Loading

அத்தியாயம் -8

சொல்லுக்கும் செயலிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு..!

சொல்வது போல் காரியத்தை அவ்வளவு எளிதாக செய்து விட முடியாது.. ஆனால் தைரியமும் நெஞ்சுறுதியும் கொண்டால் நிச்சயம் நம்மால் செய்து விட முடியும்.

அப்படி தான் கொஞ்சம் கொஞ்சமாக தன் பாலைவனத்தை சோலைவனமாக மாத்தினாள் கண்மணி. அதற்கு அவளிற்கு கிடைத்த பட்டம் சோம்பேறி, பிடிவாதகாரி, வாயாடி, பொறுப்பில்லாதவள் மற்றும் பல..!

நம்மை சுற்றி தன்னம்பிக்கை என்ற சுவற்றை எழுப்பி விட்டோமானால் நம்மை நோக்கி எறியப்படும் கற்கள் யாவும் காற்றில் கரைந்த கற்பூரமாய் மறைந்து விடும்…!

எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள் கண்மணி. நிச்சயம் அவள் இழந்த காலத்தை நினைத்து மருகவில்லை. அவள் மனதின் காயம் வலிக்கவில்லை தான்..! இருப்பினும் அது விட்டு சென்ற தழும்பானது மறையாது அவள் நெஞ்சில் இருந்தது. இன்று போல் அவ்வப்போது வெளியே எட்டி பார்த்து பழைய நினைவுகளை கிளறி விட்டு செல்லும்.

அவளின் கதையை முழுதாக கேட்ட வருணின் மனநிலை என்ன வென்று அவன் முகத்தில் ப்ரதிபளிக்கவில்லை.

மௌனம் மட்டுமே இருவருக்குள்ளும் ஆட்சி செய்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து தன் கரத்தில் உண்டான ஸ்பரிஸத்தை உணர்ந்தவள் ஏறிட்டு பார்க்க, வருண் தான் அவளின் காயப்பட்ட கையில் அவனின் கைக்குட்டை வைத்து கட்டி விட்டு கொண்டிருந்தான்.

“ஒரு கையில மட்டும் வளையல் போட கூடாதுனு அம்மா சொல்லுவாங்க..!” என்றவன் அவளின் பதிலிற்காக காத்திராமல், ஒவ்வொன்றாக அவள் கையில் இருந்த வளையல்களை களட்டினான்.

” இங்கேயே இரு வந்தறேன்” என்றவன்
சென்று அரை மணி நேரம் மேல் ஆகிவிட்டது. இன்னும் ஆளே காணவில்லை, பழைய படி இருந்திருந்தால் எங்கே செல்கிறான் என்ன விஷயம் என தூண்டி துருவி கேள்வி கேட்டு நானும் உடன் வரேன் என தொத்தி கொண்டு உடன் சென்றிருப்பாள். அவளிற்கோ அப்பொழுது மனநிலை சரி இல்லாத காரணத்தினால் அமைதியாக இருந்து விட்டாள், ஆனால் இப்பொழுதோ இவ்வளவு நேரம் ஆகியும் அவன் இல்லாமல் போக மனதிற்குள் சிறு பயம் எட்டி பார்த்தது. கேம்ப்பிற்கு திரும்பும் வழியும் தெரியாமல் துணையும் இல்லாமல், நட்ட நடு சாலையில் தனியே அமர்ந்திருப்பது அவளிற்குள் கலக்கத்தை உண்டு பண்ணியது..!
வானம் வேறு இருள் சூழ ஆரம்பிக்க, அவனின் வருகையை எதிர் நோக்கி அலைபாய்ந்தது அவள் விழிகள்.

அவளிற்கு சிரமம் கொடுக்காமல் சற்று நேரத்திலேயே வந்துவிட்டான் வருண்.

” எனக்கு போய்ட்டீங்க.. எனக்கு.. ” என கோவமாக ஆரம்பித்தவள் அவன் வேகமாக மூச்சு வாங்குவதை கண்டு, நிறுத்தி நிதானித்து அப்பொழுது தான் அவனை முழுதாக கவனித்தாள், கையில் ஏதோ கவர் வைத்திருந்தான்.

