அத்தியாயம் -7
“ம்மா நேத்து அனிதா போட்டு இருந்தாள அந்த மாறி ஜிண்டு போட்டு விடுங்கம்மா” கையில் சீப்புடன் வந்து நின்றாள் நான்காம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருக்கும் குட்டி கண்மணி.
அவசர கதியில் தாளித்து கொண்டிருந்த சுமதி, ” நாளைக்கு போட்டு விடறேன். இன்னிக்கு போய் பக்கத்து வீட்டு ஆயா கிட்டயே தல சீவிக்கோ, போ போ டைம் ஆச்சு ” என அவளை விரட்டி விட, அவரின் கால்களை கட்டி கொண்டு அழுக ஆரம்பித்தாள் கண்மணி.
” ம்ம்மஹ்ம்ம்..அந்த ஆயாட்ட நா போ மாட்டேன், நீயே சீவி விடு. ஆயா நல்லாவே சீவ மாட்டேங்குது. மூஞ்சில எல்லாம் எண்ண வெச்சி விட்டுறுது. அம்மாஆஆ.. நே.. நே.. “
கண்மணியின் அடம் தாங்காமல் அவளின் முதுகில் ஒன்று வைத்து விட்டு கீழே உருண்டு கொண்டிருந்தவளை தூக்கி நிறுத்தி அழகாக ஜிண்டு போட்டு விட்டார் சுமதி..!
“அடம் அடம்.. அப்படியே உன் அப்பா மாறியே ” என்றவர் அவள் தலையில் லேசாக கொட்டு வைக்க, ” அம்மாக்குட்டி என்னோட தொப்பக்குட்டிக்கு பசிக்கி ” என்றவள் உதட்டை பிதுக்க, அந்த மழலை அழகில் சொக்கி போனவர் அவளிற்கு திருஷ்டி கழித்தார்.
காலை இருந்த குதூகளம் மாலை அவள் பள்ளி முடித்து வீட்டிற்கு வரும்பொழுது இல்லை. காரணம் அவளின் தந்தை சுந்தரேசன் வீட்டில் இருந்தார்.
ஹாலில் இருந்த பொருட்கள் எல்லாம் அலங்கோலமாக இருக்க, பொங்கி வந்த கண்ணீரை துடைத்து கொண்டே சுத்தம் செய்து கொண்டிருந்தார் சுமதி. அவளின் தந்தையை பார்த்ததும் உள்ளுக்குள் சிறு நடுக்கம் எடுக்க, பக்கத்து வீட்டு ஆயாவிடம் ஓடிவிட்டாள் கண்மணி.
அவளின் பயத்திற்கு காரணம் அவளின் தந்தையே..! பாதி நாள் சித்தன், மீதி நாள் பித்தன் போல் இருக்கும் அவரின் நடவடிக்கை. இன்னும் புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால், மனுஷனாக இருக்கும் அவர் மதுவை குடித்தால் மட்டும் மிருகமாக மாறி விடுவார்..!
மனைவி மக்களை கொஞ்சி கொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை செய்யும் நல்ல மனிதர் தான். ஆனால் மதுவை அருந்திவிட்டால் அவரை விட கொடிய மிருகத்தை இப்புவிதனில் பார்க்க முடியாது..! சின்ன குழந்தை என்று கூட பார்க்க மாட்டார் சரம்மாறியாக திட்டுகளும் அடியும் விழும்.
காரணமே இல்லாமல் சண்டை போடுவார். எதாவது ஓரு வார்த்தை எதிர்த்தோ இல்லை நியாயமாக பேசிவிட்டாளோ அவ்வளவு தான். ஒரு நாளில் நடந்து முடிக்க வேண்டிய சண்டை ஒரு வாரம் நீளும். வீடே நரகமாகி போகும், அதனாலயே ஏச்சு பேச்சுகளையும் அடியையும் வாங்கி கொண்டு ஒரு வார்த்தை பேச மாட்டார் சுமதி.
ஆனால் இதுவே அடுத்த நாள் போதை தெளிந்துவிட்டால், ஒன்றுமே நடக்காதது போல் வெகு சகஜமாக சந்தோசமாக பேசுவார் சுந்தரேசன். தப்பி தவறி முந்தைய நாள் சண்டையை பற்றி விசாரித்து விட்டோம் எனில் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்ட கதையாகி விடும் சுமதிக்கு.
