Loading

அத்தியாயம் – 21 : தாள் புகாதோ நேசத்தின் வாசம்?

“எது மாமா போதும்? எது போதும்?” என்று அவன் மேலும் மேலும் கேட்டுக் கொண்டு அவரை நெருங்க, அமரேந்தரோ அவன் முகத்தை நேராய் பார்க்க இயலாது தலை குனிந்தார்.

“ப்ரதாப்.. அ.. அது..” அவனது கோபத்திலேயே அமரேந்தரின் வார்த்தைகள் தந்தி அடித்தன!

“சரி மாமா.. நீங்க சொல்லற மாதிரி நான் இதுவரைக்கும் செஞ்சது போதும். சரி இதுக்கப்பறம் இனி என்ன செய்யறது நான்?’ என்று அவன் கேட்க, முயன்று வருவித்துக் கொண்ட தைரியத்தில் அவனிடம் சொல்ல வந்ததை சொல்லியே தீர வேண்டும் என்ற உறுதியில் எச்சிலைக் கூட்டிக் கொண்டு பேச்சைத் துவங்கினார்.

“ப்ரதாப்.. நான் போதும்னு சொல்லறது உன்னோட நல்லதுக்காகத் தான். இத்தனை நாளா நான் ரொம்ப ரொம்ப சுயநலவாதியா தான் இருந்திருக்கேன்.

நான் எதைப் போதும் சொல்லறேன் உனக்கு நல்லாவே புரியுது. இந்த யுத்தத்தை ஆரம்பிச்சது நீ தான். நான் இல்லைன்னு மறுக்கல.

ஆனா எனக்கு இந்தக் காளிக்ஷேத்ரா மேல இருக்கற அக்கறையைக் காட்டிலும் உன் மேல இருக்கற அகக்கறை அதிகம்.

அதனால இங்கிருந்து நீ போய்டு. இறுதி யுத்தத்துக்காக நாம எல்லாரும் தயாராகிட்டோம். அதுக்கான முன்னெடுப்பும் நீ எடுத்துட்ட.

இனி எலி பொறிக்குள்ள மாட்டறதுக்காக நாம காத்திருக்கணும். அதை நாங்க பார்த்துக்கறோம்..” என்று கூற, அவரை நோக்கி ஆத்திரம் பொங்கத் திரும்பினான் ருத்ரன்.

“நீங்க பார்த்துக்கறீங்கன்னா? என்ன சொல்ல வரீங்க மாமா?” என்றான் குரலில் அழுத்தம் கூட்டி.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்ட அமரேந்தரோ ஒரு முடிவுக்கு வந்தவராகப் பேசத் துவங்கினார்.

“பாரு ப்ரதாப். இது உன் ஊரு தான். இங்க ஒரு அநியாயம் நடந்தா தட்டிக் கேட்க வேண்டியது உன்னோட பொறுப்பு தான்.

ஆனா.. அது உன்னோட வேலை மட்டுமே இல்ல. அது இங்க இருக்கற ஒவ்வொருத்தனோட பொறுப்பும் கூட.

நீ இதுவரைக்கும் இந்த ஊருக்கும், இங்க இருக்கற ஜனங்களுக்கும் செஞ்சது போதும். இனி நீ உன் வாழ்க்கையைப் பார்த்துக்கோ!” என்று ஒரு மூச்சாக அவர் கூற, அவர் கூறாமல் விட்டது இன்னும் ஏதோவொன்று இருக்கிறது என்பதை கண்டுகொண்ட ருத்ரனோ, தன் பார்வையின் அழுத்தத்தைக் கூட்டினானே தவிர வேறொன்றும் பேசவில்லை.

அவனது பார்வையின் வீச்சில், மனதில் கிடந்ததெல்லாம் கொட்டிவிடத் தான் தோன்றியது அமரேந்தருக்கும்.

“ஒரே மூச்சா சொல்லிடறேன் ப்ரதாப். உன்னோட வாழ்க்கை வீணாகறதை நான் பார்க்க விரும்பல. உனக்கு அந்தப் பொண்ணு அக்னியை பிடிச்சிருக்கு. முன்னாடி எனக்கு அதுல விருப்பம் இல்லை தான்.

