Loading

அத்தியாயம் 15

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை  முழுச்சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருந்தது..

வெற்றியும் மதியும் காலையில் தோட்டத்தில் நடந்த நிகழ்வுக்குப் பின் நிமிர்ந்து இருவரும் முகம் பார்த்து சகஜமாக பேசவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொண்டே படுத்திருந்தனர். பல எண்ண அலைகள் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதையும் மீறி ஒருவரைப் பற்றி ஒருவரின் நினைவில் மனதில் இனிமையாய் இனிக்க தூக்கத்தைத் தழுவினர்.

எப்போதும் போல் தானே ஏனோ தானோ என்று சமைத்து விட்டு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டு முழுநிலவை ரசித்துக் கொண்டே படுத்திருந்தான் தமிழ். எப்பொழுதும் தனிமையில் தன் தாய் தந்தையைப் பற்றி நினைப்பவனின் மனதை இன்று தான் இறுக்கிப் பிடித்தில் கண்ணில் நீர் வழிய நின்றவளின் முகம் வந்து ஆக்கிரமித்தது.

‘வாயாடி அவளிடம் வாயைக் குடுத்து வாங்க முடியாது’ என்று நினைத்தாலும் அவள் படபட பட்டாசு பேச்சிலும் அவள் பேச்சுக்கேற்ப சதிராடும் விழிகளிலும் அவன் மனதை ஒரு நிமிடமாவது அமைதிப்படுத்தி விடுவாள். ‘எப்பா என்ன கண்ணு. கத்தரிக்கா மாதிரி இருந்துட்டு கண்ணை உருட்டியே என்ன மிரட்டு மிரட்டுறா?. மாமனுக்குக் கொடிபிடிச்சுட்டு வந்துட்டா. இதுக்காகவே அவனை சும்மா விடப் போறதில்லடி கத்தரிக்கா. கண்ணுல தண்ணியே வந்துருச்சே!. ஒருவேளை அதிகமாக தான் கையை முறுக்கிட்டோமோ?. அவளுக்கு தேவை தான். டா சொல்றா. சிடுமூஞ்சிங்குறா’ என்று முழுநிலவில் அவள் பூமுகம் தெரிவது போல் நிலவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.

பகலில் வேலை இருப்பதால் தனிமை அதிகம் வாட்டாது. இரவில் தனிமையில் சோகத்தை தத்தெடுக்கும் மனது இன்று அந்த நிலவின் குளுமை போல் அவள் நினைவும் அவன் மனதை குளிர வைத்தது. அது கூட அவனுக்கு புரியாமல் நிம்மதியான தூக்கத்தைத் தழுவினான்.

தமிழிடம் அடி வாங்கியவளோ அவள் அன்னையிடம் வசவு வாங்கிக் கொண்டிருந்தாள்.

“பொம்பளைப் புள்ளையா லட்சணமா வீட்ல இருக்கியாடி. எப்பப்பாரு வாயடிச்சுக்கிட்டு ஊரைச் சுத்திட்டு இருந்தா இப்படி தான் எங்கயாவது வாரி விழுந்து வருவ. உன்னைலாம் எவன் கட்டிக்கிட்டு பாடாய்படப் போறானோ? ” என்று அவளை அர்ஜித்துக் கொண்டே அவள் கையில் உள்ள வீக்கத்திற்கு கட்டுப் போட்டதால் வலிக்கு அவளுக்கு மாத்திரைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

‘நான் என்னத்தைக் கண்டேன் அந்த சிடுமூஞ்சி இப்படி கையைத் திருக்கி விடுவானு. படுபாவி காட்டுமிராண்டி மாதிரி கையை இப்படி உடச்சு விட்டுட்டான்’ என்று மனதில் அவனை அர்ஜித்துக் கொண்டு வெளியில் “எம்மா நான் விழுந்தது கூட வலிக்கல. நீ இப்படிக் கத்தி ஊருக்கே டமால் அடிக்குறது தான் பெரிசா இருக்குது. தயவு செஞ்சு வாயை மூடிட்டு போமா” என்று அவள் அறையில் இருந்து வெளியே அனுப்பினாள். அவன் கையை முறுக்கியதில் லேசாக ஜவ்வு விலகி வீக்கம் ஏற்பட்டிருந்தது. அதற்குத் தான் இந்த பாடு.

