Loading

மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர்ந்த அமரேந்தர், பிரம்மை பிடித்தது போல அப்படியே அமர்ந்திருந்தார்.

அவர் காதுகளுக்குள், “ருத்ரன்னா நெருப்பு! அவன் மேல யாரும் இரக்கப்படக் கூடாது..” என்று அவன் கூறியது எதிரொளித்துக் கொண்டே இருந்தது.

அக்னி மீதான அவனது காதல், அவனது உள்ளத்தைக் கனிய வைத்துவிட்டது என்று தான் நினைத்திருந்தார் அவர். ஆனால் அவன் கனிவெல்லாம் அக்னியிடம் மட்டும் தான் என்று ஒற்றை வார்த்தையை.. ஒற்றைப் பார்வையில் புரியவைத்து விட்டானே அவன்?!

அதில் சற்று கர்வமும் பிறந்தது அவருக்கு!

‘என் பிரதாப், பெண் வாசம் பட்டதும் உருகிக் குழையற களிமண்ணு கிடையாது..

அவன் கற்பூர ஜோதி!

அவன் தீயின் வாசம்!

அவன் எரிமலையின் தாகம்!

அவனுக்குள்ளிருக்கற அந்த நெருப்பு.. அதோட சூடு என்னென்னைக்கும் அவனை விட்டுப் போகாது..’ என்று மிதப்பாக எண்ணிக் கொண்டார்.

ஆனாலும் நிதர்சனம் மருட்டியது அவருக்கு. இதுநாள் வரை ருத்ரனின் மூலமாக, இந்தக் காளிக்ஷேத்திராவின் விடுதலையை மட்டுமே கணக்கிட்டிருந்தவர், இனி ருத்ரனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் யோசிக்க ஆரம்பித்தார்.

அந்த நினைவலைகளிலேயே மிதந்து கொண்டிருந்தவருக்குக் காளிக்ஷேத்ரா கூடச் சற்று பின்னுக்குச் சென்றுவிட, இரண்டு நாட்கள் பூட்டிய வீட்டுக்குள் தனித்தே கிடந்தார் அவர்.

ஊண், உறக்கம் பாராது விட்டத்தை வெறித்த பார்வையில் கவலை மேகங்களே அதிகம் தளும்பியிருந்தன!

இரண்டாம் நாள் இரவு, அவரது வீட்டுக் கதவு படபடவெனத் தட்டப்பட்டது.

சிரித்து நேரம் வரைக்கும் அதைக் கூட உணராமலேயே தனது படுக்கையறையில் தரையில் கால் நீட்டி அமர்ந்து விட்டத்தை வெறிந்திருந்தார் அவர்.

மீண்டும் மீண்டும் அது அவசரமாய் தட்டப்பட்டதில் சற்று சுய உணர்வு தெளிந்து மேலே எழுந்தார்.

இன்னமும் தட்டப்பட்டுக் கொண்டிருந்த கதவினைப் பார்த்தவர், ஒரு பெருமூச்சுடன் அங்கே செல்ல, வாசலில் நின்றிருந்தான் ருத்ரன்!

முழு சிவப்பு நிற கோட்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து, காலில் பளபளக்கும் ஷூவும், ஜெல் வைத்து வாரிவிடப்பட்ட தலைமுடியுமாகப் பார்ப்பதற்கு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி போன்று தோற்றமளித்தான்.

அவன் எப்பொழுதுமே தோற்றத்தில் அதி கவனமாய் இருப்பவன் தான்!

‘மாமா.. ஆடம்பரத்துக்கு ஆசைப்படக் கூடாது.. இருக்கறதை வச்சு சிறப்போட வாழணும்.. சந்தோசம் பணத்துல இல்ல.. எளிமையா இருக்கறது நல்ல பண்பு.. இப்படி ஆயிரம் விஷயம் சொல்லுவாங்க.

ஆனா இதையெல்லாம் சொல்லறவங்க.. கோடி கோடியா பணத்தை மூட்டைக் கட்டி வச்சிருக்கிற பெரிய பணக்காரங்க தான்!

அவனுங்களுக்கு அவனுங்க மட்டுமே பணத்தைப் பெருக்கணும்!

ஏழை.. இவனுங்க சொல்லற தத்துவத்தை எல்லாம் கேட்டுட்டு வெறும் ஏழையாவே சாகணும்.

நாம எதுக்கு மாமா பணத்தையும், ஆடம்பரத்தையும் வெறுக்கணும்?

பணம் மட்டுமே வாழ்க்கை இல்ல.. ஆனா, பணத்தால வாழ்க்கையே இல்லாம போனவங்க இருக்காங்க..