ஆனா இது உன் வாழ்க்கை!.. இவ்வளவு பெரிய ஊரை ராஜா மாதிரி ஆண்டுட்டு இருக்க. உன்னோட முடிவுகள் எப்பவுமே சரியா தான் இருந்துருக்கு. இனியும் சரியா தான் இருக்கும்.

அதனால இப்போ உன் வாழ்க்கை அக்னியோடன்னு நீ முடிவு செய்துட்டா அது எனக்கும் சந்தோசம் தான்.

அதனால நீ அக்னியைக் கூட்டிட்டு எங்கயாவது போய்டு ப்ரதாப்.

உங்க ரெண்டு பேருக்கும் இந்த ஊர் வேண்டாம்.. இந்த நாடு வேண்டாம்..

வேற எங்கயாவது கண்காணாத இடத்துக்குப் போய் சந்தோஷமா உங்க வாழ்க்கையை.. உங்களுக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிங்க.” என்று அவர் கூறி முடிக்க, அவரைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் ருத்ரன்.

அவனது இந்தக் கேலிச் சிரிப்பைப் பார்த்ததும் குழம்பினார் அமரேந்தர்.

அவர் அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ருத்ரன் பேச்சைத் துவங்கினான்.

“ஹா.. ஹா.. மாமா? என்ன சொன்னீங்க? அக்னியை.. அக்னியை கூட்டிட்டு கண்காணாத இடத்துக்குப் போயிடறதா?” என்று கூறியவன் மீண்டும் அடக்க மாட்டாமல் நகைத்தான்.

“ஹையோ மாமா.. உங்களுக்கு இன்னும் அக்னியைப் பத்தி தெரியலையே..

அவ என்னை எப்படியாவது போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துடனும்னு தானே இங்க வந்திருக்கா? அவளை எப்படி மாமா நான் இழுத்துட்டு ஓட முடியும்?

அதுவும், இந்த நாட்டுக்காகத் தன் உயிரையே கொடுக்கக் கூடிய அளவுக்கு தியாகி மாமா அவ. அவளுக்கு எல்லாத்தையும் விடவும் இந்த நாடு தான் முக்கியம்.

இந்த நாட்டை விட்டுட்டு வான்னு நான் கூப்பிட்டா, அவ ருத்ரகாளியா மாறிடுவா!

அதை விடுங்க.. இந்த விஷயம் மட்டும் அவ காதுல விழுந்தாலே போதும், உங்களை பார்வையாலேயே எரிச்சுடுவா மாமா..” என்றவன் மீண்டும் சிரித்து..

“எனக்கு புரியுது மாமா, உங்க அக்கறை! எஸ் நீங்க சொன்ன மாதிரி என்னோட முடிவுகள் என்னைக்குமே தப்பா போனது இல்ல. ஏன்னா என்னோட உள்ளுணர்வு சொல்லற பேச்சைக் கேட்டு வாழறவன் நான்.

நீங்க அன்னைக்கு சொன்னீங்க..

‘பிரதாப்! எல்லாரையும் போல நாமளும் இவனுங்க செய்யற அக்கிரமங்களை தலை குனிஞ்சு ஏத்துக்கிட்டா, இந்த காளிக்க்ஷேத்திரா சுடுகாடா மாறிடும்.

இவனுங்களோட ஆயுதம் பயம்! இனி அந்த ஆயுதத்தை நாம கைல எடுக்கணும்’னு.

அப்போ என் உள்ளுணர்வு உங்க பேச்சைக் கேட்க சொல்லுச்சு.

ஆயுதமா பயத்தை மட்டுமில்ல, அதிகாரத்தையும் சேர்த்து எடுத்துக்க சொல்லுச்சு.

நான் என் உள்ளுணர்வை நம்பறவன் மாமா. அதனால தான் நான் எடுக்கற முடிவுகள் எல்லாமே ஜெய்க்குது, ஜெயிக்கும்!

இப்போ என்னோட உள்ளுணர்வு என்ன சொல்லுதுன்னா.. இந்த ஊருக்காக உயிரைக் கொடுக்க சொல்லுது.