” நீ பயந்துக்குவியோனு தான் சீக்கரமா நடந்து வந்தேன். ” என்றவன் அவனை ஆசுவாசப்படுத்தி கொண்டு திட்டில் அமர,

அதில் மென்னகை புரிந்தவள். ‘ வேகமா நடந்ததுக்கே மூச்சு வாங்குமா ‘ என அவளுள் எழுந்த கேள்வியை ஓரம் கட்டி விட்டு அந்த கவரை ஆராய்ந்தாள்.

” பஜ்ஜி போண்டா தான் வாங்கிட்டு வந்தேன் ” என்றவன் அதை பிரிக்க,

” எனக்கு வேணா ” என அமைதியாக உட்கார்ந்து கொண்டாள் கண்மணி.

” உனக்குனு நா சொல்லவே இல்லயே ” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

அதில் அவனை முறைத்தவள். உதட்டை சுழித்து கொண்டு முகத்தை திருப்பி கொள்ள, அவள் பாவனையில் சிரித்தான் வருண்.

” இரு உன்ன ஒரு போட்டோ எடுத்துக்கறேன் அப்படியே குரங்கு மாறியே இருக்க!”

அவள் அவனை இன்னும் முறைத்தாள்.

“ஹேய் என்னப்பா திடீர்னு சிம்பன்சியா மாறிட்ட? இரு இரு இதயும் ஒரு போட்டோ எடுத்துக்கறேன் “

“ம்ம்ச் பாஸ்ஸ்ஸ்..!” என்றவள் சினுங்களாய் ராகம் இழுக்க,

“சாப்பிடு கண்மணி ” என்றான் பரிவாக. அவனின் சொல்லில் குளிர்ந்தவள் அதை எடுத்து உண்ண தொடங்கினாள்.

அவனிற்காக மட்டும் என ஆரம்பித்து கடைசியில் அனைத்தையும் அவளே தின்று தீர்த்தாள்.

” செம டேஸ்ட்டு ” என்றவள் உச்சு கொட்டி கொண்டே கடைசி வடையை எடுக்க போக அப்பொழுது தான் அவளிற்கு உரைத்தது வருணிற்கு கொடுக்காமல் தானே அனைத்தையும் காலி செய்து விட்டோம் என..!

” அச்சசோ உங்களுக்கு கேக்காம நானே எல்லாத்தையும் சாப்பிட்டுட்டேனே? இந்தாங்க இத நீங்க எடுத்துகோங்க” என அவள் கையில் இருந்த வடையை நீட்டினாள்.

” இல்ல பரவால்ல நீயே சாப்பிடு “

” நிஜமாவா? “

” ம்ம்.. ஆமா..!”

” ஹப்பாடா எங்க நீங்க வாங்கி சாப்பிடுருவீங்களோனு பயந்துட்டே இருந்தேன் ” என்றவள் சிரித்து கொண்டே வடையை வாயில் போட்டு கொள்ள. அவளின் சிரிப்பு அவனிற்கும் ஒட்டி கொண்டது.

மறுபடியும் அவர்கள் பயணம் தொடர்ந்தது. கண்மணிக்கு தான் மனம் சற்று நெருடலாகவே இருந்தது. அவளின் கதையை சொன்ன பிறகு அவன் எதுவும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை தான்..! இருந்தாலும் தன்னை பற்றிய எண்ணம் அவருக்கு மாறி இருக்குமோ? மற்றவரின் பரிதாப பார்வையை சுத்தமாக வெறுத்தாள் கண்மணி..!
அதனாலேயே அவளை பற்றி யாரிடமும் சொல்லி கொள்ள மாட்டாள். இன்று ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சொல்லி விட்டாள். தன் பின்புலன் இதுவென தெரிந்ததும் தன்னை பற்றி கேவலமாக எண்ணி விடுவாரோ? அல்லது தன்னை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வாரோ? தேவை இல்லாத எண்ணங்கள் அவள் மூளையை ஆக்கிரமித்து கொள்ள, இதற்கு மேல் முடியாது என அவனிடமே அந்த கேள்வியை கேட்டு விட்டாள்.

