்தெருவுக்கு சென்றான்.

பெரிய கிப்ட் ஷாப் முன் காரை நிறுத்தியவன் உள்ளே நுழைய அவனது கால்களோ தன்னிச்சையாக குழந்தைகளுக்கான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்று நின்றது.

ஒவ்வொரு பொருளையும் பார்வையிட்டுக்கொண்டே அவளுக்கு என்ன வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அங்கிருந்த சோபாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெரிய டெடி பியர் பொம்மை ஒன்று கண்களில் பட்டது. பருத்திப்பஞ்சில் செய்யப்பட்டு கொழுகொழு வென்று ரோஸ் வண்ணத்தில் அழகாக இருந்த அந்த டெடிபியரை பார்த்துமே அவனுக்கு பிடித்துவிட அதையே அவனது பாப்பாவுக்காக ஆசையாக வாங்கிக்கொண்டவன் வீட்டிற்கு வந்தான்.

கார்த்திக் பொம்மையை தூக்கிக்கொண்டு வருவதை கண்ட வள்ளி கிச்சனில் இருந்து வெளிவந்தவர் “என்ன தம்பி இந்தப்பெரிய கரடி பொம்மைய வாங்கிட்டு வந்திருக்கீங்க.. யாருக்கு…” என்று ஆச்சரியத்துடன் கேட்க

அவனோ “வேற யாருக்கு என் பாப்பாவுக்கு தான்..” என்று புன்னகை முகமாக கூற

அதைக்கேட்டு சிரித்த வள்ளி “தம்பி நம்ம ஐயாவோட பொண்ணு இப்பயும் குழந்தை இல்ல… அவங்க வளர்ந்திருப்பாங்க..” என்று பரிகசித்தார். அவருக்கு எங்கே தெரியப்போகிறது அவன் மனதில் இன்னும் அவள் குழந்தையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என..

கார்த்திக்கோ “அக்கா…. அவ இப்ப வளர்ந்திருந்தாலும் எனக்கு எப்பவுமே அவ குழந்தை தான்.. அவ என்னோட பாப்பா..” என்று உணர்ந்து கூறியவன் “நான் இத கொண்டு போய் அவ ரும்ல வச்சிட்டு வாறன்.. நீங்க எனக்கு டீயும் சினாக்சும் எடுத்துவைங்க…” என்று உரிமையாய் கட்டளையிட்டவன் படிகளில் ஏறிச்செல்ல வள்ளியும் சிரித்துக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

கார்த்திக் அந்த அறைக்குள் நுழைந்தவன் அங்கு நடுநாயகமாக போடப்பட்டிருந்த தேக்குமரத்தில் செய்யப்பட்ட பெரிய குயின் சைஸ் கட்டிலில் தான் கொண்டு வந்த பொம்மையை வைத்துவிட்டு அதன் அருகில் அமர்ந்தவன் அந்த அறையை சுற்றிப்பார்க்க அந்த வீட்டில் அவளோடு கழித்த நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவடுக்கில் இருந்து வெளிப்பட்டு அவன் மனதில் இதத்தை பரப்பியது.

முதன்முதலில் தொட்டிலில் துயில்கொண்டிருந்த அந்த ரோஜாக்குவியலின் பிஞ்சு விரல்களை முத்தமிட்டு ஸ்பரிசித்தது, பைங்கிளியாய் தத்தித்தத்தி நடந்தவளை தூக்கி தோளில் போட்டு தூங்க வைத்தது, அவளது மழலை மொழியை கேட்டு ரசிக்க பள்ளிக்கூடத்தையே கட் அடித்தது , சாரல் மழையில் அவளுடன் நனைந்து துள்ளி விளையாடியது, அவள் கைபிடித்து பள்ளிக்கு அழைத்துச்சென்றது, தனக்கு யாதுமாகி இருந்தவள் இல்லை என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல நாட்கள் அழுகையில் கரைந்தது அத்தனை நினைவுகளும் மீண்டு வந்து இருதயத்தில் நுழைந்து பிரிவின் வலியை மனதெங்கும் பரப்பிச்செல்ல நாளைய விடியலுக்காக ஏங்கிய உள்ளத்துடன் காத்திருந்தான்.