முதலில் இவரின் நடத்தையை கண்டு பயந்து நடுங்கி அழுதவர், கால போக்கில் அவரின் திருகு புத்தியை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொண்டார். சிரித்தால் சிரிப்பார், சண்டை போட்டால் அமைதியாகி விடுவார். வீட்டிற்கு வீடு வாசப்படி என மனதை தேற்றி கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அக்மார்க் குடும்ப தலைவி சுமதி.
வீட்டை சுத்தம் செய்து விட்டு, கண்மணியை அழைத்து வர பக்கத்து வீட்டுக்கு சென்றார் சுமதி.
“கண்மணி எங்க ஆயா?”
” என்ன சுமதி உன் வீட்டுகாரன் தண்ணிய போட்டு வந்துட்டானா? என்ன டா ஒருவாரமா நல்லா இருக்கானேனு நெனச்சேன். இதோ கிறுக்கு புடிச்சிருச்சுல.. நீ அழுதுட்டு இருந்தியா? புள்ள முன்னாடி அழாத சுமதி. பாவம் உன்ன பாத்து அதுவும் பயந்து போய் ஒரே அழுக. இப்போ தான் சமாதானம் பண்ணி தூங்க வெச்சிருக்கேன், தூக்கிட்டு போ “
மறுநாள் காலை எழுந்த கண்மணி பயந்து பயந்து அறையை விட்டு வெளியே வந்து எட்டி பார்த்தாள்.
” அடடே எ தங்ககுட்டி முழிச்சுருச்சா வாங்க வாங்க ” என்ற சுந்தரேசன் கண்மணியை தூக்கி கொஞ்ச அவரின் கொஞ்சல் பேச்சில் மகிழ்ந்தவள் சிரித்து கொண்டே அவரை கட்டி கொண்டாள்.
என்ன தான் அவர் மீது அளவுகடந்த பயம் இருந்தாலும் அவ்வப்பொழுது இப்படி பாசத்தை பொழிந்து அதை சமன் செய்து விடுவார் சுந்தரேசன். தாயை போலவே அவளும் அவரை அப்படியே ஏற்று கொண்டாள்.
பொதுவாகவே குழந்தைகள் வீட்டு சூழ்நிலைக்கு ஏற்ப தான் வளர்கின்றன.
அப்பா என்றாளே இப்படி தான் இருப்பார் என நினைத்து கொண்ட கண்மணி, அவர் பாசமாக நடந்து கொள்ளும் போது அவளும் திரும்ப பாசத்தை பொழிவாள்.
ஆனால் வளர வளர தான் அவரின் இந்த திருகு புத்தி அவளிற்கு நன்றாக புரிய ஆரம்பித்தது . பள்ளி தோழிகள் சிலர் அவர்களின் தந்தையை பற்றி ஆஹோ ஓஹோ என புகழுரை வாசிக்க, குழந்தை அவளின் மனம் சுந்தரேசனுடன் அவர்களை ஒப்பிட்டு பார்த்தது. எத்தனை நாள் அம்மா அழுவாள், அப்பொழுது அதற்கு எல்லாம் காரணம் அவர் தானே? இது என்ன நியாயம்? பைத்தியம் போல் சண்டையிட்டு அடித்து துன்புறுத்த வேண்டியது, பிறகு ஒன்றுமே நடக்காதது போல் பேச வேண்டியது?அப்படியானால் நானும் என் தாயும் என்ன உணர்வில்லாத ஜடமா?
மெல்ல மெல்ல அவளின் தந்தையை வெறுக்க ஆரம்பித்தாள் கண்மணி..!
அதற்கு இன்னும் தூபம் போடும் விதமாக தான் இருந்தது சுந்தரேசனின் நடவடிகைகள்.
இவ்வளவு நாள் குடித்தால் மட்டுமே சண்டை போடும் அவர். தினம் தினம் சண்டை போட ஆரம்பித்தார். காரணமே இல்லாமல் அடி விழும் சுமதிக்கு, கண்மணிக்கும் சேர்த்தி.
