Loading

அத்தியாயம் 5

“அன்புள்ள என்னவனுக்கு…

மழையின் சாரலை ரசித்துக் கொண்டிருந்த எனக்குள் சட்டென்று துளிர் விட்டது ஒரு கவிதை.

சன்னல் கம்பிகளுக்கிடையே பட்டுச் சிதறும்

சூரிய வெளிச்சம் சற்றுக் கண்ணை கூச,

என்னவென்று விழித்தால்

சூரியனே வெட்கப்பட்டு முகில்களுக்கிடையில்

மறைந்து கொண்டான்,

உன் வெற்று மார்பினில் நான் தலைவைத்து தூங்குவதையும்,

ஓர் போர்வையில் இரு மலர்கள் கொடியாய்

பிண்ணி பிணைந்திருப்பதையும் பார்த்து…

ஒவ்வொரு முறையும் என்னுள் வெட்கச் சிரிப்பை பரிசளித்து செல்கிறாயே, என்னவன் நீயாக இருப்பாயோ? தேவநந்தனின் மகனாக?

-காத்திருப்போடு இதழ்”

எப்போதும் போல் அந்த நாளும் விடிந்தது. ஆனால் இதழுக்கோ தன் நண்பன் இல்லாது எதுவும் நகரவில்லை என்ற நிலைமைதான். இப்படியே இருந்தால் அவனின் எண்ணம் அதிகரிக்கும் என்றெண்ணி அலுவலகத்திற்கு கிளம்பத் தயாரானாள்.

அப்பொழுது சரியாக மகிழாழி அழைக்க, “சொல்லு மகி.!” என்றபடியே தயாராக ஆரம்பித்தாள் இதழ்.

“இதழ் கிளம்பிட்டியா?”

“கிளம்பிட்டே இருக்கேன் மகிழ். ஏன்?”

“திகழுக்கு உடம்பு சரியில்லயாம். ஆஃபீஸ் போற வழிலதானே அவ வீடு. போய் பாத்துட்டு போலாமா?”

‘அய்யோ, அது மிலிட்ரி வீடாச்சே. நான் இப்போ அங்க போகலாமா வேண்டாமான்னு தெரியலயே.’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை, அலைபேசியில் இருந்தவள் கலைத்தாள்.

“இதழ், நான் கிளம்பிட்டேன். நீயும் வந்துடு” என்றபடி இணைப்பைத் துண்டித்தாள் மகிழ்.

“ஏய்…ஏய்… வச்சுட்டா… வர வர நம்மள யாருமே மதிக்க மாட்டிங்குறாங்க” என்று புலம்பியபடியே தானும் கிளம்பினாள் இதழ். என்னதான் மனதை ஒருநிலைப்படுத்த முயன்றாலும் அவளின் எண்ணம் முழுவதும் இன்னும் கண்டிராத தேவநந்தன் சொல்லிச் சென்ற அவரின் மகன் மேல்தான் சுற்றிக் கொண்டிருந்தது.

‘இதழ்… இதழ்மா…” என்று பலமுறை இளமாறன் அழைத்ததுக் கூடத் தெரியாமல் அவனைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

“இதழ்மா…” என்று சற்று அழுத்தமாக அழைத்தவுடன்தான் “ஹான், என்னப்பா?” என்று கேட்டாள்.

“என்ன ஆச்சுமா? ஆஃபீஸ்ல ஏதாவது ப்ராப்ளமா?”

“அப்டிலாம் ஒன்னும் இல்லப்பா.”

“உங்கப் பொண்ணு வருங்கால புருசன நினச்சு கனவு கண்டுட்டு இருப்பா? ஆமாதானே இதழ்?” என்று கேட்டவாறே கையில் தோசையுடன் வந்தார் இளம்பிறை.

‘ஆத்தி, இந்தம்மா மட்டும்தான் என்னோட முகத்த வச்சே நான் எதபத்தி யோசிக்குறேன்னு கரெக்ட்டா பாய்ண்ட்ட புடிக்குறாங்க.’ என்று மனதில் வியந்தவள், “அதெல்லாம் ஒன்னும் இல்ல மிஸஸ். இளமாறன். மகிழ் திகழ பாக்கணும்னு சொன்னா. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.”

“திகழ்னா, தேவாவோட பொண்ணுதானே இதழ்மா?” என்று கேட்டார் இளமாறன்.

