Loading

அத்தியாயம் 13

வெற்றியின் நினைவுகள் தமிழுடன் ஆரம்பித்த பிரச்சனை நடந்த தினத்திற்குச் சென்றது.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பின் தண்டனை காலம் முடிந்து ஊருக்குள் வந்த போது நிறைய குடும்பங்கள் அவர்களுடன் பேச ஆரம்பிக்கவில்லை. சிவகுரு தான் தமிழின் தந்தை முத்துவேல்க்கு உதவி செய்வார்‌. தமிழின் தாத்தாவிடம் இருந்து முத்துவேலின் பங்கை பிரித்து வாங்கிக் கொடுத்தது கூட அவர் தான். சொந்த பந்தங்கள் ஒதுக்கலிலும் நக்கல் பேச்சுகளாலும் தமிழ் ஆரம்பம் முதலிலே யாரிடமும் ஒன்டாமல் தள்ளியே இருந்தான்.

நாட்கள் செல்ல செல்ல முத்துவேலுடன் ஓரளவு சில மக்கள் பேசிக் கொண்டனர். அவரிடம் பேசியது போல் தமிழின் அன்னை காமாட்சியிடம் பேசமாட்டார்கள். பிறகு காமாட்சி நோய் வாய்ப்பட்டு இறக்கவும் சில வருடங்களிலே முத்துவேலும் இறந்து விட்டார். அவர் இறந்த அன்று சடங்குகள் செய்ய உறவுகளை அழைத்த போது இளங்காளையாக இருந்த தமிழ் “இதற்கு மட்டும் உறவுகள் எதற்கு?. எங்க அப்பாக்கு யாரும் எந்தக் காரியமும் பண்ண வேண்டாம். நானே எல்லாத்தையும் பண்ணிக்குவேன்” என்று தாம் தூம் எனக் குதித்தான்.

“ஏன்டா அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்லாம உறவுகளும் இல்லனா என்னடா பண்ணுவ?. நல்லதுக்கு கூடாட்டாலும் பொல்லதுக்கு கூடனும்னு சொல்லுவாங்க. இறப்புக்கு எல்லா உறவுகளும் செய்ய வேண்டியதை செஞ்சா தான் அவன் ஆத்மா சாந்தி அடையும்” என்று அவனிடம் சொல்லி விட்டு “அவன் சின்னப் பையன் அப்படித்தான் சொல்வான். பங்காளி புள்ளைங்களாம் தண்ணி எடுக்குற சடங்கு செய்ய ஆரம்பிங்க” என்றார் கூட்டத்தில்.

அவன் கோவம் வந்து அவரின் சட்டையைப் பிடித்து ” நீ யாருயா? என் வீட்ல‌ வந்து நாட்டாமைத்தனம் பண்ண. என் அப்பனுக்கு என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்” என்றான் கோவத்தில் என்ன பேசுகிறோம் செய்கிறோம் என்று தெரியாமல்.

அப்பா மேல் கைவைத்தால் சும்மா விடுவானா வெற்றி?. அவன் இறந்த வீடு என்றும் பாரமால் ” பெரியப்பானு மரியாதை கொடுக்காட்டாலும் வயசுக்கு மரியாதை குடுக்காம அவர் மேலயா கைவைக்குற” என்று அவனை அடித்து விட்டான்.

அதிலிருந்து அவன் மேல் பகையை வளர்த்துக் கொண்டு அலைகிறான் இந்த தமிழு பையன்.

சாகும் தருவாயில் “தனக்குப் பின் தன் மகனுக்கு ஆதரவாக இருணே. என் கூடப் பொறந்தவகலாம் பார்க்க மாட்டாய்ங்க” என்று சிவகுருவிடம் சொன்னதால் அவனுக்கு இப்போது வரை ஆதரவாகத் தான் இருக்கிறார். ஆனால் அவனுக்கு தான் ஊரை விட்டுத் தள்ளி இருந்த போதும் சரி இப்போதும் சரி அப்போதிருந்து இப்போது வரை அவன் குடும்பத்திற்கு உதவியாக இருப்பவரைப் பற்றித் தெரியவில்லை.