ஆமா மாமா.. என்னோட வாழ்க்கை முழுக்க முழுக்க காளிக்ஷேத்ராவுக்கு அர்ப்பணமானது தான்.” என்ற அவனது பேச்சில், இந்தக் கடைசி வாக்கியத்தைக் கேட்டதும் பதட்டத்துடன் இடையிட முயன்றார் அமரேந்தர்.

அதைக் கை நீட்டித் தடுத்தவன்,

“நான் பேசி முடிச்சுடறேன் மாமா.

நான் அக்கினியைக் காதலிக்கறதால, என் வாழ்க்கைக்காக என்னை அக்னி கூட இந்த நாட்டை விட்டே வேற எங்கயாவது போக சொல்லறீங்க.

இங்க என்னோட நேசம்ங்கறது, தாழம்பூ வாசத்தை சுமந்து வர பூந்தென்றல் மாமா.

ஆனா அந்த நேசம் அவளுக்குப் புரியாது. ஏன்னா.. அவ மனச இந்த நாட்டுப்பற்றுன்ற கதவால இறுக்கமா பூட்டியிருக்கறா.

நான் வேகமா தட்டித் தட்டி அவளோட மனக்கதவை உடைக்க விரும்பல. உடைக்கவும் கூடாது.

எனக்காக.. என் நேச வாசத்துக்காக அந்தப் பூங்கதவுகள் தானாவே தாள் திறவணும்.

அது திறக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு இல்ல மாமா.

ஆனா அவளோட முழு முழுசான காதல் எனக்குக் கிடைக்காதுன்றதுக்காகவே மட்டும் நான் காளிக்ஷேத்திராவைத் தேர்ந்தெடுக்கல.

எனக்கு மனைவியாகப் போறவ, என்னை மாதிரியே இந்த ஊரை நேசிக்கறவளா இருக்கணும்.

மத்தபடி அவ எனக்கு எவ்வளவு இஷ்டமானவளா இருந்தாலும், இந்த காளிக்ஷேத்திராவை வேண்டாம்னு சொல்லறவ.. இந்த மக்களோட வலி புரியாதவ.. எனக்கு மனைவியா இருக்க முடியாது.” என்றவன் பேச்சு முடிந்தது என்பதைப் போல தன் பைக்கை நோக்கிக் செல்ல, அமரேந்தரோ ருத்ரனின் வாழ்க்கையை எண்ணி ஆழ்கவலைக்குச் சென்றார்.

ஆனாலும் அவனது தாய்க்காகவாவது அவன் இந்த ஊரைவிட்டுக் சென்று வேறு எங்காவது உயிருடன் வாழலாமே என்ற ஆதங்கத்தில்..

“பிரதாப்..” என்று அவனை மீண்டும் அவர் அழைக்க, அவரை நோக்கித் திரும்பியவனோ..

“வேண்டாம் மாமா.. இதுக்கு மேல எந்த விவாதமும் வேண்டாம். நீங்க தானே சொன்னீங்க? என்னோட முடிவுகள் எப்பவும் சரியானதா இருக்கும்னு?

இப்பவும் அதே போல சரியாவே இருக்கும்னு நம்புங்க.” என்றுவிட்டு அவன் தனது பைக்கை எடுத்துக் கொண்டு வீடு நோக்கிச் செல்ல, அமரேந்தரோ அதே இடத்தில் சிலையாய் நின்றார்.

மனதெல்லாம் மாமனின் பேச்சுகளே நிறைந்திருக்க, அவர் கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்து, ருத்ரனின் இதழில் சிரிப்பைத் தோற்றுவித்தது.

“எந்த நம்பிக்கைல, அக்னி என்கூட வருவான்னு சொன்னாரு இந்த மனுஷன்?” என்று தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டவன், தலையை இடவலமாக ஆட்டி மீண்டும் சிரித்துக் கொண்டான்.

அவன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அதே வேளையில், தனது அறையில் ருத்ரனின் பேச்சுகளையே எண்ணி பயத்தில் உறைந்து போயிருந்த அக்னியோ, பலகட்ட யோசனைக்குப் பிறகு மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு ஓர் இறுதி முடிவுக்கு வந்திருந்தாள்!