அவள் ‘ஆம்’ என்பது போல் தலையசைக்க, “அதுக்கு என்ன யோசனை போய்ட்டு வா.” என்றார் இளமாறன்.

“இல்லப்பா, நேத்துதான் அவரு வந்து என்னமோ சொல்லிட்டு போனாரு. அதான், போகலாமா வேண்டாமான்னு எனக்கு தெரியல.” என்று குழப்பத்துடனேயே பதிலளித்தாள் இதழ்.

“இங்க பாரு இதழ். எத பத்தியும் நீ யோசிச்சு மனச குழப்பிக்காத. திகழ், கூட வொர்க் பன்ற பொண்ணு. இப்போ அப்பாவோட ஃப்ரெண்டு பொண்ணும் கூட. அந்த ஒரு விசயத்த மட்டும் நியாபகத்துல வச்சிக்கிட்டு போய் பாத்துட்டு வா. ஓகே? அதுவும் இல்லாம பிரவீன் இல்லாம இப்போவே உன் முகம் பாக்க சகிக்கல. சோ, ஒரு சேன்ஜ்க்கு போய்ட்டு வா.” என்று வாரினார் இளம்பிறை.

“ம்மா…” என்று பல்லைக் கடித்தவள், ஒரு முடிவுடன் திகழின் இல்லம் செல்ல ஆயுத்தமானாள்.

சில்லென்று காற்று சில்லிட வைக்க அதை அனுபவித்தபடியே தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர் இளையாவும் அகிலனும்.

அவர்களை தொலைவில் இருந்து கவனித்தபடியே நடுங்கிக் கொண்டே தானும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தான் பிரவீன்.

“இன்னும் எத்தன நாளைக்கு மறைக்கப் போற?”

“நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்ற வரைக்கும்.”

“எதே? இங்க பாரு அகிலா, அவ பாவம்டா. உன்மேல ஆசைய வளர்த்து வச்சிட்டு சுத்திட்டு இருக்கா. அவள மட்டும் ஏமாத்தனும்னு நினச்ச, மவனே கொன்னு பொதச்சிடுவேன்.” என்று சீறினான் இளையா.

“உன் தங்கச்சின்னா ஒரு நியாயம். இதே மத்த பொண்ணுங்கன்னா ஒரு நியாயமாடா?”

இவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு நேரெதிரேதான் பிரவீனும் நின்றுக் கொண்டிருந்தான்.

‘இவனுங்க எத பத்தி பேசுறானுங்க? ப்ராஜக்ட் விசயமா போறோம்னு வீட்ல சொல்லிட்டு வேற எதையோ பத்தி பேசிட்டு இருக்கானுங்க. வந்ததுல இருந்து இவன் எதையோ யோசிச்சிட்டு இருக்கான். கூட இருக்குறவன பாத்தாலும் சந்தேகமா இருக்கு’ என்று எண்ணிக்கொண்டே தேநீர் அருந்தினான்.

அந்நேரம் இதழின் அன்னை இளம்பிறை ஏற்பாடு செய்த துப்பறிவாளனும் அங்கு வந்து சேர்ந்தான். “பிரவீன், உங்களுக்கு டயர்ட்டே ஆகலயா? கிட்டதட்ட 2 நாள் டிராவல். இன்னும் நாம டிராவல் வேற செய்யணும்.” என்றபடி சோம்பல் முறித்தான் அமுதன்.

பிரவீனுக்கும் அலைச்சல் இருக்கின்றதுதான். ஆனால், இவர்களை கண்காணிக்கும்படி தனக்களித்த வேலையை தவறாது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது.

பனி படர்ந்து மலைகள் அனைத்தும் வெள்ளையாடை போர்த்தியதுபோல் ரம்மியாக காட்சியளிக்கும் அந்த இடத்தில் மன சஞ்சலத்தோடுதான் இருக்கின்றனர் மூவரும்.