நம்மளோட நடை, உடை, பாவனை தான ஒரு இடதத்துல நம்மள முன்னாடி கொண்டு போய் நிறுத்தும்.’ என்று பேசுபவன் தான்.

அதன்படியே இடத்துக்குத் தகுந்தபடி நாகரிகமாக உடை அணிபவனும் கூட.

அனால் இன்று அவன் வந்திருக்கும் கோலம் கண்டு அமரேந்தரே பிரம்மித்துப் போனார்!

“ப்.. பிரதாப்.. என்னதிது?” என்ற அவரது கேள்வியில் அத்தனை திகைப்பு இருந்தது.

அவரது பார்வையில் சட்டெனச் சிரித்த ருத்ரனோ..

“என்ன மாமா அப்படிப் பார்க்கறீங்க? நல்லா இருக்கா இல்லையா?” என்று அவன் இரு கை விரித்துக் கேட்க, அந்தப் பிரம்மிப்பு விலகாமலே, அவரது தலை அசைந்தது.

அதில் இன்னமுமாய் அவன் சிரிக்க, அந்தச் சிரிப்பொலியில் தன்னை மீட்டவர்..

“என்ன பிரதாப் இது? எங்க கிளம்பிட்ட?” என்று கேட்க, அவனோ..

“இன்டெர்வியூவுக்கு..” என்றான் குரலில் நக்கல் தொனிக்க.

அதில் புருவம் சுருக்கிய அமரேந்தரோ.. “இன்டர்வியூவுக்கா? எந்த இன்டெர்வியூ?” என்றார் சற்றுக் குழப்பத்துடன்.

அதில் ருத்ரனின் இதழில் ஒட்டியிருந்த நக்கலின் அளவு கூட..

“நம்ம சர்க்கார்ல எனக்கு வேலை கொடுக்கப் போறாங்களாம் மாமா.. அதுக்காகப் பெரிய பெரிய பதவில இருக்கறவங்க எல்லாம் என்னைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க..” என்றான் கேலியான பாவனையுடன்.

அவன் கூற்றை அப்பொழுது தான் புரிந்து கொண்ட அமரேந்தரோ..

“யா.. யார் கூப்பிட்டிருக்காங்க? எப்போ கூப்பிட்டாங்க? ஏன் இதை நீ முன்னாடியே என்கிட்டே சொல்லல?” என்று அடுக்கடுக்காய் பதட்டத்துடன் கேள்விகளை அடுக்கினார்.

அதில் மெல்லச் சிரித்துக் கொண்ட ருத்ரனோ, இருபுறமும் அவரது தோளைப் பிடித்துக் கொண்டு..

“மாமா.. மாமா.. எதுக்கு இத்தனைப் பதட்டம்?

ஒரு சாதாரண மீட்டிங் தானே? அதுக்கு எதுக்கு இவ்வளவு பயப்படறீங்க?” என்று இலகுவான குரலில் பேசிக் கொண்டிருந்தவன், சட்டென அந்த இலகுத் தன்மை மாற..

“ருத்ரன் பேரைக் கேட்டா, மத்தவங்க தான் மாமா பயப்படணும்!

ஹ்ம்ம்.. இத்தனை வருஷத்துல நம்ம சர்க்காருக்கே இப்போ தான் தைரியம் வந்து என்னை நேர்ல பார்க்க நினைச்சிருக்காங்க..” என்றவன் அடுத்து சிரித்த சிரிப்பில் கொடூரம் வழிந்தது.

மீண்டும் சட்டெனத் தன் முகபாவனையை மாற்றிக் கொண்டவன்..

“போயிட்டு வந்துடறேன்..” என்று மிக அலட்சியமாகக் கூறி வெளியேற முனைய, அமரேந்தர்..

“தனியாவா?” என்றார் குரலில் சற்று பதட்டத்துடன்.

அவரை நிதானமாகத் திரும்பிப் பார்த்த ருத்ரனோ, கண்களில் கண்ணாடியை மாட்டிக் கொண்டே.. தலையை மட்டும் அசைத்துவிட்டுத் திரும்பினான்.

அவனுடைய நடையின் வேகத்துக்கு இணையாகச் சற்று ஓட்டமாகப் பின் தொடர்ந்த அமரேந்தரோ, அவன் காரில் ஏறப்போகும் முன் சற்று தயங்கி..

“அ.. அக்னி? அவளைத் தனியா விட்டுட்டு..” என்று பாதியில் நிறுத்த, அதைக் கேட்டுச் சந்தோஷமாக.. சத்தமாகச் சிரித்த ருத்ரனோ..