சரியாக பள்ளி கோடை விடுமுறையும் வந்துவிட இரண்டு மாதங்கள் சுமதியின் தாய் வீட்டில் இருந்தாள் கண்மணி. அங்கேயும் குடும்பமாக அமர்ந்து வாக்குவாதம் செய்வது, சுமதி வரும் பொழுது எல்லாம் அவளை திட்டுவது என இருக்க..அதன் காரணம் தெரியாமல் கலங்கி போனாள் கண்மணி.
ஒரு நாள் எதார்த்தமாக, ” பாட்டி இன்னைக்கு எனக்கு பணியாரம் சுட்டு தரீங்களா? ” என அவள் கேட்க,
“ம்ம்க்கும் உன் ஆயாகாரி பண்ணி வெச்ச வேலைக்கு அது ஒன்னு தான் இப்போ கொறச்சல். போ போய் போடறது சாப்பிட்டு விளையாடு போ ” என கடிந்துகொள்ள இரவு வீடு வந்த சுமதியை கட்டிகொண்டு கரைந்தாள் கண்மணி.
“ம்மா நம்ம வீட்டுக்கே போலாம்மா எனக்கு இங்க இருக்கேவே புடிக்கலம்மா”
” கொஞ்ச நாள் தான் கண்மணி பொறுத்துக்கோ..!” என்றார் அவள் தலையை வருடி கொடுத்து கொண்டே.
இங்கு நடக்கும் அனைத்து கலோபரத்திற்கும் காரணம் சுமதியின் விவாகரத்து முடிவு..!
இருவீட்டாருக்கும் அதில் துளியும் சம்மந்தம் இல்லை. சுமதிக்கு நிச்சயம் வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கும் அதனால் தான் விவாகரத்து கேட்கிறாள் என சுமதியின் தாய் வீட்டிற்கு வந்து கத்தி கொண்டிருந்தார் சுந்தரேசன்.
” இந்த சைகோ கூட எல்லாம் என்னால வாழ முடியாது! ” சுமதி திரும்ப கத்தினாள்
இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை முற்றி சுமதியை அவர் தள்ளி விட,
” அம்மாஆஆ ” என கத்தி கொண்டு வந்து அவரை கட்டி கொண்டு கரைந்தாள் கண்மணி.
” வந்துருச்சு பாரு சனியன்..! இது என் புள்ளயானே எனக்கு மொத சந்தேகமா இருக்கு.. சொல்லு டி என் புள்ள தானா” என்றவர் அருகில் இருந்த பிரம்பை வைத்து சுமதியுடன் கண்மணியையும் அடித்தார்.
சுமதியின் தாய் தந்தையருக்கு எங்கே இவள் இங்கேயே அவர்களுடன் இருந்து விடுவாளோ என பயம். அவளை சுந்தரேசனுடன் அனுப்பி வைப்பதிலேயே நோக்கமாக இருந்தனர்.
இரவு கண்மணியின் காயதிற்கு அழுது கொண்டே மருந்து பூசி கொண்டிருந்தார் சுமதி. அவள் வலி தாங்கமால் அழுது கொண்டே, “ம்மா இந்த அப்பா நமக்கு வேணா ம்மா எனக்கு இவர சுத்தமா புடிக்கல..” என்றவள் தாயை இறுக கட்டிகொண்டாள்.
காலை விடியும் முன்னரே கண்மணியை எழுப்பினார் சுமதி.
“ம்மா “
” வா ” என்றவர் அவளை கை பிடித்து அழைத்து செல்ல,
” எங்கம்மா போறோம்? “
“சொல்லறேன் வா..”
அருகில் இருந்த பஸ் ஸ்டாண்டில் போய் பஸ் ஏறி கொண்டனர் தாயும் மகளும்.
கிட்ட தட்ட இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு வந்தடைந்தனர் அந்த ஊரை..!
யாரிடமோ போனில் பேசி கொண்டே ஆட்டோவை பிடித்து ஒரு அட்ரசை சொல்லி ஏறி கொண்டனர். ஒரு வீட்டின் முன்பு நின்றது அந்த ஆட்டோ.
