
அத்தியாயம்-27
திடீரெனக் கிடைத்த அவனது ஆர்ப்பரிக்கும் முத்தத்தினை தொடுகையாய் உணர முடியவில்லை என்றாலும் மனதால் உணர்ந்து திகைத்துப் போனாள்.
அவர்களுக்கிடையே அணைப்பே அரிதினும் அரிதாக இருந்த பட்சத்தில் முத்தமெல்லாம் அவள் நினைத்தும் பார்த்திட்டதில்லை. ஆனாலும் அவனது அணைப்பை உணர முடிந்த உவகையில் அவள் கண்களில் மெல்லிய நீர்ப்படலம். தீண்டினால் மட்டும் தான் தீண்டலை உணர இயலுமா என்ன?
“ம..மகி” என்றதும் தான் அவளை விட்டு நீங்கியவன், சின்ன வெட்கச் சிரிப்பைச் சிதறவிட்டான்.
அதில் சிரித்துக் கொண்டவள், “ஹலோ சார்.. வெக்கம் நாங்க படணும்” என்க,
“ஏன் ஆண்களுக்கு வெட்கம் வரக்கூடாதா? உனக்கு வெக்கம்லாம் சுட்டுப் போட்டாலும் வராதுனு எனக்குத் தெரியும். அதனால உனக்கும் சேர்த்து நானே பட்டுக்குறேன்” என்றான்.
அதில் சிரித்துக் கொண்டவள், “சரி இந்தத் திடீர் முத்தத்துக்கு என்ன காரணம்” என்று வினவ,
தானும் சிரித்தபடி “யார் என் பாடிய திருடுனாங்கனு கண்டுபிடிச்சுட்டேன்” என்றான்.
அதில் கண்களை அகல விரித்தவள், “நிஜமாவா? யா..யாரு? எங்க இருக்கு? எப்படி கண்டுபிடிச்ச? சேஃப் தானா?” என்று படபடவெனக் கேள்விகளை எழுப்ப,
“சொல்றேன் சொல்றேன்.. ஆனா நம்ம சபைய கூட்டணும். சீக்கிரமா வரச் சொல்லு. நான் அதுக்குள்ள ஒரு ரௌண்ட்ஸ் அவங்க வீட்டுக்குப் போயிட்டு வரேன்” என்றதோடு மறைந்தான்.
“மறுபடியும் மாநாடா? அய்யோ அவனுங்க என்னைச் சாவடிக்க போறானுங்க. இவன் பொழச்சு வர்றதுக்குள்ள இதுங்கள வச்சு எனக்குப் பாடை கட்டிடுவான் போல” எனப் புலம்பியபடி சிரமத்துடன் மாடியேறினாள்.
மேலே சென்றவள் முதலில் அகாவுக்கு அழைக்க, ‘நீங்கள் தொடர்பு கொண்டுள்ள வாடிக்கையாளர் தற்சமயம் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார்’ என்று பதிவு செய்யபட்ட குரல் ஒலித்தது.
“ம்க்கும்.. அவ யாருகூட தொடர்புல இருக்கானு எனக்குத் தெரியாதா?” என்று புலம்பியவள் துருவனுக்கு அழைத்தாள்.
உடனே அழைப்பு ஏற்கப்பட, “மச்சி நீ பேசாம கல்யாணமே பண்ணிக்காம இரேன்” என்றாளே பார்க்கலாம்.
அதில் திடுக்கிட்டுப் போனவன், “அடியே.. உன் வாய்ல வசம்ப வச்சு தேய்க்க. நல்ல வார்த்தையே பேச மாட்டியா?” என்க,
“நீ தான்டா நான் போட்டதும் கால் எடுத்துடுற” என்றாள்.
“இப்படினு தெரிஞ்சுருந்தா முழு ரிங்கும் முடியுற நேரம் எடுத்துருப்பேன்” என்றவன் “சரி என்ன?” என்க,
“கோச்சுக்காம மாடிக்கு வாங்கடா. மகி மாநாட கூட்ட சொல்லிச் சொன்னான்” என்றாள்.
