Loading

அத்தியாயம் – 2

அவன் தன்னைக் அப்படி வம்படியாகப் பிடித்து வரவும் உள்ளூர கொலைவெறி உண்டானது மணிக்கு.

‘இவன் யாரு இத்தனை பேருக்கு மத்தில என்ன கைய பிடிச்சு இழுத்துட்டு வரது?’ என்ற கடுப்பில் தான் அவள் அத்தனையாய் திமிறியது.

ஆனால் காருக்குள் அவளைத் தள்ளி.. அவன் அவளுக்கு சீட்பெல்ட் அணிவித்து விடுகையில், அந்த அவசரத்திலும் அவள் மீது தன் கை தவறான நோக்கத்தில் பட்டுவிடாதபடி கவனத்துடன் அவன் செயல்பட.. சற்றே கண்களில் மின்மினி பறந்தது மணிக்கு.

ஆனாலும் கோபத்தை இழுத்துப் பிடித்தபடி அவனை முறைக்கத் தான் செய்தாள் பெண்!

வீடு செல்லும் வரையில் மணியும் சரி.. ராகவும் சரி.. எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

ஆனால் அவர்கள் விட்ட உஷ்ணப் பெருமூச்சில் அந்த காருக்குள் ஒரு குட்டி எரிமலையே உருவாக்கியிருந்தது.

வீட்டின் வாசலில் காரை நிறுத்தியவன், அங்கிருந்து வேலையாளிடம் கார் சாவியை வீசிவிட்டு.. மணியின் கையைப் பிடித்து இழுத்தபடி வீட்டுக்குள் செல்ல, அங்கே கூடத்திலேயே அமர்ந்திருந்தார் பாட்டி அழகுமணி.

ஆம் அவரது பெயரைத் தான் நம் நாயகிக்கும் வைத்திருந்தார்கள்!.

உள்ளே வந்த ராகவைக் காணவும்.. “டேய்.. ராகவ் கண்ணா.. எவ்வளவு நாளாச்சு உன்ன பார்த்து? எத்தன நாள் உன்ன நான் வீட்டுக்கு வரச் சொல்லி கேட்டுகிட்டே இருந்தேன்.. இப்ப தான் உனக்கு இங்க வர நேரம் கிடைச்சுதா?” என்றவர், அவனுக்குப் பின்னால் சுளித்த முகத்துடன் வந்து கொண்டிருந்த மணியைப் பார்த்து..

“அட.! இது என்ன உலகத்துல இல்லாத மகா அதிசயம்?

நீயும் மணியும் சேர்ந்து வந்து இருக்கீங்க.. என்னடா என்ன விஷயம்?” என்று அவர் சந்தோஷமாகக் கேட்க, ராகவ் கண்களிலோ கோபச் சிவப்பு!

“பாட்டி.. என்ன பேத்தி வளர்த்து வச்சு இருக்கீங்க?

இவ என்னோட விஷயத்துல ஓவரா தலையிடுறா.. இவள ஒழுக்கமா அடங்கி இருக்க சொல்லுங்க.. என் வாழ்க்கைல தலையிடறதுக்கும், என் வாழ்க்கைய கெடுக்கவும் இவளுக்கு என்ன உரிமை இருக்கு?” என்று அவன் சீற.. அவனைக் கைகட்டி பார்த்திருந்தார் அழகுமணி பாட்டி.

பாட்டி அவனுக்குப் பதில் பேச வாயைத் திறக்கும் முன்பாக.. அந்த வீடே அதிரும்படி மாடிப்படியில் தடதடவென இறங்கி வந்தான், மணியின் அண்ணன்.. அதிரூப சுந்தரன் மானபரன்!!

“இது என்ன வீடா? இல்ல சந்த கடையா? யார் இங்க என் வீட்டுக்குள்ள வந்து கத்திட்டு இருக்கிறது?” என்று கீழே வந்தவன், ராகவை சண்டைக் கோழியாய் முறைத்தபடி கேட்க, ராகவோ..

“இது உன் வீடு மட்டும் இல்ல.. இன்னும் என் பாட்டி பேர்ல தான் இருக்கு.. என் பட்டி வீட்டுக்கு நான் வர எவனையும் பெர்மிஷன் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்ல..

அதுவும்.. இந்த வீட்ட ஓசில அனுபவிச்சுட்டு இருக்க உன்கிட்ட கேட்க வேண்டிய அவசியம் இல்ல..” என்று கூற.. மானபரனுக்கோ உச்சி மண்டையில் தீ வைத்தது போலானது!

“டேய்.. யார பார்த்து.. என்ன வார்த்த பேசற?” என்று இவன் ராகவின் சட்டையைப் பிடிக்க.. அவனோ..