மறுநாள் எப்படியோ கையில் கட்டை வைத்துக் கொண்டே கல்லூரிக்கும் சென்று விட்டாள். மாலை கல்லூரி முடிந்து எப்போதும் கல்லூரி பேருந்து இறக்கி விடும் இடத்தில் இருந்து வீட்டிற்கு இரண்டு கிலோ மீட்டர் செல்ல வேண்டும். சில நேரம் அவள் தந்தை அழைக்க வருவார். அவருக்கு வேலை இருந்தால் நடந்தே தான் செல்வாள். இன்று அவள் தந்தைக்கு அவசர வேலை இருந்ததால் பொடி நடையாக அவளே நடக்க ஆரம்பித்து விட்டாள்.

ஒரு வேலையாக அந்த வழியாகச் சென்ற தமிழ் முதலில் அவளைத் தாண்டி சென்று விட்டு பின் வண்டியை யூடர்ன் போட்டுத் திருப்பி வந்து அவள் அருகில் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி “என்ன வாயாடி தனியா போற. உங்கப்பாவ எங்க?” என்றான்.

அவன் திடீரென வந்து வண்டியை நிறுத்தவும் ‘எவன்டா அவன்’ என்று திட்டுவதற்கு வாயெடுத்தவள் அவனைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

‘ஒருத்தன் வந்து நின்னு கேட்கானேனு பதில் சொல்றாளா பாரு.. இருடி வர்றேன்’ என்று “ஏய் உன்னைத் தான கேட்குறேன்” என்றான்.

“உனக்கு எதுக்கு பதில் சொல்லனும். நீங்க யாரு என்ன கேள்வி கேட்க?. கை வேற வலிக்குது. இருக்குறக் கடுப்புல என் வாயைக் கிளறாம போங்க” என்று சொல்லி விட்டு மெதுவாக நடந்தாள்.

அதன் பிறகே அவள் கையைப் பார்த்தவன் ” கைக்கு என்னாச்சு?. எங்க விழுந்து வாருன? ” என்றான் நக்கலாக.

அவன் கேட்டதில் ” ஏது… எங்க விழுந்தேனா?. யோவ் நேத்து நீதானயா கையை முறுக்கி உடைச்சு விட்ட. இப்போ எதுவும் தெரியாத பச்சை மண்ணு மாதிரி கேட்டுட்டு இருக்குற” என்றாள் கோவத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்துக் கொண்டே.

“ஏது? நான் கையை லைட்டா முறுக்குனதா இப்படி கட்டு போடுறளவுக்கு?!… என்று திகைத்தான்.

“ஆமா நல்லா எருமை மாட்டுல பாதி இருந்துட்டு நீ முறுக்குனா கை உடையாம என்ன பண்ணும். என் கை பிஞ்சுக்கையி. அதை இப்படி உடைச்சு விட்டுட்டியே படுபாவி.. போயா” என்று அவள் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தாள். அவன் பின்னால் வண்டியை உருட்டிக் கொண்டே வந்தான்.

“நிஜமாவே கையி இப்படி ஆகும்னு நினைக்கல. சரி வா. நா‌ வேனா உங்க வீட்ல இறக்கி விடுறேன்” என்றான் உண்மையிலே வருத்தப் பட்டு.

“நீங்க பண்ணதுக்கு பரிகாரமா?. தேவையே இல்லை. ஆமா நீங்க தான் வண்டில ஒரு பொண்ணையும் ஏத்த மாட்டியே. இன்னைக்கு என்ன புதுசா?. கையை உடைச்சு விட்டதுக்கு பாவம் பாக்குறேங்களா?”

“ப்ச் அப்டிலாம் இல்லை. நான் சும்மா லைட்டா முறுக்குனேன் அது இந்த அளவுக்கு ஆகும்னு நினைக்கல. கை வலியோடு நடந்து போறியேனு கேட்டேன். வர்றதும் வராததும் உன் இஷ்டம்”.

“எதுக்கு?. என் மேல இருக்குற கோவத்துல கையை உடைச்சது பத்தாதுனு வண்டிலக் கூப்டு போய் ஓடைல தள்ளுறதுக்கா?. கைல தான வலி. காலு ரெண்டும் நல்லாவே இருக்கு. அதுனால நான் நடந்தே வீடு போய் சேர்ந்துருவேன். நீங்க வண்டில கூப்டு போனும்னா அந்தக் கீழத் தெரு வள்ளி உங்க மேல லவ்வோ லவ்வுனு அலையுறா. நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறேங்களாம். அவளக் கூப்டு வண்டில சுத்துங்க. நான் வரல சாமி” என்று ஒரேயடியாக மறுத்து விட்டு நடந்தே செல்ல முடிவெடுத்து விட்டாள்.