” யார் வீடும்மா இது “
” சொல்லறேன் வா ” பையில் இருந்த சாவியை திறந்து அவள் உள்ளே போக,
“ம்மா இந்த வீடு நல்லா பெருசா அழகா இருக்கே, யார் வீடும்மா ” அவள் நச்சரித்து கொண்டே இருக்க, அவளின் உயரத்திற்கு மண்டி போட்டு அமர்ந்த சுமதி, ” இது தான் இனி நம்ம வீடு. இனி இங்க தான் இருக்க போறோம், இனிமே அப்பா நம்ம வாழ்க்கையில கிடையாது ” என்றார் தீர்கமாக.
மீதி எல்லாம் புரியாவிட்டாலும் அப்பா இல்லை என்ற வாக்கியத்தில் மகிழ்ச்சி அடைந்தவள் தாயை கட்டிகொண்டாள்.
தன்னை புரிந்து கொள்ளாத, தனக்கு உதவி செய்யாத உறவு யாரும் வேண்டாம் என அனைவரையும் உதறிவிட்டு இங்கு வந்துவிட்டாள் சுமதி. ஏற்கனவே வேலை பார்த்து கொண்டிருந்த இடத்தில் தெரிந்த தோழி ஒருத்தி மூலமாக இந்த ஊரில் வீடும் வேலையும் ஏற்படுத்தி கொண்டாள். அது வரை மட்டும் சட்டமாக தாய் வீட்டில் அமர்ந்து இருந்தவள், இன்று சொல்லாமல் கொள்ளாமல் இங்கு வந்துவிட்டாள். அனைத்து லீகல் ஃபார்மாலிட்டிசும் முடிந்து விட, கண்மணியை அருகில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்தாள்.
மூன்று மாதம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை. ஆனால் அன்று கண்மணி பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது புதிதாக ஒரு ஆண் அமர்ந்திருந்தார்.
சுமதியுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார். அவள் உள்ளே வந்ததும், ” ஹேய் குட்டி
வந்துட்டீங்களா? ” என அவள் கன்னதை பிடித்து கிள்ள, பட்டென அவனின் கையை தட்டி விட்டவள் அறைக்குள் போய் அடைந்து கொண்டாள்.
அடிகடி அவன் அவர்களின் வீட்டிற்கு வந்து போய் கொண்டிருக்க, அக்கம் பக்கம் எல்லாம் சுமதி பற்றி கண்மணியின் காது படவே கிசுகிசுக்கித்து கொண்டனர்.
தாயின் இந்த நடவடிக்கை அவளிற்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை, மிகவும் அவமானமாக உணர்ந்தாள். இதற்கு மேல் விட்டால் ஆகாது என சுமதியிடமே நேரடையாக அந்த ஆளை பற்றி கேட்டு விட்டாள். இப்படி ஒரு நாள் வரும் என்று ஏற்கனவே கனித்திருந்த சுமதி,
” அவரு பேரு கணேசன். நா வேலை செய்யற இடத்துல எனக்கு மேலதிகாரியா இருக்காரு. அவருக்கு என்ன புடிச்சி இருக்கு. எனக்கும் அவர புடிச்சி இருக்கு. ரொம்ப நல்லவரு பாவம் இத்தனை வருஷம் எந்த வரனும் செட் ஆகாம இவளோ வருஷம் தனியாவே வாழ்ந்துட்டாரு. அவர நா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். ஏன் கண்மணி எனக்குனு ஒரு வாழ்க்கை அமைச்சிக்க கூடாதா? மித்தவங்க மாறி எனக்கும் சந்தோசமா இருக்கனும்னு ஆசை இருக்காதா? நீ ஒன்னும் சின்ன குழந்த இல்ல, நா சொல்லறது எல்லாம் உனக்கு புரியும்னு நெனைக்கறேன். என்னோட சேத்தி உன்னயும் நல்லா பாத்துப்பாரு உன் அப்பா மாறி இல்ல. ” என்றவர் அவரின் வேலையை பார்க்க சென்று விட தனிமையில் அமர்ந்திருந்தாள் கண்மணி. அழுகை முட்டி கொண்டு வந்தது.
‘உன் அப்பா மாறி இல்ல. ‘ என்னமோ அவள் தான் சுந்தரேசனை உருவாக்கியது போல் பேசுகிறாரே.