நடந்ததை நினைத்தவனுக்கு ‘அதுவும் இதுவும் ஒன்றா?. இதில் பாதிக்கப்படப் போவது அவனும் தானே!. இந்த முட்டாப்பையனுக்கு எப்பிடி சொல்லி புரிய வைப்பது’ என்று தலையைப் பிடித்து யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனை அப்படியே விட்டால் கோவமும் வருத்தமும் இன்னும் தான் அதிகமாகும் என்றெண்ணி “வெற்றி தோட்டத்துல காய்லாம் பறிச்சுட்டாங்க. நீ போய் சந்தைல போட்டுட்டு வா. வீட்டுக்குப் போய் இதைப் பத்தி பேசி என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்” என்று சிவகுரு அவனை பேசி அனுப்பி வைத்தார் அங்கு இதை விட பெரிய பிரச்சனைக் காத்துக் கொண்டிருப்பது தெரியாமல்.

தன் தோட்டத்தில் பறித்த தக்காளி மற்றும் வெண்டைக்காய் மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு சந்தைக்குச் சென்றான். எப்போதும் போடும் சந்தைக்கடையில் தன் காய்களைப் போட்டு விட்டு அவன் பில் கொடுக்கும் போது தான் அதன் விலைகளைப் பார்த்து அதிர்ந்து விட்டான்.

” இன்னைக்கு காய் ரேட் என்ன?. ரொம்ப கம்மியா போட்டுருக்கேங்க” என்றான்.

“இன்னைக்கு இவ்வளவு தான் ரேட். எல்லாரும் அதே ரேட்ல தான் போட்டு போயிட்டு இருக்காங்க. நீ மட்டும் என்ன கேள்வி கேட்டுட்டு இருக்க. போட்டுட்டேல கிளம்பு” என்றான் காடு போல மீசையும் உருட்டுக்கட்டை போல் உடம்பும் வைத்திருந்த ஒருவன். அவனுக்கும் வெற்றிக்கும் எப்போதும் ஆகாது. எல்லாரையும் தரக்குறைவாக நடத்துவதால் ஒருநாள் இருவருக்கும் வாய்த்தகராறு ஆகி விட்டது.

” ஏன்டா… டிவில என்னடான்னா வெண்டைக்காய் நூத்தைம்பது ரூவா இருநூறு ரூவானு போட்டுட்டு இருக்காங்க. நீ என்னடானா கிலோ ஆறு ரூபாய்க்கு எடுத்துட்டு இருக்க?. எங்களலாம் பார்த்தா எப்படித் தெரியுது?. நாங்க செலவு பண்ணதுக்கும் கூலிக்கும் கூட இது வராது போல. உழைக்குறவன் ஒருத்தன் திங்குறவன் இன்னொருத்தனா?” என்று காலையிலிருந்து இருந்த கோவத்தில் இதுவும் சேர நெஞ்சு துடிக்க  வார்த்தை ஒவ்வொன்றும் அனலாக வந்து விழுந்தது. அவனுக்கு ‘விவசாயம் பாக்குறவன்னா உலகம் தெரியாத இளிச்சவாயனா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா!’ என்று அவனை அடிக்க கை பரபரவென்று இருந்தது.

அவன் ஏற்கனவே கோவத்தில் இருப்பது தெரியாமல் எதிரில் இருந்தவனோ “டேய் இங்க அவ்வளவு தான் ரேட். இங்க மட்டும் இல்லை இங்க இருக்குற கமிஷன் கடை மொத்தமும் இதே ரேட் தான் குடுப்பாங்க. இங்க போடனும்னா போடு இல்லை உன் மூட்டைகளை தூக்கிட்டு போய் எங்க வேனா போட்டுக்கோ. போடா ” என்று தெனாவட்டாக சொன்னான்.

அவ்வளவு தான் அதுவரை சேர்த்து வைத்த மொத்த கோவத்தையும் அவன் மேல் அடிகளாக இறக்கினான். ” இந்த சந்தை மொத்தமும் நீங்க ஏலத்துல எடுத்துருக்குற திமிருல பேசுறியா. இதுக்கு ஒரு முடிவு கட்டல என் பேரு வெற்றிமாறன் இல்லடா” என்று நாக்கை துருத்திக் கொண்டு மீசை துடிக்க சொன்னான்.

சந்தையில் காய்கறி போட வந்த குமார் அங்கு நடந்தக் கலவரத்தைப் பார்த்து விட்டு “என்னணே  நீயி. இங்க இப்டித்தான். பிரச்சனை பண்ணா சரியா போகுமா நீ வா” என்று வெற்றியை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான்.