” பாஸ் அது வந்து.. “

” எங்க வரது? “

“இல்ல நீங்க என்ன பத்தி எதாவுது தப்பா.. “

” ஸ்டாப் இட் கண்மணி.. எல்லாருக்கும் கடந்த காலம் இருக்கு, உன்னோடது தெரிஞ்சிருச்சி மத்தவங்களோடது தெரில அவ்வளவு தான். ரொம்ப சில்லியா இருக்கு நீ கேக்கறது. உன்ன எவ்வளவு பெரிய ஆளுனு நெனச்சிட்டு இருந்தேன் தெரியுமா? இந்த நிமிஷம் என் முன்னாடி நிக்குற கண்மணி மட்டும் தான் நிஜம்..! அத மட்டும் தான் நான் நம்புவேன். மத்தத பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல. இத நல்லா உன் மண்டையில்ல ஏத்திக்கோ சரியா இப்போ ஆல் ஓகேவா?”

“ம்ம்ம் ” என்றாள் பளிச்சிடும் சிரிப்போடு..!

“ஆமா ஏன் திடீர்னு போய் வடை எல்லாம் வாங்கிட்டு வந்தீங்க?”

” குட் ஃபுட் இஸ் ஈக்குவல் டு குட் மூட் கண்மணி. இதோ இப்போ எப்படி இருக்க? அப்போ பாக்கனுமே மூஞ்சிய கொரங்கு மாறி வெச்சிட்டு “

அதில் அவனை பொய்யாய் முறைத்தவள், “தேங்க்ஸ்..!” என்றாள் அவன் முகம் பார்த்து.

“பார்றா யாரோ ப்ரண்டு ப்ரண்டுனாங்க உங்க ப்ரண்ட்ஸ் கிட்ட எல்லாம் இப்படி தான் தேங்க்ஸ் சொல்லிக்குவிங்களா மேடம் ? “

” இல்ல.. இல்ல.. வாப்பஸ் வாப்பஸ்.. “

“குட்..”

கண்மணிக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு சீக்கிரம் அவள் இயல்பு நிலைக்கு திரும்பியது. எப்பொழுதும் மனம் வருந்தும் பொழுதெல்லாம் தன்னை தானே தேற்றி கொள்ள அந்த நாள் முழுவதுமே அவளிற்கு தேவைப்படும். ஆனால் இன்று? கேள்வி முடிச்சிட்ட அவள் மனம், வருணையே பதிலாய் கை காட்ட இமைக்காது அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவனையே பார்த்து கொண்டு சாலையில் கவனம் வைக்காமல் அவள் நடக்க, “ஹேய் பாத்து, விழுந்தறாத ” என்றவன் முன் இருந்த கல்லில் அவள் இடிப்படாமல் வாகாக அவளை மறு பக்கம் இழுத்து நிறுத்தினான்.

அந்திவானம் சூரிய அஸ்தமனத்தில் அவன் முகம் பிரகாசிக்க, அந்த ஜொலிப்பில் கண்மணியின் மனதில் புதிய சூரியன் உதயமானது..!

பெயரில்லா உணர்வொன்று அவளை தாக்கி செல்ல, முதல் முறையாக அவனின் தொடுகை அவளுள் குறுகுறுப்பை கொடுத்தது.

அவனின் ஸ்பரிஸம் அவளிற்கு ஏற்கனவே பழக்கப்பட்ட ஒன்னு தானே, ஆனால் இன்று மட்டும் ஏன் வித்யாசமாக இருக்கிறது? அவள் மனதிற்குள் வாக்குவாதம் நடத்தி கொண்டிருக்க அவர்கள் காரை நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.

அவன் காரை நெருங்கியவுடன், அதற்காகவே காத்திருந்தது போல் சிலர் அவனை நெருங்கி வர குழப்பதோடு அவர்களை ஏறிட்டான் வருண்.

“இது உங்க கார் தானே”

“ஆமா ஏன் கேக்கறீங்க?”