மெல்லத் தனது படுக்கையிலிருந்து எழுந்தவள், நேரே ருத்ரனின் அறைக்குத் தான் சென்றாள்.

அந்த இரவு நேரத்தில் சுற்றிலும் எந்த வேலைக்காரர்களும் இல்லை. எனவே மனதின் தைரியத்தைக் கூட்டி அவள் அந்த அறைக்குச் சென்றாள்.

என்ன தான் இறுதி முடிவு எடுத்த போதிலும் கூட, மனதுக்குள் தப்பு செய்வது போல் ஓர் உணர்வு!

தடதடக்கும் நெஞ்சத்துள் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிக்கொள்ளாதது ஒன்று தான் பாக்கி.

பாரமாய் கனத்த கால்களை மெல்ல எடுத்து வைத்து அவனது அறையிலிருந்த தொலைபேசியை எடுத்தாள்.

அந்தத் தொலைபேசி ருத்ரன் மட்டுமே பயன்படுத்துவது. சில முக்கியக் காரணங்களுக்காக, அந்த ஊரில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளின் தொலைபேசிகள் மட்டுமே இணைபில் இருக்கும்.

அதில் ருத்ரன், அமரேந்தர், மருத்துவர் ஆண்டனி, அர்ஜுன், இன்னும் சில முக்கியஸ்தர்கள் அடக்கம்.

அந்த விவரம் முன்னரே அக்னிக்குத் தெரியும். இது போன்றதொரு முக்கியமான தருணத்திற்காக அவளுக்கு வெகு சமீபமாய் தான் அந்த விஷயம் கற்றுத் தரப் பட்டிருந்தது.

அவளுக்குக் கற்பிக்கப் பட்டிருந்தபடியே அந்தத் தொலைபேசியின் ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தவள், அதை இயக்க, மறுமுனையின் இணைப்பு அடுத்த நொடியில் ஏற்கப்பட்டது.

அதில் இவளுக்கு இதயம் தாறுமாறாகத் துடிக்க.. மறுமுனைக்கோ, சந்தோஷத்தில் இதயம் துடிக்கும் வேகம் கூடியது.

அதிலும் அவள் கூறிய விஷயத்தைக் கேட்டதும் மறுமுனைக்கோ ஆழ்ந்த நிம்மதி. பெரும் மகிழ்ச்சி. அக்னிக்கு பதில் கூறக் கூடத் தோன்றாமல் அவன் இணைப்பைத் துண்டித்துவிட, அக்னிக்கு இதயத்தின் பாரம் தாள முடியாது கனத்தது.

போனின் ரிசீவரை இவள் தாங்கியில் வைக்க, அதே கணம் அவளுக்குப் பின்னிருந்து..

“அட! இதென்ன இன்னைக்கு முழுக்க என் வாழ்க்கைல நடக்கறதெல்லாம் அதிசயத்திலும் அதிசயமா இல்ல இருக்கு?” என்ற ருத்ரனின் குதூகலக் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள் பெண்ணவள்.

அதிர்ச்சியில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, அவன் தான் பேசியதைக் கேட்டிருப்பனோ? கேட்டிருந்தால் இவ்வளவு சாதாரணமாக பேசுவானா? இல்லை ஒன்றுமே கேட்கவில்லையோ? என்றெல்லாம் திணறிக் கொண்டிருந்தவளைக் கண்களில் கூர்மையுடன் பார்த்த ருத்ரனோ..

“போன் பேசிட்டு இருந்தியா?” என்றான் அதே சாதாரணக் குரலில்.

தூக்கிவாரிப்போட விலுக்கென நிமிர்ந்தாள் அக்னி.

தலையெல்லாம் கிறுகிறுக்க, தொண்டையெல்லாம் அடைத்துக் கொள்ள, பேய்விழி விழித்தபடி அவனை அவள் பார்க்க, அவனோ மெல்ல நெருங்கி வந்தான் அவளிடத்தில்.