அதற்குள் அங்கிருந்த மக்களும் அரசல் புரசலாக ‘என்ன நியாயம் கேட்டு என்னத்துக்கு?. நம்ம நிலைமை அவ்வளவு தான்’ என்று அவன் கொடுத்த விலைக்கே காய்களை போட்டு விட்டுச் சென்றனர்.

சந்தைக்குச் சென்று வந்தவன் வீட்டிற்குச் செல்லாமல் தோட்டத்தில் இருந்ததால் வெகுநேரமாகியும் வீடு வந்து சேரவில்லை . ஏற்கனவே குமாரின் மூலம் சந்தையில் நடந்த பிரச்சனையை அறிந்த சிவமும் கனிமொழியும் புள்ளை பாவம் காலையில் இருந்து ஒரே பிரச்சனையா இருக்கேன்னு சாப்பிடாமல் செய்யாமல் காத்துக் கொண்டிருந்தனர்.

கூடவே மதியும் ‘இந்தக் காட்டான் சும்மாவே இருக்க மாட்டான் போலயே. ஆஊனா கை நீட்டிட்டு பஞ்சாயத்து பண்றதே வேலையா போச்சு. பசி வேற வயித்தக் பொறாண்டுது. இவங்களாம் சாப்பிடாம நாம சாப்டா கொஞ்சம் அசிங்கமா இருக்குமோ?’ என்று அவள் மூளை கேட்ட கேள்விக்கு ‘ கொஞ்சம் இல்லை ரொம்பவே அசிங்கமா இருக்கும். புருஷன்காரன் பிரச்சனைல இருக்கான். உனக்கு சோறு முக்கியமானு இந்தக் கிழவி கேட்டாலும் கேட்கும்’ என்றது அவள் மனசாட்சி. ‘என் வயிறு. என் பசி. அவனுக்காக என் வயிறு கத்தாம இருக்குமா?. படுபாவி கவலைப்படுறதா இருந்தா வீட்ல வந்து கவலைப்பட வேண்டியது தானடா’ என்று அவனை மனதில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் எண்ணெய் இல்லாமலே மனதில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தவன் அப்போது தான் சோகமாக வீட்டினுள் நுழைந்தான்.

“அய்யா வெற்றி. சந்தையில என்ன பிரச்சனை?. குமார் பய சொன்னான். எதுனாலும் வீட்டுக்கு வராம எங்க போயிட்ட? ” என்று பெற்றவர் பதறினார்.

“ஏய் கனி. போய் சாப்பாடு எடுத்து வை. வீட்டுக்குள்ள வந்த உடனே பிரச்சினையைப் பத்தி பேசிக்கிட்டு” என்றார் சிவம்.

அவர் அதற்கு மேல் பேசாமல் சாப்பாடு எடுத்து வைக்க சமையலறைக்குள்ச் சென்று விட்டார்.

“எனக்கு வேண்டாம்பா பசிக்கல. நீங்க சாப்பிடுங்க ” என்று அவனறைக்குள் நுழைந்து விட்டான்.

அதுவரை தன் பசியை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தவள் அவன் சோகமாக உள்ளே வரவும் ‘ஏதோ பெரிய பிரச்சனை தான் போல’ என்று நினைத்து விட்டு “மாமா நான் சாப்பிட வைக்குறேன்”  என்று ஒரு தட்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

அவன் ஜன்னலின் வழியே வானை வெறித்துக் கொண்டிருந்தான். உடம்பெல்லாம் கோவத்தில் முறுக்கேறி வருத்தத்தை வெளிக்காட்டாமல் உள்ளே அடக்கி வைத்து உடம்பு சூடேறிக் கொண்டிருந்தது.