“சின்னய்யா உங்கள பாக்கனும்னு சொன்னாரு”

வருணை நகரவிடாமல் அவன் கைகளை பின்னோடு ஒருவன் கட்டி கொண்டான்.

“ஹேய்.. யார் நீங்களாம் எதுக்கு அவர புடிச்சி வெச்சிருக்கீங்க ” என கண்மணி குரல் உயர்த்த,

“இந்தா பாப்பா..! சத்தம்மா பேசாத, சுத்தம்மா புடிக்காது மொத்தமா தூக்கிருவேன் ” என்றவன் கண்களை உருட்டி முகத்தின் அருகே கத்தியை வைத்து மிரட்ட, சற்று மிரண்டு தான் போனாள் கண்மணி.

” டேய்..! சும்மா விசாரிக்க தானடா சொன்னேன்..! நீங்க என்னடா இப்படி புடிச்சு வெச்சிருக்கீங்க? கத்திய கீழ இறக்கு மொதல்ல..!”

அவர்களை அதட்டினான் சக்திவேல், வீராசாமியின் மகன். கண்மணி திருடன் என பெயர் சூட்டிய மாமனிதன்..!

” ஆத்தாடி இவனா..!” என்றவள் அவனை பார்த்து பேய் முழி முழிக்க, அவளை சந்தேக பார்வை பார்த்தான் சக்தி.

இங்கு நடந்த அமிலி துமிலியிலேயே அவன் கண்டிப்பாக ஊர் தலைவர் வீரா சாமியின் வீட்டு பையனாக தான் இருக்க வேண்டும் என உறுதிபடுத்தி கொண்ட வருண், அவனாகவே பேச்சை ஆரம்பித்தான்.

” சாரி, உங்க வீட்டுக்குள்ள அப்படி திடுதிப்பினு வந்ததுக்கு. ஆக்சுவலி ஒரு சின்ன மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் ஆகிருச்சு, லெட் மீ எக்ஸ்ப்ளைன் யூ ” என்றவன் முதலில் அவனை அறிமுகப்படுத்தி, பின் அவன் ப்ராஜெக்ட் மற்றும் கேம்ப்பை பற்றி எடுத்து கூறி வீராசாமியின் எதிர்ப்பையும் விளக்கி அவர்களின் நிலையை எடுத்து கூறினான்.

” ஓ.. ஓகே மிஸ்டர் வருண். நீங்க உங்க கேம்ப் அப்ரூவல் டாக்குமென்ட்ஸ் எனக்கு கொடுங்க அப்பா கிட்ட நா பேசிக்கறேன் “என்றான் சிநேக புன்னகையோடு.

எப்படியோ இன்று ஆரம்பித்த அவர்கள் பயணம் பல திருப்பங்களோடு இனிதே நிறைவடைந்தது.

இருவரும் காரில் கேம்ப்பிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

” சாரி.. நா தான் எதுவும் யோசிக்காம டக்குனு வீட்டுக்குள்ள எகிறி குதிச்சிட்டேன். அவரு நல்லவரா இருக்க போயி பொறுமையா நாம சொல்லுறத கேட்டு நமக்கு ஹெல்ப் பண்ண ஒத்துக்கிட்டாரு. இல்லனா இன்னேரம் நம்ம நிலைமை என்ன ஆகி இருக்கும்”

” அதுக்கு தான் கொஞ்சமாவுது மூளைய யூஸ் பண்ணனும்னு சொல்லறது “

” என்னால தான் உங்களுக்கு பிரச்னைல..” என்றவள் முகத்தை தொங்க போட்டுகொண்டாள்.

” ஹேய்.. கண்மணி ஒருத்தவங்க செய்யாத குற்றத்துக்கு தண்டனை கொடுக்கறது எவ்ளோ தப்போ அதே மாறி தான் ஒருத்தவங்களுக்கு ஒரு விஷயம் தெரிலனு குறை சொல்லறது! யாருமே இங்க பொறக்கும் போதே எல்லாமே தெரிஞ்சி கிட்டு பொறக்கறது இல்ல, எல்லாமே ஒரு அனுபவம் தான். அந்த அனுபவம் உனக்கு இப்போ கிடைச்சிருச்சுல? அது மட்டும் இல்லாம நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு தானே வந்த? அவ்ளோ தான் விடு” என்றான் சிறு புன்னகையோடு.