அனைவருக்கும் அனைத்தும் புரியும். ஆனால் அதை உணர்ந்து ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்கிறதா என்பதை தான் நாம் முதலில் ஆறாய வேண்டும்..!
அந்த மனப்பக்குவம் என்பது வயதை பொறுத்து அமைவதல்ல, அவரவர் வாழ்க்கை அனுபவத்தை வைத்தே அமைகிறது.
அப்பொழுது குழந்தை பருவத்தில் இருந்து குமரி பருவத்திற்கு வந்த கண்மணிக்கு அவ்வளவு பெரிய விஷயத்தை உள்வாங்கி கொள்ளவே நிறைய கால அவகாசம் தேவைப்பட்டது.
திருமணம் முடிந்து கண்மணியுடன் கணேசனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தாள் சுமதி.
புது வீடு, புது சூழல், புது ஆட்கள் என மிகவும் தடுமாறி போனாள் கண்மணி..! தனிமையும் அழுகையுமே அவளிற்கு துணையாகி போக, உடனிருந்து தேற்றி வழி நடத்த வேண்டிய தாயும் இல்லை. பாதுகாப்பு உணர்வு தர வேண்டிய தகப்பனும் உடன் இல்லை.
அவளை ஸ்கூல் ஹாஸ்டலில் சேர்த்து விட்டனர். மறுப்பேதும் கூறாமல் சேர்ந்து கொண்டாள். ஆனால் அங்கு இருக்க துள்ளி கூட அவளிற்கு விருப்பம் இல்லை. அந்த சட்ட திட்டங்கள் சாப்பாடு என ஒன்றுமே அவளிற்கு ஒத்து போகவில்லை.. சேர்ந்த ஒரே வாரத்தில் கடும் காய்ச்சலில் அவள் அவதிப்பட, இருவரும் வேலைக்கு செல்கிறோம். பார்த்துகொள் ஆள் இல்லை. என கூறி அவளை ஹாஸ்ட்டலிலேயே இருக்க வைத்து விட்டனர்.
முதல் நாள் மட்டும் வந்து பார்த்து விட்டு,
வேளா வேலைக்கு மறக்காமல் மாத்திரையை போட சொல்லிவிட்டு சென்றார் சுமதி. தலையணையே அவளிற்கு துணையாகி போனது.
மெல்ல மெல்ல சுமதியிடம் இருந்து மனதளவில் விலக ஆரம்பித்தாள் கண்மணி.
முழு பரீட்சை முடித்து வீடு வந்தவளிற்கு இன்னொரு அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது.
கணேசனின் தாய் ராக்கம்மா வந்திருந்தாள். பெயருக்கு ஏற்றார் போல் உண்மையிலேயே சரியான ராக்கு தான்.
சுமதி கணேசன் முன்னாள் மட்டும் நல்லவர் போல் வேடமிட்டு அவர்கள் இல்லாத சமயங்களில் கண்மணியை வசைபாடி வேலை வாங்குவதையே முழு நேர பணியாக செய்து வருவார்.
சுமதியை ஏற்று கொண்ட அவரால் கண்மணியை துளியும் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஏதாவுது செய்து அவளை துன்புறுத்திக் கொண்டே இருந்தார்.
” என் கூடவே அவளும் படுத்துகிட்டுமே சுமதி” என சொல்லி அவரின் அறைக்கு கூட்டி சென்று, ” உனக்கு சொகுசு மெத்த கேக்குதோ? கீழ படு டி “
இரவில் வெறும் டைல்ஸ் குளீரூட்ட கை கால் எல்லாம் அவளிற்கு வலித்தது.
காலையில் சிறிது நேரம் அசந்து தூக்கினாள் கூட தொடையிலேயே கிள்ளி வைப்பார்.
வீட்டில் இருக்கும் பொழுது கண்டிப்பாக எல்லா வீட்டு வேலைகளிலும் அவள் உதவி செய்ய வேண்டும்.
” நாளைக்கு கல்யாணம் ஆகி போற புள்ள எல்லாத்தையும் கத்துக்க வேணாமா ” என கூறி சுமதியின் வாயை அடைத்து விடுவார். அவரும் பெரிதாக எதுவும் அலட்டி கொள்ளவில்லை.
