அத்தியாயம் – 1
நகரத்தின் மையத்தில் ஜொலித்து கொண்டிருந்தது அந்த பெரிய மாளிகை. நிச்சயதார்த்த வரவேற்பிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டு அரண்மனை போல் காட்சியளித்தது. அவ்வைபோகத்திற்கு வந்தவர்கள் அனைவரும் இரு பெரும்புள்ளியின் வாரிசுகள் ஜோடியாக வருவதை காண ஆவலாக காத்திருந்தனர்.
காதலின் முழுத்தொகுப்பு அவள் கண்களில் கரைபுரள தன்னவனின் கை சேர ஏங்கும் விரல்களை மெல்லிய புன்னகையுடன் பார்த்தாள். அவளுக்காக அவளவன் தனித்துவமாக அவன் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சேலையையும் நகைகளையும் உடலில் பூட்டி அவன் கண்களுக்கு விருந்தாக அவன் முன்னே சென்றாள் ஆதிரா.
அவளுக்கு சற்றும் தான் குறைந்தவன் இல்லை என்று அவள் அழகிற்கு இணையாகவும் அவள் கம்பீரத்துக்கு நிகராகவும் பட்டுடுத்தி அவளை கைப்பற்ற நின்றிருந்தான் .
இந்த தருணத்திற்காக தானே இத்தனை நாட்கள் அவன் காத்திருந்தான். அவன் கண்களில் அப்படி ஒரு பேரானந்தம், பதுமையாக நடந்து வந்தவளை தவிர அவன் மிழிகள் வேறு எதிலும் செலுத்தாது அவளை மட்டுமே பார்த்திருந்தான்.
அவளை பட்டுத்துணியில் அமர வைத்த அவனது அன்னை ஐயரிடம் நிச்சயம் பத்திரிக்கையை வாசிக்க கூற, அனைவரும் எதிர்பார்த்த அந்த நிகழ்வு பெரியோர்களின் முன்னிலையில் ஆரம்பமானது.
தனக்கான வேலையை செவ்வென முடித்த ஐயர் அவர்கள் இருவரிடமும் பூமாலையை கொடுத்து அணிந்து கொள்ள கூறினார். இருவரும் இன்முகத்துடன் அதை செய்ய விழா நிறைவாக இருவரையும் மோதிரம் மாற்றிக்கொள்ள பணிந்தார்.
இருவரும் எழுந்து தங்கள் இணையை ரசித்தவாறு அவர் கூறியதை நிறைவேற்ற முனைந்தனர். அவன் கையில் அவன் அன்னை மோதிரம் கொடுக்க அதை பெற்று அவள் கண்களை பார்த்து கண்களை மூடி அந்நொடியை ரசித்து ருசித்து, அவள் பட்டு விரலை மென்மையாக வருடியவன் அவளை தன் சரி பாதி என்று சான்றோர் முன் பறைசாற்ற எண்ணிய தருணத்தில், மெதுவாக பற்றிய விரலை விட்டான்.
கையில் இருந்த மோதிரத்தை காற்சட்டையில் போட்டு ஒரு மோகனப் புன்னகையை அவள் மேல் செலுத்தி “எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல ” என்று மெதுவாக அவள் தலையில் இடியை இறக்க உறைந்துப்போனாள் ஆதிரா.
தொழில் சாமிராஜ்ஜியத்தில் அசைக்கமுடியாத வெற்றி பெற்றவளுக்கு அவளது வாழ்வில் வாங்கிய முதல் அடி.
“டேய் விகா என்ன டா ஆச்சு உனக்கு இப்படி பேசிட்டு இருக்க?” என்று அவன் அருகே வந்த கல்யாணியை அவன் பார்த்த பார்வையிலேயே வாயை மூடிக்கொண்டார்.
அவரை போல் அவனது தந்தையால் இருக்க முடியாதே, “என்ன இது விகர்ணா? உன்கிட்ட இதை நான் எதிர் பார்க்கவே இல்லை. எதுவா இருந்தாலும் நிச்சயதார்த்தம் முடியட்டும் பேசிக்கலாம். இப்போ ஆதிரா கையில் மோதிரத்தை போடு” என்றார் லிங்கம்.