“என் சட்டைய பிடிக்கற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா?” என்று மானபரனை அடிக்க.. இருவரும் பள்ளி மாணவர்களைப் போல கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொண்டனர்.

அதை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட பாட்டியோ..

“டேய்.. என்னடா இன்னமும் சின்னப்புள்ளைங்க மாதிரி சண்ட போட்டுட்டு இருக்கீங்க?” என்று அவர்களை விலக்கிவிட முயன்று கொண்டிருந்தார்.

அதே வேளையில் மணியோ.. ‘அப்பாடா.. இவனுங்க சண்டைல என்ன மறந்துட்டானுங்க..’ என்று மனதுக்குள் நிம்மதியுற்றவள்.. சமையலறையில் இருந்த வேலையாளை சைகையால் அழைத்து..

“ஒரு காபி வேணும்..” என்றாள் சைகையிலேயே!

அவர் யாருடைய கவனத்தையம் கவராதபடி மெல்ல வந்து இவளுக்கு காபியைக் கொடுத்துவிட்டுச் செல்ல.. அதை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது எதேச்சையாக பாட்டியின் பார்வை அவள் மேல் படிய..

“அடிக்கழுத.. இங்க உன் அண்ணனும்.. உன் மாமன் பையனும் ரத்தம் வர அளவுக்கு அடிச்சுகிட்டு இருக்கானுங்க.. நீ அவனுங்கள விலக்கி விடாம, ஹாயா உட்கார்ந்து காபி குடிச்சுட்டு இருக்க?” என்று அவளது முதுகிலே இரண்டு அடி போட்டார்.

“பாட்டி.. இவனுங்க கொழுப்பெடுத்துப் போய் காரணமே இல்லாம சண்டை போட்டா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?

இவனுங்க எல்லாம் ஒரு ஆளுங்கன்னு நான் இவனுங்க போடற சண்டைய வேற பிரிச்சு விடணுமா?

என்னால அதெல்லாம் முடியாது..

இவனுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் பாலமா இருக்கணுமாக்கும்?” என்று அலட்சியமாகக் கூறியவள், மீண்டும் தனது கவனத்தை காபியின் பக்கம் திருப்பினாள்.

அப்பொழுது தான் பாட்டிக்கு ஒரு சிறு பொறி மனதினுள் விழ, நொடி நேரத்தில்.. அந்தப் பொறி, காட்டுத் தீயாக வளர.. சட்டென ஒரு முடிவெடுத்தவர்.. தனது மகனுக்கு அழைத்தார்.

“டேய் பாலாஜி.. நீயும் உன் பொண்டாட்டியும், இப்ப உடனே எங்க வீட்டுக்கு வாங்க..” என்று அவர் கூற.. அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் ராகவின் தந்தை பாலாஜியும், தாய் தேவிகாவும் அந்த வீட்டில் இருந்தனர்.

உள்ளே வந்தவர்கள், அங்கே இன்னமும் ராகவும், மானபரனும் கட்டி உருண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்க.. தலையில் அடித்துக் கொண்டு அவர்களிடம் வந்தார்கள்.

“என்னடா இன்னும் சின்ன பசங்க மாதிரி இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க?” என்றபடி பாலாஜி அவர்கள் இருவரையும் விலக்கி விட, தேவிகாவோ மணியைப் பார்த்து இடுப்பில் கைவைத்து முறைத்தார்.

“என்னங்க மேடம்.. என்னமோ டிவில சினிமா ஹீரோஸ் சண்டை போடுற மாதிரி பாத்து என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்க?

அவங்க உன் மாமா பையனும்.. உன்னோட அண்ணனும் தான? அவங்கள நீ போய் விலக்கி விட மாட்டியா?” என்று கேட்க.. சற்று கோபமாக அவரை முறைத்தாள் மணி.

“என்னத்த நீங்களும், இந்த பாட்டியும் ஒரே மாதிரி பேசுறீங்க?

இவனுங்க இன்னுமும் ஸ்கூல் போற பசங்க மாதிரி சண்டை போட்டுட்டு இருப்பானுங்க.. இதுக்கு நடுவுல நான் வேற போய் தடுக்கணுமா?

எத்தன நாள் ரெண்டு பேரும் சேர்ந்துட்டு என்ன அழவச்சிருப்பாங்க? இன்னமும் அப்படித் தானே பண்ணிட்டு இருக்காங்க?

அப்போ எல்லாம் யாராவது வந்தீங்களா.. ஏன்டா இந்த பச்சை குழந்தையை அழ வைக்கிறீங்கன்னு?