“நீங்க போய் ரெஸ்ட் எடுங்க அமுதன். நான் கொஞ்ச நேரம் இங்க இருக்கேன்.” என்றதற்கு தலையசைத்தாலும் அமுதனால் பிரவீனின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

சென்னையில் இருந்து NH4 நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது இளையா மற்றும் அகிலனின் மகிழுந்து. அவர்களை பின்தொடர்ந்து கொண்டிருந்தனர் பிரவீனும் அமுதனும். என்னதான் இளையா இளமாறனின் நெருங்கிய நண்பரின் மகனாக இருந்தாலும் குற்றப் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்த இளம்பிறைக்கு எதையும் அவரே விசாரித்து தெரிந்து கொண்டால்தான் திருப்தி ஏற்படும். அதற்காகத்தான் இந்த ஏற்பாடும். அமுதன் இளம்பிறையோடு ஒரு வழக்கில் பணிபுரிந்த துப்பறிவாளன். ஆகவே அவனிடம் இந்த வேலையை ஒப்படைத்திருந்தார். மகளின் நலனில் தன்னை விட பிரவீன் அதீத அக்கறையோடு இருப்பதால் அவனையும் உடன் அனுப்பி அறிந்து வருமாறு பணித்திருக்கிறார் இளம்பிறை.

“பிரவீன், நான் பார்த்த வரைக்கும் இளையாவும் அகிலனும் ப்ராஜக்ட்டுக்கு போற மாதிரி தெரியல. கண்டிப்பா, வேற விசயமாத்தான் போகணும். அன்ட், இப்போ நாம இவங்க கூட ஒன்னா போகணும் அதுக்கு ஒரு வழி யோசிங்க” என்றபடி அந்த மகிழுந்தை கண்காணித்துக் கொண்டு வந்தான். பிரவீன்தான் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்ததால், சற்றும் யோசிக்காது மாற்றுப் பாதையில் சென்றான்.

சரியாக, குறுக்கு பாதையில் விரைந்த மகிழுந்து நெலப்பட்டுவில் நின்றது. நெல்லூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமப் பகுதிதான் இந்த நெலப்பட்டு கிராமம். அங்கு ஒரு பறவைகள் சரணாலயம் ஒன்று உள்ளது. வேண்டுமென்றே அந்த பாதையில் வண்டியை நிறுத்தினான் பிரவீன். இன்னும் சிறிது நேரத்தில் நிச்சயம் அந்தப்பக்கம் அவர்களின் மகிழுந்து வரும் என்றவனின் கணக்கு தவறவில்லை. அமுதன் தன்னுடைய புகைப்படக் கருவியை எடுத்து சரியாக அவர்கள் வரும் நேரம் அங்கு தூரத்தில் தெரியும் புள்ளி அழகு கூழைக்கிடா பறவையை லென்ஸ் மூலம் பெரிதாக்கி புகைப்படம் எடுக்க ஆரம்பித்தான்.

“இளையா, அங்க பாரேன். உன்ன மாதிரியே ஒருத்தன் நடுரோட்டுல ஃபோட்டோ பிடிச்சிட்டு இருக்கான்டா.”

“போடா, ரசனைக்கெட்டவனே.! இதுலாம் ஒரு வகையான போதைடா. அதுலாம் உனக்கு சொன்னாலும் புரியாது. அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம பேசாம போ.”

“அதெப்டி முடியும். அவங்க அப்டி என்னதான் ஃபோட்டோ எடுக்குறானுங்கன்னு பாக்க வேண்டாம்.” என்றபடி அவர்களின் அருகே வண்டியை நிறுத்தினான் அகிலன்.

புள்ளி அலகு கூழைக்கிடா பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் முக்கியமான இடம்தான் நெலப்பட்டு கிராமம். செங்கடம்ப மரத்தின் அருகில் இரண்டு கிடாக்கள் கொஞ்சும் அழகை நேர்த்தியாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தான் அமுதன்.

அவனின் கண்கள் நோக்கிய திசையில் பார்த்த இளையாவும் மெய்மறந்துதான் போனான். உடனே தன் புகைப்படக்கருவியை எடுத்து, செங்கடம்ப மரத்தின் நான்காவது கிளையில் பெண் கிடா ஒன்று இறக்கையை அடித்துக் கொண்டு கண்களை மூடி அமர்வதையும், தன் நீண்ட அலகால் வலது பக்க இறக்கையின் அடிப்பகுதியை உரசுவதையும், பின் முட்டையிடுவதையும் இன்னும் நேர்த்தியாக படம்பிடித்தான் இளையா. சிறிய சத்தமிட்டாலும் அவை பறந்து சென்றுவிடும். அதனாலேயே நால்வரும் பெரும் அமைதியாக அதனை கண்டு ரசித்தனர்.