“அடியே.. உனக்கும் வேலையில்ல அவனுக்கும் வேலையில்ல. கான்பரென்ஸ் போட்டுத் தொலை. சும்மா சும்மாலாம் படியேறி இறங்க முடியாது. இதுக்கு நான் சபரிமலை ஏறினா புண்ணியமாவது கிடைச்சிருக்கும்” என்று அழாத குறையாகக் கூற,
“ப்ளீஸ் மச்சி.. உன்வீட்டு படியவே சபரிமலையா நினைச்சு ஏறு. உனக்குச் சீக்கிரம் நல்லபடியா கல்யாணம் நடக்கும்” என்றாள்.
அவ்வளவே! அதற்குமேல் துருவன் மறுப்பானா? அங்கு விஷ்வேஷின் அறையில் மனையாளை மடியில் அமர்த்தியிருந்தவன், அவள் கன்னம்பற்றி, “ஓய் அத்தை பொண்ணு.. என்னைப் பாருடி” என்றான்.
நாணம் கொண்டு சிரித்தவள், “விடுங்க.. அத்தை கூப்பிட போறாங்க. டிஃபன் பண்ணனும்” என்க,
“அதெல்லாம் கூப்பிடமாட்டாங்க” என்று அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
அவளிடம் மீண்டும் அதே வெட்கப் புன்னகை. அதை ரசித்தபடி மனையாட்டியின் பட்டிதழ்களை சுவைக்க ஆடவன் முன்னேறிய நொடி ‘சட்டி சுட்டதடா.. கை விட்டதடா..’ என்று பாடல் ஒலித்து அவனை ஸடன் பிரேக் அடித்து நிற்க வைத்தது.
“ப்ச்..” என்று கண்களை மூடியவன் பாடலை வைத்தே அது யாரென்று புரிந்துகொண்டு, “ஜான்…” என்று பல்லைக் கடிக்க,
அதில் களுக்கிச் சிரித்தபடி எழுந்த அமிர்தா, கதவுவரை சென்று சட்டெனத் திரும்பி வந்து பச்சென ஒரு இச்சு வைத்துவிட்டு ஓடிவிட்டாள்.
அதில் இன்பமாய் அதிர்ந்தவன், “அய்யோ.. என் பொண்டாட்டியே நல்ல ஃபார்ம்ல இருக்கும்போது இவனுங்க வேற” என்றபடி அழைப்பை ஏற்று, “என்னடா வேணும்” என்க,
“சட்டசபைடா..” என்று “ஈஈ” என்றாள்.
“மறுபடியுமா.. என் வீட்டு மாடியேறியே நான் இளைச்சுடுவேன் போல” என்று புலம்பியவன் “வந்து தொலையிறேன்” என்று மூக்கை சிந்தியபடி வந்தான்.
அடுத்த அழைப்பு மீண்டும் அகாவுக்குப் போக, “நீங்கள் தொடர்பு கொண்டுள்ள வாடிக்கையாளர் தற்சமயம் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார்” என்று அலைப்பேசியில் கேட்டதை துரு கூறினான்.
ஜான் “இவ என்னடா விடிய விடியப் பேசுவா போலயே” என்க,
அங்கு மீண்டும் அழைப்பு வருவதைக் கண்ட அகா, அழைப்பை ஏற்று “என்னடா?” என்று சோர்வாகக் கேட்டாள்.
“அகா.. மேலவா” என்று ஜான் கூற,
“ம்ம்” என்றபடி மேலே வந்தாள்.
யாவரும் வந்திடவே அங்கு வந்த மதி உற்சாகமாக, “பொணத்தை யாரு கடத்தினாங்கனு கண்டுபிடிச்சுட்டேன்டா” என்று கூற,
“டேய் சூப்பர்டா! யாரு கடத்தினது? இப்ப எங்க இருக்கு?” என்று விஷ் வினவினான்.
“இப்ப எங்க இருக்குனு தெர்ல ஆனா கடத்தின களவாணி ரொம்ப டேஞ்சரஸ் போல” என்ற மதி நடந்தவற்றைக் கூறத் துவங்கினான்.
மதி, கிடைத்த துப்பும் பயனற்றுப் போன சோகத்தில் வேந்தன் வீட்டிற்கு செல்ல, அங்கு ஓய்ந்து இடிந்த ஆலமரத்தைப் போலக் குணசேகரன் அமர்ந்திருந்தார்.