“அக்னிக்கு ஆபரேஷன் முடிஞ்சுடுச்சு.. சீக்கிரம் கண்ணு முழுச்சுடுவா. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைனு சொல்லிட்டாங்க..” என்று கூற, இன்னமும் அமரேந்தரின் கண்களில் தயக்கம் தெரியவும், நன்றாக அவர் புறம் திரும்பி..

“அவளை அவளே பார்த்துப்பா.. கவலைப்படாதீங்க..” என்று கூறிவிட்டு காரில் ஏறிக் கிளம்பினான்.

அவன் கிளம்பி காளிக்ஷேத்ராவின் எல்லையைத் தாண்டுகையில், இங்கே மருத்துவமனையில் அக்னியின் கருமணிகளில் அசைவு பிறந்தது.

அவளது அறையிலேயே அமர்ந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்த செவிலி எதேச்சையாக அதைப் பார்த்துவிட, உடனடியாக அந்தச் செய்தி மருத்துவமனையின் டீனான ஆண்டனிக்கு கடத்தப்பட்டது.

தனது ஜூனியர்கள் சூழ வேகமாக அந்த அறையை அடைந்தார் ஆண்டனி.

புருவச் சுலிப்புடன் கண்விழித்தவள், தானிருக்கும் இடம் உணர்ந்து, மரணமாய் வலிக்கும் தனது இடது மார்பை அழுத்தி விட்டபடி மேலே எழ முயன்றாள்.

அதற்குள் அவளது அறைக்குள் வந்துவிட்ட ஆண்டனியோ..

“நோ.. நோ.. டோன்ட் ஸ்ட்ரைன் யுவர்செல்ப்.. அப்படியே படுத்திருங்க..” என்று கூறிவிட்டு சில பரிசோதனைகள் செய்ய முற்பட்டார்.

அதற்குள் அக்னி ஏதோ பேச வர, அவளை நிமிர்ந்து பார்த்து மென்மையாகச் சிரித்த ஆண்டனியோ..

“பொறும்மா.. முதல்ல நான் என்னோட டெஸ்ட் எல்லாம் எடுத்து முடிச்சுக்கறேன்.. அப்பறம் உன்னோட சந்தேகங்களை எல்லாம் தீர்த்துக்கலாம்..” என்று அவர் கூற, அதில் சற்று அமைதியுற்று அவள் சம்மதமாய் தலையசைத்தாலும், அவளது கண்களோ அலைப்புறுதலாய் அந்த அறையையே சுற்றி வந்தது.

யாரையோ பரிதவிப்பாய் தேடிய விழிகள், தன் தேடலுக்கு விடை கிடைக்காத காரணத்தால் சோர்ந்து போக, அந்த விழிகளில் இருந்து சிறுதுளி கண்ணீரும் வந்து விழுந்தது.

அதை நிமிர்ந்து பார்த்த ஆண்டனியோ, அவளது கண்களின் பரிதவிப்பையும், பரிதவிப்போடு வந்த கண்ணீரையும் மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டார்.

அதனது பரிசோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டவர், தனது மற்ற மருத்துவர்களிடம் அதைக் காண்பித்து ஏதேதோ கூறிவிட்டு, அவர்களை வெளியே அனுப்பினார்.

பின்பு அந்த அறைக்கதவைச் சாற்றிவிட்டு வந்தவர், ஒரு மென்னகையுடன் அங்கிருந்து ஒரு நாற்காலியை எடுத்து அவளது படுக்கைக்கு அருகே போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டு, அதே மென்னகையுடன்..

“சொல்லும்மா.. உனக்கு என்ன சந்தேகம்? என்னமோ கேட்க வந்தியே?” என்றார் மிகச் சாதாரணமாக.

கண்களில் கலவரத்தைத் தேக்கியவளோ..

“ரு.. ருத்ரன் எங்க? அவ.. அவருக்கு ஒன்னும்.. ஒன்னும் ஆகலையே..” என்று தவிப்புடன் கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்தார் ஆண்டனி.

அவளது கண்களில் இதோ விழுந்து விடுவேன் என்பது போலக் கண்ணீர் தேங்கி நிற்க அதைக் கண்டவர், சட்டெனச் சத்தமாகச் சிரித்தார்.

அவரது சிரிப்பில் இன்னமுமாய் குழம்பிப் போன அக்னியோ, முற்றிலுமாய் தடுமாறித் தான் போனாள்!

***

மறுபுறத்தில் காளிக்ஷேத்ராவின் கடற்கரை நோக்கி ருத்ரனின் கார் பறந்து கொண்டிருந்தது.

