Loading

அத்தியாயம் 14

கதிரவன் தன் ஒளிக்கதிர்களை பூமியை நோக்கிக் கோவமாக வீச பூமியோ அதன் கோவத்தைத் தாங்க முடியாமல் தகித்துக் கொண்டிருந்தது.

திருமணம் ஆகி அங்கு வந்ததிலிருந்து சீக்கிரம் எழுந்து பழகியதால் மதியும் வெற்றியுடனே சீக்கிரம் எழுந்து பழகிக்கொண்டாள். வெற்றித் தோட்டத்திற்கு செல்ல கிளம்பி வெளியே வந்த நேரம் மதி அப்பத்தாவுடன் கதையளந்து கொண்டிருந்தாள். அவனுக்கும் அவளுக்கு வீட்டினுள் அடைந்து கிடைப்பது எரிச்சலூட்டும் என்று புரிந்து அவளுக்கு பிடித்த மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

“மதி” என்றழைத்தான் வெற்றி.

“என்ன” என்று அவன் அருகில் வரவும் “உனக்கு ஏதாவது தேவைனா குழலி கிட்ட கேளு. அவ உனக்கு உதவி பண்ணுவா”.

“அவளுக்கு இந்த வாரம் எக்ஸாம். அதான் வரல. இன்னைக்கு வர்றேனா”.

“ம் சரி. நான் காட்டுக்கு கிளம்புறேன். அம்மா வந்தா சொல்லிரு.”

“ம் சரி” என்றதோடு முடித்துக் கொண்டாள்.

அவன் செல்லவும் சிறிது நேரத்தில் பூங்குழலி வந்தாள்.

“என்னடி வீட்டு பக்கம் ஆளவே காணும்” என்றார் கனிமொழி.

“பரவாயில்லயே புது மருமக வரவும் என்னைலாம் ஞாபகம் இருக்குமானு நினைச்சேன். அத்தை என்னைய ஞாபகம் வச்சுருக்கேங்க போலயே” என்றாள் குழலி.

“அடி போடி. நீ தான் வாக்கப்பட்டு போன பிறகு இந்த அத்தையை மறந்துருவ”.

“விடுங்கத்தை நம்மூர்லயே நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி இங்கேயே இருந்துருறேன்”.

” அது என்ன நம்ம கையிலயா இருக்கு. கடவுள் உனக்கு எங்க முடிச்சு போட்டுருக்காரோ!. நம்ம வெற்றிக்கு இங்கிருந்து மெட்ராஸ்ல போய் பொண்ணு எடுக்கலயா. அது மாதிரி உனக்கு பட்டினத்துக்காரன் எவனும் வாரானோ என்னமோ”.

“அத அப்போ பார்க்கலாம் அத்தை” என்று அவள் அத்தையிடம் வளவளத்துக் கொண்டிருந்தாள். இருவரின் பேச்சு வார்த்தைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் மதி.

” சரி சரி வாயடிக்காம நீயும் மதியும் போய் வெற்றிக்கு சாப்பாடு குடுத்துட்டு வாங்க. வேலை இருக்குனு காலைல சீக்கிரம் கிளம்பிட்டான் காட்டுக்கு. மதியும் வந்ததிலிருந்து வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடக்குறா. நம்ம தோட்டத்தையும் பார்த்த மாதிரி இருக்கும் ” என்று இருவரையும் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார்.

“அக்கா வாங்க போலாம்” என்று மதியை அழைத்துக் கொண்டு சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்பினர்.

வெற்றி வயலில் நெல் விதைப்பதற்காக நிலத்தை தயார்படுத்திக் கொண்டிருந்தான். இருவரும் தாங்கள் வந்த வண்டியை நிறுத்தி விட்டு மெதுவாக வரப்பில் நடக்க ஆரம்பித்தனர் வெற்றி இருக்குமிடம் நோக்கி. குழலி வண்டியை நிறுத்திய இடத்திலே செருப்பைக் கழட்டி வைத்து விட்டு வெறுங்காலில் நடந்தாள். மதியோ அதைக் கவனியாமல் ஹீல்ஸ் வைத்த செருப்பை அணிந்து கொண்டு ஒவ்வொரு எட்டாக பார்த்து பார்த்து நடந்து வந்தாள். பேச்சு சுவாரஸ்யத்தில் குழலியும் அதைக் கவனிக்கவில்லை.