“எ.. என் புள்ள உடம்ப கூடக் காப்பாத்த முடியாத பாவியா போயிட்டேனே” என்று அவர் கரகரத்த குரலில் புலம்ப,
அவர் தோள் சாய்ந்து அமர்ந்திருந்த அவரது மனைவி சாரு மேலும் கேவி அழுதார்.
“பெரியப்பா.. கால் எதுமே வரலையா?” என்று பிரபா வினவ,
‘இல்லை’ என்பதுபோல் தலையசைத்தார்.
“என் மருமகனுக்கு இப்படியா ஆகணும். அவன் வேணாமுன்னு சொன்னவ நல்லா இருப்பாளா” என்று ஊர்மிளா கூற,
அவர் அருகே அவரது சாபத்திற்கு உரியவளான அவரது மகள் மேலும் கேவி அழுதாள்.
இதற்குமேல் பொறுமை காக்க வேண்டாமென எண்ணிய பிரபா, “பெரியப்பா.. இது தற்கொலையா இருக்கவே வாய்ப்பில்லை. யாரோ உங்களயோ அண்ணாவையோ பழிவாங்க வேணும்னே பண்ணது” என்று கூற,
அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தவர், “என்ன பிரபா சொல்ற?” என்றார்.
“ஆமா பெரியப்பா..” என்றவன் ரூபாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு, “அண்ணா லவ் பண்ணது ரூபாவைத்தான்” என்க,
யாவரும் அவளை அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தனர்.
“என்னடா சொல்ற?” என்று அதிர்ந்த ஊர்மிளா மகளைப் பார்த்து “அவன வேணாமுன்னு சொன்ன பாவி நீதானாடி? நல்லா இருப்பியாடி நீ? இந்தக் குடும்பம் போட்ட சோத்த தின்னு வளர்ந்த உனக்கு இப்படி செய்ய மனசு எப்படிடி வந்தது” என்று மகளை அடிக்க,
அவரிடம் விரைந்து வந்தவன் அழுதபடி அடிவாங்கியவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டு, “ஏன்னா நாங்க ரெண்டு பேரும் நாலு வருஷமா காதலிக்குறோம்” என்றான்.
மொத்த குடும்பமும் அவர்களை அதிர்ச்சியோடு பார்க்க அந்தக் கூட்டத்தில் இருவரின் பார்வை மட்டும் வேறுபட்டது.
“ஆமா.. நானும் ரூபாவும் நாலு வருஷமா காதலிக்குறோம். அண்ணாக்கு ரூபா மேல ஒரு சின்ன ஈர்ப்பு. எல்லாரும் அண்ணாக்கு ரூபாவை முடிக்கப் பேசினதால் அப்ரோச் பண்ண பேச வந்தபோதே ரூபா மறுத்துட்டா. காரணம் கேட்டப்ப தயங்காம எங்க காதலை சொல்லவும் அண்ணாவும் மரியாதையோடு விலகிக்கிட்டார். அண்ணா நினைச்சிருந்தா முதல்ல காய் நகர்த்தி ரூபாவை கல்யாணம் பண்ண முயற்சி பண்ணிருக்கலாம். தற்கொலைக்கு அவசியமே இல்லை. அதனால இது தற்கொலையா இருக்க வாய்ப்பே இல்லை. ரெண்டு பிணத்தைக் கடத்தினது கூடச் சும்மா ஆர்கன் திருட்டு, கண்டுபிடிக்க முடியாதுனு காவலர்கள் சீக்கிரம் கைய விரிச்சிடுவாங்க என்ற எண்ணத்தில் அந்த எதிராளி செய்ததா தான் இருக்கும். நம்ம குடும்ப பகைக்கு அநியாயமா இன்னொருத்தர் பிணமும் பலியாகக் கூடாது. நம்ம சீக்கிரம் இதைக் கண்டுபிடிக்கணும்” என்று பேசி முடித்தான்.
“நீயாவது என்னைப் பத்தியும் யோசிச்சியே.. ரொம்ப நல்லதுடா ராசா” என்று மதி கூறிக் கொள்ள,
அங்கு ரூபாவின் அழுகையொலி மட்டுமே ஒலித்தது.