அவனின் வார்த்தைகளோடு சேர்ந்து அவனுமே அவள் மனதில் பதிந்தான்.

இன்று நாள் முழுக்க நடந்த களேபரத்தில் உடம்பில் இருந்த சக்தி எல்லாம் வடிந்து போக கண்கள் சொக்கியது கண்மணிக்கு..!

ஆனால் ஏனோ காரில் அமர்ந்து கொண்டே தூங்க அவளிற்கு சரியாக வசதிப்படவில்லை..!

இப்படி அப்படி என நெளிந்து கொண்டே இருந்தாள். அதை கவனித்த வருண் அவளிடம், ” அந்த பக்கம் லீவர் இருக்கு பாரு அத தூக்கி சீட் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ “

” எங்க காணோ”

காரை சற்று ஓரமாக நிறுத்தி, அவன் சீட்டில் இருந்து அவள் பக்கமாக அவன் எம்ப அவனின் நெருக்கத்தில் அவளிற்கு இதய துடிப்பு அதிகமாக படபடத்தது. அதை வெளிக்காட்டி கொள்ளாது கண்ணை சிமிட்டி சிமிட்டி தன்னை சமன் செய்ய முயற்சித்து கொண்டிருந்தாள். ஆனால் அவனோ வெகு சாதாரணமாக லீவரை பிடித்து இழுத்து சீட்டை அட்ஜஸ்ட் செய்து, விட்டு அவன் பாட்டிற்கு பயணத்தை தொடர்ந்தான்.

‘ப்பா எவ்வளவு ஷார்ப்பான மூக்கு !’ என எண்ணி கொண்டவளால் அவனை நேர் கொண்டு பார்க்கவே முடியவில்லை. கேம்ப் வந்து சேர்ந்ததும், விட்டால் போதும் என அவள் ரூமிற்கு ஓடி விட்டாள். இரவு உணவிற்கு கூட கீழே வரவில்லை.

குளித்து முடித்து வந்து மெத்தையில் விழுந்தவள். இன்று நடந்த அனைத்தையும் மெல்ல அசை போட்டு பார்த்தாள். ஆனால் அவள் நினைவிற்கு வந்தது என்னவோ வருண் மட்டுமே. அவன், அவன் கண்கள், அவன் சிரிப்பு, அவன் மூக்கு, அவன் அக்கறை, அவன் அறிவுரை என ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தவளின் முகத்தில் புன்னகை மின்னியது. இது என்ன உணர்வு இதற்கு முன் இதை உணர்ந்ததே இல்லையே? என யோசித்தவளின் கேள்விக்கான பதிலும் அவள் உள்ளேயே கிடைத்தது.

‘நிறைவு..!!! ‘ ஆம்.. இதுவரை அவள் உணர்ந்திடாத ஓர் உணர்வு, யாரிடமும் கிடைக்காத ஓர் உணர்வு அவனிடத்தில் மட்டுமே கிடைக்க,

“ஆதி ” என உச்சரித்த அவள் இதழ்களில் வெட்க புன்னகை தவழ்ந்தது..!

வழக்கம் போல் காலை 5 மணிக்கு எழுந்த சாத்விகா சமையல் வேலைகளை முடித்து அவள் மகள் மகிஷாவை எழுப்பி அவளை ஸ்கூலிற்கு தயார் படுத்தினாள். துருவ் தான் எப்போழுதும் மகியை ஸ்கூலில் விட்டு வருவான்.

“பை ப்பா ” பச்சரிசி பற்கள் காட்டி அவள் சிரிக்க, மகளை ஸ்கூலில் இறக்கி விட்டு வீடு திரும்பினான் துருவ்.

