Loading

நள்ளிரவு இரண்டு மணி போல பேருந்து கொடைகானலை அடைந்தது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் மனித நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. பின்னே, இவள் வந்து சேர்ந்த நேரம் அப்படி நள்ளிரவு இரண்டு மணி அந்த நேரத்தில் யார் இருப்பார்கள் ? தன் லக்கேஜ் அனைத்தையும் எடுத்து கொண்டு பஸ்சை விட்டு இறங்கினாள்.

 

இறங்கியவுடன் தன் அப்பாவைத் தான் முதலில் தேடியது அவளது கண்கள். அவர் கூறிய வசனம் அப்படி, வினுமதி கோவையில் பஸ் ஏறும்போதே அப்பாவிடம் கூறிவிட்டாள். நான் அங்கு இரவு ஒரு மணிக்கு எல்லாம் வந்து விடுவேன் என்று. ஒரு மணி என்றால் தான் அவர் ஒன்றரை மணிக்காவது வந்து நிற்பார் என கணித்து இவள் கூற, அதற்கு அவருடைய பதிலைக் கேட்டால் 

தான் தாங்க முடியாது. ” நீ வா டா தங்கம் நான் அங்க பேய் வாக்கிங் போற டைமான பண்ணெண்டு மணிக்கு வந்து நிக்கறேன் என்றவரின் ஆள் அட்ரஸ்சை காணாது தவித்தாள் வினுமதி. 

 

தன் அப்பாவிற்கு போன் செய்ய எடுக்கவில்லை என்றதும் முதலில் சாதாரணமாக “அப்பா வேலையாக இருப்பார்” என எடுத்து கொண்டவள். மீண்டும் மீண்டும் அழைத்தும் எடுக்காததால் சற்று அவளுக்கு முகம் சுருங்கியது. ஏனென்றால், நள்ளிரவு இரண்டு மணிக்கு தனியாக ஆள் அரவமே இல்லாத பேருந்து நிலையத்தில் தனியாக நிற்பது என்பது எவ்வளவு கிலி தட்ட கூடிய விசயம் என்று அங்கே தனியாக நின்று பார்த்தால் தான் தெரியும் . பல முறை போன் செய்தும் அப்பா போன் எடுக்காததால் தன் அக்கா பிரியாவிற்கு தான் முதலில் போன் செய்யலாம் என்று நினைத்தாள். பின் அவள் அலங்காரத்தில் பிஸியாக இருப்பாள் என தன் தாய்யிற்கு அழைத்தாள் ஆனால், ஒருவரும் எடுக்க வில்லை இவளது அழைப்பை. பிரியாவின் போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. அவர்கள் அங்கே இருக்கும் நிலைமை அறியாது இவள் ஆள் மாற்றி ஆள் போன் செய்து கொண்டிருந்தாள். இவள் மட்டும் பாவம் என்ன செய்வாள். இவள் நிற்கும் நிலைமை அப்படி.

 

இதற்கு மேல் இவர்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை என்று, 

 

“வினு உனக்கு இன்னிக்கு ‘நடராஜ சர்வீஸ்’ தான்” என தனக்கு தானே முடிவு செய்து கூறிகொண்டாள். சரி இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் மண்டபம் இருக்கிறது என பார்ப்பதற்காக போனில் அக்கா அனுப்பிய மண்டப விலாசத்தை கூகிளில் போட்டு லோகேஷனைத் தேடினாள். அங்கு இருந்து இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் மண்டபம் இருப்பதாக காட்டியது கூகிள். இவளுக்கு சற்று தலை சுற்றவே , 

 

“என்னாது ரெண்டு கிலோமீட்டர் ஆ , அய்யயோ நடக்க முடியாது டா சாமி, யாராச்சும் கண்ல பட்டா முதல் டவுன் பஸ் எத்தன மணிக்குன்னு கேக்கலாம்” என 

சுற்றும் முற்றும் கடைகள் ஏதாவது கண்ணில் தென்படுகிறதா என்பதை தேடினாள். அவளின் நல்ல நேரம் சிறிது தூரத்திலேயே ஒரு டீக்கடை அந்த நேரத்திலும் திறந்து இருந்தது. அங்கு சென்று கேக்கலாம் என தன் லக்கேஜ் அனைத்தையும் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு போனாள்.

 

“அண்ணே, இங்க டவுன் பஸ் எப்போ வரும்?”

 

“காலைல ஆறு மணிக்கு தான் மா முதல் டவுன் பஸ்”

 

“எதே ஆறு மணிக்கு தானா?”

 

“ஆமா கண்ணு, பக்கமா இருந்தா நடந்து போயிரு ஏன்னா மொத பஸ் அப்போ தான் நீ எங்க போகனும், ரொம்ப தூரமா போகணுமா?”