தூரத்தில் ஒரு பக்கம் வெற்றி வேலை செய்து கொண்டிருக்க மறுபக்கம் தமிழ் அவன் காட்டில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்து விட்டு “அக்கா எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. மாமா வயக்காட்டுல இருக்கும். நீங்க போய் மாமாவைக் கூப்டு வந்து சாப்பாடு வச்சுட்டு இருங்க” என்று தமிழை நோக்கி நடையைக் கட்டினாள்.

மதியும் சரி என்று வெற்றியை நோக்கி வரப்பில் தத்தி தத்தி நடந்து சென்றாள். வெற்றி அருகில் வந்தவுடன் “காட்டான் எவ்வளவு நேரம் கூப்டுறேன் உன்னை அங்கயிருந்து. காது ரெண்டும் அவுட்டா” என்று ஒரு இடத்தில் நிற்காமல் ஆடிக் கொண்டே பேச ஹீல்ஸ் செருப்பு வழுக்கி சேற்றுக்குள் “அம்மாஆஆஆ” என்று கத்திக் கொண்டு விழுந்தாள்.

அவள் விழுந்ததில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. உதட்டிற்குள் சிரிப்பை அடக்க மிகவும் கஷ்டப்பட்டு முடியாமல் வெளியேயும் சிரித்துக் கொண்டே அவளைத் தூக்கி விட சென்றான்.

சேற்றுக்குள் விழுந்து உடம்பெல்லாம் சேறானதில் தட்டி விட்டுக் கொண்டே புலம்பியவள் அவனின் சிரிப்பில் கடுப்பாகி “காட்டான்… கீழே விழுந்து கிடக்கேன் தூக்காம சிரிக்குற. வந்து தூக்கி விடுடா” என்று கத்தினாள்.

“உன்னை தூக்கி விடலாம்னு தான் நினைச்சேன். நீ பேசுன பேச்சுக்கு உள்ளயே கிடடி. நீயே எழுந்து வா” என்று கைகட்டி வரப்பிலே நின்று கொண்டான்.

இருமுறை எழ முயற்சி செய்து திருமப்வும் அதிலே விழுந்தவள் ‘சிவனேனு இவன் கால்லே விழுந்திட வேண்டியது தான்’ என்றெண்ணி  “வெற்றி.. வெற்றி… ப்ளீஸ் வெற்றி. என்னை தூக்கி விடு. மண்ணெல்லாம் உடம்புல பட்டு அரிக்குது” என்றாள் பாவமாக.

“என்ன தான் முகத்தை பாவமாக வச்சாலும் முகத்துல திமிரு தெரியுதே” என்றான்.

“டேய் நிஜமா தான் சொல்றேன். தூக்கி விடுடா” என்கவும் அவளின் கைப்பிடித்து தூக்கி விட்டான்.

“தூரத்துல நீ வரும் போதே பாத்துட்டேன். அங்கேயே நில்லுனு சைகை செஞ்சேன்ல. கவனிக்காம ‘பே’னு வந்துட்டு என்கிட்ட கத்திட்டு இருக்குற”.

“நான் கவனிக்கவே இல்ல. இந்த வரப்பில சேலையைக் கட்டிட்டு நடக்கவே முடியல. செருப்பு வேற தடுக்கி விட்டுட்டே இருந்துச்சு” என்றாள் முகத்தை சுளித்துக் கொண்டு.

“ஏன்டி எவனாவது வாய்க்கா வரப்புல ஹீல்ஸ் போட்டு நடந்து வருவானா?. ஆமா நீ மட்டுமா தனியா வந்த?”.