அவனுக்கு தான் ‘ரொம்ப தான் கையை முறுக்கிட்டோம் போல’ என்று நினைத்து விட்டு கொஞ்சமா வருத்தப்பட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வெற்றிக்கு அந்த அட்டைக் கம்பெனி ஊருக்குள் வருவது பிடிக்கவில்லை‌. அதுவும் விவசாய நிலங்களுக்கு நடுவில் கம்பெனி வந்தால் நாளை இருக்கும் ஒன்று இரண்டு விவசாயம் செய்வோர்கள் கூட விவசாயம் செய்ய மாட்டார்கள். விவசாயம் செய்பவனை விட கூலி வேலை செய்பவனுக்கு கூட கையில் காசு இருக்கும். அதற்கு என்ன செய்யலாம் என்று அலைந்து திரிந்து கொண்டிருந்தான். தமிழிடம் சென்று பேசினால் ‘அவன் கெஞ்சினால் மிஞ்சுவான்’ என்பது நன்றாகவேத் தெரியும் ஆதலால் இதை அறிவுப்பூர்வமாக தான் முடிக்க வேண்டும் என்று அதற்கான வழிகளை ஆராய்ந்தான் வெற்றி.

மதிக்கு அவள் அத்தை அதை விட்டால் பூங்குழலி அதைத் தவிர பொழுதை போக்க எதுவும் இல்லாமல் இருந்தது. வெற்றி வீட்டில் இருந்தாலும் அன்றைய நிகழ்வுக்கு பின் அவன் முகம் பார்த்து பேசவே அவளுக்கு தயக்கமாக இருந்தது.

“ஏலே வெற்றி… எப்போ பார்த்தாலும் காட்டுல மாங்கு மாங்குனு அந்த மண்வெட்டி வச்சு வெட்டிக்கிட்டு அலைய வேண்டியது இல்லைனா அந்த வெளையாத காட்டுல போய் உட்கார்ந்துக்க வேண்டியது. வீட்ல கண்ணுக்கு லட்சனமா பொண்டாட்டி வச்சுக்கிட்டு எவனாவது இப்படி காட்டுலயும் மேட்டுலயும் அலைவானா?. உங்க தாத்தாலாம்…” என்று அப்பத்தா ஆரம்பிப்பதற்குள்

“போதும் அப்பத்தா.. அப்படியே நீங்க அந்தக்காலத்து சரோஜா தேவி. தாத்தா வேலை வெட்டிக்கு போவாம உன்னைச் சுத்திட்டு அலைஞ்சாரு. சும்மா ஏதாவது நீ பாட்டுக்கு சொல்லிட்டு இருக்காத ” என்றான் வெற்றி.

“அட போடா கிறுக்குப்பயலே. ஏ கனி நீயாவது சொல்லக் கூடாதா?. புதுசா கல்யாணம் ஆனவங்க பொண்டிட்டியக் கூப்டு வெளியூர் எங்காவது போயிட்டு வருவானா… அதை விட்டுட்டு காட்டுக்கும் வீட்டுக்கும் அலையுறான். என்னைக் கொல்லுப்பேரனை பார்க்காம தெற்காம அனுப்பிருவேங்க போலயே” என்று மருமகளையும் துணைக்கு அழைத்தார் அந்த பெரிய மனிதி. அவருக்குத் தெரியாதா? அவர் அனுபவத்தில் எத்தனை விஷயங்களைக் கடந்து வந்தவர். வெற்றியும் மதியும் இன்னும் திருமண வாழ்க்கைக்குள் நுழையவில்லை என்பதை முதல் நாளேக் கண்டுபிடித்து விட்டார். இப்போது அவர்களை சேர்த்து வைக்க நேரடியாகவே இறங்கி விட்டார்.

“நான் என்னத்தை சொல்றது. அவங்க ரெண்டு பேரும் இஷ்டப்பட்டா போயிட்டு வர்ற வேண்டியது தான. ரெண்டு நாளு அவங்க அப்பா பாரக்க மாட்டாரு சோலியெல்லாம்?. ஏய்யா வெற்றி ரெண்டு பேரும் எங்காவது வெளியூர் போயிட்டு வாயா. மதியும் வீட்டுக்குள்ளே அடஞ்சு கிடக்குறா” என்று தன் அத்தையிடம் ஆரம்பித்து தன் மகனிடம் கேள்வியாய் முடித்தார்.

“நான் பார்க்குறேமா என்றதோடு அவனறைக்குச் சென்று விட்டான். கூடவே மதியும் சென்று விட்டாள்.

“என்னை எங்காவது வெளியே கூப்டு போ காட்டான். எனக்கு போரிங்ஆ இருக்கு. எனக்கு சில திங்க்ஸ் வாங்கனும்.‌ அது உங்க ஊர்ல இருக்குற பொட்டிக் கடைல கிடைக்காது” என்றாள்.