அதேநேரம் அமெரிக்க கலிபோர்னியா விமானநிலையத்தில் லக்கேஜ் ரோலியை இழுத்துக்கொண்டு வேக நடையுடன் என்ரன்ஸ் நோக்கிச்சென்று கொண்டிருந்தவளின் முகத்திலோ அத்தனை கடுமை. இந்த பயணம் அவளுக்கு விருப்பமற்ற பயணம்.. அவள் வெறுக்கும் பயணம்.. ஆனால் தந்தையின் உடல் நிலை அவளை நிர்ப்பந்தத்தில் நிறுத்தியிருந்தது.

அவளது கைகளில் சிக்கியிருந்த ட்ரோலியின் சில்லுகள் சிதறிவிடும் அளவு சுழன்று செல்வதிலேயே தெரிந்தது அவளது சினத்தின் அளவு.

வேக எட்டுக்களுடன் நடந்தவள் என்ரென்ஸில் நுழையும் சமயம் ஒரு வன்கரம் அவளது கரத்தை பற்றி தடுத்து நிறுத்தியது. அவள் திரும்பிப்பார்க்க அவள் முன்பு அவளது நண்பன் மோர்கன் நின்றிருந்தான்….

அவனை அங்கு எதிர்பாராதவள் பார்வையாலேயே என்னவெனகேட்க “சுருதி… நீ இந்தியா போய்த்தான் ஆகனுமா….” சிறிது கோபத்துடன் அந்த அமெரிக்க வெள்ளையன் ஆங்கிலத்தில் கேட்க

அவனை அமைதியாக பார்த்து “ஆம்… இது தவிர்க்க முடியாதது…” என அவளும் ஆங்கிலத்தில் பதில் தர, அவளது விழிகளை கூர்ந்து நோக்கியவன் அழுத்தமாக “ஓகே.. ஆனால் உன் நாடு அமெரிக்கா தான்… அதை மறந்து விடாதே… நீ இங்கு திரும்பி வந்துதான் ஆக வேண்டும்…” அவன் பேச்சில் மறைமுக உத்தரவு இருந்தது.. ஆனால் அது அவளை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.

அலட்சியமாக ” டோன்ட் வொரி மோர்கன்… நான் திரும்பி வருவேன்…” என்றவள் “பழைய கணக்கையும் தீர்த்திட்டு” என்று சினம் கொண்ட விழிகளுடன் மனதினுள் சபதம் எடுத்துக்கொண்டு அவனிடம் இருந்து விடைபெற்று என்ரன்ஸினுள் நுழைந்து கொள்ள அடுத்த அரைமணி நேரத்தில் அவள் பயணித்த விமானம் இந்தியாவை நோக்கி புறப்பட்டது.

மறு நாள் காலையில் அந்த வீடே பரபரப்பாக காணப்பட்டது. அந்த வீட்டின் இளவரசியை வரவேற்க அனைவருமே தயாராக இருந்தனர். 

நாராயணனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை வீட்டில் இருக்க சொல்லி விட்டு சுந்தரம் ஏர்போட்டிற்கு சென்றுவிட கார்த்திக் அவனது இஷ்ட தெய்வமான விநாயகரை தரிசிப்பதற்கு கோவிலுக்கு சென்றான்.

கருவரையில் வீற்றிருந்த விநாயகரை கை கூப்பி வணங்கியவன் “பிள்ளையாரப்பா… இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்… இத்தன நாள் நான் யாருக்காக ஏங்கினனோ, யாரப் பாக்கனும்னு காத்திருந்தனோ அவ இன்னைக்கு வரப்போறா.  எனக்கு இதுவரைக்கும் நீங்க எல்லாமே தந்திருக்கீங்க.. என் வாழ்க்கைல எல்லாம் நல்லதாவே செஞ்சிருக்கீங்க… ஆனா என் பாப்பா என் கூட இல்லாம எதுவுமே எனக்கு முழு சந்தோசத்த கொடுக்கல… நிறைவையும் தரல.. இழந்த மொத்த சந்தோசத்தையும் திரும்ப கொடுக்க என் பாப்பா வாறா… இனிமேலாச்சும் அவ எங்க கூட இருக்கனும்…” என்று இறைவனிடம் மனமுருகி வேண்டிக்கொண்டான்.