மஞ்சள் கயிறு மாயமோ அவன் மேல் முன்னால் இருந்த ஈர்ப்பின் காரணமோ ஏதோ ஒன்று அவன் சோகம் அவளையும் தாக்க அவனை இயல்பாக்கும் பொருட்டு “ஹலோ மிஸ்டர் வெற்றி. வெற்றினு பேர் வச்சா எல்லா நேரமும் வெற்றியே கிடைச்சுருமா?. நல்லா காட்டான் மாதிரி உடம்பையும் மீசையும் வளர்த்து வச்சா போதாது. போராடனும். மத்தவங்க சொல்றதெல்லாம் காதுல வாங்காம குண்டு சட்டிலயே குதிரை ஓட்டாம பிரச்சனைக்கு தீர்வு என்னனு யோசிக்காம இப்படி இருந்தா எப்படி. இந்தா சாப்டு தெம்பா என்ன பண்ணலாம்னு யோசி” என்று சாப்பாட்டு தட்டை அவனிடம் நீட்டினாள்.

“காட்டான் கீட்டானுட்டு இருந்தேனா இருக்குற கோவத்துக்கு உன்னை மொத்திடுவேன் போயிடு. புருஷன் மேல ஒன்னும் பாசம் பொங்க வேண்டாம். கொஞ்சம் குறைவாவே இருக்கட்டும். எனக்கு பசிக்கல நீ சாப்டு என்று கட்டிலில் சென்று கையைத் தலைக்கு கொடுத்து கண்மூடி படுத்துக் கொண்டான்.

“எங்களுக்கு புருஷன் மேல பாசமும் பொங்கல பாயாசமும் பொங்கல. நீ பாட்டுக்கு சாப்டாம வந்துட்ட. புருஷன் சாப்டாம உங்க அப்பத்தாக் கிழவி எனக்கும் சாப்பாடு போட மாட்டேனு சொல்லிடுச்சு. நீ சாப்டா தான் நானும் சாப்பிட முடியும். பசி உயிரு போகுதுடா. உங்க கோவத்தலாம் சாப்பாட்டுல தான் காட்டுவேங்களாடா. உங்க கோவத்துல தீயை வைக்க. சீக்கிரம் சாப்டுடா ” என்று அவனை சாப்பிட வைக்க அப்பத்தாவை இழுத்துக் கொண்டாள்.

அவளின் பேச்சில் அவளைப் பார்த்தவன், அவள் கண்களில் பசி தெரிந்தது. ஆனால் அதற்காக மட்டுமே தன்னை சாப்பிட சொல்லவில்லை என்பதும் புரிந்தது. அதுவும் இல்லாமல் ஒருவேளை அப்பத்தா அப்படிச் சொல்லி இருந்தாலும் தன் அன்னை அப்படி விட்டிருக்க மாட்டார் என்பது தெரியும் அவனுக்கு.

அதன் பிறகு எதுவும் பேசாமல் அவள் கொண்டு வந்த உணவை உண்டு விட்டு தட்டை எடுத்துக் கொண்டு ” சரி வா கீழே போலாம். நீ சாப்பிடு” என்று அவளையும் அழைத்துச் சென்றான்.

வெற்றியின் தாய்க்கு அவன் சாப்பிட்ட பிறகே மனநிம்மதியாக இருந்தது. பெரியவர்களுக்கு இருவரும் தங்கள் வாழ்ககையில் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை என்பது தெரிந்தாலும் இதுவே அவர்களுக்கு மன நிறைவாக இருந்தது கூடிய விரைவில் இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்வார்கள் என்று.

கல்லூரியில் அவளைப் பார்த்த போதே அவளின் குறும்புத்தனத்திலும் இடை விடாது தன்னைத் தொடர்ந்த அவள் பார்வையிலும் அவளிடம் தன் மனது சென்றதென்னவோ உண்மை‌. ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டாமல் தன் கடமையைக் காரணம் காட்டி அதை ஒதுக்கிச் சென்றான். ஆனால் இன்றோ உரிமையுள்ளவளாய் தன் பக்கத்தில் அதுவும் தனக்காக இந்த அளவிற்கு மெனக்கெடுவாள் என்று கனவிலும் நினைக்காதவன் முன் தனக்கானவளாய் நிற்கும் அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால். பிரச்சனைகளை மறந்து தன் அருகில் தூங்கும் அவளையே கண் கொட்டாமல் அவளறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.

வெய்யோன் சில்லி
இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா..🎶

கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்..🎶

என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே..🎶

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Interesting ud sis nce vetri en ivlo kovam andha kadaikaran and tamizh enna panna kathirukangalo

    2. Pavam oru pakathula irunthu tension vantha parava ila… Ella pakkamum vantha pavam avanum ena thn seivan….super ud sis

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.