என்ன சொல்லி சமாளிப்பது என்று நெஞ்சுக்குள் டைம்பாமைக் கட்டியபடி நின்றிருந்தவளுக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது.

அதற்குள் அவளை நெருங்கிவிட்டிருந்தவன், பார்வையாலேயே அவளை விசாரணை செய்ய.. அக்னியோ தான் கண்ட உபயத்தில்..

“இ.. இல்ல ருத்ரன். இந்தக் கை.. கை தான் கொஞ்சம் இன்னமும் வலியா இருக்கு. அ.. அதனால தான் ஆண்டனி சாருக்கு போன் பண்ணி சொல்லலாம்னு நினச்சேன்.

நீங்க அன்னைக்கு இதுல உங்க மாமாகிட்ட பேசினதைப் பார்த்தேன். அதனால தான் இன்னைக்கு வலி அதிகமானதும், சரி நானே கூப்டு அவர்கிட்ட சொல்லிடலாம்னு நினச்சேன்.” என்கவும் அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“சரி.. கைல பெயின் கில்லர் இருக்கா? இல்ல நான் போய் வாங்கிட்டு வரட்டுமா?” என்று அவன் மீண்டும் வெளியே செல்லக் கிளம்ப, அவனது கையைப் பற்றாது, சட்டையை மட்டும் பிடித்தவள்..

“இ.. இல்ல.. நீங்க மறுபடியும் வெளில போக வேண்டாம். என்கிட்டே மெடிசின் இருக்கு.” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் விறுவிறுவென தனது அறைக்கு ஓடினாள்.

செல்லும் அவளையே பார்த்திருந்த ருத்ரனுக்கு நெஞ்சுக்குள் சுருக்கென்று ஒரு வலி பிறந்தது.

தனதறைக்கு வந்தவளோ படுக்கையில் விழுந்து குமுறிக் குமுறி அழுதாள். இரவெல்லாம் தூங்காது அழுகையிலேயே கரைந்தாள்!

மறுநாள் காலையில் மணி பத்தான பிறகும் கூட அக்னியின் அறைக்கதவு திறக்கப்படவில்லை.

இரவெல்லாம் அழுதழுது சோர்ந்தவள், விடியலில் தான் கண்கள் மூடினாள்.

அவள் அறைக்கதவு இன்னமும் திறக்கப்படாததைக் கவனித்தபடி தன் அறையிலிருந்து வெளியே வந்த ருத்ரனோ, நேராக கீழே இருக்கும் சமையலறைக்குச் சென்று காபியை எடுத்துக் கொண்டு அவளது அறைக்கு வந்தான்.

அவன் கதவைத் தட்டிய சத்தத்தில் தான் அக்னிக்கு உறக்கமே கலைந்தது.

இரவெல்லாம் அழுததில் அவள் கண்களும், முகமும் மொத்தமாய் வீங்கியிருந்தது.

அதைக் கூட உணராமல் இன்னமும் தூக்கக் கலக்கத்திலேயே எழுந்து சென்று கதவைத் திறந்தாள் அவள்.

கலைந்த கேசமும், சிவந்து வீங்கிய இமைகளும், புஸ்ஸென உப்பிய முகமுமாக வந்து நின்றவளைப் பார்த்ததுமே ருத்ரனுக்குத் தெரிந்துவிட்டது.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், அவள் அழுகையைப் பற்றி எந்தவித கேள்வியும் கேட்காது, காபியை அவள் முன்பாக நீட்டினான்.

“காபி குடிச்சுட்டு சீக்கிரம் கிளம்பி வா.. டாக்டர்கிட்ட போகலாம்.” என்றதும் திக்கென்றது அவளுக்கு.

வார்த்தைகள் வராமல் தடுமாறியபடியே, “எ.. எதுக்கு?” என்றிவள் கேட்க, ருத்ரனோ வெகு சாதாரணமாக..

“நேத்து தான் உடம்பு முடியலைன்னு சொன்ன இல்ல? அதுக்காகத் தான்.” என்று கூறிவிட்டு வெளியேற, அக்னிக்கோ நெஞ்சம் பிசைந்தது!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்