 

“லக்ஷ்மி மண்டபத்துக்கு”

 

“அதுவா அது ரெண்டு கிலோமீட்டர் வருமே”

 

“ஆமா அண்ணா அதுக்கு தான் யோசிக்கறேன் “

 

“பேசாம இன்னும் கொஞ்ச நேரத்துல ஆட்டோ வரும் அத பிடிச்சு போயிரு”

 

“அதுவும் சரி தான், அது வரைக்கும் ஏன் சும்மா இருக்கணும் ஒரு டீ போடுங்க அண்ணா”

என சொல்லிவிட்டு பெஞ்சில் அமர்ந்தாள் வினு.

 

டீ குடித்து முடிப்பதற்கும், ஆட்டோ வருவதற்கும் சரியாக இருந்தது. ஆட்டோக்கார அண்ணனிடம், 

“லக்ஷ்மி மண்டபம் போங்க” என்று ஏறி அமர்ந்தாள்.

 

                          ***

 

மண்டபத்தில் ஏதோ சலசலப்பு கேட்பதை அறிந்து சந்திரனின் பெற்றோர் அறையிலிருந்து வெளி வந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் வினுமதியின் பெற்றோருக்கு பயங்கரமாக வியர்க்க தொடங்கியது. கண்கள் கலங்கி இருவரும் நின்றனர்.

 

” என்னாச்சு சம்மந்தி , ஏன் இப்படி பேய் அறைஞ்ச மாதிரி நிக்கறிங்க? நாங்க எல்லாம் குளிச்சு ரெடி ஆகிட்டோம், நீங்க ஏன் இன்னும் கிளம்பாம என்ன பண்றீங்க? என் மருமக எங்க ?”

 

இவர் கேட்ட அனைத்து கேள்வியிற்கும் அவர்களின் பதில் கண்ணீர் ஆக மட்டுமே இருந்தது.

 

” என்னாச்சு சம்மந்தி ஏன் இப்படி அழுதுட்டு இருக்கிங்க?”

 

” எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சம்மந்தி , எங்கள பெரிய மனசு பண்ணி மன்னிச்சிருங்க சம்மந்தி”

 

“நீங்க மொதல்ல ரூம்குள்ள வாங்க” என அவரைக் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றார் சந்திரனின் அப்பா.

 

இப்பொழுது ரூமின் உள்ளே சந்திரனின் பெற்றோர், பிரியாவின் பெற்றோர் என நால்வர் மட்டுமே இருந்தனர்.

 

” உக்காருங்க , பொறுமையா சொல்லுங்க இப்போ என்ன ஆச்சு?”

 

“தப்பு பண்ணிட்டோம் சம்மந்தி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ற பிள்ளைய தான் இத்தன வருஷம் சோறு போட்டு வளத்திருக்கேன்னு நினைக்கும் போது என் வயிறு எல்லாம் பத்தி எரியுது சம்மந்தி”

 

இவர் இவ்வாறு புலம்ப புலம்ப ஏதோ கொஞ்சம் கொஞ்சம் அவருக்கு விளங்கியது.

 

“முழுசா என்னன்னு தெளிவா சொல்லுங்க சம்மந்தி, அப்போ தான என்னனு முடிவு பண்ண முடியும்”

 

” பிரியா லெட்டர் எழுதி வெச்சுட்டு ஓடி போயிட்டா சம்மந்தி”

 

இருவருக்கும் தூக்கி வாரி போட்டது. சந்திரனின் அம்மாவிற்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால் சந்திரனின் அப்பாவிற்கோ கோபம் தலைக்கேறியது.

 

” என்னன்னு எழுதி வெச்சுட்டு போயிருக்கா உங்க அருமை பொண்ணு பிரியா?” என முகத்தில் அனல் தெறிக்க கடுங்கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டார்.

 

“மாப்பிள்ளைய பிடிக்கலைன்னு எழுதி வெச்சுட்டு போயிருக்கா சம்மந்தி”

 

“சந்திரன் பத்தின எல்லாம் விசயமும் முன்னாடியே சொன்னிங்களா?”

 

“சொன்னோம் சம்மந்தி”

 

“என்ன சொன்னீங்க ?”

 

“மாப்பிள்ளையோட பிஸ்னஸ் , படிப்பு, பழக்க வழக்கம், எங்க படிச்சாரு, எப்படி பட்டவர்ன்னு சொன்னோம் சம்மந்தி”

 

“அப்போ அதை சொல்லல”

 

“எது சம்மந்தி?”

 

“சொல்ல வேண்டியது சொல்லல , அப்படி தான?”