அங்கே ஏர்போர்டில் விமானம் தரையிறங்கிய அறிவிப்பு வந்ததும் தனது முதலாளி அம்மாவை பரபரப்பாக தேடிக்கொண்டிருந்தார் சுந்தரம்… ஒவ்வொருவராக வாயிலில் இருந்து வெளிவர கழுத்தை எக்கி எக்கி தேடியவரின் கண்களில் சுருதி தென்பட்டாள்.

கடைசியாக பத்து வயதில் அவளை பார்த்திருந்தாலும் நாராயணன் போனில் அவளது புகைப்படத்தை காட்டியிருந்ததால் அவரால் இலகுவாக அடையாளம் காண முடிந்தது. அவளை கண்டதுமே மகிழ்ச்சி பொங்க “சுருதிமா…” என்று கூப்பிட்டுக்கொண்டே அவளிடம் ஓடினார்.

வாயில் சுவிங்கத்தை மென்று கொண்டிருந்தவளோ தன்னை நோக்கி ஓடிவந்தவரை விழி உயர்த்திப்பார்க்க..

அவளை நெருங்கியவர் “அம்மாடி.. எப்டிடா இருக்க.. நல்லா இருக்கியாமா, பயணமெல்லாம் செளகரியமா இருந்திச்சா..” என ஓடிவந்ததில் மூச்சுவாங்கிக்கொண்டு அக்கறையாக கேட்க..

அவரைக் கண்டு புருவம் சுருக்கியவள் ஒற்றை வார்த்தையில் “யார் நீ..” என அழுத்தத்துடன் கேட்டாள்…

அந்த கேள்வியே அவரது வாயை மூடவைத்தது… ஒரே ஒரு கேள்வியில் அளவற்ற சினத்தையும் அலட்சியத்தையும் வெளிப்படுத்த முடியும் என்று அன்று தான் அவர் தெரிந்து கொண்டார்..

ஒருவேளை தன்னை மறந்ததால் அப்படியோ என நினைத்து தன் மனதை சமாதானப்படுத்தியவர் “நானு ஐயாவோட ட்ரைவர்மா..” என்று மரியாதை கலந்த புன்னகையோடு அவர் கூற..

“ஓ…” என்ற உதட்டை குவித்து அவரை ஏற இறங்க பார்த்தவள் “ட்ரைவர்னா வந்தோமா…. லக்கேஜ தூக்கினோமா… சேப்பா ட்ராப் பண்ணோமானு இருக்கனும்… ஓவரா அட்வான்டேஜ் எடுத்தா எனக்கு பிடிக்காது… இன்னொரு தடவ இதே மிஸ்டேக்க பண்ணாம இருக்க பாரு… ரைட்” என்று கட்டளையிட்டவள் அதிர்ந்து பார்த்தவரின் முன் சொடக்கிட்டு “என்ன பார்க்கிற.. சூட்கேச தூக்கிட்டு வா….” என்றவள் நில்லாது முன்னே செல்ல, அவர் தான் அவளது பரிணாமத்தில் தன் ஐயாவின் மகளா இது என்று வலியுடன் எண்ணியவர் லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு அவளை பின் தொடர்ந்தார்.

அவர்களின் கார் வீட்டு வாசலில் வந்து நிற்க காரின் சத்தத்திலேயே அவர்கள் வந்து விட்டதை அறிந்த வள்ளி மடியில் கிடந்த தனது ஏழு மாத குழந்தையை ஏணையில் கிடத்தி விட்டு கிச்சனுக்குள் சென்று வேகவேகமாக ஆரத்தி கரைத்து வாசலுக்கு வர அங்கே ஏற்கனவே அத்தனை வேலையாளர்களும் கூடி வந்து விட்டனர்.