எந்த வேலையும் எப்படி செய்ய வேண்டும் என சொல்லியும் தர மாட்டார். தப்பாக செய்தால் திட்டும் அடியும் விழும், சில சமயம் சூடு கூட வைத்து விடுவார்.
பயம் பயம் பயம் உடல் முழுக்க பயம், தாயிடம் இதை சொன்னால் அதற்கும் திட்டு விழுமோ என பயம்..!!
வாய் இருந்தும் ஊமையாகி போனாள் கண்மணி.
பெரியவர்கள் அவர்களின் சுயநலத்திற்கு எடுக்கும் முடிவுல் பாதிக்கபடுவது என்னவோ சிறியவர்கள் தான்..!
அனைவரும் எப்பொழுது விடுமுறை வரும் என ஆவளாக காத்திருக்கும் பொழுது இவள் மட்டும் விடுமுறை வந்தால் அஞ்சி நடுங்குவாள்..!
சக மாணவிகள் அவரவர் குடும்பத்தை பற்றி சொல்லி புகைப்படங்களை காட்டும் பொழுது தனக்கு இப்படி ஒரு குடும்பம் அமையவில்லையே என்ற ஏக்கம் அவள் நெஞ்சை நெருடியது.
தன் குடும்பத்தை பற்றி யாரவது கேட்டு விட்டால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தினாலேயே யாரிடமும் அதிகமாக பேசி கொள்ள மாட்டாள்.
இப்படி கூட்டு புழு போல் கூனி குறுக்கி இருந்த கண்மணி பட்டாம்பூச்சி போல் மாறி வானில் பறக்கும் அந்த நாளும் வந்தது.
பத்தாம் வகுப்பில் இருந்த கண்மணிக்கு அன்று மேத்ஸ் பரீட்சை. காலை உணவை சாப்பிட மெஸ்ஸிற்கு வந்தவளிற்கு எப்படியாவுது நல்ல படியாக தேர்வை எழுதி முடிக்க வேண்டும் என்று படபடப்பாக இருந்தது.
உணவை வாங்கி கொண்டு மேஜையில் அமர்ந்து அவள் சாப்பிட அவள் அருகில் வந்தமர்ந்தான் அபிநந்தன்..! கேன்டீன்னில் வடை சுடும் பாட்டியின் பேரன். பத்து வயதே நிறம்பிய குட்டி பாலகன்.
அவனை பார்த்தவளிற்கு தூக்கி வாரி போட்டது. ஹாஸ்ட்டல் மெஸ்ஸில் இப்படி வெளி ஆட்கள் வந்து சாப்பிட கூடாது..!
அவளின் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுவதால் அவளை ஏதாவது கேள்வி கேட்டு விடுவார்களோ என்ற பயம் மட்டுமே..!
“ஹேய்.. நீ இங்க வந்து சாப்பிடுற? யாராவுது பாத்தா என்ன நினைப்பாங்க?”
“சாப்பிடறேன்னு நெனைப்பாங்க “
அவனின் பதிலில் ஓர் நொடி அதிர்ந்தவள் பிறகு தன்னை சமன் செய்து கொண்டு, வெறு பக்கம் போய் உட்கார்ந்து சாப்பிடலாம் என எழ,
” அக்கோவ் இந்தா இந்த பணத்த புடி பாட்டிக்கு தெரியாம எடுத்தேன். நானே வந்து வாங்கிறேன் பத்திரமா வெச்சிரு சரியா ” என்றவன் அவன் பாட்டிற்கு இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து அவள் பக்கம் வைத்து விட்டு சென்றுவிட்டான்.
அவனின் செய்கையில் முழித்தவள் பிறகு வேறு வழியில்லாமல் அதை எடுத்து பத்திர படுத்தி கொண்டாள்.
பரீட்சையை முடித்து விட்டு அபிநந்தனிற்காக கேன்டீனில் காத்து கொண்டிருந்தாள் கண்மணி.
” என்ன கா இவளோ சீக்கிரம் வந்துட்ட?
சரி இரு இரு அந்த பாட்டி பாத்துற போகுது “
” எதுக்கு காச திருடின? “
” கொடுக்கலைனா நாமளே எடுத்துக்கறது தான்..!”
“அது தப்பு இல்லயா?”
“எது தப்பு? நல்ல துணி வாங்கி கொடுக்கனும்னு நெனைக்கறதா?”