“நீங்க வைல்டு லைஃப் ஃபோட்டோகிராஃபர்ரா?” என்றபடியே அவர்களின் அருகில் சென்றான் அகிலன்.

“அப்டிலாம் இல்ல பாஸ். இந்த மாதிரி ப்ளேஸ்ல இந்த வியூ கிடைக்காதுல அதான். நீங்க ஃப்ரொஃபசனல் ஃபோட்டோகிராஃபரா?”

“நான் இல்ல, என் பிரென்ட்தான்.” என்றபடி இளையாவை கைக்காட்டினான் அகிலன்.

தான் எடுத்த புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே வந்தவன் தாய்மையின் உணர்வை வெகுவாக உள்வாங்கினான்.

“பாஸ், நீங்க எடுத்த ஃபோட்டோவ காட்டுங்க” என்று ஒரு ஆர்வத்துடன் கேட்டான் அமுதன். தான் எடுத்ததை அனைவரிடமும் காட்டினான். பார்க்க பார்க்க இரு கண்கள் போதவில்லை என்றொரு உணர்வு.

“நீங்க எடுத்தத காட்டுங்க” என்று இளையா கேட்க, தயக்கத்துடனேயே கொடுத்தான் அமுதன்.

இளையாவின் கண்கள் அவனின் புகைப்படத்தை மெச்சியது. இரண்டு பறவைகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியும், தன் அலகால் மற்றொன்றை கொஞ்சியபடியும் இருக்க, செங்கடம்ப மரத்தின் நிழலில் இரண்டின் தோற்றமும் மதி மயக்கும் அழகாகக் காட்சியளித்த புகைப்படத்தில் காதல் மிளிர்ந்தது.

“உங்களுக்கு நல்ல ரசனை பாஸ்” என்றபடி அவனிடம் புகைப்படக் கருவியை திருப்பிக் கொடுத்தான் இளையபாரதி.

புன்னகையோடு வாங்கிக் கொண்டவன், “கார் ரிப்பேர் பாஸ். நிறுத்துன இடத்துல இந்த மாதிரி ரொமான்டிக் சீன்லாம் கிடைக்குறது அதிசயம். அதான், ஏன் மிஸ் பண்ணணும்னு எடுத்தேன்.”

“எங்க போய்ட்டு இருக்கீங்க?” என்று கேட்டான் அகிலன்.

“லே லடாக் ஜி. இந்த டைம்ல அங்க செமையா இருக்கும்னு என் ஃப்ரெண்ட் சொன்னா. அதான் பாக்கலாம்னு. நீங்க?” என்று பதிலளித்வாறே வினாவும் தொடுத்தான் பிரவீன்.

“நாங்களும் அங்கதான் போறோம். நீங்க எங்க கூட வேணா ஜாய்ண்ட் பண்ணிக்கோங்களேன்” என்று அவர்களை அழைத்தான் இளையா. ஆனால், அகிலனிற்கோ ஏதோ எங்கையோ இடித்தது. கிளம்பிய அரை மணி நேரமாக அந்த மகிழுந்து இவர்களை பின்தொடர்ந்து வந்ததை அகிலன் கவனித்துதான் இருந்தான். தற்போது அவர்களும் லடாக்கிற்கு வருகிறார்கள் என்று சொன்னது அவனிற்குள் ஏதோ எச்சரிக்கை உணர்வை கொடுத்தது. இருந்தும், ஏதும் பேசாமல்தான் இருந்தான். அமுதனும் பிரவீனும் சற்று தயங்கி பின் அவர்களோடு செல்ல தீர்மானிக்க நால்வரின் பயணமும் லே லடாக் நோக்கி தொடங்கியது.

பேச்சும் சிரிப்புமாக அவர்களின் பயணம் தொடங்கியது. “நான் சீனியர் வெப் டெவலப்பர்ரா வொர்க் பன்றேன்.”

“நான் தனியா டிடெக்டிவ் ஏஜென்சி வச்சி இருக்கேன். நீங்க ரெண்டு பேரும்.”

“நான் வைல்ட்டு லைஃப் அன்ட் ஆர்க்கிடெக்சர் ஜேர்னலிஸ்ட். இவன், அப்ராட்ல வொர்க் பன்றான்” என்றதோடு முடித்துக் கொண்டான். பின், பொதுவான விசயங்களோடும் நடுநடுவே சிரிப்புடனும் தொடர்ந்தது.