“முடியாதுப்பா நான் தான் தெளிவா சொல்லிட்டேனே. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”
“விகர்ணா இது ரொம்ப தப்பு. இவ்வளவு தூரம் வந்துட்டு நீ பண்ணுறது சரியில்ல. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். வம்பு பண்ணாம நான் சொல்றதை செய்”
எதுவும் பேசாமல் அழுத்தமாக அவளை பார்த்திருந்தவனின் கைகளை பற்றினார் சீதா.
“விகர்ணா என்ன ஆச்சு உனக்கு?ஃபங்சன் முடிஞ்சதும் பேசிக்கலாம் எதுவா இருந்தாலும் இப்போ ஆதிரா கையில் மோதிரம் போடு ப்ளீஸ்” என்று கிட்டத்தட்ட கெஞ்சினார்.
அவர் இறைஞ்சுவதை பொறுக்காமல் கண்களை இறுக மூடி திறந்தவனது மிழிகளில் எவ்வித உணர்ச்சியும் இல்லை.
இத்தனை நேரம் அவன் கண்களில் இருந்த அந்த காதல் நொடியில் மாறி வஞ்சகம் நிறைந்து காணப்பட்டது.
‘அப்போ என்மேல் உனக்கு காதல் இல்லையா? எல்லாம் நடிப்பா? என்மேல் அப்படி என்ன வஞ்சம்? கண்மூடித்தனமாக தான் உன்னை காதலிச்சத்தை தவிர என்ன தப்பு பண்ணேன்? இப்படி என்னை ஏமாத்த தான் இவ்வளவும் பண்ணியா?’ என்று அவன் சட்டையை பிடித்து கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தது. ஆனால் வெளியே எதையும் காட்டாமல் அவனை ஆழ்ந்து பார்த்தாள் ஆதிரா.
அவள் பார்வையை புரிந்துக் கொண்டவனாக அவளிடம் பேச ஆரம்பித்தான் அத்தனை பேர் இருக்கும் சபையில்.
“உனக்கு என்மேல் அப்படி என்ன காதல்? நான் அவ்வளவு நல்லவன் இல்லையே. நீ பண்ண எல்லாத்தையும் மறந்து உன்னை கொண்டாட நான் என்ன முட்டாளா?”
அத்தனை நேரம் இழுத்து பிடித்த கோவம் எல்லாம் காற்றில் கரைய ஒரே எட்டில் அவன் கழுத்தை பிடித்தவள், “காதல்ன்னு சொல்லி நீ எனக்கு பண்ண துரோகத்தை மறக்க மாட்டேன்!” என்று அந்த இடமே அதிர கத்தினாள்.
பெண்ணவள் செய்கையில் சினம் கொண்ட வேங்கையாக அவள் சங்குக்கழுத்தை இறுக்கம் நிறைந்த கைகளால் அழுத்த வலியிலும் அவன் கழுத்தை விடாது இறுக்கியவளை பார்த்தவனுக்கு கோபம் குறைவே இல்லை.
இன்னும் சற்று அழுத்தம் கொடுத்தாள் அவள் மூச்சு விட திணறுவாள். நிலைமை கைமீறி போய்விடும் என்று வேகமாக விகர்ணனிடம் வந்த அவன் அன்னை அவளை அவன் கைகளில் இருந்து விடுவிக்க, ஆங்காரமாக அங்கு வைத்திருந்த சீர் தட்டுகளை தூக்கி போட்டு கோபத்தை மட்டுப்படுத்த முயன்றான்.
எனினும் அவள்மேல் கொண்ட வெஞ்சினம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. வார்த்தையால் வதைத்தாலும் அவள் மனம் கலங்காது என்று தெரிந்தவனுக்கு கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அதற்கு சற்றும் குறையாத சீரும் சிறுத்தையாக நின்றிருந்தாள் ஆதிரா.
வாயை குவித்து உஃப் என்று ஊதியவன், “சரி உன்னை நானே கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கு பொண்டாட்டியா மட்டும் இருக்கணும் எல்லாத்தையும் விட்டுட்டு”
அவன் கூறியதை கேட்டவள், “முடியாது என்னால் என் பிசினஸ்ஸை விட முடியாது. உன்னால் என் ஹவுஸ் ஹஸ்பண்ட்டா இருக்க முடியுமா?” என்று கேட்க விகர்ணனின் பொறுமை எங்கோ பறந்தது.