” இல்லை குழலி வந்தா. வேலை இருக்குனு அந்த பக்கம் போனா. நான் இப்டியேவா வீட்டுக்குப் போற வரைக்கும் இருக்குறது” என்று விட்டால் அழுது விடும் பாவனையோடு கை கால்களில் உள்ள சேறை தட்டி விட்டுக்கொண்டே கேட்டாள்.

“குழலி உங்கிட்ட சொல்லலியா செருப்பு போடாம வர்றதுக்கு?” என்று விட்டு ” சரி வா பம்பு செட்ல கழுவிக்கோ” என்று அவளை பம்பு செட் இருக்குமிடம் அழைத்துச் சென்று “போய் கழுவிட்டு வா” என்றான்.

அவள் பம்பு செட் பக்கத்தில் உள்ள கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு “குளிக்கும் போது உள்ள விழுந்துட்டா நானு” என்றாள் பயந்து கொண்டு.

” ம் நான் கிணத்துல விழுந்து உன்னைக் காப்பாத்துறேன் போதுமா. போய் சீக்கிரம் கழுவிட்டு வாடி உசுர வாங்காம” என்று தலையிலடித்துக் கொண்டான்.

“சரி சரி நோ டென்ஷன்” என்று விட்டு பம்பு செட்டில் அருவி போல் விழும் நீரில் தன் மேல் உள்ள சேறைக் கழுவிக் கொண்டிருந்தாள். அவள் சேலை முந்தானையை தண்ணீரில் கழுவிக் கொண்டிருக்க அவள் பால் நிறத்தில் இருந்த வெற்றிலைக்கொடி இடை பளிச்சென்று அவன் கண்ணில் பட்டது.

‘இவளை என்ன மைதா மாவுல செஞ்சாங்களா?. ஷப்பா பாக்கவேக் கூடாது’ என்று நினைத்து விட்டு தலையை உலுப்பி வேறுபுறம் திரும்பிக் கொண்டான். மூளையோ வேண்டாம் என்க மனமோ பார் என்க இருவரில் மனமே வென்று கண்கள் அவளை ரசித்துக் கொண்டிருந்தது. உடலில் புதுப் புது வேதியியல் மாற்றங்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. அதை அடக்க அவன் பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான்.

அவனின் அவஸ்தை புரியாமல் முதலில் பயந்து பயந்து தண்ணீரில் சேறைக் கழுவியவள் அதன் பின் சேறைக் கழுவிய பின்னும் அருவிபோல் விழும் நீரில் குதூகலித்து விளையாட ஆரம்பித்து விட்டாள். தண்ணீரில் முழுவதுமாக நனைந்ததில் அவள் அணிந்திருந்த சேலை உடம்பில் ஒட்டியதில் அவள் அங்கங்களைத் தெளிவாகக் காட்டியது. அதில் இன்னும் இன்னும் மனம் அவளிடம் செல்ல சொல்லியது.

அவள் பக்கத்தில் உள்ள கிணற்றை மறந்து விளையாடிக் கொண்டிருந்ததில் கால் தடுக்கி கிணற்றில் விழுவதற்குள் “வனிஇஇஇ…!” என்று ஓடிச் சென்று அவளை இழுத்துக் கொண்டான் கிணற்றில் விழாமல்.

அவன் இழுத்ததிலும் உள்ளே விழுந்திருப்போமோ என்ற பயத்திலும் அவனோடு ஒட்டிக் கொண்டாள். சிறிது நேரம் இருவரிடத்திலும் பலத்த மௌனம். அவளுக்கு தான் பயத்தில் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது. அவனுக்கு அவள் ஈர உடலோடு ஒட்டி நிற்பது பெரும் அவஸ்தையாக இருந்தது.

அவள் விலகுவதாக தெரியவில்லை என்கவும் அவனே அவளை விலக்கி நிறுத்தி  “பாத்து பண்ண மாட்டியா?. வா போலாம்” என்று கடிந்து கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டான்.