“சரிடி கூப்டு போறேன். உடனே பட்டிக்காடு பொட்டிக்கடைனு ஆரம்பிச்சுராத” என்றான் கோவமாக.

“நீ ஏன் நாலு நாளா பேயடிச்ச மாதிரியே அலையுற. என்ன தான்டா உன் பிரச்சனை” என்றாள்.

அவனுக்கும் அப்போதைக்கு ஒரு மன ஆறுதல் தேவைப்பட்டதோ என்னமோ சின்ன வயதில் அப்பத்தா சொன்ன கதையில் இருந்து இப்போது அவன் அந்த நிலத்தில் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருப்பதில் இருந்து நடந்த பிரசச்னை வரை சொல்லி முடித்தான். அவளும் கன்னத்தில் கை வைத்து சுவாரஷ்யமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

சொல்லி முடித்து விட்டு அவளைப் பார்க்கவும் அவள் இன்னமும் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தாள்.

“ஏய் என்னடி நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்”.

“இல்ல காட்டான்… இந்த பட்டிக்காட்டு பயபுள்ளைக்கு இம்புட்டு அறிவானு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்” என்கவும் “அடிங்க… என்னை என்ன படிக்காத கூமுட்டைனு நினைச்சுயா?. நாங்களும் பிஜி முடிச்சுருக்கோம்”.

“சரி சரி உனக்கும் கொஞ்சம் அறிவு இருக்குனு ஒத்துக்கிறேன்”.

“வர வர உனக்கு ரொம்ப தான் வாய் நீளுது. பாத்துக்குறேன் ஒருநாள்”

“நல்லா பாத்துக்கோ. அதெல்லாம் பை பெர்த்தே வந்தது. ஒன்னும் பண்ண முடியாது”.

‘அதான் தெரிஞ்ச விஷயமே’ என்று மனதில் நினைத்துக் கொண்டு “இந்த வாரம் எங்காவது கூப்டு போறேன்” என்றான். அவளும் சரி என்று ஒத்துக் கொண்டாள்.

‘அந்தி மயங்கும் நேரத்திலே ஆத்தங்கரை ஓரத்திலே அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்’ என்ற ரீதியில் அந்தி மாலைப் பொழுதில் வானம் சிவந்திருக்க, விளையாத நிலத்தில் நம்பிக்கையோடு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பவனை வரப்பு மேட்டில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள் அவனின் திமிரழகி.

தலையில் தலைப்பாகையோடு வியர்வை முத்துக்கள் அவன் புஜங்களில் உருண்டு வயிற்றில் இறங்க மண்வெட்டி வைத்து மேடான இடங்களைக் கொத்திக் கொண்டிருந்தான். ‘எந்த நம்பிக்கையில் இவன் இப்படி அவன் உழைப்பைப் போட்டுக் கொண்டிருக்கிறான். இந்த நிலம் சரியாகுற வரை உழைத்துக் கொண்டே இருப்பானா?’ என்று அவனை நினைத்து ஒருபுறம் பாவமாக இருந்தாலும் மறுபுறம் அவன் வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து வியப்பாகவும் இருந்தது. ‘பெற்றவர்களையே மதிக்காத இந்தக் காலத்தில் இப்படி நிலத்தின் மேல் இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறானே!’ என்று ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருந்தது.

அவனையே கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தாள் அவன் இவளைப் பார்ப்பதைக் கூட அறியாமல். அவளின் ரசனைப் பார்வை உணர்ந்து ‘பாதகத்தி இப்படி முழுங்குற மாதிரி பாத்துட்டு இவ இவபாட்டுக்கு இருக்குறா. நைட்டும் கும்பகர்ணி மாதிரி தூங்கிருறா. இவளை பக்கத்துல வச்சுக்கிட்டு என் பாடு தான் திண்டாட்டமா இருக்கு’ என்று நினைத்து விட்டு அவன் வேலையை முடித்து விட்டு ‘அப்பாடா’ என்று அவளருகில் வந்தமர்ந்தான்.

அதன் பிறகு இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் சிறிது நேரம் பேசிக் கொண்டும் சில நேரம் மௌனங்களாலும் சில நேரம் ரசனைப் பார்வையாலும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தனர் வானம் இருள் சூழப்போவது கூட தெரியாமல். இருவருக்கும் ஏனோ அந்த ஏகாந்தம் பிடித்திருந்தது.