“இந்த ஜென்மத்தில் என்னை மீறி உன்னை எவன் கல்யாணம் பண்ணிக்கிறான்னு நானும் பார்க்கிறேன். என்னோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டிய நேரம் வந்துருச்சு”
“ஹே உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ டா. ஆனா இப்போ சொல்லுறேன் நல்லா காதை திறந்து கேட்டுக்கோ. இந்த தீராவோட கழுத்தில் நீ கட்டுற தாலி தான் தொங்கும். இல்லை இப்போ இருக்க மாதிரியே கெத்தா திமிரா உன் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டுவேனே தவிர உன் காலுல விழ மாட்டேன்” என்று நிச்சயம் நின்ற கோவத்தில் எதிரே நின்று இருந்தவனிடம் பேசிய ஆதிரா ராமசந்திரன் தன்னை சார்ந்தவர்களை கூட கண்டுக்கொள்ளாமல் மணப்பெண் அலங்காரத்தில் அவ்விடத்தை விட்டு நொடியில் அகன்றாள்.
தன்மேல் கொண்ட அன்பிற்காகவது அவளை ஏற்பான் என்று நினைத்த சீதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் விகர்ணன் மேல் மட்டும் அனைத்து பழியையும் போட முடியாதே, தான் பெற்ற மகளின் குணமறிந்தவரால் இப்போது கண்ணீர் சிந்துவதை தவிர வேறு என்ன செய்ய இயலும்.
ராமசந்திரனுக்கு இப்படி ஒரு காரியம் நிகழும் என்று தெரிந்ததோ என்னவோ முகத்தில் எதையும் காட்டாது மாறி மாறி மகளையும் விகர்ணனையும் பார்த்தவாறு நின்றிருந்தார்.
அவள் செல்வதை கண்டவன் கண்கள் மின்ன அருகே இருந்த அறைக்கு சென்றான். அங்கிருந்த அனைவரும் வெறும் பார்வையாளராக மாறி நடப்பதை பார்த்து இருந்தனர்.
இருவரின் பெற்றோர்களும் வந்தவர்களிடம் மன்னிப்பை வேண்டி அனுப்பி வைத்து மற்றத்தை பேச முடிவு செய்தனர். அனைவரையும் வழி அனுப்பி வைத்து கூடத்தில் கூடினர். இது தெரிந்தும் அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் நிச்சயதார்த்த ஆடையை களைத்து கூடி இருந்தவர்களை காணாது காரை எடுத்து கொண்டு கிளம்பினான்.
அங்கிருந்து கிளம்பிய இருவரின் வெஞ்சினமும் சற்றும் குறையவில்லை. இருவரும் தங்கள் இடத்தில் இருந்து இறங்க முன் வரவில்லை பின்பு எப்படி காதல் என்று வந்து நின்று இந்நன்னாளில் இப்படி ஒரு காரியத்தை செய்தனர் என்று இரு குடும்பத்தினருக்கும் குழப்பம் மட்டுமே மிஞ்சியது.
நிலைமையை சரி செய்ய நினைத்த ராமசந்திரன், “கொஞ்சநாள் பொறுமையா இருப்போம். உடனே உடனே ஏதாவது பண்ணா இவங்க இன்னும் பிடிவாதமா இருப்பாங்க. அவங்களுக்கு டைம் தருவோம்.” என்று அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகினார். மனப்பாரத்துடன் அவர்களை வழி அனுப்பி வைத்தார் லிங்கம்.
போதும் என்று தன் கதிர்களை சுருக்கி தன் வெம்மையை ஆதவன் குறைத்து கொண்டிருக்க, அங்கோ இரு உள்ளம் தம் கொதிநிலையை குறைக்க முடியாமல் தகித்து கொண்டிருந்தது .
இருவரின் நண்பர்களும் குடும்பத்தினரும் இவர்களை தொடர்பு கொள்ள முயன்று தோற்று போக, அவர்களே சரி வரட்டும் என்று வேறு வழியின்றி விட்டுவிட்டனர்.
மனமெல்லாம் விகர்ணனின் செய்கைகளே நிறைந்து இருந்தது ஆதிராவிற்கு.