நால்வரும் மாறி மாறி தான் மகிழுந்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது புகைப்படம் எடுக்கவும் தவறவில்லை.

இரண்டாம் நாள் இரவு ஆக்ராவை வந்தடைந்தனர்.

“பிரவீன், நைட் இங்க ஸ்டே பண்ணிட்டு மார்னிங்க் கிளம்பலாம். நீங்க என்ன சொல்றீங்க.?” மகிழுந்தின் வேகத்தை குறைத்தவாறே கேட்டான் அகிலன்.

“எங்களுக்கும் ஓகே” என்றவாறு நால்வரும் இரவு உணவை முடித்துக்கொண்டு பதிவு செய்த அறையில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், நால்வரில் ஒருவர்கூட உறங்கவில்லை என்பதே உண்மை.

“எனக்கு நேரமாக ஆக பயமா இருக்குடா.”

“இதுலாம் முன்னாடியே யோசிச்சு இருக்கணும். இப்போ வந்து யோசிக்கக் கூடாது.” என்று சீறினான்.

“நான் மட்டும் என்னடா செய்றது? அவள நினச்சாலே எனக்கு பயமா இருக்கு. இவ்ளோ தூரம் அவ என்னை விட்டு வந்து இருப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலடா.” என்று புலம்பியவனை துச்சமாக பார்த்து வைத்தவன் மற்றவன்.

“ஆரம்பத்துல மானே தேனேன்னு நல்லா சுத்துங்க. ஒரு சின்ன சண்டை வந்தாலும் லவ்வே வேணாம்னு போய்டுறீங்க? இதுக்கு ஏன்டா லவ்னு சொல்லிட்டு இருக்கணும்?” உச்சக்கட்ட விரக்தியில் பேசினான். கேட்டுக் கொண்டிருந்தவனோ ஏதும் பேசாமல் தலைகுனிந்தான்.

ஆக்ராவில் அடுத்த நாள் அழகாக விடிந்தது. அப்பொழுது நடந்த உரையாடலைத்தான் நாம் முன்னமே பார்த்தோம். ஆக்ராவின் பனிப்பொழிவு இளையாவிற்கு பழகிய ஒன்றானதால் அவன் அந்த யமுனை நதியை ரசித்துக் கொண்டிருக்க, பிரவீனும் அமுதனும்தான் நடுங்கிக் கொண்டிருந்தனர். அகிலனோ தன்னவளின் நினைவில் காய்ந்து கொண்டிருந்தான்.

‘அடியே இதழ்! உனக்கு கல்யாணம் நடக்க, நான் குளுருல சாக வேண்டியதா இருக்கடி. மவளே, நான் நேர்ல வந்து உன்ன கவனிச்சுக்குறேன். அய்யோ, உச்சில இருந்து உள்ளங்கால் வரைக்கும் எங்கெங்கயோ நடுங்குதே’ என்று நொந்தவாறு நடுங்கும் பற்களுக்கிடையே தேநீரை அருந்தி முடித்தான், பிரவீன்.

நால்வரும் தாஜ்மகாலை கண்டு ரசித்தாலும், ஏனோ, இரண்டு ஜீவன்கள் மட்டும் அதில் லயிக்காமல்தான் இருந்தது. இளையா முழுக்க முழுக்க அந்த யமுனை ஆற்றின் நீரோட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தான். இருந்தாலும், அவன் மனதில் இன்னும் அறிமுகமாகது இருக்கும் அன்னை கூறிய பெண்ணின் நியாபகம் வந்து சென்றது.

‘எனக்கென்று இருக்கும் தேவதையோ அவள்? பெயரையாவது கேட்டுக்கொண்டு வந்திருக்கலாம். இந்த யமுனை ஆறின் சலசலப்பில் என்னுடைய எண்ணங்களின் சஞ்சலம் அதிகம்தான் ஆகிறது. பெண்ணைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டேன். அவள் யார், என்ன பெயர், எப்படி இருப்பாள், என்னைப் புரிந்துக் கொள்வாளா என்ற எண்ணம்தான் என்னை சுற்றி சுற்றி வருகிறது. இதுபோல் சண்டைகள் வந்து அவளும் என்னை விட்டு தூரம் சென்றுவிடுவாளா?’ என்று பலவாறு சிந்தனையில் இருந்தவனை கலைத்தது யமுனையாற்றில் காதல் ஜோடிகளின் ஊடல்.