இப்போ மட்டும் இந்த தடிமாடுங்க சண்டை போட்டுட்டு இருக்கறதுக்குள்ள போய் நான் தடுக்கணுமா?” என்று அவள் கேட்க அவளது கன்னத்தை செல்லமாகப் பிடித்துக் கிள்ளினார் தேவிகா.

“அவங்க ரெண்டு பேரும் உன்கிட்ட விளையாடுறாங்கடீ.. அதனால தான் அப்படி பண்றாங்க.

ஆனா இப்போ இவங்க சண்டை போடறது அப்படியா?” என்று சற்று சோகமாக கேட்க, அழகுமணியும் அதே சோக முகத்துடன்.. “ஆமாமா உங்க பையன் அடிவாங்குறான்.. அதனால உங்களுக்கு அக்கறை.

அதே உங்க பையன்கிட்ட நான் அடி வாங்கும் போது என்னைக்காவது இந்த அக்கறை வந்திருக்கா? இப்ப கூட பாருங்க நான் ஹோட்டல்ல என் ப்ரண்ட்ஸ் கூட உட்கார்ந்து பேசிட்டு இருந்தேன்.

அங்க என்ன பார்த்தவன் திடீருன்னு அங்க இருந்து என்ன தர தரன்னு வீட்டுக்கு இழுத்துட்டு வந்துருக்கான்..

என் கைய பாருங்க அவன் பிடிச்சதுல எப்படி சிவந்து போய் இருக்குன்னு..” என்று தனது கையைத் தூக்கிக் காண்பிக்க, ராகவ் இறுக்கப் பிடித்ததில் அவளது இடது கை கன்றிப் போய் இருந்தது.

அதைப் பார்த்ததும் தேவிகாவுக்கு சட்டென சிரிப்பு தான் வந்தது !

“அடியேய் என் செல்ல மருமகளே.. நீ எப்போடி என் வீட்டுக்கு வரப்போற?” என்று மருமகளின் தாடையைப் பிடித்து ஆசையாகக் கொஞ்சினார் அவர்.

அவருக்கு எப்பொழுதுமே மணியையும், மானபரனையும் ரொம்பவும் பிடிக்கும்.

அவர்கள் தாயாரும் கூட தேவகியின் சிறு வயது தோழியே!

மணி பிறந்ததுமே தன் மருமகள் அவள் தான் என்று மனதுக்குள் குறித்தவரும் அவர் தான்.

இப்பொழுதும் அதே ஆசையுடன் அவர் கூற.. மணியோ..

“ஹ்ம்ம்.. உங்க வீட்டுக்கு யார் வருவாங்க? அதுவும் அந்த வளந்தாமண்டி இருக்கற வீட்டுக்கு..” என அவள் நொடித்துக் கொள்ள.. தேவகியோ வாய்விட்டு சிரித்துக் கொண்டாள்.

ஒரு வழியாக பாலாஜியின் முயற்சியால் மானபரன் – ராகவின் சண்டை முடிவுக்கு வர, அவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டியோ..

அதிரடியாக, “நான் இப்போ ஒரு முக்கியமான முடிவு எடுத்திருக்கேன்..” என்று திடமான குரலில் கூற.. மற்ற அனைவரும்..

“இது என்ன புதுசா?” என்று யோசித்தனர்.

ராகவ் மட்டும்..

“என்ன முடிவு? நாங்க சண்டை போட்டத பார்த்து.. இனிமே நாங்க ரெண்டு பேரும் சண்டையே போடக் கூடாது.. ஒத்துமையா இருக்கணும்னு சத்தியம் கித்தியம் வாங்கப் போறீங்களா?

வெரி சாரி.. நான் அப்படியெல்லாம் சத்தியம் பண்றதா இல்ல..” என்று படு நக்கலாய் அவன் கூற, மானபரனோ அவனைப் பார்த்து பல்லைக் கடித்தான்.

ஆனால் அவனை ஒரு நேர்பார்வையுடன் பார்த்திருந்த பாட்டியோ.. தனது குரலைச் செருமி கொண்டு..

“நான் அப்படி சின்னப்புள்ளத் தனமா எல்லாம் சொல்ல மாட்டேன்..” என்றவர்.. சின்னவர்கள் மூவரையும் கூர் நோக்காய் பார்த்து கூறிய விஷயத்தில் அந்த மூவருக்குமே இதயம் ஒரு நொடி நின்றது!

அதிலும் மணிக்கோ.. மயக்கமே வந்தது!!

“பாட்டி.. நீ என்ன தண்ணி கிண்ணி அடிச்சிருக்கியா?” என்று மணி கோபமாகக் கேட்க, பாட்டியோ..