எல்லோரும் ஆவலாக காரையே பார்க்க தான் அணிந்திருந்த சன் கிளாஸை கழற்றியவாறே காரிலிருந்து இறங்கினாள் சுருதி.. அச்சு அசல் நாராயணனின் சாயல்.. அதே கம்பீரம்.. அதே மிடுக்கு… ஆளை எடை போடும் கூரிய விழிகள், அமெரிக்காவில் வளர்ந்திருந்தாலும் பிறர் கண்ணை உறுத்தாத வண்ணம் அணிந்திருந்த ஆடை… அனைவரும் அவளை நேசத்துடன் பார்க்க வள்ளியோ முகம் கொள்ளா புன்னகையுடன் ஆரத்தி தட்டுடன் அவளை நெருங்க ஒற்றை கையுரத்தி அவளை நிறுத்தியவள் “நோ பார்மாலிட்டிஸ்….” என்று அலட்சியமாக கூறிவிட்டு சுந்தரம் புறம் திரும்பியவள் “என்னோட திங்ஸ் எல்லாத்தையும் ரூமுல கொண்டு போய் வை..” என்று உத்தரவிட்டு அங்கிருந்த யாரையும் சிறிதும் சட்டை செய்யாது அவர்களை கடந்து வீட்டினுள் நுழைய எல்லோரும் அவளது செய்கையை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

நேராக நாராயணனின் அறைக்கு வந்தவள் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவரின் அருகில் செல்ல அவளைக் கண்டவருக்கு கண்கள் பனிக்க “சுருதிமா…” என்று வாஞ்சையாக அழைக்க,

அவர் அருகில் அமர்ந்தவள் அவரை நோக்கி சிறு புன்னகையை உதிர்த்து “கெள யூ டூயிங் டாட்..” என்று கேட்க, அவரோ அதற்கு பதில் அளிக்காது “இந்த அப்பாக்கு ஏதாவது ஆனா தான் நீ பார்க்க வருவல்லடா…” என்று கசந்த புன்னகையுடன் கேட்க அதற்கு அவளிடம் தான் பதில் இல்லை..

ஒரு பெருமூச்சை விட்டு “கொஞ்ச நாள் எந்த வேலையும் பார்க்காம புல்லா ரெஸ்ட் எடுங்க டாட்… அன்ட் டாப்லட்ஸும் கரக்டா எடுத்துக்கோங்க… அப்ப தான் சீக்கிரம் ரிக்கவர் ஆவீங்க..” என கூற அவரும் “எனக்கென்னடா அதான் நீ வந்திட்டல்ல.. இனி நான் சரியாயிருவன்.. நீ வொரி பண்ணிக்காத..” என நிம்மதியுடன் கூற, அவளும் சிறிதாக தலையசைத்தவள் “நான் ரூமுக்கு போய் ப்ரஸ் ஆகிட்டு வாறன் டாட்..” என்றவள் அங்கிருந்து வெளியேற அவள் தனக்காக வந்தது மகிழ்ச்சியை தந்தாலும் அவளது ஒட்டாதபேச்சில் அந்த பெரியவர் கலங்கி நின்றார்.

கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த கார்த்திக்கு சுந்தரம் அழைத்து சுருதி வந்து விட்டதை கூற அவளை பார்க்கும் ஆர்வத்தில் காரை வேகமாக வீட்டிற்கு விரட்டினான் அவன் .

வீட்டு வாயிலில் வந்ததும் காரின் கோர்னை தொடர்ந்து அழுத்த அந்த சத்ததத்தில் செக்கியூரிட்டி ஓடி வந்து கேட்டை திறந்து விட, திறந்த வாயிலின் ஊடாக வேகமாக உள்நுழைந்து அந்த மாளிகை போன்ற வீட்டின் போர்ட்டிகோவில் சக்கரங்கள் தேயும் அளவு காரை நிறுத்தியவன் அதனுள் இருந்து வேகமாக இறங்கினான்.

தனது விழிகளை பரபரப்பாக நாலாபுறமும் சுழற்றி தேடியபடி வேகமாக வீட்டுக்குள் அவன் நுழைய, அந்நேரம் கசங்கிய முகத்துடன் உள்ளிருந்து வாசலை நோக்கி வந்து கொண்டிருந்த  சுந்தரம் மகனை கண்டு விரைந்து வந்து அவனை தடுத்து நிறுத்தினார்.