” உங்க லஞ்ச் பாக்ஸ் ” என்றவள் அதை டைனிங் டேபிலில் வைத்து விட்டு உள்ளே செல்ல போக,

” எனக்கு இன்னிக்கு ஆஃபிஸ் இல்ல “

சட்டென்று திரும்பியவள், ” முன்னாடியே சொல்ல மாட்டிங்களா? அதுக்கு ஏத்த மாறி ப்ளான் பண்ணி இருப்பேன்ல “

“நீ கேட்டு இருக்க வேண்டியது தானே?”

அதற்கு அவள் பதில் பேச வாயெடுக்க,
அவள் கரம் பற்றியவன்.

“ப்ளீஸ்ஸ் சாத்வி, இன்னிக்கு ஒரு நாள் மட்டும் சண்ட வேணாமே “

” அப்போ நா தான் சண்ட போடறேனு சொல்ல வரீங்களா? “

“ஸ்சோஓ.. அப்படி இல்ல டி. நீயே சொல்லு நாம நார்மல்லாவா இருக்கோம்? சும்மா சும்மா சண்ட போடுறதும் கத்தறதும் நல்லவா இருக்கு, நாம இப்படியா இருந்தோம்? ப்ளீஸ் சாத்வி என்ன விட்டு நீ ரொம்ப தூரமா இருக்கற மாறி இருக்கு! உன்ன எதாவுது ஹர்ட் பண்ணிருந்தா சாரி டி. பட் இப்படி பேசாம மட்டும் இருக்காத ரொம்ப கஷ்டமா இருக்கு “

அவனின் பேச்சில் சக்கரை பாகாய் உருகியவள்,

“அப்படிலா இல்லைங்க” என்றாள் தவிப்பாய்.

“இல்ல நீ எதுவும் பேசாத இன்னிக்கு நமக்கான நாள் சரியா?”

“என்ன சொல்லறீங்க புரில “

” புரிலயா இப்போ புரியும் ” என்றவன் அவள் எதிர்ப்பார்க்கா நேரம் அவளை தூக்க, அதில் அதிர்ந்தவள்.

“அய்யயோஓஓ.. என்ன பண்ணுறீங்க என்ன விடுங்க விடுங்க யாராவுது வந்துர போறாங்க” என அவள் கத்திய கத்தில் அவளை இறக்கிவிட்டான்.

” அடியே நா உன் புருஷன் டி எனமோ திருடன பாத்த மாறி கத்துற”

” போங்க நீங்க வேற ” என்றவளின் கன்னம் வெட்கத்தில் சிவந்தது.

” ஓய் என்ன பாரு..! கல்யாணம் ஆன அப்ப கூட நீ இப்படி வெட்கப்பட்டு நா பாத்தது இல்லடி ஹாஹா இதுவும் நல்லா தான் இருக்கு ” என்றவன் அவள் கன்னத்தை கிள்ள, சிணுங்கலாய் சிரித்தாள்.

மதியம் தானே சமைக்கிறேன் என அவன் பண்ணி அழும்பில் உண்மையில் மூச்சு மூட்டியது சாத்விக்கு..!

” பருப்பு என்ன வெள்ள கலர்ல
இருக்கு “

” ஆமா இது பேர் என்ன அவரகாய்யா பொடலங்காய்யா “

” இது என்ன பொடி? பிரவுன் கலர்ல இருக்கு!!”

” அய்யோ என்னடி இது பருப்புல இருந்து ஒரே நுரை நுரையா வருது? “

” கடைசியா கொஞ்சம் புதினா போடுவோமா நல்லா வாசமா இருக்கும்ல.. “

கேள்வி கேட்டே அவளை ஒரு வழி பண்ணியவன் ஒரு மணி நேர போராட்டதிற்கு பிறகு கடைசியாக வைத்து விட்டான் அந்த சாம்பாரை..!

சமையலறையை அவள் எட்டி பார்க்க நெஞ்சு வலி வராத குறை தான், அவ்வளவு அலங்கோலங்கமாக இருந்தது.

ஆனால் குழந்தையை சுமக்கும் தாயவளிற்கு அது எப்படி ஒரு சுகமான சுமையோ..!
அதை போலவே தான், தன்னவனின் இந்த செல்ல இம்சைகள்
யாவும் பெண்ணவளிற்கு மிகவும்
பிடித்தமானவை..!