“ஏய்.. யார்கிட்ட என்ன பேசறதுன்னு இல்ல? நான் உன் பாட்டிடீ..” என்று சீற, மணியோ,

“பின்ன.. நீ சொன்ன விஷயம் மட்டும் சரியா?

நான் போய் இவன கல்யாணம் பண்ணிக்கணுமா?

அத விட எங்க ரெண்டு பேருக்கும் பிறக்கற குழந்தைய இதோ.. இவன்.. இந்த மானபரன் மடில உட்கார வச்சு காது குத்தணுமா?

அதுக்கு அப்பறம் தான் உங்க பேர்ல இருக்கற சொத்தெல்லாம் எங்க மூணு பேருக்கும் பிரிச்சு கொடுப்பீங்களா?” என்று அவள் கேட்க.. பாட்டியோ, அவ்வளவு அழுத்தமாய் முறைத்திருந்தார்.

அதற்குள் மானபரனோ..

“பாட்டி.. நீங்க ரொம்ப மாடர்ன்னு நினச்சேன்.. ஆனா.. நீங்க ஒரு பூமர்னு எனக்கு இப்போ தான் தெரியுது..” என்று அவன் கூற, சரேலென அவன் புறம் தன் பார்வையைத் திருப்பிய பாட்டியோ..

“சில பூமர் பேரக் குழந்தைங்களுக்காக நானும் பூமரா தான் நடந்துக்க வேண்டி இருக்கு..” என்று கூறினார் ஆத்திரம் பொங்க!

அதற்கு மேல் அங்கே பேரன்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

மார்பின் குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டபடி ஒருவரை ஒருவர் முறைப்பதை மட்டும் முழுநேர வேலையாக அவர்கள் செய்து கொண்டிருக்க.. மணி மட்டும் தான் பாட்டியிடம் மட்டுமல்லாது.. தன் மாமாவிடமும், அத்தையிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“பாட்டி.. எனக்கு சொத்தே வேணாம்.. நான் படிச்ச படிப்பே போதும் எனக்கு சோறு போட..” என்று அவள் கூற, அவளைப் பார்த்து முறைத்த பாட்டியோ..

“அப்போ நீ என்ன மறந்துடு..” என்று இறுகிய குரலில் உரைத்தார்.

அதில் நெஞ்சமெல்லாம் வலித்தது பெண்ணுக்கு!

அவளது பன்னிரண்டாவது வயதில் அவளுடைய தந்தை சிவநேசனும், தாய் சரிதாவும் ஒரு விபத்தில் இறந்துவிட.. அதற்கு பிறகு தனது பேரப்பிள்ளைகளுடன் வந்து தங்கி அவர்களைப் பார்த்துக் கொண்டார்கள் பாட்டி அழகுமணியும், தாத்தா மானபரனும்.

ஆம்.. தாய், தந்தையின் பெயரைத் தான் சரிதா, தன் மக்களுக்கு வைத்திருந்தார்.

அன்றிலிருந்து அத்தனையிலும் மணிக்கு துணையாகிப் போனார் பாட்டி.

உடலாலும், உள்ளத்தாலும் வளர்ந்த பொழுது.. தாய்க்குத் தாயாய்.. தந்தைக்குத் தந்தையாய்.. தோழிக்குத் தோழியாய் இருந்து அவளை வழிநடத்தியவர் இந்தப் பாட்டி தான்.

அவர் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வரவும்..

“என்ன பாட்டி நீங்க..” என்று உடைந்த குரலில் கூறியவள், தன் மாமாவிடமும், அத்தையிடமும் திரும்பினாள்.

“பிடிக்காத ஒருத்தங்கள எப்படி கல்யாணம் செய்துக்க முடியும்? கடைசில உங்க பையனோட வாழ்க்கை தான் வீணாகும்..” என்று அவள் கூற, பாலாஜியும், தேவகியுமோ..

“பெரியவங்க பேச்ச மீறி எங்களுக்குப் பழக்கமில்லை..” என்று முகம் திருப்பிக்கொள்ள.. “ஹையோ” என்று வந்தது மணிக்கு.

சோபாவில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டவள்..

“நீங்க என்ன தான் சொன்னாலும், இதுக்கு நாங்க மூனு பேருமே சம்மதிக்க மாட்டோம்..” என்று பிடிவாதக் குரலில் அவள் கூற, அதற்கு மாறாய்..

“ஆனா.. நான் சம்மதிப்பேன்..” என்றபடி மெல்ல நடந்து வந்து, மணியின் அருகே அமர்ந்து அவள் தோளில் கைபோட்டுச் சிரித்தான் ராகவ்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்