குளிருக்கு இதமாக நெருப்பு மூட்டிக்கொண்டிருந்த தன் கணவனிடம் பேசிக்கொண்டிருந்தார் அவரின் மனைவி.

“நீங்க இப்டி செய்வீங்கன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பாக்கல மாமா”

“ஏன்மா இந்த விசயத்துக்கு இவ்ளோ டென்சன் ஆகுற? நான் அப்டி என்னதான் செஞ்சேன்?” என்றபடி அவரின் அருகில் அமர்ந்தார்.

“பொது இடம் மாமா இது. கொஞ்சம் தள்ளி உட்காருங்க. எப்பப்பாரு உரசிக்கிட்டு.”

“இந்தாடி கருவாச்சி, என் பொண்டாட்டி பக்கத்துல நான் அப்டிதான் உட்காருவேன். எவன் கேட்பான்.” என்று சிரித்தார்.

“என்ன கிழவனுக்கு வயசு திரும்புதுன்னு நெனப்போ. இப்டிதான் பிள்ளைங்க முன்னாடி கையப் பிடிக்குறீங்க. அவங்க என்ன நினைப்பாங்க.?” என்று சலித்துக் கொண்டவரின் தாடையைப் பிடித்து ஆட்டியவர்,

“இதுக்கு மேலயும் பெரியவங்கள நாம தொந்தரவு செய்யக் கூடாதுன்னு ஒதுங்கி போவாங்கடி என் கருப்பட்டி பொண்டாட்டி” என்றதில் அறுபது வயதிலும் வெட்கம் கன்னக்கதுப்பை சிவக்க வைத்தது.

“சும்மா இருங்க மாமா.” என்று வாய்வார்த்தை மொழிந்தாலும், அவருடன் ஒன்றியே அமர்ந்திருந்தார் அந்த பெண்மணி.

“கருப்பட்டி, நாம லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கல. அதுக்கு அப்ரோம் நானும் லவ் பண்ணலாம்னு உன் பக்கம் வந்தாலே மேடம் ஓடிப்போய்டுவீங்க. அப்ரோம் ஏதோ கரண்டு கட் ஆன புண்ணியத்துல பையனும், பொண்ணும் உபயம். அதுங்களுக்கு ஒரு வாழ்க்கைய அமச்சி கொடுக்க ரெண்டு பேரும் ஓடியாடி இப்போதான்டி ஆற அமர உட்காந்து இருக்கோம். இதுக்கு மேலதான் நாம நிறைய லவ் பண்ணணும். இப்பதான் நம்ம ரெண்டு பேருக்கும் தனிமை ரொம்ப தேவைடி. இப்பப்பாரு என் பொண்டாட்டி வெட்கத்த ரசிக்க எனக்கு எவ்ளோ நேரம் இருக்குதுன்னு. இதுவே பேரன் பேத்தி கூட இருக்குறப்போ இதுலாம் முடியுமா. நீ பதில் ஏதும் பேசாம உன் மாமா மேல இப்டியே சாஞ்சிக்கிட்டு இருடி அது போதும்.” என்று அந்த மோனநிலையை வெகுவாக ரசித்தார் அந்த பெரியவர். அவருடன் சேர்ந்து நம் நாயகன் இளையாவும்.

தற்போது அவனிற்கு ஒன்று நன்றாக விளங்கியது. நம் வாழ்க்கை நெடுந்தூரம் பயணமாக நிச்சயம் நமக்கு ஒரு பிடிப்பு தேவைப்படும். அந்த பிடிப்புதான் திருமணம் என்னும் பந்தம்போல. தற்போது காதல் இல்லையென்றால் என்ன, இதோ தோல் தளர்ந்து, நடை குறைந்து, மனம் நிம்மதியைத் தேடும் தருவாயில் ஒருவர் இப்படி உடனிருந்தால் அதைவிட பெரிய பாக்கியம் என்ன கிடைத்துவிடப் போகிறது.?

“அசைத்து இசைத்தது
வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது
புது ஸ்வரம்தான்

சிரித்த சிரிப்பொலி
சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது
வலம்புரி தான்”

 

தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்