அதுவரை பயத்தில் இருந்தவள் அதன் பின்னே ‘அவன் மார்பிலா இவ்வளவு நேரம் சாய்ந்திருந்தோம்?’ என்று நினைக்கையிலே என்றும் இல்லாத புது உணர்வுகள் வந்து மனதை குளிரச் செய்து முகத்தை சிவக்க வைத்தது. அவனின் வாசமும் முரட்டு முகமும் முறுக்கிய மீசையும் அவளின் கைகள் பதிந்திருந்த கட்டுமாஸ்தான புஜமும் நினைக்கையிலே அவளை ஏதோ செய்தது. அதிலும் அவனின் ரசனைப் பார்வை அவளுள்ளே புது மயக்கத்தை உண்டு பண்ணியது. அவனின் நினைவுகளில் இருந்தவள் அவள் பெயரை சுருக்கி அழைத்ததை அவள் கேட்கவில்லை. அதன் பின் அவள் கொண்டு வந்த உணவை அவளை நிமிர்ந்தும் பாராமல் உண்டு முடித்தான்.

பச்சைப்பசேலென வயல்வெளியில்
வளர்ந்து நிமிர்ந்த நாற்றுகளுக்கு
போட்டியாய் பட்டணத்து ராணியாய்
தலை நிமிர்ந்து தட்டித் தடுமாறி
நீ நடந்து வரும் அழகில்
என் மனம் தடுமாறி விழுகிறதடி..

சேலைக் கொசுவத்தைத் தூக்கிப் பிடித்து
வரப்பில் நீ எட்டு வைக்கும் அழகில்
வரம்பு மீற தோனுதடி என் திமிரழகியே..!

உன் திமிரழகில் என் உணர்வுகளைத்
தட்டி எழுப்பி விட்டு
தள்ளி நிற்பது நியாயம் தானோ?..

உன் முக அசைவிற்கேற்ப
காதில் சதிராடும் ஜிமிக்கிக்குள்
என் உடம்பின் ஒட்டு மொத்த
அனுக்களையும் பூட்டி வைத்து
என் உணர்வுகளை ஆட்டுவிக்கும் சதிரழகியே..!

ஒரு பெண்ணின் உடலைத்
தொடுவதில் இல்லை ஆண்மை
மனதைத் தொடுவதில்
உள்ளதடி பெண்ணே..!

உயிரைப் போர்த்தியிருக்கும்
உடல்‌மேல் ஆசை கொள்ளவில்லை
உன் மனதால் உணர்ந்து
என் நெருக்கத்தை
நீயே விரும்பி ஏற்கும் வரை
காத்திருப்பேனடி கண்ணே..!

இருவருக்குள்ளும் வந்த உணர்வுக்கு பெயர் தேடிக் கொண்டிருக்கின்றனர். உடல்களால் இரண்டு உணர்வால் ஒன்று என்ற ரீதியில் இருவரின் மனநிலையும் இருந்தது. முதலில் யார் காதலெனும் ஆழியில் மூழ்கி முத்தெடுப்பது என்று பொருத்திருந்து பார்ப்போம்.

குழலி குழலி என்று ஒருத்தி வேலை இருப்பதாகச் சொல்லி சென்றாளே அவள் அப்படி என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்று சென்று பார்க்கலாம்.

குழலி கோவமாக தமிழ் இருக்குமிடத்திற்குச் சென்றாள்.

“ஹலோ சிடுமூஞ்சி மாம்ஸ்.. ” என்ற குழலியின் குரலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த தமிழ் நிமிர்ந்தவன் எதிரில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கைகளை இடுப்பில் ஊன்றி அவனை முறைத்துக் கொண்டிருந்தவளின் சதிராடும் விழிகளில் அன்று போல் இன்றும் ஒரு நிமிடம் மூழ்கி எழுந்து அவளை என்னவென்பது போல் நோக்கினான்.

“என்ன வாய்க்கொழுப்பு கூடிப் போச்சா உனக்கு. அறைஞ்சேன் பல்லு தெரிச்சுரும்”.