‘காதல்ன்னு வந்து நின்னது அவன் தான. என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு என் மேல பைத்தியமா என் பின்னாடி திரிஞ்சானே. அவன் மேல காதல் வரவைக்க என்ன எல்லாம் செஞ்சான். இப்படி என்னை ஏமாத்தி என் பீலிங்கோட விளையாட தானா? அன்னைக்கு தடுக்காம இருந்திருந்தா இன்னேரம் மனசை மட்டும் இல்லாம என்னையே அவன்கிட்ட இழந்திருப்பேனே’ என்று நினைக்க நினைக்க அவளை அறியாமல் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள்.
காதல் கொண்ட ஒரு மனம் இங்கே கதற காதல் காதல் என்று அவளை சுற்றியவன் இலக்கின்றி மகிழுந்துவை இயக்கி எங்கே செல்கிறான் என்று தெரியாமல் அந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்தான்.
அலைபேசி ஓயாமல் அடிக்க எடுத்து பார்க்க அதில் வந்த எண்ணை தவிர்க்க முடியாது என்பதால் நடந்ததை கூறி நாளை காலை வீட்டிற்கு செல்லுமாறு கூறியவன் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான்.
இவர்களின் விளையாட்டை கண்டும் காணாதும் இருந்த நிலவு மகள் மேகத்துடன் ஒளிந்து விளையாடி களைத்து தன் காதலனின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தது.
காலை ஒன்பது மணி, எப்பொழுதும் இருக்கும் படபடப்பு இல்லாமல் இன்று ஒரு சலசலப்புடன் காணப்பட்டது அந்த அலுவலகம்.
அவள் இன்று வரமாட்டாள் என்று எண்ணியவர்களுக்கு எண்ணத்திற்கு மாறாக எப்பொழுதும் போல வந்திருந்தாள்.
சொந்த விருப்பு வெறுப்பு எதுவும் தொழிலை பாதிக்க கூடாது என்ற வாக்கியத்தின் மறுபதிப்பாக காட்சியளித்தாள்.
நிமிர்வான பார்வையுடன் உள்ளே வந்தவளை ஏளனமாக வரவேற்றது என்னவோ அவளை வேண்டாம் என்று அத்தனை பேர் முன்னால் கூறியவன் தான்.
அதை சிறிதும் மனதில் போட்டுக்கொள்ளாமல், அவனை எதிர்கொண்டாள்.
“எஸ் மிஸ்டர். விகர்ணன் இன்னைக்கு சைன் பண்ண வேண்டிய காண்ட்ராக்ட் எல்லாம் நான் படிச்சுட்டேன் அதை உங்க ஆபீஸ்க்கு காலையில் அனுப்பிட்டேன் ” என்று அவனை பார்த்தாள்.
அவள் பார்வையின் அர்த்தம் விளங்கியதும், உதடை பிதுக்கி “இன்னும் நீ அடங்கவே இல்லை டி. கொஞ்சமாச்சும் உனக்கு மனசு இருக்க இல்லையா இரும்பு மாதிரி இன்னும் நிற்கிற?” என்று அவளை நெருங்கினான் விகர்ணன்.
அவன் மேல் அழுத்தமாக பார்வை செலுத்தினாளே தவிர அவன் பேசியதற்கு பதில் பேசவில்லை. அதற்கு மாறாக அவன் அலைபேசி விடாமல் ஒலித்து கொண்டே இருந்தது.
அதில் கடுப்புற்றவன் யாரென்று பார்க்க அதில் அவன் தந்தையின் படம் ஒளிர்ந்தது.
நெற்றியை சுருக்கி அதை எடுத்தவன், எதிர்புறம் என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை எதிரே நின்று தன்னை விழுகுபவளை போல பார்திருந்தவளை தீயாக முறைத்தான்.
கண்கள் சிவக்க அவள் நாடியை அழுத்தி பிடித்து தன்னிடம் இழுத்து கீழே தள்ளி திரும்பி பார்க்காது அவ்விடத்தை விட்டு அகன்றான்.
அவன் செய்கையால் கோவம் எழுந்தாலும் தான் செய்த காரியத்தை எண்ணி இதழ் பிரித்து சிரித்து, “அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி” என்று அவன் காதுப்பட பாடி அவனை வெறுப்பேத்தியவள் அடுத்து அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டாள் ஆதிரா அவனின் காதல் தீரா.