அப்போது தான் அவரை கண்ட கார்த்திக் “அப்பா! பாப்பா.. பாப்பா எங்கப்பா? மேல ரூம்ல இருக்காளா?” என துள்ளலுடன் கேட்டுக்கொண்டே மாடிப்படி நோக்கி செல்லப்போக, அவனது கைபிடித்து தடுத்தவர் “கார்த்தி! பொறுடா.. சுருதிமா அப்ப பார்த்த அதே சின்னப்பொண்ணு இல்ல.. இப்ப அவங்க வளர்ந்துட்டாங்க.. பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காங்க.. நீ அவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கனும்” என்று யதார்த்தத்தை அவனுக்கு புரியவைக்க முயல,

தந்தையை பார்த்து அழகாய் புன்னகைத்தவன் “அப்பா.. அவ நம்ம பாப்பா ப்பா.. அவள கையிலயே தூக்கிட்டு திரிஞ்சவன் நான்.. அவகிட்ட பேச என்னப்பா தயக்கம் இருக்கபோது…. எனக்கு இப்பவே அவள தூக்கி சுத்தனும் போல கையெல்லாம் பரபரக்குது.. நான் பாப்பாவப் போய் பார்த்திட்டு வரன்பா..” என்றவன் நில்லாது மாடிப்படிகளில் தாவி ஏறி ஓட, சுந்தரமோ போகும் அவனையே கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

இங்கோ அவளது அறைக்கு விரைந்து வந்த கார்த்திக் உள்ளே அவளை காணாது சுற்றி முற்றி தேடியவன் பால்கனியில் பேச்சுக்குரல் கேட்டு எட்டிப்பார்க்க, அங்கே அவனது பாப்பா திரும்பி நின்று யாருடனோ போன் பேசிக்கொண்டிருக்க, பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து தனது பாப்பாவை கண்டவனின் செல்கள் யாவும் சிலிர்த்து புல்லரிக்க ஆசையும் ஆவலும் போட்டி போட மெதுவாக எட்டு வைத்து அவளருகில் சென்றவன் குறும்பு புன்னகையுடன்  பின்னிருந்து இரு கைகளாலும் அவளது கண்களை மூடிக்கொள்ள, திடீரென்ற எதிர்பாரா கரத்தின் தொடுகையில் உதட்டை சுழித்து ஷிட் என்று கரங்களை தட்டிவிட்டவள் திரும்பி எதிரே நின்றுகொண்டிருந்தவனை எரிச்சலுடன் பார்த்து “ஹேய் இடியட்.. ஹூ ஆர் யூ மேன்” என சீறலுடன் கேட்க,

அவளது கோபத்தில் திடுக்கட்டவன் தன்னை கண்டு கொள்ளாமையால் தான் இப்படி பேசுகிறாள் என நினைத்து முகத்தில் புன்னகையை வரவழைத்து கண்களில் ஆர்வத்துடன் “பாப்பா.. என்ன தெரியலயா.. நான் தான் கார்த்திக்.. உன் அப்பாவோட கார் ட்ரைவர் சுந்தரத்தோட பையன்…” என்று  சொன்னது தான் தாமதம் விரலில் இருந்த மோதிரத்தின் அச்சு கன்னத்தில் பதியும் அளவு பளார் என்று அறைந்திருந்தாள்  அவனை.

சில நொடிகளில் நடந்த நிகழ்வில் அதிர்ச்சியில் உறைந்து நின்றவனோ எரிந்த கன்னத்தை உள்ளங்கையால் தேய்த்துக்கொண்டு திகைத்துப்போய் அவளை பார்க்க,

அவன் முன் நின்றுகொண்டிருந்தவளோ “இந்த வீட்டு வேலக்காரனோட பையன் நீ… என் பக்கத்திலயே வர தகுதி இல்லாதவன்.. என் மேலேயே கைய வைக்கிறியா…” என்று எல்லையற்ற சினத்துடன் பேச, அவள் வார்த்தைகள் உருவாக்கிய வேதனையில் குளம் கட்டிய கண்களுடன் அவளை வெறித்துப் பார்த்தான் அவன்.