 

இரு விநாடிகள் அமைதி காத்தவர், 

“இல்லை சம்மந்தி சொல்லல”

இப்பொழுது கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

 

“உங்ககிட்ட எவ்ளோ தூரம் படிச்சு படிச்சு சொன்னேன் இந்த விசயத்தை சொல்லிருங்க, சொல்லிருங்கன்னு எத்தன தடவை சொன்னேன், நான் கேட்டப்பெல்லாம் சொல்லிட்டேன் சொல்லிட்டேன்னு சொன்னீங்க, போதாத குறைக்கு பொண்ணுக்கு பையன ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க, அதெல்லாம் அப்போ பொய்யா”

 

“இல்ல சம்மந்தி பிரியா ஃபோட்டோ பாத்து பிடிச்சிருக்குன்னு தான் சொன்னா, அதுக்கு அப்பறம் தான் நாங்க இவளோ ஸ்டெப் எடுத்தோம்.”

 

” முதல அனுப்பின போட்டோவா,இல்ல ரெண்டாவது அனுப்பின போட்டோவா?”

 

“ரெண்டாவது அனுப்பின போட்டோ மட்டும் தான் காட்டினோம் சம்மந்தி”

 

“அப்போ தப்பு அந்த பொண்ணு மேல இல்ல உங்க மேல தான், உங்க சுயநலத்துக்காக அந்த பொண்ணு மேல பழி போடாதிங்க”

 

“அப்படி எல்லாம் இல்ல சம்மந்தி”

 

“பின்ன எப்படி ? செஞ்ச தப்பு எல்லாம் நீங்க, உங்க கடன் தீரணும் அப்டின்னு ஒரே காரணத்துக்காக எந்த விவரமும் சொல்லாம கல்யாணம் வரைக்கும் கூட்டிட்டு வந்துருகிங்க இத என்னன்னு சொல்றது”

 

இதற்கு ராமசாமியிடம் எந்த பதிலும் இல்லாமல் ,கண்கள் முழுக்க கண்ணீரைத் தேக்கி வைத்திருந்தார்.

 

“அம்மா சாந்தா நீயாச்சும் இத பத்தி சொல்லிருக்கலாம்ல”

 

“எனக்கும் தெரியாது அண்ணா, பிரியாக்கிட்ட எல்லா விவரமும் சொல்லிட்டேன்னு சொன்னாருங்கண்ணா “

 

“நான் பண்ணது தப்பு தான், பெரிய தப்பு தான், சுயநலத்துக்காக பண்ணிட்டேன் அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க நான் பண்றேன்”

 

“எனக்கு என் பையன் கல்யாணம் குறிச்ச தேதியில நடந்தே ஆகனும், என் பையன் ஏற்கனவே மனசொடிஞ்சு போயிருக்கான் , இந்த நாலு வருஷம் அவன் மிஷன் மாதிரி தான் வாழ்ந்துட்டு தான் இருக்கான், இந்த கல்யாணம் மூலம் தான் அவனுக்கு இன்னொரு வாழ்க்கை கிடைக்க போகுதுன்னு நான் எனக்குள்ள பெரிய மனக்கோட்டை கட்டி வெச்சிருக்கேன், என் கனவு எல்லாம் பெரிய விசயம் இல்லை, ஆனா என் பையன் மனசுல என்ன இருந்துச்சுன்னு தெரில , கல்யாணமே வேணாம் வேணாம்னு சொன்னவன், இந்த தடவை தான் நாங்க கெஞ்சி கேட்டு ஒத்துகிட்டான் . இந்த தடவையும் நடக்காம போச்சு அவன் எப்பவுமே கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான். இது தான் எனக்கு கிடைச்ச கடைசி வாய்ப்பு , நம்ம வாழ்க்கைல நமக்கு சந்தோசம் வேணும்னா சில விசயத்துல சுயநலமா இருந்து தான் ஆகனும் , உங்களுக்கு தெரியாதா மிஸ்டர் ராமசாமி எப்படி சுயநலமா இருக்கணும்னு , சோ இப்போ நான் அப்படி தான் இருக்க போறேன். என்ன பண்ணுவீங்க ஏது பண்ணுவிங்கன்னு எனக்கு தெரியாது . என் பையனுக்கு கல்யாணம் இன்னிக்கு நடக்கணும் அவ்ளோ தான்” என பேசி முடித்தவர் தன் மனைவி பார்வதியையும் அழைத்து கொண்டு விறுவிறுவென ரூமை விட்டு வெளியேறினார் சந்திரனின் அப்பா ராஜன்.

 

 

என்ன செய்வது ஏது செய்வது என்பது பற்றி சிறிதும் அறியாமல் கதிகலங்கி நின்றனர் ராமசாமியும் , சாந்தாவும்.

 

சாந்தாவிற்கு அழுகை பீறிட்டு கொண்டு வந்தது.

“கடவுளே நாங்க என்ன பாவம் பண்ணினோம், எங்கள ஏன் இப்டி ஒரு இக்கட்டான நிலமைல கொண்டு வந்து வெச்சுருக்க” என தேம்பி தேம்பி அழுதவர்,

 

“எங்கள காப்பாத்த யாரு வருவா?”

 

“அம்மா நான் வந்துட்டேன்” என உள்ளே நுழைந்தாள் வினுமதி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்