எவ்வளவு நாட்கள் ஆகிற்று இவர்கள் இப்படி சந்தோசமாய் சிரித்து பேசி?

ஒரு நொடி.. ஒரு நொடி போதும் சமாதானம் பேசி துணையின் மனதை புரிந்து கொள்ள, ஆனால் இங்கு பலருக்கு அந்த ஒரு நொடி அமைவதற்கே பல காலங்கள் தேவைபடுகிறது..

காலம் போன காலத்தில் புரிதல் வந்து என்ன பயன்? காலத்தோடு காதல் செய்து வாழ்வை அழகாக்குவோம்..!!

சாம்பாரை சாப்பாட்டில் போட்டு பிசைந்து ஒரு வாய் அவன் வாயில் வைக்க, முகம் சற்று மாறியது. அவளை பார்த்து அசடு வழிந்தவன், “சாத்வி.. நீ எவ்வளவு ஆசையா தாக்காளி சாதம் செஞ்சிருப்ப? அத ஏன் வேஸ்ட் பண்ணாட்டி அத கொடேன் அதயே சாப்பிட்றேன்..”

“ஆஆ.. ஆசை தான்..! ஹலோ மிஸ்டர், என் புருஷன் கஷ்டப்பட்டு பண்ணி இருக்கறாரு நீங்க என்னடானா அத சாப்பிட மாட்டேனு சொல்லறீங்க? அதுலா முடியாது ஒழுங்கா பிளேட்ல இருக்கறத காலி பண்ணிட்டு எந்திரிக்கறீங்க..!”

” ஏதே நான் தாம்மா உன் புருஷன்!!”

” இருந்துட்டு போங்க.. ஆனா என் புருஷன் உழைப்ப வீண் போக நான் விட மாட்டேன் “

” அடிபாவி இவ்வளவு நாள் சண்ட போட்டதுக்கு நல்லா பழி வாங்குற டி.. “

ரூம்மில் துருவ்வின் போன் அடித்தது.

” போன் வருது என்னனு பாக்கறேன் ” என்றவன் அதை சாக்காக வைத்து எழ முயற்சிக்க,

“ஒன்னும் வேணா நா போய் பாக்கறேன், நீங்க சாப்பிடுங்க ” என்றவள் அறைக்குள் போய் அவன் போனை எடுக்க அவன் நண்பன் தான் அழைத்து கொண்டிருந்தான்.

“ஹலோ”

“அவன் எங்கம்மா “

“அவர் சாப்பிட்டு இருக்காரு ணா எதாவுது முக்கியமான விஷயமா “

” அதுலாம் ஒன்னும் இல்லம்மா, இன்னிக்கு நைட் டிரிப் கெளம்பறோம்ல அதான் எல்லாம் ரெடி பண்ணிட்டானானு கேக்க கூப்டேன் “

” ட்ரிப்பா “

“ஆமாம்மா, அவன் உன் கிட்ட சொல்லலையா? ரெண்டு நாள் குன்னூர் ஹில்ஸ் போறோம் “

“ஓ.. சொன்னாரு சொன்னாருங்க அண்ணா நா தான் மறந்து கேட்டுட்டேன், அப்றமா அவர கூப்பிட சொல்லறேன் ” என சொல்லி அழைப்பை துண்டித்தவளிற்கு , பெரிய ஏமாற்றத்தை சந்திதது போல் இதயம் வலித்தது.

‘அப்போ ட்ரிப் போறத சொல்லறதுக்கு தான் இந்த கவனிப்பு எல்லாமா ‘ யாரோ நெஞ்சை பிழிந்து கிழித்தெறிவது போல் ஓர் உணர்வு.

அழ கூடாது என முடிவெடுத்தவள், ‘ இந்த நாடகம் எவ்வளவு தூரம் போகிறது என பார்ப்போம் ‘ என்ற தீர்மானத்துடன் அவன் முன்பு அமர்ந்தாள்.