அவன் பார்வையில் எரிச்சல் உண்டாக “பச்… எதுக்கு வந்த…” அலட்சியமாக அவள் கேட்க, அவனோ தடுமாறி “அ…அது…அ….” என்று என்ன சொல்வதென்று தெரியாது திணற “ரூம் கிளீன் பண்ண வந்தியா..” அதையும் அவளே கேட்க அவனது இதயமே நொறுங்கிப்போனது.

அவன் அமைதியாகவே இருக்க  “நீ பாட்டுக்கு திறந்தவீட்டுக்க பூர்ர எதுவோ மாதிரி வாற…. ஒருத்தரோட ரூமுக்க நுழையும்போது பெர்மிசன் கேக்கனுங்கற சென்ஸ் இல்லையா உனக்கு” என்று சினத்துடன் அவள் கேட்க

அந்தநேரம் யூஸுடன் உள்ளே வந்த வள்ளி அவள் கார்த்திக்கிடம் கேட்ட கேள்வியில் ஏற்கனவே அவள் மேல் பயத்தில் இருந்தவள் “இப்போது நிற்பதா.. இல்லை ஓடிவிடுவோமா..” என யோசிக்க அவளை கண்டுவிட்ட சுருதி “வாட்..” என்று ஒற்றை சொல்லில் கேள்வி எழுப்ப 

“இல்லம்மா யூஸ்…” வள்ளி தயக்கத்துடன் கூற

“டேபிள்ள வச்சிட்டுப்போ..”

“ம்ம் சரிமா..”

வள்ளியும் விட்டால் போதுமென்று யூஸை வைத்துவிட்டு செல்லப்பார்க்க

“ஹேய் ஒரு நிமிசம்…”

“என்னம்மா…..”

“இத யாரு இங்க கொண்டு வந்து வச்சது..”

எதை என்று அவள் கைகாட்டிய திசையை பார்க்க அங்கே கட்டிலில் கிடந்த கரடி பொம்மையை கண்டு கார்த்திக்கை திரும்பி பார்த்தவள் அவனது வேதனை அப்பிய முகத்தை கண்டு

“எனக்கு தெரியலம்மா..” என்று அவளும் பயத்துடன் கூற

“தெரியலயா… கண்ட கண்ட குப்பை எல்லாம் போடுறதுக்கு என்னோட ரூம் என்ன குடோன்னு நினைச்சிங்களா ஹான்….” என சீற வள்ளியுமே அரண்டு போனாள்… கார்த்திக்கோ ஆசையாசையாக அவளுக்கு வாங்கிய பொருளை குப்பை என்கிறாளே என வேதனையில் தொய்ய,

கார்த்திக்கை அலட்சியமாக பார்த்துக்கொண்டு வள்ளியிடம்  “இப்பவே இத தூக்கிட்டு போய் குப்பையோட குப்பையா போட்டு கொழுத்து ரைட்…..” என்று கூறிவிட வள்ளியோ அவளது கட்டளையில் நடுங்கிப்போய் வேறு வழியில்லாது கார்த்திக்கை பாவமாக பார்த்துக்கோண்டே அந்த பொம்மையை தூக்கிக்கொண்டுசென்று விட, ஒரு பெருமூச்சைவிட்டுக்கொண்டு அவன் புறம் திரும்பியவள்

“உனக்கு மட்டும் தனியா சொல்லுமா.. கெட் அவுட் ஐ சே…” என்று அடிக்குரலில் சீறியவள் பால்கனியில் நுழைந்துகொள்ள அவனது பாப்பாவின் புதிய அவதாரத்தில் நிலைகுலைந்து கண்ணீருடன் வெளியேறினான் கார்த்திக்.

தொடரும்.

குரங்கு வெடி. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Archana

      அடேய்ய்ய் குரங்கு வெடி இந்த போஸ்ட்டுலே என்னையே டேக் பண்ணவே இல்லையா🤔🤔 16 போட்ட யூடியே இப்போ தான் பாரக்குறேன் ஜோகங்கள்😓

      சுருதி எதுக்கு இம்புட்டு கோப படுது ஆத்தி இந்த பொண்ணு கிட்ட உசாரா தான் இருக்கணும் 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️ என்னாஆஆஆஆஆ அடி 😱😱

    2. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.