அவனின் கூற்றில் விழித்தவள் மனதில் தோன்றியதை பட்டென கேட்டு விட்டாள்.
“உங்க அம்மாவுக்கா?”
“அம்மாவா? அட போக்கா நீ வேற என் அம்மா நா பொறந்த உடனே என்ன புடிக்காம குப்பதொட்டியில போட்டுட்டு போய்ட்டாங்களாம், பாட்டி தான் என்ன பாத்து எடுத்து அப்போல இருந்து சோறு போட்டு வளத்தறாங்க…! எல்லா காசும் எனக்குன்னே சேத்தி வைக்கும். பாரு அழுக்கு சேலைய கட்டிக்கிட்டு எப்படி இருக்குன்னு? தீவாளி வருதுல்ல, நல்ல துணி போட வேணாமா? சொன்னா கேக்காது அதான் நானே வாங்கிட்டு போலாம்னு முடிவு பண்ணிட்டேன்..”
அவன் சொல்லி விட்டு கிளம்பி வெகு நேரம் ஆகி விட்டது. ஆனால் அவன் வார்த்தையில் சிலை என உறைந்து நின்றாள் கண்மணி. எவ்வளவு சுலபமாக சொல்லி விட்டான். ஆனால் அவன் முகத்தில் கொஞ்சம் கூட கஷ்டத்தின் ரேகை தெரியவில்லையே..! சோகத்தை கூட சிரித்து கொண்டே சொல்கிறான் அது எப்படி சாத்தியம்?
அடுத்த நாளும் அவனை போய் பார்த்தாள் கண்மணி. ஆனால் இந்த முறை எதுவும் பேசி கொள்ளவில்லை. தூரத்தில் இருந்தே அவனை கவனித்து கொண்டிருந்தாள். அவன் பாட்டிக்கு கூட மாட உதவி செய்து கொடுத்துக்கொண்டே அவரை சிரிக்க வைக்கவும் சில சேஷ்டைகள் செய்து கொண்டிருந்தான்.
அப்பொழுது தான் கண்மணிக்கு ஒரு விஷயம் விளங்கியது..! சந்தோஷம் என்பது நம்முள் இருந்து ஜனிக்க வேண்டும், அது பிறர் தயவினாலோ அல்லது மற்ற பொருட்களில் இருந்தோ கிடைப்பது அல்ல..!
அவனால் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்றால் ஏன் தன்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை?
அவளுள் எழுந்த கேள்விக்கு பதிலும் அவள் உள்ளேயே கிடைத்தது.
அவளின் சந்தோஷத்தை தடுத்துக் கொண்டிருந்தது அவளுள் இருந்த பயம்..!
இப்படி நடந்து விடுமோ?அப்படி நடந்து விடுமோ? என்னை இப்படி நினைத்து விடுவார்களோ? அப்படி நினைத்து விடுவார்களோ? என பயந்து பயந்து குழம்பிக் குழம்பி தன் வாழ்க்கைக்கு தானே பூட்டு போட்டு வைத்திருப்பதை உணர்ந்தாள் கண்மணி..!
சிலர் நம் வாழ்வில் நம்மோடு நெடுந்தூரம் பயணிப்பர் ஆனால் அவர்களால் நமக்கு எந்த பயனும் இருக்காது. சிலர் திடீரென வந்து போகும் மின்னல் போல் தான் வருவர், ஆனால் அவர்கள் வந்த நொடி நம் வாழ்க்கையையே பிரகாசமாக்கி விட்டுச்செல்வர். அது போல் தான் அவனை அறியாமலேயே அபிநந்தன் கண்மணிக்கு மிக முக்கியமான வாழ்க்கை பாடத்தை புகட்டி சென்றான்.
பயம்.. வாழ்கை என்னும் வானத்தை அச்சுறுத்தும் கருமேகம் போல். வாழ்கையையே இருட்டில் மூழ்கடித்து விடும்.
தைரியம் நம் கண்ணுக்கு தெரியாத காற்று போல்..! ஆனால் அந்த பலத்தை நாம் பெற்று விட்டோமானால் எந்த விதமான கரு மேகத்தையும் அடித்து துரத்தி விட முடியும்..!