அவர்களின் ஏகாந்த நிலையைக் கலைப்பதெற்கென்றே ஒரு கார் வந்து நின்றது அவன் நிலத்தின் அருகில். அதன் பின்னாலே தமிழும் அவன் வண்டியில் வந்திறங்கினான்.

வந்தவர்கள் தமிழின் நிலத்தை அளந்து கொண்டிருந்தனர். வெற்றி ‘என்ன நடக்கிறது இங்கே?. அப்பா பேசிருக்குறேனு சொன்னாரு’ என்று நினைத்து விட்டு அவர்கள் அருகில் சென்றான்.

சிவகுரு தமிழிடம் “உனக்கு அந்த நிலத்தை விற்க வேண்டுமென்றால் என்ன விலைனு சொல்லு. நானே வாங்கிக்குறேன் தமிழு. வெற்றியும் ரொம்ப நம்பிக்கையோடு இருக்குறான். இது விவசாயம் பண்ற எல்லாருக்கும் ஆபத்து தானே” என்று அவனிடம் கேட்டும் அவன் எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டான். அவன் மௌனமாகக் கடக்கவும் அவன் யோசிப்பான் என்று வெற்றியும் சிவமும் நினைத்துக் கொண்டிருக்க இப்படி உடனே மற்றவர்களுக்கு விற்பான் என்று நினைக்கவில்லை. 

“என்ன பண்ற தமிழு” என்றான் வெற்றி அடக்கப்பட்டக் கோவத்தோடு.

“பார்த்தா தெரியல. என் நிலத்தை அளந்துக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு விற்கப் போறேன். அட்வான்ஸ் வாங்கிட்டேன். நீ ஓரமா நில்லு” என்றான் நக்கலாக.

“அப்பா தான் உனக்கு விற்கனும்னா நாங்களே வாங்கிக்குறோம்னு சொன்னாருல. பின்ன எதுக்கு இவங்களுக்கு விற்கப் போற”

“என் நிலம் என் இஷ்டம். யாருக்கு வேணாலும் விற்பேன். நீ யாரு அதக்கேட்க?”

“ஓ அப்படியா தம்பிஇஇ”… என்று இழுத்து விட்டு “ஐயா நிலத்தை வாங்கப்போறவரே இங்க வாங்க கொஞ்சம்” என்றான்.

நிலத்தை வாங்கப்போறவர் பக்கத்தில் வரவும் “இந்த இடத்தை வாங்கிட்டு நீங்க ஏரோபிளேன்ல இருந்து இந்த நிலத்துல குதிப்பேங்களா சார்” என்றான்.

அவர் புரியாமல் முழிக்கவும் “இந்த இடத்துக்கு நடைபாதையே இல்லை. என் இடத்து வழி தான் நடந்து போகனும். நான் வழியை அடைச்சுட்டா நீங்க எப்படி இந்த நிலத்துலக் கால் வைக்க முடியும்?. ம் என்றான் புருவம் உயர்த்தி தமிழை நக்கலாகப் பார்த்துக் கொண்டே.

“என்ன சொல்றாரு தமிழ் இவரு. நீ இந்த மாதிரி வில்லங்கம் இருக்குற மாதிரி சொல்லவே இல்லையே. என்னது இது?” என்று குதித்தார் நிலம் வாங்க வந்தவர்.

“இவன் இந்த நிலத்தை விற்க கூடாதுனு பொய் சொல்றான். டேய் ஆதாரம் இல்லாம ஏதாவது பேசிட்டு இருந்த… என்னடா ஆதாரம் அதுக்கு” என்றான்.

“ஏன்டா படிச்சுட்டு விவசாயம் பண்றவன்லாம் கேனப்பயலுகனு நினைச்சுயா?. எங்கப்பா வந்து உன்கிட்ட பேசுனவுடனே நீ சரின்னு சொல்லிருவனு நம்பி அப்டியே இருந்துருவேனா?. அப்புறம் நான் படிச்சதுக்கு என்ன மரியாதை?. இரு ஆதாரத்தைக் கொண்டு வரச்சொல்றேன்” என்று குமாருக்கு அழைத்து  சில டாக்குமென்டை வீட்டில் இருந்து எடுத்து வரச் சொன்னான்.

அவன் சொன்னதில் நிலம் வாங்க வந்தவர் மட்டுமில்லை தமிழும் மதியும் கூட ‘எமகாதகன்’ என்று ஆச்சர்யத்தில் நின்றிருந்தனர்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

      1. Pandiselvi
        Author

        உங்களின் ஆதரவுக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிங்க.

      1. Pandiselvi
        Author

        உங்களின் ஆதரவுக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிங்க.

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.