” யாரு போன் பண்ணிருந்தா? “

“உங்க ப்ரண்டு தான்”

” அதான் யாரு “

” அதான் கூட சேந்து ட்ரிப் போறீங்களே அவர் தான் “

“கூட சேந்தா? ஓ குமார் கூப்பிட்டானா “

“இப்போ கூட என்கிட்ட சொல்லனும்னு கொஞ்சம் கூட தோனலைல துருவ் ” என்றவள் எவ்வளவு அடக்க முயன்றும் கண்ணீர் வெளிவர,

“ஹேய்.. என்ன ஆச்சு ஏன் அழுகற ” என்றவன் அவள் கரத்தை பிடிக்க போக பட்டென அதை தட்டி விட்டவள்.

” யூ சீட்.. என்கிட்ட பேசாதீங்க..! உங்களுக்கு நல்லா ஊர் சுத்தனும், கூத்தடிக்கனும்..! அதுக்கு நா எங்க தடையா இருப்பேனோனு இப்படி எல்லாம் நல்லவரு வேஷம் போட்டு நாடகமாடி காரியம் சாதிக்க பாக்கறீங்க. கேவலமா இல்ல உங்களுக்கு? “

” சாத்வி பாத்து பேசு, முழு விஷயம் என்னனு தெரியாம வார்த்தைய விடாத “

” என்ன என்ன இல்ல என்ன தெரியுனும்? எல்லாம் தெரிஞ்சிருச்சு, உங்க வேஷம் எல்லாம் களஞ்சிடுச்சு. இவ்வளவு சிரம்மப்பட்டு என் மேல பாசம் இருக்கற மாறி நீங்க ஒன்னும் நடிக்க தேவை இல்ல. உங்களுக்கு புடிச்சத பண்ணிட்டு நீங்க போய்ட்டே இருக்கலாம் நா ஒன்னும் உங்களுக்கு தடையா இருக்க மாட்டேன் “

தேள் கொடுக்கு போல் அவள்
வார்த்தைகள் அவன் நெஞ்சை குத்தி கிழிக்க அவளின் நாடக காரன் என்ற அழைப்பில் மிகவும் மனம் உடைந்து போனான் துருவ்..!

தன் அன்பை இப்படி கொச்சைப்படுத்திவிட்டாளே என மனம் நொந்தவன் , ” ஆமா டி உன்ன பாத்தாலே எனக்கு புடிக்கல உன்ன விட்டு எப்போ ஓடலாம்னு இருக்கு. போதுமா வயிறு நம்பிருச்சா? இத தானே என் வாயால்ல கேட்கனும்னு ஆசப்பட்ட இப்போ சந்தோசமா? ” என கத்தி விட்டு தட்டை தூர எறிந்து, குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்..!

அவனின் நண்பர்கள் ட்ரிப் பிளான் செய்து அவனை அழைத்தது எனவோ உண்மை தான்..! ஆனால் துருவ்விற்கு அங்கு போக துளி கூட விருப்பம் இல்லை, முதலிலேயே வேண்டாம் என மறுத்தால் விடாமல் நச்சரிப்பார்கள் என அவர்களை பற்றி நன்கறிந்தவன், கடைசி நேரத்தில் ஏதாவது உடல்நிலை காரணம் சொல்லி இருந்து விடலாம் என நினைத்திருந்தான்.

அதை அறியாத சாத்வி அவள் பாட்டிற்கு நெருப்பை அள்ளி வீசுவது போல் வார்த்தைகளை கொட்டி விட்டாள்..!

சொல்லுக்கும் உயிருண்டு.
ஒரு சொல் கொல்லும்..!
ஒரு சொல் வெல்லும்..!
பார்த்து பிரயோகிக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஒரு முறை தவறு செய்தால் மறுமுறை வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த வாய்ப்பு வழங்கப்படாது,

என்பதை நன்கறிந்து அதற்கேற்றால் போல் வாழ்ந்தலே சிறந்த வாழ்க்கை ஆகிறது..!

அப்படி இல்லாதோர்கு சிதைந்த வாழ்கையே அமைகிறது..!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
36
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்