அந்த கார் எல்லையைத் தாண்டும் முன், ருத்ரனோ..

“டேய்.. வண்டியை நிறுத்து..” என்று குரல் கொடுக்க, அடுத்த வினாடியே கார் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

காரிலிருந்து வெளியே எழுந்து வந்தவன், இடுப்பில் கை வைத்து ஆகாயத்தைப் பார்த்தான்.

அவனுடன் இருந்த சமீர்.. “என்ன ஜி.. என்னாச்சு?” என்று வினவ..

ருத்ரனோ.. “நம்மளை எங்க வரச் சொல்லியிருக்காங்க?” என்றான் ஒரு மார்க்கமான குரலில்.

அதற்கு சமீரா..

“தாஜ்மஹால் பேலசுக்கு!..” என்று குழப்பமாகக் கூற, கேலியாக உதட்டைப் பிதுக்கியவன்..

“ரொம்பப் பெரிய இடம் தான் இல்ல?” என்றான் குரலில் சற்று ஏளனம் பொங்க.

அதில் மேலும் குழம்பியவன்.. “ஆமாம் ஜி.. ஆனா..” என்று அவன் ஏதோ கூற வரும் முன் ருத்ரனின் வார்த்தைகள் அவனைத் தடை செய்தன.

“அப்போ அவ்வளவு பெரிய இடத்துக்கு நாம எப்படிப் போகணும்?” என்று அவன் கேட்க, சமீரின் கண்கள் விரிந்தன!

மகிழ்ச்சியுடன்.. “எனக்குப் புரிஞ்சுடுச்சு ஜி..” என்று கூறிய சமீர், ருத்ரன் வாய்மொழியால் கூறாத கட்டளையைச் செயலாற்றக் கிளம்பினான்.

இந்தியாவின் மிகப்பெரிய ஹோட்டல் தாஜ் மஹால் பேலஸ். “கேட் வே ஆஃப் இந்தியா” என்று கூறப்படும் மும்பையில் இந்தியாவின் நுழைவாயிலுக்கு அருகே அமைந்த ஹோட்டல் அது.

கி.பி. 1903ல் திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் இந்தியாவிலேயே மிகவும் பிரசித்திப் பெற்றது.

சாதாரணமானவர்கள் எல்லாம் தூரத்தில் நின்று புகைப்படம் மட்டுமே எடுத்துக் கொள்ளும் இடமது.

இங்குத் தான் ருத்ரனை அழைத்திருந்தார்கள் “அவர்கள்!”

அந்த அவர்கள்.. இதுவரை கபீருக்கு வேலை கொடுத்து வந்த இந்தியாவின் அரசியலுக்கு.. இல்லை இல்லை.. அரசியல்வாதிகளுக்கு முதலீடு செய்யும் பணக்கார முதலைகள், பல மாநில முதல்வர்கள், காபினெட் அமைச்சர்கள்.

இத்தனை நாட்களாய் கபீருக்கு வேலை கொடுத்து வந்தவர்கள், இப்பொழுது கபீரை நசுக்கிவிட்டு, ருத்ரனுக்கு வேலை கொடுக்க முன் வந்திருந்தார்கள்.

அதைத் தான் ருத்ரன், அமரேந்தரிடம்.. “இன்டெர்வியூவுக்கு கூப்பிட்டிருக்காங்க..” என்று கூறியிருந்தான்.

அந்த காபினெட் அமைச்சர்களும், பணக்கார பிசினஸ்மேன்களும். முதல்வர்களும் ஹோட்டல் வாயிலுக்கே வந்து ருத்ரனுக்காகக் காத்துக் கொண்டிருக்க, அதில் ஒருவனான மிதுனம் அங்கேயே தான் இருந்தான்.

தன் தந்தையையே கொன்றுவிட்டு, காளிக்ஷேத்ராவின் அரியணையை பறித்துக் கொண்ட ருத்ரன் மீது அவனுக்கு அடங்காத பழிவெறி இருந்தாலும், வீரியத்தை விடக் காரியமே பெரிது என்றெண்ணி இவர்களுடன் கூட்டு வித்திருக்கிறான்!

அவர்கள் எல்லோரும் ஆவலாக வாசலே அபார்த்துக் கொண்டிருக்க, மிதுனின் பி.ஏ அவனை நோக்கி அவசரமாக ஓடி வந்தான்.

வேகமாக வந்தவன், குனிந்து மிதுனின் காதுக்குள் ஏதோ கிசுகிசுக்க, மிதுனின் முகமோ சட்டென மாறியது.