“பெரியப்பா..” என்று பிரபா அழைக்க,
“நீ சொல்றது சரிதான் பிரபா. இந்த விஷயம் தெரிஞ்ச யாரோ தான் இதைப் பயன்படுத்தி காய் நகர்த்தி இருக்காங்க. என்னோட பிஸ்னஸ் பகையாளியா இருந்தா எதாவது டிமேன்ட் பண்ணிருக்கணுமே..” என்று யோசித்தார்.
யோசனையில் நேரம் சென்று கொண்டே போக,
“சரி நான் போலீஸ் கிட்ட இதுபத்தி பேசுறேன்” என்று குணா கூறினார்.
யாவரும் அவரவர் அறைக்குச் செல்ல, மீண்டும் ஒவ்வொரு அறையாக மதி உளாவினான்.
அப்போது ஊர்மிளா மற்றும் மாரிமுத்துவின் அறைக்குள் நுழைந்தவன் மனைவி குளியலறை சென்றதை உறுதி செய்து கொண்டு பால்கனி சென்றவர் பரபரப்போடு யாருக்கோ அழைப்பதைக் கண்டு, ‘அந்தப் பையன் லவ் மேட்டர் சொல்லும்போதே இந்தாளு முகம் மாறிச்சுல?’ என்று எண்ணியபடி அவரின் அருகே சென்றான்.
அழைப்பு ஏற்கப்பட்டதும், “டேய் பொணம் பத்திரமா?” என்று இவர் வினவ,
விழிகள் தெறிக்க அவரைப் பார்த்தவன், “அடப்படுபாவி..” என்றான்.
அந்தப்பக்கம் யாரோ, “பத்திரமா தான் இருக்கு சார்” என்க,
ஏதோ கூறவந்து பின்பு யோசித்தவர், “இங்க ஓரளவு நடந்தது தற்கொலை இல்லைனு கண்டுபிடிச்சுட்டாங்கடா. ரெடியா இருங்க. விஷயம் எதும் தெரியுறபோல இருந்தா பொணத்துலருந்து ஆர்கன்ஸ் எடுத்துட்டு எங்கயாவது டிஸ்போஸ் பண்ணிடுங்க. அப்பதான் ஆர்கன் கடத்துற கும்பல்னு நம்புவாங்க” என்று கூறினார்.
கேட்டுக் கொண்டிருந்த மதிக்கு கதி கலங்கியது.
“அடேய்.. உன் குடும்ப பிரச்சினைக்கு நான் என்னடா பண்ணுவேன்? எனக்கு இருக்குறதே ஒரே ஹார்டு ரெண்டே கிட்னி கொஞ்சம் கொடலு (குடல்) லிவரு தான்டா.. அதைப் போய் எடுப்பேன் வைப்பேனுங்குறியே” என்று மதி புலம்புகையில் ஊர்மிளா வர,
அழைப்பைத் துண்டித்துக் கொண்டு உள்ளே சென்றவர் அழும் மனைவியைத் தோளில் தாங்கிச் சமாதானம் செய்தார்.
அனைத்தையும் கூறிமுடித்த மதி, “இது தெரிஞ்ச உடனே தான் உன்கிட்ட வந்து சொன்னேன் ஜானு. அப்றம் தான் அந்த ஃபோன் போட்டவன் யாருனு கண்டுபிடிக்கத் திரும்பப் போய் அவன் ஃபோன்ல செக் பண்ணி நம்பர் நோட் பண்ணிட்டு வந்தேன்” என்று இலக்கங்களைக் கூறினான்.
“உடனே நான் இந்த லொகேஷன கண்டுபிடிக்குறேன். நம்ம போய் ரெண்டு பாடியையும் கொண்டு வந்துடலாம்” என்று விஷ் கூற,
“இல்ல விஷ். அது ரிஸ்க். அவன் ரொம்ப டேஞ்சரா இருப்பான். மருமகனையே கொலை பண்ணுமளவு யோசிச்சவன் பொணத்தை அவ்வளவு சுலபமா தப்ப விடமாட்டான். நீ லொகேஷன கண்டுபிடி மத்தத நான் பார்த்துக்குறேன்” என்று மதி கூறினான்.