“ஆமா உன் கிட்ட பல்லக் குடுத்துட்டு நான் எப்படி  சாப்புடுறதாம்… என்று விட்டு உனக்கு வேற வேலையே இல்லையா?. எப்போ பார்த்தாலும் என் மாமன் கூட வம்பிழுக்குறதயே பொழப்பா வச்சுருக்கேங்க. மாமா சிவம் மாமா பேச்சுக்கு கட்டுப்பட்டு இருக்கு. இல்லை உங்களை உண்டு இல்லனு பண்ணிடும்” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

அதுவரை அவள் பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன் ” அப்படித்தான் அவன் என்ன பண்ணாலும் பிரச்சினை பண்ணுவேன். என்னடி பண்ணுவான் உன் மாமன் ம்ம். பெரிய மாமன் புகழ் பாட வந்துட்டா. இன்னொரு தடவை என் முன்னாடி கை நீட்டி பேசுன… புடுச்சு கிணத்துல தூக்கிப் போட்டுடுவேன். போடி இங்கிருந்து. வந்துட்டா  பெரிய இவளாட்டம். நாங்க பயந்துருவோம் பாரு” என்று சிடுசிடுத்து விட்டு அவன் திரும்பவும் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்து விட்டான்.

“ஓஓ நீங்க கிணத்துல தூக்கி போடந்தட்டிக்கும் என் மாமா உங்களை சும்மா விட்ருமா?. அப்படித்தான் பேசுவேன். என்ன பண்ணுவடா” என்று திமிராக நின்றாள்.

“என்னாது டாவா!! ” என்று திகைத்து விட்டு ‘இருடி வர்றேன்’ என்று அவள் கையை முதுகுக்கு பின்னால் முறுக்கி அவள் தாடையை வலிக்கும் படி இறுக பிடித்தவன் இன்னொரு தடவை டா டூ னு ஏதாவது என்கிட்ட வந்து வாயடிச்சுட்டு இருந்த… நிஜமாவே பல்லைத் தட்டிக் கையில குடுத்துடுவேன்” என்றான்.

அவன் இறுக்கிப் பிடித்ததில் கை வலியும் கன்னங்கள் சிவந்ததில் தாடையின் வலியும் உயிர் போக கண்களில் கண்ணீர் தானாக வலிந்தது. அவள் கண்ணீரைக் கண்டு என்ன நினைத்தானோ “ஒழுங்கா ஓடிப் போயிரு. இல்லை என்ன பண்ணுவேனு எனக்கேத் தெரியாது” என்று அவளை விலக்கி விட்டு தான் விட்ட வேலையைத் தொடர்ந்தான் அவளைத் திரும்பியும் பாராமல்.

” சே நீயெல்லாம் மனுஷனா.. மிருகம் முரடன் காட்டுமிராண்டி என்று பல வார்த்தைகளால் அர்ஜித்து விட்டு நீயெல்லாம் கடைசி வரை சொந்த பந்தங்கள் கூட சேராம தனியாவே கிடந்து சாவு. என் கையவே உடைச்சுட்ட சிடுமூஞ்சி” என்று திட்டிக் கொண்டே நடந்தாள் எங்கே நின்றால் மறு கையையும் உடைத்து விடுவானோ என்று.

அவள் திட்டியதில் “உங்கள மாதிரி சொந்தங்களே எனக்குத் தேவையில்லை சரி தான் போடி” என்று இவனும் கத்தி விட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

உறவோடு ஒட்டாமல்
தள்ளி நின்று அவன்
விளையாடிக் கொண்டிருக்க
விளையாத காட்டுக்கு அவள்
விதைபோட்டுச் செல்கிறாள்
அவளையறியாமல்..!

விதை முளைத்து விருட்சமாகுமோ
இல்லை மண்ணோடு மண்ணாக
மட்கிப் போகுமோ..!

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. வயகாட்டில் ஹீல்ஸ் போட்டு போனா இப்படித்தான் சேத்துல தான் விழ வேண்டும். குழலி தமிழனிடம் சென்று வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொண்டாள் இருவர் ரொமான்சும் சூப்பர் 👌👌

    2. En ma kulali tappu pannuna porumaiya eduthu sollanum… Ipdi un mama pugazh pada kudathu.. aprm en chlm ku innum kvm vanthurum.. sis ud super… Nadula nadula varra inga kavithai rmba rmba nalla iruku…

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.