அவசரமாக மற்றவர்களிடம் திரும்பிய மிதுன், “வாசல்ல ஹெலிகாப்டர் நிக்குது..”என்று கூற அவர்களோ அதிர்வுடன் அவனைப் பார்த்தார்கள்.

அவர்களில் பெரும் செல்வம் படைத்த, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான ஹர்ஷத் கான்..

“நாம இங்க ரகசியமா மீட் பண்ணறதா தான அவனுக்குச் சொல்லியனுப்பினோம்?

இப்படி எல்லாருக்கும் தெரியற மாதிரி பகிரங்கமா ஹெலிகாப்டர்ல வந்து, அதுவும் இவ்வளவு பெரிய ஹோட்டல் வாசல்ல வந்து இறங்கியிருக்கான் அவன்?” என்று சற்று நெஞ்சை பிடித்துக் கொண்டு கேட்க, மிதுனோ..

“இப்போ அதைப் பத்தி எல்லாம் பேசறதுக்கு நமக்கு நேரமில்லை.. அவன் வந்துட்டான். அவனை நாம நேர்ல போய்க் கூட்டிட்டு வரணும்.

ஆரம்பத்துல இந்த மாதிரி அடியாளுங்களை எல்லாம் கொஞ்சம் மதிப்பா நடத்துனோம்னா தான் பின்னாடி வாலாட்டற நாய் மாதிரி நாம சொல்லறதை அப்படியே கேட்பானுங்க..

அதையும் விட, இங்க நாம சொல்லறது தான நியூஸ்.. இந்தப் பத்திரிக்கைக்காரனுங்க நேர்மையா அவங்க கண்ணுல பார்க்கறதயா மக்கள்கிட்ட கொண்டுட்டு போறாங்க?

பயப்படாம வாங்க..” என்று அவன் கூற, அவன் கூறுவதும் வாஸ்தவம் தான் என்று கூறிவிட்டு அந்தப் படையே வாசலுக்கு ஓடியது.

பிறந்ததிலிருந்து தரையில் கால் படாத பெரும் செல்வந்தர்கள் அவர்கள்!

இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் திறன் கொண்டவர்கள்!

இப்பொழுதோ.. இந்திய அரசாங்கத்தால் தீவிரவாதியெனக் கூறப்படும் ஒருவனுக்காக அந்த மொத்தப் படையும் கால்நடையாக முன் வாசலுக்கு விரைந்தது.

எப்பொழுதும் ஏதோவொரு செய்திக்காக மும்பையின் பிரதான இடமான அந்தப் பகுதியில் இப்பொழுது ஒரு ஈ.. காக்கா கூட இருக்கவில்லை.

ஏற்கனவே அந்த அரசியவாதிகளின் கட்டளைப்படி அங்கிருந்த போக்குவரத்து முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டு விட, அவ்வளவு பெரிய சாலையில் வந்து இறங்கியது அந்த ஹெலிகாப்டர்.

சடுதியில் அந்த ஹெலிகாப்டரில் இருந்து இறங்கினான் ருத்ரன்.

காற்றில் அவனது சிகையும், அவனது சிவப்பு கோட்டும் பறக்க, முடியை ஒற்றைக் கையால் கோதிவிட்டு, கோட்டின் பட்டன்களை போட்டபடி தன் முன் நின்றிருந்த படையை நோக்கி ஒற்றை ஆளாய் முன்னேறினான் அவன்.

இதழ்கள் வெகு லேசாக விரிந்திருக்க, கண் மறைத்த கறுப்புக் கண்ணாடியோ அவனது உணர்வுகளை மற்றவர்களுக்குக் காட்டாது மறைத்திருந்தது.

நேராக அவர்கள் முன் வந்து நின்றவன், கண்ணாடியைக் கழட்டிக் கொண்டே.. “ஹெலோ..” என்று கை நீட்டியது மிதுனிடம் தான்!

தேடலாய் அவளிருக்க..

காதல் பாடலோ அவன்?

காணாத விழியிரண்டும்

பூத்துப் போகுமோ?..

பெண்ணவளின் பெரு நேசம்

ஆடவனின் உயிர் தாங்குமோ?..

இன்றிருக்கும் பேரழகி

ருத்தனின் மித்திரையா?

அவன் உயிர் குடிக்கும் அக்கினியா?

சிறு நரியின் சதி வலையோ?

சிங்கத்தின் பெரும்பிழையோ?

காலம் மாறும்..

காட்சியும் மாறும்..

பகை மாறுமா?

பழியும் தீருமா?..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்